அன்புள்ள ஜெமோ,
ஒரு மென்பொருள் அமைப்பாளனாக எனக்கு நீங்கள் வெளியிட்டுவரும் நவீன அடிமை முறை பற்றிய கட்டுரை மற்றும் கடிதங்கள் டிசியெஸ் நிறுவனத்துன் ஆட்குறைப்பு அறிவிப்பும் இந்தக்கடிதத்தை எழுத ஆர்வத்தைத்தூண்டின.
முதன்மையாக நான் அடிப்படையில் மென்பொருட்துறையில் பணிபுரிய ஆர்வமில்லாமல் மின்னணுப்பொறியியட்துறையில் மிகக்குறைவான சம்பளம் பெற்று என் பணி வாழ்வைத்துவங்கினேன். பணி ஆரம்பித்த முதல் சில நாட்களில்
ஒரு ஆலையில் எனக்குப்பயிற்சி அளிக்கப்பட்டது. அது அனைத்துத்தரப்புத்தொழிலாளர்களும் பணி புரிந்த ஒரு சிறுதொழில் ஆலை. அங்கு நான் பார்த்த உடலுழைப்புக்கும் அதற்குக்கிட்டிய சொற்ப வரவும் நிரந்தரமற்ற நிலையும் தொழிலாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கக்கூடியதில்லை.
நான் பொறியியல் பட்டப்படிப்பு படித்திருந்ததால், பயிற்சி முடிந்தவுடன் ஊரூராக சென்று களத்தில் வேலை செய்யப்பணிக்கப்பட்டேன். மென்பொருள் துறையில் சேர்ந்த என் நண்பர்கள் மேற்படிப்புக்கு அமெரிக்கா சென்று அங்கே எச் ஒன் விஸா எடுத்துக்கொண்டு வேலையும் செய்தனர். 1 வருடம் மேல் என்னால் நான் புரிந்த வேலையைத்தொடர முடியாமல் நானும் மென்பொருள் ஜோதியில் ஐக்கியமானேன்.
அதன் பின் என் வளர்ச்சியும் சீரானதாக இருந்தது, ஆனால் ஒரு கட்டத்தில் குடும்பத்திற்கும் அலுவலகத்திற்கும் நேரம் பங்கிடமுடியாமல் போனது. நாளின் சிறந்த பங்கு அலுவலகம் செல்ல வாகன நெரிசலில் வீணானது. மீதி பொருளற்ற கலந்துரையாடல்களிலும் மேலதிகாரிகளின் திட்டமிட்ட மெத்தனத்திலும் போனது.
நான் சிறிய கம்பெனிகளில் கண்ட பொறி பறக்கும் செயலூக்கம் பெரிய நிறுவனங்களில் இல்லை. ஆனால் பெரிய நிறுவனங்கள் அளிக்கும் பாதுகாப்பு(ப்ரவிடண்ட் பண்ட், ஈட்டிய விடுமுறை, காப்பீடு) சிறிய நிறுவனங்களில் இல்லை.
இந்த நிலையில் ஆன்சைட் செல்லலாமென்று முயன்றேன். அதற்கு பிடிக்கவேண்டிய காக்கா, குருவி என்ற எல்லாப்பறவைகளையும் பிடித்தால் அமெரிக்காவின் விஸாக்கொள்கைகள் அதையொட்டி பெரிய நிறுவனங்கள் காட்டும் பம்மாத்துகள் கொஞ்ச நஞ்சமல்ல.வெளினாட்டில் கொடுக்க வேண்டிய சம்பளமும் முறைப்படுத்தப்பட்டதல்ல. எல் ஒன் என்ற விஸாவை பெரு நிறுவனங்கள் மிக அதிகமாக துஷ்பிரயோகம் செய்தன ஒபாமா விழித்துக்கொள்வதற்கு முன். இப்போது பெரும்பாலும் எல் ஒன் விஸா வழங்குவதையே அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளதென்றால்(அங்கொன்றும் இங்கொன்றுமாய் தான் கொடுக்கிறார்கள்) எத்துணை துஷ்பிரயோகம் இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.
