மலை ஆசியா – 7

பிப்ரவரி ஒன்றாம் தேதி கொலாலம்பூர் எழுத்தாளர் வட்டம் சார்பில் ஒரு இலக்கியக் கூட்டம் ஏற்பாடுசெய்திருப்பதாக மலேசிய இதழாளரும் எழுத்தாளர் சங்க தலைவருமான ராஜேந்திரன் சொன்னார். மலேசியா வந்தபின்னர்  அங்கே உள்ள எழுத்தாளர்களைச் சந்திக்கவில்லை என்ற மனக்குறை எனக்கிருந்தது. சென்றமுறை நான் மலேசியா வந்தது மலேசிய நவீன இலக்கியத்தின் மையங்களில் ஒருவரான டாக்டர் ஷண்முக சிவா அவர்களின் விருந்தினராக. காதல் என்ற இலக்கிய இதழை நடத்திவந்த ம.நவீன், அகிலன், யுவராஜ் போன்ற நண்பர்கள் அப்போது அறிமுகமானார்கள். நவீன இலக்கிய வாசிப்பும் புதியன படைப்பதற்கான மீறலும் அதற்கான திமிரும் கொண்ட குழு அது. உற்சாகமான சந்திப்பாக இருந்தது.இவர்கள் இப்போது ‘வல்லினம்’ என்ற இணைய இதழை நடத்தி வருகிறார்கள்.

இந்த வருகையில் ம.நவீன் மட்டும் ஒருமுறை என் அறைக்கு வந்திருந்தார். அவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். மீண்டும் சந்திகலாமென அவர் சொன்னாலும் தொடர்ச்சியாக எங்களுக்கு நிகழ்ச்சிகள் இருந்தன. ஓய்வாக இருந்த நேரம் அனேகமாக இல்லை என்றே சொல்ல வேண்டும். ஆகவே வேறு வழியில்லை. ம.நவீன் போன்ற இளைய தலைமுறை எழுத்தாளர்களுக்கும் எழுத்தாளர் சங்கத்திற்கும் நல்லுறவில்லை என்றும் ஆதலால் கூட்டத்திற்கு அவர்கள் வரமாட்டார்கள் என்றும் சொன்னார். அனைவருக்கும் வேண்டியவரான சண்முகசிவா மட்டுமே வருவார் என்றார். வழக்கமான மோதல்தான். புதியவை புகுதலை மீறலாக மட்டுமே பார்க்கும் பழைய தலைமுறையின் உளச்சிக்கல்.

காலையில் நாஞ்சில்நாடனும் பிறரும் கிளம்பி கடைவீதிகளுக்குச் சென்றார்கள். நாஞ்சில் எல்லாருக்கும் பரிசுப்பொருட்கள் வாங்கவேண்டியிருந்தது. மேலும் நல்ல தங்கம் கிடைக்கும் என்பதனால் பெண்ணுக்கு கொஞ்சம் நகை வாங்க பணம் கொண்டுவந்திருந்தார். நான் எதையுமே வாங்க விரும்பவில்லை. எல்லாமே ஊரில் கிடைக்கும்போது எதற்கு என்று இருந்துவிட்டேன். கீழே சென்று இணையமையத்தில் இருந்து மின்னஞ்சல்களைப் பார்த்தேன். பலநாட்கள் பார்க்காமல் குவிந்து கிடந்தன

பதினொருமணிக்கு கடைக்குப்போனவர்கள் திரும்பிவந்துவிட்டார்கள். நாஞ்சில் வாங்கிய தங்கச்சங்கிலி தொலையாமல் இருக்க கழுத்திலேயே போடவேண்டும் என்று ராமலிங்கம் சொல்லிவிட்டார். ‘என்னத்துக்கு, இந்த வயசுக்குமேலே’ என்று நாணிக் கண்புதைத்து ஒருவழியாகப் போட்டுக்கொண்டார். எனக்கு முத்தையா சாக்லேட் பொட்டலங்கள் வாங்கிவந்திருந்தார், சைதன்யாவுக்காக. அவள் ஒரு சாக்லேட் பைத்தியம். குண்டாகிவிடுவாளோ என்ற சந்தேகத்தால் அருண்மொழி அதிகம் கொடுப்பதில்லை

அறைக்குப் போனோம். நாஞ்சில் சட்டையிலா உடம்பில் தங்கச்சங்கிலி புரளபுரள சுற்றி வந்தார். உல்லாசமாக இருப்பது மாதிரி தெரிந்தது. நிஜமாகவே நன்றாகவும் இருந்தது. ”வீரணமங்கலம் மூத்த பிள்ளவாள் மாதிரி இருக்கீங்க” என்றேன். மகிழ்ந்துகொண்டார். ”பிடிச்சிருந்தா நாமளே போடுகது. அவளுக்கு இன்னொண்ணு வாங்கிகிடலாம். என்ன இப்ப?” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டார்.

