‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 86

பகுதி பதினாறு : மாயக்கிளிகள் – 6

வில்சூடும் போட்டி முடிந்துவிட்டது என்ற எண்ணம் அவையில் பெரும்பாலானவர்களுக்கு உருவாகிவிட்டிருந்தது என்பது பல இடங்களிலும் எழுந்த கலைந்த ஒலிகளில் இருந்து தெரிந்தது. ஏராளமானவர்கள் தாம்பூலம் போடத் தொடங்கியதை அர்ஜுனன் கண்டான். ஆனால் பாண்டவர்கள் வந்திருக்கிறார்கள் என்ற செய்தியை பாதிக்கும் மேற்பட்டவர்கள் அறிந்திருந்தனர். அங்கே வரும்போது அவர்களிடம் எதிர்பார்ப்பும் இருந்தது.

பாண்டவர்கள் இறப்பில் இருந்து மீண்டு பாஞ்சாலியை வெல்ல வந்துள்ளார்கள் என்பது ஒரு கதையாகவே அவர்களிடமிருந்தது. அதுவரை அர்ஜுனன் வரவில்லை என்பதனால் கதையில் இருந்து உண்மையென உருக்கொண்டு வந்துகொண்டே இருந்த அச்செய்தி மீண்டும் கதையாக மாறிவிட்டது. அர்ஜுனனின் அருகே அமர்ந்திருந்த கிழவர் “நான் சொன்னேனே, அவர்கள் வரவில்லை. என் நரைத்தகுடுமியின் அனுபவத்தில் எத்தனை கதைகளை பார்த்திருப்பேன்…” என்றார்.

குடிச்சபையிலிருந்த அனைவரும் அரசரவைகளுக்கு அப்பால் பல திசைகளில் விழியோட்டிக்கொண்டிருந்தனர். துருபதனும் மைந்தரும் வேதியர் அவையை நோக்கக் கூடாது என முடிவெடுத்தவர்கள் போல இறுகிய கழுத்துக்களுடன் மறுபக்கம் நோக்கினர். மகத மன்னன் ஜராசந்தன் வந்து அவன் பீடத்தில் அமர்ந்ததும் அரசர் அவையில் அனைவரும் மீண்டும் தங்கள் இடங்களில் அமைந்தனர். கர்ணன் தன் இருக்கைக்குச் சென்று நிமிர்ந்து அமர்ந்துகொண்டான். துரியோதனன் கைகளை மார்பில் கட்டி கிந்தூரத்தில் விழிநாட்டி இருந்தான்.

இரு சேவகர்கள் நீள்கயிறு ஒன்றைப்பற்றி இழுக்க மேலிருந்த கிளிக்கூடு கீழிறங்கியது. அதன் பொறிக்குள் மீண்டும் ஐந்து கிளிகளை வைத்து கயிற்றைப்பற்றி மேலேற்றினர். அது அவையெங்கும் புது நம்பிக்கையை உருவாக்கியது. கிழவரே “அர்ஜுனன் வந்திருக்கிறான். அவனுக்காகத்தான்…” என்றார். இன்னொருவன் “இல்லை, எவராலும் கிளிகள் வீழ்த்தப்படவில்லை என்றால் தெய்வங்களுக்கு முறையாக பூசனைகள் செய்யவேண்டும் அல்லவா?” என்றான்.

அர்ஜுனன் கிருஷ்ணனையே நோக்கிக்கொண்டிருந்தான். யாதவனின் விழிகள் அவனை நோக்கி திரும்பவேயில்லை என்றாலும் அவன் தன் நோக்கை முழுமையாகவே உணர்ந்திருக்கிறான் என்பதை அர்ஜுனன் அறிந்தான். இரையை நோக்கி பாய்வதற்கு முந்தைய கணத்தில் முற்றிலுமாக செயலற்று உறைந்த வேங்கை. பீமன் குனிந்து “பார்த்தா…” என்றான். அர்ஜுனன் “இன்னும் முடிவாகவில்லை மூத்தவரே” என்றான். பீமன் “ஆம், நானும் அவனைத்தான் பார்க்கிறேன்” என்றான்.

அச்சொற்களை சொன்னபடியே அவன் எழுந்து தன் கைகளை பேரொலியுடன் தட்டினான். வைதிகர் அவை திடுக்கிட்டு பலர் எழுந்துவிட்டனர். துருபதனும் மைந்தர்களும் திரும்பி பீமனை நோக்க பீமன் “பாஞ்சால அரசே, பால்ஹிக நாட்டு வைதிகன் நான். ஷத்ரியரை வென்ற அந்த வில்லை இம்மணவரங்கில் நாணேற்ற விழைகிறேன்” என்றான். அவனை நோக்குவதற்காக குடிகளவையில் பலர் எழுந்துகொள்ள பிறர் அவர்களை கூச்சலிட்டு இழுத்து அமரச்செய்தனர். இடம் பெயர்ந்து அமர முயன்றவர்களை நோக்கி சேவகர்கள் கூச்சலிட்டனர். புலிபுகுந்த காட்டுக்குள் குரங்குக்கூட்டம் பதற்றம் கொள்வதுபோலிருந்தது அவையின் ஒலி.

