அன்புள்ள ஜெ,
காலை தமிழ் இந்துவில் இந்த செய்தியைப் படித்ததிலிருந்தே மனது சரியில்லை. கருத்தை கருத்தால் எதிர்கொள்ள நமக்குத் தெரியவில்லை என்பது எவ்வளவு பெரிய இழிவு. இங்கே பாரீசில் கருத்துரிமைக்காக மாபெரும் பேரணி நடைபெறுகிறது. பெரிய அளவில் மக்கள் திரள்கிறார்கள். சமூகமும் முன்னேறி செல்கிறது. நமது அழிவை நாமே பார்க்கப் போகிறோமா என்ன?
புத்தகத்தைக் கொளுத்துவது ஒன்றும் நம் சமூகத்துக்குப் புதிதில்லையே. உண்மையில் எனக்கு பெருமாள் முருகன் மீது தான் கோபம் வருகிறது. அவரின் பின்வாங்கல் அவசரப் பட்டு எடுத்த முடிவு போலத் தெரியவில்லை. அத்தகைய ஓர் முடிவை எடுக்கும் படிக்கு அவருக்கு அழுத்தம் இருந்திருப்பது கண்கூடு. ஆனால் இதற்கெல்லாம் பின்வாங்குவது ஒரு எழுத்தாளராக அவரது பொறுப்பைத் தட்டிக் கழிப்பதாகத்தான் எனக்குப் படுகிறது. கொஞ்சம் தாக்கு பிடித்திருந்தால் அந்த சமூகத்தில் ஏதேனும் சிறு மாறுதலையாவது நிகழ்த்தியிருக்கலாம். இதெல்லாம் ஏன் அவர் செய்யவேண்டும் என்று கேட்டால் அவர் தேர்ந்தெடுக்கப் பட்டவராக இருப்பதால்தான் என்பேன். இது யாரவது வந்து சமூகத்தைச் சரி செய்யட்டும் என்ற உளுத்துப்போன தமிழ் மனநிலையாகக் கூட இருக்கலாம். ஆனால் ஒரு பொறுப்புள்ள எழுத்தாளன் அப்படித்தான் செய்திருக்க வேண்டும். நீங்கள் அப்படித்தான் செய்திருக்கிறீர்கள். செய்து வருகிறீர்கள். இவர் இப்படி பின்வாங்குவது இவர் IFA (இந்திய கலைகளுக்கான மையம்) சார்பாகச் செய்த சமூக ஆராய்ச்சி என்ற கோணத்துக்கு மேலும் மேலும் வலு சேர்க்கிறது!!!
கைகள் கட்டப்படாத கலைஞன் தான் எவ்வளவு பலமுள்ளவன்.
அன்புடன்,
மகாராஜன் அருணாச்சலம்.