அன்பு ஜெயமோகன்,
உங்கள் கால்வலி தேவலாமா? நீங்கள் அறிவீர்கள் என்று நினைக்கிறேன் – வலியை
(அல்லது எந்த ஒரு உணர்வையும்) கூர்ந்து நோக்கும்போது அதன் மனப்
பிடியிலுருந்து வேளியேறி விடுபடுவது, `விபாசனா’ தியானமுறையின்
மூலக்கூறுகளில் ஒன்று. விபாசனா புத்தரின் கோட்பாடுகளில் ஒன்று என்பது
அதனை உலகந்தோறும் நிறுவிப் பரப்புவதை வாழ்க்கை முறையாக வகுத்துக் கொண்ட
கோயன்கா அவர்களின் நம்பிக்கை. மிகச் சிறந்த முறையில், இலவசமாக, உலகம்
முழுவதும், எந்த மதக்கோட்ப்பாடுகளுக்கும் உட்படுத்தாமல், வணிக நோக்கம்
சிறிதும் இல்லாமல் நடத்தப் படுகின்ற ஒரு அற்புதமான அமைப்பு விபாசனா.
தனிப்பட்ட முறையில், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களையும் அரவணைக்கும் அதன்
சகிப்புத்தன்மை எனக்கு மகிழ்வை அளித்தது. தெரிந்தவர்கள் அனைவருக்கும்
விபாசனாவின் தகவல்களைப் பகிர்ந்திருக்கிறேன். பல விவரங்களை விபாசனா வலைப்
பக்கங்களிலிருந்து அறியலாம் – http://www.dhamma.org/. ஆர்வமிருந்தால்
சொல்லுங்கள் – விபாசனா கற்றுக்கொண்ட இனிமையான அனுபவத்தைப் ப்ற்றி விரிவாக
எழுதுகிறேன்.
கோமல் ஸ்வாமிநாதன் பற்றி எழுதியவை நெகிழ்ச்சியை அளித்தன. `சுபமங்களா’வை,
பதின்களில் இறுதிகளில், எதேச்சையாகப் படித்து வியப்படைந்திருக்கிறேன் –
அந்த அனுபவத்தின் உள்மகிழ்வுக்கான காரணம் அறியாமலே. இப்போது புரிவது
போலிருக்கிறது. த்மிழின் அருமை, தமிழ்மொழியின் நெருங்கிய பரிச்சயம்
அளிக்கும் இனம் தெரியாத மகிழ்வு / அமைதி என்பவை என்னவென்று தெரியாத /
தெரிய வாய்ப்பு அமையாத வயதில் சுபமங்களா வாசிப்பு ஒரு இனிமையான நினைவு.
முன்பே, ராகவன் தம்பி அவர்கள் எழுதிய `கோமல் என்ற மாமனிதர்’ என்ற
வலைப்பூப் பதிவுகள் (http://sanimoolai.blogspot.
மிகுந்த நெகிழ்வையும், சந்தித்தே இராத் ஒரு ஆளுமையின் மேல் அன்பையும்,
மகிழ்ச்சியையும், ஆர்வத்தையும், நெகிழ்ச்சியையும் வரவழைத்தன. உங்கள்
நினைவுகள் மீண்டும் அவற்றைக் கிளறி விட்டன.
