சாமியாராக ஆவது என்பது அனைத்திலும் இருந்து விடுதலை அடைவது. அதன் பொருட்டு அனைத்தையும் துறந்து செல்வது. சுற்றுமுற்றும் நம்முடைய வாழ்க்கையைப் பாருங்கள். இரண்டே அறைகள் கொண்ட வீடு. சமையலறை, ஸ்டோர் அறை, பெண்டுகள் துணிமாற்றும் அறை எல்லாமே ஒன்றுதான். மிச்ச அனைத்துக்குமே கூடம். அதிலே பரணில் உலகத்தில் உள்ள மொத்த்த்தையும் அடைத்து வைத்திருக்கிறோம். யாராவது வந்தால் பழையதுணிகளையும் மற்ற தட்டுமுட்டு சாமான்களையும் அள்ளி அகற்றி துருப்பிடித்த மடக்கு நாற்காலியை விரித்து உட்காரச்சொல்ல வேண்டியிருக்கிறது. துருவேறிய பழைய டிவிஎஸ் பி·ப்டியில் தயிர்சாதமும் நார்த்தங்காய் ஊறுகாயும் எடுத்துக்கொண்டு ஆபீஸ் போகிறோம். அங்கே மேலதிகாரிகளின் லபோ திபோ. ஏன் சார், ஊரிலே அவனவன் எப்படியெல்லாம் வாழ்கிறார்கள். நாமும் பத்திரிகை சினிமாவிலே படிக்கத்தானே செய்கிறோம்? வயிறு எரியவில்லை? எப்படி நமக்கு ஒரு விடிமோட்சம்? அதற்குத்தான் சாமியார் ஆகிறது. இதெல்லாம் சம்சாரம். இதையெல்லாம் உதறி விட்டு ஒரு காவியைக்க்கட்டிக்கொண்டு கிளம்பினால் நல்ல சாமியார் வாழ்க்கை. நாற்பது அறை கொண்ட பங்களா. போக வர பென்ஸ் கார். கைகால் அமுக்கிவிட ஏ முதல் இஸட் வரையிலான ஆங்கில எழுத்துக்களில் ஆரம்பிக்கும் பெயர் கொண்ட நடிகைகள். ‘மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்’ என்று அப்பரோ வேறு யாரோவோ சும்மாவா சொன்னார்கள். துறவு என்பது வீடுபேறுக்காகத்தான் .புத்தியோடு பிழைத்தால் பங்களாபேறு கூட உண்டு. அது உங்கள் சாமர்த்தியம் அதிருஷ்டம்.
சாமியார் என்பவர் வேறு ஆள். ஆகவே அவர் வேறுமாதிரி இருக்க வேண்டும். காவியை நன்றாக பளீரென்று கட்டிக்கொள்ளலாம். தலைப்பாகை தாடி மீசை முதல் துல்லியமான மொட்டை வரை பலவகையான தோற்றங்கள் உண்டு. ஆறடிக்கூந்தல், பம்பைத்தலை ,சடாமுடி, குடுமி எது வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். இதில் எது சரிவருகிறதோ அதை தக்கவைத்கொள்ள வேண்டியதுதான். எல்லாவற்றையும் போட்டுக்குழப்புவதும் நல்ல உத்தியே. ஜீன்ஸ் பாண்டும் தலைப்பாகையும் ,வேட்டியும் லெதர் ஜாக்கெட்டும், பெர்முடாஸ¤ம் ஜிப்பாவும் என பல வகையாக முயன்று பார்க்கலாம். ஊத்துக்குளி பக்கம் ஒரு சாமியார் புடவை ஜாக்கெட் கூட அணிந்திருந்தார். எதுவுமே அணியாமல் இருக்கலாம். ஆனால் அதற்கு உண்மையிலேயே புலனடக்கம் தேவை. மனோகரா மாதிரி திமிறிக்கொண்டு எழுந்ததென்றால் வம்பு. எந்த வேடமாக இருந்தாலும் பார்ப்பதற்கு முதலில் சிரிப்பு வரவேண்டும். அதைப்பற்றி நாலுபேர் பேசவேண்டும். எதை ஜனங்கள் கேலிசெய்கிறார்களோ அதைத்தான் திரும்பத் திரும்பப் பார்ப்பார்கள். மற்றவர்களிடம் சொல்வார்கள். அப்படியே நிறையபேருக்குதெரிந்து விட்டால் பிரபலமாகிவிடுவோம். பிரபலமான பிறகு பிரபலமாக இருப்பதே பிரபலமாக ஆவதற்கான வலுவான காரணம் ஆகின்றது. அதன் பிறகு யாரும் சிரிக்க மாட்டார்கள்.
