பகற்கனவுகள்

Daydreaming-daydreaming-24499616-500-375

ஜெ சார்

நான் எனக்குள்ளே எப்பொழுதும் ஒரு தனி உலகாக இலக்கியம், கற்பனைகள்,சிந்தனைகள் என்று இருக்கிறேன்.எந்த வேலை செய்தாலும் உள்றே ஒரு தனி சரடாக கற்பனை ஓடிக்கொண்டே இருக்கிறது.என் வேலைகளையும் கடமைகளையும் உற்சாகமாகவே செய்கிறேன்.ஆனால் என் அக உலகில் மட்டுமே நான் நிறைவடைகிறேன்.மற்றவர்களிடம் நான் பேசுவதே கடமைக்குத்தானோ என்று எனக்கே தோன்றுகிறது.

அதிக இலக்கிய வாசிப்பினால் இப்படி இருக்கிறேனா.என் வாழ்வில் போரடிப்பதோ,சோர்வுகளோ இல்லவே இல்லை.மாறாக என் கற்பனைகளுக்கு நேரம் தான் போதவில்லை.இவ்வாறு தனித்து அமர்ந்து கற்கனைகளில்,சிந்தனைகளில் இருப்பது சரியா.என்னால் இத்தகைய இலக்கிய கற்பனைகளை,சிந்தனைகளைத் தவிர்க்கவே முடியவில்லை.இவற்றை பகிர்ந்து கொள்ளவும் எனக்கு எவருமில்லை.இதனால் வேறு பாதிப்புகள் வருமா.உங்களால் புரிந்து கொள்ள இயலும்.நேரமிருக்கும் போது பதிலளிக்கவும்.

நன்றி
எம்

2222

அன்புள்ள எம்

‘பகற்கனவுகள்’ எனப்படும் விழிப்புநிலை கனவுகள் அல்லது அந்தரங்கக் கற்பனைகள் மனிதனின் அந்தரங்க வாழ்க்கையை நிறைவு செய்பவை. அவை இல்லாமல் மானுட வாழ்க்கையில் உண்மையான இன்பம் இல்லை. அழகுணர்ச்சியும் நுண்ணுணர்வும் கொண்டவர்களின் பகற்கனவுகள் மிகப்பிரம்மாண்டமானவை. அவர்கள் உண்மையில் வாழ்வது அங்கேயே

நுண்ணுணர்வு கொண்ட ஒருவருக்கு இங்கே புறவாழ்க்கையாகக் கிடைப்பது போதாது. ஒரே சூழல், எளிய உறவுகள், மாறாத உணர்ச்சிகள். அவர்களுடைய அக ஆற்றல் இன்னும் பெரிய உலகில் விரிவாக வெளிப்பட விழைகிறது. ஆகவேதான் அது பகற்கனவுகளை உருவாக்கிக்கொள்கிறது

தீரா பகற்கனவுகள் கொண்டவர்கள் அதிருஷ்டசாலிகள். அவர்களின் வாழ்க்கையில் சலிப்பில்லை. வாழ்க்கை வீணாக ஆவதில்லை. தனிமை சுமையாவதில்லை.

இலக்கியம் , கலைகள் எல்லாமே ஒருவகையில் பகற்கனவுகளை மேம்படுத்திக் கொள்வதற்காகத்தான். இலக்கியம் என்பதே ஒருவகையில் ஒட்டுமொத்த மானுடத்தின் பகற்கனவுதான்.

கலைகளின் வழியாக அடையப்படும் பகற்கனவுகள் நேர்நிலையானவை. இனியவை. அவையே உவகையை அளிப்பவை. அவ்வாறன்றி பகற்கனவுகளை அடைபவர்கள் பெரும்பாலும் எதிர்மறைப் பகற்கனவுகளை அடைகிறார்கள். வன்மம் கொள்வதுபோல, பழிவாங்குவதுபோல. அவை உள்ளத்தை துயர்மயமாக்கிவிடும். உள்ளிருந்து உளுத்துப்போகச் செய்யும்

அத்தகைய எதிர்மறைப் பகற்கனவுகளின் அடுத்தபடி என்பது தன்னிரக்கம். தன்னை பாதிக்கப்பட்டவளாக, ஒதுக்கப்பட்டவளாக, பேதையாக விதவிதமாக கற்பனைசெய்து கொள்ளுவது. வாசிப்பு இல்லாத பெரும்பாலான பெண்களுக்கு இந்த மனநிலை உள்ளது என்பதைக் காணலாம்.

வன்மமும் கழிவிரக்கமும் இல்லாத பகற்கனவு அழகிய ஒரு அந்தரங்க உலகை அளிக்கிறது. அங்கே புதியபுதிய நிலக்காட்சிகள், புதிய உறவுகள். வாழ்க்கையின் எண்ணற்ற சாத்தியக்கூறுகள். நாம் அன்றாடம் புதியதாக வெளிப்படும் பிறப்புகள்

எல்லாவகையிலும் அது ஒரு கொடை. ஆனால் யோக வழியை தேர்ந்தெடுத்து மேலே செல்பவர்களுக்கு மட்டும் அது பெரிய தடை. நுரைத்துப்பெருகி அது யோகத்தை அழித்துவிடும். பின்னர் பகற்கனவுகளையே யோக அனுபவமாக அடைய ஆரம்பித்துவிடுவோம்

ஜெ

முந்தைய கட்டுரைநம்பிக்கை மனுஷிகள்
அடுத்த கட்டுரைசென்னை சந்திப்பு – இன்று