பகுதி பதினைந்து : அன்னைவிழி – 8
மாயை சாளரத்திரையை விலக்கி நோக்கி முன்பக்கம் தேரோட்டும் திரௌபதியையும் அப்பால் நுகத்தைச் சுமந்த பீமனையும் நோக்கிக்கொண்டிருந்தாள். அவள் கால்கள் கட்டுமீறி நடுங்கிக்கொண்டிருந்தமையால் தூண்மேல் பின்வளைவை சாய்த்து கைகளால் பற்றி கன்னத்தை அழுத்திக்கொண்டாள். அவள் நெஞ்சுக்குள் மூச்சும் இதயத்துடிப்பும் ஒன்று கலந்தன.
நுகத்தை இழுத்துச்சென்ற பீமனின் புயங்களின் பின்பக்கமும் பின் தோள்களிலும் தசைகள் காற்றுபட்ட பாய்மரம்போல புடைத்து இறுகின. ஆணின் தோளின் பின்பக்கத் தசைகளை அவள் அதுவரை அத்தனை கூர்மையாக நோக்கியதில்லை. புயத்தின் முன்பக்க அரவுபட தசையே விழிகளை முழுமையாக ஈர்த்துக்கொள்வதனால் போலும். பின் தசை குதிரையின் கழுத்துக்குக் கீழே இறுகி நெகிழும் தசைகளை ஒத்திருந்தது. நீரலை போன்ற மெல்லிய அசைவு. ஆனால் உறுதி ஆற்றல் என அது பொருள் தந்தது.
தோளில் இருந்து அவ்வசைவு இறங்கி விலா நோக்கிச் சென்றது. உடல் பெருத்திருந்தமையால் அவன் தலை சிறிதெனத் தெரிந்தது. பிடரிமயிர் வியர்வையில் திரிதிரியாக விலக தலைக்குக்கீழே காளைக்கழுத்தின் தசைமடிப்புகள் செறிந்து தெரிந்தன. இரு நுகங்களையும் தூக்கிய போது கைகளுக்கு அடியில் குதிரையின் அடிவயிறு போன்ற மென்மையான தசை இறுகியது. விலாவெலும்புகள் ஆற்றுமணலில் காற்று உருவாக்கிய மடிப்புவளைவுகள் என வரிவரியாக எழுந்தன.
கனத்த சகடங்களும் வெள்ளியாலான தகடுகள் மூடிய சிற்பச்செதுக்குகளும் கொண்ட பெரிய தேரை அவன் எளிதாக இழுத்துக்கொண்டு நடந்தான். சுருட்டிக் கவ்வும் இரண்டு மஞ்சள் மலைப் பாம்புகள். இரு பாறைப்பாளங்களாக விரிந்த முதுகின் நடுவே முதுகெலும்பு நீருக்குள் பாறைகள் என வரிசையாகத் தெரிந்த முண்டுகளாக எழுந்து பின் வளைந்து பள்ளமாகி ஓடையென ஆழம் கொண்டு இடையிலணிந்த தோலாடைக்குள் புகுந்து மறைந்தது. பெருந்தோள்விரிவுடன் இயையாத சின்னஞ்சிறிய இடைக்குக் கீழ் குதிரைத்தொடைகள்.
அவன் காலடியின் அதிர்வை வண்டியினூடாக அவளால் உணரமுடிந்தது. காலடி அதிர்வை ஏற்கும் யானத்து நீர்ப்படலமென அவள் உடல் அவ்வதிர்வை வாங்கிக்கொண்டது. தொடைகளில் முலைகளில் கழுத்தின் பின்னால் அவள் அவ்வதிர்வுகளை உணர்ந்துகொண்டிருந்தாள். அவள் உடல் அவ்வதிர்வுகளில் சிலிர்த்தது. அறியாமல் அவள் கை மேலெழுந்து கன்னத்தையும் கழுத்தையும் வருடி கீழிறங்கி முலைவிளிம்பில் நின்ற ஆரத்தின் முகமணியைப் பற்றி மெல்ல திருகிக்கொண்டது.
தேர் சாலைவழியாக சென்றபோது இருபக்கமும் நின்றிருந்த மக்கள் திகைத்து வாய் திறந்து நோக்குவதை மாயை கண்டாள். அது கடந்துசென்றபின்னரே அவர்கள் வியப்பொலியை எழுப்பினர். அந்தப்பார்வைகளை கற்பனைசெய்து அவள் அடைந்த கூச்சத்தை விரைவிலேயே கடந்தாள். எளிய மக்கள். விந்தைகளுக்கு அப்பால் வாழ்பவர்கள். உச்சங்களை அறியாதவர்கள். அவர்களின் விழிகள் நடுவே பறந்துசெல்லும் யக்ஷி நான்.
