எனது இந்தியாவைப்பற்றி….

 அன்புள்ள ஜெயமோகன்

,உங்கள் எனது இந்தியா கட்டுரை படித்தேன்

. சில கேள்விகள் எழுகின்றன. இந்திய இறையாண்மையை மறுக்கிறார்கள் எனும் பெரும் குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளீர்கள். ஆனால் அதற்கான முழுமையான சான்றுகளை குறிப்பிடத் தவறிவிட்டீர்கள் என்றே தோன்றுகிறது.//

ஆனால்இவைஅனைத்துக்குமேபொதுவானஒருஅம்சம்உண்டு. கண்மூடித்தனமானஇந்தியஎதிர்ப்பு. இந்தநாடுமுழுக்கமுழுக்கஅநீதிமீதுகட்டப்பட்டுஒவ்வொருநிமிடமும்அநீதியால்இயக்கப்படுவதென்பதில்இவர்களுக்குஐயமேஇல்லை. இதன்போலீஸ், நீதிமன்றம், அரசாங்கம் , மதங்கள், பண்பாட்டுஅமைப்புகள்அனைத்துமேமுழுக்கமுழுக்கஅநீதியைமட்டுமேசெய்துகொண்டிருப்பவைஎனஇவைநேரடியாகவும்மறைமுகமாகவும்வாதிடுகின்றன. சிறுபான்மையினர், தலித்துக்கள், பழங்குடியினர்போன்றவர்கள்இந்ததேசத்துக்குஎதிராககிளர்ந்தெழவேண்டுமெனஇவைஅறைகூவுகின்றன. இந்ததேசத்தின்இறையாண்மைஎன்பதுதான்இந்தநாட்டுமக்களின்உண்மையானமுதல்எதிரிஎனஇவைபிரச்சாரம்செய்கின்றன.//இந்தியாவில் இப்படி தன்னை கைவிடப்பட்டவர்களாக, ஒடுக்கப்பட்டவர்களாக எண்ணுகின்ற சமூகங்கள் இல்லை என்கிறீர்களா? அவர்களுக்காக எழும் குரல்கள் எல்லாமே இந்திய இறையாண்மையை எதிர்க்கின்றனவா? இறையாண்மையின் பலன் சட்டத்தின் ஆட்சி அல்லவா? அப்படி சட்டத்தின் ஆட்சி கலைந்த காலங்கள் இல்லையா? அவற்றை நீங்களே சுட்டிக்காட்டியுள்ளீர்களே.சிற்றிதழ்களை சமூகத்தின் விமர்சகனாக நான் காண்கிறேன்

. இந்தியாவை அதன் அரசியல் சமூக இயக்கத்தை விமர்சனம் செய்வது இந்திய இறையாண்மைக்கு எதிரானதா? இல்லை இதழாளர்கள் எல்லோருமே தீவிரவாத அறைகூவல் விட்டுக்கொண்டேயிருக்கிறார்களா? காஷ்மீரப் பிரச்சனைஇன்றுஉலகளாவிவளர்ந்திருக்கும்தீவிரவாதப்போக்குகளுக்குமிகவும்முந்தையதில்லையா?இன்னும் ஆதாரங்களுடன் மேற்கோள்களுடன் கட்டுரையை தந்திருக்கலாம் எனத் தோன்றியது.ஜனநாயகம் நிதானமாக இருக்கவேண்டியதன் அவசியம் என்ன

 

? நாம் இந்தியா வெல்க என மந்திரம் சொல்லிக்கொண்டேயிருந்தால் அது வென்றும் வாழ்ந்தும் விடாதே. ஜனநாயகத்தை துரிதப்படுத்த சிந்தனையாளர்களின் சாடல்கள் தேவையே என நினைக்கிறேன். இந்த மக்களால் என்ன செய்துவிட இயலும் எனும் எண்ணம் கொண்ட ஜனநாயகம் சவாதிகாரத்தைவிட மோசமானது.மதத்தின் பேரிலும் மற்ற பிரிவினைகளினாலும் நாம் பெருமைப்பட்டுக்கொள்ளும் நம் முன்னோர்களின் தர்மங்கள் கூட கைவிட்ட பல சமூகங்கள் இந்த நாட்டில் தங்களின் இடங்களைத் தேடிக் கொண்டிருக்கின்றன

