பாடபேதம்

பாடபேதம் என்றால் மனம் போனபடி புரிந்துகொள்வது. பாடங்கள் எல்லாவற்றுக்கும் அதற்கான வாய்ப்புண்டு என்பது நவீன சித்தாந்தம். பிரதி இல்லை, எழுத்தாளன் இல்லை, வாசகன் மட்டுமே இருக்கிறான்; ஏனென்றால் அவன்தான் காசுகொடுத்துப் புத்தகம் வாங்குகிறான் என்று சொன்ன ழாக் தெரிதா என்ற பிரெஞ்சு ஆய்வாளர்தான் பாடபேதம் மட்டுமே உள்ளது, பாடம் கிடையாது என்ற கருத்தையும் சொல்லியிருக்கிறார். அந்தக்கருத்தைத் தனக்கே உரிய முறையில் புரிந்துகொண்ட தமிழவன் ஆகவே வாசகனும் கிடையாது, அத்வைதம் போலப் பாடபேதம் என்ற கோட்பாடு மட்டுமே உள்ளது என்று சொல்லி , அவனுக்கு பாடபேதி என்று பெயர் சூட்டியது தமிழ் கோட்பாட்டாய்வுத்தளத்தில் ஓர் அரியநிகழ்வாகும்.

பாடபேதங்கள் பலவகையானவை. இவை பாடத்தில் வாசகன் எந்த உறுப்பால் தொடர்பு கொள்கிறான் என்பதை வைத்து முடிவாகின்றன. பெரும்பாலான கிராமவாசிகள் காதை மட்டுமே அதற்குப் பயன்படுத்துகிறார்கள். ”ஆடிக்காத்தில அம்மையும் பறப்பாள், என்ன சொல்லுகியோ?” என்ற பழமொழிபேதம் இவ்வாறு உருவானதுதான். ”அது எப்டீங்க அம்மை பறப்பா?” என்ற ஐயத்துக்கு ”அது நாலாளு சொல்லுகதுல்லா ஊரோடு உண்டு வாழ்னுல்லா சொல்லியிருக்கு” ”இல்லிங்க…ஊரோடு ஒத்து வாழ்னு தான் அந்தப் பழமொழி” ”ச்சீ நாம நம்ம வாயாலா அந்த மாதிரி வார்த்தை சொல்லலாமா?” ”இல்லீங்க…இது வேற” ”செரி இப்பம் என்ன? சித்தம் போக்கு சீவன் போக்கு. சீவன் போச்சுண்ணாக்க பின்ன ஆளுண்டான்னு சொல்லுங்க . இருக்கப்பட்ட நேரத்திலே நல்லபடியா இருந்தா நாட்டுக்கு நல்லது. எதுக்கு சொல்லுகேண்ணாக்க கற்க கச்சோடம்னாக்குமே திருவள்ளுவ நாயனார் சொல்லியிருக்கப்பட்டது”

”அவரு சொன்னது வேறயாக்கும்.” ”சொல்லுவாரு பின்ன, அவரு ரிஸில்லா. ரிஸிமாருக்கு அதுக்குண்டான நேக்குண்டு பாத்துக்கிடுங்க. திருமூலர்னு ஒருத்தர் ஐயாயிரம் வருசத்துக்கு ஒருக்கா கண்ணைத் தெறந்து ஒரு பழத்தைத் திண்ணுட்டு ஒரு பாட்டு பாடுகாரு. அய்யாயிரம் வருசத்துக்கு ஒரு பழம் மட்டுமிண்ணா பின்ன வெளிக்கு கிளிக்கு போற சோலி இல்லை. ஒரு குசுவோ மற்றோ விட்டா அவருக்க பாரம் எறங்கும். என்ன பாடுகாருண்ணா, நட்ட கல்லும் பேசுமோ நாத்தம் உள்ளிருக்கையிலேண்ணு. என்னா ஒரு மூளை பாத்தேளா? நாத்தத்த உள்ள வச்சுப்போட்டு என்னத்த பேச்சு பேசுகது? ஏ, உனக்க மனசிலே நாத்தமிருந்தா நீ என்னம்பா பேசுவே? நாத்தம் உள்ள இருந்தா பேச்சாலே வரும், எளவு குசுவில்லாலே வரும். நம்ம நாட்டிலே பாதிப்பேரு பேச்சா பேசுகான்? இல்ல கேக்கேன், குசுவில்லாவே விடுகான்?”