தேர்ச்சகடம் ஒரு கல்லில் ஏறியிறங்க குடம் அதிர்ந்து நடுங்கி அவள் இடமுலை சென்று தூணில் முட்டியது. ஓர் ஆணின் கை வந்து அதைத் தொட்டது போல அவள் துணுக்குற்றாள். பின்பு உள்ளங்காலை குளிரச்செய்து, தொடைகளை நடுங்கச்செய்து, உடலைக் கூசி மெய்சிலிர்க்கவைத்து, கண்களில் நீர்நிறைய, செவிகளில் ரீங்காரம் கேட்க, விழிப்பார்வை அலையடிக்க, தொண்டை அடைக்க, இடமும் காலமும் கரைந்தழிந்து மறைய, அவளை அலையெனச் சூழ்ந்து கவ்வி விழுங்கி பின்பு உமிழ்ந்து விடுவித்த காமஉச்சம் ஒன்றை அடைந்தாள்.
மீண்டு நெஞ்சுள் நிறைந்த மூச்சை உந்தி வெளிவிட்டபடி இடமுலையை தூணில் அழுத்தி தலையை அதில் சாய்த்து சாளரம் வழியாக வெளியே நோக்கி நின்றாள். தேர் சிறிய கற்களில் விழுந்தெழுந்து அதிர்ந்து சென்றுகொண்டிருந்தது. பீமனின் முதுகின் நடுப்பள்ளத்தில் வியர்வை உருண்டு கீழிறங்கி ஆடைக்குள் மறைந்தது. இரு தோள்களுக்குமேலும் இறுகி வளைந்திருந்த தசையின் தாளத்தை நோக்கிக்கொண்டிருந்தாள். அந்த அசைவை தன் காலடிப்பலகையில் தூணில் தன் உடலில் நெஞ்சில் விழும் அடிகளாக உணர்ந்தாள். எடையற்று மிதக்கும் நெற்றை கீழிருந்து எற்றி எற்றி தள்ளிச்சென்றன அலைகள்.
நுகமேடையில் ஒருகாலை தொங்கவிட்டு ஊசலாட்டியபடி தலை நிமிர்ந்து அமர்ந்திருந்த திரௌபதியின் விழிகளும் அவன் தசைகளிலேயே ஊன்றியிருந்தன. வலக்கையில் சுருட்டி வைத்திருந்த கரிய நிறமான சவுக்கை வருடிக்கொண்டிருந்த அவளது இடக்கையின் நடுக்கத்தை மாயையால் உணர முடிந்தது. திரும்பவில்லை என்றாலும் அவளும் தன் நோக்கை உணர்ந்துகொண்டிருக்கிறாள் என்று மாயை அறிந்தாள். அவள் உடலிலும் வண்டியின் அந்த தாளம் நிகழ்ந்துகொண்டிருந்தது.
செவிகளின் குழைகள் அந்தத் தாளத்தில் கூத்தாடின. புறங்கழுத்தின் மென்மயிர்ப்பிசிறுகள். பக்கவாட்டில் தெரிந்த கன்னத்தின் மெல்லிய பூனைமயிர். கழுத்தின் மூன்று ஒளிக்கோடுகள். வளைந்து தொய்ந்து பின் திரண்டு புயங்களாகிக் குழைந்து இறங்கிய தோளில் புதுப்பாளையின் மென்மையான வரிகள். அசைவில் திரும்புகையில் சற்றே தெரிந்து மறைந்த இமைப்பீலிகள். அமர்ந்திருந்தமையால் சற்று ஒசிந்த இடையில் விழுந்த வெட்டு மடிப்பு. அதற்கப்பால் சற்றே தாழ்ந்த சேலைக்கட்டு இருந்த இடத்தில் சருமத்தில் துணி அழுந்திய தடம். அரக்கில் பதிந்த அரசமுத்திரை…
கருநாகம் என நாபறக்க தன் மடியில் சுருண்ட குதிரைச்சவுக்கை இடக்கையால் நீவி வலக்கையில் விரித்து எடுத்தாள் திரௌபதி. அவள் செய்யப்போவதென்ன என்று உணர்ந்ததும் மாயை தேர்த்தூணை இறுகப்பற்றிக்கொண்டாள். திரௌபதியின் கையில் இருந்து சுருளவிழ்ந்து பறந்த சவுக்கின் கரிய நாக்கு பீமனின் தோளைத் தொட்டு வருடி கீழிறங்கி வளைந்து அவளை நோக்கிவந்து அவள் மார்பைத் தொட்டுத் தளர்ந்து சுருண்டு கைகளில் அமைந்தது. அக்கணம் சகட ஒலி வெடிக்க தேர் முன்னெழுந்து சாலையில் உருண்டோடியது.
தலைகுப்புற பள்ளமொன்றில் விழுந்து விழுந்து பாறைகளில் முட்டித் திரும்பி புரண்டு சென்று எங்கோ நின்று ஓய்ந்தபோது மாயை தன் கைநகங்கள் உள்ளங்கைகளில் குருதி கசிய புதைந்திருப்பதை உணர்ந்தாள். இதழ்களில் பல் பதிந்திருந்தது. தேர் சாவித்ரியின் ஆலயத்தின் முன்னால் நின்றபோது அவள் மீண்டு நாவால் இதழ்களில் விழுந்த பற்தடத்தை வருடிக்கொண்டாள்.