. அவர்களிடம் ஜெய் ஹிந்த் சொல்லச் சொல்வது நாகரீகமானதாகத் தெரியவில்லை. மதக் கும்பல்களின் தாக்குதலுக்குப் பயந்துகாட்டுக்குள் பதுங்கி வாழும் மக்களிடம் ஜெய்ஹிந்த் சொல்லச் சொல்வது சரியாகுமா? தன் நாட்டின் இராணுவமே தன் இளம் பெண்களின் கற்பை பறிக்கும்போது ஜெய்ஹிந்த் சொல்லிக் கொண்டிருக்க முடியுமா? பாதுகாப்பான உயரங்களில் வாழும் நம்மால் மட்டுமே அப்படிக் கூறிவிட முடியும் என்பதை உணர்ந்துகொண்டே சொல்கிறேன்

இந்தியா வாழ்க!’
‘இந்தியா வாழ்க!’


Regards,
Cyril Alex
http://www.cyrilalex.com

***

அன்புள்ள சிறில்

என் கட்டுரையின் இயல்¨ப்பபற்றி முதலில் தெளிவுபடுத்துகிறேன். அது ஆராய்ச்சிக்கட்டுரை அல்ல. இப்படி அரசியல் சார்ந்த விஷயத்தில் தகவல்களை தொகுத்து ஆராய்ந்து ஒரு ஆராய்ச்சிக்கட்டுரை எழுதுவதற்கு எனக்கு அவகாசமோ மனமோ இல்லை. நான் அத்தகைய கட்டுரைகளை நம்புவதும் இல்¨. நம் அச்சு ஊடகத்தில் அத்தகைய கட்டுரைகள்தான் நிரம்பிக் கிடக்கின்றன. நான் ஏராளமான மேற்கோள்களை காட்டி இக்கட்டுரையை ஒரு ஆய்வுக்கட்டுரையாக எழுதியிருந்தால்கூட அதற்கு  அதேயளவுக்கு விரிவான மறுப்புக் கட்டுரையை எழுத ஒரு அரசியல் எழுத்தாளரால் முடியும். மேற்கோள்களை அவர் வேறு வகையில் வாசிக்கலாம், திரிக்கலாம். எதுவுமே சாத்தியம். அத்தகைய விவாதம் என்பது ஒரு தர்க்கப்பயிற்சி விளையாட்டு மட்டுமே.

என்னுடைய கட்டுரை உணர்வு சார்ந்தது. நான் அடைந்த மன எழுச்சியை மட்டுமே அதில் சொல்ல முயன்றிருக்கிறேன். ஓர் எழுத்தாளனாக, ஓர் இந்தியக்குடிமகனாக. இத்தகைய கட்டுரைகளுக்கு அதை வாசிப்பவர் எழுதியவரின் உணர்ச்சிகளை அடையாளம் கண்டுகொண்டால் மட்டுமே மதிப்பு. இல்லையேல் எந்த மதிப்பும் இல்லை. என் உணர்ச்சிகள் உண்மையானவை, நேர்மையானவை என்று உங்களுக்குத் தோன்றவில்லை என்றால் அக்கட்டுரையை நிராகரித்துவிட்டு செல்லலாம். அது வாசகனிடம் எதையும் விவாதித்து, ஆதாரம் காட்டி நிறுவ முற்படவில்லை.

நான் என் கட்டுரையில் எழுதிய விஷயங்களுக்குத் தேவையான தகவல்களை அந்தக் கட்டுரையிலேயே அளித்திருக்கிறேன். தமிழ்ச் சிற்றிதழ்களில்வெளிவந்த கட்டுரைகள், இஸ்லாமிய இதழ்களின் தலையங்கங்கள் முதலியவை. இக்கட்டுரைகளை அவை பயன்படுத்திக்கொள்ளும் விதம்.  ஒருவர் அந்த கட்டுரைகளை வாசித்து நான் சொல்லும் உணர்ச்சியை புரிந்துகொள்ள முடியும் என்று எண்ணுகிறேன். இவை எவையும் ரகசியமான, சிக்கலான தகவல்கள் அல்ல. பொதுவாக வாசகர்கள் அனைவருமே வாசித்திருக்கக் கூடிய விஷயங்கள் மட்டுமே. பெரும்பாலான கட்டுரைகள் இணையத்திலேயே கிடைக்கின்றன.