ஜராசந்தன் இருகைகளாலும் பீடத்தின் கைப்பிடியைப் பற்றியபடி, பெரும் எடையை தூக்குபவன் போல அசைந்த தோள்தசைகளுடன் சற்று தலையை முன்னால் தாழ்த்தி, சிறிய முதலைவிழிகளால் கூர்ந்து நோக்கினான். அவனுக்கு அப்பால் அமர்ந்திருந்த துரியோதனனும் அதே பாவனை கொண்டிருந்தான். அவன் தொடை துடித்துக்கொண்டிருப்பதை அர்ஜுனன் கண்டான். இரு பெருங்கைகளையும் தூக்கி அசைத்தபடி பீமன் மணமுற்றம் நோக்கி சென்றான். அவன் கைகள் மிகப்பெரிதாக இருந்தமையால் உள்ளங்கையும் மணிக்கட்டும் சிறியவையாக தோன்றின. மலைப்பாம்பின் தலை போல.

அரைக்கண்ணால் அரசகுலத்தின் ஆணையை எதிர்நோக்கியபடி ஒரு வீரன் பீமனை நோக்கி வர அவனை மிகஎளிதாகத் தூக்கி தலைக்குமேல் சுழற்றி நெடுந்தூரத்திற்கு வீசிவிட்டு பீமன் தடையை தாண்டி மணமுற்றத்தை அடைந்தான். காற்றில் கைகால்கள் சுழல எழுந்து கீழே விழுந்தவனுக்கு எந்த காயமும் படவில்லை. அமர்பவன் போல விழுந்து திகைத்து உடனே கை ஊன்றி அவன் எழுந்துவிட்டான். அவையினர் முழுக்க அவனை நோக்கி சிரித்தனர். சிரிப்பைக் கண்டு அவன் தன்னை நிமிர்த்திக்கொள்ள அது மேலும் சிரிப்பை உருவாக்கியது.

தருமன் “இவன் பீதர்நாட்டு கழைக்கூத்தாடிகளுடன் இருக்கவேண்டியவன் பார்த்தா. பெருங்கூட்டத்தை மகிழ்விக்க இவனால் முடிகிறது” என்றான். அர்ஜுனன் சிரித்தபடி “ஆம், மூத்தவரே. அவர் போர்க்களத்தில்கூட பார்வையாளர்களை மகிழ்விக்க விழைபவர்” என்றான். பீமன் மணமுற்றத்திற்குச் சென்று தன் கைகளை விரித்து தசைகளை அலையிளகச்செய்தான். அவன் வயிறு பல துண்டுகளாக மாறி இறுகியது. அப்படியே கைகளை வீசி குனிந்து இரு உள்ளங்கைகளையும் ஊன்றி அவற்றை பாதங்களாக எளிதாக எடுத்துவைத்து நடந்தான். அவையெங்கும் சிரிப்பும் கூச்சல்களும் எழுந்தன.

தலைகீழாக கிந்தூரத்தை அடைந்து நின்றபின் ஒரே பாய்ச்சலில் மீண்டும் நிமிர்ந்தான். கைகளால் தன் உடலில் படபடவென அடித்துக்கொண்டான். அவன் எதைச்செய்தாலும் சிரிக்கும் நிலைக்கு அவை வந்திருந்தது. ஜராசந்தன்கூட சற்றே சாய்ந்து கைகளால் முகவாயைத் தாங்கி சிரித்துக்கொண்டிருந்தான். துருபதன் வாயை கைகளால் பொத்திக்கொண்டு தோள்கள் குலுங்க நகைத்தார். கர்ணனின் முகம் மட்டும் எந்த உணர்ச்சியும் இல்லாமல் சிலையெனத் தெரிந்தது.

பீமன் சிரித்தபடியே குனிந்து மிக இயல்பாக இரு கைகளாலும் கிந்தூரத்தைப்பற்றி எளிதாகத் தூக்க முயன்று திகைத்து அதிர்ந்து மேலும் முயன்று பரிதவித்து முழு வல்லமையுடன் அதைத் தூக்க முயன்று கால்கள் தரையில் வழுக்கி அதன் அடியிலேயே விழுந்தான். அவன் மேல் பீடத்துடன் வில் சரிய அடியில் சிக்கி அவன் தத்தளித்தபின் முழு மூச்சுடன் அதை தள்ளி உருட்டிவிட்டு எழுந்து துள்ளி விலகினான். அவையின் சிரிப்பு நின்று அனைவரும் அவனை நோக்கி வியந்து நின்றனர்.

