விழா -கடிதங்கள் 3

DSC_3410[1]

அன்புள்ள ஜெ

பலமாதங்களாகக் கடிதம் ஏதும் எழுதவில்லை என்றாலும் தொடர்ச்சியாக உங்களுடன் உரையாடலில் இருப்பது போன்ற உணர்வு.

விழா குறித்த ஏற்பாடுகள், அமர்வுகள், நிகழ்வுகள், உரைகள், புகைப்படங்கள் என்று ஒன்று விடாமல் வாசித்துக் கொண்டிருக்கிறேன் / பார்த்துக்கொண்டிருக்கிறேன். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தினர் மகத்தான பணியை செய்து முடித்திருக்கின்றனர். ஒரே ஒரு வருத்தம். என்னால் நிகழ்வுகளில் பங்குகொள்ள முடியவில்லை என்பதே.

அன்புடன்

கோபி ராமமூர்த்தி

siinu

இனிய ஜெயம்,

இதை எழுதும் இக் கணம் வரை, தொண்டைக் குழியில் தங்கி இருக்கிறது பாக்கு மென்ற தித்திக்கும் துவர்ப்பு போல ஒரு இனிய துக்கம். ஒவ்வொரு முறையும் சந்திப்புக்கு முதல்வனாக வந்து, உங்களுக்கு விடை தந்து அனுப்பிய பின்பே புறப்பட்டு செல்வேன். பிரிவுத் துயரை கடக்க நான் கண்டடைந்த எளிய வழிமுறை.[எல்லாம் சீனுக்கு கீழேதான் எனும் பாவனையில் எல்லாவற்றையும் கடந்து விடுவேன்] இம்முறை சற்றே தெற்றி விட்டது. சிக்கிக் கொண்டேன்.

வாகனம் முன்னால் செல்ல, மனம் உங்களுடனேயே தங்கி இருக்க, வாகனத்தில் பின் சீட்டில் கிட்டத்தட்ட சரிந்து கிடந்தேன். புவியரசு பின்னால் பின்னால் திரும்பி பார்த்து ”இன்னும் கொஞ்சம் நேரம் இருந்துட்டு வந்திருக்கலாமோ” என கேட்டுக் கொண்டே இருந்தார்.

ஐந்தாவது விழா. நினைக்க நினைக்க இனிக்கிறது. இரவெல்லாம் தங்க இடமின்றி ரயில் வே ஸ்டேஷனில் அமர்ந்து தேநீர் அருந்தியபடி இலக்கியம் பேசிப் பேசியே கோவையை விடிய வைத்த முதல் விழா இப்போது கனவு போல இருக்கிறது.
paavannan
ஒவ்வொரு விருது விழாவுக்கு முன்னும் விருது பெரும் படைப்பாளியை மொத்தமாக ஒரு முறை மறு வாசிப்பு செய்து விட்டு , நண்பர்களுக்குள் உரையாடிக் கொள்வது எல்லாமே ஆழ்மனத்தின் ஏதேதோ அடுக்குக்குள் புதைந்து கிடக்கிறது.

இந்த விழா எனக்கு இன்னும் முக்கியம். கண் பட்ட அனைவர் வசமும் ‘வெண் முரசு’ குறித்தே உரையாடிக் கொண்டிருந்தேன். முதன் முறையாக இனிய தோழி சைதன்யா வசம் உரையாடினேன். பொறாமையைத் தூண்டும் தேர்ந்த வாசகி. எந்த தர்க்கப் பின்புலமும் இன்றி மனிதனை ஊடகமாகக் கொண்டு சிலசமயம் தீமை பேருருக் கொண்டு எழுந்து வரும், இலக்கியத்தில் வரும் அத் தகு தருணங்கள் எனக்கு மிக முக்கியமானவை என்றார். மழைப் பாடல் இறுதி, வெள்ளை யானை நாவலின் பெயரே அளித்த தத்தளிப்பு என பலதும் சொல்லிக் கொண்டே போனார். மை எழுதியது போன்ற புருவமும், அருண்மொழி அக்கா போன்ற அதே விழிகளும் அவரது உணர்சிகளை இன்னும் அதிகரித்து காட்டுவதாக தோன்றியது.

நின்று நடந்து கிடந்த இடம் தோறும் நண்பர்கள், உரையாடல். என நினைக்க நினைக்க தித்திப்பு. விழா முடிந்து மண்டபம் வருகையில் உள்ளிருந்து வினோத் ஓடி வந்தார் ” டே நீ பாத்யா டே” என்று கை பிடித்து வினவினார்.

