பெருமாள் முருகன் அவரது நூல்களை திரும்பப்பெற்றுக்கொண்டுவிட்டார் என்றும் எழுத்திலிருந்தே விலகிக்கொள்வதாக அறிவித்திருக்கிறார் என்றும் செய்தி வந்திருக்கிறது. இந்த நாளைப்போல எழுத்தாளனாக வருத்தமளிக்கும் ஒரு நாள் சமீபத்தில் நிகழ்ந்ததில்லை
வெறும் கண்டனங்கள், வருத்தங்களுக்கு அப்பால் சென்று இங்குள்ள ஆட்சியாளர்களுக்கு, தேசிய ஊடகத்திற்கு இங்குள்ள எழுத்தாளர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்று காட்டும் பெரிய நடவடிக்கை ஒன்று தேவை.
ஏன் ஓர் அடையாளமாக ஒருநாள் புத்தகக் கண்காட்சியை மூடக்கூடாது?
கருத்துரிமைக்கு எதிராக செய்யப்படும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக எழுத்தாளர்கள் அனைவரும் கையெழுத்திட்ட ஒரு பெரிய மனுவை குடியரசுத்தலைவருக்கு அளிக்கக் கூடாது?
திருச்செங்கோட்டில் கருத்துரிமைக்கு எதிராக நிகழ்ந்த மிரட்டலை ஏன் அங்குள்ள அரசு அதிகாரிகள் அங்கீகரித்தார்கள் என்பதற்கு எதிராக தேசிய அளவில் எழுத்தாளர்களை இணைத்துக்கொண்டு ஒரு வழக்கை உச்சநீதிமன்றத்தில் ஏன் தொடுக்கக்கூடாது?
இப்போது இதைச் செய்தாகவேண்டும். இல்லையேல் ஒவ்வொன்றும் கைவிட்டுப் போய்க்கொண்டிருக்கிறது
இந்த அச்சுறுத்தல் தனித்தது அல்ல. எனக்கு எதிராக பலமுறை அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் நிகழ்ந்துள்ளன. இதேபோன்ற சாதிச்சங்கங்கள். மத அமைப்புக்கள். அரசியலமைப்புக்கள். அவற்றை நான் தன்னந்தனியாகவே எதிர்கொள்ள நேர்ந்தது. எந்த துணையும் எனக்கு அமையவில்லை
எழுத்தாளன் தனித்தவன். அவனுக்கு எதிராக அமைப்புரீதியாக மிரட்டல் விடுப்பதைப்பற்றி எவரும் வெட்கி நாணவேண்டும். ஆனால் இங்கு அதையெல்லாம் எவரிடமும் நாம் எதிர்பார்க்கமுடிவதில்லை
உண்மையில் இது தமிழகத்தில் எப்போதும் நடந்துகொண்டிருக்கிறது. கறுப்பு சிவப்பு வெளுப்பு நாவலுக்கு எதிராக நாடார் சாதியமைப்புகளால் சுஜாதா மிரட்டப்பட்டார் என்பது இன்று பழைய கதை.
உதிரியாக நிகழ்ந்துவந்த இச்செயல்களுக்கு ஓர் அமைப்புசார்ந்த தொடக்கத்தை அளித்தது குஷ்புவுக்கு எதிரான திட்டமிட்ட வன்முறை. குஷ்பு தனிப்பட்ட முறையில் ஒரு கருத்து சொன்னார். அக்கருத்துக்கு எதிராக அவரை தெருக்களில் அவமதித்து பல ஊர்களில் ஒரே சமயம் வழக்கு தொடுத்து நீதிமன்றம் வந்த அவரை தாக்க முனைந்து மிக மோசமான முன்னுதாரணத்தை இங்கே உருவாக்கினர்
அதன்பின் சிறிதும் பெரிதுமாக பல நிகழ்வுகள். விஸ்வரூபம் சினிமாவுக்கு எதிரான மிரட்டல் இன்னொரு முக்கியமான நிகழ்வு
நாகர்கோயிலிலேயே ஒரு வரலாற்றுக் குறிப்புக்காக ஆய்வாளர் டாக்டர் பத்மநாபன் மிரட்டப்பட்டார். அவர் அந்நூலை திரும்பப்பெற்றுக்கொண்டார். சுசீந்திரம் இந்துத்துவ – சாதிக்குழுக்களால் நான் மிரட்டப்பட்டேன்
இது தொடர்ந்து நிகழ்கிறது. இனி மேலும் வலுக்கும். எந்த எழுத்தாளனும் எந்த விஷயத்தைப்பற்றியும் எழுதிவிடமுடியாது. எவர் வேண்டுமென்றாலும் அணிதிரண்டு மிரட்டலாம். நீதிமன்றத்துக்கு இழுத்து அலைக்கழிக்கலாம்.
இலக்கியத்திற்கு, சிந்தனைக்கு எதிரான வன்முறை இது. இதன் விளைவுகள் மிகமிக பாரதூரமானவை. சம்பந்தப்பட்ட சமூகத்திற்கே கூட இதனால் கேடுதான். அவர்களை விமர்சனமே செய்யமுடியாமலாகும்போது அவர்கள் தேங்கி அழிவார்கள். அவர்கள் காலப்போக்கில் வன்முறைக்குழுவாக ஆவார்கள். வன்முறைக்குழுக்களுக்கு அறிஞர்களோ சீர்திருத்தவாதிகளோ தலைமை ஏற்கமுடியாது. வன்முறையாளர்களே வருவார்கள்.
இந்த விஷயத்தில் இந்துத்துவ இயக்கங்கள் நேரடியாக பங்கெடுத்து பின் விலகிக்கொண்டன என்கிறார் பெருமாள் முருகன். முற்போக்கு கருத்தியலைப் பேசும் திராவிடர் கழகம், தி.மு.க . கம்யூனிஸ்டுக் கட்சிகள் என்ன செய்தன? திருச்செங்கோட்டில் அவர்கள் எவரேனும் பெருமாள்முருகனுக்குத் துணை நின்றார்களா?
உண்மையில் அங்கே ஒரு சிறு ஆதரவுக்குரல் கூட அவருக்காக எழவில்லை. காரணம் மெஜாரிட்டியின் குரல் எதிராக இருப்பது. பெருமாள் முருகன் முழுக்க முழுக்க தனித்துவிடப்பட்டார். அவரது சரணடைதல் அதன் விளைவுதான்.
அனைத்துக்கும் மேலாக கருத்துரிமைக்குக் காவல்காக்கவேண்டிய அரசு. அவ்வுரிமையை உறுதிப்படுத்தவேண்டிய அரசதிகாரிகள் மிரட்டல்காரர்களின் தரப்பில் நின்று பேசியிருக்கிறார்கள்.
சாதாரணமாக கடந்துசெல்லலாம். ஆனால் இந்த நாள் நாம் தமிழகத்தில் எதிர்கொள்ளப்போகும் ஒரு பெரும் கரிய எதிர்காலத்திற்கான தொடக்கம்.