அவன் அது மிகச்சூடாக இருப்பது போல தொட்டு நோக்கிவிட்டு உடல்நடுங்கி பின்னகர்ந்தான். மீண்டும் மிகமிக கூர்ந்த உடலசைவுகளுடன் அதை அணுகி மெல்ல கையால் தொட்டு நோக்கி விட்டு திடுக்கிட்டு பின்னால் வந்தான். நாலைந்துமுறை உடலைச் சொறிந்துகொண்டு நான்குபக்கமும் நோக்கி இளித்தபின் மீண்டும் அதை நோக்கினான். சினத்துடன் பர்ர் என சீறினான். அவை ஒரேபெருஞ்சிரிப்பில் வெடித்தது. ஒருவரை ஒருவர் அறைந்தும் தழுவியும் அனைவரும் சிரித்துக் கொந்தளித்தனர். பீமன் மெல்ல காலெடுத்து வைத்து கிந்தூரத்தை அணுகி தரையில் கிடந்த அம்பு ஒன்றை கண்டு அஞ்சி உடல் நடுங்கி துள்ளி விலகினான்.

சிரிப்பலைகள் நடுவே மெல்ல மீண்டும் அணுகி நின்று கால்களாலும் கைகளாலும் தரையை பிறாண்டி பர்ர் என ஒலியெழுப்பி பற்களைக் காட்டி இளித்தான். நாலைந்து முறை பொய்யாக பாய முயன்றபின் ஒரே பாய்ச்சலாக கிந்தூரம் மேல் குதித்து அதை கட்டித்தழுவி தரையில் புரண்டு அதன் அடியில் சென்று மறு பக்கம் வந்து எழுந்து நின்று ஆறுதல் கொண்டு சிரித்தபடி அவையை நோக்கினான். தப்பிவிட்டேன் என்பதுபோல கையை அசைத்தான். அவையில் சிலர் சிரிப்பு தாளமுடியாமல் நெஞ்சைப்பற்றிக்கொண்டு குனிந்துவிட்டனர்.

அர்ஜுனன் திரௌபதியை நோக்கினான். முதல்முறையாக அவள் விழிகள் இமை எழுந்து பார்வை கொண்டிருந்தன. கண்கள் ஒளிவிட்ட நகைப்பு இதழ்களிலும் திகழ சிறிய உதடுகள் மெல்ல திறந்து இரு வெண்பற்களின் நுனி தெரிந்தது. அவளுடைய நீண்ட கை எழுந்து நெற்றிக்கூந்தலை நீவி காதருகே செருகியது. கடகங்கள் சரிந்து ஒன்று மேல் ஒன்றென விழுந்தன. கழுத்தில் ஒரு மெல்லிய சொடுக்கல் நிகழ இதழ்கள் மேலும் விரிந்து இருபக்கமும் மடிந்து புன்னகை சிரிப்பாக ஆனது. பீமன் அவள் ஒருத்தியை மகிழ்விக்கவே அனைத்தையும் செய்கிறான் என்று அவன் உணர்ந்தான்.

“மூத்தவர் இளவரசியை முன்னரே எங்கோ பார்த்திருக்கிறார்” என்றான் அர்ஜுனன். ”ஆம், நானும் அதையே எண்ணினேன்” என்றான் தருமன். பீமன் அவ்வளவுதான், முடியாது என்ற பாவனையுடன் திரும்பி நாலைந்து அடிகள் தூக்கி வைத்து உடனே திரும்பி ஒற்றைக்கையால் அந்த வில்லை தூக்கி நிறுத்தி இடது காலால் அதன் நாணை தூக்கி இடக்கையால் பற்றி மேலே எடுத்து மேல்கொக்கி நோக்கி வீசினான். ஒற்றைக்கையால் கிந்தூரத்தை வளைத்து நாணேற்றினான்.

ஒரு சிலகணங்களுக்குப்பின்னரே அவன் என்ன செய்தான் என்பதை அவை அறிந்தது. அவனைச்சூழ்ந்து உடல்களின் அசைவுகளும் கூச்சல்களும் அலையடித்தன. பீமன் கிந்தூரத்தை தூக்கி தலைக்குமேல் வீசிப்பிடித்து சுழற்றி அதன் நாணால் தன் முதுகைச் சொறிந்துக்கொண்டான். திரௌபதி வெடித்துச்சிரித்தாள். முகவாயை சற்றே மேலேற்றி கழுத்து நீளம் கொள்ள தோள்கள் அதிர அவள் சிரிப்பதைக் கண்டபோது ஒரு கணம் அர்ஜுனன் பொறாமையின் வெம்மையை உணர்ந்தான்.

