புதியதொரு வீடு

மௌனகுரு
மௌனகுரு

ஜெயமோகன்,

செய்வதற்கு அதிகமுண்டு சிறு பொழுது அமைதி வேண்டும் ‘புதியதொரு வீட்’டில் மஹாகவியின் ஒரு பா வரி

நீண்ட நாட்கள் உங்களோடுதொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருந்தேன்.கொழும்பிலுள்ள பிரத்தியேக வைத்திய மனை ஒன்றில் அவசர சிகிச்சைக்காக ஒரு வார காலம் அனுமதிக்கப்பட்டிருந்தேன்.

அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் முகநூலில் வாழ்வின் சுவை என்ற எனது கவிதை ஒன்றைப் பதிவு செய்திருந்தேன். வைத்தியசாலைஅனுபவம் இன்னொரு வகை அனுபவம். அனுபவங்களின்திரட்சிதானே வாழ்க்கை.

வைத்தியசாலையில் பல்வேறு குணாதிசயங்கள் கொண்ட வைத்தியர்,தாதிமார், ஊழியர்களின் செயல்பாடுகளை அவதானித்தபடி இரசித்தபடி நாட்கள்கழிந்தன.அக்கறையோடும் அன்போடும் கவனித்துக்கொண்டார்கள்.அது மனித இயல்பாயும் இருக்கலாம். பெற்ற பயிற்சியாகவும் இருக்கலாம்கொடுத்த பணத்துக்காகவும் இருக்கலாம். மனித இயல்புஎன நான் வியாக்கியானித்துக் கொண்டு மகிழ்ச்சியோடு இருந்தேன்.

அர்த்தமற்ற வாழ்வுக்கு நாம் கொடுக்கும் அர்த்தங்களால்தானே வாழ்வு அர்த்தமடைகிறது.வரும்போது மகிழ்ச்சியோடு அனுப்பி வைத்தனர்.அவர்களின்சில முகங்கள் இன்னும் நினைவில் நிற்கிறது.சில நாட்களில் மறைந்து விடவும் கூடும்.

பிரதம வைத்தியர் உடம்புசொன்னபடிநடவுங்கள் என்றார்.பிரச்சனையே அதுதான் மனம்சொன்னபடி உடம்பு செயல் பட வேண்டும் எனநினைக்கும் கற்பனாவாதி நான்.“விசையுறு பந்தினைப்போல் உளம் வேண்டியபடிசெலும் உடல் கேட்டேன்” எனப்பாடிய மஹாகவி பாரதி வரிகள் எனக்குபிடித்த்த மந்திர வரிகள்.இப்போது எனது மனதுக்கும் எனது உடலுக்குமான போராட்டம் அனுபவம் பாடம்கற்பித்துள்ளது

மஹாகவியின் நாடகமான ‘புதியதொரு வீடு’ அரங்கஆய்வு கூடத்தயாரிப்பிலுள்ளது.பாதி வேலைகள் பூர்த்தியாகி விட்டன. 2015 பங்குனியில் மேடையிடும் திட்டம்.அந்த நாடகத்தில் மறைக்காடர் என்றொரு வயது முதிர்ந்த பாத்திரம் வருகிறதுஒரு நெருக்கடியான நிலையில் அது பின்வருமாறு கூறுகிறது

செய்வதற்கு அதிகம் உண்டு
சிறு பொழுது அமைதி வேண்டும்

அப்பாத்திரத்தைஏற்றுத் தம்மோடு சேர்ந்து நடிக்கும்படி மாணவர்கள்அன்புக் கட்டளை இட்டுள்ளனர் சற்று தயக்கத்தோடு இருந்த நான் இந்த அனுபவத்தின் பின் அவர்களின் கட்டளைக்கு அடிபணிவது என தீர்மானித்துள்ளேன்

ஆம் செய்வதற்கு அதிகமுண்டு சிறு பொழுது அமைதி வேண்டும்

மௌனகுரு

அன்புக்கும் மதிப்புக்கும் உரிய மௌனகுரு அவர்களுக்கு,

புதியதொரு வீடு என்னும் தலைப்பே சிறிய அக எழுச்சியை அளிக்கிறது. இடிபாடுகளில் இருந்து அனைவரும் புதியவீடுகளைக் கட்டி எழுப்பத்தான் அங்கே முயல்கிறார்கள் அல்லவா?

உடல்நிலை இப்போது தேறியிருக்கும் என நினைக்கிறேன். உடலைப் பேணுவதற்கான மருத்துவ நெறிகளைக் கடைப்பிடித்துக்கொண்டே நீங்கள் கலையில் முழுமையாக ஈடுபட முடியும். கலை ஓர் இளைப்பாறலும் கூடத்தான்

நீங்கள் ஒரு பறவை. உங்களுடன் இருக்கும்போதெல்லாம் அதை உணர்வதுண்டு. பறவை பறக்காமலிருக்க முடியாது. அது வானத்தில்தான் இயல்பாக இருக்க முடியும்.

ஜெ