இவை சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ் நாடக இலக்கியச் சூழலில்
செயல்பட்ட பல ஆளுமைகளைப் பற்றி படிக்கும்போதெல்லாம் தோன்றுகின்ற பொதுவான
உணர்வுகளே. தமிழர்களின் வாழ்வியல் வசதிகள் மேம்பட்ட கடந்த பத்துப்
பதினைந்து வருடங்களாக, தமிழ் நூல்களை, இலக்கிய இதழ்களை வாங்கும் ஆர்வம்
அதிகரித்ததற்கு் இந்நினைவுகள் பற்றிய எழுத்துக்கள் ஒரு காரணம் என்று
நினைக்கிறேன். இன்னொரு முக்கியமான காரணம் சுஜாதாவின் தற்கால இலக்கிய
விவரங்களை வணிக இயல்களுக்கு நடத்திய `கடத்தல்’! (`கடத்தல்’ சொல்லாட்சி
அவருடையதே). சிறு வயதில் இலக்கியச் சூழல் வாய்க்காத பலருக்கும், தற்காலத்
தமிழிலக்கியச் சூழலைப் பற்றிய ஆர்வம் வளர்வதற்கு, கநாசு, கோமல், சுந்தர
ராமசாமி, நகுலன், செல்லப்பா போன்றோரைப் பற்றி எழுதப் பட்ட நினைவோடைகள்
நல்ல தூண்டுகோல்கள். சுரா பற்றி நீங்கள் எழுதிய `சுரா.நினைவின்நதியில்
ஒரு அற்புதமான படைப்பு! (பலப்பல முறை திருப்பித்திருப்பிப் படித்து,
அதைக்கிழித்தே விட்டேன்!) `காடு’ படித்து வியந்து, `விஷ்ணுபுரத்’தைப்
புரட்டி அரண்டு(!) விலகிய எனக்கு `காற்றில்…’ பெருமகிழ்ச்சியை
அளித்தது. `தற்காலத் தமிழ் இலக்கிய’த்தைத் தேடிப் பிடித்துப் படிக்கச்
செய்தது. `நாவ’லைத் தேடிக்கொண்டிருக்கிறேன் :-)
உங்களுக்கும், சுரா அவர்களுக்கும் நடந்த தொடர்ந்த உரையாடல்கள் பற்றிய
உங்கள் நினைவுகள், தமிழிலக்கியப் போக்கு பற்றி அறியாத ஆனால் ஆவலுள்ள
எவருக்கும் ஒரு அழகிய சாளரத்தைத்திறக்கின்றன. (அசோகமித்திரனின் எழுத்து்
அழகை உணராமல் உணர்ந்திருந்தேன் என்று புரிந்தேன்). உலக இலக்கியங்களைப்
பற்றியும் ஒரு கோடிகாட்டுகின்றன, (தோல்ஸ்தோய்க்கும்,
தோஸ்தோயெவ்ஸ்கிக்கும் உள்ள படைப்பு முறை வேறுபாடுகள் பற்றிய கணங்கள் மிக
அழகானவை. சிந்தனையைத் தூண்டுபவை). இச்செயலைக் கொண்டாட்டத்துடனும்,
குறு(சு!?)ம்புடனும், வேகத்துடனும், கோபத்துடனும் செய்கின்றன.
இதைப்படித்த பின்பே, புதுமைப்பித்தனிலிருந்து தொடங்கிய தமிழ்
எழுத்துக்களை முழுவதும் படிக்கும் ஆர்வம் வந்தது. (இப்போது, நித்யா
பற்றிய உங்கள் நினைவுகள் தத்துவக் கோட்பாடுகளைப் பற்றிய ஆர்வத்தைத்
தருகின்றன).
ஆகவே, சுராவைப் போலவே, கோமல் போன்ற மற்ற ஆளுமைகளைப் பற்றிய நினைவுகளையும்
நீங்கள் விரிவாக எழுதலாமே (மேட்டருக்கு வந்துட்டேன்!). அவர்களது
எழுத்துக்கள் / படைப்புக்களைப் பற்றி மட்டுமல்லாமல், கடந்த ஐம்பது
ஆண்டுகாலத் தமிழ் இலக்கிய வளர்ச்சி மற்றும் கடந்து வந்த ஆளுமைகள் பற்றிய
ஒரு முழுக்க கண்ணோட்டத்தை அவை அளிக்கும் என்று நம்புகின்றேன்.
அதிகரித்துக் கொண்டிருக்கும் உங்கள் எழுத்துக்கள் பற்றிய ஆர்வமும்,
சிறந்து கொண்டிருக்கும் தமிழ் பதிப்புச் சூழலும் உங்களுக்குச் சாதகமானவை
என்றும் நம்புகிறேன்.
தொடர்ந்து எழுதுங்கள்.
அன்பு.
