மாதொரு பாகன் – தெருமுனை அரசியல்

அன்புள்ள ஜெ,

உங்கள் பெ மு நாவல் பற்றிய பதிவை படித்தேன். சிறு அதிர்ச்சியாக இருந்தது. காரணம் உங்களை ஒரு நடுநிலையான எழுத்தாளர் என்று உங்கள் வாசிப்பாளராக இருந்து வருகிறேன், உங்களின் சொற்பொழிவுகளையும் கேட்டுள்ளேன். உங்களுக்கு இதற்கு முன்பு கடிதம் எழுதியது இல்லை, இப்பொழுது எழுத வேண்டும் என்று தோன்றுகிறது.

திருச்செங்கோடு என்னுடைய ஊராக இல்லாமலிருந்தாலும் அங்கு தங்கி 3 ஆண்டு படித்தவன் என்பதால் இந்த செய்தி என்னை கவர்ந்தது. உங்களின் கருத்துகளான புத்தகங்களை எரித்தல் மற்றும் வாய்க்கு வந்ததை பேசுதல் போன்றவைகள் இழி செயலே, நானும் அதை வன்மையாக கண்டிக்கிறேன். ஆனால் ஒரு கூட்டமாக 100 -200 பேர் கூடும்பொழுது அனைவரும் ஒன்று போல் அமைதி காப்பார்கள் என்று கூற முடியாது. ஆனால் ஒரு நன்கு படித்து முனைவர் பட்டம் வாங்கியவர், பல மாணவர்களுக்கு பேராசிரியராக இருக்கும் ஒருவர், தரம் தாழ்ந்து எழுதுவதை எவ்வாறு பொறுத்துக்கொள்ள முடியும்? நீங்கள் விமர்சித்ததில் ஒரு சாதி மக்கள் கூடினார்கள் என்று கூறியுள்ளீர்கள், எனது கல்லுரி தோழனும் சென்றிருந்தான் அவன் வேறு சாதி அனால் மற்ற சாதி பெயர்களை வெளியிட்ட தினகரன் பத்திரிக்கையே கூட இவர்கள் பெயரை வெளியிடவில்லை, அதற்கு காரணம் இவர்கள் மனு எதையும் அளிக்கவில்லை என்பதாகவும் இருக்கலாம். சிலர் திரு. பெ. மு. என்ன தவறாக எழுதிவிட்டார் என்று கேட்கிறார்கள் நீங்களுமே . அதைப்பார்ப்போம்,

அவர் வரிகள் அப்படியே.

நான்கு ரத வீதிகளிலும் ஊர் நடுவே இருக்கும் இரக்கத்து கோயில் மண்டபங்களிலும் கலைநிகழ்ச்சிகளுக்கு பஞ்சமிருக்காது. கொண்டாட்டத்தின் உச்சியில் வரைமுறைகள் எல்லாம் தகர்ந்து போகும், அந்த இரவே சாட்சி. இணங்கும் எந்த ஆணும் பெண்ணும் உறவு கொள்ளலாம். சந்துக்களிலும் ஊரை சுற்றி இருக்கும் மலை மண்டபங்களிலும் பாறை வெளிகளிலும் உடல்கள் சாதாரணமாக பிணைந்து கிடக்கும். இருள் எல்லா முகங்களுக்கும் திரைபோட்டுவிடுகிறது. ஆதி மனிதன் இந்த திருவிழா கூட்டத்தில் உயிர்பெறுகிறான்.

மற்றொன்று

“காளி” வீதிகளில் சாயிங்காலம் முதலே அலைய தொடங்கிவிட்டன. இறக்கத்து கோவிலுக்கு எதிரே இருந்த தேவடியா தெருவில் அன்றைக்கு கூட்டமேஇல்லை. அந்த பெண்கள் நன்றாக சிங்காரித்துகொண்டு மண்டபங்களில் ஆட போனார்கள். ‘இன்னைக்கு நம்மல எவன் பாக்கறான், எல்லா பொம்பளைங்களும் இன்னைக்கு தேவடியாதான்’ என்று அவர்கள் பேசி சிரித்து போனார்கள்.

மற்றொன்றும் உள்ளது, அது அந்த பகுதி மக்களை குறிக்காமல் அங்கு உள்ள கடவுள் அர்த்தனாரிஸ்வரரை குறிக்கும் இழி சொல்லாக உள்ளது.