உங்கள் கடிதத்தில் நான் என் கட்டுரையில் சொல்லியிருக்கும் விஷயங்கள் மிகவும் விலகிப்போய் புரிந்துகொள்ளப்பட்டிருப்பதைக் காண்கிறேன். என் தரப்பை மட்டும் மீண்டும் தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன்.

1. இந்தியாவின் அரசமைப்புக்கு எதிராக கருத்துச் சொல்வதை அல்லது போராடுவதை அல்லது இந்திய அமைப்பை ஒட்டுமொத்தமாக மாற்றுவது குறித்த கனவை நான் ஒருபோதும் நிராகரிப்பவனல்ல. அத்தகைய அனைத்துப் போராட்டங்களையும் நான் ஏற்கிறேன் என்றே என் கட்டுரையில் திட்டவட்டமாகச் சொல்கிறேன். சூழலியல் சார்ந்து அத்தகைய பல கட்டுரைகளை நானே எழுதியிருக்கிறேன். சமூக வளர்ச்சியின் முரணியக்கத்தில் ஒவ்வொரு கருத்தியல்தரப்புக்கும் அதற்கான பங்களிப்பு உண்டு. சமூகஅமைப்பு மீதான எதிர்ப்பும், அரசு எதிர்ப்பும் எந்த ஒரு ஆக்கபூர்வமான சமூகத்திலும் இன்றியமையாதனவே ஆகும். அறிவுஜீவிகளோ சிற்றிதழ்களோ அரசாங்கத்தை விமரிசிக்கக் கூடாது என்று நான் சொல்வதாக நீங்கள் புரிந்துகொண்டிருப்பது சற்றே சோர்வளிக்கிறது.

ஒரு நாடு அல்லது சமூகம் கட்டப்பட்டிருக்கும் அறவியல் சமூகவியல் அடிப்படைகளை அதைவிட மேலான அறவியல்,சமூகவியல் அடிப்படைகளை முன்வைத்து சிந்தனையாளர்கள் மாற்றியமைக்க முயல்வது இன்றியமையாதது. எந்த ஒரு மேலான இலக்கியப்படைப்பும் அதையே செய்கிறது. ஆனால் இங்கே நடப்பது அது அல்ல. அறிவுஜீவிகள் எனப்படுபவர்கள் எந்தவிதமான அற அடிப்படையும் இல்லாமல் அழிவை மட்டுமே முன்வைக்கிறார்கள். வெளிப்படையான அறமின்மையை நியாயப்படுத்துகிறார்கள். அறிவுஜீவிகள் என தேசிய ஊடகங்களில் குரல்கொடுப்பவர்கலில் பெரும்பாலானவர்கள் கருத்துக்களின் அடிப்படை நேர்மையோ வரலாற்று நோக்கோ இல்லாத பரபரப்பு இதழாளர்கள். அவர்கள் உருவாக்கும் ஆபத்தைப்பற்றி மட்டுமே என் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். இந்த அமைப்பை அழித்து அவர்கள் உருவாக்க எண்ணும் அமைப்பு எது என்ற கேள்வியே என் கட்டுரையில் உள்ளது.

இந்த அமைப்பு புனிதமானது முழுமையானது என்று நான் சொல்லமாட்டேன். ஆனால் இந்த அமைப்பு அளிக்கும் சாத்தியங்களை விட மேலான ஒன்றை இவர்களால் கற்பனை செய்ய முடியவில்லை என்றே சொல்கிறேன். இனவெறி, மதவெறி ·பாசிச அமைப்புகளைத்தான் மாற்றாக வைத்து இவர்கள் பேசுகிறார்கள் என்கிறேன். இவர்கள் சொல்லும் முற்போக்குவாதம் ஒவ்வொன்றும் இந்த தேசத்தை இருளுக்கு இட்டுச்செல்லும் மதவெறிக்கு நேரடியாகவே ஆயுதமாகிறது என்பதை என் கட்டுரையில் குறிப்பிடுகிறேன். மீண்டும் மீண்டும் அதை சிற்றிதழ்களில் நான் கண்டுகொண்டிருக்கிறேன்.

