‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 80

பகுதி பதினைந்து : அன்னைவிழி – 9

மீண்டும் தேரில் ஏறிக்கொண்டபோது திரௌபதி முற்றிலுமாக சொல்லடங்கி அமர்ந்திருந்தாள். ஆனால் மாயை பேச விரும்பினாள். ஓர் எண்ணம் முடிவதற்குள்ளாகவே அடுத்தது எழுந்தது. ஒவ்வொன்றும் முழுமையான கூரிய சொற்றொடர்களாகவே உருவம் கொண்டு வந்தன. “நீங்கள் ஆண்களில் தேடுவதென்ன இளவரசி?” என்றாள். “நீங்கள் நீர் நிறைந்து கரைகளை முட்டும் ஒரு பெருநீர்த்தேக்கம். இன்னமும் நிகழாத ஆற்றல். எடையாக மட்டுமே இருந்துகொண்டிருக்கும் விசை. நீங்கள் தேடுவது வெளிப்படும் வழிகளை மட்டுமே. இந்த ஆண்கள் ஒவ்வொருவரும் ஒரு திறப்பு. பேராறொன்றின் தடங்கள்…”

திரௌபதி சலிப்புடன் “நீ என்ன காவியம் இயற்றப்போகிறாயா?” என்றாள். அந்த ஏளனத்தில் அகம் சுருங்கி மாயை அமைதியானாள். “சொல்” என்றாள் திரௌபதி. “இல்லை, நான் வெறுமனே சொற்றொடர்களை உருவாக்குகிறேன்…“ என்றாள் மாயை. “தாழ்வில்லை, சொல். சொற்றொடர்களின் வழிகள் ஏதேனும் என்னைத் தொடுகிறதா என்று பார்க்கிறேன்.” மாயை “மொழி பொருளை கண்டடைவதில்லை இளவரசி, உருவாக்குகிறது” என்றாள். ”அதுவும் பராசரரின் நூலில் உள்ள வரியே” என்றாள் திரௌபதி. மாயை சிரித்து “ஆம், இத்தனை நூல்கள் இருக்கையில் நாம் புதியதாக ஏதும் சொல்ல முடிவதேயில்லை” என்றாள்.

சற்றுநேரம் அவர்களிடையே ஆழ்ந்த அமைதி நிலவியது. வண்டியின் சகட ஒலி கேட்டுக்கொண்டே இருந்தது. திரௌபதி பெருமூச்சுடன் அசைந்து அமர்ந்தாள். திரும்பி “இன்று நான் என் அனைத்து சமநிலைகளையும் இழந்துவிட்டேன் என்று தோன்றுகிறது” என்றாள். மாயை புன்னகை செய்தாள். “என்ன ஆயிற்று எனக்கு? ஏன் இப்படி இருக்கிறேன் இன்று?” என்றாள் திரௌபதி மீண்டும். “இளவரசி, இன்று நீங்கள் கன்னியாக இருக்கும் இறுதிநாள்” என்றாள் மாயை.

அச்சொற்கள் தீப்பொறிகள் வந்து விழுவதைப்போல திரௌபதியை நடுங்கி விலகச் செய்தன. அறியாமல் அவள் தன் நெஞ்சில் கைவைத்தாள். “நீங்கள் திரும்பப்பெற முடியாத ஒன்றை இழக்கப்போகிறீர்கள் இளவரசி. மணநாளுக்கு முந்தையநாள் நிலைகுலையாத பெண்ணே இல்லை. எளிய பெண்கள் நெஞ்சுருகி அழுவதை கண்டிருக்கிறேன்.” திரௌபதி சிலகணங்கள் நோக்கிவிட்டு “ஏன்?” என்றாள். “மீளமுடியாத ஒரு பயணத்தை தொடங்கவிருக்கிறீர்கள்…” என்றாள் மாயை. திரௌபதி சற்று நேரம் சிந்தித்தபின் “அதுவும் முழுக்க முழுக்க பகடையாட்டம்போல. எத்தனை மூடத்தனம் இல்லையா?” என்றாள்.

“ஆம், ஆனால் நூறாயிரம் கோணங்களில் நுணுகிச் சிந்தித்து முடிவெடுத்தாலும் அது பகடையாட்டமே” என்றாள் மாயை சிரித்தபடி. திரௌபதி எண்ணம் துளித்து நின்ற விழிகளால் நோக்கினாள். மாயை “நாம் அறியாத ஒருவரை அறிந்த சிலவற்றைக் கொண்டு தெரிவுசெய்வதில் என்ன இருக்கிறது? அறிந்திருந்தாலும் கூட அதில் என்ன பயன்? மானுடர் காலந்தோறும் மாறுபவர்கள் அல்லவா?” என்றாள். “அப்படிப்பார்த்தால் அத்தனை முடிவுகளும் நிலையற்றவைதானே?” என்றாள் திரௌபதி. ”ஆம், ஆனால் இம்முடிவு மட்டும் எப்போதைக்குமாக எடுக்கப்படுகிறது. மறுஎண்ணத்திற்கே இடமற்றது.”

