«

»


Print this Post

அங்காடித்தெரு இன்று


நான் பங்குபெற்று வெளியாகும் நான்காவது படம் அங்காடித்தெரு. இன்று  அது வெளியாகிறது. அதன் முழு வடிவை நான் இன்னமும் பார்க்கவில்லை. முழுமையாக தொகுக்கப்பட்டு இசை சேர்க்கப்பட்டு ஓசைகள் அமைக்கப்பட்ட படம் முற்றிலும் வேறு ஒன்று. பொதுவாக திருட்டு டிவிடி அச்சம் காரணமாக படங்களை கடைசி நேரத்தில்தான் முழுப்படமாக ஆக்குவார்கள்.

காலைக்காட்சிக்கே செல்லலாம் என்று நினைத்தேன். ஆனால் அருண்மொழி நாளை மதியம்தான் வருவாள். அவளும் அஜிதனும் விடுமுறைக்காக திருவாரூர் சென்றிருந்தாள். அவள் வராமல் நான் பார்க்கக் கூடாது என இறுதிக்கட்டளை. ஆகவே நாளை மாலைக்காட்சிக்கு போகலாமென நினைக்கிறேன்.

நாகர்கோயில் போன்ற ஊர்களில் என்ன பிரச்சினை என்றால் முதல்நாள் படம் பார்க்க வருபவர்கள் எல்லா படங்களையும் பார்க்கும் ஒரு கும்பல். படம் முழுக்க கத்திக்கொண்டே இருப்பார்கள். அதாவது இந்தப்படம் எப்படிப்போகும் என எனக்கு தெரியும் என்ற அளவில். கொஞ்சம் படம் உணர்வுரீதியாக கனம் கொண்டால்கூட பொறுமை இழப்பார்கள். சில தினங்கள் கழித்து இது இன்னமாதிரியான படம் என்று ஆனபின்னர்தான் அதற்கான ரசிகர்கள் வருவார்கள்.

அப்போது மீண்டும் போய் படத்தைப் பார்க்கவேண்டும்.

http://www.indiaglitz.com/channels/tamil/gallery/m/Movies/angaditheru/674977.html

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/6941

10 comments

Skip to comment form

 1. ramji_yahoo

  இந்த படமும் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

  நாகர்கோயிலில் எங்கே ரிலீஸ், கார்த்திகை அல்லது சக்கரவர்த்தி

 2. ஜெயமோகன்

  karthikai

 3. chandanaar

  வணக்கம்.
  வசந்த பாலனை ஆல் இந்தியா ரேடியோ க்காக ஒரு முறை நேர்காணல் செய்தேன். அப்போது அவர் தேசிய விருது பெற டெல்லி வந்திருந்தார்.
  அங்காடி தெரு பற்றியும் உங்களை பற்றியும் அந்த நேர்காணலில் பேசினார். உங்கள் மீது நல்ல மரியாதை கொண்டவர் என்று தோன்றியது.
  படம் வெற்றி பெற வாழ்த்துகள்.

