உயர்தொழில்நுட்ப ஊழியர்களுக்கான சங்கம்

நவீன அடிமைமுறை பற்றி நான் எழுதிய குறிப்புக்கு தொடர் எதிர்வினைகள் வந்தன. எல்லா தரப்பையும் பிரசுரித்திருக்கிறேன்

என் கருத்துக்களைச் சுருக்கமாக இப்படித் தொகுத்துச் சொல்கிறேன்

கணிப்பொறி- உயர்தொழில்நுட்ப துறையினர் அடக்கிவாசிக்கவேண்டுமா?

கணிப்பொறித்துறை ஊழியர்கள் தங்கள் சம்பளத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும், இருப்பதில் நிறைவடையக் கற்க வேண்டும் போன்ற கருத்துக்களில் எனக்கு உடன்பாடில்லை. அது ஒருவகை மத்தியவர்க்க மனநிலை. இயலாமையின் தத்துவம்

தன் வேலையில் நிறைவுக்காக, அல்லது தன் வாழ்க்கை இலட்சியத்துக்காக ஒருவர் எளிய வாழ்க்கையை மேற்கொள்வதில் பொருளுண்டு. இயலாமை காரணமாக எளிய வாழ்க்கையை மேற்கொள்ளுதல் தோல்வி மனநிலை.

உலகியல் வாழ்க்கையில் ஒருவர் வெற்றி, மகிழ்ச்சி ஆகியவற்றை நாடுவதே இயல்பானது. தொழிலில் இருப்பவர் மேலும் மேலும் வெற்றியை நோக்கிச் செல்வதே அவசியம். அதில் போதும் என்ற மனநிலைக்கே இடமில்லை. அங்கே நின்றுவிட்டவர் தோற்றுவிட்டவர்தான். குறிப்பாக இளைஞர்களுக்கு அதைப்போல தற்கொலைத்தனம் பிறிதில்லை.

போதும் என்ற மனநிலைக்கு வாழ்க்கையில் ஓர் இடமுண்டுதான். ஒருவரின் இலக்கு கலை இலக்கியச் செயல்பாடு என்றால்,சேவை என்றால், தனிப்பட்ட அறிவுச்செயல்பாடுகள் என்றால் அதற்கேற்ப தன் உலகியல் வாழ்க்கையில் ஒரு எல்லையை வகுத்துக்கொள்ளலாம்.

மற்றபடி நிலையின்மையைக் கண்டு அஞ்சி, சவால்களைச் சந்திக்கத் தயங்கி ‘இதெல்லாம் போரும்’ என்பதெல்லாம் வெறும் வெளிவேடம். உள்ளூர ஏக்கத்தையும் பொறாமையையும்தான் அது அளிக்கும்.

கணிப்பொறித்துறையில் உள்ள நிலையின்மையை அஞ்சவேண்டுமா?

கணிப்பொறித்துறையில் உள்ளதைவிட பலமடங்கு நிலையின்மை திரைத்துறையில் உள்ளது. விளம்பரத்துறையில் உள்ளது. பல்வேறு வணிகத்துறைகளிலும் உள்ளது. அந்த நிலையின்மையை அஞ்சுபவர்கள் அத்துறைகளுக்குள் செல்லவே முடியாது. சாதிக்கவும் முடியாது. சினிமாவில் தோல்வியடைந்தவர்களெல்லாம் எங்கு செல்கிறார்கள், என்ன ஆனார்கள் என சிந்தித்திருக்கிறோமா? அந்தத்துறை வெற்றியை மட்டுமே இலக்காக்குவது. ஆகவே ஈவிரக்கமற்றது

அந்த நிலையின்மை என்பது கடுமையான போட்டியால் உருவாவது. அது உலகுடன் மோதும் உயர்தொழில்நுட்பத்துறையில் எப்போதும் இருக்கும். இல்லையேல் அங்கே திறமை அழியும், காலப்போக்கில் அது தேங்கிச் சீரழியும். பல்வேறு அரசுத்துறைகள் அந்நிலையில்தான் உள்ளன. மிகச்சிறந்த உதாரணம் பி.எஸ்.என்.எல் தான்

அந்த நிலையின்மையை அஞ்சி நிலையான , ஆபத்தில்லாத தொழில்களுக்குச் செல்வது திறமையும் துடிப்பும் உரியவர்களுக்குரியதல்ல. அவர்கள் அதை எதிர்கொள்ளத்தான் வேண்டும்.

