பெருமாள் முருகன் கடிதங்கள் 3

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

பெருமாள் முருகன் அவர்களின் எழுத்து நிலைப்பாடு செய்தியைப் படித்தேன். நான் அவரது எழுத்துக்களைப் படித்தவன் அல்லன் ஆயினும் எழுத்தறம் குறித்தான எனது இக்கருத்தை உங்களையும் உள்ளடக்கிய அனைத்து அறவழி செயல்பாட்டாளர்களுடன் பகிர உறுதி கொண்டுள்ளேன்.

படைப்பில் சத்தியம் காப்பது என்பது நன்கு ஆய்வு செய்த தகவல்களை அஞ்சாமல் வெளிப்படுத்துவது. ஒரு படைப்பாளனுக்கு இருக்க வேண்டிய பல தகுதிகளில் அஞ்சாமை, அறம் காத்தல் ஆகியவை அடங்கும். வரலாற்று உண்மைகளை ஆய்ந்து படைப்புகளாக வெளிப்படுத்துவது என்பது மக்களுக்கு தன் பண்பாடு உருவானவிதம் குறித்தான சரியான புரிதலையும் தொடர் வாழ்க்கையில் மேம்பட்ட அற நெறிகள் கடைப்பிடிப்பதற்கும் உதவும். கல்வி என்ற பெயரில் தவறே இன்று அதிகமாக கற்றுத்தரப்படுகையில் ஒரு உண்மையான படைப்பாளியின் கடமை சமுதாயத்தில் மேலும் அதிகமாகின்றது. அக்கடமையே அவரது அறமாகும்.

பெருமாள் முருகன் அவரது படைப்புகளில் தவறு இல்லை என்று அவருக்குத் தெளிவாகத் தோன்றும்போது அவர் தனது எழுத்தை தொடர்வதுதான் அறச் செயல்பாடு. ஒரு வேளை தவறு இருப்பின் அல்லது தவறு சுட்டிக்காட்டப்படின் அதை தீர ஆய்ந்து களைவது அல்லது அதற்கு பதில் சரியானதை நிரப்புவதே எழுத்தில் அறத்தை கடைப்பிடிப்பதாகும். எழுத்தையே விட்டவிடுவதல்ல.

பெருமாள் முருகனின் எழுத்தையே விட்டுவிடும் முடிவு தவறு செய்பவர்களுக்கு மேலும் தவறான வழி காட்டுகின்றது. அறத்தை நிலைநாட்ட எழுத்தறத்தை அஞ்சாமையுடன் தொடர பெருமாள் முருகனிற்கும் அனைத்து எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.
அறத்தின் வழி,

செல்லதுரை

அன்பு ஜெயமோகன்,

பெரியார் எனும் ஈவேராவைக் குறித்து நீங்கள் முன்வைத்த ’பிராமண வெறுப்பைப் பரப்பியவர்’ எனும் குற்றச்சாட்டை நான் மனதார ஏற்றுக்கொள்கிறேன். ”பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பார்ப்பானை முதலில் அடி” எனத் தீவிரமாகச் சொன்ன அவரின் கருத்து எவ்வளவு ஆபத்தானது என்பதை பின்னர்தான் உணர்ந்தேன். பள்ளி படிக்கும் காலத்திலிருந்து கல்லூரிக்காலம் வரை நான் பிராமண வெறுப்பாளனாக இருக்க அவரே காரணம். கொஞ்சம் பகுத்தறிவு கொண்டு யோசித்தாலே ஒரேயடியாய் ஒருவரை நேசிப்பதோ அல்லது வெறுப்பதோ இயலாத காரியம் என்பது விளங்கிவிடும். அப்படி நாம் நேசிக்கிற அல்லது வெறுக்கிற ஒரு முடிவை மட்டும் எடுக்கிறபோது அதிலேயே தேங்கிவிடுகிறோம். பின் அக்கருத்திற்காகவே கண்மூடித்தனமாகப் பேசவும் செய்துவிடுகிறோம். பகுத்தறிவு இதுதான் என்றால் அப்பகுத்தறிவே கோளாறானது. சமூக இழிநிலைகளுக்குக் காரணமாயிருக்கும் எல்லா தரப்பினரையும் அவர் கூண்டில் ஏற்றி இருக்க வேண்டும். ஆனால், அவர் ஒரு குறிப்பிட்ட பிரிவை மட்டுமே தொடர்ந்து குற்றம் சாட்டினார். அங்குதான் ‘பெரியாரி’யலின் சிக்கல் இருக்கிறது. இன்றளவும் பெரியாரியவாதிகள் அதையே செய்து கொண்டும் இருக்கின்றனர். அதற்காக ஈவேராவை முழுக்கப் புறக்கணித்து விடுவதும் சரியன்று. திரு.வி.க, ராஜாஜி மற்றும் குன்றக்குடி அடிகளாருடனான அவரின் நட்பு, வள்ளலாரின் பாடல்களை மலிவுப்பதிப்பில் கொணர்ந்தது, ஆ.சிங்காரவேலு முதலியாரின் அபிதான சிந்தாமணியைக் கொண்டாடியது, தன் பேச்சுக்கு எதிர்க்கருத்தை அம்மேடையிலேயே காட்டமாகச் சொல்ல ஜெயகாந்தனை அனுமதித்தது போன்ற பல செயல்களுக்காக அவரைக் குறிப்பிடுவதும் முக்கியம்.

