‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 87

பகுதி பதினாறு : மாயக்கிளிகள் – 7

சற்றுநேரம் கழித்துத்தான் என்ன நிகழ்ந்தது என்று வைதிகர்களின் அவை புரிந்துகொண்டது. எங்கிருந்தோ “வென்றான் பிராமணன்” என்று ஒரு தனிக்குரல் பீறிட்டது. இளம் வைதிகர்கள் எழுந்து கைகளைத் தூக்கி உரக்கக் கூச்சலிட்டு நடனமிட்டனர். அலையலையாக மேலாடைகளைத் தூக்கி வீசினர். யாரோ “அவர்கள் வைதிகர்கள் அல்ல. அவர்கள் பாண்டவர்கள்” என்று கூவியதை எவரும் செவிகொள்ளவில்லை. அப்பால் குடிகளவையிலும் பெருங்கூச்சலும் கொண்டாட்டமும் திகழ்ந்தது.

எதுவோ ஒன்று அனைவரையும் கொண்டாட வைத்தது.எளியோன் ஒருவன் வல்லமை கொண்ட அனைவரையும் வென்றுவிட்டான் என்பது. என்றும் அவர்களின் அகம் காத்திருந்த தொன்மம். அப்படி வெல்பவன் பெரும் வில்திறன் கொண்டவன், எளியோன் அல்ல என்பதை அவர்களின் அகம் அறிந்திருந்தாலும் அகமே அதை ஏற்க விழையவில்லை. அந்த நிகழ்வை அங்கேயே புராணம் ஆக்கிவிட விழைந்தனர். ஒரு புராணத்தின் உள்ளே நின்றிருக்கும் உணர்வில் துள்ளிக்குதித்து மெய்மறந்து கூச்சலிட்டனர்.

திருஷ்டத்யும்னன் திரௌபதியின் அருகே குனிந்து “அவையில் வென்றவர்களை இளவரசி ஏற்றாகவேண்டும் என்று நெறி ஏதும் இல்லை. இளவரசியின் தேர்வுக்கு அவர்கள் வருகிறார்கள் அவ்வளவுதான். அவள் மாலை அவள் உள்ளமே என்கின்றன நூல்கள்” என்றான். அவனை நோக்கி இதழ்மடிய புன்னகைத்துவிட்டு திரௌபதி திரும்பி அருகே நின்றிருந்த தோழியரை நோக்கினாள். அவர்கள் தங்களுக்குப் பின்னால் வந்த சேடியர் ஏந்திய தாலத்தில் இருந்து ஐவகை மலர்களால் பின்னப்பட்ட மாலையை எடுத்து அவள் கைகளில் அளித்தனர். திருஷ்டத்யும்னன் திரும்பி சூதரையும் மாகதரையும் நோக்கி கைகாட்ட மங்கல இசை எழுந்தது.

இதழ்கள் புன்னகையில் விரிந்து பல்முனைகள் சரமென தெரிய அவள் தன் கைகளில் மாலையை எடுத்துக்கொண்டபோது நினைத்திராதபடி அவை முழுதடங்கியது. அனைவரும் அப்போதுதான் அந்நிகழ்வின் முழுப்பொருளை அறிந்தது போல. அங்கிருந்த ஒவ்வொரு ஆணுள்ளமும் அர்ஜுனன் மேல் அழுக்காறு கொண்டதுபோல. அவள் மாலையுடன் சில எட்டுகள் வைப்பதற்குள் அவையில் மங்கல இசை மட்டும் ஒலித்தது. மக்களின் ஆரவாரம் துணையின்றி திகைத்தது போல பொருளற்று பந்தலின் காற்றில் சுழன்று பரவியது.

திரௌபதி அர்ஜுனனின் முகத்தை நோக்கினாள். அவன் அவள் நடந்து வருவதைக் கண்டு திகைத்தவன் போலவோ அதன் பொருள் விளங்காதவன் போலவோ நின்றான். அவன் முகத்தில் சற்றும் உவகை இல்லாததை அவள் கண்டாள். ஒருகணம் அவளும் திருஷ்டத்யும்னனும் விழி தொட்டுக்கொண்டனர். அவள் அணுகிவந்த ஒவ்வொரு ஓசையையும் அவன் உடல் அறிந்ததுபோல் தெரிந்தது. அவள் வைத்த ஒவ்வொரு அடியையும் அவன் தன் உள்ளத்தால் பின்னெடுத்துவைக்க உடல் உறைந்து நின்று தவித்தது.

அவள் தன் அணியோசைகள் அவனுக்குக் கேட்கும் தொலைவை அடைந்ததும் அர்ஜுனன் விரல் தொட்ட நீர்ப்பாவை என கலைந்து திரும்பி அவை நோக்கி கைகூப்பினான். திரௌபதி இடையின் உலோகம் போன்ற இறுகிய வளைவு நடையின் அசைவில் ஒசிய, முலைகள் மேல் சரப்பொளியின் இதழ்கள் நலுங்க, மேகலை மணிகள் குலுங்கி ஒளிர, நூபுரம் ஒலிக்க அவனருகே வந்து சற்றே முகவாய் தூக்கி அவனை விரிந்த கருவிழிகளால் நோக்கினாள்.