ஆனால் எந்தத்துறையிலும் அதன் அடித்தள ஊழியர்களுக்கு குறைந்தபட்சப் பாதுகாப்பு என ஒன்று தேவை. ஊழியர்களை நிறுவனங்கள் பகடைகளாக வைத்து ஆடுவது அனுமதிக்கப்படக்கூடாது. போட்டியின் விளைவான நிலையின்மை வேறு, முதலாளிகள் ஆடும் சூதாட்டத்தின் விளைபான நிலையின்மை வேறு. அது ஊழியர்களின் மனவலிமையை குறைக்கும். தன்னம்பிக்கையை அழிக்கும். காலப்போக்கில் அனைத்து அறிவுச்செயல்பாடுகளையும் இல்லாமலாக்கும். அது அனுமதிக்கப்படக்கூடாது

கணிப்பொறித்துறையில் தொழிற்சங்கம் தேவையா?

தொழிற்சங்கம் என்ற அமைப்பில் எனக்கு எப்போதும் முழு நம்பிக்கை உண்டு. அதில் நான் செலவழித்த வருடங்கள் பயனுள்ளவை என்றே நினைக்கிறேன். தொழிற்சங்கம் என்ற கருத்தோ அமைப்போ காலாவதியாகிவிட்டது என நினைப்பது சூழலை அறிந்துகொள்ளாத அறியாமை மட்டுமே என்று திரும்பத்திரும்ப எழுதி வருகிறேன்.

ஆனால் தொழிற்சங்கம் என்பதற்கான வரையறைகளும் அதன் செயல்பாட்டுமுறைகளும் முழுமையாகவே மாறியாகவேண்டும் என்று நினைக்கிறேன். இவ்வெண்ணம் உருவாகி இருபதாண்டுக்காலமாகிறது. பலருடன் விவாதித்தும் இருக்கிறேன். அவ்விவாதத்தின் சில பகுதிகள் பின் தொடரும் நிழலின் குரல் நாவலிலும் உள்ளன. அனைவரும் உணரும் ஓர் கட்டாயம் அது. ஆனால் எவராலும் மாற்றத்தைக் கொண்டுவருவதைப்பற்றி எண்ணமுடியவில்லை

அதற்கான காரணம் பெரும்பாலான தொழிற்சங்கங்கள் முதியவர்களின் கைகளில் உள்ளன என்பது. குறிப்பாக இடதுசாரித் தொழிற்சங்கங்கள். தலைமைப்பொறுப்பில் நீண்ட அனுபவம் உடைய இவர்கள் மாறும் மனநிலையில் இல்லை.

சென்றகாலத்தில் தொழிற்சங்கம் என்பது அந்தத் தொழிலுக்குக்ள் மட்டும் நிற்க விழைந்த ஒன்று அல்ல. ஒட்டுமொத்த தொழில்துறைக்குள் நின்ற ஒன்றும் அல்ல. அது அடிபப்டையில் ஓர் அரசியல் அமைப்பு. இடதுசாரிகளைப் பொறுத்தவரை நாட்டில் அரசியல் மாற்றத்தை உருவாக்குவதற்கான கருவி.