மேலே தொங்கிய கிளிகளை நோக்கி தலையை தாழ்த்தி உடலைக் குறுக்கியபின் கிந்தூரத்தை தூக்கி வீசிவிட்டு பீமன் ஓடிவந்து வைதிகர் அவையை நோக்கித் தாவி மறுபக்கம் வந்தான். நகுலனும் சகதேவனும் பாய்ந்துசென்று அவனை தழுவிக்கொண்டனர். தருமன் “மந்தா, நீ குரங்குப்பாலை சற்று மிகையாகவே அருந்திவிட்டாய் என நினைக்கிறேன்” என்று சிரித்துக்கொண்டே சொன்னான். பீமன் அர்ஜுனனிடம் “பார்த்தா, அதற்குள் சில சுருள்விற்கள் இருக்கின்றன. உருளும் எடைக்குண்டுகள் போடப்பட்டுள்ளன” என்றான். “அந்தப்பொறி நெகிழ்ந்துவிட்டது மூத்தவரே” என்றான் அர்ஜுனன்.

”யாதவன் எழுந்து வரக்கூடும்” என்றான் தருமன். ”அவன் உடலில் ஓர் அசைவைக் காண்கிறேன்.” அர்ஜுனன் திரௌபதியையும் கிருஷ்ணனையும் நோக்கிக்கொண்டிருந்தான். பீமன் ”அவள் காத்திருப்பது அவனுக்காகவே” என்றான். அர்ஜுனனை திரும்பி நோக்கிய தருமன் திகைப்புடன் திரௌபதியை நோக்கினான். அர்ஜுனன் பெருமூச்சுடன் உடல் தளர சற்று பின்னகர்ந்த கணம் அவையில் யாதவக்கிருஷ்ணன் எழுந்தான். தன் சால்வையை சரித்து அருகே நின்றிருந்த சேவகனிடம் அளித்துவிட்டு அப்பால் இருந்த பலராமரிடம் மெல்லிய கையசைவால் வணக்கம் சொல்லிவிட்டு நடந்து வந்தான்.

“ஒரு மயிலிறகு பறந்து வருவது போல” என்றான் தருமன். கிழவர் திரும்பி நோக்கி “அவன் யாதவனல்லவா? அவர்கள் சுயம்வரத்தில் பங்கெடுக்க நூல் ஒப்புதல் உண்டா?” என்றார். தருமன் “மணத்தன்னேற்பு என்பதே பலவகை மன்னர்களும் பங்குகொள்ளும் மணநிகழ்வுக்காக அமைக்கப்பட்டதுதான் வைதிகரே” என்றான். “இங்கே குடி அல்ல, வீரமே கணக்கிடப்படுகிறது. இது மிகத் தொன்மையான ஒரு மணமுறை. வீரத்தின் அடிப்படையில் அரசகுலங்களிணையவேண்டுமென விழைந்தனர் மூதாதையர்.”

நகுலன் “மூத்தவர் நூல்கற்றவர் என எப்படி அறிகிறார்கள்?” என்றான். “ஒருமுறை கூட கிந்தூரத்தை வெல்வது பற்றி எண்ணாமலிருக்கிறார் அல்லவா?” என்றான் பீமன். நகுலனும் சகதேவனும் சீறும் ஒலியுடன் எழுந்த சிரிப்பை கைகளால் பொத்தி அழுத்திக்கொண்டனர். தருமன் திரும்பி “நகைப்பு வேண்டாம். நம்மை அனைவரும் பார்த்துவிட்டனர்” என்றான். அவையினர் அனைவருக்குமே அவர்கள் யாரென தெரியும் என்பது கண்களில் இருந்து தெரிந்தது.

அர்ஜுனன் வில்லை நோக்கிச் சென்ற கிருஷ்ணனை விட்டு விழிகளை விலக்கவில்லை. அவன் அணுக அணுக திரௌபதியின் உடல் பாறை களிமண் பாகாவது போல நெகிழ்வதை கண்டான். அவளுடைய வலக்கை எழுந்து நாகம் படமெடுத்தது போல வளைந்து காதில் தொங்கிய குழையை தொட்டுத் திருகி கழுத்தை வருடி கீழிறங்கி முலைக்குவையில் இருந்த பதக்கத்தைத் தொட்டு திருப்பி விளையாடத் தொடங்கியது. இடக்கையால் ஆடையின் மடிப்புகளை அழுத்திக்கொண்டு கால்களை அசைத்து ஒன்று சேர்த்துக்கொண்டாள்.

