இரு நூல்கள்

ஒரு புத்தகத்தை வாசித்துவிட்டு அதை சுருக்கிச் சொல்வதென்பது அதை தெளிவாகப்புரிந்துகொண்டால் மட்டுமே சாத்தியம். பெரும்பாலானவர்களால் அதைச் செய்ய முடிவதில்லை. நிறைய வாசித்துத் தள்ளுகிறவர்களில் கணிசமானவர்கள் புத்தகத்தில் உள்ள உதிரி தகவல்களை ஆங்காங்கே சொல்வதுடன் நின்றுவிடுவதையும் விவாதங்களில் புகுந்து புத்தகத்தில் இருந்து சிலவற்றை சொல்வதை ஒரு சாதனையாக நினப்பதையும் காணலாம். அவர்கள் ஒரு நூலைப்பற்றி எழுதி அந்த நூலை நாம் வாசித்தான் இவர் எந்த நூலை வாசித்தார் என்ற திகைப்பு ஏற்படும்.

பத்ரி சேஷாத்ரி தன் இணையதளத்தில் இரு நூல்களின் சுருக்கமான அறிமுகத்தை அளித்திருக்கிறார். இரண்டுமே தெளிவாக அதேசமயம் செறிவாக இருந்தன. ரிச்சர்ட் டாக்கின்ஸ் அமெரிக்க நண்பர்கள் பரிந்துரைத்து நான் வாசித்து வியந்த ஆசிரியர். பொதுவாக அறிவியலைப் புரிந்துகொள்ளும் படிப்பும் மன அமைப்பும் குறைவான எனக்கே அவரது நூல்கள் மூச்சடைக்க வைக்கும் வாசிப்பு அனுபவத்தை அளித்தன. பரிணாமம் பற்றிய டாக்கின்ஸின் நூலறிமுகம் வாசகர்களுக்கு நல்ல தொடக்கமாக அமையலாம்.

பரிணாம வளர்ச்சி நிஜமே!

http://thoughtsintamil.blogspot.com/2010/03/blog-post_9611.html

இரண்டாவது நூல் நியால் ·பெர்குஸன் எழுதிய பிரிட்டிஷ் பேரரசு பற்றிய நூல். அதையும் சுருக்கமாகவும் தெளிவாகவும் அறிமுகம் செய்திருக்கிறார் பத்ரி. அந்நூலின் உள்ளடக்கம் குறித்து அவர் எழுதியிருப்பதைப் பார்க்கும்போது அது ஒரு நல்ல ஆய்வுநூலாக இருக்கும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

என் கருத்தில் பிரிட்டிஷார் எப்படி உலகை வெல்லமுடிந்தது? அவர்களின் சிவில்நிர்வாக முறை, நீதிநிர்வாக முறை இரண்டும் ஒப்புநோக்க அவர்கள் வென்ற நாடுகளை விட பலமடங்கு மேலானவை. ஆகவேதான் இந்தியாபோன்ற சிக்கலான அமைப்புள்ள நாடுகளை அவர்கள் வென்று ஆள முடிந்தது.  இதில் சர்வே அமைப்பு, தகவல் தொகுப்பு அமைப்பு போன்ற அவர்களின் முறைகள் அடங்கும்

அவர்களின் நீதிமுறை அவர்கள் மீது மக்கள் நம்பிக்கை வைக்க காரணமாக அமைந்தது. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நடந்த பகுதிகளை நோக்கி பிற பகுதிகளில் இருந்து மக்கள் திரளாக கிளம்பிச் சென்றார்கள், காரணம் பிறபகுதிகளில் இருந்த நிலப்பிரபுத்துவ நீதிமுறையை விட மேலான பிரிட்டிஷ் முதலாளித்துவ நீதிமுறைதான்.

பிரிட்டிஷாரின் ஆட்சி ஊழலற்றது என்று இதில் எழுதப்பட்டிருப்பதைப் பற்றி இன்றைய ஆய்வாளர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். பிரிட்டிஷ் ஆவணங்களை ஆராய்ந்த கேரள ஆய்வாளர் டாக்டர். எம் கங்காதரன் எழுதிய ஆய்வேடு குறித்து நான் எழுதியிருக்கிறேன். சிவில் நிர்வாக தளத்தில் உச்சகட்ட ஊழல் என்பது இந்திய பிரிட்டிஷ் ஆட்சியின் அடிப்படை இயல்பாக இருந்தது.

