நான் உங்கள் நெடுநாள் வாசகன் என்று சொல்ல மாட்டேன் ஆனால் ஒரு திறப்பு கிடைத்ததும் உங்கள் எல்லா நூல்களையும் தேடிப் பிடித்து வாங்கிப் படித்தேன் [அது எனது பாணி] இரண்டு நூல்கள் தவிர …ஒன்று கொற்றவை மற்றது பனிமனிதன் இரண்டையும் எங்கு பார்த்தாலும் எடுத்துப் பார்த்து விட்டு வைத்து விடுவேன் கொற்றவை பழந்தமிழில் எழுதப் பட்டது என்ற அச்சம் காரணம் இரண்டாவது அதன் கதை!தமிழ் வெளியில் எனக்கு பிடிக்காத உருவகம் கண்ணகியும் சிலப்பதிகாரமும் காரணங்கள் பல வேறிடத்தில் சொல்லவேண்டியது அது
பனிமனிதனை ரொம்ப தயக்கத்துடன் போனமாதம் வாங்கினேன் தயக்கத்தின் காரணம் தமிழில் சிறுவர்களுக்கான இலக்கியத்தின் தரம் எனக்கு தெரியும் நிறைய எழுத்தாளர்கள் சிறுவர்களுக்கு எழுதுகிறேன் என்று காமடி பண்ணி இருக்கிறார்கள் மொழி மாற்றம் செய்யப் பட்ட காமிக்ஸ்கள் அளிக்கும் உவகையை கூட அவை அளிப்பது இல்லை விஷ்ணுபுரம் போன்ற சிக்கலான உரைநடை சட்டையை உங்களால் கழற்றி வைத்து விட்டு எழுதமுடியுமா என்ற சந்தேகம் வேறு இருந்தது
ஆனால் படிக்க ஆரம்பித்ததும் சட்டென்று எல்லா சந்தேகங்களும் உதிர்ந்து அந்த உலகத்துக்குள் அமிழ்ந்து போய்விட்டேன் நிறைய இடங்களில் அவதார் நினைவு வந்தது ஆனால் இதை பத்து வருடங்களுக்கு முன்பு எழுதியிருக்கிறீர்கள் !அவதார் இன்றைய தொழில்நுட்பம் கொண்டு காண்பித்ததை உங்கள் மொழியால் கண்முன்பு கொண்டுவந்திருக்கிறீர்கள்
படித்து முடித்ததும் இதை நீங்கள் ஆங்கிலத்தில் எழுதியிருக்க வேண்டும் என தோன்றியது பால் கோல்கோ போன்றவர்கள் எழுதும் புத்தகங்களுக்கு சற்றும் குறைந்தது அல்ல பனிமனிதன் அல்கெமிஸ்ட் அளித்த உவகையை விட பனிமனிதன் கூடுதல் உவகையை அளித்தது ஆனால் பனிமனிதனை வெறும் உவகை தரும் கதையாக கருத முடியவில்லை பெரிய பெரிய புத்தகங்களில் கிடைக்காத சிக்கலான சில தத்துவ சந்தேகங்களுக்கு எனக்கு விடை இதில் கிடைத்தது [உங்கள் மனம் இன்னும் அந்த தளத்திலேயே இருப்பதால்தான் என்று சொல்லமாட்டீர்கள் என நம்புகிறேன் ]
உண்மையில் மிகவும் கொண்டாட வேண்டிய புத்தகம் இது இந்த மாதிரியான புத்தகங்கள் நம்முடைய பள்ளி நூலகங்களில் கிடைத்தால் அவர்கள் மனவெளி எவ்வளவு விரிவடையும் !எழுதும்போது நல்ல வரவேற்பு இருந்தது என்று சொல்லியிருந்தீர்கள் ஆனால் இது சிறுவர் நூல் என்று என்னை போன்று பலர் தயங்கி ஒரு அரிய அனுபவத்தை இழந்து விடக் கூடும் என்ற அச்சத்தின் காரணமாகவே இந்த கடிதம் நன்றி
gomathi sankar
[email protected]
அன்புள்ள கோமதி சங்கர்,
பனிமனிதன் குழந்தைகளுக்காகவும் எழுதப்பட்ட நாவல். எல்லா சிறந்த குழந்தைநாவல்களும் பெரியவர்களுக்கும் மேலதிக அர்த்தங்களை அளிப்பதாக இருக்கும் என்பது என் எண்ணம். குழந்தைகள் வளர்ரும் மனிதர்கள் தானே ஒழிய வேறு உயிர்கள் அல்ல. என் பையனுக்காக நான் இதை எழுதினேன், அவனுக்கு 10 வயது இருக்கும்போது. அவன் எத்தனை வயதானபின்னரும் அவனுக்குந் ஆன் சொல்ல விரும்பும்சேதி அதில் இருக்கவேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அந்த வயதில் அந்த நாவலின் மையத்தைஎளிதில் வந்தடைந்தது குழந்தைகளின் வாசிப்புத்திறமையைப்பற்றிய என்னுடைய நம்புக்கையை வலுப்படுத்தியது.
பனிமனிதனின் கதைகூறலில் மட்டுமே எளிமை உள்ளது. அதன் கவித்துவமும் தத்துவமும் என்னுடைய எந்த நாவலுக்கும் இணையானதே. அதை நான் மீண்டும் மீண்டும் சொல்லியிருக்கிறேன்
ஜெ
ஹாரி போட்டரும் பனிமனிதனும்:ஜீவா
பனிமனிதன் – குழந்தைகளுக்கு பெரும் மர்மங்கள் (ஜெயமோகன் எழுதிய பனிமனிதன் – திறனாய்வு)