ஒலியும் மௌனமும்- கடிதம்

அன்பு ஜெயமோகன்,

ஒலி, மெளனம் எனும் இரண்டு சொற்களும் தனித்தனியாக பகுதிகளாகவே இருக்கின்றன என்பது என் பார்வை. மெளனம்தான் சிறந்தது என்பவர்கள் ஒலியால் சலிப்படைந்தவர்களாக இருக்கக்கூடும். ஒலியைக் கொண்டாடுபவர்கள் மெளனத்தால் அச்சமுற்றவர்களாக இருகக்கூடும். எதுவாயினும், ஒலியின்றி மெளனமில்லை; மெளனமின்றி ஒலியில்லை. அதில் தெளிவாக இருக்கும் நமக்கு அடுத்து எழும் கேள்விதான் அதிர்ச்சியாய் இருக்கிறது. ஒலியை விலக்கி மெளனத்தைக் கொண்டாடுவதா, மெளனத்தை விலக்கி ஒலியை வியந்தோதுவதா? கறாரான பதிலுக்காய் அலைபாய்ந்து அவதியுறுகிறோம். ஒருசமயம் ’ஒலி’ சிறப்பானதாக இருக்க, பிறிதொரு சமயம் ’மெளனம்’ நேர்த்தியானதாக இருக்கிறது. என்றாலும், எதுவோ ஒன்றில் நிலைத்திருப்பதே ‘பிறவிப்பயன்’ என்பதாய்க் கருதிக்கொள்கிறோம். தொடர்ந்து அதற்காகப் போராடவும் செய்கிறோம். அந்தோ பரிதாபம்!

மெளனத்தைப் புரிந்து கொள்ள விரும்பும் ஒருவனுக்கு ஒலியே வழி சொல்கிறது; மெளனத்திலிருந்து விடுபட முயலுபவனுக்கும் ஒலியே பாதையாகிறது. அதாவது, ஒலியும் மெளனமும் ஒரே அர்த்தத்தின் இருவேறு நிலைகளாக இருக்கின்றன. ஒரு அர்த்தத்தின் அசைவு நிலையை ஒலி என்றும் அசைவற்ற நிலையை மெளனம் என்றும் சுட்டலாம். இரண்டிலுமே ’அர்த்தம்’ இருக்கிறது. இரண்டு நிலைகளில் ஏதாவது ஒன்றில் இருக்கும் வரை அதை நம்மால் புரிந்து கொள்ள முடியாது. இரண்டையும் கடந்து நிற்கும்போதே அதை நம்மால் விளங்கிக்கொள்ள இயலும். இரண்டையும் கடந்து நிற்கும் ஒருவனுக்கு ஒலி மெளனம் எனும் பகுதிகள் தெரிவதில்லை. ஒலியும் மெளனமும் இணைந்திருக்கும் முழுமையான ’அர்த்தமே’ தெரிகிறது. அந்த அர்த்தமும் பொதுப்படையானது அல்ல. கண்டடையும் அவனுக்கான தனித்துவம் கொண்டது. அப்படி அர்த்தத்தைக் கண்டுகொள்பவனுக்கு மெளனத்தின் அசைவே ஒலி என்பதும், ஒலியின் அசைவின்மையே மெளனம் என்பதும், இரண்டுமே அர்த்தத்திற்கான தேவைகள் என்பதும் புரியத்துவங்கும். மெளனம் புனிதமானது, ஒலி அபுனிதமானது என்பது போன்ற ‘புனித’ச் சிக்கல்களாலேயே நாம் அலைவுறுகிறோம். புனிதமே அபுனிதத்தால்தான் அர்த்தம் பெறுகிறது என்பதை உணர்ந்தவனுக்கு சிக்கல்கள் தானாய் விலகுகின்றன.

கலைந்து கிடக்கும் மெளனமே ஒலி. குவிந்திருக்கும் ஒலியே மெளனம். அறிவுத்தளத்தில் கலைந்தும், குவிந்துமே அதை நாம் விளங்கிக்கொள்ள முயல்கிறோம். இங்கு ஒலி, மெளனம் எனும் சொற்களுக்கான அர்த்தங்கள் தனித்தனியானதாகத் தெரிகின்றன. நுண்ணுணர்வுத் தளத்தில் இரண்டையும் கடந்து செல்வதற்கான வாய்ப்பு நமக்குக் கிட்டுகிறது. இங்கு ஒரே அர்த்தத்தில் ஒலியும், மெளனமும் இணைந்து நிற்கின்றன. அறிவுத்தளத்திலிருந்து நுண்ணுணர்வுத்தளத்திற்கு நாம் நகர்ந்து செல்லாதவரை ’பகுதிகளின்’ தாக்கத்திலிருந்து நம்மால் தப்பவே முடியாதி. ஒலியும் மெளனமும் பகுதிகளன்று, பகுதிகளாய்த் தெரியும் ’முழுமை’ எனும் பரவசத்தை நுண்ணுணர்வுத்தளமே நமக்களிக்கும்.

