சென்றவருடம்

இருபதாண்டுக்காலம் டைரி எழுதிக்கொண்டிருந்தேன். இப்போது எழுதுவதில்லை. இணையதளமே ஒருவகை டைரி. திரும்பிப்பார்க்கையில் சென்ற வருடமும் நிறைவானதாக இருந்திருப்பது தெரிந்தது. சரசரவென்று நாட்கள் ஓடிச்சென்று விட்டன.

என் வாழ்க்கையில் நான் முதன்மையான இன்பங்களாக எண்ணுபவை நான்கு. எழுதுவது. குடும்பத்துடன் இருப்பது. பயணம். நண்பர்களுடன் பேசிக்கொண்டிருப்பது. சென்றவருடம் முழுக்க இவையே பெரும்பாலும் நாட்களை நிறைத்திருக்கின்றன

மூணாறில்
மூணாறில்

சென்ற டிசம்பர் இறுதியில் வெண்முரசை எழுதத் தொடங்கினேன். வீட்டில் இருக்கும் நாட்களில் தினம் இரண்டு அத்தியாயங்கள். பயணங்களின்போது முடிந்தால் ஓர் அத்தியாயம். தொடர்ந்து எழுதிக்கொண்டே இருந்தேன். அந்தக்கனவு என்னை தன்னுள் வாங்கி வைத்திருந்தது. இங்கும் அங்குமாக இருமடங்கு வாழ்ந்தேன்

நீலம் எழுதிய நாட்களின் பெரும் பித்துநிலை. வெவ்வேறு நாவல்கள் முடிவதன் இனிய துயர் மிகுந்த நாட்கள். அடுத்த நாவல் தொடங்குவதன் மனக்கிளர்ச்சி.

சிங்கப்பூரில்
சிங்கப்பூரில்

சென்றவருடம் ஏப்ரல்வரை அஜிதன், சைதன்யா இருவரும் வீட்டில் இருந்தனர். இருவருக்குமே படிப்பு முடிந்த இடைவேளை. உற்சாகமான நாட்கள் அவை. சைதன்யாவை சென்னை கிறித்தவக் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்திற்குச் சேர்த்தேன். அஜிதன் சென்னை சென்றான்.

அதன்பின்னர் வீட்டில் அருண்மொழியும் நானும் மட்டும். ஒருவகையில் இரண்டாவது ஹனிமூன். அருண்மொழியுடன் தனியாக இருக்கும்போது அவள் எப்படி மாறிவிட்டிருக்கிறாள் என்று ஒரு போதும் மாறவே இல்லையோ என மறுபோதும் தோன்றிக்கொண்டே இருக்கும் விந்தை.

மலேசியாவில்

சென்றவருடம் பல நீள்பயணங்கள். பிப்ரவரியில் சிங்கப்பூருக்கும் மார்ச்சில் மலேசியாவுக்கும் சென்றேன். மலேசியாவுக்கு நண்பர்கள் கிருஷ்ணனும் ராஜமாணிக்கமும் வந்தார்கள். ஜூலையில் ஆகஸ்ட் வரை நீண்ட காஷ்மீர் பயணம். அதன்பின் சிறிய சில பயணங்கள். அனேகமாக மாதத்திற்கு ஒன்று என.

இந்தப்பயணங்கள் ஒட்டுமொத்தமாக இரண்டு மாதகாலம் நீண்டிருக்கின்றன. அதாவது வருடத்தில் ஆறில் ஒருபங்கு இன்பச்சுற்றுலாவாக சென்றிருக்கிறது. முற்றிலும் புதிய ஊரில் காலையில் கண்விழிப்பதைப்போல என்னை உற்சாகம் கொள்ளச்செய்யும் அனுபவம் பிறிதில்லை.