தொழிலாளர்களை இடதுசாரிகள் ஒருங்கிணைத்தது இருந்துகொண்டிருக்கும் பொருளியல் அமைப்புக்குள் அரசியலமைப்புக்குள் அவர்களின் நலங்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்காக அல்ல. மாறாக அந்தப் பொருளியல் அமைப்பையும் அரசியலமைப்பையும் ஒட்டுமொத்தமாக மாற்றுவதற்காகத்தான்

ஆகவே பெரும்பாலும் தொழிற்சங்கப்போராட்டங்கள் அரசியல் போராட்டங்களாகவே இருந்தன. இன்று தொழிற்சங்கங்கள் அனைத்துமே அரசியல்கட்சிகளின் கிளை அமைப்புகளாகவே உள்ளன

அரசியல் சித்தாந்தம் தொழிலாளர்கள் ஒருங்கிணைவதற்கான ஊக்கத்தை அளித்தது. ஆனால் நீண்டகால அடிப்படையில் அது தொழிற்சங்க இயக்கத்தை பலவீனப்படுத்தியது. பல தளங்களில்.

ஒன்று, தொழிற்சங்கங்களில் உண்மையான ஜனநாயகத் தலைமை என்பதே இல்லை. தலைமை கட்சிகளால் மேலே திணிக்கப்படுகிறது. இரண்டு, அதன் செயல்பாடுகள் தாய்க்கட்சியின் அரசியல் செயல்திட்டங்களின் பகுதிகளாக மாறிவிடுகின்றன. தொழிலாளர் நலன்கள் புறக்கணிக்கப்படுகின்றன. மூன்றாவதாக அதன் நியாயமான போராட்டங்கள் கூட அரசியலாகவே அரசாலும் எதிர்க்கட்சிகளாலும் கருதப்பட்டு எதிர்ப்புகள் வலுவாக எழுகின்றன.

மேலும், இன்றுள்ள தொழிற்சங்க அமைப்பின் மிகப்பெரிய பலவீனம் என்பது அது இடதுசாரி அரசியலின் வழிமுறைகளின் படி உருவானது என்பது. தெருமுனை அரசியல் என அதைச் சுருக்கமாகச் சொல்லலாம். குறுங்குழுக்களை அமைப்பது, சிறுசிறு போராட்டங்களைச் செய்துகொண்டே இருப்பது, ஊழியர்களிடையே அதிருப்தியை நிலைநிறுத்துவது அதன் வழிமுறை

இந்த இரு அம்சங்களும் காலாவதியாகி விட்டன. அரசியல்கோட்பாடுகள் சார்ந்த தொழிற்சங்கம், தெருமுனை அரசியல் இரண்டையும் தவிர்த்த தொழிற்சங்கமே இன்றைய உயர்தொழில்நுட்பத் துறைக்குத்தேவையானது. பி.எஸ்.என்.எல் கூட அந்தத் திசை நோக்கிச் சென்றாகவேண்டிய நிலையில் உள்ளது

தெளிவாகவே சொல்கிறேனே. கணிப்பொறித்துறை ஊழியர் ‘புரட்சி ஓங்குக. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் வாழ்க’ என்றெல்லாம் கோஷமிட்டால் அது கேலிக்குரியதாகவே ஆகும். தெருமுனையில் நின்று ஆர்ப்பாட்டம் செய்தால் அது மக்களில் கசப்பையே உருவாக்கும்.

அவர்கள் தங்கள் உயர்தொழில்நுட்ப பயிற்சியை, உய்ர்கல்வியை, அதனுடன் இணைந்த வாழ்க்கையை விட்டுவிட்டு ‘மக்களோடு மக்களாக’ நின்று போராடவேண்டும் என்றெல்லாம் சொல்ல நம்முடைய ‘டைனோஸர் மார்க்ஸியர்’களால் மட்டுமே முடியும்.

அவர் இன்றைய நவீனத் தொழில்நுட்பத்தின் , அதையொட்டிய போட்டி வணிகத்தின், அதன் விளைவான சந்தைப்பொருளியலின் ஒரு பகுதி. அந்தக் களத்தில் இறங்கி பொருதி வெல்வதுதான் அவரது சவால்

இங்கே அமைப்பைப் பற்றிப்பேசுவது அவர் தன் தனி ஆற்றலால் அடைந்துள்ள பேரம்பேசும் திறனுக்கு மேலதிகமாக தன்னைப்போன்ற அனைவருடனும் கூட்டு சேர்ந்துகொண்டு ஒரு கூட்டுப்பேரம்பேசும் திறனையும் அடைய முடியுமா என்பதைப்பற்றி மட்டும்தான். புரட்சியை தோழர்கள் பார்த்துக்கொள்ளட்டும். அல்லது ஃபேஸ்புக்கில் செய்துகொள்ளாலாம்

