‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 81

பகுதி பதினாறு : மாயக்கிளிகள் – 1

சிறிய குடிலுக்குள் நான்கு சப்பட்டைக் கற்களால் மூடப்பட்டு எரிந்துகொண்டிருந்த மீன்நெய் விளக்கை எடுத்து அதைத் தூண்டி சுடரெழுப்பி கையில் எடுத்துக்கொண்டு குந்தி வெளியே சென்றாள். குடிலை ஒட்டி தற்காலிகமாக கோரைப்புல் தட்டிகளைக்கொண்டு கூரையிட்டு மரப்பட்டைகளால் சுவரமைத்து கட்டப்பட்டிருந்த சாய்ப்புக் கொட்டகைக்குள் நுழைந்து தரையில் போடப்பட்டிருந்த மரப்பலகைகள் மேல் துயின்றுகொண்டிருந்த மைந்தர்களை நோக்கியபடி சிலகணங்கள் நின்றாள்.

அர்ஜுனன் எழுந்து “விடிந்துவிட்டதா அன்னையே?” என்றான். “ஆம்” என்றாள் குந்தி. அவன் செவிகள் துயில்வதில்லை. காலடியோசையிலேயே அவளை அறிந்திருந்தான். அர்ஜுனன் எழுந்து அருகே படுத்திருந்த தருமனை மெல்லத் தொட்டு “மூத்தவரே” என்றான். தருமன் கண்விழித்து எழுந்து சிலகணங்கள் பொருளில்லாமல் குந்தியின் கைகளில் இருந்த சுடரை நோக்கியபின் “என்ன?” என்றான். “விடிந்துவிட்டது…” அவன் திரும்பி அவனருகே கிடந்த பீமனை நோக்கி “இவனை எழுப்புவதற்குள் வெயிலெழுந்துவிடுமே” என்றான்.

அர்ஜுனன் நகுலனையும் சகதேவனையும் தொட்டு எழுப்பினான். அவர்கள் எழுந்ததுமே “விடிந்துவிட்டதா?” என்றார்கள். நகுலன் ஓடிச்சென்று பீமனின் மேல் ஏறி அமர்ந்து உலுக்கி “மூத்தவரே… உணவு! மலைபோல உணவு!” என்று கூவ சகதேவன் சிரித்தான். பீமன் பேருடலை புரட்டி திரும்பிப்படுத்தான். அவன் தோள்களைத் தூக்கியதும் அக்குளில் இருந்து கரடிகளுக்குரிய வாசனை எழுந்தது. “என்ன?” என்று அவன் சலிப்புடன் கேட்டான். “வயிறு நிறைய உணவு!” என்றான் நகுலன்.

எழுந்து அமர்ந்து இடையாடையை சரியாக உடுத்துக்கொண்டு புறங்கையால் வாயைத் துடைத்து “எங்கே?” என்றான் பீமன். “இன்று பாஞ்சால இளவரசியின் மணத்தன்னேற்பு. அத்தனை பிராமணர்களுக்கும் உணவுண்டு… தாங்கள் உணவுடன் ஒரு மற்போரே செய்யமுடியும்.” பீமன் அவனை தூக்கியபடி எழுந்து சுழற்றி முதுகின்பின்னால் கொண்டுசென்று வீசி நிற்கவைக்க அவன் நகைத்தபடி “இரவு முழுக்க துயிலிலும் உண்டுகொண்டே இருந்தீர்கள் மூத்தவரே” என்றான். பீமன் “உண்ணாமல் போனவற்றால் ஆனது என் கனவு” என்றான்.

“நீ அந்த நகையைக்கொண்டு நன்றாக உண்டிருக்கலாம்” என்றான் தருமன். பீமன் புன்னகையுடன் “மரவுரியுடன் நம்மை மணமண்டபத்திற்குள் விடமாட்டார்கள்” என்றான். குந்தி “புலரி முதற்கதிரிலேயே நாம் அரண்மனைக்குள் சென்றுவிடவேண்டும் மைந்தரே. அங்கே இன்று பெருங்கூட்டம் இருக்கும் என்று சொன்னார்கள். உள்ளே செல்லமுடியாமல் போகுமென்றால் அனைத்தும் வீணாகிவிடும்” என்றாள். தருமன் “ஆம், கிளம்புவோம்” என்றான்.

கையில் அகல்சுடருடன் குந்தி நடக்க முன்னால் பீமன் செல்ல இறுதியாக அர்ஜுனன் வர அவர்கள் கங்கை நோக்கி சென்றனர். அவர்களின் நிழல்கள் வான் நோக்கி எழுந்து ஆடின. பாதையோரத்து மரங்களின் இலைத்தழைப்புகள் ஒளிவிட்டமைந்தன. உள்ளே சில பறவைகள் கலைந்து குரலெழுப்பின. ஒற்றையடிப்பாதை மேடேறியதும் நூற்றுக்கணக்கான படகுகளின் விளக்குகள் உள்ளும் புறமும் சுடர்ந்த கங்கையின் நீர்வெளி தெரியத் தொடங்கியது. செவ்வொளிகள் குருதிபோல நீருக்கு மேல் வழிந்து நெளிந்தாடின.