ஊழ்கத்திலமர்ந்த தேவி என அசையாமல் நுகமேடையில் அமர்ந்திருந்தாள் திரௌபதி. அப்பால் விரிமுதுகில் நீர் வழிந்த தடமென சவுக்கின் நீள்முத்திரை. அதுவே ஒரு நாக்கு போல. ஒரு தலைகீழ் செஞ்சுடர் போல. அல்லது அடிமரத்தில் ஒட்டியிருக்கும் அரவுக்குஞ்சு. பீமன் திரௌபதியை நோக்கி ஒருகணம் கூட திரும்பவில்லை. தலையை சற்றே தூக்கி உலுக்கி வியர்வையில் ஊறிய குழல்கற்றைகளை முதுகுக்கு கொண்டுவந்தான். அத்தனை பேருருவுக்கு எவ்வளவு சிறிய செவிகள். குதிரைக்கும் செவிகள் சிறியவைதான்.
தேரைக்கண்டதும் பெருமுரசும் சங்குகளும் முழங்க ஆலய முகப்பிலிருந்து ஓடிவந்த காவலர்கள் திகைத்து சற்று விலகி நின்றனர். தேரை முற்றத்தில் ஏற்றி வளைத்து நிறுத்திவிட்டு திரும்பிய பீமன் தன் இடைக்கச்சையை அவிழ்த்து கழுத்தையும் முகத்தையும் துடைத்தான். இருகைகளின் விரல்களையும் பின்னி நீட்டி சுள்ளிஒடியும் ஒலியில் நெட்டிமுறித்தபின் கழுத்தை இருபக்கமும் திருப்பி எளிதாக்கிக்கொண்டு விலகி ஆலயத்தின் வாயிலை நோக்கும் பாவனையில் விழிவிலக்கி நின்றான்.
பின்னால் குதிரைமேல் பெருநடையாக வந்த காவலர்களும் குதிரைகளுடன் ஓடிவந்த தேரோட்டியும் அணுகி திரௌபதியை நோக்கி நின்றனர். நுகமேடையில் அமர்ந்திருந்த திரௌபதி தன்னை மறந்தவள் போலிருந்தாள். மாயை மெல்ல “இளவரசி” என்றாள். அவள் கலைந்து திரும்பி மாயையை நோக்கினாள். செவ்வரி படர்ந்த கண்களின் நீர்ப்படலத்தில் பந்தவெளிச்சம் மின்னியது. நீராவி நிறைந்த நீராட்டறையிலிருந்து வெளிவந்தவள் போலிருந்தது முகம். பொருளற்ற நோக்குடன் அவளைத் தொட்ட விழிகள் திரும்பி சேவகர்களை நோக்கின. அவள் அகத்தில் காலமும் சூழலும் நுழைவதை உடலிலேயே காணமுடிந்தது.
விளையாட்டுச்சிறுமி போல காலை ஊசலாட்டி மெல்ல நழுவி இறங்கி ஆடையைப்பற்றி சுழற்றி இடைவழியே மறுகைக்கு கொண்டுவந்தாள். தேருக்கு உள்ளிருந்து தூணைப்பற்றிக்கொண்டு இறங்கிய மாயை திரைச்சீலையைப் பற்றியபடி விரிந்த விழிகளுடன் நின்றாள். திரௌபதி திரும்பி தன் குழலை நீவி பின்னால் செருகி முலைக்குவட்டில் ஒசிந்திருந்த சரப்பொளி மாலையை இழுத்து சரிசெய்து நிமிர்ந்து பீமனை நோக்கி விழியால் அருகழைத்தாள்.
பீமன் வந்து அருகே பணிந்து நின்றதும் புன்னகையுடன் “அரிய ஆற்றல் வீரரே. அந்தணர்களில் இத்தனை ஆற்றலை எவரும் கண்டிருக்கமாட்டார்கள்” என்றபின் தலையை சற்றுச் சரித்து தன் கழுத்தில் இருந்த ஆரமொன்றை தலைவழியாக கழற்றினாள். அவ்வசைவில் அவள் நீண்ட கழுத்து ஒசிய கன்னங்களிலும் ஒளி விழுந்து மறைந்தது. மாலையின் பதக்கம் அவள் முலைக்குவைக்குள் இருந்து சரப்பொளி மாலையின் அடுக்குகளுடன் சிக்கி மேலெழுந்து வந்தது. அதை விலக்கி எடுத்து உள்ளங்கையில் இட்டு குவித்து அவனிடம் நீட்டி “இது உங்களுக்குப் பரிசு” என்றாள்.
அவளுடைய நீண்ட கைகளை நோக்கியபடி பீமன் திகைத்து நின்றான். அவள் அதை அளித்தபோது சிற்றாடை கட்டிய சிறுமியைப்போலிருந்தாள். நிமிர்வுகொண்ட அரசமகளுக்குள் இருந்து கதவைத் திறந்து குதித்து வந்து நிற்பவள் போல. பீமன் தன்னை மீட்டு மீண்டும் தலைவணங்கி அதை பெற்றுக்கொண்டான். “எத்தனை ஆற்றல்… இத்தனை எளிதாக இழுத்துக்கொண்டு வருவீர் என அறிந்திருந்தால் தேரை சுமந்துவரமுடியுமா என்று கேட்டிருப்பேன்.” அவள் சிரிப்பும் சிறுமியை போலிருந்தது. குரலில் கலந்திருந்த மழலையை மாயை எப்போதுமே கேட்டதில்லை.
