மனிதராகி வந்த பரம்பொருள்!!

நெடுங்காலமாகவே எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. அதற்குக் காரணம் நான் வளர்ந்த பின்னணி. என் அப்பா அம்மா இருவருக்குமே கடவுள் நம்பிக்கை இல்லை. அப்பா சாஸ்திரத்துக்காக ஏதாவது கோயில் சடங்கில் கலந்துகொள்வாரென்றாலும் அம்மா அதுகூட செய்வதில்லை. அம்மாவுக்கு இலக்கியம்தான் மதம்.

அந்தப்பின்னணியில் வளர்ந்ததனால் நான் சாமி கண்ணைக்குத்தும் என்ற நம்பிக்கை இல்லாமல்தான் வளர்ந்தேன். நண்பனின் மரணம் காரணமாக ஆழமான அதிர்ச்சி ஏற்பட்டபோது என்னால் வழக்கமான நாத்திக வாதங்களை வைத்து அதை விளக்க முடியவில்லை. வாழ்க்கையின் அர்த்தம், பிரபஞ்சம் என்ற பிரம்மாண்ட இயக்கத்தில் மனித இருப்பு கொள்ளும் இடம் இதெல்லாம் மரணம் மூலம் நமக்கு மண்டையில் அடித்தது போல தெரியவருகிறது அல்லவா? ஆனால் வழக்கமான பக்திக்கும் என்னால் செல்ல முடியவில்லை.

நான் நூல்களை வாசிக்க ஆரம்பித்தேன். கீதை வழியாக சித்பவானந்தரை அறிந்துகொண்டேன். விவேகானந்தர் அரவிந்தர் என எல்லாரையும் வாசித்தேன். அதன் பின்னர் ஊரைவிட்டு கிளம்பி சாமியாராக அலைந்தேன். ஏராளமான சாமியார்களை அறிமுகம் செய்துகொண்டிருக்கிறேன். நிறைய ஆசிரமங்களிலே தங்கி யோகசாதனைகள் எல்லாம் செய்திருக்கிறேன். எதிலுமே திருப்தி இல்லாமல் திரும்பி வந்தேன். வேலைக்குச் சேர்ந்து திருமணம் செய்தபின்னரும் அந்த தேடல் தொடர்ந்தது. நிறைய வாசித்துக்கொண்டிருந்தேன்.

இந்நிலையில்தான் நான் நித்ய சைதன்ய யதி என்ற எஸ்.ஜெயச்சந்திரப்பணிக்கரை சந்தித்தேன். அவர் ஒரு சாமியார். நான் அவரை குரு என்று ஏற்றுக்கொண்டு வேதாந்தம் கற்றுக்கொண்டேன். கீதை முதலிய நூல்களை அவரிடமிருந்து கற்றேன். என்னை ஒரு சுத்த அத்வைதியாக நினைத்துக்கொண்டு நிறைய நூல்களை வாசித்தேன். நிறைய கட்டுரைகளையும் எழுதினேன்.

இந்த இணையதளத்திலே நீங்கள் நான் வேதாந்த நோக்கிலே கீதை முதலிய நூல்களுக்கு எழுதிய உரைகளை வாசித்திருப்பீர்கள். அவற்றையெல்லாம் நான் ஒரு உன்மத்த நிலையில் எழுதிருக்கிறேன் என்பது இப்போதுதான் தெரிகிறது.
 
இந்நிலையில் விதி என் வாழ்க்கையில் அற்புதமான ஒரு விளையாட்டை நடத்தியது. நான் சிலநாட்களுக்கு முன்பு ஒரு தனிப்பட்ட விஷயமாக சங்கரன்கோயிலுக்குச் சென்றிருந்தேன். சங்கர நயினார் கோயிலைப் பார்க்கலாம் என்று சென்றேன். கூட்டம் இல்லை. வாசலில் செருப்பைக் கழற்றிப்போடலாம் என்று போனேன். அங்கே ஒரு சாமியார் திருவோட்டை நீட்டியபடி நின்றிருந்தார். நான் அவரிடம் ஒரு ரூபாய் காசை நீட்டினேன். அவர் சிரித்துக்கொண்டே ”ஜெயமோகன், ஒரு ரூபாய் மதிப்புதானா எனக்கு?” என்று கேட்டார்.

என்னடா இது நம்மை தெரிந்த சாமியாராக இருக்கிறாரே என்று நான் ஆச்சரியம் கொண்டு ”என்னை தெரியுமா?” என்று கேட்டேன். ”எனக்கு எல்லாரையுமே தெரியும்” என்றார். பீலா விடுகிறாரே என்று நினைத்து நான் அப்படியானால் ”அதோ போகும் அந்த சுடிதார் அணிந்த பெண்ணின் பெயர் என்ன?” என்று கேட்டேன். ”சுனிதா” என்றார். நான் உடனே ”சுனிதா” என்று கூப்பிட்டேன். அந்தப் பெண் திரும்பிப் பார்த்தாள். ”ஸாரி நான் வேறு யாரோ என்று நினைத்தேன்” என்று சொல்லி சமாதானம் செய்து விட்டேன்.