அவன் கிந்தூரத்தை அணுகியதும் அவை அமைதியடைந்தது. காற்றில் ஒரு அணிப்படாம் திரும்பும் ஒலி மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. முள்காட்டில் காற்று செல்வது போல மூச்சொலிகள் சீறின. ஒரு கயிறு அவிழ்ந்து முரசுப்பரப்பு ஒன்றை தொட அது விம்மிய ஒலியில் அவையில் பெரும்பாலானவர்கள் திடுக்கிட்டனர். கிருஷ்ணன் துருபதனை நோக்கி தலைவணங்கி அவையையும் வணங்கியபின் கிந்தூரத்தை எதிர்கொண்டு கைகளை இடையில் வைத்து நின்றான். அவன் கருங்குழலில் சூடிய மயிற்பீலியின் விழி அண்மையில் எவரோ வந்தது போல் வியந்து வானை நோக்கியது.

ஒருகணம் கூட அவன் திரௌபதியைத் திரும்பி நோக்கவில்லை. அவள் மார்பிலிருந்த பதக்கத்தை விட்டுவிட்டு கைகளை மடிமேல் சேர்த்து பிணைத்துவைத்துக்கொண்டாள். மெல்லிய இதழ்கள் சற்றே பிரிந்திருக்க மூக்குத்துளையை விரியச்செய்து முலைகளை அசைத்து மூச்சு எழுவதை அர்ஜுனனால் காணமுடிந்தது. அவள் இடக்கால் அனிச்சையாக சற்று நீள நூபுரத்தின் மெல்லிய ஒலியை கேட்க முடிந்தது. அவளிடமிருந்து எழும் மெல்லிய வாசத்தைக்கூட உணரமுடியும் என்று தோன்றியது.

கிருஷ்ணன் குனிந்து கிந்தூரத்தை தொட்டான். அதன் இடமுனையை தன் வலக்காலால் அழுத்தியதும் பாம்பு நெளிந்து படமெடுப்பது போல அது எழுந்தது. இயல்பாக நீண்ட இடக்கையால் அதன் நடுவளைவை தொட்டு தன் முன் நிறுத்தினான். வலக்கையால் அதன் நாணைத் தொட்டு மெல்ல எடுத்து அதை கொக்கியில் மாட்டி விழிதொட முடியாத ஒரு கணத்தில் இறுக்கிவிட்டான். மணமாலை ஏற்கும் நாணத்துடன் வளைந்து நாண் பூண்ட வில் இனியதொரு முனகலுடன் மெல்ல நெளிய அதன் கரிய வளைவை நீவி நிறுத்தினான். முலைநடுவே முத்தாரத்தை அணிவிக்கும் கையழகுடன் நாணை சீரமைத்தான்.

அவன் நடந்து சென்றபோது இடைவளைத்த இணைத்தோழி என அது உடன் சென்றது. மதுமயக்கில் தலை கனத்த பரத்தை என அவன் தோளில் சாய்ந்து தளர்ந்தது. கிளிக்கூண்டின் முன் அவன் நின்று அதை தன் முன் நிறுத்தி அதன் வளைவை இடக்கையால் பற்றிக்கொண்டபோது அதன் உடல் சற்றும் அதிரவில்லை. அதன் நாண் மட்டும் யாழ்நரம்பு போல மீட்டிக் கொண்டிருந்தது. பேரவை விழிகளாக மாறி அவனைச் சூழ்ந்திருந்தது. அர்ஜுனன் கர்ணனை நோக்கினான். அவன் அங்கில்லை என்பதுபோல இருந்தான்.

கிருஷ்ணனின் நெஞ்சை அறிந்து அதற்கேற்ப இயைந்து கொண்டது கிந்தூரம். அவன் தோளில் கோதையென குழைந்து விழவிரும்பியது. அவன் காலடியில் சிற்றோடையென தழுவிச் சுழன்று செல்ல ஏங்கியது. கழுத்தை சுற்றிக்கொள்ளும் கைகளாக அவன் முகத்தை மூடிக்கொள்ளும் கருங்குழலாக அவனுடன் இருக்க விம்மியது. அது ஒரு வில்சூடலாக தெரியவில்லை. அங்கே வில்லும் அவனுமன்றி எவருமிருக்கவில்லை.

மெல்லிய சொடுக்கலாக கிந்தூரத்தில் ஓர் அசைவு நிகழ்ந்தது. அம்பு அதுவே சிறகடித்தெழுவது போல மேலே சென்று முதல் கிளியின் ஒரே ஒரு இறகை மட்டும் கொய்து கீழிறங்கியது. காற்றில் அந்த வெள்ளை இறகு புகைக்கீற்று போல மிக மெல்ல சுழன்று தவித்து திசைமாறி மீண்டும் சுழன்று கீழிறங்கிக்கொண்டிருக்கையில் அடுத்த கிளியின் ஒற்றை இறகை அம்பு கொய்து காற்றின் அலைகளில் ஏற்றி வைத்தது. படாம் ஒன்று அசைந்ததை உணர்ந்து அவ்விறகு திடுக்கிட்டு விலகியது.