இங்கே அதிகாரிகளாக வந்தவர்கள் மிக அடித்தளத்தில் இருந்து வந்தவர்கள்.சட்டென்று பிரபுக்களைப்போல ஆவதைப்பற்றிய கனவே அவர்களை இந்த மரணபூமிக்கு வரச்செய்தது. இப்படி சிலவருடங்களில் செல்வந்தர்களாக ஆனவர்களைப் பற்றி எட்மண்ட் பர்க் கடுமையான உரைகள் ஆற்றியிருக்கிறார். அவர்கள் மேல் பிரிட்டிஷ் ஆட்சி கட்டுப்பாடு விதித்தது என சொல்ல முடியாது. இந்தியாவில் இன்றுள்ள மேல்தட்டுவர்க்கம் பிரிட்டிஷ் ஆட்சியின் ஊழலுக்கு உதவி பங்குபெற்று வந்ததே.

பெர்குஸன் சொல்லும் ஒரு கருத்தை நான் எப்போதும் சொல்வதுண்டு. போர்ச்சுக்கல்காரர்களிடம் இருந்தும் பிரெஞ்சுக்காரர்களிடம் இருந்தும் பிரிட்டிஷார் நம்மை காப்பாற்றினார்கள். காலனியாதிக்கவாதிகளில் பிரிட்டிஷார் மேலானவர்களே. அதற்குக் காரணம், நேரடியான வன்முறை அதிகாரத்தை விட பொருளியல் அதிகாரத்தை கையாளவே அவர்கள் விரும்பினார்கள் என்பதுதான். அதில் மதம் போன்றவற்றை அவர்கள் கலக்கவில்லை.

ஆகவே பொருளியல் அதிகாரத்தை நிறுவி அதை நடத்த தேவையான நடுத்தர வர்க்கத்தை இங்கே உருவாக்கி எடுத்தார்கள். அந்த வர்க்கத்துக்கு கல்வியும் ஆட்சிப்பயிற்சியும் அளித்தார்கள். அந்த வர்க்கமே இந்தியாவின் அடுத்த கட்ட மறுமலர்ச்சிக்கும் விடுதலைக்கும் காரணமாக அமைந்தது. இந்தியாவுக்கு பிரிட்டனின் கொடை அது

ஆனால் பொருளியல் ஆதிக்கம் மூலம் இந்தியாவின் தேசிய உபரியை ஒட்டச்சுரண்டி இந்திய நிலத்தை பஞ்சங்களால் மூடியவர்கள் பிரிட்டிஷ்காரர்களே. அவர்களின் ஒருங்கிணைந்த வரிவசூல் முறை இந்தியாவை துளிவிடாமல் நக்கி காலியாக்கியது

இவ்வாறு உபரி முழுக்க உறிஞ்சி எடுக்கப்பட்டமையால் பஞ்சம்தாங்கும் அமைப்புகள் அழிந்து இந்தியா பிரிட்டிஷ் ஆட்சிக்காலம் முழுக்க பட்டினியால் சின்னபின்னமாகியது. லட்சகணக்கில் மக்கள் செத்து அழிந்தார்கள். லட்சக்கணக்கில்  அடிமைகளாக நாடு விட்டு சென்றார்கள்.

அந்தப்பழிக்கு அவர்களை பொறுப்பாக்காமல் எழுதப்படும் வரலாறுகளுக்கு பெரிய மதிப்பு இல்லை. இந்த வரலாற்றை நாம் எழுத வேண்டும். ஆனால் நம்மில் அறிஞர்கள் பலர் மேலைநாட்டுத் தரப்பில் எழுதுவதை திருப்பி எழுதுவதே அறிவார்ந்தது என்றும் நம் வரலாற்றை நாம் எழுதுவது முற்போக்காகனதல்ல, நாகரீகமானதுமல்ல என்றும் நம்புகிறார்கள்.

பெர்கூஸன் என்ன இருந்தாலும் ‘அவர்களின்’ நோக்கில் எழுதக்கூடியவர். அது இயல்பே. அதில் எந்த அளவுக்குச் சமநிலை உண்டு என்று அறிய அவரது நூலை வாசிக்க வேண்டும்

பேரரசு

http://thoughtsintamil.blogspot.com/2010/03/blog-post_19.html

தொடர்புடைய பழைய கட்டுரைகள்

மூதாதையர் குரல்

பசியாகி வரும் ஞானம்

சுவர்களில்லா உலகம் – மார்வின் ஹாரீஸ் எழுதிய ‘பசுக்கள் பன்றிகள் போர்கள் ஆகிய கலாச்சாரப் புதிர்கள்’ நூலை முன்வைத்து…

அள்ளிப் பதுக்கும் பண்பாடு

பண்டைய இந்தியாவில் பஞ்சம் இருந்ததா?

முந்தைய கட்டுரைபாலாவுக்கு விருது
அடுத்த கட்டுரைபனிமனிதன்