தமிழிலக்கியம் ஒருவிவாதம்

நகைச்சுவை

மயிலேறும்பெருமாள் யானையைப்பற்றி சேர்த்த தகவல்களை அவரால் சுமக்க முடியவில்லை. இலக்கிய அரட்டைகளில் மட்டுமல்லாமல் மேடைகளிலும் அவர் யானையைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தார். ‘அணுஒப்பந்தமும் ஆக்க இலக்கியமும்’ என்ற தலைப்பில் முன்னேற்ற எழுத்தாளர் சங்கம் நடத்திய இலக்கியக்கூட்டத்திலும் அவர் யானையைப்பற்றியே பேசினார். அதற்கு முன்னர் ‘டங்கலின் தடங்கல்’ என்ற தலைப்பில் அவர்கள் நடத்திய இலக்கிய ஆய்வுக்கூட்டத்திலும் அதையே பேசியிருந்தார். ஆகவே ஒருவாறாகத் துணிந்து அதன் பொதுச்செயலாளர் தமிழரசன் – செம்மொழிநிதி கிடைத்தபின் தமிழரசனார்- அவரை தோளில் கைபோட்டு அழைத்துச்சென்று டீக்கடையோரமாக ஒதுக்கி பேசலுற்றார். செங்கொடி வட்டாரத்தில் டீக்கடையோரம் ஒதுக்குவது என்றாலே அறிவுரை என்பதனால் மயிலேறும்பெருமாள் நள்ளிரவில் கதவுதட்டப்பட்ட ஸ்டாலின்ரஷ்ய எழுத்தாளர் போல குலைநடுங்கலானார். ஆனால் தமிழரனார் அவரது பேராசிரியர் வருணனாரைப்போல தத்துவமேற்கோள் ஏதும் காட்டமாட்டார் என்பதை எண்ணி சற்றே ஆறுதலுற்றார்.

தமிழரசனார் மெல்ல டீயைக்குடித்தபின் நாலைந்து பொது விஷயங்களுக்குப் பின் பேச்சை தொடங்கினார். ”அதிலே பாருங்க தோழர், நீங்க யானையைப்பற்றி சூப்பரா பேசறீங்க. யானையைப்பற்றி நம்ம தரப்புக்கு ஸ்டிராங்கான அபிப்பிராயம் இருக்கு. நல்ல முற்போக்கான விலங்கு. அதனாலதான் மாயாவதியை பிரைம்மினிஸ்டரா ஆக்கலாம்னு சொல்றோம்…” என்று ஆரம்பித்தார். ”ஆமா”என்றார் மயிலேறும்பெருமாள், ஊகங்களை நிகழ்த்தியபடி. ”யானையை நாம சும்மா விடக்கூடாது தோழர். உங்களுக்குத் தெரியுமோ இல்லியோ மாஸ்கோவிலேகூட அந்தக்காலத்திலே ஒரு யானை இருந்தது…”என்று மேலும் புதரை அடித்த பின்னர் ”..எதுக்குச் சொல்றேன்னா நீங்க ஏன் யானையப்பத்தி ஒரு நாவல் எழுதப்பிடாது? இப்ப இங்க உள்ள மதவாதிகள் யானையை அவங்களோட மிருகம்னு ஒரு வரலாற்றுப்புரட்டை செய்ய ஆரம்பிச்சிருக்காங்க…வரலாற்றை அப்டி வேற ஆளுங்க புரட்டுறதை நாம அனுமதிக்கலாமா?” மயிலேறும் பெருமாளும்  ” ஆமா, பின்ன வேற என்னத்துக்கு நாம கெடந்து பாக்கோம்” என்று ஆணித்தரமாகவே சொன்னார்.