அவள் விழிகளைத் தொட்டதும் அவன் நோக்கு பதறி விலகியது. தொடிவளைகள் ஒலியுடன் பின்னகர்ந்து ஒன்றன் மேல் ஒன்றாக இணைந்துவிழ, அவள் கைதூக்கி மாலையை அவன் தோளிலணிவிக்க முனைந்ததும் அரசர் அவையில் இருந்து கிருஷ்ணன் எழுந்து கை நீட்ட மங்கல இசை அணைந்தது. இறுதியாக முழங்கிய முழவு விம்ம்ம்ம் என ஒலித்து மெல்ல அடங்கியது. யாதவன் ஒலி மிகாத குரலில் திருஷ்டத்யும்னனிடம் “இளவரசே, வைதிகமுறைப்படி இளவரசி அந்த பிராமணனுக்கு மாலையிடுவதற்கு முன் காலைத் தொட்டு வணங்கவேண்டும்” என்றான். “வைதிகச்செயல்களில் அவனுக்கு அவள் அறத்துணைவி. ஒரு சொல்லும் மிகாது வாழ்பவள் என்பதற்கான அறிவிப்பும் தொடக்கமும் அதுவே.”

திருஷ்டத்யும்னன் அந்தக் கூற்றில் இருந்த ஏதோ ஒரு பொருந்தாமையை உணர்ந்து மறுகணமே அதில் ஒளிந்திருந்த பொறியை தொட்டறிவதற்குள்ளே சத்யஜித் “அவள் பாஞ்சால இளவரசி. ஷத்ரியப்பெண்” என்றார். ”இங்கே ஷத்ரிய முறைப்படிதான் தன்னேற்பு நிகழ்கிறது.” திருஷ்டத்யும்னன் அனைத்தையும் உடனே கண்முன் கண்டுவிட்டான். திகைப்புடன் திரும்பி நோக்கி திரௌபதியின் கண்களைச் சந்தித்து விலகினான்.

ஷத்ரிய அவையில் அச்சொற்கள் விழுந்ததுமே விழிகளெல்லாம் மாறுபட்டன. கிருஷ்ணன் “அவ்வண்ணமென்றால் ஆகுக!” என்று சொல்லி அமர்ந்ததுமே தன் தொடையை அறைந்து ஒலி எழுப்பியபடி எழுந்த ஜராசந்தன் உரத்தகுரலில் “நிறுத்துங்கள்… இதற்கு ஷத்ரியர்கள் ஒருபோதும் ஒப்புக்கொள்ள முடியாது!” என்று கூவினான். துருபதன் கைதூக்கி ஏதோ சொல்ல முயல அவை ஓசையடங்கி செவிகூர்ந்தது. பாஞ்சாலி திரும்பி ஜராசந்தனை நோக்க கூந்தலை முடிந்திருந்த முத்துமாலை சரிந்து இடக்கன்னத்தை தொட்டுத் தொட்டு அசைந்தது. அவள் புன்னகையுடன் அவனை நோக்கி அதை எடுத்து கூந்தலில் செருகினாள்.

திருஷ்டத்யும்னன் கைதூக்கி உரத்த குரலில் “இங்கே மணத்தன்னேற்பு நிகழ்ந்திருக்கிறது மகதரே. நெறிகளின்படி வென்றவனை இளவரசி ஏற்கிறாள்… இது எங்கள் குலமுறை. அதை ஏற்றே இங்கே நீங்கள் வந்துள்ளீர்கள்” என்றான். ஜராசந்தன் கைகளைத் தூக்கி முன்னால் வந்தபடி “ஷத்ரியர் அவையில் பிராமணர்கள் பங்கெடுக்கும் முறை எங்குள்ளது?” என்றான். அவனைக் சூழ்ந்து எழுந்து நின்ற கலிங்கனும் மாளவனும் ”ஆம், நாங்கள் அதை அறிய விழைகிறோம்” என்றனர்.

திருஷ்டத்யும்னன் “இந்த அவைக்கூடலின் நெறியை நான் உங்களனைவருக்கும் அனுப்பிய ஓலையிலேயே சொல்லியிருந்தேன். பிராமணர் ஷத்ரியர் மட்டுமல்ல வைசியரோ சூத்திரரோ கூட இந்த வில்லேந்தலில் பங்குகொள்ளலாம். வென்றவரில் தனக்குகந்தவரை பாஞ்சால இளவரசி தேர்வு செய்வாள்” என்றான். ”பாஞ்சாலம் தன் நெறிகளை உங்கள் குலங்கள் முதிர்ந்து ஷத்ரியர்களாக ஆவதற்கு நெடுங்காலம் முன்னரே வேத நெருப்பிலும் வாளின் ஒளியிலும் எழுதிவைத்துவிட்டது ஷத்ரியர்களே. இங்கே நீங்கள் எதிர்ப்பது பாஞ்சாலத்தின் நெறிகளை என்றால் எழுங்கள். வில்லேந்துங்கள். அதை முடிவு செய்வோம்” என தன் உடைவாளில் கைகளை வைத்தான்.