”பின்ன அல்லாம?” என்று சொல்லி ஒருவர் சம்மதிக்கிறார். தத்துவத்தில் ஆர்வம் கொண்ட ஒரு சிறு கூட்டம் கூடியிருக்கிறது. பண்டிதருக்கு ஒரு டீ சொல்லுகிறார் ஒருவர். அவருக்கும் உற்சாகம், மனநிறைவு. பெருமிதத்துடன் கூட்டத்தைச் சுற்றிப்பார்த்து ”அதாக்கும் வேதத்திலே சொல்லியிருக்கிறது. கறுத்தாவாகிய ஏசு கிறிஸ்து பூமிக்கு வந்தார். கறுத்தா யாரு? ஏல, நாம பூசெ செய்யபப்ட்ட கறுத்தான் வேற ஆருங்கே? வேதத்திலே தெளிவாட்டு சொல்லியிருக்குல்லா கறுத்தாவாகிய நான்னு. அது தெரியாம இங்கிண சிலபேரு சண்டை போடுதான். அதுகொண்டுல்லா வெள்ளக்காரன் வச்சிருக்கான் சண்டேன்னா  அடுத்து என்னது, மண்டே! ஏலே, சண்ட போட்டா மண்ட ஒடயாமல் என்னலே செய்யும்? வெள்ளக்காரன் புத்தியுள்ளவன். அறிஞ்சுதான்லே வச்சிருக்கான். ஒண்ணுண்ணா ஒண்ணு. ஏலே, ரெண்டுண்ணா? தூண்ணு காறித் துப்பிப்போட்டான் பாத்தியா?”

சிங்கிள் டீ இப்போது புட்டு கடலையாக ஆகிவிடுகிறது. பாடபேதப் பெருவெள்ளம். ஒவ்வொரு பாடமும் இத்தனை பாடபேதங்களை உள்ளூர ஒளித்து வைத்திருக்கிறது என்பது பீதியைக் கிளப்புகிறது. ”வெள்ளைக்காரன்னா என்னலே மயிரா? அவன் அறிஞ்சவன்லா? அதையும் முளுசாட்டு சொல்ல வராம நம்மாளு அறிஞன்ங்கியான் என்னத்த சொல்ல? கலையறிஞ்சவன்னு சொல்லாம கலைஞன்ங்கியான். என்னத்த ஞய், பூன கதவிடுக்கிலே மாட்டினது மாதிரி?  ஏலெ வெள்ளக்காரன் என்ன சொல்லுகான்? நம்மள பாத்ததுமே அவன் என்ன கேக்கான்? அவ்டூ யூடூங்கியான். எப்டி போச்சுண்ணு அதுக்கு அர்த்தம். என்ன போச்சு? உனக்க அம்மைக்க தாலி. ஏலே, காலம்பற ஒருத்தன பாத்து அப்டி கேட்டா என்ன அர்த்தம்? காலையிலே போறது சொகமா போச்சாண்ணு கேக்கான்லே சவத்து மூளி. மலமறுத்தவன் யோகி. மலம் போனா உடம்பு சுத்தமாகும்”

சுய அனுபவத்தில் எப்போதுமே இதைப் பயன்படுத்த வேண்டும் ”எனக்க கிட்ட இந்நேற்று நம்ம ஒய்எம்சியே சாயிப்பு அவ்டூயூடூன்னு கேட்டப்ப கிளீன் சாயிப்பே கிளீன்னு சொன்னேன். சிரிச்சுப்போட்டான். அவனுக்கு அப்டி ஒரு சந்தோசம். அறிவுள்ளவன்லா? மும்மலமும் முறையே போகணும்ணாக்கும் சித்த வைத்தியம் சொல்லுகது. ஆணவம் கம்மம் மாயாவிண்ணு அது மூணு இருக்கு. வைத்தியனுங்க கிண்டி பாத்தா தெரிஞ்சுகிடுவானுக. வெள்ளைக்காரன் வைத்தியமறிஞ்சவன்லா. நாம கைரேகை பாக்கது மாதிரி அவன் நாக்கு ரேகை பாத்து ரோகம் சொல்லுகான். அப்பேர்ப்பட்ட வெள்ளைக்காரனை காந்தி போடாண்ணு அனுப்பிப்போட்டு இவரு ஒரு பண்டிதப்பயல பிடிச்சு நீதான் ராஜாண்ணு வச்சான். பண்டிதன் மருந்துகுடுக்கணும், நாடாண்டா வெளங்குமா? செரி போட்டு. நம்ம காலம் முடிஞ்சு போச்சு. இம்பிடு போயில எடுடே மக்கா”

