அன்புள்ள ஜெ,
தெளிவான பதிலுக்கு நன்றி. நீங்கள் சொன்ன பாடல் லயோலாவிலும் ஒருமுறை தலித் இளைஞர்களால் பாடப்பட்டது. ‘அரசன் என்று பேரு வைக்க யாரடா நீ நாயே’ என்ற வரி உடையது. அதுவும் அந்த ஒருமுறைக்குப் பின் தடை செய்யப்பட்டது.
என்னுடைய வாதம் இதுதான் காந்தி குறித்த விமர்சனங்கள் சிந்தனை தளத்திலே நடைபெற்றன. பொதுவெளியில் ஒரு பிரசங்கத்திலோ, மேடைப்பேச்சிலோ கிறித்துவர்கள் காந்தியை விமர்சிப்பதை நான் கேட்டதில்லை. நீங்கள் சொல்லும் கிறித்துவ வாத்தியார்கள் மட்டுமல்ல காந்தியை போகிற போக்கில் விமர்சிப்பவர்கள் ஏராளம்பேர் உண்டு. இன்றைக்கு காந்தி தேசப்பிதா இல்லை எனும்போது அது தவறு என் ஊடகத்தின் வழியாக நீஅ தை சொல்லக்கூடாது என கண்டிக்கும் திராணிகூட இன்றைய ஊடகங்களுக்கு இல்லை என்பது வருந்தத்தக்கது.
உண்மையில் காங்கிரஸின் கையாலாகாத்தனமும் மெத்தனமும் சோம்பேறித்தனமும் வியக்கவைக்கின்றன. பிரச்சாரங்களைக்கூட ஒழுங்காகச் செய்வதில்லை. அண்மைத்தேர்தல்களில் அவர்கள் மக்களிடம் எடுத்துச் செல்ல எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் அவர்கள் சுரத்தற்று போயிருக்கிறார்கள்.
இந்துத்துவம் டெவெலப்மெண்ட்டுக்கு எதிரானது என்பதை மோடியேகூட இப்போது உணர்ந்திருக்கக்கூடும். அவரும் அநியாயத்துக்கு அமைதியாகிவிட்டார்.
உங்கள் பதிலுக்கு நன்றி. உண்மையில் இங்குள்ள சிறுபான்மையினர் யாரை நோக்கி தங்கள் கைகளை நீட்ட வேண்டும் என்ற குழப்பம் இங்கே இப்போது உள்ளது.
சிறில் அலெக்ஸ்