பின் இருக்கையில் இருந்து எழுந்த சல்லியன் கைகளைத்தூக்கி ஷத்ரியர்களை அடக்கிவிட்டு “பாஞ்சால இளவரசே, நாங்கள் இங்கே பாஞ்சாலத்தின் நெறிகளைப்பற்றி பேசவில்லை. துருபதனின் கோலுக்கு எதிராக எழவும் இல்லை. இங்கே ஷத்ரியர் நடுவே எழும் வினா இதுவே. பாஞ்சாலத்தின் இளவரசியை இந்த பிராமணனுக்கு நீங்கள் அளிக்கவிருக்கிறீர்கள் என்றால் இக்கடிமணத்திற்குப்பின் அவள் யார்? அவ்வைதிகனுடன் சென்று அவர்களுக்கு வேள்விப் பணிவிடைகள் செய்து பிராமண பத்தினியாக வாழவிருக்கிறாளா?” என்றார்.

திருஷ்டத்யும்னன் சற்று தடுமாறி திரும்பி துருபதனை நோக்க அவர் வணங்கி “அவையோரே, அவளை நான் பாரதத்தின் சக்ரவர்த்தினியாகவே பெற்றேன். அவ்வண்ணமே வளர்த்தேன். அதற்காகவே அவள் மணமுடிக்கிறாள். அதில் ஏதும் மறுசொல் மறுசிந்தை இல்லை” என்றார். ஷத்ரியர்கள் சிலர் கைகளைத் தூக்கி சினத்துடன் ஏதோ சொல்ல எழுந்தனர். சல்லியன் அவர்களை கைகளைக் காட்டி அடக்கினார். ஒருகணம் அவர் பார்வை திரௌபதியின் விழிகளைத் தொட்டு மீண்டது. அவள் அவர் கண்களை நோக்கி புன்னகை செய்தாள்.

சல்லியன் தடுமாறி விழிகளை விலக்கிக்கொண்டு உடனே சினத்துடன் தன்னை மீட்டு வஞ்சத்துடன் புன்னகைத்து மீசையை நீவியபடி “நன்று. தந்தையர் இத்தகைய பெருங்கனவுகளுடன் வாழ்வது உகந்ததுதான். ஆனால் இனி அவள் நாடு எது? இந்த இளம்பிராமணன் அவளை எங்கே கொண்டுசெல்லவிருக்கிறான்? அவளுக்கு பாஞ்சாலநாட்டு மணிமுடி அளிக்கப்படுமா? இல்லை, பாதிநாட்டை அளிக்கவிருக்கிறீர்களா?” என்றார். திருஷ்டத்யும்னன் “அது பாஞ்சாலநாட்டின் முடியுரிமை பேச்சு. அதை பேசவேண்டிய அவையல்ல இது” என்றான்.

“ஒப்புகிறேன்” என்றார் சல்லியன். அவர் விழிகளில் புன்னகை மேலும் விரிந்தது. “நாங்கள் அறியவிழைவது ஷத்ரியப்பெண்ணாகவே வாழவிழையும் இவளை மணக்கும் இப்பிராமணன் இனிமேல் ஷத்ரியனாக ஆகப்போகிறானா என்றுதான்.” திருஷ்டத்யும்னன் அச்சொற்களின் தொலைபொருளை தொட்டு எடுப்பதற்குள்ளாகவே துருபதன் “ஆம், இவர் இனிமேல் ஷத்ரியரே” என்றார்.

”அவ்வண்ணமென்றால் இங்குள்ள ஷத்ரிய அரசர்களில் எவருடைய நிலத்தையோ இவர் ஏற்கவிருக்கிறார் இல்லையா?” என்றார் சல்லியன். “நாங்கள் எதிர்ப்பது அதையே. யமஸ்மிருதியின்படி தன் நிலத்தின் ஒரு துண்டைக்கூட இழக்காமலிருக்கும் பொறுப்புள்ளவன் ஷத்ரியன். ஆகவே ஒருதருணத்திலும் ஷத்ரியன் புதிய ஷத்ரிய குலங்கள் உருவாக ஒப்புக்கொள்ளக்கூடாது. அவன் தன் அனைத்து வல்லமைகளாலும் ஷத்ரியனாகி எழும் பிறனை வெல்லவும் கொல்லவும் கடமைப்பட்டவன்.”

