இரவு 24

இரவே

ஒரு சொல்கூட

இல்லாதது உன் கருணை.

தேடுவோரன்றி

துய்க்கமுடியாதது.

அதனாலேயே அளவற்றது.

உனக்கு வணக்கம்!

விமானம் பின்னிரவு ஒன்றரை மணிக்கு தரையிறங்கும் என்றார்கள். நான் காரை நிறுத்திவிட்டு வந்து விமானம் தாமதம் உண்டா என்று விசாரித்தேன். நீலக்காலர் கொண்ட சீருடை அணிந்த பெண் ”இல்லை” என்று சொன்னாள். அவள் முகமெங்கும் பருக்கள். ஆனால் சிவந்த முகத்திற்கு பருக்கள் அழகாகவே இருந்தன. ·பாதர் தாமஸ் என்றால் உடனே அவளிடம் ”தேங் யூ. யூ லூக்ஸ் ப்யூட்டி·புல்” என்று சொல்லியிருப்பார். அடுத்த முறை அவளை சுதந்திரமாக ரசிக்க முடியாமலாகும். நான் அவளை பார்த்தபடி ”தேங்க்யூ” என்ற பின் ஒரு காபி சாப்பிட்டேன்.

தாய் ஏர்வேய்ஸ் விமானம் ஹாங்காங்கில் இருந்து வரும் தகவலை ஒலிப்பெருக்கி சொன்னபோது சென்று வரவேற்புக் கும்பலில் நின்றுகொண்டேன். விமானம் வந்து இறங்குவதற்கான நேரம், பயணிகள் வெளிவருவதற்கான நேரம், பெட்டிகள் தூக்கிப்பட்டையில் வெளிவருவதற்கான நேரம் அனைத்தையும் மானசீகமாக கணக்கிட்டபடி நின்றேன். நாற்பது நிமிடங்கள் கழித்து தாமஸ் ஒரு தள்ளு வண்டியை தள்ளியபடி சுற்று முற்றும் பார்த்துக்கொண்டு வந்தார். நான் கைவீசினேன்.

”ஆ, ஸெரவணன்!” என்றார் தாமஸ். நான் அவரை அணுகி அவரது தள்ளுவண்டியை வாங்கிக் கொண்டேன். ”எப்படி இருந்தது பயணம்?” ”·பைன்.. நன்றாக தூங்கினேன்..”  தள்ளுவண்டியுடன் சாலையைக் கடந்தோம். ”சீனா எப்டி இருக்கிறது? இன்னும் பத்து வருடத்தில் கர்த்தரிடம் வந்துவிடுமா?” என்றேன். ”வாய்ப்பே இல்லை. ஆனால் போப்பிடம் வந்துவிட வாய்ப்பிருக்கிறது” என்று சிரித்தார்.

காரில் பெட்டிகளை தூக்கி வைத்தேன். ”நல்ல எடை இருக்கிறதே…ஏகப்பட்ட பொருட்கள் வாங்கியிருக்கிறீர்கள்”. ”அய்யய்யோ , எல்லாம் பரிசுப்பொருட்கள். கிளம்பும்போது தந்துகொண்டே இருந்தார்கள்.” என்றார். நான் காரை கிளப்பினேன். ”சரவணன் நீங்கள் சொன்னது உண்மை, சீனா சீக்கிரமே கிறித்தவமாகி விடும்”

”ஏன்?” என்றேன். ”அங்கே பிரம்மாண்டமான தொழில் வளர்ச்சி. மிகக் கடுமையான உழைப்பு இல்லாமல் அது நடக்காது. இயந்திரம் போல மனிதனை வேலைசெய்ய வைக்க வேண்டுமென்றால் மகிழ்ச்சி என்பது பணத்தில் இருக்கிறது என்று மக்களை நம்ப வைக்க வேண்டும். முதலாளித்துவம் அதற்காக பொம்மைகளை உருவாக்கிக் கொண்டே இருக்கும். செல்போன்கள், கம்ப்யூட்டர்கள், கார்கள், விமானங்கள், துப்பாக்கிகள். அவற்றை வாங்கி மகிழ்ச்சியை அடைவதற்காக மக்கள் ரத்தத்தை வியர்வையாக ஆக்குவார்கள்” ·பாதர் சிரித்தார் ”கிறித்தவ மதம் உலகம் முழுக்க எப்படி பரவியது என்றால் லௌகீகமான பொருட்களை கோரி கடவுளிடம் மிக உருக்கமாக, மிக நம்பகமாக பிரார்த்தனை செய்ய கற்பிக்கும் மதம் இதுதான்…”