குந்தி “துர்வாசர் வந்திருப்பதாக சொன்னார்கள்” என்றாள். “என் குருநாதர் என அவரையே எண்ணுகிறேன். ஐந்து பாஞ்சால குலங்களில் ஒன்றாகிய துர்வாச குலத்திற்கு அவரே முதல்வர் என்றார்கள். மணமண்டபத்தில் இன்று அவர் குருபீடத்தில் அமர்ந்திருப்பார். அரண்மனைக்குச் செல்வதற்குள் அவரை சென்று சந்தித்துவிட எண்ணினேன்.” அவள் அத்தகைய பேச்சுக்களை எப்போதும் தருமனை நோக்கியே சொல்வாள் என்பதனால் பிறர் அமைதிகாக்க தருமன் சிந்தித்தபடியே சென்றான்.

“அவர் நமக்கு வழிகாட்ட முடியும் என எண்ணுகிறேன்” என்று குந்தி மீண்டும் சொன்னாள். “அன்னையே, முனிவரென்றாலும் அவர் துர்வாச குலத்தவர். தன் குலத்துக்கு மீறிய ஒன்றை சொல்லமாட்டார்” என்றான் தருமன். “ஆம், ஆனால் அவர் என்னை கைவிட்டுவிட முடியாது” என்றாள் குந்தி. “இந்த நகரிலிருந்து நாம் பாஞ்சாலியுடன் மட்டுமே மீளவேண்டும். இல்லையேல் அனைத்தும் இங்கு முடிந்துவிட்டதென்றே பொருள்.” அவள் அதை திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டிருந்தமையால் அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை.

“அவையில் தோற்றால் நாம் ஷத்ரியரின் ஏளனத்துக்கு ஆளாவோம். பாஞ்சாலியை துரியோதனன் மணந்தால் அதன்பின் அவன் அஸ்தினபுரியின் மணிமுடிக்குரியவனாக ஆவதை நம்மால் தடுக்க முடியாது. நாம் உயிருடனிருப்பது தெரிந்த பின்னர் இங்கு எங்கும் நாம் வாழமுடியாது. யாதவபூமிக்கு செல்லவேண்டியதுதான்.” அர்ஜுனன் “அஞ்சவேண்டாம் அன்னையே, இன்று நாம் வெல்வோம்” என்றான்.

“யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என உசாவியறிந்தேன்” என்றான் தருமன். ”மகதத்தின் ஜராசந்தன் வந்திருக்கிறான். மச்சநாட்டு கீசகன் வந்திருக்கிறான். நூற்றெட்டு ஷத்ரிய மன்னர்களும் வந்திருக்கிறார்கள். இளையோனின் கதாவல்லமை எப்படி இருந்தாலும் அவனால் ஜராசந்தனையும் கீசகனையும் ஒரே சமயம் எதிர்கொள்ளமுடியுமா என்று பார்க்கவேண்டும்.” பீமன் “நான் அவர்களை கொல்வேன்” என்றான்.

அதை கேளாதவன்போல தருமன் “கர்ணனும் துரியோதனனும் நேற்று துர்க்கை ஆலயத்திலிருந்து இளவரசியைத் தொடர்ந்து லட்சுமி ஆலயம் வரை வந்தார்கள் என்கிறான் பார்த்தன். அவர்களின் இலக்கு தெளிவானது. கர்ணன் தென்னகத்தில் பரசுராமரின் மாணவனாக இருந்தான் என்றும் இன்று பாரதவர்ஷத்தின் நிகரற்ற வில்லாளி அவனே என்றும் சொல்கிறார்கள் சூதர்கள்” என்றான். அவர்கள் ஒன்றும் சொல்லாதபோது அவனே தொடர்ந்தான் “நாம் எளிதாக எண்ணிக்கொள்ள வேண்டாம் என்றே சொல்ல வருகிறேன்.”

குந்தி கங்கைக்கரையில் விளக்குடன் அமர்ந்துகொண்டாள். அவர்கள் காலைக்கடன்களை முடித்து நீரிலிறங்கி நீராடிவந்தனர். அதன் பின் அவள் இறங்கி நீராடி கரையேறினாள். திரும்பும்போது குந்தி ”நாம் அஞ்சவேண்டியது முதன்மையாக யாதவ கிருஷ்ணனைத்தான்” என்றாள். தருமன் திரும்பி “அவன் வந்திருக்கிறான் என்றார்கள்” என்றான். குந்தி ”இந்த மணத்தன்னேற்பில் வில்லுடன் அவன் எழுந்தால் அவன் வெல்வதைப்பற்றிய ஐயமே இல்லை” என்றாள். “உண்மை” என்றான் தருமன். பிறர் ஒன்றும் சொல்லவில்லை.

குந்தி “அவனுக்கு பேரரசு ஒன்றை அமைக்கும் எண்ணமிருக்கிறது. அதற்கு பாஞ்சாலமகளை மணப்பதைப்போல சிறந்த வழி என ஏதுமில்லை. அவன் அவளை வென்றால் இன்று இந்த மணமேடையிலேயே பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தி என முடிசூட்டிக்கொள்ளலாம்” என்றாள். தருமன் “ஆம், நான் நேற்றெல்லாம் அதைப்பற்றியே எண்ணிக்கொண்டிருந்தேன். நேற்று இளவரசியை அண்மையில் கண்டேன். கிருஷ்ணை. இப்புவியில் எவருக்கேனும் அவள் முற்றிலும் பொருத்தமானவள் என்றால் அவனுக்குத்தான். அவன் பெண்ணாகி வந்ததுபோல் இருக்கிறாள்” என்றான்.