“வேண்டுமென்றால் சுமக்கிறேன் இளவரசி” என்றான் பீமன். “அய்யோ! வேண்டாம்” என்று வெட்கி அவள் சற்று உடல்வளைந்தாள். மாயை வியப்புடன் அவளையே நோக்கி விலகி நின்றாள். “நான் மகிழ்ந்தேன், ஆனால் என் தோழி மிக அஞ்சிவிட்டாள். தேருக்குள் அவள் அஞ்சும் ஒலிகள் கேட்டன” என்றாள் திரௌபதி. மாயை தன் வலக்கையால் உதடுகளை அழுத்தி பார்வையை விலக்கி தோள்குறுகினாள். பீமன் அரைக்கணம் அவளை நோக்கியபின் ”சாலையில் குதிரைக்குளம்புகளால் பெயர்க்கப்பட்ட கற்கள் இருந்தன இளவரசி” என்றான்.
“ஆம், இம்மண விழாவில் சாலையெங்கும் குதிரைகள் ஓடிக்கொண்டே இருக்கின்றன” என்றாள் திரௌபதி. “மணவிழாவுக்குத்தான் நீரும் வந்திருப்பீர் இல்லையா?” பீமன் “ஆம் இளவரசி” என்றான். திரௌபதி இதழ்களின் இருபக்கமும் மெல்லிய மடிப்பு விழ சிரித்து “மணநிகழ்வுக்கு வருக…” என்றாள். பீமன் அவனை அறியாமல் நிமிர்ந்து நோக்க “அங்கே நீங்கள் போதும் எனும் அளவுக்கு உணவு கிடைக்கும்” என்றாள். “வருகிறேன் இளவரசி” என்றான் பீமன்.
தலையை அசைத்துவிட்டு மறுகணமே மிடுக்குடன் தலைதூக்கி புருவத்தால் ஸ்தானிகரிடம் செல்லலாம் என்று சொல்லி திரௌபதி நடந்தாள். மாயை தளர்ந்த காலடிகளுடன் அவளுக்குப்பின்னால் சென்றாள். கற்படிகளில் ஏற அவளால் முடியவில்லை. காய்ச்சல் கண்டு உடலின் ஆற்றல் முழுக்க ஒழுகிச்சென்றதுபோலிருந்தது. காய்ச்சலேதான். உடலெங்கும் இனிய குடைச்சல் இருப்பதுபோல, வாயில் கசப்பும் கண்களில் காந்தலும் இருப்பதுபோல. எண்ணங்கள் சிறகற்று காலற்று புழுக்களாக நெளிந்தன.
படிகளில் ஏறி ஆலயவாயிலின் வழியாக அப்பால் தெரிந்த சாவித்ரிதேவியின் ஆளுயரச்சிலையை நோக்கினாள். வலப்பக்கம் நீலநிற துர்க்கை, மஞ்சள் நிற லட்சுமி முகங்களும் இடப்பக்கம் வெண்ணிற சரஸ்வதி, பச்சை நிற ராதை முகங்களும் நடுவே பொன்னிற முகத்தில் விரிந்த விழிகளுடன் சாவித்ரி செந்நிறத் தாமரைமேல் நின்றிருந்தாள். பத்து கரங்களில் இடது கீழ்க்கரம் அஞ்சல் முத்திரை காட்டியது. மேற்கரங்களில் கதையும் அமுதகலசமும் பொன்னிறத்தாமரையும் இருந்தன. வலது கீழ்க்கரம் அடைக்கலம் என தாள் காட்டியது. மேற்கரங்களில் பாசமும் சூலமும் மழுவும் இருந்தன. இரு பக்க மேற்கரங்களில் சங்கும் சக்கரமும் ஏந்தியிருந்தாள்.
இரண்டாம் பூசனை நிகழ்ந்துகொண்டிருந்தது. உள்ளிருந்து பிருஷதி வந்து “எங்கு சென்றீர்கள்? சற்றுநேரம் காத்திருந்துவிட்டு நான் உள்ளே வந்துவிட்டேன்” என்றாள். “நாங்கள் ஓர் அரக்கனை வைத்து தேரை இழுக்கச்செய்தோம்” என்றாள் திரௌபதி. அதை விளங்கிக்கொள்ளாமல் பிருஷதி “அரக்கனையா? ஏன்” என்றபின் திரும்பி “உளறாதே… நீ காவியம் படிப்பது இப்படி உளறுவதற்காகத்தானா?” என்றாள்.
“பட்டத்து இளவரசர் வந்திருக்கிறாரா?” என்றாள் திரௌபதி. ஒருகணம் மாயையின் விழிகள் வந்து திரௌபதியின் விழிகளை தொட்டுச்சென்றன. “ஆம், பட்டத்து இளவரசனேதான். கோட்டைக்காவலன் வேலுடன் நிற்பதைப்போல் நின்றுகொண்டிருக்கிறான். முடிசூடியவனெல்லாம் அரசனா என்ன? அரசன் என்றால் அவன் அரசனுக்குரிய நிமிர்வுடன் இருக்கவேண்டும்…“ என்றாள் பிருஷதி. “திருஷ்டத்யும்னன் எங்கே?” என்றாள் திரௌபதி புன்னகைத்து. அப்போதுதான் அவள் விளையாடுகிறாள் என உணர்ந்த பிருஷதி “எங்கிருக்கிறான் என எனக்கென்ன தெரியும்? அவனுக்கு இங்கே ஏது இடம்?” என்றபின் “வா” என உள்ளே சென்றாள்.