மீண்டும் ஓர் பேச்சின்மை அவர்கள் நடுவே விரிந்தது. பெருமூச்சுடன் அதிலிருந்து கலைந்து வந்த திரௌபதி வலிய வரவழைத்த புன்னகையுடன் “சொல்லடி, நான் இதுவரைக்கும் கண்டவர்களில் எனக்குரியவர் எவர்?” என்றாள். மாயை “அதில் நான் என்ன சொல்ல இருக்கிறது இளவரசி?” என்றாள். “சொல்” என்றாள் திரௌபதி. “முடிவெடுக்கவேண்டியவர் நீங்கள்” என்றாள் மாயை மீண்டும். “நீ நானேதான். எனக்கிருக்கும் அழகின் ஆணவமும் இளவரசியென்ற பொறுப்பும் இல்லாத நான்தான் நீ. சொல்” என்றாள் திரௌபதி.

“இளவரசி, ஒவ்வொருவராக சொல்கிறேன். உங்கள் உள்ளம் முழுமையாக ஏற்றுக்கொள்ளும் ஆண்மகன் கர்ணனே. அவர் முன்னர் மட்டுமே உங்கள் உள்ளத்தில் நாணம் எழுந்தது. அவரையன்றி எவரை அடைந்தாலும் நீங்கள் நிறைவடையப்போவதில்லை” என்றாள். முகம் மலர்ந்து திரௌபதி “ஆம்” என்றதுமே மாயை ”ஆனால் அவர் ஒருபோதும் பேரரசராகப் போவதில்லை. அவரது துணைவியாக நீங்கள் சிற்றரசாகிய அங்கத்தின் சிறிய அரண்மனையை மட்டுமே ஆளமுடியும். அஸ்தினபுரியின் முடிகாண் விழாக்களில் சுயோதனரின் துணைவியாகிய பட்டத்தரசிக்கு அருகே நின்று அவள் ஆடைநுனியை பிடிக்கவேண்டும். அவள் கை சோர்கையில் தாலத்தையும் கோலையும் வாங்கிக்கொள்ளவேண்டும்” என்றாள்.

திரௌபதியின் உள்ளம் கொண்ட விலக்கம் உடலில் சிறிய அசைவாக தெரிந்தது. ஏதோ சொல்ல வருபவள் போல அவள் இதழ்கள் விரிய மாயை “ஆம் இளவரசி, அவர் மாவீரர். இன்று பெரும்படைகளை அவரால் நடத்தமுடியும். நினைத்தால் பாரதவர்ஷத்தை வெல்லவும் அவரால் முடியும். ஆனால் அவரது குருதியில் கலந்துள்ள மூன்று இயல்புகளால் அவர் புவியாள முடியாது” என்றாள். “ஒன்று, அவர் மிகமிகத் தனியர். சக்ரவர்த்திகள் காந்தப்பாறைகளைப்போல தொடுவன அனைத்தையும் தன்மேல் திரட்டிக்கொள்பவர்கள். இரண்டு அவர் பெரும் கொடையாளி என்கிறார்கள். அதை அவரை நோக்கியதுமே உணர்ந்தேன். தனக்கென எதையும் எண்ணா பெருங்கருணை கொண்டவர். இளவரசி, இவ்வுலகையே தன்னுடையதென எண்ணுபவர்களே சக்ரவர்த்திகளாக ஆகிறார்கள்.”

“அத்துடன் அவர் துரியோதனருக்கு இரண்டாமவனாகவே என்றும் இருப்பார். ஒரு தருணத்திலும் மீறிச்செல்லமாட்டார்” என்றாள் மாயை. திரௌபதி மீண்டும் ஏதோ சொல்லவர “இளவரசி, பாரதவர்ஷத்தை ஆளப்போகிறவர் துரியோதனர் அல்லது அவரைக் கொல்பவர். ஐயமே தேவை இல்லை” என்றாள் மாயை. திரௌபதி பெருமூச்சுடன் “ஆம்” என்றாள். மாயை புன்னகையுடன் “கர்ணன் முன் நீங்கள் பேதைக்காதலியாக ஆனீர்கள். அவ்வண்ணமே அவர் முன் முழுவாழ்நாளையும் கழிக்க முடியும் என்றால் உங்களுக்குரியவர் அவரே!” என்றாள்.

கழுத்திலிருந்த நீண்ட சங்கிலி ஒன்றை கையில் பற்றி சுழற்றிக்கொண்டிருந்த திரௌபதி அதை தன் பற்களிடையே வைத்துக் கடித்து “சொல்” என்றாள். “துரியோதனர் உங்கள் மேல் காதல்கொண்டிருக்கிறார். ஆனால் தன் நண்பனின் காதலை உணர்ந்ததுமே அதை தன்னுள் மூழ்கடித்துக்கொண்டார். இளவரசி, உடனே நீங்கள் பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தினியாக ஆகவேண்டுமென்றால் அவரை மணப்பதே முதல் வழி. நீங்கள் மணந்துகொண்டதனாலேயே அவரது அரியணை உறுதியாகும். இருநாடுகளின் படைகள் இணைந்துகொள்ளும் என்றால் பாரதவர்ஷம் காலடியில் பணியும்.”

“மாவீரர். சக்ரவர்த்தியாக ஆவதற்கென்றே பிறந்தவர். ஆணைகளிட்டுப் பழகிய கண்கள். அடிபணியவைக்கும் சொற்கள். பெருந்தன்மையும் தோழமையும் கொண்ட மாமனிதர்” என்றாள் மாயை. “ஆனால் ஈவிரக்கமற்றவர். இளவரசி, அவர் பாரதவர்ஷத்தை வெல்லவேண்டுமென்றால் குருதியாறு ஓடவேண்டும். அப்படி அமைந்த அரசும் அடுத்த தலைமுறையில் அழியும். இரக்கமற்ற எவரும் பேரரசுகளை ஆண்டதில்லை.”