என்னைப் பொறுத்தவரை அடிப்படை மதவாதிகளும், தீவிரப் பகுத்தறிவாளர்களும் ஒரே தரத்தினரே. வறட்டுத்தனமான ஒற்றைக்குரலையே இரண்டு பேரும் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கின்றனர்; இன்னும் ஒலிக்கவும் போகின்றனர். எச்சூழலிலும் பன்முக்க்குரல்களை அவர்கள் செவிமடுக்கத் தயாராகவே இல்லை. கடவுள் உண்டு என்று ஒரு தரப்பு ஆவேசமாகப் பேச, கடவுள் இல்லை என்று மறுதரப்பு கோபத்தோடு மறுதலிக்க சண்டைகள் தொடர்ந்தபடியேதான் இருக்கும். கடவுள் எனும் சொல்லை நிதானமாய் கவனிக்க இரண்டின் தரப்பிலிருந்தும் விலகி இருக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால் கடவுள் எனும் சொல்லின் நுட்பத்தை விளங்கிக்கொள்ள இரண்டு தரப்பின் வாதங்களிலிருந்தும், புனிதத்துவங்களிலிருந்தும் விடுபட்டாக வேண்டும். கடவுள் எனும் சொல்லுக்கு ஒரு பொருளை மட்டும் கற்பிப்பது உச்சபட்ச அறிவீனம். இங்கு அறிவு நமக்குப் பயன்படாது; நுண்ணுணர்வே முக்கியம். கூட்டத்திலும் தனித்திருப்பவனுக்கே அது சாத்தியம்.

முருகவேலன்,
படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை,
கோபிசெட்டிபாளையம்.

அன்புள்ள ஜெயமோகன்,

மனுஷ்ய புத்திரன் அவர்களின் கருத்துச் சுதந்திரம் பற்றிய பதிவைப் படித்தேன்.
‘இன்றைய சூழலில் அவர்தான் என்ன சொல்லிவிட முடியும்’ என்று பதில் அளித்திருந்தீர்கள்.

அவரது பதிவின் மிக முக்கியமான வாசகம் ‘அதே நேரத்தில்’ என்பதேயாகும். மனுஷ்யபுத்திரன் என்றில்லை. மெனக்கெட்டு முற்போக்குப் பேசுபவர்களின் கருத்துக்களில் கொஞ்சமே ஆலாபனை போல ஒரு கருத்தை ஒப்புக் கொள்வார்கள். அதை பட்டவர்த்தனமாக எதிர்க்க முடியாது என்பதால். அதன்பின் ‘அதே நேரத்தல்’, அல்லது அதையொத்த ஒரு பதம். அதன் பின் முழுமூச்சில் முதலில் சொன்ன கருத்துக்கு எதிரான முழக்கங்களைக் கொட்டித்தீர்த்துவிடுவார்கள்.

நான் பொதுவில் ‘அதே நேரத்’திற்குப் பின் சொல்லப்பட்டதை மட்டும் படிப்பதுண்டு. அவர்களது கருத்து விளங்கிவிடும். இவர்களது கூற்றை கிமு, கிபி போல ‘அதே நேரத்துக்கு முன்’, ‘அதே நேரத்துக்குப் பின்’ எனப்பிரித்துவிடலாம். பெரும்பாலும் ’அதே நேரத்திற்கு’ முன் வரும் சம்பிரதாயமான ஒன்றிரண்டு வாக்கியங்களுடன், ”..என்பதில் இன்னொரு கருத்து இருக்கமுடியாது”,
“…கடுமையாகக் கண்டிக்கும்” (அதே நேரத்தில்)
“…இதனை வன்மையாகக் கண்டிக்கும்” (அதே நேரத்தில்)
.

இரண்டும் ஒன்று போலவே தெரிகிறது.
ஆனால் உங்கள் பதில் மழுப்பல்தான்.

Gokul Salvadi
Chop wood; carry water

முந்தைய கட்டுரைபுத்தகக் கண்காட்சியில் இந்திய நாவல்கள்
அடுத்த கட்டுரைபெருமாள் முருகன் கடிதங்கள் 4