நான்கு இறகுகள் ஒளிநிறைந்த வான்மேடையில் ஒன்றை ஒன்று தழுவிக்கொள்ள விழைபவை என சுழன்றன. ஐந்தாவது கிளி கூண்டிலிருந்து எட்டிப்பார்த்து தலையசைத்தது. விழிமூடி ஒரு கணம் நின்ற கிருஷ்ணன் கிந்தூரத்தை நிலத்தில் வைத்துவிட்டு அவையை வணங்கினான். திரும்பிப்பாராமல் அரசர் அவை நோக்கி மீண்டு சென்றான்.

அவனை தொடர்ந்த விழிகள் ஒரு கணத்தில் நிகழ்ந்ததை உணர்ந்தன. அனைத்து உடல்களும் அவற்றை இழுத்துக்கட்டியிருந்த அகச்சரடுகளில் இருந்து விடுபட்டு மூச்சொலிகளுடன் முனகல்களுடன் தளர்ந்து மீண்டன. துருபதன் முகவாயை வருடியபடி சத்யஜித்தை நோக்க அவர் குனிந்து ஏதோ சொன்னார். ஜராசந்தன் கிருஷ்ணனை ஓரவிழியால் தொடர்ந்தான். சகுனி குனிந்து துரியோதனனிடம் ஏதோ சொல்ல அவன் தலையசைத்தான்.

கிருஷ்ணன் அவைப்பீடத்தில் சென்று அமர்ந்துகொண்டதும் பலராமர் கடும் சினத்துடன் கைகளை அசைத்தபடி அவனிடம் பேசத்தொடங்கினார். அவனருகே இருந்த தேவாலனும் உடல் முழுக்க எழுந்த அக விரைவு தெரிய பேசினான். கிருஷ்ணன் மைந்தர்களின் பேச்சை புன்னகையுடன் பார்க்கும் தந்தையை போல அவர்களிடம் ஓரிரு சொற்கள் சொன்னான். அவன் விழிகள் வந்து அர்ஜுனனைத் தொட்டதும் அர்ஜுனன் எழுந்து தன் கைகளை தட்டினான்.

அவை திரும்பி நோக்கியது. எந்த ஒலியும் எழவில்லை. அனைவரும் அவனை அறிந்திருந்தனர். அவர்கள் எண்ணி விழைந்த கணம் அப்படி நிகழுமென எதிர்பாராதவர்கள் போல அவர்களின் முகங்கள் சொல்லற்றிருந்தன. அர்ஜுனன் கைகளைக் கூப்பியபடி அவை முற்றம் நோக்கிச் சென்றான். ”அவையீரே, அரசே, நான் சாமவைதிகன். என்பெயர் புஷ்பகன். முறையாக வில் தேர்ந்தவன். இந்த அவையில் சிவதனுசை குலைக்க எனக்கு ஒப்புதலளிக்கவேண்டும்.” துருபதன் கையசைக்க சூதர்களின் இசை எழுந்து அடங்கி அவனை வரவேற்றது.

சீரான காலடிகளுடன் அர்ஜுனன் மணமுற்றத்தை அடைந்து நின்றான். வீரர்கள் கிந்தூரத்தை சீர்ப்படுத்தி வைத்துக்கொண்டிருக்க அவன் திரும்பி திரௌபதியை நோக்கினான். அவள் விழிகளை அவன் விழிகள் தொட்டன. சிலகணங்களுக்குப்பின் விலகிக்கொண்டபோது அவன் நெஞ்சு ஒலிப்பதை அவன் கேட்டான். திரும்பி அவையை வணங்கிவிட்டு கிந்தூரத்தை நோக்கிச் சென்றான். கீழே மரப்பீடத்தில் வில் அவனை நோக்கி ஒரு மாபெரும் புருவம் போல வளைந்திருக்க அதன் கீழே அந்த பார்வை அவன் மேல் நிலைத்திருந்தது. அவன் அதை நோக்கியபடி சிலகணங்கள் நின்றான்.

யாதவன் வில்லை எடுத்ததை மீண்டும் அவன் பார்த்துக்கொண்டிருந்தான். ஒவ்வொரு கணமும் நீண்டு ஒரு தனிச்செயலாக மாறி செயல்களின் தொடராக அது தெரிந்தது. அந்த வில்லின் அத்தனை மந்தணப்பொறிகளையும் அமைப்பின் சூதையும் அவனால் காணமுடிந்தது. இத்தனை எளிதாக அறியும்படியா அதை அமைப்பார்கள் என அவன் ஒரு கணம் வியந்தான். அது ஒரு பொறி என்பதனாலேயே எத்தனை மகத்தானதாக இருப்பினும் எல்லைக்குட்பட்ட இயக்கம் கொண்டது. அதை புரிந்துகொண்ட கணமே தோற்றுவிட்டது. அவன் புன்னகை செய்தான்.