ஆசிரமம் என்பது மர்மமாக இருப்பது நல்லது. மர்மம் இல்லாத ஆசிரமங்களை ஜனங்கள் விரும்புவதில்லை. நள்ளிரவில் விளக்குகள் எரிவது, பெண்கள் வந்து செல்வது, ஜன்னல்களில் மண்டை ஓடுகள் இருப்பது, மாபெரும் காம்பவுண்டு சுவருக்குள் கட்டிடங்கள் எப்போதும் மூடியே கிடப்பது, வாசலில் கூர்க்கா முறைப்பாக இருப்பது ஆகியவை மர்மங்களை உருவாக்கக் கூடியவை. மர்மத்துக்கான காரணங்களை புலனாய்வு இதழ்களில் எழுதும் ஆந்தைகள், கழுகுகள், காக்காகள், சிக்கன் சிக்ஸ்டிபைவ்கள் உருவாக்கிக் கொள்வார்கள். அடிக்கடி தரிசனம் கொடுப்பதும் ஆகாது. போதிய ஆள் திரட்டி மகாலய அமாவாசை பின்னிரவு, அல்லது சதுர்த்தியில் விடியற்காலை போன்ற நேரங்களில் சில நிமிடங்கள் தரிசனம் அளிக்கலாம். அப்போது மர்மமாகப் பேசுவது பேசாமல் மர்மமாக இருப்பது போன்றவை உதவும்.நல்ல புகைப்படக் கலைஞர்கள் இல்லாமல் நல்ல சாமியார் இல்லை. ‘படமாடும் கோயில் ‘ என்று அதைத்தான் சொல்லியிருக்கிறார்கள். மிகச்சிறந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டு அவை தொடர்ச்சியாக பலவகைகளில் பிரசுரமாகவேண்டும். அந்தப்படங்களில் நாம் எப்படி இருக்கிறோமோ அதை மாதிரி அன்றாட வாழ்க்கையிலும் இருப்பதற்கு பயிற்சிகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
நல்ல சாமியார் உபதேசங்கள் புரிய வேண்டும். உபதேசங்களில் இருவகை உண்டு. முதல் வகை உபதேசங்களை மாத்ருபாவம் என்கிறார்கள். தாயினும் சாலப்பரிந்து இவை கூறப்படுகினான. நல்ல பிள்ளையாக இருக்க வேண்டும், தண்ணியடிக்கக் கூடாது, மாசத்துக்கு ஒரு சினிமா போதும், பெண்களை டாவடிப்பது கடலைபோடுவது பின்னால் செல்வது எல்லாம் வேண்டாம், சாப்பாட்டில் அடக்கி வாசிக்க வேண்டும், சொன்னபேச்சு கேள்டா கட்டேலே போறவனே– இன்னபிற. இவற்றின் இயல்பென்ன என்றால் இப்படி நம்மிடம் ஒருவர் சொல்வது நமக்கு பிடிக்கும். இப்படியெல்லாம் நாம் இருந்தாலும் இருந்து விடுவோம் என்று நம்பித்தானே அவர் சொல்கிறார். எவ்வளவு நல்லவர். நாம் இவற்றை கடைப்பிடிக்கப் போவதில்லை என்று அவருக்கும் தெரியும் நமக்கும் தெரியும். இருந்தாலும் நடுவே ஒரு நம்பிக்கை ஓடுகிறதல்லவா? ‘த சும்மா கெட, தொணதொணன்னுட்டு’ என்று பிரியமாகச் சொல்கிறோம். இந்தவகை சாமியார்களை நாம் மிகவும் விரும்புகிறோம். இவர்களுக்கு கொஞ்சம் வயது இருக்குமென்றால் ரொம்ப நல்லது. இன்னொரு வகை மித்ரபாவம் என்கிறார்கள். இது நண்பனின் இடத்தில் இருந்து சொல்வது. ‘சரிதான் விடுடா மச்சி நாம மட்டுமா இதெல்லாம் பண்றோம். ஊரிலே அவனவன் பன்ற அட்டூழியத்துக்கு இதெல்லாம் ஜுஜுபிடா இந்தா இத பிடி, நான்ல சொல்றென்’. இப்படிச் சொல்பவரையும் நமக்குப் பிடிக்கும். இவர் நம்மை யூத்தாக உணரச் செய்கிறார். நம்மால் எது முடியுமோ அதையே செய்யச் சொல்கிறார்.