எனக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. இவரை எப்படியாவது சோதனை செய்துவிடவேண்டும் என்று நினைத்தேன். ”நான் என்ன வேலை பார்க்கிறேன்?” என்றேன். ”பிஎஸ்என்எல்லிலே கிளார்க். இதுகூடவா தெரியாது?” என்றார். ஆச்சரியத்துடன் ”சரி, என்னுடைய ஆபீசர் பெயர் என்ன?” என்ரேன். அதையும் சரியாகச் சொல்லிவிட்டார். கடைசியாக ஒன்று கேட்க வேண்டும் என்று நினைத்து ”சரி நேற்று காலை பத்துமணிக்கு என்னை வந்து பார்த்தது யார்?” என்றேன். ”அருமனையைச் சேர்ந்த ஒரு பெண்மணி நீ எழுதிய நூல்களில் பிஎச்டி செய்ய வேண்டும் என்று வந்தாள்”

எனக்கு வேர்த்துவிட்டது. ”சரி அவள் பெயர்?” என்றேன்.  அதையும் சரியாகச் சொல்லிவிட்டார். எனக்கு மூத்திரமே முட்டிவிட்டது. ”கடைசியாக நீ இங்கே வரும்போது அந்த ஆயிரத்தில் ஒருவன் போஸ்டரைப்பார்த்தாய். எம்ஜிஆர் நடித்த  ஆயிரத்தில் ஒருவன் படம் சாண்டில்யனின் கடல்புறாவை நினைத்து எடுத்தது என்று நினைத்து சாண்டில்யனைப்பற்றி நினைத்துக்கொண்டே வந்தாய்”

நான் மூச்சுத்திணறி ”இதெல்லாம் எப்படி தெரிகிறது?” என்று கேட்டேன். ”எனக்கு எல்லாமே தெரியும். இந்த தெருவிலே போகும் எல்லாருடைய வாழ்க்கையும் தெரியும். இந்த நகரத்தில் உள்ள எல்லாரையும்  தெரியும். ஏன் உலகத்தில் உள்ள எல்லாருடைய வாழ்க்கையும் நினைப்புகளும் தெரியும். நான் மூக்காலமும் அறிந்தவன்” என்றார். என்னுடைய எல்லா நூல்களின் பெயரையும் சொல்லி ”வேண்டுமென்றால் முழு விஷ்ணுபுரத்தையும் மனப்பாடமாகச் சொல்கிறேன்” என்றார்.

இதெல்லாம் கொஞ்சம்கூட பொய் கிடையாது. கற்பனை கிடையாது. நான் பிரமித்து செயலிழந்து போய்விட்டேன். அப்படியே அவரது காலிலே விழுந்து விட்டேன். ”என்னை உங்கள் சீடனாக ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்றேன். ”சரி, அதற்காகத்தான் நான் உன்னை தடுத்தாட்கொண்டிருக்கிறேன். உள்ளே போய் சாமி கும்பிட்டுவிட்டு வா” என்றார். சொன்னால் நம்ப மாட்டீர்கள், உள்ளே அதே சாமியார் சுற்றி வந்து சாமி கும்பிடுவதைக் கண்டேன்!

சாமியாருடன் சென்றேன். அவரது பெயர் சுவாமி சிவானந்தலகரி மகராஜ். அருகே ஒரு வீட்டிலே அவர் தங்கியிருக்கிறார். அவர் சாப்பிடுவதே கிடையாது. பசிக்கும்போது கீழே கிடக்கும் ஒரு கூழாங்கல்லை எடுத்து வாயிலே போட்டு தின்கிறார். நான் அதை எப்படி தின்பது என்று கேட்டேன். அவர் எனக்கும் ஒரு கல்லை எடுத்து கொடுத்தார். அதை வாயிலிட்டு சாப்பிட்டேன். கற்கண்டு மாதிரி இருந்தது.

சுவாமி சிவானந்தலகரி மகராஜ் நடக்கும்போது ஒன்றைக் கவனித்தேன். அவரது நிழல் தரையிலே விழுவதில்லை. . என்னால் ஆச்சரியம் தாள முடியாமல் கேட்டுவிட்டேன். சிரித்துக்கொண்டு ”நீ அறிந்துகொள்ள இன்னும்  நிறைய இருக்கிறது” என்று சொன்னார். நாம் பிரமிக்கும் விஷயங்களாகவே செய்துகொன்டிருக்கிறார். அவரது முச்சுக்காற்றில் எப்போதுமே ஒரு சுகந்தம் இருக்கிறது. அவர் கண்களை இமைப்பதே இல்லை என்று கண்டபோது எனக்கு மூச்சே நின்றுவிட்டது.