 4. Prasanna

  அன்புள்ள ஜெயமோகனுக்கு,
  இனிய மாலை வணக்கம். இந்த ‘அங்காடி தெரு” எனக்குள் ஒரு ஆழமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏன் என்றால் இந்த கதை நடைபெறுவதாக காட்டப்படும் டிநகர் ரெங்கநாதன தெருவை கடக்கும் போதெல்லாம் நினைத்து கொள்வேன்,( சென்னையில் இரண்டரை வருடம் இருந்த போது தினமும் ஒரு முறையாவது அந்த தெருவை கடக்க வேண்டிய சூழ்நிலை வந்து விடும்) எத்தனையோ பகுதிகளை வைத்து திரைப்படம் எடுக்கிறார்கள். இந்த தெருவில் ஒரு நாள் ஒன்றுக்கு பல கோடி ரூபாய்கள் வியாபரம் செய்ய உதவி செய்யும் எத்தனையோ உயிர்களை பற்றி ஒரு படைப்பு ஏன் இன்னமும் வெளி வரவில்லை என நினைப்பேன். ஏன் எனில் அந்த அலங்காரங்களுக்கு மத்தியில் வெளிபடுத்த முடியாத எத்தனையோ இளம் நெஞ்சங்களின் சோகம் புதைந்து கிடக்கிறது. ஏக்கம், ஆசை, பாசம்,காதல் காமம் ,துரோகம் என ஒரு நல்ல இலக்கிய படைப்பிற்க்கான அத்தனை தளங்களும் அந்த தெருவில் இருந்து நம்மால் எடுக்க முடியும். இந்த அங்காடி தெரு பற்றிய முதல் அறிவிப்பு வந்ததில் இருந்தே மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து இருக்கிறேன். இன்று மாலை காட்சியே சென்று விட வேண்டும் என நினைத்து இருந்தேன்.ஆனால் முடியாமல் போய் விட்டது. நிச்சயம் இரண்டொரு நாட்களில் பார்த்து விட்டு என் கருத்தாக்கங்களை பதிவு செய்கிறேன். ஒரு முறை என் நன்பர ஒருவரை பார்க்க வேண்டி இருனததன் காரணமாக இந்த தெருவின் பிரம்மாண்ட கடைகளில் பனி புரியும் கடை கோடி ஊழியர்கள் தாங்கும் விடுதிக்கு செல்ல வேண்டி வந்த போது மிகவும் மனம் புண்பட்டு போனேன் . பொருளாதாரம் ஒன்றின் காரணமாக வேர்விட்ட ஊரை தொலைத்து அங்கு வந்து பணி புரிந்து கொண்டு இருக்கும் உள்ளங்களின் வலி அவர்களின் முகங்களில் கண்டேன். அந்த நெஞ்சங்களின் தீராத மன சுமையை இந்த படம் சிறிதாவது ஆற்றும் என நம்புகிறன்.

  மீண்டும் சந்திப்போம்
  அன்புடன்
  பிரசன்னா

 5. Prasanna

  அன்புள்ள ஜெயகனுக்கு,
  சில எழுத்து பிழைகளை கவனிக்காமல் விட்டு விட்டேன். மன்னிக்கவும்

  அன்புடன்

  பிரசன்னா

 6. ramji_yahoo

  இந்த படம் சென்னை தியாகராய நகர் சரவணா ஸ்டோர், ரத்னா ஸ்டோர் ஊழியர்களின் கதை போல., உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டதா.

 7. tdvel

  திரைப்படத்தை குடும்பத்துடன் சென்று பார்த்தோம். பிள்ளைகளுக்கு உலகின் இன்னொரு பக்கத்தினை அறிமுகம் செய்யும் வாய்ப்பளித்த இத்திரைப்படத்தை உருவாக்கிய குழுவினருக்கு நன்றி. மனம் நிறைந்து கனத்திருப்பதால் இப்போதைக்கு மேற்கொண்டு எதுவும் கூற இயலவில்லை.

  அன்புடன்
  த.துரைவேல்

 8. ஜெயமோகன்

  அன்புள்ள ஜெயமோகன் சார்,

  இன்று ‘அங்காடித் தெரு’ படம் பார்த்தேன். மிக நன்றாக இருந்தது. நமக்குத் தெரியாத ஒரு வாழ்க்கைக்குள் நுழைந்து வரும் அனுபவத்தை கலை மட்டுமே கொடுக்க முடியும், அதிலும் காட்சிக் கலை இன்னொரு உலகத்துக்கே சென்ற உணர்வைக் கொடுக்கிறது. சந்தேகமில்லாமல் ‘அங்காடித் தெரு’ ஒரு தரமான கலைப் படைப்பு. விறுவிறுப்பான திரைக்கதையும், யதார்த்தமான நடிப்பும், கச்சிதமான இயக்கமும் மனதைக் கவர்வதாக இருந்தன. சிறப்பான கதாபாத்திரங்களும் உணர்ச்சிகரமான தருணங்களும், எழுதப்பட்டவைபோல் இல்லாமல் அங்கே அப்போதே பேசப்பட்டதுபோன்ற வசனங்களும்தான் படத்தின் பெரிய பலம். நான் வெறும் புகழ்ச்சிக்காக சொல்லவில்லை என்று உங்களுக்கே தெரிந்திருக்கும். சமீபத்தில் வந்த தமிழ்ப்படங்களில் துருத்திக்கொண்டு தெரியாத இயல்பான வசனங்களை தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும். ஒரு படம் முழுவதும் அப்படிப்பட்ட வசனங்களால் அமைவதென்பது ஒரு சாதனையே தான். உங்களுக்கும் வசந்தபாலனுக்கும் வாழ்த்துக்கள்.

