அங்காடி தெரு கடிதங்கள் 2

மதிப்பிற்குரிய ஜெ,  

 ஒரு நல்ல கதை; நல்ல படம்.

உங்கள் சிறுகதைகளை ஒப்பிட நாவல்களில் இருந்து என் மனசில் தங்கிநிற்கும் கேரக்டர்கள் குறைவு. வயசான காலத்தில் உங்கள் எழுத்துக்களை வாசித்து வாங்கினேன் என்பதையும் கணக்கில் எடுக்க வேண்டும். சற்றிப்போது கண்டதும் கேட்டதும் கற்றதும் மறந்துவிடும் பருவம்தானே? ‘காடு’ ஆனால் விதிவிலக்கு. அதன் சின்னச்சின்னக் கேரக்டர்கள் கூட நினைவின் அகலவில்லை. ‘ஏழாம் உலகம்’ நாயகனும் அப்படித்தான். அதனாலேயே ‘நான் கடவுள்’ படம் எனக்கு ரசிக்கவில்லை – உங்கள் வசனத்தைத் தாண்டி.

 

‘அங்காடித் தெரு’ அப்படி இல்லை. தெருவணிகப் பிழைப்பில் வருகிற சின்னச்சின்னக் கேரக்டர்கள்தாம் படத்தின் செறிவும் சுவாரஸ்யமும். வணிக வாய்ப்புக்கு மோப்பம் உள்ளவன் அத் தெருவில் தோற்பதற்கு வாய்ப்பில்லை என்பதற்கு அந்தக் கட்டணக் கழிப்பறை நாயகன் காட்டு! அவன் கையில் ஒரு ரூபாய் வரும்படி வந்த அக்கணமே, கதை மோப்பம் பிடிக்கத் தெரிந்த என்னைப் போன்ற நாய்மூளைகளுக்குக் கதைமுடிவின் அறிச்சி தட்டிவிடும் என்றாலும் தமிழ்ப்பட இயக்குநர்களை நம்பமுடியுமா சாமி என்று வேண்டுதலோடுதான் மீதிப் படம் பார்த்தேன்.

தங்கச்சிப் பாப்பா வயசுக்கு வருகிறது; நாயகியை நள்ளிரவில் ஆட்டோக் காரர்கள் வளைக்கிறார்கள்; தங்கச்சி அஸாமுக்கு அனுப்பிவைக்கப் படுகிறாள்; சாலை விபத்து என்று காட்டப் பட்டாலும் அது, நாயகன் நாயகி ப்ளாட்பாரத்தில் கைகோர்த்து நிற்பதை (வில்லனாகப்பட்ட) சூப்பர்வைசர் பார்த்ததற்கு அப்புறமாய் நிகழ்கிறது – தமிழ்ப்படம் பார்த்துப் பார்த்து ஐம்பதுக்கு மேல் வளர்ந்துகெட்ட ஓர் ஆளுக்கு டென்சன் வருமா வராதா? ‘நன்றி ஆண்டவரே’ என்று கடவுளையும் இயக்குநரையும் தொழுதுவிட்டுத்தான் தியேட்டரை விட்டேன்.

 

குறை என்று ஒன்றாவது சொல்ல வேண்டுமோ? ‘தீட்டு’ என்கிற கான்செப்ட் பாராட்டும் பிராமணாள் ஆத்துக் கிழவிக்கு மாற்றாக, இந்து வழிபாட்டில் இடம் உண்டு என்று காண்பிக்கிற கோவிற் காட்சியில், அந்த அம்மா முகம் – அந்தப் பூசாரி நிறம் – ‘casting’ பொருத்தமில்லை.

 

வசந்தபாலன் போலவே நல்ல நல்ல இயக்குநர்கள் உங்களுக்கும் ஏனை எழுத்தாளர்களுக்கும் வாய்க்கவேண்டும்; தமிழ்த் திரையுலகம் சிறக்கவேண்டும் என்பது என் ஆசை.