நவீனத்தொழிற்சங்கம் என ஒன்று தேவை

இன்று இத்துறைகளில் தேவையாக இருப்பது ஒருவகை நவீனத் தொழிற்சங்க அமைப்பு. அதன் இயல்புகள் என நான் சிலவற்றை சொல்லமுடியும்

* அந்தச் சங்கம் ஒரு சட்டபூர்வமான அமைப்பாக, ஊழியர்களின் ஒட்டுமொத்தக் கூட்டமைப்பாக இருக்கவேண்டும். கூடுமானவரை ஒரே சங்கமாக.

* அவ்வாறு ஒன்றாக இருக்கவேண்டுமென்றால் அதற்குள் அரசியல் இருக்கக் கூடாது. அதன் நோக்கம் அந்த் துறையின் ஊழியர்களின் நலன்களைக் காப்பது, அதற்காக சட்டபூர்வமாக வாதாடுவது மட்டும்தான். ஆட்சிமாற்றத்தையோ பொருளியல் மாற்றத்தையோ உருவாக்கும் பொறுப்பு எதையும் அது சுமக்கவேண்டியதில்லை

* அப்படிப்பட்ட அரசியல் நோக்கம் அதற்கிருக்கும் என்றால் உடனே அதை அரசும் மாற்றுத்தரப்புகளும் அரசியல் ரீதியாக எதிர்கொள்ளத் தொடங்கும். அதன் ஆற்றல் முழுக்க அவ்வெதிர்ப்பில் வீணாகும்

* எனவே மிகக்குறைந்தபட்ச செயல்திட்டம் உள்ள ஒர் அமைப்பாகவே அது இருக்கவேண்டும். ஜனநாயகபூர்வமான, நவீன அமைப்பு. சட்டத்தைக் கொண்டும் எண்ணிக்கைவலிமையைக் கொண்டும் பேரம் பேசும் ஓர் அமைப்பு.எந்த அளவுக்கு அது குறைந்தபட்சச் செயல்திட்டத்துடன் இருக்கிறதோ அந்த அளவுக்கு அது பெரியதாக இருகக் முடியும். எந்த அளவுக்கு பெரியதாக இருக்கிறதோ அந்த அளவுக்கே அது தன் பங்களிப்பை ஆற்ற முடியும்

* அதன் நிர்வாகிகள், தலைவர்கள் ஊழியர்களின் நேரடிப் பிரதிநிதிகளாக இருக்கவேண்டும். அரசியல்வாதிகளாக இருக்கக் கூடாது. அவர்களுக்கு வேறு எங்கும் க்டப்பாடுகள் இருக்கக் கூடாது

அமைப்பு அளிக்கும் வாய்ப்புகள்…

இத்தகைய ஓர் அமைப்பு அப்படி என்னதான் செய்துவிட முடியும் என்ற ஐயம் இருக்கலாம். ஜனநாயகத்தில் எண்ணிக்கையின் வல்லமை சாதாரணமானதல்ல. கணித்தொழில்நுட்ப ஊழியர்களுக்கு நாடளாவிய ஓர் அமைப்பு இருக்கும் என்றால் —

அ. அதனால் பெரிய நிதி ஒன்றை சேர்த்து வைத்திருக்க முடியும். தனிப்பட்ட தொழிலாளர் ஒருவருக்காக அத்தகைய பெருநிதி அமைப்பு ஒன்று பெருந்தொழில் நிறுவனங்களுடன் மோதும் என்றால் அதன் விளைவுகள் மிக சிறப்பானவையாக அமையமுடியும்

ஆ. அது ஒவ்வொரு தொழிலாளருக்கும் மிகப்பெரிய அளவில் அறிவார்ந்த உதவிசெய்ய முடியும். அது திரட்டிக்கொள்ளும் நாடளாவிய தகவல்கள் மிகப்பெரிய பலம்