கிருஷ்ணன் அப்பால் தன் இருக்கையில் அமர்ந்தபடியே “ஒருவேளை அவர் மாறுவேடமிட்ட ஷத்ரியராக இருக்கலாமே” என்றான். சல்லியன் திரும்பி அவனை நோக்கிவிட்டு “அவ்வண்ணமென்றால் இந்த அவையில் அவன் சொல்லட்டும், எந்தகுலம் எந்தக் கொடிவழி எந்த நாடு என்று. சான்று வைக்கட்டும்” என்றார். கிருஷ்ணன் புன்னகையுடன் பேசாமலிருந்தான். கூட்டத்தின் விழிகள் அர்ஜுனனை நோக்கின. அவன் கூரிய விழிகளால் அவையை நோக்கியபடி நின்றான்.

துரியோதனன் சற்று அசைந்ததும் அவன் தொடையில் கை வைத்துத் தடுத்துவிட்டு சகுனி எழுந்து கையைத்தூக்கி மெல்லிய குரலில் “அவன் ஷத்ரியன் என்பதற்கு ஒரே சான்றுதான் அளிக்கப்படமுடியும். இச்சபையில் ஷத்ரியர்களை எதிர்த்து அவன் வெல்லட்டும்” என்றார். ஷத்ரியர்கள் “ஆம், ஆம்” என்றனர். ஜராசந்தன் தன் வில்லை எடுத்தபடி முன்னால் பாய கலிங்கனும் வங்கனும் மாளவனும் விற்களை எடுத்துக்கொண்டு கைகளுக்கு தோலுறை போட்டபடி நாணொலி எழுப்பினர். அவர்களுக்குப்பின்னால் ஷத்ரியர்கள் அனைவரும் விற்களையும் வாள்களையும் உருவியபடி எழ அவர்களின் காவலர்கள் துணைவீரர்களுக்காக கூச்சலிட்டபடி பின்னால் ஓடினர். உலோகங்கள் உரசிச் சீறும் ஒலிகளாலும் காலடியோசைகளாலும் அவை நிறைந்தது.

துருபதன் கைகளை விரித்து “அமைதி! அமைதி” என்று கூவியபடி முன்னால் வந்து ஷத்ரியர்களை தடுக்க முற்பட்டார். சத்யஜித் பாஞ்சால வீரர்களை அழைத்தபடி அரங்கின் பின்னால் ஓட துருபத புத்திரர்கள் வாள்களை உருவியபடி முன்னால் ஓடிவந்தனர். ”அரசியரை உள்ளே கொண்டுசெல்லுங்கள்” என்று துருபதன் கூவினார். சிலகணங்களிலேயே மணமுற்றம் போர்க்களமாக ஆகியது. முதல் அம்பு எழுந்து அர்ஜுனன் தோளருகே செல்ல அவன் மிக எளிதாக உடலை வளைத்து அதை தவிர்த்தான். மேலும் அம்புகள் அவனைத் தொடாமல் கடந்து பின்னால் சென்றன. ஓர் அம்பு நெஞ்சில் பாய்ந்திறங்க அணிச்சேடி ஒருத்தி அலறியபடி மேடையில் குப்புறவிழுந்தாள். பிறர் அலறியபடி ஓடி திரைகளுக்கு அப்பால் சென்றனர். அரசியரை சேடிகள் இழுத்துக்கொண்டு செல்ல பிருஷதி “ திரௌபதி… இளவரசி” என்று கைநீட்டி கூவினாள்.

திரௌபதி புதுக்குருதியின் வாசனையை உணர்ந்தாள். அர்ஜுனன் அசையாமல் நிற்கக் கண்டு முன்னோக்கி ஓடிவந்த ஷத்ரியர் திகைத்து ஒரு கணம் நின்றனர். முதலில் சிந்தை மீண்ட கலிங்கன் “கொல்… கொல் அவனை” என்று கூவியபடி வில்லை வளைத்து விட்ட அம்பு சற்றே குனிந்த அர்ஜுனனின் தலைக்குமேல் கடந்துசென்றது. வெறும் கையுடன் நின்ற அர்ஜுனனை நோக்கி வாளைச் சுழற்றியபடி காமரூப இளவரசர்களான சித்ராங்கதனும் தனுர்த்தரனும் ஓடிவந்தனர்.

திருஷ்டத்யும்னன் மேடைக்குக் குறுக்காக ஓடி வந்து திரௌபதியை அணுகி “இளவரசி, போர் முனையிலிருந்து விலகுங்கள்” என்றான். அவனுக்குப் பின்னால் வாளும் கேடயங்களுமாக ஓடிவந்த வீரர்களை நோக்கி “எதிர்கொள்ளுங்கள்… அரசமேடையில் ஏறும் எவரும் நம் எதிரியே” என்றான். திரௌபதி கையசைவால் திருஷ்டத்யும்னனை விலக்கிவிட்டு சென்று தன் இருக்கையில் முன்பு அமர்ந்ததுபோல நிமிர்ந்த தலையுடன் அமர்ந்துகொண்டாள். விழிகள் மட்டும் அங்கு நிகழ்வனவற்றை நோக்கி அசைய, இதழ்களில் புன்னகை விரிந்தது.