வேறு உறுப்புகளைப் பயன்படுத்துபவர்களும் உண்டு. லிங்கமையவாதிகள் என்று அழைக்கப்படும் இவர்களால் எதையுமே அதுவாக ஆக்க முடியும். ஒரு சாய்வான சிரிப்புடன் அழுத்திச் சொன்னால் போதும். ”மச்சினா மூணு தொங்கிட்டுல்லா வருது” மூன்றாம் எண் பஸ் வந்ததும் ”மச்சினா என்ன நிக்கே தெறந்துல்லா கெடக்கு, கேறு” இப்படி போய்க்கொண்டே இருக்கும். சில்லடிச்சான் வைத்தியர் வாயெடுத்தால் பாடபேதம்தான் வருகிறது வழிநடைக்கு மரியாதையில்லை என்று பெண்டுகளுக்கு புகார். பிரச்சினையானபோது வைத்தியர் கேட்டார்.”அதுக்கு நான் என்ன செய்யியது மக்கா. தமிளு அந்தமாதிரி பாசைல்லா. எந்த வார்த்தைய எடுத்தாலும் டபுள் அர்த்தமுல்லா?”

”போவும் வே, நாங்களும் தமிளு திண்ணுதான் வளந்தோம். சும்மா வேளம் பேசப்பிடாது” ”மாப்பிள்ளே, இப்பம் நீரு டபுள் அர்த்தம் இல்லாத்த ஒரு வார்த்த சொல்லு பாப்பம். அப்பம் தெரியும் நான் சொல்லப்பட்டது என்னாண்ணு” யோசித்து நண்பர்களைப் பார்த்து கண்ணால் பேசி மேலும் குழம்பி புல்லறுக்கப்போகும் எஸ்டேட் பெயரையே சொன்னான் ஞானப்பன்.”மணலோடை” வைத்தியர் சிரித்தார். ”போலே, அவனுக்க அம்மைக்க மணலோடை!”

ஒரு கணக்கில் யோசித்தால் பாடம்தான் எதற்கு? பாடம் ஒருமாதிரி இரும்புத்தூண் போல நின்றுகொண்டிருக்கிறது. மூலம் திருநாள் மகாராஜா நட்டு வைத்த விளக்குக் கம்பம் மாதிரி. ஒன்றுக்கும் பிரயோசனம் இல்லை. வெற்றிலைக்கு மிஞ்சிய சுண்ணாம்பை வேண்டுமானால் தேய்க்கலாம். பாடபேதம் அந்தந்த ஊரில் அந்தந்தத்  தருணத்தின் தேவைக்கு ஏற்பக் கச்சிதமாக வடிவம் எடுக்கிறது. பயன் முடிந்ததுமே வீசப்படுகிறது. தோப்பில் ஒதுங்கிவிட்டு அவசரத்துக்கு கைநீட்டி எடுக்கும் சில்லுக் கருங்கல் மாதிரி. ஆங்கிலத்தில் ஹேண்டி என்று சொல்கிறார்கள். அதைத்தான் தெரிதா ஊகித்துச் சொல்லியிருக்கிறார். சொல்லின் மீது அர்த்தம் வழுக்கிச்செல்கிறது என்று. என்ன இருந்தாலும் அவரும் வெள்ளைக்காரர் அல்லவா?

மேலும் பழமொழிகள் என்பவை என்ன? அவற்றில் பாடம் என்று ஏதாவது உண்டா என்ன? முந்தைய பாடபேதம் அடுத்ததுக்குப் பாடமாக அமைகிறது. நாஞ்சில்நாட்டுப்பக்கம் சைவப்பிள்ளைமார் ‘ஊத்தைக்குழி உப்பிருந்த பாண்டம்’ என்கிறார்கள். கல்குளம் பக்கம் இன்னும் துல்லியமாக ‘ஊத்தின குழி உப்பிருந்த பாண்டம்’ என்கிறார்கள். விளவங்கோட்டில்  அது ‘ஊத்தின குழியில உப்பின பண்டம்’ என்றாகிறது. ஏனென்றால் பாண்டம் போலுள்ள சிக்கலான தமிழெல்லாம் அங்கே புழக்கத்திலே இல்லை. விஷயத்தை  உள்ளூரிலே அனுபவபூர்வமாக விளக்க முடியாவிட்டால் அந்தப் பழமொழியால் என்ன பயன்?