கோவிலின் எதிர் புறம் தேர்கள் நிறுத்திவைக்கபபட்டு இருக்கும் இது இன்றும் தேரடி வீதி என்று உள்ளது, தேவடியா தெரு இருந்ததாக கேள்விப்படவில்லை,

இப்பொழுது விசயத்திற்கு வருவோம். இதில் என்ன தவறு என்று கேட்பீர்களானால். அப்பகுதி பெண்கள் எல்லாம் யாருடன்வேண்டுமானாலும் கலப்பார்களா? அவர் அவ்வாறு கூறவில்லை “இணங்கும் எந்த ஆணும் பெண்ணும் உறவு கொள்ளலாம்.” என்று கூறினீர்கள் என்றால் அவர் கீழே கூறிய இதை எப்படி எடுத்துக்கொள்வீர்கள் “‘இன்னைக்கு நம்மல எவன் பாக்கறான், எல்லா பொம்பளைங்களும் இன்னைக்கு தேவடியாதான்’ ” என்று தேவடியா தெருவிலிருந்து நடனமாடும் பெண்கள் கூறுவது, அதாவது அப்பகுதியில் உள்ள அனைத்து பெண்களும் தாசி என்கிறாரா?

இப்படி எடுத்துக்கொள்வோமே, இது ஒரு கற்பனையே, எழுத்தாளராகிய நீங்கள் உள்ள வீதியில் 4 விபச்சார விடுதி உள்ளது அங்கு உள்ளவர்கள் வீட்டின் முகப்பு பகுதியில் வீதியில் இருப்பர் அங்கு வரும் ஆடவர் அவர்களிடம் சென்றுவிட்டு செல்வர், இவ்வாறு இருக்கும் பொழுது, வெளியில் இருப்பவர்கள் கடைக்கு செல்லும் உங்கள் வீட்டு பெண்ணை பார்த்து வருகிறாயா என்று கேட்கிறார்கள். அதற்கு உங்கள் பதில் என்னவாக இருக்கும்? உனக்கு இணக்கமாக இருந்தால் போ இல்லை என்றால் முடியாது என்று கூறு என்பதாக இருக்குமா? சரி அப்படி எடுத்துகொண்டாலும் அவரின் அடுத்த பத்தியில் உள்ளது போல், என்னடி எல்லாம் தேவடியாவாக இருந்துகொண்டு வர மாட்டேன் என்கிறாயே என்றால் என்ன கூறுவீர்? சிறிதேனும் கோவம் வருமா வராதா?

சரி இவை அனைத்தயும் விட்டுவிடுவோம் ஒரு எழுத்தாளனுக்கு சுதந்திரம் வேண்டாமா, அவர் கருத்து கூற தகுதி இல்லையா என்று கேட்கலாம். ஒரு எழுத்தாளனுக்கு முழு சுதந்திரம் வேண்டுமே, இதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. அது அவர்களின் கருத்தின் தராதரம் பொருத்தது. நல்ல எழுத்தாளன் என்பவன் சமூகத்திற்கு நல்ல செய்திகளை விட்டுச்செல்வான் இப்படி எழுது உனக்கு பொருள் தருகிறேன் உன்னை பெருமை படுத்துகிறேன் என்பதற்காக சமூகம் சீரழிந்தாலும் பரவாயில்லை எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்றால் பெரும்பாலான எழுத்தாளர்கள் முற்போக்கு என்ற பெயரில் அரை மஞ்சள் பக்க எழுத்தாளராகவோ கவிஞராகவோ இருக்க முடியும்.

இவ்வாறு முற்போக்கு என்ற பெயரில் எழுதுவதின் விளைவுகளை பார்ப்போம், தினசரி செய்தியில் 13 வயது பெண்ணை உடன் படிக்கும் 16 வயது மாணவன் கற்பழித்து கொன்றான், அலுவலகம் சென்ற பெண்ணை காணவில்ல பட்ட பகலில் கற்பழித்து கொலை, கடற்கரையில் காதலனுடன் பேசிகொண்டிருந்த பெண் கடத்தி கற்பழிப்பு போன்ற கடந்த ஒரு மாதத்தில் வந்த செய்திபோல் தினமும் இந்த பகுதில் இதத்னை சம்பவங்கள் என்று படிக்க நேரும். முன்பு நான் படிக்கும் காலத்தில் பள்ளியில் நீதி போதனை வகுப்பு இருக்கும், நீதி நேரிகளை ஓரளவேனும் கற்று தருவார்கள், இப்ப்ழுது அது இருந்தால் இந்த சமூகத்தை கட்டுக்குள் எடுத்துக்கொள்ள முடியாது என்று அரசு எடுத்து விட்டது.

