பெருமாள்முருகன் கடிதங்கள்- 5 ‘பொங்கும் பெரியாரியர்களுக்கு’

இடைநிலைச் சாதிகளின் மேலாண்மைக்காக பெரியார் பாடுபட்டாராம்!
அவர்களின் சாதிப்பற்றைக் கைவிடும்படி கூறவில்லையாம்!!

என்ன அழகா புளுகுறீங்க!!
பார்ப்பனியம் என்றாலே பொய் புரட்டுதானே!

கடைசிவரைக்கும் சாதிவெறியர்களை நீங்கள் கண்டிக்கவில்லையே மிஸ்டர் ஜெயமோகன்!!

சாதியை கட்டிக்காக்கும் புராணங்களையும் வருணாசிரமத்தையும் சமரசமில்லாமல் எதிர்த்தாரே பெரியார்! உங்களால் முடியுமா??

ஆனால் வன்னியர் மாநாட்டில் மேடையேறி சாதிக்கு எதிராக பேசினாரே பெரியார்!
சத்திரியன் என்றால் பார்ப்பானுக்கு அடிமை. அதுல என்ன பெருமை வேண்டி கிடக்கு என்றாரே!
அவர்தாம் பெரியார்! உங்களால் சொல்ல முடியுமா?

பெயரில்கூட சாதி இருக்க கூடாது என்று மக்களிடம் சொன்னாரே பெரியார்!
நீங்க சொன்னீகளா?? இல்லை வேறு பார்ப்பனர்கள் சொன்னார்களா??

வழிபாட்டு சமத்துவம் வேண்டி ஆலய நுழைவுப் போராட்டம் நடத்த பெரியாரிஸ்டுகள் வந்தார்கள், வருவார்கள்.நீங்கள் வருவீர்களா?

பார்ப்பான் எச்சி இலையில் சூத்திரனை உருளச் சொல்லுதய்யா உன் இந்து மதம்!
ஜெயேந்திரனுக்கு கால் கழுவி விட சொல்லுதய்யா உன் இந்து மதம்!
பெரியார் எதிர்த்தார். நீங்கள் என்ன செய்தீர்கள்?

சாதியால் பார்ப்பனர்கள் ஒடுக்கப்பட்டால் நான் பார்ப்பனர் பக்கம் நிற்பேன் என்றாரே! அவர்தாம் பெரியார்!
இன்று சிலர் கொழுப்பெடுத்து சாதித் திமிர் பிடித்து திரிந்தால் பெரியார் என்ன செய்வார்?
அவரை சாடுவதை விடுத்து சாதிக்கு எதிராக ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்யுங்க.
இந்த மாதிரி குட்டையைக் கிளப்புற வேலை வேண்டாம்.

பார்ப்பனியத்தை வீழ்த்தினால் சாதிக் கட்டமைப்பு வீழும் என பெரியார் எண்ணியிருக்கலாம்!

ஆனால் பாழாய்ப் போன இடைநிலை சாதிகள் இன்று பார்ப்பனியத்தைக் கையில் எடுத்து திரிகின்றன.

குருநாதன் சிவராமன்

*

திரு ஜெமோ

பெருமாள் முருகன் விவகாரத்திலே நீங்கள் பெரியாரை இழுத்ததைப்போல தந்திரமான விசயம் வேறு கிடையாது. நீங்கள் உங்கள் சொந்த அஜெண்டாவை இதிலே திணிக்கிறீர்கள். இதுக்கும் பெரியாருக்கும் என்ன சம்பந்தம்? இதிலே அவரை நுழைத்து நீங்கள் உங்கள்பக்கம் கவனத்தைத் திருப்புகிறீர்கள்