திரௌபதி போகட்டும் என கைகளை வீசி “அர்ஜுனன்?” என்றாள். “அர்ஜுனன் உங்களை வென்றெடுக்கக் கூடுமென்று என் அகம் சொல்கிறது. அவர் மண்ணையும் பெண்ணையும் ஆளும் அனைத்து ஆற்றலும் கொண்டவர், தோளிலும் நெஞ்சிலும். உரம் கொண்டவர், வென்று மேல் செல்பவர், செய்துமுடிப்பவர், திரும்பி நோக்காதவர். இளவரசி, இரக்கமற்ற இச்சை கொண்ட ஆண்மகன் வெற்றியை மட்டுமே காண்பான். அவ்விச்சை முடியும் வரை.”

திரௌபதி புன்னகைத்தாள். “இளவரசி, உங்கள் காமம் என்றும் அவரை நோக்கியே எழும். ஆனால் நீங்கள் பாரதத்தின் சக்ரவர்த்தினியே ஆனாலும் அவருக்கு வெறும் உடல்தான். உங்கள் ஒரு சொல்லும் காமம் முடிந்தபின் அவர் செவியில் நீடிக்கப்போவதில்லை. பொருட்படுத்தாத ஆண் பெண்ணுக்கு அழியாத பெரும் அறைகூவல். அவரை வெறுப்பீர்கள். ஆனால் ஒவ்வொருநாளும் அவரையே எண்ணிக் கொண்டிருப்பீர்கள். அவரை ஒரு முறை முழுமையாக வென்றால் அமைதிகொள்ளலாம் என எண்ணுவீர்கள். அது இறுதிக்கணம் வரை நிகழாது. ஏனென்றால் கர்ணனைப்போலவே அவரும் முற்றிலும் தனியர். கர்ணனின் தனிமையை உங்கள் காதலால் நீங்கள் போக்கமுடியும். அர்ஜுனனின் தனிமையை அணுகவே முடியாது.”

“தருமன்?” என்றாள் திரௌபதி புன்னகையுடன். “கால்களற்ற விலங்கு” என்றாள் மாயை சிரித்துக்கொண்டே. திரௌபதி சிரித்ததில் சங்கிலியை விட்டுவிட்டாள். “அவர் தம்பியரின் தோள்களில் நிற்பவர். தனக்கென ஏதுமற்றவர். அவரை நீங்கள் மணந்தால் அமர்ந்து சொல்பழகலாம்.” திரௌபதி மீண்டும் சங்கிலியை எடுத்துக் கடித்தபடி “பீமனைப்பற்றி சொல்” என்றாள்.

“இளவரசி, அவரை நீங்கள் மணந்தால் பாரதவர்ஷத்தை ஆளமுடியும்” என்றாள் மாயை. “நிகரற்ற வீரன். ஐயமே இல்லை. இவ்வாழ்க்கையில் அவருக்கு தோல்வி என்பதே நிகழப்போவதில்லை.” திரௌபதி புருவத்தைத் தூக்கி “நீ என்ன நிமித்திகப்பெண்ணா?” என்றாள். “இல்லை. ஆனால் வெறும் பெண்ணுக்கே சில ஆழ்புலன்கள் உண்டு. அவரைச்சுற்றி ஏதோ ஒன்று இருக்கிறது. மகத்தானது. தெய்வங்கள் மட்டுமே சூடியிருக்கும் ஒளி அது. அவரை அது ஒருபோதும் தோற்க விடாது. இளவரசி, கர்ணனோ அர்ஜுனனோ கூட தோற்கலாம். இந்த மஞ்சள் அரக்கன் எங்கும் எந்நிலையிலும் தோற்கமாட்டார்.”

“அப்படியென்றால் அவர்தானா? போட்டியை மாற்றியமைக்க சொல்லிவிடலாமா?” என்றாள் திரௌபதி அதே சிரிப்புடன். “நீங்களே அறிவீர்கள் இளவரசி. அவர் தன் தமையனுக்கு கடன்பட்டவர். ஒருபோதும் அவர் தனக்காக வாழப்போவதில்லை. அன்புக்குக் கட்டுப்பட்ட விலங்கு என்றீர்கள், அது உண்மை. ஆனால் முழுமையாகவே அவர் தன் தமையனின் அன்பில் அமைந்துவிட்டார். தெய்வங்கள் கூட அவரை மீட்க இயலாது.”

“ஐவரையும் மணப்பதென்றால் சரிதான்” என்றாள் திரௌபதி சிரித்தபடி. “ஐவரும் ஒன்றாகவேண்டுமே?” என்று மாயை சிரித்தாள். “ஐவரையும் ஒன்றாக்கும் மாயமேதும் உள்ளதா என்று முனிவர்களிடம் கேட்போம். கங்கைக்கரையில் ஐந்து நெருப்புகளுக்கு நடுவே ஒற்றைக்காலில் நின்று ஆயிரமாண்டுகாலம் தவம்செய்கிறேன். ஐவரும் இணைந்த ஆண்மகன் ஒருவனுக்காக.”