இரு பாவங்களிலும் நாம் கட்டுரைகள் எழுதலாம். உரைகள் ஆற்றலாம். ஒவ்வொன்றுக்கும் அதற்கான வடிவம் உண்டு. முதல் வகைக்கு மரபில் இருந்து உதாரணம் தேவை. ஜடபரதன் கதை முள்ளங்கி நாயனார் சரிதம் போன்றவற்றில் இருந்து கதைகள் கண்டிப்பாக இருக்க வேண்டும். ஞானப்பேழை, ஞானச்சாவி போன்ற தலைப்புகள் இன்றியமையாதவை. இரண்டாம் வகை, கொஞ்சம் புரட்சிகரமானது. தலைப்புகளில் வித்தியாசம் தேவை. ‘முந்தானை விலகட்டும்’ ‘அடிச்சு நொறுக்கு மாமே’ போன்ற உற்சாகமூட்டும் தலைப்புகள் அவசியம். செய்தி எளிமையாக இருக்க வேண்டும். பொதுவாக ‘இப்ப இன்னான்றே?’ என்ற ஒரு தோரணை இவ்வகை கட்டுரைகளுக்கு மிகவும் இன்றியமையாதது. மப்படிப்பது முதல் கப்படிப்பது வரை எல்லாமே சரிதான், மனசு மட்டும் சுத்தமாக இருந்தால் போதும் என்று சொல்லலாம். மிச்ச அனைத்தையும் கேவலமாக வைத்துக்கொண்டால் ஒப்பு நோக்க மனசு சுத்தமாகத்தானே இருக்கும் என்பது இதற்கான விளக்கம். ஆனால் எந்த உரையாக இருந்தாலும் மிக எளிமையாக இருக்க வேண்டும். தத்துவம் கொள்கை என்று போட்டு அறுக்கக் கூடாது. ‘மனம் என்பது ஒரு மின்விசிறி மாதிரி. சுவிட்சைப் போட்டால் சுழல்கிறது. போடாவிட்டால் சும்மா இருக்கிறது.” என்பது போன்ற உவமைகள் ‘இந்த உலகம் ஞானத்தை உயர்ந்ததாக நினைக்கிறது. ஆகையால் ஞானமே உயர்ந்த விஷயம். ஆகவே ஞானத்தை நாம் உயர்ந்த விஷயமாக நினைக்க வேண்டும்’ போன்ற கருத்துக்கள் தேவையானவை. முதல்வகை உரைகளுக்கு நடுநடுவே காக்கா வடைசுட்ட கதை போல எளிமையான கதைகளைச் சொல்லலாம். அம்புலிமாமா தொடர்ந்து வாசித்தால் அவை கிடைக்கும். பிந்தைய வகை உரைகளுக்கு பிளேபாய்.
