புதுவருட உறுதிமொழிகள், பிறந்தநாள் சூளுரைகள் ஆகியவற்றை அவ்வப்போது நான் வாசிப்பதுண்டு. பெரும்பாலானவை நிறைவேறாது போன சென்ற வருடச் சூளுரைகளை எண்ணி சுயகண்டனம் அல்லது சுயஏளனம் செய்தபின் ஆரம்பிக்கும். புதிய சூளுரைகளை முன்வைக்கும். அவர் அப்படி சில சூளுரைகளைக் கடந்தவர் என்றால், நடுவயதை நெருங்குபவர் என்றால் அச்சூளுரைகளில் ஒரு அவநம்பிக்கையும் ஊடாடியிருக்கும்.
என் இளமையிலும் அப்படித்தான். வருடத்தொடக்கத்தில் வாங்கிய டைரிகள் அப்படியே இருப்பதைப் பார்த்து டிசம்பரில் ஏக்கப்பெருமூச்சு விடுவேன். இப்போது நான் ஜனவரி ஒன்றாம் தேதியை நினைவுகூர்வதே இல்லை. இம்முறை யாரோ வானொலிக்காகக் கேட்டார்கள் என்பதனால் இதைப்பற்றிப்பேசவேண்டியிருந்தது. “சென்ற வருடச் சூளுரைகளை நிறைவேற்றமுடிந்ததா?’ என்பது கேள்வி.
நான் சொன்னேன், “அப்படி வருடாந்திரச் சூளுரைகள் எதையும் நான் ஏற்றுக்கொள்வதில்லை.” கேட்டவள் கேரளத்தின் இளம்தோழி. “அப்படியென்றால் இப்படி கேள்வியை மாற்றிக்கொள்கிறேன். சென்றவருடம் திட்டமிட்டவற்றை செய்துவிட்டீர்களா?” நான் யோசித்துவிட்டு “சென்ற இருபத்தைந்து வருடங்களாக நான் திட்டமிட்ட எதையுமே செய்து முடிக்காமல் இருந்ததில்லை. ஏற்றுக்கொண்டதை ஒருமுறைகூட கைவிட்டதில்லை” என்றேன்.
சற்று நேரம் அவள் அமைதியாக இருந்தாள். பின்னர் சிரித்தபடி “ஜெயேட்டா, அது ஒரு tall statement அல்லவா?” என்றாள். “அப்படியா? நீ கேட்டதனால் நான் உண்மையிலேயே திரும்பிப்பார்க்கிறேன். எதையாவது முடிக்காமல் விட்டிருக்கிறேனா என்று. எதையாவது சொல்லி அப்படியே விட்டுவிட்டேனா என்று. இல்லை என்றுதான் தோன்றுகிறது” என்றேன்.
சிலவற்றை ஒத்தி வைத்திருப்பேன். காரணம் அதைச் செய்வதற்கான தருணம் அமையவில்லை என்பதற்காக. சிலவற்றை செய்ய ஆரம்பித்தபின் அந்தப் பாதை சரியில்லை என விட்டு விட்டிருப்பேன். சிலவற்றை மேலும் விரிவு படுத்தியிருப்பேன். ஆனால் இத்தனை நாளுக்குள் இதைச் செய்வேன் என திட்டமிட்ட எதையும் செய்யாமலிருந்ததில்லை. பெரிதினும் பெரிதாக திட்டமிட்டவற்றைக்கூட முடித்திருக்கிறேன். ஒவ்வொருநாளும் செயலூக்கத்துடன் மட்டுமே இருந்திருக்கிறேன். அதைச் சொன்னேன் “என் இயல்புக்கு ஒரு குறையுடன் நிம்மதியாக இருக்கமுடியாது.” அதை ஒலிபரப்புவதாகச் சொன்னாள்.