இ. நிதி, தகவல்கள் ஆகியவை இருந்தால் சட்டங்களை முடிந்தவரை சாதகமாக கையாள முடியும்

ஈ. அப்படி ஒரு பெரிய அமைப்புதான் அரசுடன் பேச முடியும். நிபந்தனைகள் விதிக்க முடியும். அமைப்பு என ஒன்று இல்லையேல் தொழிலாளர்களுக்கும் அரசுக்கும் தொடர்பே இல்லை என்றுதான் பொருள்

உ .தொழில்துறையில் முதலீடு, நிர்வாகம் என பலதரப்புகள் உள்ளன. அதில் ஒன்று தொழிலாளர். அவர்களின் தரப்பை திரட்டி ஒட்டுமொத்த பேரம்பேசும் ஆற்றலை வலுப்படுத்துவதே இத்தகைய அமைப்பின் நோக்கமாக இருக்கவேண்டும். அப்படி ஓர் அமைப்பு இருப்பதே ஒவ்வொரு தொழிலாளரின் தரப்பையும் வலுப்படுத்துவதைக் கண்கூடகவே காணமுடியும்.

ஊ .இத்தகைய அமைப்பு அந்தந்தத் தொழில்துறைக்குள் அதன் நுட்பங்களையும் தேவைகளையும் உணர்ந்ததாக அமையவேண்டும். அதன் கடமைகள் அளவுக்கே எல்லைகளும் அதற்குத் தெரியவேண்டும். அஃதல்லாமல் ஒட்டுமொத்த சந்தைப்பொருளியலை ஒழிப்பதற்கோ அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதற்கோ அது களமிறங்கும் என்றால் மிகச்சில நாட்களிலேயே அது பிளவுறும். அதை கொசுவை அடிப்பதுபோல அடித்து வெளியே தள்ளுவார்கள்

எ .அதாவது இன்றையதேவை சம்பிரதாயமான ஒரு “இங்குலாம் சிந்தாபாத்! முதலாளித்துவம் ஒழிக” வகையான தொழிற்சங்கம் அல்ல. அதுவும் உயர்தொழில்நுட்பம் சார்ந்ததாக இருக்கவேண்டும். அதில் நிபுணர்களும் வழக்கறிஞர்களும் இருக்கவெண்டும். அவர்கள் உயர்ந்த ஊதியம் பெறுபவர்களாக இருக்கவேண்டும். சட்டமும் வணிகமும் அளிக்கும் அனைத்து வாய்ப்புகளையும் தொழிலாளர்களுக்காகப் பயன்படுத்துபவர்களாக இருக்கவேண்டும்

ஏ. அதை நான் ஒரு நவீன தொழிற்சங்கம் என அழைப்பேன். தெருமுனையில் கூடி கூவும் அமைப்பு அல்ல. பணபலமும் அறிவுபலமும் கொண்ட சட்டபூர்வமான ஒரு கூட்டமைப்பு அது

*

வழக்கமாக இவ்வகையில் எதைச் சொன்னாலும் இரண்டு வகை எதிர்வினைகளையே தமிழகத்தில் எதிர்பார்க்கமுடியும். ஒன்று ஏதேனும் அரசியல்நிலைபாடு சார்ந்து எழும் அதீத வெளிப்பாடு. நக்கல் கிண்டல் வசை. இன்னொன்று, ஒதுங்கிப்போகும் அவநம்பிக்கைவாதம்.

அவ்விரு குரல்களுக்கும் அப்பால் இத்தளத்தில் உண்மையான ஆர்வமும் அனுபவமும் கொண்ட சிலரேனும் யோசிக்கலாம். எந்த விஷயமும் யாரோ சிலரின் தனிப்பட்ட முயற்சியால்தான் ஆரம்பிக்கப்படுகின்றன.

முந்தைய கட்டுரைசென்னையில் பூமணி விழா
அடுத்த கட்டுரைபூமணி விழா- சென்னையில்