2. இந்தியாவின் இறையாண்மை சர்வ வல்லமை மிக்கதல்ல. இந்தியா போன்று பலநூறு சக்திகளால் ஊடுருவப்பட்டு பல்வேறு பண்பாட்டு , வரலாற்று காலகட்டங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு தேசத்தில் சட்டத்தின் ஆட்சி என்பது சாதாரண விஷயமும் அல்ல. ஆனால் மிக நிதானமாக மிகச்சிக்கலான ஒரு விதத்தில் அது இந்தியாவில் வலுப்பெற்று வருகிறதென்றே நான் எண்ணுகிறேன். உதாரணம் நான் இருபது வருடம் முன்பு கண்ட ஆந்திராவுக்கும் இன்றைய ஆந்திராவுக்கும் உள்ள வேறுபாடு.

எந்த ஒரு அரசாங்கத்திற்கும் அடக்குமுறைக் குணம் என்ற ஒன்று உள்ளுறைந்து இருக்கும். முற்றிலும் அடக்குமுறை தன்மை இல்லாத அரசே இருக்கமுடியாது. அரசு என்பது அடக்குமுறையையும் சமரசத்தையும் மாறி மாறிச் செய்து கொண்டிருக்கும். அச்சமூகத்தில் இருக்கும் பல்வேறு அதிகார சக்திகள் நடுவே ஒரு நடுநிலைப்புள்ளியாக அரசு செயல்பட்டவாறிருக்கும். அரசு என்பதே அதுதான். ஆகவே ஒரு சமூகத்தில் அரசின் அடக்குமுறைக்கு எதிரான போராட்டம் நடப்பதும் இயல்பானதே. அதுவும் அச்சமூகத்தின் இயங்கியலின் ஒரு பகுதிதான். எந்த அரசுக்கும் இது பொருந்தும். இங்கே மீண்டும் மீண்டும் அத்தகைய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மீண்டும் மீண்டும் நீதிக்கான சீற்றக்குரல்கள் எழவும்செய்கின்றன. 

இந்தியா போன்ற முரண்பாடுகள் மிக்க ஒருநாட்டில் மக்களுக்குள் கலவரங்களும் பூசல்களும் நடப்பதையும் வரலாற்று ரீதியாகவே புரிந்துகொள்ள வேண்டும். பதினேழாம் நூற்றாண்டு ஐரோப்பாவின் அல்லது அமெரிக்காவின் சூழல் இங்கே இன்று உள்ளது. [ஐரோப்பா பிற நாடுகளை காலனியாதிக்கம் மூலம் சுரண்டி தன் முரண்பாடுகளை அதில் மூழ்கடித்தது] இங்கே நம் நாட்டில் நூற்றாண்டுக்கால தூக்கத்தில் இருந்து விழித்தெழும் பலநூறு சமூகங்கள் அதிகாரத்திலும் வளங்களிலும் தங்களுக்கான பங்கை கோருகின்றன. ஆகவே முரண்பாடுகளும் மனக்கசப்புகளும் எப்போதும் வெடிக்கக் காத்திருக்கின்றன. அவநம்பிக்கைகள் மிக எளிதில் உருவாகின்றன.

அத்தகைய ஒரு மோதல் உருவாகும்போது எல்லாச் சந்தர்ப்பத்திலும் இந்திய அரசு திகைத்துச் செயலற்று நிற்பதையே நாம் காண்கிறோம். அதிநவீன ஐரோப்பிய அரசுகளில்கூட மக்கள் கலவரங்களில் இறங்குகையில் அரசு எளிதில் அதைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. இன்னும் நவீனமயமாதல் நிகழாத நிர்வாக அமைப்பு கொண்ட இந்தியாவில் அது மேலும் சிரமமாக ஆகிறது. இங்குள்ள மாபெரும் மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது இங்குள்ள காவல் அமைப்பு கேலிக்கூத்து என்று சொல்லுமளவுக்குச் சிறியது. இங்கு இன்னமும் மக்கள் பல்லாயிரமாண்டுக்காமாக கடைப்பிடித்துவரும் சுய நிர்வாக அமைப்புகளால்தான் ஒழுங்கு பேணப்படுகிறது. ஆனால் அத்தனை சிக்கல்களையும் மீறி, பிந்தியானாலும் இங்கே சட்டம் அதன் பிடியை விட்டுவிடுவதில்லை என்றே நான் எண்ணுகிறேன்.