அதனுள் இருந்த மூன்று இரும்பு சுருள்வில்கள் எடைமிக்க பன்னிரு இரும்புக்குண்டுகளை ஒன்றுடன் ஒன்று இணைத்திருந்தன. வில்லைத் தூக்கியதுமே பன்னிரு இரும்புக்குண்டுகளும் கீழே வந்து வில்லின் எடைச் சமநிலையை அழித்தன. மேல் நுனியை கீழ்பகுதியின் எடை பக்கவாட்டில் தள்ளி அதை ஏந்தியவனை நிலையழியச் செய்தது. நாணைப்பற்றி இழுத்ததும் அதனுடன் இணைந்த சுருள்வில் இழுபட பன்னிரு குண்டுகளும் மேலே தூக்கப்பட்டு வில்லின் சமநிலை தலைகீழாக மேலிருக்கும் பகுதி எடைகொண்டு கீழே வந்து அதை ஏந்தியவனை தூக்கி வீசியது.

கிந்தூரத்தின் அனைத்து விசைகளும் அதை ஏந்துபவனின் தோளில் இருந்தே பெறப்பட்டன. அவன் கைகள் இழுப்பதற்கு நேர் எதிர்திசையில் சுருள்விற்கள் முறுகின. அவன் விட்டதும் அவன் நினைத்திருக்காதபடி குண்டுகளை பகிர்ந்து வில்லின் எடைச்சமநிலையை மாற்றியமைத்தன. அதன் இணைவுகளின் கணித முடிவின்மையே அதன் சூது. ஒவ்வொரு கணமும் அது மாறிக்கொண்டிருந்தது. முன்பிலாத ஒரு அமைப்பை அடைந்தது.

அர்ஜுனன் தன் கைகளை நீட்டி நோக்கியபின் கிந்தூரத்தின் கீழ்முனையை காலால் அழுத்தி அதை தூக்கி உடனே நடுப்பக்கத்தைப்பற்றி யாதவன் ஏந்தியது போல சற்றே சாய்த்து தோள்மேல் வைத்துக்கொண்டான். அதன் உருளைகள் கீழிறங்குவதற்குள் நாணை இழுத்து அதே விரைவில் மேலே கொண்டு சென்று பூட்டினான். வில்லின் உருளைகளின் மேலே எழுந்து வில் சமநிலை இழக்கப்போவதை ஒரு கணம் முன்னதாகவே அறிந்து தன் தோளால் மேலிருந்த எடையைத் தாங்கிக்கொண்டான்.

வில்லுடன் அவன் சென்று கூண்டின் கீழே நின்றபோது அவை அமைதியுடன் சூழ்ந்திருந்தது. போட்டி முடிவுற்றுவிட்டதை அனைவருமே அறிந்திருந்தனர். அர்ஜுனன் இடக்கையில் ஏந்திய வில்லின் கீழ் முனையை ஊன்றி குனிந்து தெளிந்த நீர்ப்பரப்பை நோக்கினான். அழுக்கற்ற ஆடி போல மேலே தொங்கிய கிளிக்கூண்டை காட்டியது. முதல்கிளி தலைநீட்டி சிறுவிழிகளை உருட்டி நோக்கியது. அவன் அதை நோக்கிக்கொண்டிருக்கையிலேயே அக்கிளி நீண்டு பிரிந்து ஒன்றாகியது.

அர்ஜுனன் தன் கால்கட்டைவிரலை உணர்ந்தான். அங்கே முழு உள்ளத்தையும் செலுத்தி அசைவிழக்க வைத்தான். கணுக்கால்களை கெண்டைக்கால் தசைகளை தொடைகளை இடையை முழுமையாக அவிழ்த்து விட்டு அசைவிழக்கச் செய்தான். அத்தனை தசைகளும் கட்டவிழ்ந்தன. அத்தனை நரம்புகளும் தொய்வடைந்தன. மார்பு, தோள், புயங்கள், முதுகு, கழுத்து என ஒவ்வொரு உறுப்பும் முற்றிலும் அடங்கியது. இமைகள் அடங்கின. விழிகள் அசைவற்றன. சித்தம் அசைவற்றது. ஒற்றைச் சொல்லாகியது. அச்சொல் அசைவற்றது. தனக்கு புவியில் முதன்மையான சொல் எது என அவன் அறிந்தான்.