”சீனர்கள் என்ன கேட்கிறார்கள்?” என்றேன். ”என்ன கேட்பார்கள்? பாவப்பட்ட ஜனங்கள். செல்·போன் கேட்கிறார்கள்..” என்று சிரித்தார். ”அவர்கள் ஏமாற்றம் அடைய அடையத்தான் கிறித்தவத்துக்கு வாய்ப்பு அதிகம். ஆரம்பத்தில் உழைக்கலாம், சம்பாதிக்கலாம் என்றெல்லாம் தோன்றும். பிறகு இது எதுவும் அவர்கள் கையில் இல்லை என்று தெரியும்போது கடவுளிடம் பிரார்த்தனை செய்ய வருவார்கள். தேவாலயங்கள் நிரம்பி வழியும். எங்களுக்கு வேலை தேடித்தாருங்கள் கர்த்தாவே, எங்கள் பிள்ளைகளுக்கு வேலை தேடித்தாருங்கள் கர்த்தாவே, எங்கள் சம்பளங்களை கூட்டித்தாருங்கள் கர்த்தாவே..”

”நீங்கள் ஒருவரே போதும், திருச்சபைக்கு பெரிய தடையாக குறுக்கே படுத்து விடுவீர்கள்” என்றேன். ”அந்த யூத ஆசாரியாலேதான் பிரச்சினை. அவனை வைத்துக்கொண்டு உருப்படியாக பிழைக்க முடியாது. நான் சீனாவுக்கு திரும்பப் போவதாக இல்லை. என்னை கிட்டத்தட்ட வராதே என்று சொல்லிவிட்டார்கள்…” என்றார். ”ஆத்ம அறுவடை என்ன ஆகிறது?” என்றேன். ”அங்கே அறுவடை இன்னும் ஆரம்பிக்கவில்லை. விதைத்து முளைத்திருக்கிறது. கடுமையாக பூச்சிக்கொல்லி அடித்துக்கொண்டிருக்கிறார்கள். உன் வீடு என்ன நகரத்துக்கு வெளியேயா இருக்கிறது?” நான் ”ஆமாம், வண்டலூர் தாண்டி” என்றேன். ”ஓ” என்றார். மலையாள ஓ

சற்று நேரம் கார் அமைதியாகச் சென்றது. ”மறுபடியும் எர்ணாகுளம் போகவே இல்லை , இல்லையா?” என்றார். ”ஆமாம்” என்றேன். ”போகத்தோன்றவில்லை. அங்கே தொழில்முறையாகப் போகவேண்டிய தேவையும் இல்லை” ”எப்படி போகிறது தொழில்?” ”இது ஆலோசனை தொழில்தானே. நன்றாகவே போகிறது” என்றேன். ”மேனன்?” ”நாலைந்து கடிதங்கள் போட்டிருந்தார். அதே கம்பீரமான ஆங்கிலம். அழகான வாதகதிகள். இப்போது ரிஷிகேஷில் இருக்கிறார். ஒரு ஆசிரமத்தில். கஞ்சன்ஜங்கா ஏறும் அளவுக்கு உடல்நிலை நன்றாகத்தான் இருக்கிறது”

சாலையின் நிலாவரிசைகள் காரின் வேகத்தில் இணைந்து இரு ஒளிநதிகளாக ஆகி பின்னால் பீரிட்டு ஓடின. ”நீ அன்றைக்கே கிளம்பிப்போய்விட்டாய் என்று நான் நான்கு நாட்கள் கழித்துத்தான் தெரிந்துகொண்டேன்.” என்றார். ”ஆமாம்…அது ஒரு கொந்தளிப்பான மனநிலை. நான் என் வசத்தில் இல்லை. நீலிமா எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தாள். என்னை அவள் கட்டுப்படுத்துவதில்லை என்று. ஏனோ அதன் பிறகு ஒரு கணம் கூட அந்த வீட்டில் தங்க முடியாது என்று தோன்றி விட்டது. உடனே கிளம்பிவிட்டேன்…”