“அப்படி ஒருவன் பிறந்து அவன் உங்கள் எதிரே வந்தால் என்ன செய்வீர்கள்?” என்றாள் மாயை. “போடி” என்றாள் திரௌபதி. “இளவரசி, இளைய யாதவனைப்பற்றி சூதர் பாடுவதைக்கேட்டால் அப்படித்தான் தோன்றுகிறது.” திரௌபதி சீற்றத்துடன் “போடி, அவர்கள் அவனை தெய்வமாக ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள்…” என்றாள். மாயை சிரித்தபடி “நாளை மணத்தன்னேற்பு நிகழ்வில் நீங்கள் ஒன்றை ஏற்க முடியும். நான்கை இழந்தாகவேண்டும்” என்றாள்.

“அப்படியென்றால் என்னதான் செய்வது?” என்று திரௌபதி கேட்டபோது உதடுகள் சிரித்துக்கொண்டுதான் இருந்தன என்றாலும் கண்கள் மாறுதலடைந்துவிட்டிருந்தன. “அதைத்தான் நான் சொல்லமுடியாது என்றேன். விதியை நம் மதி உணர்வதைவிட ஒர் எளிய பகடை நன்றாகவே அறியும். அதற்கே அப்பொறுப்பை அளித்துவிடலாம்” என்றாள் மாயை. திரௌபதி சில கணங்கள் மாயையை நோக்கிவிட்டு பின்பு புன்னகை செய்தாள்.

அதன்பின் இருவரும் பேசவில்லை. திரௌபதி முழுமையாகவே எண்ணங்களில் மூழ்கி சற்று தலைசரித்து இமைகள் சரிய அமர்ந்திருந்தாள். ரதம் ராதாதேவியின் ஆலயத்தை அணுகியது. வெளியே எழுந்த முரசொலியை கேட்டுத்தான் அவள் விழிப்படைந்து பெருமூச்சுடன் தன் ஆடையையும் குழலையும் நீவித்திருத்திக்கொண்டு திரைச்சீலையை விலக்கி வெளியே வந்தாள்.

கோயிலின் முதிய ஸ்தானிகர் கூப்பிய கரங்களுடன் அவர்களை நோக்கி ஓடிவந்தார். “அன்னையின் அருள்பெற வந்த இளவரசியின் அருளை நாங்கள் பெற்றோம்” என முகமன் சொன்னார். ”நான் கேசினிகுலத்து நிருபன். தலைமை ஸ்தானிகன். கூந்தல்வழிபாட்டுக்காக மூதன்னையர் மூவர் காத்திருக்கிறார்கள். தாங்கள் வருவதற்கு சற்று தாமதமாகிவிட்டது. வருக!” என ஆற்றுப்படுத்தினார்.

பின்னால் பிருஷதியின் ரதம் வந்து நின்றது. நிருபருடன் வந்த வேறு இரு ஸ்தானிகர்கள் அரசியை வரவேற்க அந்த ரதம் நோக்கி சென்றனர். ஸ்தானிகர் அவர்களை படிகளில் ஏற்றி ஆலயத்தின் பெருவாயிலை நோக்கி கொண்டுசென்றார். ஐந்து அன்னையர் ஆலயங்களும் ஒரேவடிவம் கொண்டவை. உள்மண்டபங்களின் அமைப்பில் மட்டுமே சிறிய வேறுபாடுகள் இருந்தன. வாயிலை அடைந்ததுமே உள்ளே எழுந்த கருவறை தெரிந்தது.

உள்ளே வெள்ளைப்பசுவின் மீது பச்சைப்பட்டாடை அணிந்து அன்னை அமர்ந்திருந்தாள். எட்டு கைகளில் வலது கீழ்க்கையில் அஞ்சல் முத்திரையும் மேல்கைகளில் பசுங்கதிரும் அமுதகலசமும் கன்றுமேய்க்கும் வளைதடியும் கொண்டிருந்தாள். இடது கீழ்க்கையில் அடைக்கல முத்திரையும் மேல் கைகளில் கனியும் தாமரை மலரும் கோடரியும் ஏந்தியிருந்தாள். இருபக்கமும் எரிந்த நெய்விளக்குகளின் ஒளியில் அன்னையின் வெள்ளிச்சிலை பொன்னொளி கொண்டு மின்னியது.

ஸ்தானிகர் “இவ்வழி இளவரசி…” என அழைத்துச்சென்றார். பிருஷதி பூசைத்தட்டை சேவகர்களிடமிருந்து வாங்கிக்கொண்டு முன்னால் சென்றாள். திரௌபதியின் நடை சற்று தளர்ந்ததுபோல மாயை உணர்ந்தாள். ஸ்தானிகர் “முன்பு ஐங்குலங்களுக்கும் அன்னையரே பூசகர்களாக இருந்தார்கள். இப்போது எங்கள் கேசினி குலம் மட்டுமே அன்னையரை பூசகர்களாகக் கொண்டுள்ளது…” என்றார். ”பிறப்பும் மணமும் பலியும் வழிபாடும் இறப்பும் விண்ணேற்றமும் அன்னையராலேயே செய்யப்படுகின்றன… ”

ஆலயத்தின் வலப்பக்கம் கேசினி அன்னையின் ஆளுயர சிறிய செங்கல் முடிப்புரை இருந்தது. அதன் சிறுவாயில் முன் இருந்த பலிபீடத்தில் தெச்சி அரளி மலர்களுடன் பலிச்சோறு படைக்கப்பட்டிருக்க இருபக்கமும் செந்தழல் கிழிந்து பறக்கும் பந்தங்கள் எரிந்தன. அதன் முன்னால் கனத்த மரத்தூண்களுடன் மூன்றடுக்கு மண்டபம் ஒன்றில் மூன்று மூதன்னையரும் முகம் நோக்கி அமர்ந்திருந்தனர்.