உண்மையில் வருடாந்திரச் சூளுரைகளை ஏற்பவர்களின் பிரச்சினை அவர்கள் வருடம் முழுக்க ஊக்கத்துடன் இல்லை, திட்டமிட்டுச் செயலாற்றுவதில்லை, தன் எல்லைகளும் சாத்தியங்களும் அவர்களுக்கு தெரியவில்லை என்பதுதான். புத்தாண்டு அல்லது பிறந்தநாள் என்பது ஒரு புதிய தொடக்கம் என ஒருவர் நினைக்கிறார் என்றால் அவர்அதுவரை எதையுமே தொடங்கவில்லை என்பதுதான் அர்த்தம். தொடங்கிவிட்ட ஒருவனுக்கு வாழ்க்கை என்பது முறியாமல் நீளும் செயலூக்கம் அல்லவா?
தொடங்குவது வாழ்க்கையில் ஒருமுறையாகவே இருக்க முடியும். தொடங்கியபின் முன்னால் செல்வது மட்டுமே வாழ்க்கை. வாழ்க்கையை வருடாவருடம் தொடங்குவது என்பதைப்போல் அபத்தம் என ஏதுமில்லை. அது தொடங்காமல் தயங்கிக்கொண்டிருப்பது. நீச்சல்குளத்தின் எம்பு பலகையில் நின்று குதிக்கத் தயங்கி முன்னும்பின்னும் ஆடுவது.
உண்மையில் அது ஆபத்தானதும்கூட. இச்சூளுரைகள் எப்படி எடுக்கப்படுகின்றன. சென்ற வருடம் நினைத்தபடி ஒன்றும் செய்யவில்லை என்ற கழிவிரக்கம்தான் அதற்கான தூண்டுதல். ஆகவே ஒரு வேகத்தில் பெரிய சூளுரைகள் எடுக்கப்படுகின்றன. அந்தச் சூளுரைகளை நிறைவேற்றும் சூழ்நிலை உள்ளதா என்று பார்ப்பதில்லை. அதற்கான தெளிவான திட்டங்களை வகுப்பதில்லை. தன் ஆற்றலை கணக்கில் கொள்வதில்லை. தன் குறைபாடுகளை கணக்கிட்டு அவற்றை களைய முயல்வதும் இல்லை. பெரும்பாலான சூளுரைகள் ‘நான் யார் தெரியுமா? அடிச்சு தூக்கிடறேன் பாரு’ தான்.
விளைவாக அவை சாத்தியமாகாமல் நின்றுவிடுகின்றன. அப்படி சில வருடங்களுக்குப்பின் ‘இப்டி எத்தனவாட்டி சொல்லிக்கிட்டாச்சு. ஒண்ணும் நடக்காது . நமக்கு இதான் வாய்ச்சிருக்கு’ என்று தனக்குத்தானே சமாதானமாகி நின்றுவிடுவார்கள். அவ்வளவுதான். அதன்பின்னர் முன்னகர்தலே இல்லை. வாழ்க்கை முடிந்துவிடும்.
தொடங்குவது என்றால் என்ன? வாழ்க்கையில் என்ன செய்வது என அறிவது. அதைச் செய்துமுடிக்க முடிவெடுப்பது. அதன் முதல் அடிப்படையே தன் திறனை மதிப்பிடுவதுதான். ஆம், நாம் கொஞ்சம் அதிகப்படியாகவே நம்மை மதிப்பிட்டுக்கொள்வோம். ஆனால் மிக அதிகமாக மதிப்பிட்டுக்கொண்டால் நமக்கே அது தெரியும். அந்த மதிப்பீட்டைக்கொண்டு நம் எதிர்காலத் திட்டங்களை வகுக்கக் கூடாது. அதை நோக்கி நாம் எடுத்துவைக்கும் முதல் அடியையே நான் தொடக்கம் என்கிறேன். எனது தொடக்கம் 1986-இல் காசர்கோடில் நிகழ்ந்துவிட்டது. அதன்பின் திரும்பிப் பார்த்ததே இல்லை.
