மாதொரு பாகன் எதிர்ப்புகள்

123

மாதொரு பாகன் நூலுக்கு திருச்செங்கோடு வட்டாரத்தில் மோரூர் கண்டங்குல கொங்குவேளாளா [கவுண்டர் ] பேரவையினர் செய்துவரும் எதிர்ப்பைப்ப்பற்றி தினமலரில் இருந்து கருத்து கேட்டார்கள். இது நான் சொன்ன கருத்து

* சமீபகாலமாக சாதியக் குறுங்குழு அமைப்புக்கள் தங்கள் சாதிய எதிர்ப்பரசியலை இந்துமதத்தவர் என்ற அடையாளத்துடன் செய்வது அதிகரித்துவருகிறது. சுசீந்திரத்தில் என்னை எதிர்த்து மிரட்டல் விடுத்து, வசைபாடி தட்டிகள் வைத்து தெருமுனைப்போராட்டம் நடத்தியவர்களைப் பற்றி விசாரித்தபோது அவர்கள் ஒரு சாதிக்குழு என்று தெரியவந்தது. இந்து என்ற அடையாளம் பரவலாக பிற பகுதிகளில் ஆதரவைப்பெற்றுத்தரும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்

* இந்துத்துவ அரசியலின் மைய அணி இன்று அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கிறது. அவர்கள் முதலில் கழுத்தைப்பிடித்து வெளித்தள்ளுவது இந்துத்துவ அரசியலின் விளிம்புபகுதியில் உள்ள குறுங்குழுக்களைத்தான். ஏனென்றால் அதிகாரத்தின் ‘சுவையை’ பகிர்ந்துகொள்ள மையத்தினர் உதிரிகளை அனுமதிக்கவே மாட்டார்கள். ஆனால் ஆட்சிக்கு வரும் வழியில் பலவகையில் இவர்களைப் பயன்படுத்திக்கொண்டும் இருப்பார்கள். ஆகவே இந்தச் சில்லுண்டிகள் ஏமாற்றப்படுவதாக உணர்கிறார்கள்.

* கடைவாயில் எச்சில் ஒழுக அவர்கள் ‘சாப்பிடுவதை’ பார்க்கும் இந்தச் சில்லுண்டிகளின் ஒரே எதிர்ப்புவழிமுறை ‘உன்னைவிட நான் தீவிரம் தெரியுமா?’ என்பது மட்டுமே. கோட்சேக்கு கோயில் கட்டுவது முதல் அத்தனை அதிரடிகளுக்கும் இதுவே உள்ளுறை. இவர்கள் அதிதீவிர நிலைபாடு எடுக்கலாம். ஏனென்றால் மிகச்சிறிய எண்ணிக்கையில் இருக்கிறார்கள். ஆனால் மைய ஓட்ட இந்த்துத்துவர்கள் அரசாங்கத்தைக் கையில் வைத்திருக்கும் பொறுப்புடன் இருக்கிறார்கள். அவர்கள் இவர்கள் அளவுக்கு அதிரடியாகப் பேசமுடியாது

* இந்த அதிரடிகளால் அதிகபட்ச சங்கடம் அரசை கையில் வைத்திருக்கும் மைய இந்துத்துவ ஓட்டத்துக்குத்தான். ஆகவே அவர்கள் இவர்களிடம் வாயைமூடும்படிச் சொல்லிக் கெஞ்சுவார்கள். இவர்கள் பேரம்பேசுவார்கள். ஏதாவது ஓரத்திலிருந்து கிழித்து இவர்கள் தட்டிலும் போடப்பட்டு தற்காலிகமாக வாய் மூடிவைக்கப்படும். ஐந்தாண்டுகாலமும் இந்த அரசியல் நீடிக்குமென எதிர்பார்க்கலாம்

* இதே அரசியல் பாரதீய ஜனதாவின் கூட்டாளிகளான சின்னக் கட்சிகளுக்கும் பொருந்துவதே. அவர்கள் அதிதீவிரமாக எம்பிக்குதிப்பது இதன்பொருட்டே. அவர்கள் ‘பலவகையிலும்’ சமரசம்செய்யப்படுவார்கள். அவர்களின் அரசியல் சில்லுண்டி இந்துத்துவ அரசியல்போல மைய ஓட்டத்தின் குரலாக ஊடகங்களில் காட்டப்பட்டு சங்கடங்களை உருவாக்கும் சாத்தியம் இல்லை என்பதனால் ஓர் எல்லைக்கு மேல் பொருட்படுத்தப்படமாட்டாது