சுருக்கங்கள் செறிந்த கரிய உடலும் வற்றிய முகமும் கொண்ட முதுபெண்டிர் புலித்தோல் ஆடை அணிந்து நெற்றியில் செந்நிறத்தில் முக்கண் வரைந்து புலிநகத்தாலான இளம்பிறை சூடியிருந்தனர். மாயை மெல்லியகுரலில் “இவர்களின் நீள்சடைகளைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்…” என்றாள். சடைகளா என விழிதுழாவிய கணத்திலேயே திரௌபதி கண்டுகொண்டாள். அவர்களின் தோளில் இருந்து இறங்கி அமர்ந்திருந்த புலித்தோல் பீடத்தைச் சுற்றி தரையில் விரிக்கப்பட்டிருந்தன சடைக்கற்றைகள்.

சற்று முன்னால் சென்று சேவகர்களிடம் ஆணைகளை இட்டு மீண்டு வந்த ஸ்தானிகர் “இளவரசி, தாங்கள் மட்டும் மும்முறை கால்கழுவி வலக்கால் வைத்து மண்டபத்தில் ஏறிக்கொள்ளுங்கள். அரசி வெளியே வலப்பக்கமாக நின்றுகொள்ளவேண்டும்” என்றாள். பிருஷதி “செல்” என்று திரௌபதியிடம் சொல்லிவிட்டு ”தாலத்தை என்ன செய்வது ஸ்தானிகரே?” என்றாள். “தங்கள் பூசனையை அன்னையர் இறுதியில்தான் ஏற்றுக்கொள்வார்கள் அரசி” என்றார் ஸ்தானிகர்.

திரௌபதி நன்னீரால் கால் கழுவிவிட்டு வலக்கால் எடுத்துவைத்து மண்டபத்தில் ஏறினாள். கங்கையின் கரிய களிமண்ணால் செய்யப்பட்டு உலர்ந்து சுருங்கிய சிற்பங்கள் போல அமர்ந்திருந்த மூன்று அன்னையரின் முகத்திலும் விழிகளிலும் எந்த மாற்றமும் தெரியவில்லை. அவள் மூன்று அன்னையரையும் முறைப்படி மும்முறை கால்தொட்டு வணங்கினாள். மண்டபத்தில் சிறிய இரட்டைத் தந்தி வாத்தியமான குஜ்ஜிதத்துடன் நின்றிருந்த சூதப்பெண் “அன்னையரின் கூந்தலை எடுத்து தலைதொட்டு வணங்குங்கள் இளவரசி” என்றாள்.

திரௌபதி அந்தச் சடைகளை அருகே நோக்கியபோது ஒருவகை அச்சத்தையே அடைந்தாள். மூன்றுவாரைக்குமேல் நீளம் கொண்டிருந்தன அவை. கருவேங்கையின் மரவுரி போல உயிரற்றவையாக தோன்றின. அவள் அவற்றின் நுனியை எடுத்து தன் நெற்றிமேல் வைத்து வணங்கிவிட்டு அவர்களின் முன்னால் போடப்பட்டிருந்த புலித்தோல் இருக்கையில் அமர்ந்துகொண்டாள். அவளுக்கு வலப்பக்கமாக சூதப்பெண் தன் குஜ்ஜிதத்துடன் அமர்ந்தாள்.

“பாஞ்சாலத்தின் இளவரசி, மூதன்னையரின் அருள் தங்களை சூழ்வதாக! இன்று பங்குனி மாதம் முழுநிலவு. வானிலும் மலையுச்சிகளிலும் நதிகளிலும் காட்டிலும் வாழும் அன்னையர் அனைவரும் அகம் நிறைந்து கனிவுகொள்ளும் நாள். அவர்கள் ஒவ்வொருவரின் சொற்களும் உங்களை வாழ்த்துவதாக! ஆம். அவ்வாறே ஆகுக!” திரௌபதி தலைவணங்கினாள்.

“இளவரசி, பாஞ்சாலத்தின் கன்னியின் காவல்தெய்வங்களாகிய மூதன்னையர் அவள் நீள்குழலில் குடிகொள்கிறார்கள். பாரதவர்ஷத்தின் வேறெந்த பகுதியின் பெண்களுக்கும் இங்குள்ள பெண்களைப்போல் நீள்குழல் வளர்வதில்லை. மகள் பிறந்தால் ஒருவயது நிறைவுக்குப்பின் முதல் கருநிலவில் இங்கே கேசினி அன்னையின் முன் வைத்து கருமுடி களைந்து படைத்து வணங்குவர். பின்னர் அக்குழந்தையின் தலையில் முளைப்பது கேசினி அன்னையின் அருள். என்றும் அக்கன்னியுடன் இருந்து அவளை ஆள்பவள் அவள். மூத்த பெருங்குடியின் மூதன்னையாகிய கேசினியை வாழ்த்துவோம்!”