”அதனால நீங்க என்ன பண்றீங்க, ஒரு நல்ல நாவலை எழுதிடறீங்க.. இப்ப நீங்க சொன்ன விசயங்கள்லாமே சூப்பாரா இருக்கு. ஒருநாவலுக்கு இவ்வளவுபோரும். இப்ப சொன்ன எல்லாத்தையும் ஒண்ணொண்ணா சேத்து ஒருநாவலை எழுதிடுங்க” மயிலேறும் பெருமாள் சற்று பிரமித்துவிட்டு ”…இதிலே கதை ஒண்ணும் இல்லியே…”என்றார். ”என்ன தோழர், எவ்ளவு காலமா நீங்க நம்ம கூட இருக்கீங்க? இது தெரியாம என்ன? எந்த விசயத்திலயும் ஒரு மொதலாளியைக் கொண்டாந்துட்டோம்னாக்க உருக்கமான கதையா ஆயிடுமே…”. ”இல்ல, நவீன எலக்கியவாதிங்க என்னமாம் சொல்லுவானுக…அவனுகளுக்கு தொழிலாளிண்ணா அவ்ளவா பிடிக்கிறதில்லை” ”அப்ப அவனை கொஞ்சம் அந்தப்பக்கமா நகத்துங்க…விளிம்புநிலைக்குபோயிருவான்…போரும். ரொம்ப நகத்திரப்பிடாது, அப்டியே மறுபக்கம் விழுந்திட்டாண்ணாக்க அது வ்ம்பு….”.  மயிலேறும்பெருமாள் இன்னும் விலகா ஐயத்துடன் ”கோட்பாட்டை வச்சு கொடைவானுக பாவிக….” என்றார் . ”அதுக்கும் நாம வழி கண்டுபிடிச்சாச்சே…அஞ்சுபாராவுக்கு ஒருபாராவை எழுவாய்பயனிலையை திரும்பிப்போட்டு கொழப்பமா எழுதிட்டா அவனுக அங்கேயே மோந்துட்டு கெடப்பானுக… நாம கோடாங்கிய அவனுகமேலே ஏவி விட்டிருக்கோம்ல? வக்காளிக துண்டக்காணம் துணியக்காணம்னுல்லா ஓடுதானுக? சும்மா எழுதுங்க தோழர். என்னமோ சுவரெழுத்து, துண்டுபிரசுரம் எழுதறது மாதிரி மலைச்சு போயிட்டீங்க… நாவல்தானே?” என்று மெல்ல மயிலேறும் பெருமாள்ளை வழிக்குக் கொண்டுவந்தார். மயிலேறும் பெருமாள் சிந்தனைக்கனத்துடன் மேலுமொரு வடை எடுத்துக் கொண்டார்.

தமிழரசனார் மெல்ல ”…அதனால இனி நாவல் எழுதுற வரைக்கும் விசயங்களை வெளியே விடாதீங்க”என்று எச்சரித்துவிட்டுச் சென்று தன் இளவலும், உறுதியான சீன ஆதரவாளருமான ‘சூ.வெங்’ கிடம் ”அப்பாடா, இனி ஒருவருசம் நிம்மதி…ஆள் வாயில கார்க்கை வைச்சாச்சு”என்றார். ”அதுக்கப்புறம்?”என்றா சூ.வெங் கவலையுடன். ”அப்ப நாம ராகுல்காந்தியோட கரங்களை வலுப்படுத்துறதிலே மும்முரமா இருப்போமே…அப்ப பாத்துக்கலாம்…”.ஆனால் அவர்கள் மயிலேறும்பெருமாளை குறைத்து மதிப்பிட்டிருந்தார்கள். அடுத்தவாரமே எண்ணூறு பக்க கைப்பிரதியுடன் மயிலேறும் பெருமாள் அவர்களைத்தேடிச்சென்று ‘அம்பாரியானை’ என்ற தன் நாவலை கொடுத்துவிட்டார். அதை அப்படியே அமுக்கிவிடுவதற்கு ஒரே வழி அதை அச்சிடுவதுதான் என்ற அனுபவவிவேகம் அவர்களுக்கு இருந்தமையால் நாவல் உடனே ஆஸ்தான பிரசுரத்தில் அச்சாகி நூலக உத்தரவு பெற்று அடுக்குகளுக்குள் ஒளிந்துகொண்டது. தீக்கொடி, செம்மாலை போன்ற கட்சி இதழ்களில் மதிப்புரைகள் வழக்கமான சொற்றொடர்களுடன் வந்தபின் அத்தரப்பினர் அனைவருக்கும் அதை படிக்கவேண்டிய தேவை இல்லை, உறுதியாக ஆதரித்தால் மட்டும் போதுமானது என்ற தெளிவும் உருவாகிவிட்டிருந்தது.

இந்நிலையில் ‘புதியபண்பாடு’ என்ற கலாச்சார இதழில் ‘தமிழ்நெஞ்சன்’ என்பவரால் எழுதப்பட்ட நெடுங்கட்டுரை ஒன்று மயிலேறும் பெருமாள்ளின் நாவலைப்பற்றி எழுதப்பட்டிருந்தது. பதினேழு பக்கம் நீளமுள்ள அக்கட்டுரையில் அதிகமாக பயன்படுத்தப்பட்டிருந்த மொள்ளமாரித்தனம், வேசித்தனம், மாமாவேலை, மயிரைப்பிடுங்குதல், சிரைத்தல், மலக்கிடங்கு போன்ற கலைச்சொற்களைத் தவிர்த்தால் அது ஒன்றரைப்பக்கக் குறிப்பாகச் சுருங்கியது. அப்படி கல்நீக்கி மணிநோக்கி வாசிக்கும் பழக்கம் இருந்த மயிலேறும் பெருமாள் கட்டுரையை படித்து உறைந்துபோனார். ”இந்திய உழைக்கும் மக்களையும் அடித்தட்டினரையும் சிறுவணிகர்களையும் சுரண்டிக்கொழுக்கும் அம்பானியை ஆதரித்து வெளிப்படையாகவே ஒரு நாவலை முற்போக்கு இயக்கத்தினர் என்று சொல்லிக்கொண்டிருக்கும் ஒருவர் எழுதியிருப்பதை கண்டாவது அந்த அமைப்பில் உள்ள தோழர்கள் மெய்யான உண்மையை அறியவேண்டும். பாவிகளே , விரியன் பாம்புக்குட்டிகளே, மனந்திரும்புங்கள் புரட்சி மீண்டும் வருகிறது”என்று அக்கட்டுரை சொன்னது.