”விமானத்திலா?” ”இல்லை காரில்” என்றேன் ”ஓ” என்றார் தாமஸ். ”அப்போது அந்த மனநிலையில் வேகமாக கார் ஓட்டி  நேரடியாகவே விலகி வரவேண்டும் போலிருந்தது. — தாண்டுவது வரை மிதமிஞ்சிய வேகத்தில் ஓட்டினேன். எதிரே வந்தவர்கள் எல்லாம் பதறி விலாகினார்கள். பல லாரிக்காரர்கள் கை நீட்டி திட்டினார்கள். விபத்து இல்லாமல் சென்றது அதிருஷ்டம். என் நரம்புப்பதற்றத்தால் அக்சிலேட்டரை இறுக மிதித்திருந்தேன்… மலை ஏற ஆரம்பித்ததும் கொஞ்சம் கவனமானேன். நேர்ச்சாலையில் இருந்த அந்த வெறி வளைவுகளில் சுழலச் சுழல இல்லாமலாயிற்று.. வழியில் ஒரு சிறிய டீக்கடையில் நிறுத்தி டீ சாப்பிட்டேன்”

·பாதர் ”என்னால் ஊகிக்க முடிகிறது” என்றார். ”மனநிலைகளை ஊகிக்க முடியும் ·பாதர். மனநிலை மாற்றங்களைத்தான் ஊகிக்க முடியாது” என்றேன். ”மேலே போகப்போக நான் அமைதியடைந்துகொண்டே வந்தேன். வளைவுகளில் கவனமாக ஓட்டவேண்டியிருந்தது என்பதுதான் காரணம். மனம் கொந்தளித்த நிலையில் காரம்ஸ் ஆட ஆரம்பித்தால் சாந்தமாகிவிடும் அல்லவா அதை மாதிரி…” ”காரம்ஸ் என் பிரியமான உதாரணம்…” என்றார் தாமஸ் ”பிதாவிடம் மக்களை கொண்டு சென்று சேர்க்கிற ஸ்டிரைக்கர்தான் கிறிஸ்து” ”என்றே குருவாயூரப்பா!” என்றேன். தாமஸ் சிரித்தார்.

”உசிலம்பட்டி தாண்டியதும் மலைக்குமேலே ஏதோ ஒரு இடத்தில் பக்கவாட்டில் ஒரு காட்டுச்சாலையில் திரும்பிவிட்டேன். அது ஒரு கிராமத்திற்குச் சென்றது. அதில் இருந்து ஒரு மண்சாலைக்குச் சென்றேன். அங்கிருந்து மீண்டும் வ¨ளைந்தேன். மூங்கில் வைத்து தடுத்திருந்த ஒரு தனியார் சாலைக்குள் மூங்கிலை தூக்கிவிட்டுவிட்டுச் சென்றேன். ஏதோ ஒரு எல்லையில் கார் போகமுடியாமல் ஆகியது. அங்கேயே காரை விட்டுவிட்டு இறங்கி காட்டுக்குள் சென்றுவிட்டேன். எத்தனை தூரம் நடந்தேன் என்று தெரியாது. போய்க்கொண்டே இருந்தேன்… வழியில் நிறைய பாம்புகளைப் பார்த்தேன். முட்களில் சிக்கி உடம்பெல்லாம் கோடுகள் விழுந்து ரத்தம் கசிந்தது…”

தாமஸ் புன்னகையை மாறாமல் வைத்துக்கொண்டு கேட்டார். அவரது கண்கள் தீவிரமடைந்திருந்தன. ”ஒரு பாறைக்குப் போய் சேர்ந்தேன். காட்டுக்கு நடுவே ஒளிந்து நிற்கும் பிரம்மாண்டமான யானை மாதிரி ஒரு கரும்பாறை. அதன் மீது சில நிறிய நீரோடைகள் இருட்டுக்குள் பளபளத்தபடி ஓடிச்சரிந்து மெல்லிய சத்ததுடன் விழுந்தன. பாறையில் பல இடங்களில் வெல்வெட் மாதிரி பாசி. சில இடங்களில் கால் வழுக்கியது. அங்கே ஒரு சிறிய கல் மேல் அமர்ந்துகொண்டேன். கொஞ்ச நேரம் கழித்து படுத்துக்கொண்டு நட்சத்திரங்கள் நிறைந்த வானத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். அப்படியே தூங்கிவிட்டேன்”