மதியச்சாப்பாட்டுக்கு கொலாலம்பூரின் பிரபலமான துணிக்கடை உரிமையாளர் ரகுமூர்த்தி அவர்களின் இல்லத்திற்குச் செல்வது என்று ஏற்பாடு. அவரது துணிக்கடை ‘காயத்ரி’க்குச் சென்றோம். மலேசியாவில் பிறந்த ரகு மூர்த்தி சிறுவயதில் இந்தியாவுக்கு வந்து சேலத்தில் கல்விகற்று வறுமையில் கஷ்டப்பட்டார். மீண்டும் மலேசியா திரும்பி துணிக்கடையில் வேலைபார்த்தார். சொந்தமாக கடை ஆரம்பித்து இன்று தொடராக ஒரு குட்டிக்கடைவீதியே சொந்தமாக வைத்திருக்கிறார்

ரகுமூர்த்தியின் வீட்டுக்குச் சென்று சிக்கன் மட்டன் எல்லம் அமைந்த விருந்துண்டோம். அவரது மனைவியும் மகளும் பரிமாறினார்கள். அவருக்கு பிடித்த நிறம் பச்சை போல. அவரது அலுவலகம் வீட்டு உட்பக்கம் எல்லாமே பச்சை நிறம். கண்ணதாசன் மேல் பெரிய பற்றுள்ளவர். அப்படித்தான் அவருக்கு முத்தையா, ராமலிங்கம் ஆகியோர் பழக்கம். எங்களுக்கு பரிசுகள் கொடுத்தார்.

சண்முகசிவா

அறைக்குத்திரும்பி ஓய்வெடுத்தபின் இதழாளர் சங்க அலுவலக மூன்றாம் மாடியில் நிகழ்ந்த எழுத்தாளர் சந்திப்புக்குச் சென்றோம். சண்முக சிவா, ர.கார்த்திகேசு ஆகியோர் வந்திருந்தார்கள். முத்தையா, கனகலட்சுமி, நாஞ்சில், நான் என வரிசையாகப் பேசினோம். நாஞ்சில்நாடன்  இலக்கியத்தின் வழிகள் எப்படி விதிகளை மீறிச்செல்லும் என்றும் இலக்கியம் எப்படி ஒரு சமூகத்தின் அறத்தின் குரலாக இருக்கிறது என்றும் உணர்ச்சிகரமாகப் பேசினார்

கூட்டம். வலது ஓரம் ராஜேந்திரன்

நான் தி.,ஜானகிராமனின் பரதேசி வந்தான் என்ற கதையைச் சொல்லி, நம் வீட்டு வாசலில் வந்து நின்று ‘இவ்வளவு செல்வமும் ஆடம்பரமும் இருக்கிறதே, கொஞ்சம் கருணையும் இருந்திருக்கக் கூடாதா?’ என்று கேட்கும் அறத்தின் குரலே இலக்கியம் என்றேன். நம்முடைய படோடோபம் மமதைக்கு முன் பண்டாரக்கோலம் கொண்ட காலபைரவனாக வந்து நிற்கிறது இலக்கியம் என்றேன்.

அதன் பின் மலேசிய இலக்கியத்தைப்பற்றி விவாதம் நடைபெற்றது. நான் கறாராகவே என்னுடைய கருத்துக்களைச் சொன்னேன். வழக்கம் போல அது என்னுடைய பார்வையின் குறை என்றும் மலேசிய இலக்கியச்சூழல் மிகச்சிறப்பாக இருக்கிறது என்றும்  ராஜேந்திரன் பதில் சொன்னார். கூட்டம் முடிந்து ராஜேந்திரனும் அவர் மனைவியும் எங்களுக்கு ஓட்டலில் ஒரு விருந்தளித்தார்கள். ராஜேந்திரனின் மனைவி ராஜம் ராஜேந்திரன் மலேசியப் புதுக்கவிதைகளைப்பற்றி முனைவர் பட்ட ஆய்வு செய்து நூல் வெளியிட்டிருக்கிறார்.