மயிலேறும் பெருமாள் கட்டுரையுடன் தமிழரசனாரை நோக்கி ஓடினார். அவர் அப்போது வீட்டுத்திண்ணையில் சட்டை இல்லாமல் படுத்துக் கொண்டு ‘நெடுநல்வாடையில் நெடிய சிந்தனைகள்’ என்ற நூலை வாசித்துக் கொண்டிருந்தார் ”வாங்க தோழர், மார்க்ஸியச்செம்மொழி இயங்கியல்நோக்கிலே பாத்தோம்னாக்க நெடுநல்வாடைகூட ஒரு முற்போக்கு நூல்தான்…ஏன்னா பரத்தை சொல்றா என் கொங்கையிலே…”என்று அவர் ஆரம்பிக்கவும் ”..அவ கெடக்கா தோழர், இதைப்படிங்க…இந்த அக்குருமத்துக்கு அளவே இல்லியா?”என்றார் மயிலேறும் பெருமாள். தெய்வீகப்புன்னகையுடன் அதைப்படித்த தமிழரசனார் ”என்ன தோழர் இதுக்கா பயப்படுறீங்க? அவுங்க ஒரு சா•ப்ட்வேர் வச்சிருக்காங்க. கட்டுரையை எழுதினதுமே அதை ஆன்பண்ணுவாங்க… மூணுவார்த்தைக்கு பதிமூணு வார்த்தைங்கிற மேனியிலே அதுவே கெட்டவார்த்தைகளை போட்டு ரொப்பிடும்…”என்றார் தமிழரசன். ”…அது என் கண்ணுலேயே படலே தோழர். இந்தமாதிரி என்னைய அம்பானி ஆளுண்ணு சொல்லிட்டாங்களே வீணாப்போனவிங்க…நான் மொபைல் கூட ஏர்டெல்லுதான் தோழர் வச்சிருக்கேன்…”

தமிழரசனாருக்கும் அது புரியவில்லை. அவர் கட்டுரையை மீண்டும் படித்தார்.  ”.. ஏட்டி ஒரு டீ குடு” என்று உள்ளே நோக்கிச் சொல்லிவிட்டு மீண்டும் படித்தார். ஒருபிடியும் கிடைக்கவில்லை. ”அநியாயமா சொல்றதானாக்கூட நாம ஒரு நியாயத்துக்குக் கட்டுப்பட்டுதானே தோழர் சொல்றோம்…இதெல்லாம் ரொம்ப ஓவர்..”என்று மயிலேறும் பெருமாள் புலம்பினார். டீ கொண்டுவந்த மனைவியிடம் தமிழரசனார் ”…பாத்து, மொள்ளமாரி கொண்டுவாரது…”என்று சொல்லிவிட்டு சிந்தனையுடன் மயிலேறும்பெருமாளைப்பார்த்தபோது தான் ஏதோ தப்பாகச் சொல்லிவிட்டோமா என்ற எண்ணம் வந்த அதே கணத்தில் அவருக்கு பிடிகிடைத்தது. ”ஆ!”என்றார். ”தலைப்பைப்பாருங்க தோழர்…அந்தாள் நாவல் தலைப்பை மட்டும்தான் படிச்சிருக்கான்.அதையும் தப்பா படிச்சிட்டான்!”என்றார். நாவலைப்பற்றி சொல்லுமிடமெல்லாம் கட்டுரையில் ‘அம்பானியானை’ என்றுதான் இருந்தது. தமிழரசனாரின் மனைவி ”…இந்த கண்ராவியையெல்லாம் படிக்காதீங்கன்னு சொன்னா கேக்குதியளா? பரத்தை செவத்தைன்னு இப்ப வாயில வாறதெல்லாம் நாலுபேருகேட்டா நாத்தமால்ல நாறுது…”என்று நூலை எடுத்துக் கொண்டு சென்றாள். தமிழரசனார் சிரித்து ”ஒண்ணுமில்லை தோழர், கலித்தொகையை அவகிட்ட படிச்சு காட்டினேன்… பரத்தை தலைவனோட புதுப்புனல் ஆடுறப்ப அவனுக்கு முற்போக்கா ஒண்ணு பண்றா…” என்றார்.