“அவனை நேரில் கண்டு மன்றாடினால் என்ன என்று எண்ணினேன். ஆனால் சகுனியும் கணிகரும் வந்திருக்கிறார்கள் என்றனர் ஒற்றர். அவனைச்சுற்றி எங்கும் ஒற்றர்கள் இருப்பார்கள்.” பீமன் “அன்னையே, நாம் இங்கு வந்ததுமுதலே நம்மை இவ்வரசின் ஒற்றர்கள் அறிவார்கள் என எனக்குத் தோன்றுகிறது” என்றான். குந்தி “ஆம், அறியட்டும் என்றே நானும் எண்ணினேன். விருகோதரா, நீ எங்கும் ஒளிய இயலாது. நாம் வந்துள்ளோம் என்றும் மணமண்டபத்தில் அர்ஜுனன் எழுவான் என்றும் துருபதன் அறிவது நல்லது. அது உங்களுக்குப் பாதுகாப்பு” என்றாள்.

அர்ஜுனன் திடமான குரலில் “நான் வந்திருப்பதை யாதவன் அறிவான். ஆகவே அவன் மணமண்டபத்தில் எழமாட்டான்” என்றான். குந்தி பரபரப்புடன் “நீ அவனிடம் பேசினாயா?” என்றாள். “இல்லை. நான் ஆலயத்தைவிட்டு வெளியே வந்தபோது என்னை அவன் தேரில் கடந்துசென்றான்” என்றான் அர்ஜுனன். “அவன் உன்னைப் பார்த்தானா?” என்று கேட்டு குந்தி நின்றுவிட்டாள். “அன்னையே, அவன் எதையும் பார்க்காமல் கடந்துசெல்பவன் அல்ல.” சிலகணங்கள் நின்றபின் குந்தி முகம் மலர்ந்து “அதுபோதும்…” என்றாள்.

அவளுடைய நம்பிக்கை அவர்களனைவரிடமும் பரவியது. குடிலுக்குத் திரும்பி பீமன் முந்தையநாள் வாங்கி வந்திருந்த பட்டாடைகளை அணிந்துகொண்டிருந்தபோது நகுலன் “புத்தம்புதிய கலிங்கப்பட்டு… பட்டாடை இடையில் நிற்குமா என்றே ஐயம் எழுகிறது” என்றான். “நிற்காவிட்டாலும் நல்லதுதான். வைதிகர்களின் பட்டாடைகள் இடையில் நிற்பதில்லை” என்றான் சகதேவன். “நாம் உணவருந்திவிட்டுச் செல்வதே சிறப்பு என நினைக்கிறேன்… மணமேடையில் அமர்ந்தபின் உணவுக்காக எழ முடியாது” என்று பீமன் சொல்ல “அதை நீ நினைவுபடுத்தவில்லை என்றால் வியந்திருப்பேன்” என்றான் தருமன். அந்த எளிய கேலிகளுக்கே அவர்கள் உரக்க நகைத்துக்கொண்டனர்.

குந்தி வெண்ணிற ஆடை அணிந்து வந்து கிழக்கு நோக்கி நின்றாள். ஐந்து மைந்தர்களும் அவள் பாதங்களைத் தொட்டு வணங்கினர். “வென்று வருக!” என அவள் வாழ்த்தினாள். தருமன் பெருமூச்சுடன் திரும்பி வானத்தை நோக்கியபின் நடந்தான். தம்பியர் பின் தொடர்வதை குடில்முன்னால் நின்று குந்தி நோக்கிக் கொண்டிருந்தாள்.

காம்பில்யத்தில் கங்கைக்கரை ஓரமாக இருந்த எளிய வைதிகர்களின் சேரியில் இருந்து கிளம்பி சிறிய மண்பாதை வழியாக அவர்கள் மையச்சாலைக்கு வந்தபோது வெண்ணிறச் சுவர்கள் துலங்க மாளிகைகள் இருளை விலக்கி எழுந்து வந்தன. வண்ணங்கள் துலங்கத் தொடங்கின. மாளிகைகளின் குவைமுகடுகளுக்கு அப்பால் வானில் மேகங்கள் ஒவ்வொன்றாக பற்றிக்கொண்டன.

வியர்வை வீச்சம் எழ நாலைந்து குதிரைகளில் இரவெல்லாம் காவல் காத்து முறை மாறி மீண்ட காவலர்கள் கடந்துசென்றனர். குளம்பொலிகள் மாளிகைச்சுவர்களில் எதிரொலித்தன. மெல்லமெல்ல நகரம் விழித்தெழத்தொடங்கியது. அத்தனை சந்துகளில் இருந்தும் புற்றிலிருந்து ஈசல்கள் போல புத்தாடை அணிந்த மக்கள்திரள் எழுந்து வந்து பெருஞ்சாலையை நிறைத்தது. சாலை சந்தைமுனையைக் கடந்து மையநகருக்குள் சென்றபோது தோளோடு தோள்முட்டாமல் நடக்கவே முடியாமலாகியது.