உபதேசங்கள் மட்டும் என்றால் வேலைக்காகாது. யோக சாதனைகள், தாந்த்ரீக வித்தைகள் தேவை. அதற்கு முதலில் தேவையானவை கலைச்சொற்கள். பொதுவாக இவை கொஞ்சம் அடிவயிற்றைக் கலக்குவது போல இருப்பது நல்லது. தமிழ்நாட்டில் எல்லா சம்ஸ்கிருத வார்த்தைகளும் கலக்கிகள்தான் என்பதனால் பிரச்சினை இல்லை. அல்லது சித்தவைத்தியத்தில் இருந்து கலைச்சொற்களை எடுத்துக்கொள்ளலாம். மகாகுண்டலீகரண மந்த்ரா, பஞ்சமகோராத்ர யோகா, மிருத்யுஞ்சயாத்ரகாத்ர தியானா போன்ற சொற்கள் கேட்பவர்களை கவர்வதுடன் அவர்களும் மற்றவர்களிடம் கம்பீரமாகச் சொல்லிக்கொள்ள பிடித்தமானதாக இருக்கும். காயகல்பதருயோகம், சிட்டுக்குருவிமந்திரம் போன்றவையும் பயனளிக்கும் சொற்களே. இந்தமாதிரி யோகம், தியானம் சார்ந்த விஷயங்களில் மேலும் சில விஷயங்கள் தேவை. முதல் வகை மந்திரங்கள். அவற்றைச் சொல்லும்போது சுற்றியிருப்பவர்கள் பீதி கொள்ளும்போது சொல்பவர் அடையும் உவகையில் அவருக்கான ஞானம் உறைந்திருக்கிறது. மந்திரங்களை தமிழ்நாக்கு சரியாகச் சொல்லாது என்பதில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதே முத்ரா. இது விதவிதமாக கைகளை வைத்துக்கொள்வது. மூக்குப்பொடி சிமிட்டா முதல் சட்டைப்பித்தான் அவிழ்ப்பது வரை விதவிதமான முத்திரைகள் நம் அன்றாட வாழ்க்கையில் நம்மால் கடைப்பிடிக்கப்படுகின்றன அல்லவா? இவற்றைச் செய்யும்போது ”அப்பா மூத்ரயோகா செஞ்சுட்டிருக்கார்ல. அங்க போகப்பிடாது” என்று நம் மனைவிகள் ஜாக்ரதையாகிறார்கள். அவர்கள் நம் கட்டுக்குள் நிற்காத தருணங்களில்கூட இந்த முத்திரைகளை திறம்பட பயன்படுத்தலாம்.
பொதுவாக யோகிகளுக்கு ஞானதிருஷ்டி உண்டு. முக்காலமும் அவர்களுக்கு தெரியும். போலி வாக்காளர் போல ஒரேசமயம் அவர்கள் பல இடங்களில் இருக்கமுடியும். அவர்களிடமிருந்து நம்முடைய வங்கி இருப்பு உட்பட எதையுமே நாம் மறைக்க முடியாது. இந்த ஞானதிருஷ்டி என்பது மெட்டல் டிடெக்டருக்கு நேர் எதிரானது. அதாவது ஒரு மெட்டல் டிடெக்டரிடம் இருந்து எதையெல்லாம் நீங்கள் மறைக்க முடியுமோ அதையெல்லாம் ஞான திருஷ்டி காட்டிக்கொடுத்துவிடும். ஆகவே ஒரு மெட்டல் டிடெக்டரில் எவையெல்லாம் சிக்குமோ அவை ஞானதிருஷ்டிக்கு தெரியாது, உதாரணம் ரகசியக் காமிராக்கள். ஞானதிருஷ்டி யோகம் மூலம் கூர்மை அடைகிறது. யோகம் என்பது யோகமிருந்தால் கிடைப்பது என்பதுடன் கூடுவது என்றும் சம்ஸ்கிருத அர்த்தம் உடையது. கூடும்போது காமிராக்களை என்ன செய்வதென்பது சாமியார்களுக்கு சிக்கலான விஷயம்தான். இந்தச் சிக்கலைச் சமாளித்த ஒரே சாமியார் ஓஷோ தான், அவரே காமிரா வைத்து எடுத்து வெளியிட்டார். வாழ்க்கை வரலாற்றில் இருந்து தப்புவதற்கு ஒரே வழி சுயசரிதை எழுதுவதுதான் என்று அவர் சொல்லியிருக்கிறார்.