சூதப்பெண் தொடர்ந்தாள். முற்காலத்தில் காம்பில்யம் பேரன்னையாகிய உக்ரசண்டிகையால் ஆளப்பட்டது. இது ஊராக மாறுவதற்குமுன் சண்டகம் என்னும் அடர்காடாக இருந்தது. அக்காட்டின் நடுவே கோரைப்புல் அடர்ந்த சதுப்பின் விளிம்பில் நின்றிருந்த மாபெரும் அத்தி மரத்தில் கானுறைத் தெய்வமான உக்ரசண்டிகை குடியிருந்தாள். காற்றில்லாமல் காடே அசைவிழந்து நிற்கும் நடுமதியத்தில் கூட அந்த மரம் மட்டும் கிளைசுழற்றி இலைபறக்க ஓலமிட்டுக்கொண்டிருக்கும். அக்காடே அவ்வொலியைக் கேட்டு அஞ்சி கிளைதாழ்த்தி நின்றிருக்கும். குரங்குகளோ பறவைகளோ அம்மரத்தை அணுகுவதில்லை.

ஒருநாள் பசியால் தளர்ந்த தன் ஐந்து மைந்தர்களுடன் நம் குலத்தின் மூதன்னையாகிய கேசினி அங்கே வந்து சிற்றாறில் நீர் அருந்திவிட்டு அம்மரத்தடியில் அமர்ந்தாள். பழுத்து நிறைந்து நின்ற அத்திமரத்தைக் கண்டு குழந்தைகள் எழுந்து கைநீட்டின. அன்னை அம்மரத்தின் கீழ்க்கிளைகளில் தொங்கிய கனிகளைப் பறித்து தன் குழந்தைகளுக்கு அளித்தாள். காடு திகைத்து அசைவிழந்தது. அத்திமரம் கிளைசுழற்றி பேரோலமிட்டு வெறிகொண்டது, அருவியின் ஒலி போல உக்ரசண்டிகையின் குரல் எழுந்தது.

”என் கனிகளைக் கொய்து உண்டு பெரும்பிழை செய்துவிட்டீர். உங்களை பலிகொண்டு குருதியுண்டு பசி தீர்வேன்” என்ற அறைகூவலுடன் இருபெருங்கிளைகளை கொடுங்கைகளாக விரித்து அத்திமரம் குனிந்து வந்தது. மூதன்னை கேசினி “பசிகொண்ட மைந்தர்களை ஊட்டும் அன்னைக்கு நிகரல்ல எந்தப்பெருந்தெய்வமும். இது உண்மை என்றால் அடங்குக இக்காட்டரசி” என்று கூவியபடி தன் தோளில் சுருட்டிவைத்திருந்த நீள்குழலின் கற்றை ஒன்றைப் பிடுங்கி அவ்விரு கிளைகளையும் கட்டினாள்.

கைகள் கட்டுண்டு திகைத்த உக்ரசண்டிகை திமிறி கூச்சலிட்டாள். அந்தக் கட்டில் இருந்து தப்பமுடியாது என்று தெரிந்ததும் பணிந்து வணங்கி தன்னை விடுவிக்கும்படி கோரினாள். “நானும் என் மைந்தரும் வாழும் நகரமாகுக இக்காடு. அதன் காவல்தெய்வமாக நீயே அமர்க!” என்றாள் கேசினி. “வருடமொருமுறை மானுட ஊன்பலி எனக்கு அளிக்கப்படவேண்டும்” என்றாள் சண்டிகை. “அவ்வண்ணமே ஆகுக” என்றாள் கேசினி. சண்டிகை “நான் நகர் அமைபவள் அல்ல. கொலைமறப்பவளும் அல்ல. நான் இச்சதுப்பிலேயே உறைவேன்” என்றாள்.

கேசினி “அவ்வண்ணமென்றால் நகர்காக்கும் தெய்வங்களை நீயே படைத்தருள்க!” என்றாள். சண்டிகை “உன் மைந்தரிடம் ஆளுக்கொரு கல்லெடுத்து என் கால்களிலும் கைகளிலும் தலையிலும் வைக்கும்படி சொல்” என்றாள். அவ்வைந்து கற்களிலும் அன்னையின் அருளின் துளி குடியேறியது. ஐந்து பெரும் பருவடிவங்களாக அவர்கள் அன்னைக்கோலம் கொண்டனர். அவர்களைக் கொண்டு வந்து இங்கே நிலைநிறுத்தினர் மைந்தர்.

எரியே துர்க்கை. நீர் லட்சுமி. காற்று சரஸ்வதி. வானம் சாவித்ரி. இங்குறையும் ராதை மண்வடிவானவள். மற்றவர்களை நான்கு எல்லைகளிலும் நிறுவினாள் அன்னை. அவள் மைந்தர்கள் இந்நகரை அமைத்தனர். அன்னை இறைவடிவம் கொண்டபோது இங்கே அவளுக்கு சிற்றாலயம் அமைத்தனர். இங்கே அவர்களின் மகளிருக்கு கூந்தல்வழிபாடு செய்யும் முறை அன்று தொடங்கியது. குழலினி அன்னையின் புகழ் வாழ்க.

சூதப்பெண் பாடி முடித்ததும் ஸ்தானிகர் கைகாட்ட இரு சேடிகள் மண்டபத்தில் ஏறி திரௌபதியின் நீண்ட குழலில் இருந்த அணிகளையும் மணிகளையும் விலக்கினர். அதன் முடிச்சுகளை அவிழ்த்து நீட்டி மண்ணில் பரப்பினர். முழவுகளுடனும் உடுக்குகளுடனும் சூதர்கள் கேசினி அன்னையின் சிறிய கருவறையின் முன் சென்று நின்றனர். கோட்டைச்சுவர்மேல் பெருமுரசம் இமிழ சங்கொலி எழுந்தது. பிருஷதியும் மாயையும் கைகூப்பினர்.