நம் கனவுகள் பெரிதாக இருக்கலாம். கனவுகளே பெரியவைதான். அவை நமது அந்தரங்கமான ஓர் உலகில் நுரைத்துக்கொண்டே இருக்கவேண்டும். இல்லையேல் வாழ்க்கை இனிதாவதில்லை. ஆனால் அவற்றுக்கும் நம் நடைமுறை இலக்குகளுக்கும் இடையேயான தூரம் பற்றிய பிரக்ஞை நமக்கு இருந்தாகவேண்டும். நம் கனவுகள் ஓர் அந்தரங்க நதி. அதில் ஒரு கைப்பிடி அள்ளி நம் எதிர்காலத் திட்டமாக வைத்துக்கொள்ளவேண்டும்.
உண்மையில் இலக்குகளை எய்துவதல்ல முக்கியமானது. வாழ்வதுதான் . வாழ்க்கை என நமக்குக் கிடைத்துள்ள இந்தக் கால அளவை இன்பத்தால் நிறைப்பதுதான். இன்பம் என்பது அடைவதில் இல்லை. வெல்வதில் இல்லை. முழுமையாக இருப்பதில்தான் உள்ளது. எது மகிழ்வளிப்பதோ அதைச் செய்து காலத்தை நிறைப்பதே வெற்றிகரமான வாழ்க்கை. திரும்பிப்பார்க்கையில் ஆம் நிறைவுற வாழ்ந்தேன் என சொல்லிக்கொள்ள முடிவது. இலக்குகளும் திட்டங்களும் அதற்காகவே. வாழ்க்கை எளிய விஷயங்களில் வீணாகி சிதறிப்பரந்துவிடாது தடுப்பதற்காக மட்டுமே அவை தேவை.
இலக்கு உள்ள வாழ்க்கை, அதற்கான திட்டங்களின்படி செல்லும் வாழ்க்கை செயலூக்கம் கொண்டதாக இருக்கும். நேர்நிலை நோக்கம் கொண்ட செயலூக்கம் போல நம்மை நிறைவுடனும் மகிழ்வுடனும் வைத்திருக்கக்கூடிய பிறிதொன்று இல்லை. அதற்காகவே செயல் முக்கியமானது. உண்மையில் நாம் ஒன்றை செய்வதனாலும் செய்யாமல் விட்டதனாலும் ஒன்றும் இங்கே எதுவும் பெரிதாக மாறிவிடுவதில்லை. நாம் செய்வது நம் நிறைவுக்காக மட்டுமே.
நேர்நிலை என்பதை மேலும் அழுத்திச் சொல்லியாகவேண்டும். வேறு ஒன்றுக்கு எதிர்வினையாக, எதிர்ப்பாக செய்யப்படும் செயல்கள் ஒருபோதும் நிறைவை அளிப்பதில்லை. பெரும்பாலும் நீண்டகாலம் தொடர்வதும் இல்லை. எதிர்வினையாக ஒன்றைத் தொடங்கி அதில் தன்னைக் கண்டுகொண்டு அதன் வழியாக நேர்நிலை மனநிலையை அடைந்து நிறைவை நோக்கிச் செல்பவர்கள் உண்டு. ஆனால் முழுக்கமுழுக்க எதிர்மறையாக, எவருக்கோ அல்லது எதற்கோ சவாலாக ஒன்றை செய்ய ஆரம்பித்து நெடுங்காலம் தொடர்ந்து செய்து வெல்வதெல்லாம் சினிமா நமக்குக் கற்றுத்தருவது. வாழ்க்கையில் அப்படி நிகழமுடியாது.
