தேவியர் உடல்கள்

அன்புள்ள ஜே எம்

சாக்த பௌத்த மந்திரம் குறித்த விளக்கத்துக்கு நன்றி.
“இரவு”  மூச்சு முட்டுகிறது. 
மேலும் ஒரு சந்தேகம்.  நம் பெண் தெய்வங்கள் அமர்ந்து  இருக்கும் முறை பற்றிய கேள்வி.  சிறு வயதில் விளையாடும போது  சில வகையாக நான் உட்கார்ந்தால் ஏச்சு விழும். ஆனால் நம் பெண் தெய்வங்கள் அந்த வகையில் அமர்ந்து பல சிற்ப்பங்கள் படங்கள்.  அந்த அமர்ந்த தத்துவம் தாத்பர்யம் என்ன?  விளக்க முடியுமா?  அவசரம் இல்லை.  மெதுவாக பதில் சொல்லலாம்.
அன்புடன் சிவா

siva sakthivel

 

அன்புள்ள சிவா,

இந்து மதங்கள் சைவம் ,வைணவம், சாக்தம், கௌமாரம், காணபத்தியம், சௌரம் என ஆறு. அதில் மூன்றாவது பெருமதம் சாக்தம்.ஆதன் முதல் பெருந்தெய்வம் சக்தி.

இந்துமதங்கள் ஆறும் ஒன்றுடன் ஒன்று கலந்தன. சைவமும் வைணவமும் மட்டுமே இன்று தனியடையாளத்துடன் நீடிக்கின்றன. சாக்தம் கேரளம், வங்கம் , ஒரிசா போன்ற சில பகுதிகளை தவிர பிற ஊர்களில் சைவத்துடன் கலந்துவிட்டது.

நம்முடைய தேவியர் அமர்ந்திருக்கும் விதம் என்பது பெரும்பாலும் சாக்தத்தில் இருந்து உருவானது. சாக்தம் அதை பௌத்த தேவி வழிபாடுகளில் இருந்து எடுத்திருக்கலாம். சமண யட்சி வழிபாட்டில் இருந்தும் சிற்பக்கூறுகள் வந்திருக்கலாம். சமணமும் பௌத்தமும் அந்த தேவியரை அதற்கு முந்தைய பழங்குடி வழிபாடுகளில் இருந்து பெற்றுக்கொண்டிருக்கலாம்.

வைதிக மதத்திலேயே இயற்கையை தேவியராக வழிபடும் மரபு இருந்திருக்கிறது. அது மிக மிகத் தொன்மையான ஒரு வழிபாட்டு முறை. உலகமெங்கும் பெண் தெய்வ வழிபாட்டு முறை உண்டு. ஒருவேளை வழிபாடுகளிலேயே அதுதான் தொன்மையானதாக இருக்கலாம்.

ஒவ்வொரு மதமும் தன்னுடைய தத்துவ நோக்கில் ஏற்கனவே இருந்து தன்னிடம் வந்து சேர்ந்த பெண் தெய்வ உருவகங்களையும் வடிவங்களையும் செம்மை செய்து எடுத்துக்கொண்டது என்று கொள்வதே சரியானது. நாம் இன்று காணும் பெண் தெய்வங்கள் இவ்வாறு காலத்தில் பரிணாமம் கொண்டு வந்தவை.

பொதுவாகவே நம்முடைய சிற்பவடிவங்கள் பழங்குடி வழிபாட்டு மரபில் இருந்து சிற்பிகளால் உருவாக்கி எடுக்கப்பட்டவையாக இருக்கும். பத்மநாபபுரம் அரண்மனை அருங்காட்சியகத்தில் ஒரே சாஸ்தா தெய்வத்தின் பழங்குடி வடிவமும்  செவ்வியல் வடிவமும் காணக் கிடைக்கிறது

சிற்பங்கள் ‘மேம்படுத்தப்பட்டதில்’ தாந்த்ரீக வழிபாட்டுமுறைகளுக்கு பெரும் பங்குண்டு. தாந்த்ரீகம் என்பது தத்துவத்தை குறியீடாக ஆக்கி, அக்குறியீட்டை தியானிப்பதன் மூலம் அந்த தத்துவத்தை ஆழ்மனதுக்கு கொண்டுசெல்வதற்கான பயிற்சியே ஆகும்.

தாந்த்ரீக வழிபாட்டுமுறைகள் பெரும்பாலும் சாக்த மரபை சேர்ந்தவை. சில சைவ மரபைச் சேர்ந்தவை. மிக மிகச்சிலவே வைணவம் சார்ந்தவை. பௌத்தத்திலும் தாந்த்ரீக மரபு ஒன்று உண்டு. அதற்கு வஜ்ராயன பௌத்தம் என்று பெயர். நம்மு¨டைய சிற்பிகள் பெரும்பாலும் தாந்த்ரீகர்கள்.  

