மாதொருபாகன்- மிரட்டல்

திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,

தங்களது வலைத்தளத்தில் மாதொருபாகன் என்ற நூலை பற்றிய சர்ச்சையில் மோரூர் கன்ன கோத்திர கவுண்டர்கள் பற்றி மட்ட ரகமாக விமர்சனம் செய்துள்ளீர்கள் (http://www.jeyamohan.in/68921). மோரூர் கண்டங்குல) என்று ஸ்பெல்லிங் கூட தெரியாமல் அங்கேயோ எவனோ சொன்னதை கேட்டு அடித்து விட்டு விமர்சனம் வேறு. இந்த சங்கம் ஒரு பங்காளிகளின் சங்கம். இதில் இரண்டாயிரம் குடும்பங்கள் இருக்கும். இவர்களது முன்னோர் திருச்செங்கோட்டை மாலிக் கபூர் படையெடுப்பில் இருந்து கோயிலை காப்பாற்றி அர்த்தநாரீஸ்வரரால் ஆட்கொள்ள பட்டு மலைக்காவலராக தெய்வமாக வழிபடப்படும் கீர்த்தி பெற்றோர். திருச்செங்கோட்டில் எழுநூறு வருடமாக பல திருப்பணிகள் செய்து நாட்டை வழி நடத்தி வந்த தலைமை நாட்டார்கள் இவர்கள். இவர்கள் மதுராபுரியில் பாண்டியனால் ஆருகால்பீடத்தில் வேப்பம்பூ மாலையிட்டு முடிசூடப்பெற்றோர். மதுராபுரி வேந்தன் என்றும் பின்னாளில் தென்காசி பாண்டியர் என்று பெயரில் ஆட்சி செய்தவர்களின் வம்சாவழியும் இந்த இரண்டாயிரம் மோரூர் கன்ன கோத்திர இரண்டாயிரம் குடும்பங்கள். இன்று வைகாசிதிருவிழாவில் பெருமானுக்கும் மண்டகப்படி எடுத்து வரும் உரிமையுள்ளோர்.

இவர்களுக்கு திருச்செங்கோட்டை அதன் மக்களை கேவலப்படுத்தும் வாசகங்களை எதிர்த்து கேட்க உரிமை இருக்கிறது. இவர்கள் நேரடியாக புத்தக எரிப்பில் பங்கேற்கவில்லை. புத்தக எரிப்பை வழிநடத்தியது பி.ஜ.பி கட்சியை சேர்ந்த சிலர். மோரூர் கன்ன கூட்டத்தினர் இதரசமுதாய அமைப்புகளோடு பெட்டிசன் மட்டுமே கொடுத்தனர்.

மோரூர் கன்ன கூட்டத்தாரை சில்லறை, எலி என்றெல்லாம் விமர்சித்து நீவிர் உமது வலைதளத்தில் விமர்சித்துள்ளது, ஆட்சேபத்திற்கும், கண்டனத்திற்குரியது (http://www.jeyamohan.in/68921). உமது வலை தளத்தில் இருந்து இத்தகைய வார்த்தை பிரயோகங்கள் நீக்கப்பட வேண்டும். இல்லையேல் தங்களை போன்ற நல்ல எழுத்தாளர் மீது நாங்கள் கொண்டுள்ள மதிப்பை மீறி மானநஷ்ட வழக்கு தொடுக்க வேண்டி வரும் என்பதை மிகவும் கண்டிப்புடன் கூறிக்கொள்கிறேன். உங்கள் எழுத்துக்களை விட மோரூர் கன்ன கோத்திர கவுண்டர்களின் கீர்த்தியும், பணியும், மாண்பும் மேலானது.

இது சாதி அரசியல் அமைப்பு கூட கிடையாது. பங்காளிகள் சங்கம். இவர்களுக்கும் எந்த அரசியலிலும் விருப்பம் இல்லை. அரசியல் சார்பும் இவர்களுக்கு கிடையாது. இவர்களை உங்கள் கற்பனா சக்தியில் சாதி அரசியல், சாதிமைப்புக்குள் இருக்கும் சில்லறை என்றெல்லாம் பொய்யான விமர்சனங்களை வைப்பதேன்?

தாங்கள் இதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவும் வேண்டும். இந்த இ-மெயில் சுதேசி அமைப்பை சேர்ந்த திரு. நம்பி நாராயணன் அவர்களுக்கும் பிரதி அனுப்புகிறேன்.

நன்றி,

யுவ செந்தில்குமார்

Yuvasenthilkumar R,
Assistant Professor (Hort.),
Vanavaryar Institute of Agriculture,
Manakkadavu (Post),
Pollachi, Coimbatore.
Mobile: 09994789202
E-mail: [email protected]
Url: http://www.via.ac.in/

அன்புள்ள யுவ செந்தில்குமார்

இந்தமாதிரி மிரட்டல்களைக் கண்டு கண்டு சலித்துவிட்டது. நீதிமன்றம் செல்லுங்கள் பார்த்துக்கொள்வோம். இங்கே எழுத்தாளன் சமூகத்தை விமர்சிக்கக்கூடாது சமூகம் புண்படும் என்று நீதிமன்றம் சொல்லும் என்றால் சிறை செல்கிறேன், அவ்வளவுதானே?

ஜெ

முந்தைய கட்டுரைஇரு சந்தேகங்கள்
அடுத்த கட்டுரைமாதொருபாகன்- எதிர்வினை