”நல்லது…”என்றார் தாமஸ் ”மன அழுத்தம் ஏற்படும்போது வரும் தூக்கம் மிக நல்லது. மூளைக்குள் ஒரு சிறிய தென்றல் வீசும் அப்போது” நான் ”ஆம். இப்போது அந்த தூக்கம்தான் எல்லாம் என்று தெரிகிறது. தூக்கத்தில் நான் கனவுகள் கண்டுகொண்டிருந்தேன். வானம் நட்சத்திரங்கள் காயலில் மீன்கள்.மீண்டும் மீண்டும் அதே காட்சிகள்தான். அவை ஒன்றுடன் ஒன்று கலந்து வந்துகொண்டே இருந்தன.  நான் ஏற்கனவே எரணாகுளத்தில் கண்ட காட்சிகள் அவை. ஒரு படகில் நான் சென்றுகொண்டிருக்கிறேன். படகு கவிழ்ந்து நீரில் விழுகிறேன். குளிர்ந்நு சில்லிட்ட தண்ணீர். ஆழத்துக்குச் சென்றபடியே இருக்கிறேன். என்னைச்சுற்றி மின்னும் மீன்கூட்டங்கள். அவற்றின் நடுவே நட்சத்திரங்கள். திடீரென்று ஒர் உணர்வு. நான் நீரில் க¨ரைந்து விட்டேன். நான் இல்லை. என் நினைப்பு மட்டும்தான் இருக்கிறது. அதுவும் புகை காற்றில் மறைவது போல பிரிந்து பிரிந்து மறைந்து கொண்டிருக்கிறது. நான் வேகமாக இல்லாமலாகிக்கொண்டிருந்தேன். அந்த நீர்வெளி ஆகாயம் போல விரிந்து பரந்து முடிவில்லாததாக கிடந்தது. கோடானுகோடி நட்சத்திரங்கள். புகை கொஞ்சம் தான் மிச்சமிருந்தது. மாட்டேன் மாட்டேன் என்று கூவியபடி தலையை ஆட்டினேன். விழித்துக்கொண்டேன். அங்கேதான் கிடந்தேன். உடம்பு பனியில் ஈரமாகியிருந்தது”

தாமஸ் முழுமையாக அந்தச் சொற்களை உள் வாங்கிக்கொண்டிருந்தார். அவரது கண்ணாடிகளின் கீழ்ச்சில்லுகளில் சாலை ஒளிவிட்டது. ”நான் அப்போது ஒர் அசைவை கண்டேன். எனக்கு மேலே. மரக்கிளையில் ஒரு மெல்லிய அசைவு. நிமிர்ந்து பார்த்தேன். காற்றின் அசைவு அல்ல அது. எழுந்து அமர்ந்தேன். வானத்தில் மெல்லிய நிலவு. ஆனால் நட்சத்திரங்களுடன் சேர்ந்து நன்றாகவே அது ஒளி வீசியது. வெண்மையான மூடுபனிமீது நிலா அமர்ந்திருந்தது. நிலவொளி அந்த படலம் வழியாக நேரடியாகவே இறங்கி எங்கும் பரவியிருந்தது. சாம்பல் நிறமான ஒளி. காடு அந்த ஒளியில் நிழல் வடிவமாக தெரிந்தது. அந்த கிளையசைவையே பார்த்துக்கொண்டிருந்தேன். சட்டென்று அதில் இருந்து ஒரு மலபார் அணில் இன்னொரு கிளைக்குக் குதித்தது. மூடுபனியின் ஒளிவெள்ளத்தில் அது நீந்தி துழாவிச் சென்றது. அதன் உடலில்  நிலவொளியே முடிகளாக சிலிர்த்திருந்தது. நிலவொளி அதன் வாலாக சுழன்றது. என் உடம்பு விரைத்துவிட்டது. ஒரு வலிப்பு மாதிரி வந்து கைகால்கள் இழுத்துக்கொண்டு வாய் கிட்டித்து விட்டது”.

நான் தாமசை நோக்கி திரும்பி ”மேனன் இதே மாதிரி அனுபவத்தைச் சொல்லியிருப்பார்” என்றேன். ” ஆமாம்” என்று நிறுத்திக்கொண்டார். ”என் தொடைகளில் விந்து வெளியேறியிருந்தது” என்றேன். ”அந்த அனுபவத்தை இப்போது என் எதிர்வினைகள் வழியாகச் சொல்கிறேன். ஆனால் அப்போது நான் இல்லை. என்னைப்பற்றிய தன்னுணர்வே இல்லை” ”அது ஒரு பிரார்த்தனை” என்றார் தாமஸ். ”நல்ல பிரார்த்த்தனையில் பிரார்த்திப்பவன் இல்லாமலாவான். பிரார்த்தனையும் இல்லாமலாகும். பிரார்த்திக்கப்படுவது மட்டும் மிஞ்சியிருக்கும்”