 

ஆகவே நம்முடைய எல்லா சிலைகளும் குறியீட்டு வடிவங்களே. அவற்றின் மூல வடிவம் பழங்குடிகள் வழிபட்ட சிலைகளாக இருக்கும். தாந்த்ரீகம் அவற்றை குறியீடுகளாக ஆக்கியிருக்கும்.  .

ஆகவே, பக்தியை அடிப்படையாகக் கொண்ட ஆலயவழிபாட்டிலும்கூட சிலைகள் எல்லாமே தாந்த்ரீக அடிப்படை கொண்டவையாக இருக்கும். ‘உணர்த்தப்படும் அர்த்தம்’ இல்லாத சிலையே கோயில்களில் இருப்பதில்லை.

சாக்தம் பெருமதமாக ஆனபோது அதில் பக்தி அம்சம் மேலோங்கியது. சிலைகளின் குறியீட்டு அர்த்தம் விவாதிக்கப்படுவது இல்லாமலாகியது. ஆனால் தாந்ரீக முறையின்படி நாம் ஒரு குறியீட்டை ‘அறிய’ வேண்டியதில்லை. அதை நாம் சும்மா பார்க்கும்போதே அது உணர்த்துவதை நம் ஆழ்மனம் உள்வாங்கிக்கொண்டுதான் இருக்கிறது!

சாக்தம் சைவத்தில் கலந்த போது அதில் இருந்த தாந்த்ரீக அம்சம் முற்றிலும் இல்லாமல் ஆகியது. தாந்த்ரீக பூஜைகள் கூட இன்று தமிழ்நாட்டில் பெரும்பாலும் இல்லை. ராஜராஜ சோழன் காலத்திலேயே அவையெல்லாம் ஆகம வழிபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன.

ஆனாலும் மரபு மாறுவதில்லை என்பதனால் சிலைகள் அப்படியே நீடிக்கின்றன. பல சிலைகளின் முத்திரைகள் மாறின. பல சிலைகள் உடைகள் அணிபவையாக ஆயின. ஆனாலும் சிலைகளின் அடிப்படையான பல விஷயங்கள் நீடிக்கின்றன.

சாக்த மதம் இந்திய பண்பாட்டில் பழங்குடிகளிடம் உருவானது. தொன்மையான தாய்தெய்வ வழிபாடு, கன்னி வழிபாடு இரண்டும் மெல்லமெல்ல திரண்டு சாக்தம் ஆகியது. இன்றும் அதன் உச்சம் உயர்தத்துவத்தில் நிலைகொள்கையில் கீழ்த்தளம் முழுக்க முழுக்க பழங்குடி வழிபாட்டில்  வேரூன்றியிருக்கிறது.

சாக்தம் பிரபஞ்ச சக்தியை பெண்ணாக உருவகிப்பது. பிறப்பித்தல் முலையூட்டல் என்ற இரு செயல்களை பெண்ணிடம் அது பார்க்கிறது. பிரபஞ்ச சக்தி ஆற்றும் இரு அடிப்படைப் பணிகளுக்கான குறியீடுகள் அவை. ஆகவே பிரபஞ்சத்தின் ஆற்றலை ஒரு பெண்வடிவில் அது உருவகம்செய்துகொண்டது. அதுவே சக்தி [ ஆற்றல்] எனும் தெய்வம்.

முழுக்க முழுக்க தத்துவார்த்தமான கருத்துருவம் இது. எந்த தோத்திரப்பாடலைப் பார்த்தாலும் சக்தி அறிதலுக்கு அப்பாற்பட்ட அலகிலாத ஆற்றலாக மட்டுமே கூறப்பட்டிருப்பதைக் காணலாம். அத்தகைய எல்லையற்ற ஆற்றல் எங்கும் வெளிப்படுவதாகையால் எல்லா வெளிப்பாடும் அதுவே என்ற முறையில் எல்லாமே அன்னையாக வழிபடப்படுகின்றன.

அவ்வகையில் ஆறுகள், மரங்கள், புற்றுகள், பாம்பு, மழை, அம்மை முதலிய நோய்கள் என அறிவை பிரமிக்கச்செய்யும் எல்லாமே அந்த சக்தியின் தோற்றமாக வழிபடப்படுகின்றன. இந்தக் கருத்தின் அடிப்படையில் மக்கள் வழிபட்டு வந்த எல்லா கன்னித்தெய்வங்களும் எல்லா தாய்த்தெய்வங்களும் சக்தியின் உருவமாக வழிபடப்பட்டன. இதுவே சுருக்கமாகச் சொன்னால் சாக்தம்.

