மாதொருபாகன் எதிர்வினை-2

திரு ஜெ அவர்களுக்கு,

யுவ செந்திலின் வக்கீல் நோட்டீஸ் பாணி கடிதத்தை கண்டேன். அதில் உள்ள சில உண்மைக்கு புறம்பான விஷயத்தை மட்டும் தெளிவு படுத்த நினைக்கிறேன். மாதொரு பாகன் நாவலுக்கு பாஜகவும், இந்து இயக்கங்களும் எதிர்ப்பு தெரிவித்தது உண்மை ஆனால் புத்தகத்தை எரித்தது பாஜகவோ, இந்து இயக்கங்களின் தலைவர்களோ அல்ல. அந்த கூட்டத்தில் இருந்த யரும் புத்தகத்தை முழுதாக படிக்க வில்லை. ஒரு பக்கம் ஜெராக்ஸ் ஆக எடுக்கப்பட்டு ஸ்கெட்ச்சால் அடிக்கோடிடப்பட்டு அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டது. வாட்ஸ் அப் செய்தியாக அனைவருக்கும் பரப்பப் பட்டது. அதை படித்து அனைவரும் கொந்தளித்தனர். இது நம் ஊரையும், ஊரின் பெண்களையும் மிகவும் இழிவாக சித்தரிப்பதாக அனைவரும் கருதினர், ஊரின் திருவிழாவை எந்த ஆதாரமும் இன்றி இழித்துரைப்பதாக கருதினார்கள். இந்த போராட்டம் மக்களிடம் தன்னெழுச்சியாக பரவியது. பாஜகவோ, இந்து இயக்கங்களோ திட்டமிட்டு இதை செய்யவில்லை . இந்து இயக்கங்கள் காவல் துறையில் புகார் கொடுக்கலாம் என்றனர். புத்தகத்தை தடை செய்ய கோரினர்.

ஆனால் அடுத்த நாள் காவல்நிலையம் சென்ற பொழுது “யாரோ” ஒருவர் 3 புத்தகங்களை கொண்டு வந்ததுடன், அதை கொளுத்தவும் ஊக்குவித்திருக்கிறார். அவரே ஹிந்து ஆங்கில நாளிதழின் நிருபர் முன்னிலையில் இதை கொளுத்தியும், பெருமாள் முருகன் உருவத்தை அடித்தும் காண்பித்து போட்டோ உறசவம் முடிந்தவுடன் காணாமல் போயும் இருக்கிறார். புத்தகத்தை எரிப்பது மாதிரியான மூன்றாந்தர பணிகளை நிச்சயம் பாஜகவோ,இந்து இயக்கங்களை சேர்ந்தவர்கள் செய்ய மாட்டார்கள். ஊர்க்காரர்களும் நிச்சயம், அப்படியான செயலை செய்யவில்லை .எழுத்து எவ்வகையிலும் சரஸ்வதியின் வடிவமே அதனை கொளுத்துவது நிச்சயம் மன்னிக்க முடியாத செய்கை. இது தான் பாஜகவின் நிலைப்பாடு. இது தொடர்பாக கட்சி மேலிடம் விளக்கமும் கேட்டு உள்ளது. பாஜக மற்றும் இந்து இயக்கங்கள் கோருவது திருச்செங்கோடு, மற்றும் தேரடி வீதி தொடர்பான வார்த்தைகளை மாற்ற கோருவது தான், அப்படி இல்லாவிட்டால் தடை செய்ய கோரியும் தான் மனு அளித்திருக்கிறது.

இதை இந்துத்துவ இயக்கங்கள்தான் திட்டமிட்டு செய்ய சொன்னார்கள் என்பது போன்ற மாயையை முற்போக்கு முகமூடி அணிந்திருக்கும் போலிகள், சமூக நச்சுக்களை தூவும் சில மூன்றாந்தர பத்திரிக்கைகள் மற்றும் அரசியல் இயக்கங்கள் திட்டமிட்டு செய்து வருகின்றன. இந்த கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாகவே தி ஹிந்து ஆங்கில பதிப்பின் செய்தி துவங்கி எதிர்வினைகள், புலம்பல்கள், மிகை உணர்ச்சியுடன் கூடிய உறுமல்கள் தெரிகிறது. மதச்சார்பற்ற நாடாக நம்பப்படும் நாட்டில் எவ்வளவு எளிதாக இந்துக்களின் உணர்வுகள் ஆக்கப்படுகின்றன என்பதற்கு இது மேலும் ஒரு உதாரணம்.

வாழ்க முற்போக்கு அரசியலும், இந்துக்களின் அப்பாவித்தனமும்..

அன்புடன்,
வீர ராஜமாணிக்கம்

அன்புள்ள ராஜமாணிக்கம்

உங்கள் தரப்பையும் வெளியிட்டுவிட்டேன் என நினைக்கிறேன். இங்கே முடித்துக்கொள்ள விழைகிறேன்

நன்றி

ஜெ

முந்தைய கட்டுரைமாதொரு பாகன் – தெருமுனை அரசியல்
அடுத்த கட்டுரைமாதொருபாகன் எதிர்வினை 3