அவர்கள் பேச்சை சித்தத்தில் ஏற்றாமல் உடன் சென்ற மாயை சித்ரகேது வாளேந்தி நின்றிருப்பதைக் கண்டபின்னரே பக்கவாட்டில் அரசத்தேர் கொடி துவள நிற்பதை நோக்கினாள். திரௌபதி படிகளில் மேலேறி பலிமண்டபத்தின் வலப்பக்கமாகச் சென்று பெண்கள் நிற்கும் இடத்தில் நின்றாள். அவளருகே தாலமேந்தி நின்ற மாயை மீண்டும் தேவியை ஏறிட்டபோது அறியாமல் நாணி விழி விலக்கிக் கொண்டாள். பாஞ்சால இளவரசர்களான மித்ரனும் யுதாமன்யுவும் விரிகனும் சுரதனும் சத்ருஞ்ஜயனும் சித்ரகேதுவின் இருபக்கங்களிலும் நின்றிருந்தனர்.
சித்ரகேதுவின் அருகே நின்றிருந்த முதுசூதர் “சரஸ்வதி வாக்தேவியின் முழுமை. இவள் சாவித்ரி. வாக்கில் குடிகொள்ளும் ஒளி என்பர் கவிஞர். வேதவேதாங்கங்களில் சந்தமாக குடிகொள்கிறாள். நீரலைகளிலும் இளமலர்களிலும் பறவைகளின் சிறகுகளிலும் ஒளியாகத் திகழ்கிறாள். மூன்று தலைகளும் எட்டு பொற்சிறகுகளும் கொண்ட ஒளிவடிவான காயத்ரி அன்னையின் மகள். ஒவ்வொருநாள் காலையிலும் அன்னை சூரியனுக்கு முன் எழுந்து இப்புவியில் உள்ள அனைத்தையும் தன் கைகளால் தொடுகிறாள். இரவின் இருளில் அவை வெறும் பொருளாக அமர்ந்திருக்கின்றன. அன்னையின் அருளால் அவை பொருள் கொள்கின்றன” என்றார்.
திரௌபதியை நோக்கி தலைவணங்கி “ஒவ்வொரு பொருளுடனும் பிணைந்திருக்கும் கனவுகளால் ஆன பிறிதொரு உலகை ஆள்பவள் அன்னை. ஆகவே அவளை ஸ்வப்னை என்கின்றன நூல்கள். சொற்கள் சரஸ்வதியின் ஒளியால் பொருள் கொள்கின்றன. அன்னையின் ஒளியால் கவிதையாகின்றன. எட்டு பளிங்குச் சிறகுகளுடன் அநுஷ்டுப்பாகி பறக்கிறாள். ஒன்பது வெள்ளிச்சிறகுகளுடன் ப்ருஹதியாகி ரீங்கரிக்கிறாள். பத்து பொற்சிறகுகள் கொண்டு பங்க்தி ஆகிறாள். பன்னிரு அனல் சிறகுகளுடன் த்ரிஷ்டுப்பாகிறாள். பன்னிரண்டு வைரச்சிறகுகளுடன் அவளே ஜகதி ஆகிறாள். இருபத்தாறு விண்நீலச் சிறகுகளுடன் உத்க்ருதியாகிறாள். அன்னை உருவாக்கும் அழகுகள் எல்லையற்றவை” என்றார் சூதர்.
கைகளைக் கூப்பி விழிகளைத் தூக்கி அன்னையை நோக்கி நின்றிருந்த திரௌபதியை மாயை ஓரக்கண்ணால் பார்த்தாள். அங்கிருந்து விரைவில் அகன்றுவிடவேண்டும் என்றுதான் அவளுக்கு தோன்றிக்கொண்டிருந்தது. உள்ளே மணியோசைகள் எழுந்தன. அன்னைக்குப்பின்னால் பொன்னிறப்பட்டுத்திரைகளை சுழற்றிச் சுழற்றிக் கட்டியிருந்தனர். அவற்றுக்குப்பின்னால் இருந்த நெய்விளக்குகளில் சுடர்கள் எழுந்தபோது இளங்காலை என பட்டுத்திரைகள் ஒளிகொண்டன.
முரசுகளும் கொம்புகளும் சங்குகளும் மணிகளும் சேர்ந்து ஒலித்தன. மேலும் மேலும் விளக்குகள் சுடர்விட கருவறைக்குள் பொற்பெருக்காக புலர்காலை நிறைந்தது. இருபக்கமும் நின்றிருந்த பூசகர்கள் வெண்கவரி வீசினர். முதன்மைப்பூசகர் சுடர்ச்செண்டைச் சுழற்றி ஒளியாட்டு காட்டினார். நெஞ்சு விம்ம கண்களை மூடிக்கொண்டாள்.