களிகொண்ட மக்களின் பேச்சொலிகள் கலந்து ஒற்றை பெருமுழக்கமாக ஆகி நகரை மூடியிருந்தது. கங்கையில் நீராட்டப்பட்ட பன்னிரு யானைகள் துதிக்கைகளில் சங்கிலிகளை எடுத்துக்கொண்டு இருள்குவைகள் என சென்றன. சாலையின் முனையில் முதல் யானை நிற்க பிற யானைகள் ஒன்றன் மேல் ஒன்று முட்டித் திரள ஒரு யானை சற்று விலகி பக்கவாட்டில் செல்ல துதிக்கை நீட்டியது. அருகே சென்ற பாகன் அதை பைசாசிக மொழியில் அதட்ட அது துதிக்கையை திரும்ப எடுத்துக்கொண்டு மீண்டும் வரிசையில் இணைந்துகொண்டது.

சிலந்தி வலைபோல குறுக்காக சிறிய சாலைகளால் இணைக்கப்பட்ட எட்டு அரசப்பெருஞ்சாலைகளின் நடுவே இருந்தது அரண்மனைக்கோட்டம். கிழக்குப்பெருஞ்சாலையில் சகடங்கள் ஒலிக்க , கொடிகள் இளங்காற்றில் பறக்க, பொன்மின்னும் அணித்தேர்கள் மட்டும் சென்றன. அவர்கள் அதை அடைந்தபோது காவல் முகப்பில் இருந்த காவல்மாடத்தின் முன்னால் நின்ற வேலேந்திய காவலன் பணிந்து “இது அரசரதங்களுக்கு மட்டுமே உரிய சாலை உத்தமரே. வைதிகர்களுக்கும் பரத்தையருக்கும் வடக்குச்சாலையும் பெருவணிகர்களுக்கும் பெருங்குடித்தலைவர்களுக்கும் இசைச்சூதர்களுக்கும் மேற்குச்சாலையும் பிறருக்கு தெற்குச்சாலையும் ஒதுக்கப்பட்டுள்ளன” என்றான்.

அவர்கள் அரண்மனைக்கோட்டத்தை சுற்றிக்கொண்டு சென்றார்கள். அவ்வேளையில் சிறிய துணைச்சாலைகள் முழுக்க உள்ளக்கிளர்ச்சி தெரியும் முகங்களுடன் மக்கள் பேசிக்கொண்டு நின்றிருந்தனர். நூற்றுக்கணக்கான சிற்றாலயங்களில் பூசைகள் செய்யப்பட்ட மணியோசைகளும் தூபவாசமும் வந்தன. சாலைப்பூதங்களுக்கு முன்னால் ஊனுணவு படைக்கப்பட்டிருந்தது. மூதன்னையர் ஆலயங்களில் இன்கூழும் கணபதி ஆலயங்களில் அப்பங்களும் படைக்கப்பட்டிருந்தன. படைக்கப்பட்டு எடுத்த உணவை கூடிக்கூடி அமர்ந்து உண்டுகொண்டிருந்தவர்கள் விரைந்த கையசைவுகளுடன் பேசிக்கொண்டிருந்தனர்.

“அங்கே பார், வைதிகன் ஒருவன் அரக்கனை பெற்றிருக்கிறான்” என எவரோ சொல்ல வேறு எவரோ கேட்காதவண்ணம் ஏதோ சொன்னார். அடக்கப்பட்ட சிரிப்பொலிகள் எழுந்தன. “ஐவரில் ஒருவன் அரசனைப்போல் இருக்கிறான்” என்று ஒரு பெண் சொன்னாள். இன்னொருத்தி அதற்குச் சொன்ன மறுமொழி அவர்கள் அனைவரையும் வெடித்துச் சிரிக்கவைத்தது. வண்ண ஆடை அணிந்த பெண்கள் சிலர் மலர்க்கூடைகளுடன் சென்றனர். அத்தனை விழிகளும் சரிந்து வந்து அர்ஜுனனை தொட்டுச் சென்றன.

வடக்குச்சாலையில் வைதிகர்கள் மூங்கிலில் கட்டப்பட்ட பட்டு மஞ்சல்களில் வந்து காவல்கோட்ட முகப்பில் நின்றிருந்த படைவீரனிடம் தங்கள் பெயரையும் குலத்தையும் சொல்லிவிட்டு உள்ளே சென்றுகொண்டிருந்தனர். செம்பட்டு மஞ்சலில் சரிந்து கிடந்த வெண்ணிறமான முதியவர் பீமனை ஆர்வமின்றி விழிதொட்டு உடனே திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தார். போகிகளை நிறுத்தச்சொல்ல தூக்கிய கைகளுடன் திறந்த வாயும் விழித்த கண்களுமாக அவர் கடந்துசென்றார்.

மூங்கில்பல்லக்குகளில் முதிய வைதிகர் சென்றனர். ஏதோ குருகுலத்திலிருந்து வேதமாணவர்கள் மஞ்சள்நிறச் சால்வைகளை போர்த்தியபடி உரக்கப்பேசிச் சிரித்துக்கொண்டு வந்து பீமனைக் கண்டு திகைத்து ஓசையடங்கி ஒருவரை ஒருவர் தொட்டு அவனைச் சுட்டிக்காட்டி ஒருவரோடொருவர் முட்டி நின்றனர். பீமன் அவர்களில் ஒரு சிறுவனை நோக்கி புன்னகைத்தான். அவன் திகைத்து சற்றுபெரிய ஒருவனின் சால்வையைப் பற்றிக்கொண்டு பின்னடைந்தான்.

