கேள்வி பதில் – 19

இசை, சூழல், சந்தர்ப்பம் கலந்து உருவாகும் திரைப்பாடல்களும் நல்ல கவிதைகள்தானே?

— பாஸ்டன் பாலாஜி.

இலக்கியத்தை அதன் அடிப்படை இயல்பு சார்ந்து வகைப்படுத்திக் கொள்வது அனுபவங்களைத் தெளிவாக உள்வாங்க உதவும். இலக்கியத்தின் அடிப்படைக் குணங்கள் மூன்று.

அ] வாழ்க்கையையும் மனதையும் ஆழ்ந்தறிய முயலல்.

ஆ] மொழியில் வாழ்க்கையைச் சித்தரிப்பதை அறிதல்முறையாகக் கையாளுதல்

இ] அச்சித்தரிப்பை ஆழ்மனம் தன்னிச்சையாக வெளிப்படும்விதமாக அமைத்துக் கொள்ளல்.

இலக்கியம் ஒரு கனவு. கனவு அதைக் காண்பவனை மீறியது, அவனுக்கே அவனைக் காட்டுவது, கற்பிப்பது. ஒரு மனிதனின் கனவு படிமங்களாக நிகழ்வது. ஆகவே அதன் குறியீட்டுக் கட்டுமானம் அந்தரங்கமானது. இலக்கியக்கனவு மொழி என்ற பொதுவான குறியீட்டுக் கட்டமைப்பில் நிகழ்வது. ஆகவே பகிரப்படக் கூடியது. இலக்கியம் ஒரு பண்பாட்டின் கனவு.

இவ்வடிப்படையில் நாம் இலக்கியத்தை வகுத்துக் கொள்ளலாம். இலக்கியம் இச்செயல்பாடுமூலம் பலவகையான உத்திகளை, அழகுகளை உருவாக்கிக் கொள்கிறது. அவற்றை மொழியானது தன் பல்வேறு தளங்களுக்கு எடுத்தாண்டு பயன்படுத்திக் கொள்கிறது. இவ்வாறு பயன்படுத்தப்படும் தளங்கள் இலக்கியங்களல்ல. அவற்றை எடுத்தாள்கை இலக்கியம் [Applied literature] என்று சொல்லலாம். இசைப்பாடல்கள், திரைப்பாடல்கள், கோஷங்கள், விளம்பர வாசகங்கள், சட்டம், தத்துவம் போன்ற தளங்களில் உருவாக்கப்படும் மொழிநுட்பங்கள் ஆகியவை இப்படிப்பட்டவை. சார்த்ர், ஃப்ராய்ட் ஆகியோரின் கட்டுரைகள் கவிதைக்குள் சென்றுச் சென்று மீள்பவை. மொழியாட்சியை [Rhetoric] முக்கியமான அறிவுச்செயல்பாடாகக் கருதும் அரிஸ்டாடில், கவிதையிலிருந்து அதைப் பிரித்து விடுகிறார். அதைக் கலை என அவர் எண்ணவில்லை. ஏனெனில் மேடைப்பேச்சின் உரையாட்சி, இலக்கியத்தை எடுத்தாள்வதேயாகும், இலக்கியமல்ல.

எடுத்தாள்கை இலக்கியத்துக்கு, இலக்கியம் முக்கிய நோக்கம் அல்ல. விளம்பரத்துக்கு அல்லது சட்ட விளக்கத்துக்கு ‘மொழியை உள்ளுணர்வின் கருவியாகக் கொண்டு வாழ்க்கையைச் சித்தரித்து அறிதல்’ என்ற இலக்கிய நோக்கம் இல்லை. விளம்பரத்தின் நோக்கம் ஆட்களைக் கவர்வதும் நினைவில் நிற்பதுமே. சட்டத்தின் நோக்கம் விதிகளை மறுவிளக்க வாய்ப்பின்றிக் கறாராக வரையறை செய்வதே. அதற்கு இலக்கியத்தின் கருவிகளையும் சாத்தியக்கூறுகளையும் அது பயன்படுத்திக் கொள்கிறது.

