ஜெமோ
இரண்டு சந்தேகங்கள்.
முதல்சந்தேகம்
மாதொரு பாகன் நாவலுக்கு எழுந்த எதிர்ப்பை நீங்கள் சரியாகவே கண்டித்திருக்கிறீர்கள். உங்கள் ஆணித்தரமான குரல் வரவேற்புக்குரியது. ஆனால் சில மாதங்களுக்கு முன் உங்கள் கட்டுரையின் ஒரு வரி இதேபோன்ற எதிர்ப்பைச் சந்தித்தது. உங்கள் சொந்த ஊரிலேயே. அதுவும் முழுக்கமுழுக்க இதேபோன்ற நிகழ்வுதான். இதேபோல சாதியக்குழுக்களும் உதிரி இந்த்துவக் குழுக்களும்தான் அதைச் செய்தார்கள். நீங்கள் மிரட்டப்பட்டதாக எழுதியிருந்தீர்கள். நீங்கள் மிரட்டப்பட்டபோது அதை ஃபேஸ்புக்கில் பலர் எழுதியிருந்தனர். சொல்லப்போனால் சில இந்துத்துவர்கள் கண்டித்திருந்தனர்.
ஆனால் ஒரு இடதுசாரியினர் கூட அதைக் கண்டிக்கவில்லை. சிலர் நீங்கள் அப்படி மத உணர்வுகளைத் தூண்டியிருக்கக் கூடாது என்றுதான் எழுதினார்கள். சிலர் உங்களுக்குத் தேவை அது என்றுதான் எழுதினார்கள். இதே பெருமாள் முருகன் எல்லாம் அப்போதும் ஃபேஸ்புக்கில் தீவிரமாகத்தான் இருந்தார்கள். அவர்கள் ஒப்புக்குக் கூட ஒரு வார்த்தை கண்டனம் தெரிவிக்கவில்லை.
அதற்கு முன்பு நீங்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி ரசிகர்களால் மிரட்டப்பட்டு மாசக்கணக்கில் தலைமறைவாக இருந்தபோது உங்களை எதிர்த்து நீங்கள் விளம்பரத்துக்காக அதையெல்லாம் செய்கிறீர்கள் என்றும் நீங்கள் மிரட்டப்படுவது இயல்பானது என்றும் எழுதியது காலச்சுவடு பத்திரிகை. அப்போது காலச்சுவடு முகாமைச் சேர்ந்த பெருமாள்முருகன் ஒரு வார்த்தை சொன்னதாக நினைவில்லை
நாளையே இதே வன்முறைக்கும்பல் நீங்கள் சொன்ன இதே வரிகளுக்காக உங்களை தாக்கினால் ஒரு முற்போக்காளர் கூட ஆதரிக்க மாட்டார்கள். வன்முறைக்காரர்களின் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ளவேண்டும் என்று காலச்சுவடு எழுதும்.
இதையெல்லாம் உணர்ந்துதான் இதைச் சொல்கிறீர்களா?
இரண்டாவது சந்தேகம்.
உங்கள் நண்பர் மனுஷ்யபுத்திரன் மாதொருபாகன் எதிர்ப்பை ஃபாசிசம் என்று கூச்சலிட்டு தெருமுனைப்போராட்டமெல்லாம் செய்துவருகிறார். ஆனால் அவரது கூட்டத்தில் ஜவஹருல்லா கலந்துகொள்கிறார். ஜவஹருல்லாவின் அமைப்பினர் செய்துவரும் ஜனநாயக ஒடுக்குமுறைகள்தான் தமிழகத்தை இருண்டகாலம் நோக்கிக் கொண்டுசெல்லக்கூடியவை. அத்தனை வன்முறைகளையும் நியாயப்படுத்தும் அடிப்படைவாத மதவெறியர்கள் அவர்கள்
அதாவது இந்துக்களில் உள்ள உதிரிகள், சாதியவாதிகள் எங்காவது சத்தம்போட்டால் அது ஃபாசிசம். மதவெறி அடிப்படைவாதமே முழுநேர அரசியலாகக் கொண்டிருக்கும் கட்சிகள் ஜனநாயக முற்போக்குவாதிகள் இல்லையா? இதை உணர்ந்திருக்கிறீர்களா?
சாமிநாதன்
அன்புள்ள சாமிநாதன்
1, எனக்கு ஆதரவாக எவரும் ஒன்றும் சொல்லவில்லை என நான் அறிவேன்.பலர் அவர்களின் சொந்தக்காழ்ப்புகளை வெளிப்படுத்தி குதூகலித்தார்கள். ஒருவேளை அடிகிடி பட்டிருந்தால் இன்னும் கொஞ்சம் மகிழ்ந்து கூத்தாடியிருப்பார்கள். அதைப்பற்றி எனக்குக் கவலையும் இல்லை. நான் எழுத வந்த காலம் முதலே தனித்து நிற்பவன். என் தரப்பைத்தான் நான் சொல்கிறேன்.
2. ஜவஹருல்லா முழுமையாகவே நிராகரிக்கப்படவேண்டிய மத அடிப்படைவாதி என்பதிலும் அவர் உருவாக்கிக்கொண்டிருக்கும் அடிப்படைவாதவெறி இஸ்லாமிய சமூகத்தை தொடர்ந்து இருட்டுக்குள் கொண்டுசென்றுகொண்டிருக்கிறது என்பதிலும் எனக்கு ஐயமில்லை. நீண்டகால அளவில் அவரது மதவெறி அமைப்பு தமிழ்ச் சமூகத்திற்கும் பேராபத்து.
அவரை மனுஷ்யபுத்திரன் மேடையேற்றியிருப்பதும் கொண்டாடுவதும் துரதிருஷ்டவசமானது. பாதிக்கப்பட்டவர்களாக உணர்வதும் அதுசார்ந்த மிதமிஞ்சிய வேகத்தை உருவாக்கிக் கொள்வதும் கொஞ்சம் கொஞ்சமாக அடிப்ப்டைவாத்த்தை நோக்கிச் செலுத்தக்கூடியவை.
இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஏற்றுக்கொள்வது முற்போக்கானது என்ற மாயை இங்கே உள்ள போலி முற்போக்கினரால் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஜவஹருல்லா போன்ற மத அடிப்படைவாதியை கூடவே வைத்துக்கொண்டு மதச்சார்பின்மையையும் வகுப்புவாத எதிர்ப்பையும் பேசுவது மேலும் மேலும் நடுநிலைஇந்துக்களை இந்துத்துவ அரசியல் நொக்கிக் கொண்டுசெல்கிறது என்பதை இவர்கள் உணராதவர்கள் அல்ல.
ஜெ