“உன் பெயர் என்ன?” என்றான் பீமன். அவன் சிறிய வெள்ளெலி போல பதைத்து பின்னடைந்து தாடையை மட்டும் நீட்டி “சுண்டு” என்றான். “காயத்ரி சொல்கிறாயா?” என்றான் பீமன். அவன் ஆமென தலையசைத்தான். “நிறைய சொல்லாதே. நான் நிறைய சொன்னதனால்தான் வீங்கி இவ்வளவு பெரிதானேன்…” என்றபின் தன் வயிற்றைத் தொட்டு “உள்ளே முழுக்க காயத்ரி நிறைந்திருக்கிறது” என்றான். சுண்டுவின் விழிகள் தெறித்துவிடுபவை போல தெரிந்தன.

முன்னால் சென்றுவிட்டிருந்த தருமன் அலுப்புடன் “மந்தா, என்ன அங்கே? வா” என்று அழைத்தான். பீமன் விழிகளை உறுத்து நோக்கிவிட்டு சென்று சேர்ந்துகொண்டான். பிற சிறுவர்கள் சென்றபின்னரும் சுண்டு அங்கேயே நின்று பீமனை நோக்கிக்கொண்டிருந்தான். பீமன் சற்று அப்பால் சென்றபின் திரும்பி அவனை நோக்கி புன்னகைசெய்தான். சுண்டு வெட்கி வளைந்தபின் தன் தோழர்களை நோக்கி ஓடினான்.

வடக்குவாயில் காவலனிடம் தருமன் “தைத்ரிய ஞானமரபில் பிங்கல குருமரபு. என் பெயர் கல்பகன். இவர் என் மாணவர்” என்றான். காவலன் பீமனை நோக்க “அவர் பால்ஹிகநாட்டைச்சேர்ந்தவர். அங்கே அனைவரும் பேருடல் கொண்டவர்கள்தான்” என்றான். இன்னொரு காவலன் உள்ளிருந்து வந்து பீமனை திகைப்புடன் நோக்க மேலும் ஒருவன் உள்ளிருந்து வந்து “ஷத்ரியர்கள் ஏன் இங்கே வருகிறார்கள்?” என்றான். “இவர்கள் பிராமணர்கள்…” என்றான் முதல் காவலன்.

அவர்கள் கடந்துசெல்லும்போது அவன் மெல்ல “நாட்டில் பிராமண உணவு பெருத்துப்போய்விட்டது” என்பது காதில் விழுந்தது. வடக்குச்சாலை நேராக அரண்மனைக்கோட்டத்தின் வடக்குப் பெருவாயிலை நோக்கி சென்றது. மரத்தாலான கோட்டைமுகப்புக்கு மேல் பெருமுரசு இளவெயிலில் மின்னிய தோல்வட்டத்துடன் அமர்ந்திருந்தது. கீழே வேல்களுடன் நின்ற காவலர்கள் எவரையும் தடுக்கவில்லை. இடையில் சிறிய கொம்பு ஒன்றை கட்டியிருந்த காவலர்தலைவன் இறங்கி வந்து பீமனை நோக்கிக் கொண்டு நின்றான். ஒருகணத்தில் அவன் விழிகள் பற்றிக்கொண்டன. பீமன் அவனை நோக்கி புன்னகைத்து விட்டு உள்ளே சென்றான்.

பித்தளைச் சக்கரங்கள் கொண்ட வண்டிகளில் வேள்விக்கான பொருட்களை வைதிகர் சிலர் தள்ளிக்கொண்டு சென்றனர். இருவர் வெண்ணிறப்பசு ஒன்றை முன்னால் தழையைக் காட்டி கூட்டிக்கொண்டு செல்ல பசு ஐயத்துடன் நின்று வால் தூக்கி சிறுநீர் கழித்தது. அரண்மனைக்கோட்டத்தின் முகப்பில் மரத்தாலான மூன்றடுக்குக் கட்டடம் ஒன்று எழுந்து நின்றது. அதன் பெரிய தூண்களில் எல்லாம் பட்டுசுற்றப்பட்டு உத்தரங்களில் பாவட்டாக்களும் கொடிகளும் தொங்கவிடப்பட்டிருந்தன. மேலே உயர்ந்த கொடிமரம் மீது பாஞ்சாலத்தின் விற்கொடி பறந்தது. அருகே சற்று சிறியதாக சத்யஜித்தின் விருச்சிகக் கொடி.

அது அமைச்சு நிலையம் என்று அங்கே தெரிந்த தலைப்பாகைகள் காட்டின. கவலையுடன் வெளியே வந்த ஒருவர் முற்றத்தில் நின்ற சிறிய தேரில் ஏறிக்கொள்ள குதிரை செருக்கடித்து தரையில் பாவப்பட்டிருந்த கருங்கல் மேல் குளம்புகளின் லாடங்கள் தாளமிட கடந்துசென்றது. உள்ளே வந்த வைதிகர்கள் முற்றத்தில் கூடி திரண்டு பக்கவாட்டில் திறந்திருந்த வாயிலை நோக்கி சென்றனர். அங்கே மரத்தாலான மேடை மேல் நின்றிருந்த சத்யஜித் அவர்களை கைகூப்பி முகமன் சொல்லி வரவேற்று உள்ளே செல்லுமாறு கோரினார்.