 

– ராஜசுந்தரராஜன்

 

அன்புள்ள ராஜ சுந்தரராஜன்

உங்களுக்கு படம் பிடித்திருந்தது அறிந்து மிகுந்த மனநிறைவு. பாராட்டுகளிலேயே சில பாராட்டுகளுக்கு அடிவரி உண்டல்லவா? அங்காடித்தெரு பரவலாக அனைவருக்கும் பிடித்திருக்கிறதென்பது செய்திகளாக வந்துகொண்டே இருக்கிறது. உண்மையான உணர்ச்சிகளை அழுத்தமாகவே காட்டலாம் ,எந்த அளவுக்கு நுட்பமாகச் சொன்னாலும் போய்ச்சேரும் என்பதற்கான உதாரணம் அது. நல்ல இயக்குநர்கள் நல்ல வாய்ப்புகள் அமையவேண்டுமென நானும் விரும்புகிறேன். கவி சொல் பலிக்கட்டும்.[[அது உண்மையான கோயில் உண்மையான பூசாரி ]

 உங்கள் பாராட்டும் வாழ்த்தும் வசந்தபாலனுக்கும் பெரிய  பரிசு . பெரிய பொறுப்பும் கூட

அன்புடன்
ஜெ

 

அன்புள்ள ஜெயமோகன்…

அங்காடித் தெரு, “உரையாடல் ஜெயமோகன்” என்கிற ஒரு காரணத்தால் முதல் நாளிலேயே பார்த்துவிட்டேன். படம் பற்றி நிறைய சொல்ல நினைத்தாலும், அதுவே ஒரு தனிக் கட்டுரையாகி விடும் என்பதால், கொஞ்சமாய் சுருக்கி, நான் அடைந்த சுகத்தை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.

எத்துனை முறை ரெங்கநாதன் தெருவில் சுற்றி அலைந்திருந்தாலும், சத்தியமாய் அங்கே விற்பனை பிரிவில் இருக்கும் இவர்களைப் பற்றி யாருமே சிந்தித்திருக்க வாய்ப்பில்லை. வசந்தபாலனுக்கு முதல் சபாஷ். ஆனால் அவர் மட்டுமே இந்தக் கதையை சிந்திருத்திருந்தால் இதன் அழுத்தம் வேறு மாதிரியாகத்தான் இருந்திருக்கும். உரையாடல் மட்டுமே நீங்கள் செய்திருக்க வாய்ப்பில்லை. பலக் காட்சிகளை பார்க்கும்போது அதில் உங்கள் எழுத்தின் வீரியத்தை தான் என்னால் உணர முடிந்தது. இருந்தாலும் படம் நெடுக வசனகர்த்தாவாகிய நான் தெரிய வேண்டும் என்று பாடுபடாமல் கதைக்கேற்றவாறு உரையாடலை மாற்றி கதையோடு ஒன்றிப் போயிருக்கும் உங்களை எப்படிப் பாராட்ட…?

அந்தக் குள்ள மனிதனுக்கு குழந்தை பிறந்ததும் அவன் மனைவி பேசும் வசனங்கள்.. ஜெயமோகன் டச். கனி எனும் கதாபாத்திரம் துடுக்காக பேசும்போது வளைந்து நெளிந்து செல்லும் உரையாடல், அறை சூப்பர்வைசர் என்ன செய்தார் என்பதை விளக்கும்போது நெஞ்சில் தைக்கிறது.

இப்படியே இன்னும் நான் எழுதிக் கொண்டே போகலாம். ஆனால் அது இந்தப் படைப்பிற்கு தேவையில்லை. உரையாடல் என்றால் இனி ஜெயமோகன் தான் என்று ஆழப்பதிந்து விட்டீர்கள். வாழ்த்துகள் சொல்லமாட்டேன். வணங்குகிறேன்.

படம் பார்த்த இரவு என் நெஞ்சத்தை கணக்க செய்து விட்டது. படத்தை பார்க்கும்போது எனக்குள் நான் செய்துக் கொண்ட சத்தியம் இனி இதுப் போன்ற பெரியக் கடைகளில் பொருட்கள் வாங்குவதில்லை.

குறிப்பு: இருந்தாலும் ஆரம்பக் காட்சிகள் மட்டும் கொஞ்சம் யதார்த்தத்தை மீறியதாக இருந்தது. உதாரணமாக அவர்கள் உண்ணும் அறை, மற்றும் முறை.)


மோ. அருண்
அன்புள்ள ஜெயமோகன்…

அங்காடி தெரு மிகச்சிறப்பான படம். அதன் கதையோட்டத்திலே வரக்கூடிய நுட்பங்களை ஏற்கனவே  கடிதங்களிலே பலர் எழுதிவிட்டார்கள். ஒரு நண்பர் பத்து தொழிற்சங்கங்கள் செய்யாத வேலையை செய்த படம் என்று சொன்னார். உண்மைதான். மனசு கனத்துவிட்டது. படம் முடிந்தபின்னாலே எதையுமே பேசாமல் தனிமையிலே நடந்து வருகிறோம். அதுதான் இதன் வெற்றி சார். வசந்தபாலனை தமிழில் இப்போது இருக்கக்கூடிய இயக்குநர்களிலே முதலிடத்துக்குக் கொண்டு போய்விட்டது இந்தப் படம். இதுவரையிலான மிகச்சிறந்த தமிழ் சினிமா இயக்குநர்களின் வரிசையிலேயே முக்கியமான ஒரு இடத்துக்குக் கொண்டுசென்று விட்டது. அவருக்கு வணக்கம் தெரிவிக்கிறேன்.