அதைக்கேட்டு கல்குளம் பக்கமிருந்து வந்த வைத்தியர் பொன்னப்பன் குபீரென்று சிரித்து பாடத்திருத்தம் செய்ய முற்படுவதில் என்ன அர்த்தமிருக்க முடியும்? ”இவனுகளுக்கு எல்லாம் வேற மாதிரில்லாவே இருக்கு. போறப்பாக்கப் பாத்தா மூணாம் கொலையிலே நாலு இருக்கும்ணுல்லா தோணுது!” என்றவர் ”இந்நேற்று ஒருத்தன் ஒரு பழமொளி சொல்லுகான். மத்த பளமொளி உண்டுல்லாவே. ஆட்டைக் குடிச்சு மாட்டைக் குடிச்சு மனுசனைக் குடிக்க வருதுண்ணுட்டு. அது நம்ம நாகராஜா சாமியப்பத்தியுள்ள பாட்டுல்லா? மேயப்போற ஆடிலயும் மாடிலயும்தான் நாகம் கேறிப் பாலைக்குடிக்கும். பிறவு அந்த மணத்துக்கு வந்திடும். பாலுகுடுக்கப்பட்ட ஸ்திரீகள் உறங்கிட்டு கெடந்தாளுகள்னா பதுக்கே போயி அவளுகளுக்க முலையில இருந்து குடிச்சுடுப்போடும். அவளுகளுக்கும் சொகமா இருக்குமாம். அத இந்த போக்கணம் கெட்டவனுக என்ன சொல்லுகானுண்ணா ஆட்டைக் கடிச்சு மாட்டை கடிச்சு மனுசனைக் கடிக்க வருதுண்ணு. எளவு, நாகராஜா சாமிய நாயா ஆக்கிப்புட்டானுகலே”

அதீத மன வருத்தம் கொண்டு வைத்தியர் சொன்னார் ”எளுதினவன் ஏட்டை கொடுத்தான் படிச்சவன் பாட்டை கொடுத்தான். நம்ம மூப்பிலாம்மாரு குடுத்த விதம் அப்டியாக்கும். எண்ணும் எளுத்தும் கண்ணுள்ளதாக்கும்னு சொன்னாங்க. அதாக்கும்வே பளமொளி. சும்மா வாயி புளிக்கேல்லண்ணா மாங்காயில புளிப்புண்ணு பேசிட்டு கெடக்கப்பிடாது. எல்லாத்துக்கும் ஒரு இது உண்டில்லா?” ”அதிப்பம் வைத்தியரே, ஓரோ திக்கிலே ஓரோ மொளியில்லா?” ” ஓகோ, அப்பம் உங்க ஊரிலே அப்பனை மாப்புள்ளன்னு விளிப்பியளோ? லே, மொளி ஒண்ணாக்கும். அதை மாத்துகதுக்கு மத்தவ, சரசதி நெனைச்சாலும் முடியாது. மறந்திரப்பிடாதுண்ணு அவ எளுதி கையிலேயே வச்சிருக்கா. வாறானுக…”

பொதுவாக ஊர்ப்பெயர்களில் பாடபேதம் இருந்தாலும் யாரும் வேறு ஊருக்குப் போனதுமாதிரி கேள்விப்பட்டதில்லை. ”சூடு செங்கல்லு அண்ணாச்சி, நல்ல ஆராம்புளி செங்கல்லு. கல்லுக்கு ஒண்ணார் ரூவா. சொல்லட்டா?” ”அருவாமுளியிலே உள்ள செங்கல்லுல மணலு கூடுதலாக்கும் கேட்டியா. வெள்ளத்திலே இட்டா உப்பு கணக்கா அலிஞ்சு போகும்” ”இப்ப திண்ணவேலி பிள்ளமாரு முளுக்க ஆர்வாழி கல்லுதான்லா யூஸ் செய்யுகானுக…ஒண்ணும் சொல்லி கேக்கல்லியே” ”மக்கா, திருணேலியிலே அது வேற. அங்கிண மள இல்லல்லா? அப்பம் செங்கல்லு என்ன மயிராட்டா அலியும்?”