குடிகளவையெங்கும் மக்கள் கூச்சலிட்டபடி கலைந்து ஒருவரை ஒருவர் தள்ளியபடி ஓடி பின்னால் ஒதுங்கினர். கீழே விழுந்தவர்கள் மிதிபட்ட பீடங்களுடன் உருண்டு அலறியபடி எழுந்து இறுதியாக ஓடினர். பின்னால் நின்றவர்களை முன்வரிசையாளர்கள் முட்டி பின்னால் தள்ள அவர்கள் நான்கு பெருவாயில்களையும் நோக்கிச்செல்ல முயன்று அவ்வழியாக வாள்களுடன் உள்ளே வந்த பாஞ்சால வீரர்களால் தடுக்கப்பட்டு தேங்கி பதறி கூவினர். சற்றுநேரத்திலேயே குடிமக்கள் அவைகளின் முன்பகுதி முழுமையாகவே ஒழிந்து அங்கே கைவிடப்பட்ட மேலாடைகளும் மிதிபட்டுச் சரிந்த பீடங்களும் தாம்பூலத்தாலங்களும் கவிழ்ந்த நீர்த்தொன்னைகளும் உடைந்த குடுக்கைகளும் சிதறிப்பரவியிருந்தன.

பன்னிரு பாஞ்சாலவீரர்கள் அம்புபட்டு சரிய அவர்களின் சடலங்களை தாவிக்கடந்து ஷத்ரியர்கள் மணமேடை நோக்கி வந்ததை பார்த்து  நின்ற அர்ஜுனன் இடக்கையை நீட்டி ஒரு வீரனின் வாளைப்பிடுங்கி அதே அசைவில் அதை வீசி முன்னால் வந்த சித்ராங்கதனின் தலையை வெட்டி வீழ்த்தினான். பின்னால் வந்தவர்கள் சித்ராங்கதனின் உடல் குப்புறக்கவிழ்வதையும் அவன் தலை மறுபக்கம் பார்ப்பதுபோல திரும்பி பின் துவண்டு செஞ்சேற்றுக்கற்றைகள் நீள தனியாக விழுவதையும் கண்டனர். அவன் கால்களும் கைகளும் தரையை அள்ளத்துடிப்பவை போல இழுத்துக்கொள்ள அவன் மேல் கால் தடுக்கி திகைத்த தனுர்த்தரன் மறுகணமே விலகிக் சுழன்று தலையில்லாமல் அவன் மேலேயே விழுந்தான். அவன் தலை அவன் முதுகின்மேலேயே விழுந்து அப்பால் உருண்டது.

சுழன்று வந்த அர்ஜுனனின் வாளில் இருந்து தெறித்த பசுங்குருதி திரௌபதியின் மேல் செம்மணியாரம் போல முகத்திலும் இடத்தோளிலுமாக சாய்வாக நீண்டு விழுந்தது. மூக்கிலும் மேலுதட்டிலும் கன்னத்திலும் வழிந்து கழுத்திலும் தோளிலும் சொட்டிய குருதியை துடைக்கக் கூட அவள் கைகளை தூக்கவில்லை. குருதி இதழ்களில் படாமலிருக்க வாயை சற்று உள்ளிழுத்துக்கொண்டாள்.

வைதிகர்கள் அலறியபடி மறு எல்லைக்கு ஓடி பந்தல்சுவரின் விளிம்புகளில் ஒட்டி அஞ்சிய வெள்ளாடுகளென கூச்சலிட்டுக் கொண்டிருக்க பீமன் பீடங்களை மிதித்து பாய்ந்து வந்தான். வந்தவழியிலேயே பந்தல்காலாக நின்றிருந்த பெருமரம் ஒன்றை காலால் ஓங்கி உதைக்க அது முனகல் ஒலியுடன் முறிந்து பக்கவாட்டில் சாய்ந்தது. அதை இருகைகளாலும் தூக்கி சுழற்றியபடி யானை போல பிளிறிக்கொண்டு அவன் வந்து அர்ஜுனன் முன்னால் நின்றான்.

ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்

அவன் கையில் இருந்த தூணின் பருமனைக்கண்டதுமே முன்வரிசை ஷத்ரியர் அஞ்சித் தயங்கினர். அவர்கள் பின்னடைவதற்கு இடமளிக்காமல் பின்னாலிருந்து ஷத்ரியர்கள் கூச்சலிட்டபடி வந்தனர். முன்னால் வந்த மணிபூரக மன்னன் சித்ரரதனும் அவன் தளபதியும் மண்டை உடைந்து பின்னால் சரிய அவர்களின் மூளைக்குழம்பு சிதறி பிற ஷத்ரியர் மேல் தெறித்தது. அர்ஜுனன் சுமித்திரன் கொண்டுவந்த வில்லை வாங்கி அம்புகளை தொடுக்கத் தொடங்கினான். முன்னால் வந்த பிருதுவும் விப்ருதுவும் அம்பு பட்டு வீழ்ந்தனர்.