  படத்தில் எனக்குக் குறையாகத் தெரிந்த ஒரே விஷயம், பின்னணி இசை. காரணம் ஏராளமான புதிய அம்சங்கள் நிறைந்த இந்தப் படத்தில், பின்னணி இசையில் மட்டும் கொஞ்சம் கூட புதுமையே இல்லை.

  முன்பு விபச்சாரியாக இருந்து இப்போது குள்ளன் ஒருவனை மணந்த பெண், தனக்குப் பிறந்த குழந்தை தந்தையைப் போலவே இருப்பதால் பெருமிதம் கொள்ளும் காட்சி… இன்று கமலா தியேட்டரில் மதியக் காட்சியில், அதுவரை எவ்வித கமெண்டும் இல்லாமல் பேரமைதியாக இருந்த அரங்கு முதல் முறை கரவொலி எழுப்பியது அந்தக் காட்சிக்குத்தான். உடனே உங்களுக்குச் சொல்ல வேண்டுமென்று ஆசையாக இருந்தது அதற்காகவே இக்கடிதம். மீண்டும் வாழ்த்துக்கள்.

  சார்லஸ்

 9. kalyaanan

  அன்புள்ள ஜெயமோகன்

  நேற்றி இரவுக்காட்சியாக ‘அங்காடித்தெரு’ பார்த்தேன். சமீபகாலத்தில்லே நான் பார்த்த மிகச்சிறப்பான சினிமா இது. நேத்து இரவு முழுக்க என்னால் தூங்கவே முடியவில்லை. என்னை இந்த அளவுக்கு மனதை உருக்கிய ஒரு சினிமா இப்போது நினைவுக்கே வரவில்லை. மன்னிதர்கள் வாழ்க்கைக்காக உசிரைக்கொடுத்து போராடுவதை பார்க்கும்போது மனம் அப்படியே உருகி போகிறது. வசந்தபாலன் காலைத்தொட்டு கும்பிடவேண்டும் என்று நினைத்தேன். எல்லாரும்தான் சினிமா எடுக்கிறார்கள். பணம்பண்ண வேண்டும் புகழ்பெற வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். ஒரு மனிதகதையை சொல்லவேண்டும் மனிதர்களின் துக்கத்தை சொல்லவேண்டும் என்று யாருக்கு தோன்றுகிறது. எப்பேர்ப்பட்ட படம். நிபுணர்கள் குறைகளை எல்லாம் சொல்வார்கள். உலகசினிமாவுடன் ஒப்பிட்டால் சில குறைகளை சொல்லவும் முடியும் என்று படுகிறது. ஆனால் நம்முடைய கண்ணுக்கு முன்னால் உள்ள வாழ்க்கையினை நம்மிலே ஒருத்தர் தானே சொல்ல முடிகிறது. அதுதானே நமக்கு முக்கியம்? படத்தைப் பார்த்துவிட்டு கனத்த மனசுடன் வெளியே வந்தேன்..

  ரொம்ப நல்ல படம் என்பதற்கு மேலாக என்ன சொல்ல? சினிமா அப்படித்தான். அது மனசுக்குள்தான் நேரடியாக செல்லுகிறது. மூளை எல்லாம் அப்புறம்தான். படத்திற்கு வசந்தபாலனுடன் சேர்ந்தே நீங்கள் வந்துகொண்டிருக்கிறீர்கள். ஒரு எழுத்தாளனை எப்படி சினிமாவிலே பயன்படுத்துவது என்று வசந்தபாலன் காட்டியிருக்கிறார். எங்களுக்கு தெரிந்த ஜெயமோகனை இந்தப்படத்திலேதான் பார்க்கிறோம்.