ஒற்றைச்சுடருடன் வெளியே வந்த முதன்மைப்பூசகர் படையலுணவின் மேல் கவளத்தை வீசி வாள் போழ்ந்து பங்கிட்டு முதல் கவளத்தை சித்ரகேதுவுக்கு அளித்தார். அருகே நின்றிருந்த மித்ரனும் யுதாமன்யுவும் விரிகனும் சுரதனும் சத்ருஞ்ஜயனும் கவளத்தை பகிர்ந்து உண்டனர். திரௌபதியும் கவளத்தை உண்டபின் கைகூப்பி தொழுதாள்.
சித்ரகேது வாளைத் தாழ்த்த ஸ்தானிகர் வந்து அதை வாங்கிக்கொண்டார். திரௌபதி “வணங்குகிறேன் மூத்தவரே” என்று சித்ரகேதுவிடம் சொன்னாள். அவன் அருகே வந்து “தந்தையை சரஸ்வதியின் ஆலயத்தில் பார்த்தீர்கள் என்றார்கள் சேவகர்” என்றான். “ஆம், அரசியும் அவரும் துர்க்கை ஆலயத்திற்கு செல்கிறார்கள்” என்றாள் திரௌபதி.
“இன்றிரவு முழுக்க பூசனைகள்தான். காம்பில்யம் தொன்மையான நகரம். இங்கே மானுடரைவிட தெய்வங்கள் கூடுதல்” என்ற சித்ரகேது “ராதாதேவியின் ஆலயத்தை வழிபட்டபின் நீங்கள் சென்று ஓய்வெடுக்கலாம் இளவரசி” என்றான். “ஆம், நான் களைத்திருக்கிறேன். ஆனால் என்னால் துயிலமுடியுமா என்று தெரியவில்லை” என்றாள். “நீங்கள் துயின்றாகவேண்டும் தமக்கையே. நாளை பேரழகுடன் அவை நிற்கவேண்டுமல்லவா?” என்றான் சுரதன். திரௌபதி அவனை நோக்கி புன்னகை செய்தாள்.
அவன் அருகே வந்து “எத்தனை அரசர்கள் வந்துள்ளார்கள் என்று ஒற்றனை கணக்கிட்டு வரச்சொன்னேன். நூற்றெட்டு அரசர்கள் மணம்நாடி வந்துள்ளனர். எழுபத்தெட்டு முதிய அரசர்கள் விருந்தினராக வந்திருக்கிறார்கள்” என்றான். “நெடுந்தொலைவிலிருந்து வந்திருப்பவர் தென்னக்கத்தின் பாண்டிய மன்னர். தங்களைப்போலவே கருமையானவர். நூல்கற்றவர், பெருவீரர் என்கிறார்கள்.”
திரௌபதி “எல்லா அரசர்களுக்கும் சூதர்கள் அளிக்கும் புகழ்மொழி ஒன்றே அல்லவா?” என்றாள். மித்ரனும் யுதாமன்யுவும் நகைக்க சத்ருஞ்சயன் “ஆம், இளையவளே. நேற்று ஒருவரை மலையென எழுந்த தோள்கள் கொண்டவர் என்று சூதர் பாடக்கேட்டு நானும் இவனும் நேரில் காணச்சென்றோம். கீழே விழுந்த பல்லி போன்ற உடல்கொண்டவர். ஆனால் தட்சிணகோதாவரியில் ஒரு துறைமுகத்தை ஆள்கிறார்” என்றான்.
“அத்தனைபேரின் அடைமொழிகளிலும் தவறாமல் வருபவர்கள் பாண்டவர்கள்தான் இளையவளே” என்றான் மித்ரன். “வில்லவன் என்றால் பாண்டவனாகிய அர்ஜுனனுக்கு நிகரானவன். தோள்வலிமை கொண்டவன் என்றால் பீமனுக்கு நிகரானவன். அவர்கள் இப்போது இல்லை என்பதனால் இவர்களே பாரதவர்ஷத்தில் நிகரற்றவர்கள்…” திரௌபதி புன்னகைத்து “அவர்கள் வந்து அவைநின்றால் இவர்கள் என்ன செய்வார்கள்?” என்றாள்.
அவர்கள் அனைவரின் விழிகளும் ஒரே கணம் மாறுபட்டன. “அவர்கள் வரக்கூடும் என்றே தந்தை எண்ணுகிறார் இளவரசி. அரண்மனையின் பொறிவில் அர்ஜுனனுக்காகவே அமைக்கப்பட்டிருக்கிறது” என்றான் மித்ரன். திரௌபதி புன்னகைத்து “சிறுத்தைகளை பொறிவைத்துத்தான் பிடிக்கிறார்கள்” என்றாள். மித்ரன் நகைத்து “யானைகளை குழிதோண்டி பிடிக்கலாம்… பார்ப்போம்…” என்றான். சத்ருஞ்சயன் “குழிக்குள் பெண்சிம்மம் காத்திருந்ததென்றால் யானை என்ன செய்யும்?” என்றதும் உடன்பிறந்தவர்கள் நகைத்தனர்.