பிருஹத்ஷத்ரன் தோளில் பட்ட அம்புடன் ஓலமிட்டு பின்னடைய ஜயசிம்மனின் வெட்டுண்ட தலை அவன் முன் வந்து விழுந்தது. அதன் இதழ்கள் ஏதோ சொல்ல வந்தவை போல அசையக் கண்டு பிருஹத்ஷத்ரன் அலறியபடி பின்னடைந்தபோது அவன் தலை வெட்டுண்டு பின்னால் சென்றது. ஜயசிம்மனின் உடல்மேலேயே அவன் கைகளை விரித்தபடி விழுந்தான். பீமன் தன் கையில் இருந்த பெருந்தூணைச்சுழற்றிக்கொண்டு ஷத்ரியர் நடுவே செல்ல கிருதபாலனும் சுதர்மனும் அவர்களின் பன்னிரு படைவீரர்களும் தலையுடைந்து விழுந்து துடித்தனர். மேகநாதனின் மண்டையோட்டின் மேல் பகுதி குருதிசிதற தெறித்து நெடுந்தொலைவில் சென்று விழுந்தது. பீமனின் கையில் இருந்த மரத்தூண் குருதி வழிந்து செந்நிணத்தால் ஆனதுபோல மாறியது. அதை சுழற்றியபோது மூளைநிணமும் குருதியும் செந்நிற மேலாடைகள் போல வளைந்து வளைந்து தெறித்தன.

தருமனும் நகுலசகதேவர்களும் வாள்களுடன் அரங்க முகப்புக்கு வந்தனர். நகுலனும் சகதேவனும் பீமனின் பின் புலத்தை பாதுகாத்தபடி வாள் சுழற்றிச் செல்ல அர்ஜுனனின் இடப்பக்கத்தை காத்தபடி தருமன் வில்லுடன் நின்றான். சல்லியனின் வில்லை பீமன் அடித்து உடைத்தான். அவர் பின்னடைந்து ஒரு பீடத்தில் ஏறிக்கொள்ள அவர் தோளை கதையால் அடித்து அலறியபடி தெறிக்கச்செய்தான்.

அவைக்களங்களில் நான்குபக்கமும் மக்கள் அலறிக்கொண்டிருந்தனர். துருபதன் கண்ணீர் வழிய “நிறுத்துங்கள்! போரை நிறுத்துங்கள்…” என்று உடைந்த குரலில் கூச்சலிட்டுக்கொண்டே இருந்தார். சத்யஜித்தின் தலைமையில் பாஞ்சாலப்படைகள் இருதரப்பினர் நடுவே புகுந்தபோது அவர்களை அடித்துப்பிளந்தபடி வந்த ஜராசந்தன் பீமனுடன் தன் கதையால் மோதினான். இருவரும் உறுமல்களுடனும் போர்க்கூச்சல்களுடனும் மாறி மாறி அறைந்த ஒலியில் அவையின் திரைச்சீலைகள் அதிர்ந்தன. ஜராசந்தனின் அறைபட்டு ஒரு தூண் உடைந்து அதன் மேலிருந்த கூரை இறங்கியது.

பீமனின் அடியில் ஜராசந்தனின் இரும்புக் கதை நசுங்கியது. அவன் சினக்கூச்சலுடன் பாய்ந்து பீமனை தோளில் அடிக்க கீழே விழுந்த பீமன் புரண்டு எழுந்து மீண்டும் தன் தூண்தடியை கையிலெடுத்துக்கொண்டு அலறியபடி ஓங்கி அடித்தான். அவர்களின் போர் ஒலி மெல்ல மெல்ல போரிட்டுக்கொண்டிருந்த பிறரை நிலைக்கச்செய்தது. படைக்கலங்களை தாழ்த்தியபடி விழிகள் அச்சத்துடன் வெறிக்க அவர்கள் இருவரையும் நோக்கிக்கொண்டிருந்தனர். கீழே வெட்டுண்டும் தலையுடைந்தும் கிடந்த பிணங்களை மிதித்து குருதிக்கூழாக்கியபடி மூச்சொலிகள் எழ இருவரும் சுழன்று சுழன்று போர் புரிந்தனர். தன் பீடத்தில் திரௌபதி தன் பாதி மூடிய விழிகளுடன் இருவரையும் நோக்கியபடி அசைவற்று அமர்ந்திருந்தாள். அவள் முகத்தில் வழிந்த குருதி துளித்து கனத்து உலர்ந்து பொட்டுகளாக மாறிவிட்டிருந்தது.