பீமனைக் கண்டதுமே சத்யஜித்தின் விழிகள் விரிந்தன. அவர் அருகே நின்றிருந்த காவலர்தலைவன் விழிகளும் ஒளிகொண்டன. ஆனால் எவ்வித முகமாறுபாடும் இல்லாமல் கைகுவித்து “தங்கள் வாழ்த்துக்களால் இந்த அரண்மனை நிறைக வைதிகர்களே” என்று சொல்லி வணங்கினார். தருமன் பிராமணர்களுக்குரிய முறையில் இடக்கையால் ஆசியளித்து விட்டு உள்ளே சென்றான்.

காம்பில்யத்தின் அரண்மனைத் தொகுதிகளின் வடகிழக்கே மூன்றுபக்கமும் ஏழடுக்கு அரண்மனைக் கட்டடங்களால் சூழப்பட்ட சிம்சுமாரசக்ரம் என்னும் மாபெரும் உள்முற்றம் முழுமையாகவே கூரையிடப்பட்டு பந்தலாக ஆக்கப்பட்டிருந்தது. ஏழடுக்கின் கூரைவிளிம்பில் இருந்து மூங்கில்களை ஒன்றுடன் ஒன்று இணைத்து முக்கோணங்களின் வரிசைகளாக்கி அவற்றை வளைக்கப்பட்ட மூங்கில் விற்களால் இணைத்துப்போடப்பட்டிருந்த கூரை வானம் போல மிக உயரத்தில் தெரிந்தது.

அங்கிருந்து இறங்கிய நூற்றுக்கணக்கான மெல்லிய மூங்கில்தூண்கள் அனைத்திலும் சுற்றப்பட்டிருந்த பொன்னிறமான பட்டாடைகள் அசைய அந்தப்பந்தல் பூத்த கொன்றைமரக்காடு போலிருந்தது. அதற்குள் அப்போதே பாதிக்குமேல் வைதிகர்கள் வந்து அமர்ந்துவிட்டிருந்தனர். அவர்கள் அமர்வதற்கு உயரமற்ற மரவுரி விரிக்கப்பட்ட பீடங்கள் போடப்பட்டு . பந்தலெங்கும் ஆங்காங்கே சிறிய பீதர்நாட்டு தூபச்சட்டிகள் வைக்கப்பட்டு நறுமணப்புகை எழுந்துகொண்டிருந்தது. குடிநீரும் இன்னுணவுகளும் பரிமாறும் சேவகர்கள் நீலநிற தலைப்பாகைகளுடன் ஓசையின்றி நடமாடினர்.

இடம் பிடித்தவர்கள் எழுந்து நின்று பின்னால் வருபவர்களை நோக்கி கூவி அழைத்தனர். தாங்கள் மரவுரி போட்டு இடம்பிடித்த இடங்களில் அமர்ந்திருந்தவர்களை எழும்படிச் சொல்லி கூவினர். ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டுகொண்டு சிரித்து நலம் விசாரித்தனர். அங்கே அவர்களின் குரல்களினாலான முழக்கம் எழுந்து காற்றாகி தலைக்குமேல் அலையடித்தது. பீமனைக் கண்டதும் அப்பகுதியில் உருவான அமைதியைக் கண்டு பிறர் திரும்பி நோக்கினர். ஒருவன் எழுந்து விலகி இடம் அளித்தான்.

“சற்று பின்பக்கம் அமர்ந்துகொள்வோம்…” என்றான் தருமன். “நமது முகங்கள் ஷத்ரியர்களுக்கு தெரியலாகாது. ஆனால் நாம் எழுந்து செல்வதற்கான வழியும் இருக்கவேண்டும். குடிநீர்குடமருகில் வருவதற்கான வழி உகந்தது.” அவர்கள் அமர்ந்துகொண்டதும் பீமன் தரையிலேயே கால்மடித்து அமர்ந்தான். அவன் தலை அப்போதும் பிறர் தலைகளைவிட சற்று மேலெழுந்து தெரிந்தது.

வைதிகர்களின் சபைக்கு முன்னால் பட்டுத்துணிச்சுருளாலான வேலி ஒன்று கட்டப்பட்டிருக்க அதற்கு அப்பால் அரைவட்ட வடிவமான மணமுற்றம் மலரணிசெய்யப்பட்டு காத்திருந்தது. அங்கே உயரமற்ற மணமேடையில் மூன்று அரியணைகள் இருக்க சற்று அப்பால் ஒற்றை மயிலிருக்கை ஒன்று விரிந்த நீலத்தோகையுடன் இருந்தது. அவற்றின் அருகே வேலுடன் காவலர்கள் நின்றிருந்தனர். மணமுற்றத்தில் செந்நிறத்தில் மரவுரிக் கம்பளம் விரிக்கப்பட்டு மேலே வெண்பட்டு வளைவில் இருந்து மலரணிக்கொத்துக்கள் தொங்கின. சித்திர எழினிகளும் வண்ணப்படாம்களும் சூழ்ந்த பின்பக்கத்தில் இரு அணிவாயில்களில் செவ்வண்ணத் திரைகள் காற்றில் நெளிந்தன.