இவர்கள் ஒன்றை கவனிப்பது இல்லை. உங்களின் (எழுத்தாளர்களின் / படைப்பாளிகளின் (சினிமா / tv)) குழந்தைகளும் பெண்களும் இதே சமூகத்தில் தான் வாழப்போகிறார்கள் என்பதையும் மனதில் வைத்துக்கொண்டால் நலமாக இருக்கும், படிப்பதற்கு முன் இது நமது குடும்பத்தில் நடந்திருந்தால் நமது குழந்தைக்கு நடந்திருந்தால் என்ன செய்திருப்போம் என்பதை சிந்தித்து எழுதினால் சமூகம் சற்று மேம்படும்.

இப்பொழுது எதற்கெடுத்தாலும் அவர்அவர்கள் சங்கம் வைத்து போராடுவது வழக்கமாகிவிட்டது, விவசாயிகளை தவிர, யார் மீது தவறு, பாதிக்கப்பட்டவன் எவ்வாறு எதிர்கொள்வான் என்பதெல்லாம் இரண்டாம் பட்சம். அதை தான் நீங்களும் செய்கிறீர்களா?

இதுவரை ஒன்றை கண்டிருக்கிறேன், எந்த எழுத்தாளரும் தான் தவறாக எழுதிவிட்டால் அது தவறு என்று ஒப்புகொள்வதில்லை. நான் சிறந்த வாதி என்ற அளவில் தான் செய்தது சரி வக்கீல் தொழில் செய்கிறார்கள். இது அவர்களின் ஈகோ என்றே கூறலாம்.

மற்றதை உங்கள் மனசாட்சிக்கு விட்டுவிடுகிறேன்.

கணேசன்

அன்புள்ள கணேசன்,

இந்த விவகாரம் கிளம்பியபோது நான் பெருமாள் முருகனிடம் தொலைபேசியில் பேசினேன். இதை ஊடகங்கள் கையாள அனுமதிக்கவேண்டாமென்றும் அமைதியாக இருக்கும்படியும் சொன்னேன். ஏனென்றால் இலக்கியத்திற்கும் வரலாற்றுக்கும் உள்ள தொடர்பைப்பற்றியெல்லாம் பேசும் தளம் அல்ல இன்றைய பொது ஊடகம். அது வெறுமே உணர்ச்சிகளை வைத்து விளையாடிக்கொண்டிருப்பது

ஆனால் ஊடகங்களும் அரசியல்கட்சிகளும் எல்லாம் உள்ளே புகுந்துவிட்டன. அதை எவரும் தடுக்கமுடியவில்லை. ஆகவே மீண்டும் சுருக்கமாக இதைச் சொல்லி முடிக்க விரும்புகிறேன். உங்கள் தரப்பில் இருந்து போதிய அளவுக்கு விளக்கங்களுக்கு இடமளித்துவிட்டதாக நினைக்கிறேன்.

புனைவு உண்மை என்பது ஒரு ஆசிரியரால் உருவாக்கப்படுவது மட்டுமே. அந்தப்புனைவுக்கு வெளியே அதற்கு தகவல் மதிப்பு என ஏதும் இல்லை. தான் எவ்வகையிலேனும் அறியநேர்ந்த தகவல்களை எடுத்து தன் கற்பனையுடன் கலந்து ஆசிரியன் அதை எழுதுகிறான்.அவனுடைய கற்பனைத்திறன் காரணமாக அந்தப்புனைவுக்குள் ஓர் உலகம் உருவாகிறது. அதற்கு ஒரு நம்பகத்தன்மை உருவாகி வருகிறது

அதை புனைவாக மட்டுமே கருதவேண்டும், வரலாறாக அல்ல. அந்தப்புனைவின் மூலம் அவ்வாசிரியன் ஒட்டுமொத்தமாக அளிக்கும் வாழ்க்கைச் சித்திரமே முக்கியமானது. அச்சித்திரம் அளிக்கும் வாழ்க்கைசார்ந்த உண்மையை நோக்கியே வாசகன் செல்லவேண்டும். இது இலக்கியவாசகர்களுக்குத் தெரியும்.

ஆகவேதான் இந்நாவல் வெளிவந்து இத்தனை ஆண்டுகளாகியும் இலக்கியத்தளத்தில் எவரும் இதை ஒரு வரலாறாகக் கொள்ளவோ விவாதிக்கவோ செய்யவில்லை. இது நாவலாகவே வாசிக்கப்பட்டது

அதை வரலாறாக எடுத்துக்கொண்டவர்கள் நீங்கள். அதை வரலாறாக கொண்டுசென்று ஊடகங்களின் முன் வைத்தீர்கள். இலக்கியமறியாத வாசகர்களுக்கு இந்த வேறுபாடெல்லாம் தெரியாது. அவர்கள் எதையும் அப்படியே எடுத்துக்கொள்பவர்கள். அவர்கள் முன் இதைக்கொண்டுசென்று வைத்தீர்கள். உங்கள் போராட்டத்தின் விளைவு இது மட்டுமே