இந்த ஆவணத்தில் வினோத் எடுத்த புதிய முயற்சி என்ன அது எந்த அளவு வெற்றி என்று சொன்னேன். அவர் பூவாக மலர்ந்து விட்டார். பொதுவாக இத்தகு ஆவணப் படங்களில் முதல் சவால் அதன் சட்டகத்தில் வருவோர் யாரும் நடிகர்கள் அல்ல, குரலும் ஊடகத்துக்கான குரலாக இருக்காது. காமிரா நகரும் சுதந்திரமும் இயக்குனருக்கு கிடையாது. இந்த சவாலை வெற்றிகரமாக கையாண்டு அதற்கும் மேல் இந்த ஆவணப் படம் ஒரே சமயம் இலக்கியத்தின் தீவிரம் குறையாமல் , அதை வெகு ஜன தளத்துக்குள் ஒரு கணம் கூட விழி விலக்காமல் நோக்கும் வகையில் சுவாரஸ்யம் குன்றாமல் உருவாக்கி, அனைத்து சவால்களையும் வெற்றிகரமாக தாண்டி வந்திருக்கிறார் வினோத்.
krishanan
இலக்கியப் பரியச்சமற்ற[ஆனால் நுண்ணுணர்வு கொண்ட] என் தம்பி ஆச்சர்யமாக ஹோசூரில் இருந்து விழாவுக்கு வந்திருந்தான். அவனே என் அளவுகோல்.பிறகு வந்த பாவண்ணன் உரை வழியே இங்கு நிகழ்ந்து கொன்டிருப்பது என்ன என்ற முழு சித்திரத்தை அவன் அடைந்து விட்டான். விழா முடிந்து விடை பெரும் வரை ‘ஆச்சர்யம்’ ‘நம்பவே முடியல’ எனும் ஒரே வார்த்தையை திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தான். ‘நீ இதுக்குள்ள இருக்க அப்டின்னு நினைச்சா ரொம்ப சந்தோஷமா இருக்கு’ என்று சொல்லி விட்டு சட்டென்று விடை பெற்று மறைந்தான்.

மேடையில் கண்டேன். நண்பர்கள் நண்பர்கள். கண்கள் கலங்க அமர்ந்து விட்டேன். எத்தகையதொரு பண்பாட்டு நிகழ்வு இது. அதன் கண்ணிகள் என் நண்பர்கள். இந்த ஐந்து வருடத்தில் விஷ்ணுபுர நண்பர்கள் குறித்து எத்தனை வசைகள் கேட்டு விட்டேன். குறிப்பாக என் அண்ணன் அரங்கா பற்றி. ஜெயமோகனுக்கு சொம்பு தூக்க, எவனும் லண்டனில் இருந்து வரவில்லை, ஜால்ரா அடிக்க ஜப்பானிலிருந்து வரவில்லை. ஒரு பண்பாட்டு நிகழ்வின் பங்களிப்பை நிறைவாக முன்னெடுக்க வந்திருக்கிறார்கள்.நிதி திரட்டுவது தொடங்கி, இங்கு வருபவர்களை பூங்கொத்து கொடுத்து வரவேற்ப்பது துவங்கி, உண்டு முடித்த மேஜையை சுத்தம் செய்வது வரை நண்பர்கள் கூடி செய்வது , நாம் புறக்கணித்த அத்தனை இலக்கியவாதிகளுக்காகவும் தான் என்பது எத்தனை முதுகெலும்பற்ற அறிவு ஜீவிகள் உணர்ந்திருப்பார்கள்?

கை குலுக்கி விடை பெறுகையில் வசந்தபாலன் கேட்டார் ‘ஏன் மேடைல உங்கள காணோம் எல்லோரும் சேந்து போட்டோ எடுத்துகிட்டோமே’ . மேடையில் நான் இல்லா விட்டால் என்ன? நான் எங்கு இருக்க வேண்டுமோ அங்கு இருக்கிறேன். அது போதும் என்று நினைத்துக் கொண்டேன்.

கடலூர் சீனு

pavannan mani

அன்புள்ள ஜெ,

விஷ்ணுபுரம் விழா நினைவுகளை மீட்டிக்கொண்டே இருக்கிறேன். விஷ்ணுபுரம் நண்பர்களைச் சந்தித்ததும் அங்கே நிலவிய நட்பார்ந்த சூழலும் பரவசமாக இருந்தது. சாதாரண வாழ்க்கையில் நாம் ரசனையும் வாசிப்பும் உள்ள நண்பர்களைச் சந்திப்பதே இல்லை.

நான் என்னுடைய அலுவலகத்திலே மாசம் ஒருமுறை பெரிய பார்ட்டிகளில் பங்கெடுக்கிறேன். வருடத்திற்கு மூன்று தடவை வெளிநாட்டிலோ உள்ளூரிலோ எங்காவது வனப்பகுதியில் சந்திக்கிறோம். அதெல்லாமே வெற்று அரட்டை. குடி. அதில் உண்மையில் ஒரு சலிப்புதான் மிச்சமாகும். போகிறது வரைதான் உற்சாகம் எல்லாம். இந்த விழாவில் திரும்பும்போதுதான் மனநிறைவு.

ஏனென்றால் எல்லாருமே என்னைப்போன்றவர்கள். பெரும்பாலானவர்கள் என்னைவிடவும் வாசித்தவர்கள். சர்ச்சைகளில் ஒவ்வொரு எழுத்தாளரின் படைப்பைப்பற்றியும் பேசுவதைக்காண ஆச்சரியமாக இருந்தது. அதைவிட ஆச்சரியம் கதை வெளிவந்த வருடம் இதழ் எல்லாவற்றையும் ஞாபகம் வைத்திருக்கிறார்கள். விவாதங்கள் மிகவும் செறிவாக அமைந்திருந்தன. இத்தனைச் செறிவாக அமைந்திருந்தால்தான் அந்த நிறைவு வரும் என்று தோன்றியது.

சாப்பாடு தங்குமிடம் எல்லாமே அருமை. நான் வெளியே ஓட்டலில் ரூம் போட்டுவிட்டு வந்திருந்தேன். அங்கேயே எல்லாருடனும் தங்கியிருக்கலாமோ என்ற எண்ணம் வந்தது

சிவராமன்

முந்தைய கட்டுரைநவீன அடிமைமுறை- கடிதங்கள் 1
அடுத்த கட்டுரைகோவையில் இன்று பேசுகிறேன்