* இந்தச்சில்லுண்டி இந்துத்துவர்களுக்கு பிரச்சினைகள் தேவை. அந்த தணியா தாகத்திக்கு இதேபோன்ற உள்ளூர் சில்லறை சாதிக்குழுக்களின் அரசியல் கைகொடுக்கிறது. ‘தேவாங்குக்கு மரநாய் கூட்டு’ என்று மலையாளத்தில் ஒரு பழமொழி

* இந்தச் சாதியப்பிரச்சினைகூட சாதியமைப்புக்குள் இருக்கும் வேறுவகை சில்லுண்டிகளால் உருவாக்கப்படுகிறது. சாதிச்சங்கங்கள் எப்போதும் அச்சாதியின் காசுள்ள பெரியமனிதர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும். அவர்களிடமிருந்து அதிகாரத்தைப்பிடுங்க நினைக்கும் ‘நேற்றுமுளைத்த’ கைப்பிள்ளைகள் ஏதேனும் ஒரு பிரச்சினையை எடுத்து சற்று மிகையாகவே தாண்டிக்குதித்து தங்கள் இருப்பையும் முக்கியத்துவத்தையும் காட்டிக்கொள்கிறார்கள். பெரியமனிதர்களுக்கு சொந்தமாக தொழில் இருக்கும். அரசியல் கட்டுப்பாடுகள் இருக்கும். ‘அடித்து ஆட’ முடியாது. இவர்கள் என்னவேண்டுமானாலும் செய்யலாம். வேட்டியை உருவி தலையில் கட்டி தெருவில் நின்று சத்தம்போடலாம்.

* இத்தகைய பிரச்சினைகளின் நோக்கம் விளம்பரம் ஒன்றே. இது அவர்களுக்கு அரசியல் அடையாளத்தை உருவாக்கிக் கொடுக்கும். இப்போது டிவி வரைக்கும் தாங்கள் பேசப்படுவதை அவர்கள் தொடையிடுக்கில் கைகளை வைத்துக்கொண்டு கேட்டுக் குதூகலிப்பார்கள்.

* ஒரு புனைவு அதன் எல்லைக்குள் நின்று எழுதிய ஒன்றை இவர்கள் ஊடகமெங்கும் பரப்பி நாறடிக்கிறார்கள். இலக்கியம் என்பது சமூகவியலை ஓரளவேனும் தெரிந்தவர்களால் வாசிக்கப்படுவது. தர்க்கபூர்வமாக அணுகுபவர்களின் இடம் அது. வெறும் வம்பாளர்களுக்கு முன்னால் அந்நாவலின் நாலு பக்கங்களை கிழித்துப்போடுவதை இந்த சாதிச்சில்லுண்டிகள் செய்கிறார்கள். அந்த வம்புகள் மூலம் தங்கள் சொந்தச்சாதியை இழிவுபடுத்தி அதன் வழியாக அரசியல் லாபம் பெற எண்ணுகிறார்கள்.

* ஆக இது இந்து மதத்தின் பிரச்சினை அல்ல. சாதிப்பிரச்சினை. உண்மையில் சாதிப்பிரச்சினைகூட அல்ல. சாதியை அரசியலாக நினைக்கும் சாதிய குறுங்குழுக்களின் அரசியல் அடையாளம்தேடல் மட்டுமே

* ஒரு மதத்தின் குரலாக ஒலிக்கவேண்டியவர்கள் கற்றறிந்த மத அறிஞர்கள். சான்றோர்கள். இவர்களைப்போன்ற தெருச்சண்டியர்கள் அல்ல. எந்த மதத்துக்கும் இவர்களைப்போன்றவர்கள் அவமானச்சின்னங்கள்.

* இந்துமதம் அனைத்துவகையான விமர்சனங்களுக்கும் இடமளித்து வளர்ந்தது. விமர்சனங்களை ஏற்று நீடிப்பதனாலேயே அது தன்னை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. இந்து மதத்தின் அத்தனை சீர்திருத்தவாதிகளும் அதை மிகக்கடுமையாக விமர்சனம் செய்தவர்களே

* இன்று இந்துமதத்தின் மிகப்பெரிய அபாயமாக இந்துக்கள் உணரவேண்டியது அதன் அடித்தளத்தில் ஓட்டையிடும் இந்த எலிகளைத்தான். இந்தவகை சில்லறைகளுக்கு மேலும் இடமளித்தால் ஒரு கட்டத்தில் இவர்களின் கட்டளைக்கு மொத்தச் சமூகமும் கட்டுப்படவேண்டியிருக்கும். பிற மதங்களில் அது நிகழ்ந்துவிட்டிருக்கிறது.

முந்தைய கட்டுரையானைடாக்டர்- கடிதம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 74