காப்பியத்தை, புராணத்தை அல்லது இலக்கியப் பனுவலை நாம் ஒன்று புனித நிலையில் தூக்கிப்பிடிக்கிறோம் அல்லது அபுனித நிலையில் புறக்கணிக்கிறோம். இரண்டுமே ஆபத்தானவை. மேலும், அவை குறிப்பிட்ட சித்தாந்தத்தை வலியுறுத்த வந்தவை என்றும் மயங்குகிறோம் அல்லது அச்சித்தாந்தத்தை எதிர்க்க வந்தவை என்று திமிருகிறோம். நம் உச்சகட்ட அறிவீனமாகவே இதை நான் பார்க்கிறேன். ஒரு பனுவல் அல்லது குறியீட்டை அதன் சொற்களை அல்லது வடிவத்தை மட்டும் கொண்டு ஒற்றைத் தன்மையில் அணுகும் அதிமேதாவிகள் நாம். அதுதான் நம் சிக்கல்களுக்கு அடிப்படையே. அறிவு கடந்து நுண்ணுணர்வில் அவற்றை அணுகும்போதே அவற்றின் பன்முகத்தன்மைகளை நாம் நெருங்க முடியும். ஒற்றைத்தன்மை என்பது பகுதி மட்டுமே; பன்முகத்தன்மைகளே முழுமை. கூடவே, ஒற்றைத்தன்மை என்பது தன்னை மூடிக்கொண்டது; நிரந்தர வடிவமுள்ளது; மாறாதது.. பன்முகத்தன்மைகளோ திறந்தவை; நிரந்தர வடிவமற்றவை; மாறிக்கொண்டிருப்பவை.

சொற்களை ஒலியாகக் கொண்டால் சொற்களுக்கு இடையேயான இடைவெளி மெளனமாக இருக்கிறது. சொற்களும் இடைவெளியும் கொண்டமைந்த வாக்கியத்தின் அர்த்தமாக முழுமை இருக்கிறது. முழுமையைச் சொல்லிவிடுதல் எளிது. அதைத் தன்னுணர்வில் ஒருவன் கண்டு கொள்வதென்பது அப்பப்பா!

முருகவேலன்,
படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை,
கோபிசெட்டிபாளையம்.

“நித்ய சைதன்ய யதி எனக்கு ஒரு தியானமுறையை சொல்லித்தந்தார். இரைச்சல் இல்லாத ஏதேனும் ஓர் இடத்தில் கண்மூடி அமர்ந்துகொள்வது. சுற்றிலும் கேட்கும் ஒலிகளில் கவனத்தை குவிப்பது. சற்று நேரம் இதைச் செய்யும்போது மிகத்தூரத்தில் உள்ள ஒலிகளெல்லாம் நமக்கு கேட்க ஆரம்பிக்கும். நாம் சாதாரணமாக ஒலிகளை வடிகட்டி தேவையானவற்றை மட்டுமே கேட்கிறோம் என்று புரியும். பல இடங்களில் குழந்தைகளும் பறவைகளும் ஓயாமல் ஒலியெழுப்பிக்கொண்டிருப்பது தெரியும்.”‘

அன்புள்ள ஜெயமோகன் சார்,

நீங்கள் மேலே குறிப்பிட்டது போல, எங்களுடைய குருகுல கல்வியிலும், யோகா நித்ரா, என்னும் பயிற்சி முறை சுவாமி சத்யானந்த சரஸ்வதி அவர்களால் ஏற்படுத்தப்பட்டு , இன்று உலகம் முழுவதும் பெரும்பாலான யோக கல்வி நிறுவனங்களால், உடல் மற்றும் மனம் தளர்வு பெற, பயிற்றுவிக்கப்படுகிறது,
மிகக்குறைந்த நேரத்தில் இதை தினமும் மேற்கொள்ளலாம் என்பதால் , பள்ளிக்குழந்தைகள் அனைவரும் விரும்புகின்றனர் ,
இத்துடன், ஒரு ஒலிப்பதிவையும் இணைத்துள்ளேன், முயற்சித்துப்பார்க்கவும்

அன்புடன்
சௌந்தர் G

முந்தைய கட்டுரைசார்லி ஹெப்டோ -கருத்துச் சுதந்திரம்-கடிதங்கள்
அடுத்த கட்டுரைகாஞ்சிரம்