மணவரங்குக்கு வலப்பக்கமாக மூன்றுநெருப்புகளும் வாழும் மூன்று எரிகுளங்கள் அமைக்கப்பட்டு அவற்றைச் சுற்றி வேள்விசெய்யும் வைதிகர் அமர்ந்திருந்தனர். அவர்களுக்குரிய நெய்யையும் சமித்துக்களையும் கொடுக்க பின்னால் உதவியாளர்கள் அமர்ந்திருந்தனர். அவர்களருகே நூற்றெட்டு பொற்குடங்களில் கங்கைநீர் மாவிலையால் மூடப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. வேள்விக்காக நடப்பட்ட பாஞ்சாலர்களின் அத்திமரக்கிளையில் மஞ்சள்பட்டு கட்டப்பட்டிருந்தது. பாஞ்சாலர்களின் வைதிககுருவான தௌம்யர் வேள்வியதிபராக அமர்ந்து அவியூட்டிக்கொண்டிருந்தார்.

மணவரங்குக்கு இடப்பக்கமாக மங்கல வாத்தியங்களுடன் சூதர்கள் அமர்ந்திருந்தனர். முழவுகளும் யாழ்களும் கிணைகளும் அவர்களின் மடியில் காத்திருந்தன. யாழேந்திய சிலர் அதன் ஆணிகளையும் திருகிகளையும் சுழற்றி சுருதி சேர்த்துக்கொண்டிருக்க சிலர் முழவுகளை மூடிய பட்டுறைகளை கழற்றினர். ஒருவர் கிணை ஒன்றின்மேல் மெல்ல விரலோட்ட அது விம்மிய ஒலி அத்தனை இரைச்சலிலும் காட்டில் எழும் சிம்மக்குரல் என தனியாக கேட்டது.

தூண்களைப் போலவே தடித்த மலர்மாலைகள் மேலிருந்து தொங்கி காற்றில் மெல்ல ஆடி நின்றன. பூவரசமலரிதழ்கள் போல மஞ்சள் பட்டை விரித்துக் கட்டி அணிமலர்களை உருவாக்கி கூரைக்குவைகளில் அமைத்திருந்தனர். சூழ்ந்திருந்த மாளிகைகளின் முகத்திண்ணைகளிலும் மேலே எழுந்த ஆறு உப்பரிகைகளிலும் அரண்மனை மகளிர் வண்ணப்பட்டாடைகள் ஒளிவிட பொன்வண்டுகள் மொய்ப்பதுபோல வந்து குழுமினர்.

மணவரங்கின் அரியணைகளுக்கு நேர் முன்னால் ஷத்ரியர்களுக்கான அரங்கில் அரைவட்ட வடிவில் நூற்றுக்கணக்கான பீடங்கள் செம்பட்டு விரிக்கப்பட்டு நிரைவகுத்திருந்தன. அவற்றின் மேல் பொன்னிறப் பட்டாலான தூக்குவிசிறி வெளியே இருந்து இழுக்கப்பட்ட சரடால் அசைந்துகொண்டிருந்தது. அங்கே தூண்களில் தொங்கிய அணித்திரைகளும் கூரையிலிருந்து இழிந்த பட்டுத்தோரணங்களும் காற்றில் அலையடித்தன.

மணவரங்குக்கு இடப்பக்கம் வணிகர்களும் குலத்தலைவர்களும் அமரும் அரங்கு பெரும்பாலும் நிறைந்துவிட்டிருந்தது. தலைப்பாகைகளின் வண்ணங்களால் அப்பகுதியே பூத்துக்குலுங்கியது. அங்கே வாயிலில் சித்ரகேது நின்று ஒவ்வொருவரையாக வரவேற்று உள்ளே அனுப்பிக்கொண்டிருந்தான். ஒவ்வொரு குலத்துக்கும் உரிய கொடிகள் அவர்கள் இருந்த இடத்துக்குமேல் பறந்தன. சிருஞ்சயர்களின் மகரக்கொடி. கிருவிகளின் இலைக்கொடி. கேசினிகளின் நண்டுக்கொடி. சோமகர்களின் பனைமரக்கொடி துர்வாசர்களின் எருதுக்கொடி. அக்கொடிகளுக்குக் கீழே போடப்பட்ட பீடங்களில் குலத்தலைவர்கள் அமர்ந்தனர். அருகே அவர்களின் குலமூத்தார் அமர்ந்துகொண்டனர்.

ஒவ்வொரு வணிகக்குழுவுக்கும் அவர்கள் விற்கும்பொருட்களின் சித்திரம் பொறித்த வெண்கொடி இருந்தது. பொன்வணிகர்களின் இலட்சுமிக்கொடி. கூலவணிகர்களின் கதிர்க்கொடி. கூறை வணிகர்களின் வண்ணத்துப்பூச்சிக் கொடி. கடல்பொருள் வணிகர்களின் சங்குக்கொடி. வைசியர், சூத்திரர் குலத்தலைவர்களும் தங்களுக்குரிய கொடிகளை கொண்டிருந்தனர். மேழிக்கொடியுடன் வேளிர்களும் மீன்கொடியுடன் மச்சர்களும் வளைதடிக்கொடியுடன் யாதவர்களும் விற்கொடியுடன் வேடர்களும் கோடரிக்கொடியுடன் காடர்களும் அமர்ந்திருந்தனர்.

மிகவிரைவிலேயே அரங்குகள் நிறைந்துகொண்டிருந்தன. பார்த்துக்கொண்டிருக்கவே வெற்றிடங்கள் முழுமையாக மறைந்து பின்பக்கம் முகங்களால் ஆன பெரிய சுவர் ஒன்று எழுந்தது. மானுடக்குரல்கள் இணைந்து இணைந்து குரலற்ற ஓசையாகி பின் முரசுமுழக்கம் போலாயின. சுற்றி நோக்கியபோது தனிமுகங்கள் மறைந்து முகங்கள் துளிகளாகி ஒட்டுமொத்தப்பெருக்காகி அலையடிப்பதுபோல் தெரிந்தது.