”தீர்ணல்லிய சொல்லுகியோ. இங்கிண உவரியிலே என்னா காத்து! காத்திலே கருங்கல்லு உருகிபோயி நிக்குவு. ஆராமூளி செங்கல்லு நிண்ணு கேக்குதே…சும்மா பேசப்பிடாது” ”லே, இப்பம் சொல்லுகேன், பணோடி தாண்டி  ஆருவாழிக்கு இந்தால ஒற்ற ஒரு இடத்திலே இந்த செங்கல்லு வச்சு ஒரு நல்ல வீடு கேட்டிருக்கான்னா எனக்க மீசை உனக்குலே” ”உனக்க மீச எனக்கு என்னத்துக்கு, நல்ல வெளக்குமாத்து வேற இருக்கு வீட்டிலே. லே, ஓவரியிலேயும் பணவுடியிலேயும் என்ன, இந்தால நாரோயிலிலே நம்ம மதினா ஓட்டலு சாயிப்புக்க நாலுமாடி கெட்டிடம் நல்ல அருமூளி செங்கல்லிலேல்லா கெட்டியிருக்கு” ”பணேடியிலே கெட்டிலாம் அங்கிண சாஞ்ச மழை இல்ல. நாவரூலிலே கெட்டினா சுவரு செம்மிப்போயிரும்..”

ஒரு சிக்கலும் இல்லை. செய்தித் தொடர்பியலில் எல்லாச் சொல்லும் பொருள்குறித்தனவே  என்று சும்மாவா சொல்லியிருக்கிறார்கள்? ஆய்வாளர் அ.கா.பெருமாள் சொன்னார். ”ஆரல்வாய்மொழின்னு இப்பம் சொல்லுகா. சிலர் சரியான பேரு அரண்வாய்வழின்னு சொல்லுகதுண்டு. அது சும்மா ஒரு ஊகத்திலே சொல்லப்பட்டது. அது பண்டு சேர ராஜ்யத்துக்க வாசல்ங்கிறதுனால அந்த பேருங்கியா. அப்டி இல்ல, பழைய ஏடுகளிலே  ஆரல்வாய்னு மட்டும்தான் இருக்கு. ஆரல்னா மலைண்ணும் பொருள் உண்டு. மலைவழிண்ணு சொல்லி இப்டி ஆயிருக்கு.”  அந்தப் பழைய பாடத்தை நாம் இப்படி பேதம் செய்கிறோமா இல்லை இந்தப் பாடத்துக்கு அந்தக்கால பாடபேதம் உருவாக்குகிறோமா?

ஆன்மீக விஷயங்களில் பாடபேதம் உருவாக்குவதே ஞான ஆராய்ச்சி என்று சொல்லப்படுகிறது. பொதுவாக ஆன்மீகச் சொற்கள் கள்ளி மாதிரி, வேர் இலை தண்டு எங்கிருந்தும் முளைத்தெழும். ”யோகம் செய்யணுமானா அதுக்கான யோகம் இருக்கணும். சொல்றது புரியுதோ? யோகத்திலே தியானம்னா என்ன? தியா – நம்னு பெரியவா சொல்லியிருக்கா. நம்மை தியாகம் பண்றது தான் தியானம். கண்ணை மூடிண்டு மந்தரத்திலே மனசை நிறுத்திண்டு ஐம்புலங்களை அடக்கி ஆமை மாதிரி இருக்கறது தியானம். அப்டி பண்றச்சே என்னாறது, நம்ம குண்டலினி அப்டியே மெல்ல வாலை ஆட்டறது. குண்டலினின்னா நம்ம மூலாதாரத்திலே சுருண்டு கெடக்கிற பாம்பு. ஸ்நேக். அந்த வார்த்தையத்தான் நம்மாளுங்க தெரியாம குண்டின்னு சொல்லிண்டிருக்கா. படிச்சவா அப்டியெல்லாம் சொல்லப்படாது. தப்பு. மூலாதாரம் ஒரு தாமரை. அங்கே தாம் அரையா இருக்கறதனாலே அப்டி பேரு சொன்னாங்க. அதுக்கு மேலே ஒன்பது தாமரைகள் இருக்கு”