சரவணன்
சென்னை
***
அன்புள்ள ஜெ
கோமல் பற்றிய உங்கள் நினைவுகள் என் மனதை அசைத்தன. அவரிடம் நான் இரண்டுமுறை பேசியிருக்கிறேப். இரண்டு டுபுக்கு கவிதைகளை அவருக்கு அனுப்பிவைத்திருக்கிறேன். அப்போதுநான் கல்லூரி மாணவன். அவர் என்னைப் புண்படுத்தவில்லை. என் உணர்வுகளை மதித்து எனக்கு மென்மையாக அக்கவிதைகளைப்பற்றி எடுத்துச் சொன்னார். என்னிடம் உங்கள் படைப்புகளைப் படிக்கும்படி அவர் சொன்னதை நினைவுகூர்கிறேன். அப்போது எப்போதுமே சிரித்துக்கொண்டிருக்கும் ஒருவராகவே நான் கோமலைப் பார்த்தேன். அவருக்குள் இத்தனை கொடிவலி ஓடிக்கொண்டிருப்பதை உணர்ந்தபோது மனம் கனத்தது. அடுத்து நீங்கள் எழுதிய அல்போன்ஸா பற்றிய கட்டுரையைப் படித்தபோது அந்தக்கட்டுரையின் சாரமும் இது அல்லவா என்ற எண்ணம் எனக்கு உருவானது. சிரித்துக்கொண்டே இருப்பது ஒரு பெரிய வலிமைதான்
சுகுணராஜ்
***
அன்புள்ள கல்யாண்ஜி
வலி இப்போது கொஞ்சம் நீடிக்கிறது. கால் என்பதனால்தான். தொங்கப்போட்டுக்கொன்டு உட்கார வேண்டும். அதற்காக கம்ப்யூட்டரை துறக்கவும் முடிவதில்லை. கோமலின் நினைவு திடீரென எழுந்து மனதைக் கலக்கிவிட்டது இறந்தவர்கலை இரவில் நினைவுகூர்வதென்பது மிக மிக தீவிரமான ஓர் அனுபவம்.
ஜெயமோகன்
அன்புமிக்க ஜெயமொஹன்,
வணக்கம்.
சென்ற அக்டோபெரில் பைக் சறுக்கி நானும் வலது
காலில் இதே போன்ற ஆழமான காயம் அடைந்தேன்.
விழுந்த பைக்கை உதைத்துத் தரச் சொல்லி நானே
மருத்துவமனை போய் கட்டெல்லாம் போட்டுவிட்டு
வீடு வந்தேன். ஆனால் வலி அன்றிரவுதான் துவங்கியது.
பாதம் மட்டும் ஒரு தனி உறுப்பென என் கண்முன்னே
துடிக்கும். வலியின் வலையிலிருந்து கடலுக்குத் தப்பிவிட
ஈய மினுமினுப்புத்துள்ளலுடன் தாவும். பிளந்த வாயும் அகன்ற கண்ணுமாய் அது அடங்குகிறவரை பாதத்தைப்
பிடித்துக்கொள்வேன்.
இன்னும் அந்த இடத்துத் தோல் கருக்கவில்லை. வேட்டி
விலகி கரண்டைக் கால் தெரிந்தால், கல்யாண வீடுகளில்
வெள்ளை விழுந்திருக்கிறதா எனப் பார்வையில் அடுத்தவரிடம் விசாரிக்கிறார்கள்.
விளையாட்டாக இருக்காமல் அதற்குரிய மருத்துவம் செய்துவாருங்கள்.
*
இரவில் தீவிரமடைகிற உணர்வுகளால்தானே பகலின் உள் அடுக்குகளில் மற்றவர் அறியாத் திசைகளை நாம்
கண்டடைந்து மேலே நடக்கிறோம். எந்த முன்பின் கண்ணிகளும் அற்று இப்படி நம்மிடம் வந்து சேர்கிற,
அல்லது நாம் அடைகிற தீவிர உணர்வுகளின் நிலைக்
கண்ணாடியில் தெரிகிற நம் பிம்பங்களே இடவலம்
அற்றவை.
வண்ணதாசன்