சாரல் உரை -கடிதம்

அன்பு ஜெயமோகன்,

இயக்குனர்கள் ஜேடியும், ஜெர்ரியும் நல்ல இலக்கிய ஆர்வலர்கள். தமிழ் நவீன இலக்கியவாதிகளைத் தொடர்ந்து கொண்டாடுவதற்காக சாரல் விருதை உருவாக்கியவர்கள். ஒரு சடங்காகவோ சம்பிரதாயமாகவோ இல்லாமல் உயிர்ப்போடு அவ்விழாவைத் தொடர்ந்து நட்த்தி வருபவர்கள்.

திலீப்குமார், அசோகமித்திரன், வண்ணதாசன், வண்ணநிலவன், பிரபஞ்சன், விக்கிரமாதித்யன் என சாரல் விருது பெற்ற படைப்பாளுமைகளைக் கவனித்தாலே அவ்விருதின் நேர்மைத்தன்மை புலப்படும். சமீபமாய் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தால் விருது வழங்கிப் பெருமைப்படுத்தப்பட்ட ஞானக்கூத்தனை 2010லேயே கொண்டாடியவர்கள் ஜேடியும் ஜெர்ரியும். அச்சகோதரர்களை மனதார வாழ்த்துவது நமது கடமை.

2009லிருந்து தொடர்ந்து நடக்கும் சாரல் விருது நிகழ்வுகளில் நான் கலந்து கொண்டதுமில்லை; அவற்றின் காணொளிகளை இணையத்தில் பார்த்ததுமில்லை. சாரல் விருது மற்றும் விருதாளர்களைப் பற்றி செய்திகளாக மட்டுமே அறிந்திருந்தேன். நேற்றுதான் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நிகழ்வுகளின் காணொளிகளைத் தேடச் சென்றபோது சாரல் விருது வழங்கும் முதல் நிகழ்வின் காணொளிகளைக் காண நேர்ந்த்து.

அக்காணொளிகளில் ஒன்றில் உங்களை மீசையுடன் பார்த்தது வியப்பாக இருந்தது. தாமதியாமல் உங்கள் பேச்சைக் கேட்கத் தொடங்கினேன். தயக்கத்துடன் துவங்கிய நீங்கள் சிறிது நேரத்திற்குள்ளாக சமநிலைக்கு வந்திருந்தீர்கள். டி.எஸ்.துரைசாமி அவர்களின் கருங்குயில் குன்றத்துக் கொலை எனும் நாவலை அடிப்படையாகக் கொண்டு வணிகப்படைப்புகளை ஆய்வு செய்திருந்தீர்கள். நாட்டார் கலைகளின் வீழ்ச்சியை வணிகக்கலைகள் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டதையும் அலசி இருந்தீர்கள்.

திலீப்குமாரைப் பற்றிப் பேசும்போது மகாபாரதத்தைத் தொட்டீர்கள். ஒரு காவியத்தை அதன் வடிவம் கடந்து வாசிப்பவனின் மலர்ச்சியை அங்கு கண்டேன். பத்து ஆண்டுகளுக்கான வெண்முரசுக்கான உந்துதல் உங்களுக்குள் அழுந்திக் கொண்டிருந்ததைப் புரிந்து கொள்ள முடிகிறது.

வாழ்க்கையே ஒருவனுக்குப் பாவனையாகத் தோன்றும் கணத்தில், அவன் இருப்பின் அங்கதத்தைப் புரிந்து கொள்கிறான். வாழ்க்கையின் துன்பங்களை விளையாட்டாகப் பார்க்கும் ஒருவனுக்கு எதுவுமே பாதிப்பை உண்டுபண்ணுவதில்லை என்று நம்புகிறேன். வாழ்க்கையை குழந்தை விளையாட்டாக மாற்றுவதே ஒரு நல்ல இலக்கியத்தின் பணியாக இருக்க முடியும் எனும் உங்களின் கருத்தை ஏற்றுக்கொள்வதும் விவாதிப்பதும் அவரவர் மனநிலை சார்ந்தது.

மீசை இருக்கும் அக்காலத்திய முகத்தோடு உங்கள் பேச்சைக் கேட்டதே புது அனுபவமாக இருந்தது. அதிலும் அவ்விழா நடந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் கேட்டது குழந்தை விளையாட்டுக்கு இணையான குதூகலத்தையும் தந்தது.
உங்கள் பேச்சின் காணொளிக்கான சுட்டி : https://www.youtube.com/watch?v=G12NmW1AQKE

http://www.youtube.com/watch?v=G12NmW1AQKE

முருகவேலன்,
படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை,
கோபிசெட்டிபாளையம்.

முந்தைய கட்டுரைஉள்ளான்
அடுத்த கட்டுரைஅனைத்தும் அளிக்கப்பட்டிருக்கிறது!