இப்படி பாதிக்கப்பட்டும் மக்கள் எல்லாம் இங்கே இந்திய அரசுக்கும் அமைப்புக்கும் எதிராக திரும்பிவிடுவதில்லை. அவர்கள் நீதி கேட்கிறார்கள் . போராடுகிறார்கள். அமைப்புகளை தங்களருகே கொண்டு வருகிறார்கள். அதற்கான பலநூறு வழிகளை இந்த அரசியல் அமைப்பும் சமூக அமைப்பும் முன்வைக்கத்தான் செய்கின்றன.

நான் கேட்பது எளிய வினா. இங்குள்ள அறிவுஜீவிகளில் பெரும்பான்மையினர் இத்தகைய ஒரு சூழலில் நீதிக்காகவும் புரிதலுக்காகவும் அமைதிக்காவும்தான் முயல்கிறார்களா? அவநம்பிக்கைகளை களைய முயல்கிறார்களா? குறைந்த பட்சம் தமிழ் சிற்றிடஹ்ழ்கள் இஸ்லாமியர்களின் அவநம்பிக்கையை வன்மத்தைக் களைய முயல்கின்றனவா?  இல்லை என்பதையே நான் ஒவ்வொரு நாளும் கண்டுகொண்டிருக்கிறேன். முரண்பாடுகளை ஊதிவிடுகிறார்கள், ஐயங்களை பெருக்குகிறார்கள், கசப்¨ப்பம் கோபத்தையும் விரிவாக்குகிறார்கள். அனைத்துக்கும் காரணம் இந்த அமைப்பே என்று சுட்டிகாட்டுகிறார்கள். நதிநீர் தாவா, மத மோதல், போலீஸ் அத்துமீறல் அனைத்துக்கும் காரணம் இந்த அமைப்பு. இதற்கு எதிராக கிளர்ந்தெழவேண்டும் என்கிறார்கள்.

உதாரணம் சொல்கிறேன், பல்லாயிரம் பேருக்குச் சோறுபோடுவது நாமக்கல் கோழிபப்ண்னை உலகம். கடந்த ஐம்பதாண்டுக்காலத்தில் படிபப்டியாக ஊறி உருவான ஒன்று அது. ஓர் மத, இன, மொழி அதிருப்தியை தூண்டிவிட்டு நாமக்கல்லில் ஒரு பத்து வெடிகுண்டை வெடிக்கச்செய்ய நம் அறிவாளிகள் சிலரால் முடியும். அதன்பின் நாமக்கல் மீளவேண்டுமானால் பல ஆண்டுகள் பிடிக்கும். பல்லாயிரம் வயிறுகள் காயும். நம் அறிவுஜீவிகள், இதழ்கள் செய்துகொண்டிருப்பது இந்த வெறிகிளப்பும் வேலையை மட்டும்தானே? இதைத்தான் நான் கேட்கிறேன் . இந்த அமைப்பு அளிக்கும் அனைத்துச் சுதந்திரங்க¨ள்யும் பயன்படுத்தியே இதைச் செய்கிறார்கள். இது பொறுப்பின்மை மட்டுமல்ல இதைச்செய்பவர்கள் இதன்மூலம் பெரும் பொருளியல் லாபமும் பெறுகிறார்கள். இதன்மூலம் உருவாகும் அழிவுக்கு அவர்களே பொறுப்பு என்கிறேன்

அதைவிட, இந்த அமைப்பு அளிக்கும் வாய்ப்புகளில் நம்பிக்கை உண்டு என்று சொல்பவன் , இந்த மரபில் நம்பிக்கை கொண்டவன், இந்த நாடு சமரசமாக வாழமுடியும் முன்னேர முடியும் என்பவன் எப்படி இவர்களால் பிற்போக்குவாதி என்றும் மதவாதி என்றும் முத்திரையிடப்பட்டு பழிக்கப்பட்டவனாக, குரலற்றவனாக ஆனான் என்று நான் கேட்கிறேன். அந்த அரசியல் கெடுபிடி எந்த சக்தியால் உருவாக்கப்பட்டது என்று கேட்கிறேன். அந்த குரலுக்கே ஊடகங்களில் இடமில்லை என்று எப்படி ஆயிற்று? ஒரு சூழலின் அறிவுலகம் ஒட்டுமொத்தமாகவே எப்படி அவநம்பிக்கையின் நச்சாக ஆயிற்று?