பிருஷதி படையலுணவை பெற்றுக்கொண்டு அருகே வந்து சீற்றத்துடன் “போதுமடி. நாம் செல்லவேண்டிய ஆலயம் இன்னும் ஒன்று எஞ்சியிருக்கிறது” என்றாள். அகல்யையின் மைந்தர்களின் விழிகளை தவிர்த்தாள். அவர்கள் கண்களில் சிரிப்புதான் இருந்தது. மித்ரன் “சிம்மம் செந்நிறமானது… இளைய அன்னையை சிம்மம் என்று சொல்லலாம். மூத்தவள் கருஞ்சிறுத்தை” என்றான். பிருஷதியின் முகம் மாறுபட்டது. புன்னகையை கடுகடுப்பால் அடக்கிக்கொண்டு “போதும்… எனக்கு எவர் புகழ்மொழியும் தேவையில்லை… நாங்கள் சூதர் பாடலை தாலாட்டாகக் கேட்டு வளர்ந்த குலம்” என்றாள்.
“ஆம், அதைத்தான் சொன்னேன்” என்றான் மித்ரன். “சிம்மம் தன்னை சிம்மம் என்று எப்போதும் அறிந்திருக்கிறது. சிறிய உயிர்களுக்குத்தான் தன்னை தனக்கே நிறுவிக்கொள்ளவேண்டியிருக்கிறது.” பிருஷதி மேலும் மலர்ந்து ”நாளை எத்தனை அரசர்கள் பங்குகொள்கிறார்கள் மைந்தா?” என்றாள். மித்ரன் ஒருகணம் திரௌபதியை பார்த்துவிட்டு புன்னகையுடன் “நூற்றி எட்டு அரசர்கள்…” என்றான். “நூற்றேழுபேரையும் வெல்லும் ஒருவனை தேர்ந்தெடுக்கவேண்டியது இளையோள் கடமை என்று சொல்லிக்கொண்டிருந்தேன்” என்றான் சத்ருஞ்சயன்.
”ஆம், அதைத்தான் செய்யவேண்டும்” என்று புரிந்துகொள்ளாமல் நிமிர்வுடன் சொன்ன பிருஷதி “இவள் அனைத்தும் அறிந்தவள். ஆகவேதான் இவளை பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தினி என்கிறார்கள்” என்றாள். “இவளை மணப்பவன் சக்ரவர்த்தி” என்று சொல்லி திரௌபதியின் தோளை தொட்டாள். மித்ரன் “சக்ரவர்த்தி என ஒருவன்தான் இருக்கவேண்டுமா என்ன? நம்குலத்தில் ஐவர் வழக்கம்தானே?” என்றான்.
பிருஷதி முகம் சிவந்து “சீ! என்ன பேச்சு இது?” என்றபின் திரௌபதி தோளைத் தள்ளி “வாடி” என்றாள். திரௌபதி திரும்பி புன்னகைத்தபடி பிருஷதியுடன் வெளியே நடந்தாள். “இதென்ன எல்லோரும் ஒரே பேச்சையே பேசிக்கொண்டிருக்கிறார்கள்?” என்றாள் பிருஷதி. “நான் என்ன கண்டேன்? உண்மையிலேயே நம் குலவழக்கம் அதுதானோ?” என்றாள் திரௌபதி. “பேசாமல் வாடி… இந்தப்பேச்சே கீழ்மை” என்றாள் பிருஷதி. “நீங்கள்தானே சொன்னீர்கள் கீழ்மை அல்ல என்று. என் முப்பாட்டியைப்போல நானும் அங்கே மேடையில் ஐவருக்கும் மாலையிட்டால் ஷத்ரியர் என்ன சொல்வார்கள்?”
“பேசாமல் வா” என்று பிருஷதி முன்னால் நடந்தாள். பின்னால் சென்றபடி “உண்மையிலேயே அதைத்தான் நினைக்கிறேன்” என்றாள். “வாயை மூடு” என்று சற்று உரக்கவே சொன்ன பிருஷதியை சேவகர் சிலர் திரும்பி நோக்கினர். அவள் விரைந்து முன்னால் நடந்து விலகிச்சென்றாள். திரௌபதி மெல்ல நடையைத் தளர்த்த மாயை வந்து இணைந்துகொண்டாள்.
“தேவி முன் நிற்கமுடியவில்லையடி” என்றாள் திரௌபதி. மாயை திடுக்கிட்டு திரும்பிப்பார்த்து உடனே விழிகளை விலக்கிக் கொண்டாள். “அந்த உடலை நான் அறிந்தவிதம்…” என்று சொல்லவந்து மாயை நிறுத்திக்கொண்டாள். “துர்க்கையின் சிம்மம் என்றே நான் உணர்ந்தேன் தேவி…” என்றாள் மாயை. திரௌபதி “ஆம்” என்றாள். “ஆனால்…” என ஏதோ சொல்லவந்து நிறுத்திக்கொண்டு “நீ அவர்கள் இருவரின் உருவ ஒற்றுமையை கண்டாயா?” என்றாள்.
