«

»


Print this Post

கடிதங்கள்


அன்புள்ள ஜெயமோகன்

குறள் கீதை போன்றவற்றை நீங்கள் மத, நீதி நூல் பட்டியலில் இருந்து விலக்கி தத்துவ நோக்கில் அணுக முயல்கிறீர்கள் என்று எண்ணுகிறேன். அது முக்கியமான ஒரு முயற்சிதான். என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.அதர்கான முதிர்ச்சியும் வாசிப்பும் உங்களுக்கு இருக்கிறது. குறளை தத்துவார்த்தமாக வாசிக்க முடியுமா என்ற எண்ணம் சில வாசகர்களுக்கு இருப்பதாக தெஇரிகிறது. குறள் எதிக்ஸ் என்ற பிரிவின்கீழே வருகிறது. அது தத்துவத்தின் ஒரு பகுதிதான். நாம் மேலைநாட்டு தத்துவத்துக்கு பழகிவிட்டிருக்கிறோம். மேலைநாட்டு தத்துவம் லாஜிக் என்ற அடிபப்டையை கொன்டது. ஆனால் லாஜிக் இல்லாமலும் தத்துவம் இருக்க முடியும். குறள் லாஜிக் இல்லாமல் தத்துவத்தை முன்வைக்கும் ஒரு நூலாகும்.

செல்வராசன் நடராசன்
சென்னை

8888

எனது பதிவு.

குறள் பற்றிய சிந்தனையில் ‘தரிசனம்’ என்பது ஒவ்வொருவருக்கும் வாய்க்க கூடிய, தத்தம் வாசிப்பினால் கிடைக்க கூடிய புரிதல் பற்றியும், அதன் பன்முக பரிமாணம் பற்றியும் மட்டுமே.  ‘உண்மை’ என்கிற சொல்லில் பல வேறு அர்த்தங்கள் overload  ஆவதால், அதிலிருந்து ஒதுங்கி உள்ளேன்.

தவிர, முக்கியமான குறிப்பு என்னவெனில், காலம் என்கிற பரிமாணமும், அனுபவம் என்கிற பரிமாணமும் கூடுகிற போது, தரிசனங்கள் தனித்வம் பெறுகிறது.

தத்துவங்களை பற்றி நான் குறிப்பிட்டதாக தோன்றவில்லை. அதை பற்றி எனக்கு ஒரு நிலைப்பாடும் இல்லை.

குறளை அனுபவிப்பது பற்றியும், அதன் ‘நீதி நூலை’ தாண்டிய பரிமாணத்தை பற்றியும் என் எண்ணங்கள் – அவ்வளவே.

வாதம் புரிவதில், எனக்கு அதிக திறமையோ விருப்பமோ இல்லை – சில புரிதல்களில் உள்ள இடைவெளியை குறைக்க ஒரு முயற்சி.

அன்புடன்

முரளி

8888

சங்கச் சித்திரங்கள் படித்து வருகிறேன் என்னை மிகவும் பிரமிப்புக்கு உள்ளாக்கி விட்டீர்கள்

வணக்கம். காதலித்து மணமாகி குழந்தைகள் பிறந்து பின்னர் மனைவி யின் முகவாட்டம் கவனித்துக் கேட்கும் கணவனிடம்“முகமெல்லாம் கூட கவனிபதுண்டா என மனைவி கேட்க, “பழைய வேகமில்லாமல் இருக்கலாம். ஆனால் பிரியம் அதே. இன்னும் சொல்லப் போனால் இன்னும் கூட அதிகமாயிருக்கு” என சொல்லி கல் பொர்து இரன்க்கு கதழ் வீழருவி யை சொன்ன சித்திரம் அபாரம்

அதுவும் கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே என்ற பாடலுக்கு நீங்கள் பொறுத்தி வைத்த தங்களின் தனி வாழ்வின் அனுபவம்.. என் இரவுத் தூக்கத்தை களவு செய்து விட்டீர்கள்

தகர்க்கற்கரிய அந்த மௌனம் தனிமை இவற்றினை மேடம் அவர்கள் காகிதம் போல் கிழித்து மனத்தை நிரப்பினார்கள் என்று இன்னொரு இடத்தில் சொல்லி என் போன்ற வாசக்னை தாலாட்டவும் செய்கிறீர்கள்