3. காஷ்மீரப் பிரச்சினையின் வேர் நான் சொல்லிய இஸ்லாமிய உலக தேசியக் கனவுதான். இஸ்லாமை ஒரு மதமாக உருவகிக்காமல் அதை ஒரு தேசியக் கருத்தியலாக முன்வைக்கும் இஸ்லாமிய முல்லாக்களும் அரசியலாளர்களும்தான். அவர்கள்தான் தேசப்பிரிவினைக்குக் காரணம். அவர்களே காஷ்மீரிலும் ஆப்ரிக்கநாடுகளிலும் ருஷ்யாவிலும் எல்லாம் நிகழும் ஏராளமான ரத்தப் போராட்டங்களுக்குக் காரணம். இன்றைய தீவிரவாதப்பிரச்சினை எதுவும் இப்போது தோன்றியதல்ல, அனைத்துக்குமே நூறாண்டுகால வரலாறு உண்டு.

4. இந்த நாட்டின் ‘கைவிடப்பட்ட’ குடிமக்கள் இந்த நாட்டுக்கு எதிராக கிளர்ந்திருக்கிறார்கள என்ன? எந்த இடத்தில் நிகழ்ந்திருக்கிறது அது? அவர்கள் தங்கள் உரிமைக்காக போராடுகிறார்கள். அதுவே இயல்பானது.  ஆனால் உங்களையும் என்னையும் விடவும் மிகமிக பாதுகாப்பான தந்த கோபுரத்தில் இருந்துகொண்டு நம் அறிவு ஜீவிகள் அவர்களுக்கு வெறியேற்றுகிறார்கள். அழிவை உருவாக்கும்படி ஆணையிடுகிறார்கள். அந்த அழிவு உருவான பின் இந்த அறிவுஜீவிகள் அந்த அழிவுக்கு அம்மக்களையே பொறுப்பும் ஆக்குவார்கள். அதுவல்லவா நடக்கிறது?

5. ஜனநாயகம் ஏன் மெல்ல நடக்க வேண்டும்? அது ஓடினால் நல்லதுதான். ஆனால் அது மெல்லத்தான் நடக்கிறது. வேறு வழி இல்லை. ஒற்றையின ஒற்றை மொழி ஒற்றை பண்பாடுகொண்ட சிறு சமூகங்களில் ஜனநாயகம் சற்றே வேகம் பிடிக்கக் கூடும். இந்தியா போல மிகமிகச் சிக்கலான முரண்பாடுகள் மிக்க சமூகத்தில் அது மிக மெல்லத்தான் செயல்பட முடியும். காரணம் ஒவ்வொருவருக்கும் இங்கே அவர்களுக்கான தேவை இருக்கிறது. எவரையுமே உதாசீனப்படுத்தமுடியாது என்பதே நடைமுறை. இந்தியா போன்ற ஒரு நாட்டுக்கு ஜனநாயகம் மட்டுமே மீட்பாகும். மிகப் பொறுமையாக, மீண்டும் மீண்டும் உரையாடலில் ஈடுபட்டு, மீண்டும் மீண்டும் சமரசம் செய்துகொண்டு, மெல்லமெல்லத்தான் இந்த நாடு முன்னகர முடியும். அந்த இணக்கம் எப்போது சற்று பிழைக்கிறதோ அப்போதெல்லாம் அழிவுதான் உருவாகும். நமக்கு குரூரமான முன் அனுபவங்கள் உள்ளன

*

இந்த இந்தியப்பயணத்தில் நான் இந்தியா எங்கும் உருவாகி வரும் திடமான சீரான வளர்ச்சிப்போக்கைக் கண்டேன். குறிப்பாக தென்மாநிலங்கள் மிகவேகமான வளர்ச்சிப்போக்கில் இருக்கின்றன. கிராமங்கள் விழித்தெழுந்திருக்கின்றன. வறுமையின் சாயல் மறைந்திருக்கின்றது. காரணம் தென்மாநிலங்கள் தங்கள் சமூக முரண்பாடுகளை பெருமளவில் தீர்த்துக் கொண்டிருப்பதுதான் என்று தோன்றியது