இவ்வளவிற்கும் பிறகு அமெரிக்கா சென்றால் நினைக்கும் துறையிலோ அல்லது மென்பொருள் அமைப்பிலோ பணி செய்ய முடியாது. பயிற்சி, புரமோஷன் என எதைக்கேட்டாலும் மறுக்கப்படும் (அது தான் ஆன்சைட் போயிட்டில்ல ஒன்னும்கெடயாது என்ற பதில் தான்). எதைக்கேட்டாலும் கம்பெனி பாலிஸி படி என்பார்கள். ஆனால் மேலாளர்களின் நீர்விருந்தில் ஆஜராகி, அவர் குடும்ப நிகழ்வுகளில் கலந்து கொண்டு சரணம் பஜே என்றவர்களுக்கு கேட்கும் வாய்ப்புகள் வழங்கப்படும். எந்த நாட்டிலும் செல்லுபடியாகாத பிணை (பாண்ட்) முறை பெரு நிறுவனங்களால் அமெரிக்கா செல்லும் பணியாளர்கள் மீது திணிக்கப்படுகிறது. இதன் ஒரே நோக்கம் வேறு வேலை தேடிக்கொள்ளும் திறமையுள்ள பணியாளரை மிரட்டி பணம் பிடுங்குவது தான்.
இங்குள்ள கலெக்ஷன்(வசூல்) நிறுவனங்களில் ஒரு புகாரை அளித்து 5000 $ முதல் 10000 $ பிணைத்தொகையை வசூல் செய்யக்கோருவார்கள். இதை செவிசாய்க்கவில்லையென்றால் அந்த வசூல் நிறுவனங்கள் கோர்ட்டுக்குப்போகும், இது அந்த நபரின் கடன் பெறும் தகுதியைக்கேள்விக்குறியாக்கும்(க்ரெடிட் ரேட்டிங்க்). இது போன்ற நடைமுறையை இந்தியாவில் வேறெந்தத்துறையிலும் நீங்கள் பார்க்க முடியாது.
இதை மீறி இன்று இந்தியர்கள் பலர் இந்தியப்பெரு நிறுவனங்களிலிருந்து வெளியேறிக்கொண்டிருக்கிறார்களென்றால், அதற்கு மூலக்காரணம் இந்த நிறுவனங்கள் அடிப்படையான மூளைபலத்தை அறிவு தேவையே படாத சாதாரணரக வேலைகளை எண்ணிக்கை அடிப்படையில் இந்தியாவில் செய்ய ஒப்பந்தம் போடுவது தான். இந்த வேலைகளை எகிப்திலோ,வியட்னாமிலோ அல்லது பிலிப்பைன்ஸிலோ செய்ய விட்டு அடுத்த நிலையில் உள்ள கடின மற்றும் சவாலான வேலைகளுக்கான ஒப்பந்தம் இடலாம்.ஆனால் அதை செய்ய திறமையானவர்கள் வேண்டும், அவர்களை திறம்பட பணி செய்யவைக்கத்தெறிந்த சீரிய மேலாளர்கள் வேண்டும்.
அப்படி இருப்பவர்களை கம்பெனி பாலிஸி என்று சொல்லி வெறுப்படிக்கும் எச்.ஆர் எம்பி ஏ என்று கல்வித்தந்தைகளின் கல்லூரியில் படித்த மணிக்குஞ்சுகளால் எதிர்கொள்ள முடியாது என்பது தான் உண்மை. அதனால் இன்று பெரிய நிறுவனன்கள் மென்பொருள் துறையினில் வீழ்ச்சி அடைவார்கள்.
ஆனால் பயம் தேவையில்லை, வெகு சீக்கிரம் அமெரிக்காவில் உள்ளது போல் ஸ்டார்டப்ஸ் (சீறி எழும் சிறு நிறுவனங்கள்) இந்தியாவெங்கும் பரவி நிலைமையை மேம்படுத்தும். திறந்த மூலமென்பொருள்(ஓபன்ஸோர்ஸ்) அடிப்படையாகக்கொண்ட இந்த நிறுவனங்களில் அடிப்படையாகவே திறமையற்ற தேவையற்ற இடைமேலாள (மிடில் லெவல் மேனேஜ்மெண்ட்) நிலை என்பது இல்லை. இந்த நிறுவனங்கள் வெறும் ஏட்டுக்கல்வி, 4 ஆண்டு பொறியியல் படிப்பு என்ற சட்டகங்களுக்குள் நின்று நபர்களை எடைபார்ப்பதில்லை.
இவற்றால் இன்று அமெரிக்கா முழுவதும் ஒரு புரட்சி அலை வீசுகிறதென்றே சொல்லலாம். அது இந்தியாவையும் தீண்டும், புதிய குருகுல முறைகள் உருவாகும், அனைவருக்குமான மென்பொருள் மேலாண்மை உருவாகும் அது வரும் போது, சம்பளங்கள் குறையலாம் ஆனால் வாய்ப்புகள் பெரிய நகரங்கள், ஐடி பார்க்குகள் என்ற ஊழலான அமைப்பு சாராமல் வானின்று பெய்யும் மழையெனப்பெய்யும் என்று நான் நம்புகின்றேன்.
அன்புடன்,
ஜெய்கணேஷ்.