மூன்று இளம்பூசகர்கள் தெற்குவாயில் வழியாக உள்ளே வந்தனர். இருபக்கமும் வந்தவர்களில் ஒருவர் கையில் ஒரு ஈச்சங்குருத்தும் இன்னொருவர் கையில் அத்திமரக்கிளையும் இருந்தன. நடுவே வந்தவர் கமுகுப்பாளையை தொன்னையாகக் கோட்டி இரு கைகளில் ஏந்தி சிந்தாமல் நடந்து வந்தார். அருகே வந்தபின்னரே அவர் எடுத்துவந்தது குமிழி வெடிக்கும் புதுக்குருதி என்று தெரிந்தது.

வெளியே காலபைரவியின் பலிபீடத்தில் கழுத்தறுக்கப்பட்ட செம்மறியாட்டின் குருதியை முதுபூசகர் வாங்கி கேசினியின் ஆலயத்திற்குள் கொண்டு சென்றார். வாத்தியங்களும் வாழ்த்தொலிகளும் அதிர்ந்து அதிர்ந்து காற்றை நிறைத்தன. கருவறைக்குள் கருங்கல் பீடத்தில் மரத்தாலத்தில் மரவுரியில் வண்ணமிட்டு செய்யப்பட்ட கேசம் இருந்தது. ஐந்து பிரிகளாகப்பிரிக்கப்பட்டு விரிந்திருந்த அந்த முடிப்பீலிகளின் மேல் குருதித்துளிகளை விட்டு நீவினார் பூசகர். நீராட்டும் சுடராட்டும் நீறாட்டும் முடிந்தபின் குருதித்தொன்னையை கையில் ஏந்தி வெளியே வந்து மண்டபத்தை அடைந்து அதை படிகளில் வைத்தார்.

சூதப்பெண் அந்தத் தொன்னையை எடுத்து பசுங்குருதியை அன்னையரின் சடைக்கூந்தல் திரிகளின் மேல் தெளித்து வணங்கினாள். பின்பு திரௌபதியின் பின்பக்கம் தொன்னையை வைத்து அமர்ந்துகொண்டாள். நீண்டு தரையில் வழிந்திருந்த அவள் குழலை ஐந்தாகப் பகுத்து கரிய ஓடைகளாக நீட்டிவிட்டபின் அந்தக் குருதியைத் தொட்டு அவள் குழலில் பூசினாள். சூழ்ந்திருந்த சூதர்களின் முழவுகளும் மணிகளும் பெண்களின் குரவையொலியும் இணைந்து திரைபோல அவர்களை சூழ்ந்துகொண்டன.

ஐந்து குழல்பிரிகளிலும் குருதியை முழுமையாக நீவியபின் அவற்றைத் தூக்கி மென்மையாக முறுக்கினாள். அவற்றிலிருந்து கொழுத்த செங்குருதி சொட்டியது. குழல்பிரிகள் பலியாட்டில் இருந்து உருவி எடுக்கப்படும் குடல்கள் போலிருப்பதாக எண்ணிய மாயை உடனே உதட்டைக் கடித்து தலையை மெல்ல திருப்பி அவ்வெண்ணத்தை விலக்கிக் கொண்டாள். பெருமுழவின் தோலில் விழுந்த உருளைக்கோல் அவள் அடிவயிற்றிலேயே தாக்குவதுபோல தோன்றியது. கால்தளர்ந்து காதுகளில் வெம்மையான ஆவி படிவதுபோல் உணர்ந்தாள்.

முறுக்கிய கூந்தல் திரிகளை ஒன்றுடன் ஒன்று சேர்த்து மடித்துச் சுருட்டி பெரிய ஐந்து கொண்டைகளாக திரௌபதியின் தோளிலும் முதுகிலும் அமைத்தாள் சூதமகள். திரௌபதி கண்மூடி கைகூப்பி அமர்ந்திருந்தாள். அன்னையரில் ஒருத்தி கைகாட்டியதும் ஓசைகள் அடங்கின. அவள் எழுந்து வந்து குருதியைத் தொட்டு திரௌபதியின் நெற்றியில் வைத்து வாழ்த்தினாள். மூன்று அன்னையரும் வாழ்த்தி முடித்ததும் கைகூப்பியபடி எழுந்த திரௌபதி கேசினி அன்னையின் கோயில் முன் சென்று நின்றாள்.

அவளைச்சூழ்ந்து சேடிப்பெண்கள் மரவுரிகளால் ஆன சேலைகளால் மறைத்துக்கொண்டனர். ஆலயத்தின் உள்ளிருந்து ஏழு மண்குடங்களில் மஞ்சள் நீரை எடுத்து வெளியே வைத்தார் பூசகர். சேடிகள் அதை எடுத்து அவள் தலையில் கொட்டி கூந்தலை கழுவினர். உள்ளேயே குழல்துவட்டி மாற்றாடை அணிந்தாள். மரவுரியை விலக்கியதும் பசும்மஞ்சள் பட்டாடை அணிந்து அவள் நின்றிருந்தாள். பூசகர் அன்னையின் உடலில் இருந்து மஞ்சள் பொடியை எடுத்து அவள் நெற்றியில் இட்டு வாழ்த்தினார்.