ஷத்ரியர் வரும் வாயிலில் துருபதன் செம்பட்டாடையும் பொற்கவசமும் கச்சையில் மணிகள் பதிக்கப்பட்ட பொன் வாளுமாக நின்றிருந்தார். அவருக்கு இருபக்கமும் அவரது மைந்தர்கள் சுரதன், உத்தமௌஜன், சத்ருஞ்ஜயன், ஜனமேஜயன், துவஜசேனன் ஆகியோர் அணியாடைகளுடன் நின்றிருந்தனர். முதலில் வந்தவன் போனநாட்டரசனாகிய சங்கன். அவனுடைய நிமித்திகன் முதலில் வந்து சங்கொலி எழுப்பி அவன் வருகையை அறிவித்தான்.

சேவகர்கள் இருவர் கொடியும் மங்கலத்தாலமும் ஏந்தி முன்னால் வர கையில் செங்கோலுடன் மணிமுடி சூடி போஜ நாட்டரசன் சுதட்சிணன் நடந்து வந்தான். அவனுக்குப்பின்னால் வெண்கொற்றக்குடையை பிடித்தபடி இருசேவகர் வர கவரிவீசியபடி மேலும் இருவர் இருபக்கத்திலும் வந்தனர். அடைப்பக்காரனும் தாலமேந்தியும் இருபக்கமும் தொடர்ந்தனர்.

ஜனமேஜயன் போஜனை அழைத்துவந்து அவனுக்கான பீடத்தில் அமர்த்தினான். செங்கோலை சேவகனிடம் அளித்துவிட்டு போஜன் அமர்ந்துகொண்டான். சேவகர்கள் குடையையும் சாமரங்களையும் எடுத்துக்கொண்டு விலகி மறுபக்கம் செல்ல, தாலமேந்தியும் அடைப்பக்காரனும் மட்டும் இருபக்கமும் நின்றுகொண்டனர். போஜன் அமர்ந்துகொண்டு கால்களை நீட்டி தாலமேந்தியிடம் இன்னீர் வாங்கி அருந்தினான். அப்போது மீண்டும் சங்கொலி எழுந்தது. வாயிலில் கலிங்கக்கொடி தெரிந்தது.

தருமன் பீமனிடம் “சென்ற பதினைந்து நாட்களாக இங்கே இனிய கலைநிகழ்ச்சிகளும் நாடகங்களும் நடந்தன என்று கேட்டேன் மந்தா. வந்து பார்க்கலாம் என எண்ணினேன். எவரேனும் என்னை அறிந்துவிடுவார்கள் என்று பார்த்தன் சொன்னதனால் தவிர்த்தேன்” என்றான். “ஆம், இங்கே வேள்விகள் நடந்துகொண்டிருப்பதாகவும் பேரூட்டு இருந்தது என்றும் என்னுடன் மடைப்பள்ளியில் இருந்த பிராமணன் சொன்னான்” என்றான் பீமன்.

முரசொலி எழுந்ததும் தருமன் திரும்பிப்பார்த்தான். மகதத்தின் துதிக்கை தூக்கிய யானை பொறிக்கப்பட்ட பொன்னிறக்கொடியுடன் கொடிச்சேவகன் உள்ளே வந்தான். நான்குபக்கமும் திரண்டிருந்த அத்தனை கூட்டமும் திரும்பி வாயிலை நோக்க பார்வைகளால் அகழ்ந்து எடுக்கப்பட்டவன் போல வெண்குடை சூடி சாமரச்சிறகுகள் இருபக்கமும் அசைய ஜராசந்தன் உள்ளே வந்தான். அவையெங்கும் வியப்பொலிகள் இணைந்த முழக்கம் எழுந்தது.

ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்

பீமன் ஜராசந்தனையே நோக்கிக்கொண்டிருப்பதை கண்ட தருமன் “பெருந்தோளன் மந்தா” என்றான். பீமன் ஆம் என தலையசைத்தான். “உனக்கு நிகரானவன் என்று கேள்விப்பட்டிருந்தேன். உன்னைவிட ஆற்றல்கொண்டவன் என்று இப்போது தோன்றுகிறது” என்றான் தருமன் மீண்டும். பீமன் மறுத்துரைக்கவேண்டுமென அவன் எதிர்பார்த்தான். ஆனால் பீமன் “ஆம் மூத்தவரே, அவரது தோள்கள் என்னிலும் பெரியவை” என்றான்.

செங்கழுகின் இறகுபோன்ற தலைமுடியுடன் செம்மண்நிற உடலுடன் ஜராசந்தன் சென்று தனக்குரிய பீடத்தில் அமர்ந்துகொண்டான். சேவகன் நீட்டிய பானத்தை மறுத்துவிட்டு அங்கே கூடியிருந்த கூட்டத்தை தன் விழிகளால் துழாவினான். “உன்னைத்தான் தேடுகிறான் மந்தா” என்றான் தருமன். பீமன் புன்னகைத்து “ஆம்…” என்றான்.

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

மகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக

வெண்முரசு வாசகர் விவாதக்குழுமம்

முந்தைய கட்டுரைசென்னையில் சந்திப்பு…
அடுத்த கட்டுரைசென்னையில் பூமணி விழா