அங்கே அமர்ந்ததும் அவர் எனக்கு ஞான தீட்சை கொடுத்தார். அதற்கு முன்னால் என்னுடைய தோளிலே அவர் கையை வைத்ததும் என் நெடுநாள் தோள்வலி பறந்து போய்விட்டது. என்னை அமரச் செய்து என்னுடைய நெற்றியிலே கையை வைத்தார். எனக்கு உலகமே சுழல்வது போல இருந்தது. நான் நட்சத்திரங்கள் நடுவே பறந்து செல்வதைப்போல உணர்ந்தேன். என்னுடைய ஏழு பிறப்பையும் நான் அப்போது புரிந்துகொண்டேன். அதையெல்லாம் வெளியே சொல்லக்கூடாது.

அதன்பின்னர் சுவாமி சிவானந்தலகரி மகராஜ் ”நீ ஊருக்கு போ” என்று சொன்னார். ”சுவாமியை எப்படி சந்திப்பது?” என்று நான் கேட்டேன்.”அது ஒன்றும் பெரிய விஷயமில்லை. நீ எங்கிருந்தாலும் அங்கே நான் வருவேன். அதற்கான வித்யாஞான சக்தி எனக்கு இருக்கிறது” என்று சொன்னார். நான் அவரை கும்பிட்டேன். அப்போது அவர் கண்மூடி நிஷ்டையில் ஆழ்ந்து விட்டார். அப்போது ஒரு நாகப்பாம்பு ஊர்ந்து அவ்ந்து அவரது மடியில் ஏறி படுத்துக்கொண்டது.
 
நான் கிளம்பி ஊர்வந்து சேர்ந்தேன். என்னுடைய மனைவி எனக்கு ஒரு மணிமாலையை தந்தாள். அந்த மாலையை ஒரு சாமியார் வந்து கொடுத்ததாகச் சொன்னாள். அந்தச் சாமியார் எப்படி இருப்பார் என்று அவள் சொன்னது அச்சு அசல் சுவாமி சிவானந்தலகரி மகராஜ் மாதியே இருந்தது. எனக்குப் புல்லரித்து விட்டது.

நான் அதன் பின் தினமும் மூன்று மணி நேரம் நிர்விகல்ப சமாதியில் உட்கார்ந்திருக்கிறேன். இப்போதுகூட சமாதியில் இருந்து எழுந்து டாய்லெட் போய்விட்டு வந்துதான் இதை எழுதுகிறேன். நான் இந்த இணைய தளத்தில் சாமியார்கள் அற்புதங்கள் எல்லாம் செய்ய முடியாது அது தப்பு என்று எழுதியிருந்தேன். அது நாத்திகக் கருத்து. அதை அறிந்தபின்னர்தான் சுவாமி என்னை ஆட்கொண்டிருக்கிறார்.  .

நான் இதுவரை எழுதிய ஆன்மீகக் கட்டுரைகள் கேள்விபதில்கள் விஷ்ணுபுரம் மாதிரியான நாவல்கள் எல்லாவற்றையும் கொளுத்தி விடுவதாக முடிவு கட்டியிருக்கிறேன். இணையத்தில் இருந்து அவற்றை அழிக்கப்போகிறேன். அவற்றை வாசித்தவர்களும் மறக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். அதற்கு முன்னால் நான் ஏற்கனவே குரு என்று நினைத்திருந்த நித்ய சைதன்ய யதி என்ற ஜெயச்சந்திரப் பணிக்கர் குரு ஒன்றும் இல்லை, சாதாரண ஈழவர்தான் என்பதை சொல்ல விரும்புகிறேன்.

நான் இதுவரை சொன்னதெல்லாம் தப்பு. இப்போது சொல்வதுதான் உண்மை. பிரம்மம் பிரபஞ்ச மனம் என்று ஏதும் இல்லை. ஏனென்றால் நான் பரம்பொருளை ரத்தமும் சதையுமாக நேரிலே கண்டு விட்டேன். தினமும் ஞானமார்க்கமாக அதனுடன் உரையாடிக்கொண்டிருக்கிறேன். சுவாமி சிவானந்தலகரி மகராஜ் தான் கண்கண்ட பரம்பொருள். ஓம் சிவானந்தலகரியே நமஹ!

முந்தைய கட்டுரைவென்றவர்களின் கதைகள்..
அடுத்த கட்டுரைமனிதனாகி வந்த பரம்பொருள் 2