கீழே மிக அண்மையில் தெளிவாக கிருவிகுலத்துக் கிளியின் விழி தெரிந்தது. மறுகணம் அது உடைந்து நீர்ப்பரப்பை நோக்கி வந்தது. கூண்டிலிருந்து சோமகக்கிளி வெளியே தலைநீட்டியதுமே சிதறிப் பொழியத் தொடங்கியது. சிருஞ்சயக்கிளியை அடித்தபோது அவ்வாறு ஆயிரக்கணக்கான கிளிகளை அவன் அடித்திருப்பதாகத் தோன்றியது. துர்வாசக்கிளியை அவன் அடித்ததை அறியவேயில்லை. அவையில் இருந்து ஒற்றைப்பெருமூச்சு கிளம்பியது.

கேசினிக்கிளி தலைநீட்டியதும் அம்புடன் எழுந்த அவன் கை அசைவழிந்தது. அவன் எண்ணங்கள் அக்கைக்குச் சென்று சேரவில்லை. என்ன என்ன என்ன என்று சித்தம் தவித்தது. செய் செய் செய் என ஆணையிட்டது. ஆனால் அவன் கை அப்பால் தனித்து நின்றிருந்தது. அவனைச்சூழ்ந்து உச்சநிலையின் அமைதியில் இறுகியிருந்தது அவை. அவன் நாற்புறமும் சூழ்ந்து அவனை நோக்கிக்கொண்டிருந்தான்.

எச்சரிக்கையுடன் புற்றிலிருந்து தலைநீட்டும் பாம்பென அவ்வெண்ணம் அவனில் எழுந்தது. வேண்டாம், திரும்பிவிடு. அதை அவனே திகைப்புடன் நோக்கி ஏன் என்றான். விலகிவிடு. ஆம், அதைத்தான் விவேகி செய்வான். விலகு. அகன்றுசெல். அதுவே உனக்களிக்கப்பட்ட அறைகூவல். உன் ஆணவத்தை வெல். உன் தனிமையை வெல். இக்கணம் இனி உனக்கு அளிக்கப்படாது. விலகு. வில் தாழ்த்து. ஒருகணம். ஒருகணத்திலேயே அனைத்தும் முடிவாகின்றன. மூடா, இப்புடவியே ஒரு கணத்தில் உருவானது. விலகு. இக்கணம். இக்கணம்….

அவன் உடலெங்கும் பற்றி எழுந்து கண்களைக் கனலச்செய்தது வெம்மை. விரல்நுனிகள் நடுங்கின. கீழே கேசினி நீண்டு நெளிந்து சுருங்கி வளைந்து நடமிட்டது. அர்ஜுனன் கிருஷ்ணனை நோக்கி விழிதூக்கினான். இமைப்புக்கணத்தின் தொடக்கம் முதல் பாதிவரை சென்று சினம்கொண்டு விலகிக்கொண்டான். பற்களைக் கிட்டித்தபடி கண்களை மூடி பின் திறந்து திரும்பி திரௌபதியை நோக்கினான். துடித்து விலகிக் கீழே நோக்கினான். பளிங்கில் வரைந்த ஓவியம் போன்றிருந்தது கேசினி. அவன் கை சிமிட்டியது. கேசினி சிதறி இறகுமழையாக விழுந்தது.

ஒருசில கணங்கள் அவை அசைவற்று ஒலியற்று இருந்தது. பின்னர் வெடித்தெழுந்து ஆர்ப்பரித்தது. வில்லை தாழ்த்தி நிமிர்ந்தபோது தன் உடலெங்கும் சினம் அதிர்வதைத்தான் அர்ஜுனன் உணர்ந்தான். பற்கள் இறுக கடிபட்டிருப்பதை தாடையுடன் கழுத்து நரம்புகள் இழுபட்டிருப்பதை உணர்ந்து வாயைத்திறந்து எளிதாக்கினான். அப்போதுதான் கைகள் நகங்களுடன் இறுகப்பற்றப்பட்டிருப்பதை உணர்ந்தான்.

ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்

உடலெங்கும் வியர்வை பூத்து குளிர் உணர்வாக தெரிந்தது. மூச்சை இழுத்து விட்டான். ஆம் ஆம் ஆம் ஆம் என அவன் சித்தம் இருந்தது. ஆம் என நீளொலி எழுப்பி மீட்டி முடிக்கப்பட்ட யாழ் என அவிந்தது. அவன் விழிதூக்கி யாதவனை நோக்கினான். அங்கே புன்னகை இருந்தது. அறிந்த புன்னகை, கடந்த புன்னகை, இனிய எள்ளல் கொண்ட முதுதந்தையின் புன்னகை.

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

மகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக

வெண்முரசு வாசகர் விவாதக்குழுமம்

முந்தைய கட்டுரைஅனைத்தும் அளிக்கப்பட்டிருக்கிறது!
அடுத்த கட்டுரையானை வணிகம்