  யானை வாழும் காட்டிலேதான் எறும்பும் வாழுது

  பெண்நாய் ஆண்நாய்க்கு போக்கு காட்டுவது மாதிரி அவனை பின்னாலே சுத்த விடுறே

  இந்த ஒரு ஆண்பிள்ளைக்கிட்ட மட்டுமாவது மானரோசத்துடன் இருந்துக்கிறேனே

  விக்கத்தெரிஞ்சவன் வாழத்தெரிஞ்ச்வன்

  மனுஷன நம்பி கடவிரிச்சேன். குறையொன்றுமில்லை

  இனிமே இது குள்ளனுக்கு பொறக்கலைண்ணு யாரும் சொல்ல மாட்டாங்கள்ல?

  நாயி குட்டிகளை கொண்டாந்து போடுற மாதிரி கொண்டு போயி போட்டுட்டு போறவன் நான். நாயி சென்மம் தம்பி

  போன்ற நுட்பமான வசனங்கள் நீங்கள் எழுதியவை என்று காட்டுகின்றன. ஆனால் சாதாரணமான வசனங்களை துணிந்து போட்டிருக்கும் இடத்திலும் நீங்கள் தெரிகிறீர்கள்.

  ”இங்க யாருன்னு தங்கச்சி கேட்டுட்டே இருந்தா

  நீ என்ன சொன்னே

  சிரிச்சேன்”

  அதேபோல நக்கல் கிண்டல்களிலும் நீங்கள் தெரிந்துகொண்டே இருக்கிறீர்கள்

  ”ஏலே நில்லுலே ராகு காலத்திலே பொறந்தவனே

  நீருல்லாவே நேரம் பாத்திருக்கணும்?”

  இந்த வசனம் போல எத்தனையோ வசனங்களை நாங்கள் உங்கள் கட்டுரைகளிலே வாசித்திருக்கிறோம்.

  கவிஞர் முகத்தை பாத்தியா, அடுத்து பத்தாம் கிளாச் கடவுள் வாழ்த்தை எழுதி வச்சிருக்க போறாரு

  என்ற வசனம். அதே மாதிரி அந்த கிழவி.

  ”ஏலே சிங்கப்பூர்ருக்கா போறா இங்கதானே” என்று கேட்கும் குசும்புக்கிழவியும் நமக்கு தெரிந்தவர்தான்

  அற்புதமான படம் ஜெயமோகன். சினிமாவில் நீங்கள் இதுவரை செய்த எல்லா வேலைகலும் ஒன்றுக்கொன்று மேலே சென்று கொண்டுதான் இருக்கிறது.

  இயக்குநர் நுட்பங்களை வாரி இறைத்துக்கொன்டே போகிறார்

  1 முஸ்லீம் பெண் பர்தாவுக்கு மேலே பட்டுப்புடவையை வைத்து பார்ப்பது

  2 வாயிலே இருந்து நிப்பிளை எடுத்ததுமே வையும் குழந்தை

  3 மொட்டைகளை பார்த்ததும் ஏடுகொண்டலவாடா சரி என்று மாரி கத்துவது

  4 அண்ணன் வேலைசெய்யும் கடையின் பையை தங்கச்சி அப்பா படத்துக்கு சமமாக மாட்டுவது

  5 அண்ணாச்சியின் செல்போனில் உள்ள ரிங் டோன்

  6 அதேசமயம் சோபியா வைத்திருக்கும் ரிங்டோன்

  7 அண்ணாச்சி செய்யும் பூசை அவரை வாழ்த்த வந்திருக்கும் சாமியார்

  8 சோற்றுக்கான அத்தனை அடிதடிகளுக்கு நடுவிலேயும் நம்மூராலே என்று கேட்டதும் சௌந்தர பாண்டி முகம் மலர்வது

  9 கக்கூஸ் கழுவியே முன்னேற ஆரம்பிக்கும் அந்த ஆசாமி

  10 மாமூல் போலீஸ் , குப்பை பொறுக்கும் பாய், குள்ளன், சின்னம்மா, தெருவிலே காலையிலே குவியும் குப்பை. அந்தக்குப்பைக்குள் தூங்கும் மனுஷர்கள்

  11 கர்கள் ஓடும் சாலையின் விளிம்புவரை வரும் கைக்குழந்தை. அதை அறியாமல் உறங்கும் அம்மா

  12 தங்கச்சிக்காரியின் எஜமானியம்மாவின் கதாபாத்திரம்.

  என்று சொல்லிக்கொன்டே போகலாம்.

  மனமார்ந்த வாழ்த்துக்கள்

Comments have been disabled.