மாயை திகைத்து அக்காட்சியை அகத்தில் கண்டு நெஞ்சில் கையை வைத்தாள். திரௌபதி “ஆம், இருவரும் ஒன்றுபோலிருந்தனர். நிறமும் தோற்றமும். அதை அப்போதே கண்டேன் என இப்போதுதான் தெரிகிறது. படியேறி வந்த அர்ஜுனனைக் கண்டு நான் திகைத்தது அவன் கர்ணனைப்போல் இருப்பதை என் விழி அறிந்ததனால்தான்… ஆனால் அவ்வொற்றுமையை என் சித்தம் அறிவதற்குள்ளேயே வேறுபாட்டை அது அறிந்துகொண்டிருந்தது” என்றாள். மாயை ஒன்றும் சொல்லவில்லை. “ஏனென்றால் அது நான் தேடிக்கொண்டிருந்த வேறுபாடு.”
பிருஷதி அப்பால் சென்று நின்றபடி “வாருங்களடி” என்றாள். மாயை உதட்டை சுழித்தபடி “ஏன் இத்தனை சொற்களை உருவாக்கிக் கொள்கிறோம் இளவரசி? அறிவதற்கு இத்தனை சொற்கள் எதற்கு? நாம் அறியவிரும்பாத எதையாவது இச்சொல்சூழ்கையால் ஒளிக்க முயல்கிறோமா?” என்றாள். திரௌபதி சினத்துடன் “எதை?” என்றாள். “நாம் இன்னமும் சொல்லாக ஆக்கிக்கொள்ளாத ஒன்றை” என்றாள் மாயை. “இப்படிப்பேசினால் நீ காவியம் கற்றவள் என நிறுவப்படும், இல்லையா?” என்றாள் திரௌபதி ஏளனத்துடன். “இந்த ஏளனம்கூட ஒரு பாவனையோ?” என்றாள் மாயை. திரௌபதி சட்டென்று சிரித்து “போடி” என்றாள்.
பிருஷதி “என்னடி பேசிக்கொண்டே இருக்கிறீர்கள்? அரண்மனையில் பேசாத பேச்சா இங்கே?” என்றாள். திரௌபதி “வந்துகொண்டிருக்கிறோம்” என்று அவளிடம் சொல்லிவிட்டு “சொல்” என்றாள். மாயை “இளவரசி, அந்த மஞ்சள் அரக்கனை நீங்கள் இன்னமும் போகச்சொல்லவில்லை. தேரை சுமக்கவேண்டுமோ என எண்ணி அவன் அங்கே காத்திருக்கிறான்” என்றாள். திரௌபதி திடுக்கிட்டு “அய்யோ… நான் அவனை பரிசளித்து அனுப்பினேனே” என்றபடி திரும்பியதுமே மாயை விளையாடுகிறாள் என உணர்ந்து “என்னடி விளையாட்டு?” என்றாள்.
“ஏன் திடுக்கிட்டீர்கள்? அவனை நீங்கள் விரும்பினீர்கள் என்றால் ஏன் அந்த விலக்கம்?” என்றாள் மாயை. “விரும்பினேன். அப்போது அவன் பேருடல் என்னை முற்றாக சூழ்ந்திருந்தது. என் ஐம்புலன்களாலும் அவனை அறிந்தேன். ஆனால் அக்கணங்கள் முடிந்ததுமே அவ்வுடலை உதறிவிட்டு வெளியேறவே விழைந்தேன்” என்றாள் திரௌபதி. மாயை “ஏன்?” என்றாள். ”தெரியவில்லை!” “ஆண் உடலின் ஊன்வாசம் கலவியின்போதன்றி பெண்களுக்குப் பிடிப்பதில்லை என்பார்கள்” என்றாள் மாயை.
“என்ன?” என்றாள் திரௌபதி கண்களைச் சுருக்கி. “அர்ஜுனன் உங்களை உடல்மட்டுமாக உணரச்செய்தான். இவன் உடலை மட்டுமே அறிபவளாக உங்களை ஆக்குகிறான். காமத்தோடு அன்றி வேறெவ்வகையிலும் நீங்கள் இவர்களுடன் இருக்க முடியாது.” திரௌபதியின் விழிகள் சற்றே அசைந்து ஏதோ எண்ணம் ஓடிச்சென்றதை காட்டின. “பின் எவருடன் நான் இருக்கமுடியும் என்கிறாய்?” என்றாள் திரௌபதி. “கர்ணனுடன்… அவன்முன் நீங்கள் கன்னியிளம்பேதையாக நாக்குழற கால் நடுங்க நின்றிருக்கலாம். இன் சொல் பேசலாம். இரவும் பகலும் பேசினாலும் தீராத உள்ளத்தை அவனுடன் இருக்கையில் மட்டுமே கண்டடைவீர்கள்.”
திரௌபதி பெருமூச்சு விட்டு “என்னடி இக்கட்டு இது? ஒருத்தி தன் உள்ளத்தின் கண்ணிகளிலேயே இப்படி மாட்டிக்கொள்ள முடியுமா என்ன?” என்றாள்.
வெண்முரசு அனைத்து விவாதங்களும்
மகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக
வெண்முரசு வாசகர் விவாதக்குழுமம்