கோட்ஸே -கடிதம்

ஜெ

கோட்ஸே வீரவழிபாடு கட்டுரை வாசித்தேன். முக்கியமாகச் சொல்லவேண்டிய ஒன்று, கோட்ஸேக்கு சிலைவைப்பதாக அறிவித்தபோது பரவலாக இளையதலைமுறையில் இருந்து எதிர்ப்போ அதிர்ச்சியோ வரவில்லை என்பதுதான். அதை இந்துத்துவத் தரப்பே எதிர்பார்க்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் பரவலாக ஒரு தயக்கத்துடன் கூடிய ஆதரவுதான் காணக்கிடைக்கிறது.

நான் இருப்பது ஹரியானாவில். இங்கே பொதுவாகவே வைத்தால் என்ன என்ற எண்ணம்தான் இளைஞர்கள் நடுவே உள்ளது என்று தோன்றுகிறது கோட்சேக்கு சிலை வைப்பதை எதிர்ப்பவர்கள் இந்துக்களின் எதிரிகள் மட்டும்தான் என்று பலர் சொல்கிறார்கள். அதற்கு ஏற்ப அப்பட்டமாக தாலிபானிஸத்தை ஆதரிக்கும் குழுக்கள்தான் கோட்ஸேக்கு சிலை வைப்பதையும் எதிர்க்கிறார்கள். முற்போக்கு சிந்தனையாளர்களும் அவர்களுடன் சேர்ந்துகொண்டு ஒரே மேடையில் நின்று பேசுகிறார்கள். அசம்கான் போன்றவர்களை இங்கே இஸ்லாமிய தாலிபானிஸ ரவுடிகள் என்றுதான் இந்துக்கள் நினைக்கிறார்கள். அவர் கோட்ஸேக்குச் சிலைவைப்பதை பகடி செய்து பேசியதுமே ஏன் வைத்தால் என்ன என்றுதான் பலருக்கும் தோன்றுகிறது.

காந்தி இஸ்லாமியர்களுடன் சமரசம் செய்துகொண்டு நாட்டைக் காட்டிக்கொடுத்தவர் என்ற எண்ணம் வலுவாகவே ஊன்றப்பட்டிருப்பதனால் இந்த மனநிலை உருவாகிவந்திருக்கிறது. பாரதியஜனதாக் கட்சி காந்தியை அவர்களின் முன்னோடிகளிலொருவராகச் சொல்லிவந்தது. ஆனால் அவர்களும் பேசாமலிருக்க காரணம் மக்களிடையே உள்ள ஆதரவுதான். ஆனால் காங்கிரஸும்கூட பெரிய எதிர்ப்பைச் செலுத்தாமல் அமைதியாக இருக்கிறது. காரணம் மக்களிடையே கோட்ஸே சிலைக்கு உருவாகி வந்திருக்கும் ஆதரவு. ஆழம் தெரியாமல் சொல்லவேண்டாம் என நினைக்கிறார்கள் என தோன்றுகிறது.

யோசித்துப்பார்த்தால் இது ஏன் என்று தெரியும். கடந்தகாலத்தில் இங்கே இடதுசாரிகள் செய்த தப்புதான். மட்டையடியாக பாரதியஜனதாவை எதிர்ப்பதற்காக இந்துப்பண்பாடு சார்ந்த எல்லாவற்றையுமே எதிர்த்தார்கள். கொச்சைப்படுத்தி கெக்கலி கொட்டினார்கள். சாவார்க்கர் போன்ற ஒரு தேசபக்தரின் சிலையை வைக்க எதிர்ப்பு தெரிவித்து நாக்கில் நரம்பில்லாமல் பேசினார்கள். இப்போது பண்டிட் மதன்மோகன் மாலவியாவைப்பற்றி ஆதாரமில்லாமல் அவதூறுசெய்து ஏளனம் செய்கிறார்கள். மறுபக்கம் இதைத்தான் இந்துத்துவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் சாவார்க்கர் மாளவியா வரிசையிலே கோட்ஸேவையும் கொண்டு சென்று வைக்கிறார்கள். பார்த்தீர்களா நாங்கள் முன்வைத்த தேசத்தலைவர்களை எதிர்ப்பவர்கள்தான் கோட்ஸேவையும் எதிர்க்கிறார்கள் என்று சொல்ல ஆரம்பிக்கிறார்கள். மக்கள் அதை ஏற்றுக்கொள்கிறார்கள்.

இந்தியாவில் உள்ள முற்போக்கு சிந்தனையாளர்கள் சமநிலை இல்லாமல் பேசிப்பேசி மக்களை மறுபக்கம் தள்ளிவிட்டுவிட்டு அவர்கள் ஒரு சின்ன ஆக்ஷன்குரூப் மட்டுமாக ஆகிக்கொண்டிருக்கிறார்கள். தாலிபானிச இஸ்லாமிய குழுக்களுடன் சேர்ந்து பரதிய ஜனதாவை எதிர்ப்பது அவர்களுக்கு வலிமையை அளிக்கும் என்றுகூட தெரியாமலிருக்கிறார்கள்

சிவராமன்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 78
அடுத்த கட்டுரைநவீன அடிமைமுறை- கடிதம் 2