கிருஷ்ணன் பலராமரிடம் ஏதோ சொல்ல பின்னிருக்கையில் இருந்து அவர் கூச்சலிட்டபடி எழுந்து இருகைகளையும் தூக்கியபடி ஓடிவந்து பீமனின் கையில் இருந்த மரத்தைப் பற்றித் தடுத்து அதே விரைவில் திரும்பி ஜராசந்தனின் இடையில் உதைத்து அவனை பின்னால் சரியச்செய்தார். “போதும்!” என அவர் கூவ பீமன் கடும் சினத்துடன் மார்பில் ஓங்கி அறைந்து கூவியபடி கைகளை ஓங்கி முன்னால் சென்றான். பலராமர் எடையற்றவர் என காற்றில் எழுந்து பீமனை ஓங்கி அறைந்தார். கன்னத்தில் விழுந்த அந்த அடியின் விசையால் நிலைகுலைந்து பீமன் பின்னால் சரிந்து ஒரு மரப்பீடத்தை முறித்தபடி விழுந்தான். அதே விரைவில் திரும்பி எழமுயன்ற ஜராசந்தனை மீண்டும் மிதித்து ஒரு தூணை நோக்கி தெறிக்கச் செய்தார் பலராமர். தூண் உடைய அதன் மேலிருந்த பாவட்டா அவன் மேல் விழுந்தது.

இரு கைகளையும் விரித்து தலையை சற்றுத் தாழ்த்தி இருவரையும் ஒரே சமயம் எதிர்க்க சித்தமானவராக அசைவற்று நின்று மிகமெல்ல ஓர் உறுமலை பலராமர் எழுப்பினார். அந்த ஒலி இருவருக்குமே ஐயத்திற்கிடமற்ற செய்தியை சொன்னது. பீமன் தன் தோள்களைத் தளர்த்தி தலைதாழ்த்தி மெல்ல பின்வாங்கினான். ஜராசந்தன் எழுந்து கைநீட்டி ஏதோ சொல்ல முயல பலராமர் மீண்டும் உறுமினார். அவன் தனக்குப்பின்னால் நின்றவர்களை ஒருமுறை நோக்கிவிட்டு பின்னகர்ந்தான்.

கிருஷ்ணன் பின்னாலிருந்து கைகளைத் தூக்கியபடி முன்னால் வந்தான். “ஷத்ரியர்களே, இந்த அவையில் இந்தப்பிராமணன் ஷத்ரியர்களை எதிர்க்கும் வல்லமை கொண்டவன் என்பது நிறுவப்பட்டுள்ளது. இதுவே இப்போதைக்கு போதுமானது. இவன் இனிமேல் நாட்டை வெல்வான் என்றால் அந்நாட்டுக்குரியவனே அதை எதிர்க்கவேண்டும். அதுவே நூல்முறையாகும்” என்றான்.

“இந்தப்பிராமணன் எப்படி பாஞ்சால இளவரசியை கொள்ள முடியும்? இவன்…” என்று கலிங்கன் கூச்சலிட்டான். “கலிங்கரே, உங்களுக்காகவே நான் போரை நிறுத்தினேன். இவன் இந்த அவையில் இத்தனை ஷத்ரியர்களையும் வென்று செல்வான் என்றால் அதன்பின் பாரதவர்ஷத்தையே வென்றவன் என்றல்லவா அறியப்படுவான்?” என்றான் கிருஷ்ணன் புன்னகையுடன். ஜராசந்தன் “ஆம், அவனை நான் களத்தில் சந்திக்கிறேன்” என்றான்.

கிருஷ்ணன் வாய்விட்டு நகைத்து “இறந்தவர்கள் மறுபடியும் எழுவார்கள் மகதரே. அப்போது உங்கள் படைகளும் எழட்டும்” என்றான். ஜராசந்தன் ஒருகணம் கிருஷ்ணனை நோக்கிவிட்டு திரும்பி “ஆம், ஒரு இரும்புக்கதை அவனுக்காகக் காத்திருக்கிறது யாதவரே. உமது நண்பனின் தமையனிடம் சொல்லும்” என்று சொன்னபின் இரு கைகளையும் ஓங்கி அறைந்து ஒலியெழுப்பியபடி திரும்பி சென்றான். அவனைத் தொடர்ந்து சில ஷத்ரியர்களும் சென்றனர்.

ஷத்ரியர்களின் நடுவே நின்ற தாம்ரலிப்தன் ஏதோ சொல்ல முயல ஜாம்பவதியின் மைந்தனான சாம்பன் “அவர்கள் யாரென்று இன்னுமா தெரியவில்லை? விலகிச்செல்லுங்கள்…. “ என்றான். ஷத்ரியர்களில் பலர் திகைத்து திரும்பி அவர்களை நோக்கினர். அவர்கள் திரும்பி கௌரவர்களை நோக்க அவர்கள் பார்வைகளை விலக்கி திரும்பிச்சென்றனர்.

கிருஷ்ணன் புன்னகை செய்தபடி “இனி மணத்தன்னேற்புக்கு எத்தடையும் இல்லை இளவரசி” என்றான். திரௌபதி சீற்றத்துடன் அவனை நோக்கி தலைதிருப்பி அவன் சிரிப்பைக்கண்டதும் விழிமுனைகள் சற்று சுருங்க திரும்பிக்கொண்டாள். கிருஷ்ணன் “துருபதரே, உமது மகள் தகுதியானவர்களை அடைந்திருக்கிறாள்” என்றான். துருபதன் என்ன சொல்வதென்று அறியாமல் பதைப்புடன் தன் மைந்தர்களை நோக்கினார்.