சாக்தத்தில் உள்ள சிலைகளில்தான் இன்றைய தேவிச்சிலைகளின் மூலங்கள் உள்ளன. சாக்தம் பிரபஞ்ச சக்தியின் அலகிலாத பிறப்பிக்கும் ஆற்றலை பெண்ணுருவமாக ஆக்கி தியானித்தது.  ஆகவே பெண்ணின் பிறப்புறுப்பு என்பது படைப்பாற்றலின் குறியீடாக, ஆற்றல் மையமாக கருதப்பட்டது.

சாக்த மதத்தில் யோனி என்பது மிக விரிவான பொருள் உள்ள ஒரு சொல். அதை தத்துவ நோக்கில் பல வகையில் வளர்த்தெடுத்திருக்கிறார்கள். உதாரணமாக என்னுடைய படைப்புமனத்தின் மையத்தை நான் யோனி என்று சொல்ல முடியும். 

யோனி மையம் தெளிவாக தெரியும்படி  தேவியரின் சிலைகள் அமைக்கப்பட்டன. சிலையமைப்பில் சில கணித விதிகள் உள்ளன என்பார்கள். யோனியில் இருந்து சிலையின் விளிம்புகளுக்குள்ள தூரங்களுக்கு பல கணக்குகள் உள்ளன. இந்தக்கணக்குகள் பொதுவாக நமக்கு புரிவதில்லை.

இந்தச் சிலைகள் இன்று நம்முடைய ஒழுக்க உணர்வை சீண்டுவதற்குக் காரணம் இவற்றின் தத்துவப்பின்னணி நமக்கு தெரியாததே. நாம் இவற்றை நிர்வாண உருவங்கள் அல்லது விசித்திரமான கோணங்கள் கொண்ட உருவங்கள் என்று மட்டுமே பார்க்கிறோம். ஆடையணிந்த சிலைகளைப் பொறுத்தவரை நாம் இச்சிலைகளின் கோணங்களுக்கு மானசீகமாகப் பழகி அவற்றை வேறு வகையில் பார்க்காமலாகிவிட்டிருக்கிறோம்

ஆனால் ஒரு பெண் அப்படி உண்மையிலேயே அமரும்போது நம் ஒழுக்க உணர்வு அதிர்ச்சி அடைகிறது. பரதநாட்டியத்தில் கூட தேவியர் அமர்ந்திருக்கும் கோணங்களில் தாந்த்ரீகம் உருவாக்கிய முறை வருவதே இல்லை.

இன்றைய நம் ஒழுக்க உணர்வு சமணம் முதல் விக்டோரிய ஒழுக்கவியல் வரை பலவற்றின் கலவையாக உருவாகி வந்த ஒன்று. அதை இறுதியானதாக எண்ண வேண்டியதில்லை. இந்திய வாழ்க்கைமுறையையும் மரபையும் அளக்க அதை திட்டவட்டமான அளவுகோலாக பயன்படுத்துவதும் பிழை

எப்படியென்றால் எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் கிராமத்தில் ஒரு பாட்டி ஜாக்கெட் போடாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்ததைப் பற்றி மிக வன்மையான சொற்களுடன் எனக்கு எழுதியிருந்தார். நான் அவரை எண்ணி வருத்தம்தான் அடைந்தேன்.

மேலும், ஒழுக்க நெறிகள் என்பவை லௌகீக வாழ்க்கை சார்ந்தவை. அதை சிறப்பாக நிகழ்த்தும்பொருட்டு உருவாக்கப்பட்டவை. அந்த விதிகளைக் கொண்டு எந்த தனித்துறையையும் கட்டுப்படுத்த முடியாது. உதாரணமாக மருத்துவத்தில் நிர்வாணம் குறித்த இந்த நம்பிக்கைகள் செல்லுபடியாகுமா என்ன?

அதேபோலத்தான் ஆன்மீகமும், தத்துவமும். அவை இயற்கை குறித்தும் அவற்றில் தெரியும் பிரபஞ்ச விதிகளைப்பற்றியும் பேசுகின்றன. அதற்கு மனித உடலை குறியீடாக வளர்த்தெடுக்கின்றன. அந்த தளம் லௌகீகம் சார்ந்தது அல்ல. அங்கே நம் எளிய ஒழுக்க விதிகளுக்கு இடமில்லை

ஜெ

மேலதிக வாசிப்புக்கு முந்தைய கட்டுரைகள்

இங்கிருந்து தொடங்குவோம்… 

எம்.எ·ப்..ஹ¤ஸெய்ன்,இந்து தாலிபானியம்

தாந்த்ரீகமும் மேலைநாடுகளும்:கடிதம்

பொம்மையும் சிலையும்

தாந்திரீகம் பற்றி

காந்தியும் காமமும்- 4

http://www.jeyamohan.in/?p=5182 

மறுபிரசுரம் முதற்பிரசுரம் 2010 மே

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 33
அடுத்த கட்டுரைபயணம்- கடிதம்