சந்திர மௌலீஸ்வரன்

chandramowlee.blogspot.com

vcmowleeswaran.wordpress.com

சங்கப்பாடல்கள் தனி அனுபவங்களின் ரகசியக்கிடங்கை திறக்கும் சாவி போன்றவை. எல்லா நல்ல கவிதைகளும் அப்படித்தான். நல்ல நவீனக் கவிதைகளை எப்படி வாசிக்கிறோமோ அபப்டியே சங்கப்பாடல்களையும் வாசிக்க முடியும் என்று காட்டுவதே என் நோக்கமாக இருந்தது. அவற்றை வெறும் ஆய்வுப்பொருட்களாக மட்டுமே நமக்குக் கற்பித்திருக்கிறார்கள். அந்த காரணத்தாலேயே கணிசமான வாசகரக்ளுக்கு அவை சலிப்பூடுவதாகவும் இருந்தன. ஆகவே நான் அந்த நூலை எழுதினேன். அது விகடனில் வெளிவந்ததனால் அந்த நோக்கம் பெருமளவு நிறைவேறியதென நினைக்கிறேன்
ஜெ

***

அன்புள்ள ஜெ

இப்போதுதான் ஆழ்நதியைத்தேடி நூலைப் படித்தேன். நாம் கற்ற தமிழ் வரலாற்றை வேறு ஒரு கோணத்தில் வாசிப்பதற்கான அடிபப்டைகளை உருவாக்கி அளித்திருக்கிறீர்கள்.  படிபப்டியாக வரலாறும் அதன் மூலம் குறியீடுகளும் அக்குறியீடுகள் மூலம் அகவாழ்க்கையும் அதில் இருந்து இலக்கியமும் உருவாகிவந்திருக்கும் விதத்தை அருமையாகச் சொல்லியிருந்தீர்கள். வாழ்த்துக்கள்.

சுப லட்சுமணன்

***

அன்புள்ள ஜெயமோகன்

விஷ்ணுபுரத்தில் அஸ்வலட்சணம் கஜலட்சணம் பற்றி நிறைய தகவல்கள் வருகின்றனவே. அவை உண்மையானவையா இல்லை கற்பனையா?

சுந்தர்

அன்புள்ள சுந்தர்

அத்தகவல்கள் உண்மையானவை. தொன்மையான நூல்களில் இருந்துஎ டுத்தவை. புனைவின் எல்லைக்கு உட்பட்டு மிகக்குறைவாகவே தகவல்களை அளித்திருக்கிறேன் என்று வேண்டுமானால் சொல்லலாம்

ஜெ

அன்பு ஜெயமோகன் சார். கால் வலி தீர பிரார்த்திக்கிறேன். கோமல் சார் இலக்கிய, ஆன்மீக ஆர்வத்தில் மிகக்கொடிய வலியையும் சிரிப்புடன் தாங்கிக்கொண்டதும் இமயத்தில் நடந்தே பயணித்ததும் வியப்பின் உச்சம். இமயம் உண்மையில் ஒரு அற்புதம்.  அவர் இமயத்தில் ஏறியது கடவுளுக்கு விட்ட சவாலாகத்  தோன்றவில்லை. கடனை அடைத்துவிட்டேன் என்ற சொல் அவருடைய இருப்பிற்கும் கடவுளுக்குமான தொடர்பைத் தொட்டது. உங்கள் வலியையும் நீங்கள் ஒரு துளி சிவமாய்க்கண்டதும் உங்கள் பேறு. நாம் என்று நினைக்கும் இந்த உடல், மனம், உணர்ச்சிகள் தாண்டி ஏதோ ஒன்று; அதற்கும், இது வரை இந்த மூன்றாலும் உணர்ந்திராத ஒரு சக்தி ( நம் வசதிக்காக சிவம் என்று அழைப்போம்) க்கும் என்ன தொடர்பு. சிவத்தை இன்னும் ஆழமாய் உணர்வது எப்படி? ஏதோ இருக்கிறதென்று தோன்றுகிறது. எப்படித் தெரிவது என்று புரியவில்லை ஐம்புலன்களாலேயே உணர முடிந்தால் எவ்வளவு ஆனந்தம் (காணக் கண் கோடி வேண்டும் என்பதாய்). திரைப்படங்களில் அடியவர்களின் ஆவி ஜோதியாய் இறைவனுடன் கலப்பதும், இறைவனே நேரில் வந்து அடியவர்களைத் தொட்டணைத்து முக்தி அளிப்பதையும் கண்டு மனம் ஏங்கி விம்மும். எப்படியாவது ஒரு சிவானுபவம் வேண்டியதே – அன்புடன்

ரகு நாதன்

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/695