கேசினியை வணங்கியபின் திரௌபதி ராதையின் சன்னிதிமுன் சென்று நின்றாள். பிருஷதியும் மாயையும் அவள் இருபக்கமும் நின்றிருந்தனர். மாயை அவளை ஓரக்கண்ணால் நோக்கினாள். அவள் அங்கில்லை என்று தோன்றியது. கனவிலிருப்பவள் போல, பித்தி போல தெரிந்தாள். அவள் கண்களை பக்கவாட்டில் பார்த்தபோது மிகப்பெரிய நீர்த்துளிகள் போலிருந்தன. அவற்றுக்குள் எங்கோ ஆழத்தில் நெருப்புத்துளிகள் சுழன்றன.

ஐந்து பருப்பொருட்களில் முதல்வியே
ஐந்து ஆதாரங்களின் தலைவியே
ஐந்து அழகுகளின் உறைவிடமே
முடிவற்ற விதைகள் உறங்கும் வயிறே
வற்றாத முலைகொண்டவளே
உன்னை வாழ்த்துகிறேன்

உள்ளே பூசகரின் பெருங்குரலில் மந்திரம் ஒலித்தது. “ரஸவாஹினி, சனாதனி, பரமானந்தஸ்வரூபிணி, மானினி, புஷ்பிணி, மகாமாயே நமஹ!” மாயை அன்னையின் பாதங்களை நோக்கினாள். அவள் காலடியில் கங்கையின் வண்டல் மண்ணை பரப்பி நவதானியங்களை விதைத்து முளைக்கவைத்திருந்தனர். பச்சைமென்பரப்பு புதிதாகப்பிறந்த மான்குட்டியின் தோல் போலிருந்தது.

பெருமணியோசையுடன் பூசனை முடிந்ததும் காற்று அடங்கி கொடி தணிவதுபோல திரௌபதியின் உடல் தளர்ந்தது. பிருஷதி “செல்வோம்” என்றாள். திரௌபதி அதை கேட்கவில்லை. பிருஷதி அவள் தோளைத் தொட்டு “வாடி” என்றாள். திரௌபதி கனவுநடையில் அவளைத் தொடர்ந்து சென்றாள். படிகளில் இறங்கியபோது மாயை ஓரக்கண்ணால் நோக்கினாள். திரௌபதி தன்னுணர்வுடன் இருப்பதாகவே தெரியவில்லை.

திரௌபதி இருக்கையில் அமர்ந்ததும் சகடங்கள் அசைய தேர் ஓசையிட்டு அசைந்தது. அவள் ஐந்து மடங்கு எடைகொண்டுவிட்டதுபோல் தோன்றியது. மாயை பெருமூச்சு விட்டாள். காதுகளில் அப்போதும் வாத்தியநாதமும் வாழ்த்தொலிகளும் கேட்டன. கண்களை மூடியபோது கொழுங்குருதித் துளிகளைக் கண்டு கண்களைத் திறந்தாள். விழுந்துகொண்டே இருப்பதுபோலிருந்தது. நெற்றியும் கழுத்தும் வியர்த்தன. திரைச்சீலைகளை விலக்கிக்கொண்டாள்.

மெல்லிய விசும்பல் ஓசை கேட்டு மாயை திரும்பிப்பார்த்தாள். திரௌபதி உதடுகளை பற்களால் கடித்து அழுத்தியபடி அழுதுகொண்டிருந்தாள். பட்டு மேலாடை நுனியால் தன் மூக்கையும் கண்களையும் அழுத்தித் துடைத்தாள். விம்மலில் அவள் கழுத்து அதிர்வதை தோள்கள் குலுங்கி மீள்வதை நோக்கியபின் திரும்பி சாலையை நோக்கினாள். குதிரைவீரர்களின் கூட்டம் ஒன்று நடந்துசென்றவர்களை கூவி விலக்கியபடி கடந்து சென்றது. பின்னாலிருந்து வந்த நான்கு குதிரைவீரர்கள் ரதங்களைக் கண்டு விரைவழிந்தனர். எதிரே ஒரு சிறிய திறந்த ஒற்றைக்குதிரைத் தேர் வந்தது.

ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்

அதில் நின்றிருந்த கரிய இளைஞனைக் கண்டதும் மாயை குளிர்ந்த தொடுகை ஒன்றை நெஞ்சில் உணர்ந்தாள். அவன் தலையில் மயிற்பீலி சூடி மஞ்சள்பட்டாடையை தோளில் அணிந்திருந்தான். அவன் விழிகள் எவரையும் பார்க்கவில்லை. மாயை திகைத்து திரையை நன்றாக விலக்க திரௌபதி தன்னியல்பாக தலைதிருப்பி நோக்கியபின் நெய்பட்ட தழல் என உடலில் எழுந்த விரைவுடன் எட்டி வெளியே நோக்கினாள். அவன் தேர் கடந்து சென்றிருந்தது. தேர்த்தூணுக்கு அப்பால் அவன் வலது தோளும் ஒரு காலும் மட்டும் தெரிந்தன. சற்றே அசைந்த தலையில் இருந்த மயிற்பீலியின் விழி அவர்களை பார்த்துச்சென்றது.

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

மகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக

வெண்முரசு வாசகர் விவாதக்குழுமம்

முந்தைய கட்டுரைகோவையில் உரையாற்றுகிறேன்
அடுத்த கட்டுரைகாந்தி கோட்ஸே- ஐயங்கள்