திருஷ்டத்யும்னன் கைகாட்ட சூதர்கள் இசை எழுப்பினர். சுற்றிலும் விழுந்து கிடந்த பிணங்கள் நடுவே மங்கல இசை ஒலிக்க அர்ஜுனன் கிருஷ்ணனையும் திரௌபதியையும் மாறி மாறி பார்த்தான். கிருஷ்ணன் அவை நோக்கி திரும்பி “பாஞ்சாலப்பெருங்குடிகள் வருக. இளவரசி மணம் கொள்ளும் நேரம் இது” என்றான். அவர்கள் தயங்கியபடி உடைந்த பீடங்களையும் உதிர்ந்த அம்புகளையும் கடந்து அருகே வந்தனர். எவரோ ஒரு முதியவர் உரத்த குரலில் வாழ்த்தொலிக்க சிலர் திருப்பிக்கூவினர்.

திரௌபதி எழுந்து கிருஷ்ணனை ஒருகணம் திரும்பி நோக்கியபின் அர்ஜுனனை அணுகி தன் கையில் இருந்த மாலையை அர்ஜுனன் கழுத்தில் போட்டாள். அவன் அதை தலைகுனிந்து ஏற்றுக்கொள்ள தன்னை மீட்டுக்கொண்ட துருபதன் திரும்பி அணிச்சேடிகளை அருகே வரச்சொல்லி கைகாட்டினார். நடுக்கம் விலகாமல் அணுகிய அவர்களின் கைத்தாலங்களில் இருந்து மலர்களை அள்ளி திரௌபதியின் மேல் போட்டார்.

சத்யஜித்தும் துருபதன் மைந்தர்களும் மலர்களை அள்ளி அவள் மேல் போட்டனர். வீரர்களால் உள்ளே கொண்டுசெல்லப்பட்ட அரசியர் இருவரும் திரும்ப வந்தனர். பிருஷதி கண்ணீருடன் ஓடிவந்து மலர்களை அள்ளி மகள் மேல் போட்டு இடறிய குரலில் “நிறைமங்கலம் கொள்க! வெற்றியும் புகழும் பெறுக! விண்ணில் ஒளிமீனாக அமைக!” என்று வாழ்த்தினாள். அதுவரை கலைந்து ஒலியெழுப்பிக்கொண்டிருந்த மக்கள் முன்வந்து வாழ்த்துக்களை கூவினர். மங்கல இசையும் வாழ்த்தொலிகளும் வெளியே முரசொலிகளும் சேர்ந்து செவி நிறைத்தன.

ஆனால் அவர்கள் அனைவரும் ஊக்கமிழந்திருந்தனர். அங்கு நிகழ்பவை தங்களுக்கு முற்றிலும் அயலானவை என அறிந்தவர்கள் போல. அவற்றில் தாங்கள் ஒரு பொருட்டெனவே இல்லை என உணர்ந்தவர்கள் போல. ஒவ்வொருவரும் வீடு திரும்பவே விழைந்தனர். அவர்கள் நன்கறிந்த வீடு. அவர்களை அறிந்து அணைத்து உள்ளே புதைத்துக்கொள்ளும் வீடு. அவர்களுக்கென இருக்கும் இடம்.

தருமனும் பீமனும் அர்ஜுனனின் இருபக்கமும் நிற்க பின்னால் நகுலனும் சகதேவனும் நின்றனர். கழுத்தில் விழுந்த மாலையை எடுத்து மீண்டும் திரௌபதியின் கழுத்தில் போட்டான் அர்ஜுனன். அது அவள் கொண்டையில் சிக்க பிருஷதி முடியை எடுத்து சரிசெய்தாள். கலைந்த சரப்பொளியை சீர் செய்தபடி திரௌபதி அர்ஜுனன் முகத்தை நோக்கினாள். அவன் முகம் ஏதோ ஐயம் கொண்டதுபோல, எவ்வண்ணமேனும் அங்கிருந்து செல்ல விழைபவன் போல் தோன்றியது.

திரௌபதி குருதியும் மலரிதழ்களும் ஒட்டிய முகத்துடன் திரும்பி கிருஷ்ணனை நோக்க அவன் புன்னகை செய்து “இளவரசி, இன்றுடன் அரசியாகிறீர்கள். எட்டு மங்கலங்களும் திகழ்க!” என்று வாழ்த்தினான்.

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

மகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக

வெண்முரசு வாசகர் விவாதக்குழுமம்

முந்தைய கட்டுரைகருத்துச் சுதந்திரம்-மனுஷ்யபுத்திரன்
அடுத்த கட்டுரைஇந்துத்துவம் காந்தி -கடிதம்