காஷ்மீரில்

சென்ற வருடம் நிறைய நண்பர் சந்திப்புகள், குட்டிக்க்குட்டி பயணங்கள். ஜனவரியில் திருப்பூரில் ஒரு கூட்டம்.பெப்ருவரியில் மூணாறில் ஒரு சந்திப்பு. மேமாதம் வழக்கமான ஊட்டி நட்புக்கூடல்.

மலைப்பகுதிகளில் நண்பர்களைச் சந்திப்பது எப்போதுமே உற்சாகமானது. நீண்ட நடைபயணங்கள். உரையாடல்கள். ஊரில் இருக்கும்போதிருக்கும் மனநிலைகள் விலகி அனைவருமே உற்சாகமாக உணரும் தருணங்கள் அவை. அதிலும் ஊட்டி குரு நித்யாவின் இடம். என் மகத்தான மனநிலைகள் பல நிகழ்ந்த இடம்

ஊட்டி சந்திப்பு

மேமாதம் திருவண்ணாமலையில் பவா செல்லத்துரை ஏற்பாட்டில் ஒரு சந்திப்பு நிகழ்ச்சி. ஜூனில் கோவையில் கவிஞர் கண்ணதாசன் விருது பெறச்சென்றேன். நவம்பரில் வெண்முரசு விழா. டிசம்பரில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் விழா மற்றும் நண்பர் சந்திப்பு. கடைசியாக விஷ்ணுபுரம் விழா

வருடம் முழுக்க சினிமாப்பயணங்கள் இருந்தன. நவம்பரில் மானந்தவாடி அருகே ஒரு காட்டுக்குள் அழகிய விடுதியில் பத்துநாட்கள் இருந்தேன் திருவனந்தபுரம் அருகே ஒரு நதிக்கரை விடுதியில் மே மாதம் பத்துநாட்கள் இருந்தேன்.

பாபநாசம் படப்பிடிப்பில்

பாபநாசம் படப்பிடிப்பு நடந்தபோது குற்றாலத்திலும் பின்னர் தொடுபுழாவிலும் 10 நாட்களுக்குமேல் கூடவே இருந்தேன். கமல்ஹாசன் அவர்களுடனும் இனியநண்பர் சுகாவுடனும் இருந்த நாட்களை நினைத்தாலே நூற்றுக்கணக்கான நகைச்சுவைத்துணுக்குகள் நினைவுக்கு வந்து சிரிப்பு வருகிறது.

திரும்பிப்பார்க்கையில் அனைத்தும் மிக அருகே கடந்துசென்றதைப்போல் உணர்கிறேன். வரும் வருடம் அதே வேகத்தில் சென்றுமுடியப்போகிறது. இதோ விஷ்ணுபுரம் விருது முடித்துவந்தேன். ஜனவரி 9 அன்று கோவையில் வியாசனைப்பற்றி ஓர் உரை. 11 அன்று சென்னையில் பூமணிக்குப் பாராட்டு. 13 அன்று வந்து இங்கே ஒரு கூட்டம்.

வெண்முரசு விழா

ஜனவரி 14 முதல் ஒரு மலையாளப்படம் எழுதுவதற்காக செங்கன்னூர் அருகே ஒரு கிராமத்திற்குச் சென்று 15 நாள் தங்குவேன். ஒரு ஆலயத்துக்குரிய இடம். சிறிய கேரளக்கிராமங்களே அழகானவை. சுத்தமானவை.

பிப்ரவரி 7 ல் மீண்டும் கோவை. பூமணி பாராட்டுக்கூட்டம். உடனே பிப்ரவரி 12 முதல் 15 நாட்கள் நண்பர்களுடன் வடகிழக்கு மாநிலங்களில் பயணம். மார்ச் முதல் வாரம் மீண்டும் ஒரு சினிமாவுக்காக கர்நாடகத்தில் ஒரு வனவிடுதியில் தங்கல். ஜூனில் இங்கிலாந்து கனடா பயணம்.

இனியவை நிகழ்ந்தன. இனிதே நிகழ்க.

முந்தைய கட்டுரைகோவையில் இன்று பேசுகிறேன்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 77