சாமியார்கள் அறிவுஜீவிகளை வளர்ப்பது நல்லது. அவர்கள் சிறந்த பிரச்சார பீரங்கிகள். தங்களை வளர்க்க சாமியார்களை வளர்க்கும் கலை அவர்களுக்கு தெரியும். இதழாளர்களும் தேவை. சாமியாருக்குரிய உரைகளை எழுதவும் அவற்றை புத்தகமாக ஆக்கவும் இவர்கள் உதவுகிறார்கள். மேலும் எசகு பிசகாக மாட்டிக்கொள்ளும்போது ”பார்த்தீர்களா யோகாசனத்தின் சக்தியை, எப்படி விசுக் என்று எழுந்து அமர்கிறார்” என்ற தோதில் விளக்கமும் இவர்களால் அளிக்க முடியும். தந்திரமாகச் செய்யப்படும் விஷயங்கள்தான் தந்த்ரா என்று இவர்கள் விளக்கினால் பொதுமக்கள் ஏற்றுக்கொண்டுதானே ஆகவேண்டும்? இது தூந்த்ராவில் இருந்து வந்தது, அங்கெல்லாம் பனிக்கட்டிக்குள் ஆணும்பெண்ணும் நிர்வாணமாக கட்டிப்பிடித்து தூங்குவார்கள் என்றும் விளக்கலாம். அறிவுஜீவிகளுக்குச் செலவிடும் பணம் எப்போதுமே நஷ்டமாவதில்லை. சாமி இருந்தாலும் ஆயிரம் பொன் தலைமறைவானாலும் ஆயிரம்பொன் என இவர்கள் ஙப்போல் வளையும் தன்மை கொண்டவர்கள் என்பார்கள் வரலாற்றாசிரியர்கள்.
சாமியார்கள் அற்புதங்களைச் செய்தாகவேண்டும். காலையில் சுமுகமாக வெளிக்குப்போவதே ஓர் அற்புதம் என்று எண்ணும் நடுத்தர மக்களுக்கு பொதுவாக அற்புதங்களை நம்பும் ஆற்றல் அதிகம். கையில் விபூதி எடுப்பது நல்லது. ஆனால் தோசைக்கு மிளகாய்ப்பொடி எடுக்க நம்மால் முடியாதென்பதையும் தெளிவுபடுத்தாவிட்டால் நமக்கு எப்போதும் வெறும் தோசையே கிடைக்கும் அபாயமுண்டு. ஹீலிங் என்றால் நோய்களைக் குணப்படுத்துவது. பொதுவாக நடுத்தர வர்க்கம் நாலுபேர் சொல்வதை மறுக்கும் திராணி இல்லாதது. எல்லாரும் பார்க்கும் சினிமாவை பார்த்து, எல்லாரும் போகும் கோயிலுக்குப் போய், எல்லாரும் ஓட்டுபோடும் கட்சிக்கு ஓட்டுபோட்டு வாழ்வது ஆகவே நாலுபேர் கூடி ‘பேசப்பிடாது எல்லாம் சரியாப்போச்சு, போ’ என்று சொன்னால் ‘சும்மாவா சொல்வாங்க…சரியாத்தான் போயிருக்கும்.எதுக்கு வம்பு’ என்று ‘ஆமுங், நஸ்மாலுமே சரியாய்ப் போச்சுங்’ என்பார்கள். இதேபோல ஒரே சமயம் இரண்டு இடங்களில் இருப்பது ஒரே சமயம் இரண்டு நாற்காலிகளில் அமர்வது ஒரேசமயம் இரண்டு பெண்களோடு இருப்பது போன்ற பல அற்புதங்களைச் செய்யலாம். கூடுவிட்டு கூடு பாய்வது இதன் உச்சம். எடுத்ததற்கெல்லாம் முழுசாக ஏன் பாயவேண்டும் என்று ஒரு சிறு பகுதியை மட்டுமே பாயவும் வைக்கலாம், காமிராக்கள் இல்லாத போது.