”தியானத்திலே இப்ப என்ன பண்றோம்? கண்ண மூடிண்டு ஒக்காந்துடறோம். அப்ப என்னாறது? முந்தானை வெலகியிருக்கா வெளியே போட்டிருக்கற செருப்ப எவனாவது எடுத்துண்டு போயிடுவானான்னு ஜாக்ரதையா இருக்கோம்ல? அதான் ஜாக்ரத்துண்ணு பெரியவா சொன்னா. அப்பறம் காலம்பற பொங்கல் தயிர்சாதம் சாப்பிட்டதனாலே அப்டியே தூங்கிடறோம். அதை ஸ்வப்னான்னு சொன்னா. அப்றம் சுஷுப்தி. அது நம்ம ஒருமாதிரி சுஷுப்தியா இருக்கிற நெலைமை. சுஷுப்தின்னா என்னன்னு கேட்டுண்டு இருக்கப்படாது. அது அநிர்வசனீயம். சொல்லவேமுடியாததுன்னு பெரியவா சொல்லியிருக்கா. அநிர்வசனீயம்னா என்னான்னும்  கேக்கப்படாது. அதான் சொல்லமுடியாதுன்னு சொல்லியிருக்கே,அப்பறம் என்ன? அதுக்குமேலே துரியம். துரியோதனன் அந்த நெலைமையிலே இருந்ததனாலே அவனுக்கு அப்டி பேரு வச்சிட்டா” என்று சென்றுகொண்டே இருக்கலாம். ஞானப்பொழிவுக்கு ஞானமே வழிகாட்டி. ஞானம் என்பதே முடிவில்லாத பாடபேதம் தானே என்று விஷ்ணுபுரம் நாவலிலே ஒரு பொன்மொழி வருகிறது. அதை எழுதியவர் சங்கர்ஷணர் என்கிற ஜெயமோகன் என்று பாடம். இல்லை அவர் திரிவிக்ரமன் நாயர் என்று வேறு யாரோ என்றும் பாடபேதம் உண்டு.

மதுரைப்பக்கம் ஒரு கல்லூரியில் நான் அழைக்கப்பட்டிருந்தபோது என்னுடைய பாடபேதங்களை நானே பார்க்கும் பேறு பெற்றேன்.”பைந்தமிழ்ப் புலவர் செயமோகனார் ஒரு தமிழ்த்தேனீ. சிந்தனைச் சிற்பி. நற்றமிழ்க் கொற்றன்” என்று சொன்னபோது நான் வேறு யாரோ என்றிருந்தாலும் ‘முத்தமிழ் வித்தவர்’ என்று சொல்லப்பட்டபோது என்னைத்தானோ என்ற ஐயம் ஏற்பட்டது. ‘இவர் அருமையான கவிதைகளை யாத்து நந்தமிழ் அன்னைக்கு நவமணிகளாய் அணிவித்த பெருமை உடைத்தவர்’ என்றபோது சரிதான் வேறு யாரோ என்று நிம்மதி. பொதுவாக எதையும் உடைக்கும் வழக்கமுள்ளவன் அல்ல நான்.

மேலும்  ”பெற்றதாயும் பிறந்த பொன்னாடும் நற்றமிழ் வானிலும் நனி சிறந்தனவே எனக் கற்ற தமிழைக் கரைசேர்ப்பதற்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்டிருக்கும் இவர் ஒரு பீயெஸென்னல் ஊழியர். நாஞ்சில்தமிழ் இவர் நாவில் கொஞ்சி விளையாடும்.  இவர் ‘நான் கடவுளா?’ என்ற திரைப்படத்திலே அகோரா என்ற வேடத்திலே நடித்திருக்கிறார். இவரைத்ப்தமிழ் விருந்தளிக்க வருக வருக என வரவேற்கிறேன்’ என்று அம்மணி முடித்தபோது மேடையில் ஒரு ஏழெட்டு நான்கள் நிற்கக் கண்டேன். அவர்களில் யார் பாடம் யார் பேதம் என்று என்னாலேயே கண்டு பிடிக்க முடியவில்லை. ஏன், இப்போதுகூட நான் அங்கேயே எங்கோ தடுமாறிக்கொண்டிருக்க என்னுடைய பாடபேதம்தான் என் வீட்டுக்கு வந்து விட்டதோ என்ற சந்தேகம் அவ்வப்போது ஏற்படுகிறது.

[மறுபிரசுரம்]

முந்தைய கட்டுரைஇந்தியா இஸ்லாம்-கடிதம்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம்: பூரணத்திலிருந்து… -பிரகாஷ் சங்கரன்