இரவு நாங்கள் டுரியன் சாப்பிட வேண்டுமென விரும்பினோம். நாஞ்சில் சாப்பிட்டதில்லை. இத்தனைக்கும் கோவையில் அது கிடைக்கிறது என்றார். ஆனால் அதைச் சாப்பிட்டால் ஆண்மை விருத்தியாகி குழந்தை பிறக்கும் என்று சொல்லப்பட்டு அதை வாங்கி சாப்பிட ஒரே போட்டியாம். சொல்லி வைத்தால் கடையில் பெயர் பதிந்து ஓரிரு பழங்கள் வந்ததும் சொல்லி அனுப்புவார்களாம். ”அறுபது வயசுக்குமேலே நமக்கு என்னாத்துக்கு அது, கெடக்கிற கெடையிலேண்ணு சாப்பிட்டுப் பாக்கல்லை” என்றார் நாஞ்சில்

சாலையோரக் கடை ஒன்றில் டுரியன் பழங்கள் வைத்திருந்தார்கள். உட்கார்ந்து சாப்பிட நாற்காலிகள் டியூப் லைட் எல்லாம் உண்டு. நாஞ்சில்நாடனுக்கு ஏதோ போன் வந்தது. ஆமா சரக்கு அனுப்பிச்சச்சு சரக்கு என்று அவர் அரைமணி நேரம் பேசினார். அந்த நேரத்தில் டுரியன் பழத்தை பிளந்து அந்த சங்கைப்பிடுங்கி சாப்பிடுவது போல நான் சாப்பிட்டேன். கனகலட்சுமி மோந்து பார்த்துவிட்டு பின்வாங்கிவிட்டார். நான் கிட்டத்தட்ட ஒரு பழம் சாப்பிட்டேன்

நாஞ்சில் வந்தார். ”என்னது நாலுநாளான பலாப்பழம் மாதிரி நாத்தம்” என்று அமர்ந்தார். பிய்த்து முகர்ந்து ”நாலுநாளான பலாப்பழத்த சாப்பிட்டுட்டு விடுற குசு மாதிரில்லா இருக்கு” என்றார். நாலைந்து சுளை சாப்பிட்டதும் போதும் என்று சொல்லிவிட்டார். சாப்பிடுங்கள் என்று மனோ கட்டாயப்படுத்த ”போரும். ருசி பாத்தாச்சுல்லா…மேலெ சாப்பிட்டா ஒண்ணுகெடக்க ஒண்ணு ஆயிடப்போவுது. ஏற்கனவே ரெண்டுபிள்ளையளை ஆளாக்க கஷ்டப்படுதேன்” என்றார்

இரவில் எனக்கு டுரியன் ஏப்பங்கள் வந்துகொண்டே இருந்தன. நாஞ்சில் ஏப்பம் விட்டு ”எளவு இத திண்ணுட்டு படுத்தா கொசுமருந்து வேண்டாம் போல இருக்கே” என்றார். அவர் எல்லா பொருட்களையும் எடுத்து வெளியே போட ஆரம்பித்ததும் நான் தூங்கிவிட்டேன்.

மறுநாள் காலையில் எழுந்து குளித்து தயாரானோம். மறுநாள் காலையில் நானும் கனகலட்சுமியும் விமானத்தில் திரும்புவதாக ஏற்பாடு. நாஞ்சில்நாடன் பினாங்குக்குப் போய் ஒரு பின்னல் யந்திரப் பொருட்கள் கண்காட்சியை பார்வையிட்டு சோதனைப்பொருட்கள் பெற்று அவரது நிறுவனத்துக்கு அனுப்புவதாக திட்டம். மரபின் மைந்தன் நாஞ்சில்நாடனுக்கு உணர்வுத்தோழராக.

”பேக்பண்ணனும்ல?” என்று நாஞ்சில் அதீதமான பதற்றத்துடன் கேட்டார். ”நீங்க எதுக்கு சார் பதற்றப்படுறீங்க? நாங்கள்ல போறம்?” என்றேன். ”நீங்க பேக் பண்ணணுமேண்ணு கேட்டேன்” ”என்னத்த பேக் பண்றது எல்லாத்தையும் அள்ளி உள்ள போட்டா சோலி முடிஞ்சது” என்றேன்.”இல்ல, இருந்தாலும்” ”நான்லாம் போட்டது போட்டதுதான் சார்” என்றேன். நாஞ்சில் சரி என்று அவர் பேக் செய்ய ஆரம்பித்தார். அதன் முதல் கட்டமாக ஏற்கனவே பேக் செய்யப்பட்ட பெட்டியை திறந்து எல்லாவற்றையும் வெளியே தூக்கி வைத்தார்

காலையுணவு ஓட்டலில். மதிய உணவுக்கு நாங்கள் ஒரு இந்திய உணவகத்துக்குப் போவதாக ஏற்பாடு. அங்கே மலேசிய மத்திய அமைச்சர் டத்தோசிரி சாமிவேலு அவர்களைப் பார்க்க திட்டம். நாங்கள் சென்று அமர்ந்திருந்தபோது சற்று நேரத்தில் டத்தோசிரி சாமிவேலு வந்தார். நான் சின்னவயதிலேயே தினத்தந்தியில் பார்த்திருந்த முகம். ஆனால் இப்போது நல்ல முதுமை தெரிந்தது. அவரது இந்திய மூதாதையர் குறித்தும் தஞ்சை மாவட்டத்தில் அவர் பிறந்த ஊருக்குச் சென்ற அனுபவத்தைப் பற்றியும் சொல்லிக்கொண்டிருந்தார்.

