காந்தி கோட்ஸே- ஐயங்கள்

Gandhi_B_17032013

இந்தக் கட்டுரை எனக்குப் பல சந்தேககங்களையே கொடுத்தது.

1.பிஜேபியில் காந்தியவாதிகள் இருக்கிறார்கள் எனில், இதுவரை அந்தக் கட்சியின் ஆட்சியில் காந்திய வாதத் திட்டங்கள் (மக்களின் நன்மைக்காக) என்ன செயல் படுத்தப் பட்டுள்ளன?

2. ஒருவரைப் பற்றிய அவதூறும், அவரைக் கொலை செய்வதும் ஒரே அளவிலான குற்றம் தானா?

3. பல பத்தாண்டுகளாக, காந்தியைத் தனது தினசரி பிரார்த்தனையில் வழிபடும் ஆர்.எஸ்.எஸ் தலைமை ஏன் இந்தக் கோட்ஸே திட்டத்தைப் பற்றிப் பேசாமல் மௌனமாக இருக்கிறது.

4. காந்தியைத் தேசப் பிதாவாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று அத்வானி சொன்ன போது, ஆர்.எஸ்.எஸ் என்ன செய்தது?

5. “இந்தியாவின் ஜனநாயக அரசியலுக்கு காந்தியே அடிப்படை. இங்குள்ள தலித்துக்களுக்கும் சிறுபான்மையினருக்கும் அவரது இலட்சியவாதமே காவல்.” – ஜெ யின் இந்தக் கூற்றுப் படி, கொஞ்சமேனும் அதைக் கடைபிடிக்கும் கருத்தியல் தரப்பு / அரசியல் தரப்பு எது?

6. இந்தப் பாயிண்ட் – சிவராமனின் கடிதத்தில் இருந்து – தமிழகத்தில் முற்போக்கு / முஸ்லீம் அடிப்படைவாதம் இடையேயான உறவை நாமறிவோம் – அது உ.பியிலும் அவ்வாறேதான் என்ச் சித்திரிக்கிறது – ஆஸம்கான் போன்றோர், முற்போக்கு மேடைகளில் பேசுவ்தாக – அது பற்றிய தரவுகள் இருந்தால், புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். உ.பி / ஹரியானா மாநிலங்களில் முற்போக்கு எனக் கிண்டலடிக்கப்படும் அரசியல் தரப்புகள் எவை?

பாலா

images (1)

பாலாவின் கேள்விகள் முக்கியமானவைதான். என் பதில்கள் கீழே.

1.1980ல் ஜனதாகட்சி துண்டு துண்டாகச் சிதறியதில் வெளிவந்த பழைய ஜனசங்ககட்சியினர், வாஜ்பாயி தலைமையில்,gandhian socialism என்ற கொள்கைப் பிரகடனம் செய்து 1984ல் அக்கொள்கையின் அடிப்படையில் தேர்தலைச் சந்தித்து 2 இடங்களையே பெற்றனர். அதைத்தான் ஜெ குறிப்பிடுகிறார்.ஆனால் அந்தத் தோல்விக்குப் பின் பா.ஜ.க.மீண்டும் தனது ஜனசங்கப் பாதைக்கு அத்வானி தலைமையில் திரும்பி,அயோத்தி பிரச்னையை அடிப்படையாகக் கொண்டு வளர்ந்தது வரலாறு. 1989 தேர்தலில் 88 இடங்கள் பிடித்தது.காந்திய சோஷலிசத்தை பரீட்சித்துப் பார்க்க அதற்கு வாய்ப்பு அமையவில்லை. அதில் அவர்கள் எவ்வளவு தூரம் தீவிரமாக இருந்தார்கள் என்பதும் அறிய முடியவில்லை. அந்தக் கொள்கைக்கு இன்னொரு ஆதரவாளர் நானாஜி தேஷ்முக்.மற்றவர்களின் ஈடுபாடு குறித்து எதுவும் தெரியவில்லை. அநேகமாக அவ்வளவாக யாரும் அக்கறை காட்டவில்லை என்றே நினைக்கிறேன்.

2.அவதூறும் கொலையும் நிச்சயமாக ஒன்றல்லதான்.கோட்சேவின் செயலை யாராலும் நியாயப் படுத்த முடியாது.Physical elimination என்பதை தவிர்த்துப் பார்த்தால் அன்றைய சூழ்நிலையில் காந்தி இந்திய அரசியலில் நேரு படேல் உள்பட பலருக்கும் ஒரு உறுத்தலாகவே மாறிக்கொண்டிருந்தார் என்பதை கவனிக்கலாம். குறிப்பாக அகதிகள் பிரச்னை,மற்றும் பாகிஸ்தானுக்குக் கொடுக்க வேண்டிய 55 கோடி ரூபாய் பிரச்னை. இந்த 55 கொடியை கொடுக்க படேலும் நேருவும் விரும்பவில்லை.அது காஷ்மீரில் இந்தியாவுக்கு எதிராக பயன்படும் என்பதே அவர்களின் தரப்பு.ஆனாலும் காந்தியின் தார்மீக நிலைப்பாடு அவர்களுக்கு வேறு வழியை கொடுக்கவில்லை.அன்றிருந்த மிக (மிகை) உணர்ச்சி வயப்பட்ட நிலையில் நடந்ததே காந்தியின் கொலை. என் தாயைக் காப்பாற்றத் தந்தையை கொன்றேன் என்று கோட்சே சொன்னதாக ஒரு குறிப்புண்டு. அது எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. ஆனால் கோட்சே வழக்கை விசாரித்த நீதிபதி தீர்ப்பு வழங்குவதற்கு முன் சொன்னதை படித்திருக்கிறேன், “நல்ல வேளையாக இந்த வழக்கு பொது ஜன தீர்ப்புக்கு விடப்படவில்லை. அப்படி விடப் பட்டிருந்தால் ஒரு வேளை கோட்சேவை மக்கள் நிரபராதி என்று விட்டிருப்பார்கள்” என்று சொல்கிறார்,
இதன் ஆதாரமும் கேள்விக்குள்ளாக்கப்படலாம்.

3.கேள்வி அவ்வளவாகப் புரியவில்லை.பாலா இன்னமும் கொஞ்சம் விளக்கலாம்.மேலும் எனக்கு ஆர்.எஸ்.எஸ் தரப்பு அதிகம் தெரியாது..

4.அத்வானி அப்படி சொல்லியிருக்கிறாரா என்ன? நான் கேட்டதோ படித்ததோ இல்லை.

5.எவ்வளவு நீர்த்துப் போயிருந்தாலும் ஓரளவு காங்கிரஸ் கட்சிதான்.

6.சமாஜ்வாதிக் கட்சிதான். இந்திய அரசியலில் யார்யார் எவ்வெப்போது முற்போக்கு என்று தீர்மானிக்கும் முற்றதிகாரம் கம்யுனிஸ்ட் கட்சிகளுக்குதானே. உ.பியில் அவர்கள் எப்போதுமே முலாயம் ஆதரவாளர்கள் தானே.முலாயம் முஸ்லிம் அ டிப்படைவாத குழுக்கள் இடையே உள்ள உறவு எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

சுரேஷ் கோவை.

குழும விவாதத்தில் இருந்து

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 80
அடுத்த கட்டுரைநவீன அடிமை முறை- கடிதம் 4