சிவா மணிவேல்

*

அன்புள்ள குருநாதன், சிவா,

இப்போது தேசிய அளவில் அத்தனை தொலைக்காட்சிகளிலும் பேசபப்டும் ஓர் ஊர் திருச்செங்கோடு. அத்தனைபேரும் சொல்லும் ஒருவிஷயம் அது பெரியார் பிறந்த மண். சற்றுமுன் மலையாள தொலைக்காட்சியிலும்கூட

ஒவ்வொருவரும் அவரவர் பார்வையின்படியே இதைப்பார்க்கிறார்கள். முழுக்கமுழுக்க சாதியவாதிகளால் முன்னெடுக்கப்பட்டது இவ்வெதிர்ப்பு. அதை இந்துத்துவ அரசியல் பயன்படுத்திக்கொள்கிறது- எப்போதும் அது அப்படித்தான். அவர்கள் ஒரே விஷயத்தின் இரு முகங்கள்

ஆனால் திராவிடக் கட்சிகள் என்ன செய்தன? இடதுசாரிகள் என்ன செய்தன? தமிழர்தேசியவாதிகள் என்ன செய்தனர்? இவர்களெல்லாம் முற்போக்கு அல்லவா? சாதியொழிப்பு மத ஒழிப்புச் செம்மல்கள் அல்லவா? இதுதான் கேள்வி

இங்கே பேசும் ஒவ்வொருவரையும் கவனியுங்கள் இது இந்துத்துவாவிற்கான எதிர்ப்பு மட்டுமே, பாரதிய ஜனதாவுக்கான எதிர்ப்பு மட்டுமே என சொல்லி இதிலுள்ள இடைநிலைச் சாதியின் ஆதிக்க அரசியலை எத்தனை தந்திரமாக தவிர்த்துப்பேசுகிறார்கள். அந்த கோட்டுக்குள் நின்றபடி எத்தனை உணர்ச்சிப் பொங்கல்கள் எத்தனை முற்போக்கு ஜாலங்கள்!

அந்த தந்திரத்தைத்தான் நான் உடைத்து முன்னே வைக்கிறேன். அது உங்களுக்குச் சங்கடமளிக்கிறது. அதை என் மீதான வசையாக மாற்றித்தான் நீங்கள் கடக்கமுடியும்

பெரியாரை இழுத்துத்தான் ஆகவேண்டும். ஏனென்றால் அது அவரது மண். இதைச்செய்பவர்கள் கூடவே பெரியாரியமும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பெரியாரியர்கள் செவி அடைக்கும் மௌனத்தை கடைப்பிடிக்கிறார்கள்

தமிழகம் இனிமேல் இந்த இடைநிலைச்சாதிவெறி அரசியலைப் பேசாமல் எந்த முற்போக்கையும் பேசமுடியாது நண்பரே

ஆகவே இங்கே பொங்காதீர்கள். உங்கள் பெரியாரியம் வெறும் கோஷம் இல்லை என்றால் திருச்செங்கோடுக்கு போய் நில்லுங்கள். உங்கள் கறுப்புப்படை திருச்செங்கோட்டை அதிரவைக்கட்டும். பெருமாள் முருகனை தூக்கி முன்னால் நிறுத்துங்கள்.

என்னை விடுங்கள் நான் பிற்போக்கு. அவர் உங்களவர். இருபதாண்டுக்காலமாக உறுதியான பெரியாரியர்களில் ஒருவர். அத்தனை பிரிவுகளும் சேர்ந்து சென்று திருச்செங்கோட்டை நிறையுங்கள்.ஃபேஸ்புக்கில் மட்டும் எப்படியும் பத்தாயிரம் பேர் இருப்பீர்கள் அல்லவா?

செய்யமாட்டீர்கள். பெரியாரின் பொன்மொழிகளை -சொல்லாதையும் சொன்னதையும்- எடுத்துப்போட்டு வசைபாடவே செய்வீர்கள்.

ஜெ

முந்தைய கட்டுரைபெருமாள் முருகன் கடிதங்கள் 4
அடுத்த கட்டுரைபெருமாள் முருகன் கடிதம்- 6