இசைப்பாடலுக்கு முதல் நோக்கம் இசையின் உணர்வுத்தளத்துக்கு சொல்வடிவம் அளிப்பதே. இசையை மொழியுடன் இணைப்பதற்காகவே அது இலக்கிய உத்திகளையும் அழகுகளையும் பயன்படுத்திக் கொள்கிறது. இலக்கியத்துக்கு இன்றியமையாததாக உள்ள உள்ளுணர்வின் சுயமான தேடல் அதில் சாத்தியமேயில்லை.

இசை, உணர்வுகளை உச்சப்படுத்தும் தன்மை கொண்டது. அதற்கு தனியான குறியீட்டு அமைப்பு உள்ளது. அதன்படி அது ஒற்றைப்படையான தீவிரத்தை வெளிப்படுத்துகிறது. இலக்கியம் உண்மையை நோக்கிச் செல்லும்தோறும் அதில் உட்சிக்கலும் சமநிலையும் ஏற்படுகிறது. அது இசையின் இயல்புக்கு மாறான ஒன்று. இந்த நெகிழ்வு அல்லது உச்சத்தன்மை இலக்கியத்தில் ‘பாவியல்பு’ [Lyricism] எனப்படுகிறது. அது இலக்கியத்தின் பற்பல வழிகளில் ஓன்று மட்டுமே. கவிதை மேலும் சிக்கலும் கனமும் கொண்டதாக இருக்கும்.

இந்திய மரபின் மாபெரும் பாடலாசிரியர்களான ஜெயதேவர், சைதன்ய மகாபிரபு, புரந்தர தாசர், தியாகராஜர் ஆகியோரின் பாடல்களைப் பாடல்வரிகளாகப் படித்தால் அவை சாதாரணமாக இருப்பதைக் காணலாம். உருகவைக்கும் ‘நன்னுபாலிம்ப’ கீர்த்தனை சர்வ சாதாரணமான வரிகளால் ஆனது. நல்ல பாடல் ஆனால் மோசமான இசை என்று ஏதாவது நம் நினைவில் உள்ளதா? பாடலில் உள்ள மொழி இசையின் ஊர்தி மட்டுமே. அது கவிதைமரபிலிருந்து திரட்டப்பட்ட வரிகளாலானது. திரட்டுவது என்றால் நேரடியாக அல்ல, நுட்பமாக, பலவகையான மாற்றங்களுடன்.

திரைப்பாடல் இன்னும் ஒரு எல்லையைக் கொண்டுள்ளது. அது திரைக்கதையின் ஒரு பகுதி. அக்குரல் கவிஞன் குரல்கூட அல்ல, கதாபாத்திரத்தின் குரல். ஆகவே அதில் இலக்கியத்துக்குரிய கட்டற்ற தேடலின் கணம் நிகழ்வதேயில்லை. ஆகவே முற்றிலும் புதுமையான ஒரு மொழிநிகழ்வும் உருவாவது இல்லை. கவிதையின் நுண்ணிய தளங்களை அறிந்த வாசகனுக்கு அவை கவிதையின் நிறைவை அளிப்பது இல்லை. வேறு ஒரு கோணத்தில் அவை கவிதையின் சில கூறுகளை இசைமீது ஏற்றி கோடிக்கணக்கான மக்களுக்குக் கொண்டுசேர்க்கின்றன. இசைப்பாடலின் அனுபவம் இசையே. வரிகள் இசையில் நனைந்தவரிகள். கவிதையின் ஒளியாலல்ல, இசையின் ஒளியால் சுடர்பவை. ‘முத்துக்களோ கண்கள்’, ‘நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்’ எனக்கு மிகப்பிடித்த பாடல்கள். எத்தனை சர்வசாதாரணமான வரி என்ற வியப்பும் ஊடாக எழும்.

இலக்கியத்தின் துளிகளை சிலசமயம் ஒளிரும் துளிகளைப் பாடல்களில், செய்திக் கட்டுரைகளில், விளம்பர வாசகங்களில், கூட்டங்களின் கோஷங்களில் கேட்க நேரிடலாம். அவை இலக்கியத்தின் மறுவடிவங்கள் மட்டுமே. இலக்கியம் அல்ல.

உப்பில் ஊறினாலும் ஊறுகாய் உப்பாகுமா?

முந்தைய கட்டுரைகேள்வி பதில் – 18
அடுத்த கட்டுரைகேள்வி பதில் – 20