எதிர்நிலை கொண்டவர்கள் காலப்போக்கில் அச்செயலில் ஆர்வமிழப்பார்கள். காரணம் அது செயலின் உவகையை அளிப்பதில்லை. ஒவ்வொருநாளும் ஆங்காரத்தையும் கோபத்தையும் அளிக்கும். விளைவாக ஆற்றலை உறிஞ்சி அழிக்கும். நம்மை பலவீனமாக்கி நம் செயல்களை சரிக்கும். நமக்கு உண்மையில் மகிழ்ச்சி அளிக்காத எதையும் நாம் நீண்டகாலம் செய்வது இல்லை. விளைவாக தோல்விமனநிலை வருகிறது. கசப்பும் கோபமும் கொண்டவர்கள் ஆகிறோம். வசைபாடவும் ஏளனம் செய்யவும் ஆரம்பிக்கிறோம்.
எதிர்மறை மனநிலை கொண்டவர்களை சூழ இருப்பவர்கள் வம்புகளுக்காக கவனிப்பார்கள். சில தருணங்களில் சில காரணங்களுக்காக ஆதரிப்பார்கள். ஆனால் பொதுவாக அனைவரும் ஒதுங்கியே செல்வார்கள். ஒட்டுமொத்த விளைவாக எஞ்சுவது தனிமை. அந்தத்தனிமை மேலும் மேலும் கசப்பை நோக்கியே தள்ளும். ஆகவே பொறாமைகொண்டவர்களை எதிரிகளை ஒருபோதும் பொருட்படுத்தக் கூடாது. அவர்கள் நம்மை விட மிகச்சிறியவர்கள். அவர்களுடன் போட்டியிடுகையில் நாம் சிறியவர்களாக ஆகிவிடுகிறோம்.
எதையும் மகிழ்ச்சிக்காக மட்டுமே செய்யவேண்டும் என்பது செயலூக்கம் கொண்ட அத்தனைபேரும் சொல்லும் வழிதான். செய்யும் எதையும் மகிழ்ச்சியானதாக ஆக்கிக்கொள்ளவும் முடியும். அதை நேர்நிலையாக ரசனையுடன் அணுகினாலே போதும். அதில் நுட்பங்களைக் கண்டடைவது அறிதலின் இன்பத்தை அளிக்கும். சிறிய அன்றாட வெற்றிகள் சாதிப்பதின் உவகையை அளிக்கும். அதுவே போதுமானது
அதேபோல உடனடி இலாபங்களுக்காக எதையும் செய்யக்கூடாது என்பதும் நானே கண்டடைந்தது. உடனடி லாப நோக்கம் இருந்தால் பெரியதாக, நீடிப்பதாக எதையும் செய்யமுடியாது. சிறிய ஒன்றை எதிர்நோக்கி செய்தால் அது வெறுமனே பதற்றத்தைத்தான் ஏற்படுத்துகிறது. சிறிய பின்னடைவுகள் கூட நிராசைகளை உருவாக்கி செயலை மிகப்பெரிய வதையாக ஆக்கிவிடுகின்றன. செயலின் இன்பத்திற்காகவே செய்யப்படும் செயல் மட்டுமே தொடர்ந்து நீடிக்க முடியும். அது மட்டுமே வெற்றியாகவும் ஆகமுடியும்.
இதைச் சொல்வதற்கான என் தகுதி ஒன்றுண்டு. நான் என் துறையில் வெற்றிகரமாக செயல்படுபவன் என்பதுதான் அது. எப்படி செயல்படுகிறேன் என்பதை மட்டுமே சொல்கிறேன். கண்டுகேட்டு அறிந்ததை அல்ல.
ஆகவே நான்கு வினாக்களை கேட்டுக்கொள்ளவேண்டும். 1. எதைச் செய்தால் நான் உண்மையாகவே மகிழ்ச்சியாக இருப்பேன்? 2. எதைச்செய்ய என்னால் முடியும்? 3. அதில் எனக்கிருக்கும் தடைகள் என்ன? 4. அதைச்செய்வதற்கான திட்டங்கள் என்ன? தொடங்குங்கள். வாழ்நாள் முழுக்கச் செல்லுங்கள். அப்படி தொடங்குவது ஒரு பிறப்பு. அது ஒரு பிறந்தநாள் சூளுரை. அது ஒன்று போதும்.