அதற்கு மறுபக்கமாக ஒரு அச்சமும் மனதிலெழுந்தது. இந்த வளர்ச்சியை அன்னிய சக்திகள் கண்டிபாக விரும்பாது. அவை இதற்குள் விஷம் செலுத்தவே முயலும். இந்தியா மட்டுமே இன்று உள்நாட்டுக்கலகங்கள் கட்டுமீறாத நிலையில் வளர்ச்சி நோக்கிச் செல்லும் ஒரே ஆசிய நாடு. ஆகவேதான் மீண்டும் மீண்டும் பெங்களூர் குறிவைக்கப்படுகிறது. அத்தகைய ஒரு செயல்பாட்டுக்கு கருத்தியல் முட்டுக்கொடுக்க அவர்கள் அறிவுலகக் கூலிப்படைகளையும் நாடுவார்கள். அது நம்மிடையே மிக மலிவு.

மேலும் இந்த வளர்ச்சி அனைத்துச் சமூகப்பிரிவுகளையும் பேராசை கொள்ளச் செய்கிறதென்றும் தோன்றியது. தென்மாநிலங்களில் சிறிய நகரங்களில்கூட கட்டுமானப்பணிகள் உச்சவேகத்தில் நிகழ்வதைக் கண்டால் நிலமும் வளங்களும் கடுமையாக மோதலுக்குப்பின்னரே பகிரப்படும் என்று தோன்றியது. எல்லா நகரங்களிலும் தெரிந்த பஜ்ரங் தள்ளின் ஆவேசம் என்னை மிகவும் அச்சுறுத்தியது. இந்த நகர்ப்புற லும்பன் அமைப்பு இப்போது சிறுநகர்களிலும் ஊடுருவி இருக்கிறது. வருகாலத்தில் இந்தியாவின் நகர்ப்புற கலகங்களில் இது பெரும்பங்கு வகிக்கும்

‘அடுத்த 25 வருடங்களில் இந்தியா ஒரு பொருளியல் வல்லமை ஆக மாறும் அல்லது உள்நாட்டுக்கலவரத்தால் அழியும்’ என்று சொல்லிக் கொண்டேன். வீடுதிரும்பி வந்து கிடந்த நாற்பதுக்கும் மேற்பட்ட இதழ்களை வாசித்தபோது இரண்டாவது எண்ணமே வலுப்பட்டது. ஒரு உள்நாட்டுக்கலவரத்தை தூண்ட என்னென்ன செய்யமுடியுமோ அதையெல்லாம் செய்ய அறிவுஜீவிகள் முயல்வதையே நான் கண்டேன். எந்தவித பொறுப்பும் இல்லாத வெறியேற்றும் கருத்துக்கள். சமநிலையற்ற தர்க்கங்கள்

மதவெறியால் இந்த நாடு பெரும் ரத்தத்தைக் காணக்கூடுமென்ற அச்சம் என்னை வாட்டுகிறது. இந்துத்துவ அமைப்புகளைப்போலவே அதைத் தூண்டி விடும் அழிவுச் சக்திகளாகத்தான் நான அருந்ததி ராய் போன்றவர்களையும் காண்கிறேன் .என் கட்டுரை அந்த உணர்ச்சியின் வெளிப்பாடே

இத்தகைய ஒரு கட்டுரைக்குபின் அதை திரித்து ஒடித்து வளைத்து விளக்கி முத்திரையடித்து மீண்டும் மீண்டும் எழுதப்படும். அந்த இயந்திரம் வேலையை இதற்குள் ஆரம்பித்திருக்கும். என் பதில் மௌனம் மட்டுமே

மிக அபாயகரமான ஒரு விளிம்பில் நிற்கிறது தேசம். சமரசம், மீண்டும் மீண்டும் சமரசம், பொறுமை, நம்பிக்கை, உரையாடல் மூலமே இந்த காலகட்டத்தை நாம் தாண்டிச்செல்ல முடியும். அவ்வாறே ஆகுக.
ஜெயமோகன்

முந்தைய கட்டுரைதமிழிலக்கியம் ஒருவிவாதம்
அடுத்த கட்டுரைஇந்தியா:கடிதங்கள்