நான் பெருமூச்சு விட்டேன். ”’அவ்வளவு போதும் என்று நினைக்கிறேன். நான் அங்கிருந்து கிளம்பி என் காரை நோக்கி வந்தேன். காரில் என் மொபைல் இருந்தது. எடுத்து நீலிமாவைக் கூப்பிட்டேன். முதல் மணியிலேயே எடுத்தாள். அவள் அந்த மொபைலை மார்புடன் அணைத்துக்கொண்டு தூங்காமல் படுத்திருந்தாளாம். அந்த மொபைலில் கணங்களின் எண்கள் மாறுவதை பார்த்துக்கொண்டே முழு இரவும் இருந்திருக்கிறாள். அவள் ஹலோ என்று சொன்னபோது குரல் அடைத்திருந்தது. நான் தெளிவாகவே பேசினேன். அவளுடன் தான் என் வாழ்க்கை என்று சொன்னேன். ஆனால் நான் மீண்டும் எர்ணாகுளத்துக்கு வரப்போவதில்லை. அவளை சென்னைக்கு வரச்சொன்னேன்”

”தட் வாஸ் நைஸ்” என்று சொல்லி கண்ணாடியை தூக்கி கண்களை அழுத்தினார் தாமஸ். ”ஸாரி, அவள் அந்த மொபைலை விடிய விடிய பார்த்துக்கொண்டிருந்தாள் என்று கேட்டபோது என் மனம் பொங்கி விட்டது”  நான் ”அவளால் மீண்டும் ஒரு சொல்கூட பேச முடியவில்லை. நான் ஹலோ ஹலோ என்று கத்தினேன். அதன்பின் மொபைலை அணைத்துவிட்டேன். நேராக — சென்று ஒரு ஓட்டலில் தங்கினேன். நன்றாக தூங்கினேன்.” என்றேன்.

கார் செல்லும் பாதையை தாமஸ் கவனித்து ”இது கிராமம் மாதிரி இருக்கிறதே” என்றார். ”ஆமாம் கிராமம்தான். இங்கே ஒரு எட்டு ஏக்கர் நிலத்துடன் ஒரு வீட்டை வாங்கியிருக்கிறேன். எனக்கும் நீலிமாவுக்கும் எங்கள் இரவு வாழ்க்கைக்கு தனிமை தேவைப்படுகிறது” தாமஸ் ”நைஸ் பிளேஸ். சென்னைக்கு அருகில் இப்படி ஒரு இடமிருப்பதே ஆச்சரியமாக இருக்கிறது” என்றார். ”சென்னையில் இருந்து வெறும் முப்பது கிலோமீட்டர் தூரத்தில் சிறுத்தை வாழும் காடு இருக்கிறது. பலருக்கு அது தெரியவதில்லை” என்றேன்.

”மேனனிடம் சொன்னாயா?” ”அவருக்கு எழுதியிருந்தேன். அவர் பதில் போடவில்லை” என்றேன். ”அவரிடம் நான் மானசீகமாக நிறைய விவாதித்திருக்கிறேன். இப்போது இதைப்பற்றி நான் சொல்லும் வாதங்கள் எல்லாமே அவரிடம் மானசீகமாக உரையாடி உருவாக்கிக் கொண்டவைதான்.” என்றேன்.

”முதல் விஷயம் இதுதான் ·பாதர். இத்தனை தீவிரமான அனுபவங்களுக்குப் பின்னர் நான் சாதாரணமான உலகுக்குப் போய் சாதாரணமாக வாழ முடியாது. அப்படி நடிக்கலாம். மனம் இந்த  உக்கிரத்தையே நாடிக்கொண்டிருக்கும் நாம் எவ்வளவு ஆழமான வாழ்க்கை வாழவேண்டும் என்று நாம் தீர்மானிக்க முடியாது.” ”உண்மைதான்” என்றார் தாமஸ்.

”மேனன் என்ன தவறு செய்தார் என்றால் அவர் கனவின் அப்பட்டத்தில் வாழ விரும்பினார். ஆனால் அந்தக்கனவு அவர் விரும்பியபடி நடக்க வேண்டும் என்றும் ஆசைப்பட்டார். யுலிஸஸ் நரகத்துக்குப் போனதைப்பற்றி என்னிடம் அவர் சொன்னார். வீரன் மட்டுமே ஆழத்திற்குச் செல்ல முடியும் என்றார். எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் மேனன் தாந்தேயின் டிவைன் காமெடியைப் படித்துவிட்டு அதைச்சார்ந்து ஒரு வரைபடம் அமைத்துக்கொண்டு நரகத்துக்குச் செல்ல முயன்றவர் என்று. ஒவ்வொரு கணமும் முற்றிலும் எதிர்பாராத ஒன்று நடக்கும்போது அதை எதிர்கொள்வதுதானே வீரம்?”