சாமியார்களின் வெற்றி என்பது வேறுசாமியார்களை உருவாக்குவதில்தான் உள்ளது. அவர்கள் கொஞ்சம் கம்மியான வேறு சாமியார்களை உருவாக்குகிறார்கள். அவர்கள் இன்னும் கொஞ்சம் மாற்றுக்குறைவான சாமியார்களை உருவாக்குகிறார்கள். கடைசியில் அடித்தளத்தில் சாமியாரா என்ற சந்தேகத்திற்கு இடமளிக்கும் மனிதர்களும் சாமியாராக இருக்கவாய்ப்பில்லாமல் இல்லையோ என்ற சந்தேகத்தை உருவாக்க வாய்ப்புள்ள மனிதர்களும் உருவாகிறார்கள். இவர்களால் ஆன ஒரு பெரிய சாமியாரமைப்புக்கு நாம் சாமியாராகிவிடலாம். இதில் உள்ள முக்கியமான சவாலே எவரும் நம்மைப்போல முழுச்சாமியார் ஆகி நமக்கே காமிரா வைக்கும் அபாயம் ஏற்படாமல் தடுப்பதுதான். லட்சக்கணக்கானோர் ஒன்றாம் வகுப்பில் நுழைய ஒருவருமே பிளஸ்டூ பாஸாமாகமல் இருக்கும் ஒரு பள்ளிக்கூடத்தை நடத்துவது போன்றது இது. சாமியார்களை சாமியார்கள் என்று அங்கீகரிக்கும் தகுதி சம்சாரிகளுக்கு உள்ளது. ஆகவே சம்சாரிகளை சாமியார்கள் அங்கீகரிக்க வேண்டும் என்று இல்லை. ஆகவே சாமியார்கள் ஜூரிகளை கவரும் குற்றவாளி போல சம்சாரிகளிடம் நடந்துகொள்ள வேண்டும். குற்றவாளிகளே ஜூரிகளாக இருக்கும்படி பார்த்துக்கொள்வது மிக நன்று.
சாமியார்களில் நல்ல சாமியார்கள் கெட்ட சாமியார்கள் என இருவகை உண்டு. நல்ல சாமியார்களுக்கு எப்படி நல்ல சாமியாராக தெரிவது என்று தெரிவதில்லை. ஆகவே நாம் ”சில்லற இல்ல, போப்பா. காலங்காத்தால வந்துட்டானுக” என்று சொல்கிறோம். கெட்டசாமியார்கள் ரொம்ப நல்ல சாமியார்கள் மாதிரி தெரிவதற்காக செலவழிக்கும் பணத்தை நாமே அவர்களுக்கு கட்டணங்களாகக் கொடுக்கிறோம். அவர்கள் கெட்ட சாமியார்களாகச் செயல்படுவதற்கான செலவையும் நாமே வகிக்கிறோம் என்பதும் ஆச்சரியமில்லை. பொதுவாக நல்ல சாமியார்கள் கெட்டசாமியார்கள் என்ற பிரிவினையை தொண்ணூறு சதவீதம் கெட்டவர்களாகிய நாமேதான் தீர்மானிக்கிறோம் என்பதனால் கெட்ட சாமியார்கள் நாம் போதுமான அளவுக்கு ஏமாறும் வரை நல்ல சாமியார்களாக நமக்கு தெரிகிறார்கள்.”ஏமிரா, வச்சுட்டியே காமிரா’ என்ற பிரபல பஞ்ச் டயலாக்கை நினைவுகூர்க.
பிறர் தூங்கும்போது விழித்திருப்பவர்கள் இருவகை யோகிகள், திருடர்கள். யோகிகளை நாம் திருடர்களுடன் சேர்த்து சிலுவைகளில் அறைந்து வழிபடுகிறோம். அப்படியானால் திருடர்களை யோகிகளாக வணங்குவதுதானே நியாயம்?
மறுபிரசுரம் – முதல்பிரசுரம் மார்ச் 2010