படத்திலே உள்ள மூன்று முக்கியமான விஷயங்கள். லிங்குவும் கனியும் கேரக்டர் வளர்ச்சி அடைவது முதலிலே சொல்ல வேண்டிய விசயம். லிங்கு கனியை கருங்காலி அவமானப்படுத்தியசெய்தி கேட்கும்போது வருத்தம்தான் படுகிறான். ஆனால் கனி மீது காதல் வந்தபிறகு அந்த செய்தியைக் கேட்டதும் மிருகமாகவே மாறிவிடுகிறான்.  அதேமாதிரி கனி லிங்குவை காதலிக்கும் முன்னாடி கருங்காலி செய்வதற்கு சம்மதிக்கிறாள். பிறகு முடியலை என்று சொல்லி கதறி அழுகிறாள். அந்த மாற்றம்தான் கதையே. அந்த காதல் வந்தபிறகு அவர்கள் ரெண்டுபேரும் மெச்சூர் ஆகிவிடுகிறார்கள். எது வந்தாலும் சமாளிக்கலாம் என்ற நிலை வந்துவிடுகிறது. அதன் பின்பு அவர்கள் அடிக்கடி கைகோர்த்துக்கொள்வதை நாம் காண்கிறோம். அந்தக் காட்சிகளுக்கெல்லாம் இயக்குநர் குளோஸப் வச்சிருக்கிறார்.

அதேமாதிரி வயசு வந்தபெண்ணை குப்பை மாதிரி போட்டு வைக்கிறார்கள் ஒரு வீட்டிலே. அது ஒரு சாதி மீது உள்ள விமர்சனமாக சிலர் சொன்னார்கள். அப்படி இல்லை. அவர்கள் தங்கள் வீட்டுப் பெண்ணையே அப்படித்தான் போட்டு வைப்பார்கள். அது ஒரு மனசு அவ்வளவுதான். அதேசமயம் அதே தீட்ட்டன பெண்ணை ஏற்றுக்கொள்கிறது என்பது இன்னொரு ஆசாரம். அங்கே தீட்டான பெண்ணுக்குத்தான் முதல் இடம். சாமியே தீட்டு உள்ள சாமி. சிலர் இந்து மததை கேவலப்படுத்துகிறது என்று சொன்னார்கள். அப்படி இல்லை. இந்துமதத்திலே எதுவுமே விதி என்று இல்லை என்றுதான் சொல்கிறது. அப்படி ஒரு பக்கம் இருந்தால் இப்படியும் ஒரு பக்கம் இருக்கிறது இல்லையா? அது இந்துமதத்துக்குப் பெருமைதானே?

அதேமாதிரி கருங்காலியை வில்லன் மாதிரி டெவெலெப் செய்யாமல் ஒரு கதாபாத்திரமாகவே காட்டியிருக்கிறதும் நன்றாய் இருக்கிறது. லிங்கு கனி இருவரையும் இடமாற்றம் செய்ததும் கருங்காலி படத்தில் வராமலாகிவிடுகிறான். ஆனால் இங்கே இன்னொரு ஆள் அதேமாதிரி நடந்துகொள்கிறான். அதாவது கருங்காலி என்பது ஒரு மனுசன் இல்லை. ஒரு பதவிமட்டும்தான். அண்ணாச்சிகூட வில்லன் இல்லை. அவருக்கு வியாபாரம் மட்டும்தான் முக்கியம். அதுக்கு பிரச்சினை வருமென்றால் விட்டுவிடுவார். ஆகவே அந்த நிறுவனம்தான் வில்லன். அதையும் நன்றாக காட்டியிருக்கிறார்

உள்ளத்தை உருக்கும் படம் ஜெ சார். நன்றிகள்

நேரிலே பார்க்கிறேன். நிறைய பேசவேண்டும்.

சண்முகம் 

 

அங்காடித்தெரு கடிதங்கள்

அங்காடித்தெரு இன்று

முந்தைய கட்டுரைஅங்காடித்தெரு கடிதங்கள்
அடுத்த கட்டுரைபதுமை (நாடகம்)