எம்ஜிஆர் கருணாநிதி யுகத்தில் அவர்கள் இரு துருவங்களாக இருக்கையில் இருவரிடமும் சமமான உறவை மேற்கொள்ள தான் எடுத்த முயற்சிகளைப்பற்றி கொஞ்சம் வேடிக்கை கலந்து சொன்னார். ஒருமுறை மு.க அவர்களை பார்த்துவிட்டு எம்.ஜி.ஆரைச் சந்திக்கச் சென்றது பற்றி எம்ஜி.ஆர் கோபம் கொண்டபின் சமாதானம் ஆனதை குறிப்பிட்டார். வேடிக்கையாக இருந்தது.

அவர் அடிக்கடித் திருச்செந்தூர் கோயிலுக்கு வருவதைப்பற்றிச் சொன்னேன். ”உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா?” என்றேன். ”நான் தினம் பூஜைசெய்யாமல் வெளியே வரமாட்டேன்” என்றார். ”ஏன் அப்படிக் கேட்டீர்கள்?”என்றார். ”இல்லை, தமிழ்நாட்டிலே இருந்தாலும் வெளியே சொல்லமாட்டார்கள்” என்றேன்.

மலேசிய அரசியலைப்பற்றி அதிகம் பேசிக்கொள்ளவில்லை.பொதுவாக தன்னுடைய அரசியல் என்றுமே மோதலின் அரசியல் அல்ல என்றும் உணர்ச்சிகளை தூண்டிவிடுவது தன்னுடைய வழி அல்ல என்றும் சொன்னார். சமரசம், நல்லிணக்கம் மூலம் மலேசியத்தமிழர்களின் வாழ்க்கையை மேம்படுத்த பிற அனைவரையும் விட தான் பங்காற்றியிருப்பதாகவும் அது வரலாற்றில் இருக்கும் என்றும் சொன்னார். சந்திரமௌலி அதிகாரபூர்வ பேட்டி ஒன்றை எடுத்தார்.

டத்தோ சிரி சாமிவேலு அவர்கள் எங்களுக்கு ஆளுக்கொரு பேனா பரிசளித்தார். சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டோம். அவர் சென்றபின் நாங்கள் உள்ளே வந்தமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அப்போது ஒருவர் என்னை திரும்பிப்பார்த்தார். பின் அடையாளம் கண்டுகொண்டார். இயக்குநர் நண்பர் சீமானின் அன்புத்தம்பியும் உதவி இயக்குநருமான தோழர் ஐந்துகோவிலான் என்ற ஐகோ. பாரதிராஜாவிடம் பல படங்களுக்குப் பணியாற்றியவர். மலேசிய நண்பர் ஒருவரை தயாரிப்பாளராகக் கொண்டு ஒரு திரைப்படம் எடுக்கப்போவதாகச் சொன்னார்.

அமைச்சருடன் அறையில்

மாலை முத்தையாவின் அறைக்கு டத்தோ சரவணன் வந்திருந்தார். அவரிடம் இன்றைய தமிழக, இலங்கை அரசியல் பற்றி நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தேன். பொதுவாக உலக அளவில் தாராளமயமாக்கல் சந்திக்கும் சிக்கல்களைப்பற்றியும் பேசினோம்.

மறுநாள் காலை எட்டு மணிக்கு எங்களுக்கு விமானம்.ஐந்து மணிக்கு கார் வந்தது. ஆறு மணிக்கு விமானநிலையத்தில் இருந்தோம். கனகலட்சுமியுடன் பேசிக்கொண்டிருந்தேன். விமானம் மேலெழுந்ததும் கடைசியாக ஒருமுறை கீழே மலேசிய மண்னைப் பார்த்தேன். எண்ணைப்பனைமரக்கூட்டம்தான் தெரிந்தது

[முற்றும்]

முந்தைய கட்டுரைமனிதனாகி வந்த பரம்பொருள் 2
அடுத்த கட்டுரைமனிதராகி வந்த பரம்பொருள் 3