”மேனனைவிட சுவாமிஜி இன்னும் தெரிந்து வைத்திருந்தார்” என்று தொடர்ந்தேன் ”அவர் இரவை ஒரு யானை என்றார். நூற்றுக்கு தொண்ணூறு பாகன்கள் யானையால்தான் கொல்லப்படுகிறார்கள். யானைக்குள் ஒரு காடு இருந்துகொண்டே இருக்கிறது. யானையை எவருமே  முற்றிலும் கட்டுப்படுத்த முடியாது. யானை அவரை மிதித்துக்கொன்றது. ஒருபாகனை யானை கொன்றது என்பதனால் இன்னொருவன் யானைப்பாகனாக வர மாட்டானா என்ன? இறந்தவனின் மகனே வருவான் அல்லவா? இது ஒரு பெரிய சவால். இந்த கனவு வெளியின் அடியில் இன்னும் மகத்தான வெளிகள் இருக்கின்றன. என்னுடைய ஆர்வம் அந்த ஆழம் நோக்கித்தானே ஒழிய என் தலைக்குமேல் உள்ள குமிழிகளின் பரப்பை நோக்கி அல்ல”

”அது நல்ல தன்னம்பிக்கை” என்று தாமஸ் சிரித்தார். ”என்னுடைய ஒற்றை வரியே இதுதான். நான் நெடுஞ்சாலையில் நடக்கவிரும்பவில்லை, இழுத்துக்கட்டிய கம்பிமீது அந்தரவெளியில் நடக்க விரும்புகிறேன்” என்றேன் ”இந்த பயணத்தில் என் நரம்புகள் ஒரு கணம் கூட தொய்வடையாது. சாதாரணமான தருணம் என்பதே கிடையாது. ஒவ்வொரு காலடியும் ஒரு சவால். இதுதான் வீரனின் வாழ்க்கை”

”ஷ¤ரஸ்ய தாரா..” என்றார் தாமஸ். ”என்ன?” என்றேன். ”ரேஸர்ஸ் எட்ஜ்”. நாவிதனின் கத்திமுனையின் கூர்மைமேல் நடப்பதுதான் ஞானத்தின் பயணம் என்பது. ”மாம் ஒரு நாவல் எழுதியிருக்கிறார்” என்றேன். ”ஆமாம். நான் வாசித்ததில்லை. இது உபநிஷத வாக்கியம். என் குரு ஜார்ஜ் பூதக்காட்டில் அடிக்கடிச் சொல்வார்”

”இந்த மேடுமீதுதான் என் வீடு” என்றேன். ”இரவு தனிமையாக இருக்குமே?” ”இல்லை. இந்த நகரத்தில்கூட ஒரு இரவுச்சமூகம் உண்டு. மாலையில் கண்விழிப்பவர்கள். இப்போது நாங்கள் ஏழுபேர் இருக்கிறோம்” என்றேன். ” எர்ணாகுளம் சமூகம் என்ன ஆயிற்று?” ”அவர்கள் இப்போது நாயர் வீட்டில் கூடுகிறார்கள். அவர் அங்கே கொண்டாட்டமாக இருக்கிறார்”

எதிரே என் வீடு தெரிந்தது. பால்கனியிலும் வராந்தாவிலும் சிவந்த ஒளியுடன் விளக்குகள் எரிந்தன. சன்னல்கள் வாசல்கள் வழியாக செவ்வொளி தீச்சுவாலை போல தெரிந்தது. ”நெய்விளக்கா?” என்றார் தாமஸ். ”இல்லை. நான் ஹாலந்தில் இருந்து வரவழைத்த விளக்குகள். நெய்விளக்கு போலவே ஒளியை அமைக்கலாம். ஒளி சன்னமாக அசைவதுபோலக்கூட வைக்கலாம்.”

தானாகத் திறந்த முகப்பு வாசலைத்தாண்டி உள்ளே சென்றேன். வீட்டு வாசலில் நீலிமா நின்றிருந்தாள். அவள் இளம்சிவப்பு சேலை அணிந்திருந்தாள். செவ்வொளியில் அவள் ஆறடி உயரமான தழல் போலிருந்தாள். 

[முற்றும்]

முந்தைய கட்டுரைபனிமனிதன்
அடுத்த கட்டுரைவெட்டம் மாணியைப்பற்றி