இயலிசை வல்லபி, வானவன் மாதேவி இருவரைப்பற்றியும் எடுக்கப்பட்ட ஆவணப்படம் ‘நம்பிக்கை மனுஷிகள்’
http://www.youtube.com/watch?v=svH7fYOOnE4
வானதி – வல்லபி சகோதரிகளை சுற்றியிருப்பவர்களை தனிப்பட்ட முறையில் நானறிவேன். குறிப்பாக அவர்களுடைய தந்தையையும் தாயையும், சோமு, நாகராஜ், சுப்பு, பிரசாத் போன்ற நல்லுள்ளங்களையும் எப்போதும் நன்றியுடன் நினைத்துக்கொள்வேன். வல்லபி இந்த ஆவணப்படத்தில் ஒரு ஆண் தொட்டு தூக்குவதில் உள்ள சங்கடங்களையும், உதிரப்போக்கு நாட்களில் பயணம் செய்வதில் உள்ள சிக்கல்களையும் சொல்லும்போது மனம் பதறியது. நடக்க முடிந்தவர்களுக்கு வெறும் இரண்டு கால்கள், இவர்களுக்கு ஆயிரம் கால்கள் என எண்ணிக்கொண்டேன். அன்பும் கனிவும் கலந்த கரங்களால் எப்போதும் அரவணைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு கிடைத்த பேரன்பை பன்மடங்கு பெருக்கி திருப்பியளிக்கிறார்கள். எல்லா இசங்களை சேர்ந்தவர்களும் அவர்களின் நண்பர்களாக இருக்கிறார்கள், மாணவர்கள், சூழலியல் ஆர்வலர்கள்/போராளிகள், இலக்கிய ஆளுமைகள், சினிமா ஆளுமைகள், ஊடகவியலாளர்கள், மருத்துவர்கள் என பலரும் அவர்களிடம் இளைப்பாறி சென்று தங்களை மீட்டுகொள்கிரார்கள். வற்றாத ஆற்றலின் ஊற்று பொங்கியபடியே இருக்கிறது.