இலக்கியம் இச்சமூகத்தில் அரைசதவீதத்திற்குள் வாசிக்கப்படுகிறது. வெளியே இருக்கும் கோடானுகோடிப் பேருக்கு எதுவும் தெரியாது. இலக்கியப்படைப்பை அவர்கள் முன் கொண்டுவைத்து பிய்த்துப்போட்டு விவாதிக்கச் செய்தால் இந்தப்படைப்பு என்றல்ல பாரதி முதல் இன்றுவரை தமிழில் எழுதப்பட்ட எல்லா படைப்புகளுமே அவர்களால் அவமதிப்பாகவே கருதப்படும். எதிர்க்கப்படும். நீங்கள் சொல்வதுபோல வெறி கொள்வார்கள்.

அந்த வெறி எழுத்தாளன் மேல் திரும்பினால் இங்கே எழுத்தே இருக்காது. அறிவியக்கமே உறைந்து போய்விடும். அந்தவன்முறையை ஒருபோதும் நாகரீக சமூகம் அனுமதிக்கக் கூடாது. அறிவார்ந்த விஷயங்களை தெருக்களில் கூடும் மக்களின் உணர்ச்சிகளும் அவற்றைக் கையாளும் அரசியல் அமைப்புகளும் சாதிச்சங்கங்களும் மதிப்பிட்டு தீர்ப்பளிக்க ஒப்பக்கூடாது

நீங்கள் செய்திருக்கவேண்டியது இப்புனைவுக்கும் உண்மைவரலாற்றுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை அறிவுலகில் ஆழமாக நிறுவுவதைத்தான். அதை இன்றுவரை செய்யவில்லை என்பது மட்டும் அல்ல, மிதமிஞ்சிய உணர்ச்சிக்கொந்தளிப்பு வழியாக அதற்கும் வரலாற்றுக்கும் இடையேயான வேறுபாட்டை அழிக்கிறீர்கள். இன்று உங்களுக்கு நிகரான ‘முற்போக்கு’ எதிர்ப்பு உருவாகி வந்துள்ளது. அவர்கள் ‘வரலாற்றை வெளியே சொன்னதற்காக’ நீங்கள் கோபப்படுகிறீர்கள் என்கிறார்கள் இல்லையா?

எழுத்தாளர் தவறே செய்யமாட்டார்களா? தவறு செய்தால் ஒப்புக்கொள்ளக் கூடாதா? உங்கள் கேள்விகள் சரிதான். ஆனால் அதை யார் முடிவுசெய்வது? எழுத்தாளன் சமகால அரசியலை, சாதியவாதத்தை, ஆசாரங்களை, நம்பிக்கைகளை விமர்சிக்காமல் எழுதவே முடியாது. உலகம் முழுக்க அப்படித்தான். விமர்சிக்கப்படுபவர்கள் அதை சரி என்று ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றால் நடக்குமா? அவர்கள் புண்படுவார்கள் என்பதனால் அது தவறு என்று தடைசெய்யச் சொல்லமுடியுமா?

பெண்கல்வி, விதவைத்திருமணம், தீண்டாமை விலக்கு, கலப்புத்திருமணம் ஆகியவற்றை முன்வைத்தபோது அன்றைய சீர்திருத்தவாதிகளான எழுத்தாளர்களுக்கு இதேபோல எதிர்ப்பு வந்தது. மதவாதிகள் சாதியவாதிகள் புண்பட்டார்கள். புண்பட்டவர்களின் பக்கம் சட்டம் நின்றிருந்தால் இங்கே என்ன மாற்றம் நிகழ்ந்திருக்கும்?

இதெல்லாம் தமிழகத்தில் ஆரம்பித்தது குஷ்பு விவகாரத்தில் என்று இன்று தோன்றுகிறது. ஒரு தனிமனிதர் தன் கருத்தைச் சொன்னதற்காக அவரைச் சூழ்ந்துகொண்டு தாக்கினர் இங்குள்ள பண்பாட்டு அடிப்படைவாத அரசியல்வாதிகள். இங்குள்ள நீதிமன்ற அமைப்பு அவர்களை அப்போதே கண்டித்திருக்கவேண்டும். ஆனால் செய்யவில்லை. அங்கே தொடங்கியது கருத்துக்களுக்கு எதிரான தெருமுனை அரசியல்

தெருமுனையில் எதையும் விவாதிக்க முடியாது. நான் சொல்வது அதை மட்டுமே

ஜெ

முந்தைய கட்டுரைமாதொருபாகன்- எதிர்வினை
அடுத்த கட்டுரைமாதொருபாகன் எதிர்வினை-2