”இப்ப என்ன செய்றது தோழர்? டாட்டான்னு சொன்னாக்கூட பரவால்லை, அவரு நம்மாளு. அம்பானீண்ணுல்லா சொல்லிட்டான்?” என்று மயிலேறும் பெருமாள் இடைமறித்து பிலாக்காணம் வைத்தார். தமிழரசனார் மோவாயை தடவினார். ”ஒரு கண்டனக்கூட்டம் போட்டா என்ன தோழர்?” என்றார் மயிலேறும் பெருமாள். ”சேச்சே அது வேலைக்காவாது. நம்மாளுகளே சேம்சைட் கோல் போட்டுருவானுக. பெரியநாவல்னாலே பூர்ஷ¤வாத்தனம்னு அண்னைக்கு செல்வரசன் சொன்னார்..” என்றபின் ”ஒண்ணு பண்ணுவோம் தோழர், ஒரு விசயத்தை மறுக்கணுமானா அந்த விசயத்தை யாருக்குமே புரியாம ஆக்குறதுதான் நல்ல வழின்னு மார்க்ஸ் சொல்லியிருக்கார்…” என்றார் தமிழரசனார். ”அதனாலதான் அவரு இப்ப  பெரியாரை விட்டுட்டு காந்தியைப் புடிச்சுகிட்டாரா? பாவம் காந்தி…”. ”…இது பழைய மார்க்ஸ், மூலதனம் எழுதினதைப்பத்தி  சொன்னது…நாம ஒரு விமரிசனக்கூட்டம் போடுவோம். எல்லா நவீன எழுத்தாளர்களையும் கூப்பிடுவோம்…அவங்க பேசி முடிச்சப்பிறகு உங்களுக்கே உங்க நாவலிலே என்ன இருக்குன்னு கண்டுபிடிக்க முடியாது…”. ”சின்ன நாவலா எழுதினா படிச்சுடறாங்க.  நீலமேகன் மாதிரி தலைக்காணியா எழுதினா படிக்காமலே பாராட்டிட்டு போய்ட்டே இருப்பாங்கன்னு தப்புக் கணக்கு போட்டுட்டேன் தோழர்…இப்டி அடிவயித்திலே அடிச்சிட்டானுங்க…” என்று மயிலேறும் பெருமாள் புலம்பியபடியே இருந்தார்.

திட்டமிட்டபடி மதுரையில் நாவலுக்கு விமரிசனக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. பொது அமைப்பான ‘மூர்த்தன்யம்’ சார்பில் அதன் அமைப்பாளர் ‘கார்க்கிபுத்ர ராகுலன்’ ஏற்பாடுசெய்திருந்த நிகழ்ச்சியை தங்கள் குடும்பவிசேஷம்போல எடுத்துக் கொண்டு கவிஞர் ‘வேதாள’ரும் அவரது மூன்று குடிப்பொடிகளும் இரண்டுநாள் முன்னரே வந்துசேர்ந்தனர். ஊரிலிருந்தே போதையில் கிளம்பி வழியிலெல்லாம் குடித்து பேருந்து நிலையத்தில் மீண்டும் குடித்து ஆட்டோவில் ஏறி குடித்தபடியே வந்து ராகுலன் வீட்டுமுன் இறங்கினர். பிற மூவரும் ஆட்டோவிலேயே குடித்தபடி அமர்ந்திருக்க வேதாளமண்ணாச்சி நதியின் கரையோரம் நாணல் போல நெளிந்தாடி ராகுலன் வீட்டுக் கதவைத்தட்டி அவர் திறந்ததும் ”என்னடா மசிரு கூட்டம் நடத்துறே? நான் நடத்துறேண்டா கூட்டம் டேய்..” என்றார். ராகுலன் ”பைசா இல்ல அண்ணாச்சி…சத்தியமா பைசா இல்லை” என்று சொல்ல ”..டேய் வெளையாடாதே…கவிதையைப்பத்திப் பேசுவோமா? விடியவிடிய பேசுவோமா?”என்றார் வேதாளமண்ணாச்சி. அந்த ஆயுதத்தை எதிர்கொள்ளும் திறன் தமிழகத்தில் எவருக்கும் இருப்பதில்லை என அவர் அறிவார். குலைநடுங்கிய ராகுலன் இருநூறு ரூபாயை அவரிடம் கொடுத்து ”கொல்லாதீங்கண்ணாச்சி…பிள்ளகுட்டிக்காரன்…”என்று கண்ணீர் மல்க கைகூப்பினார். ”அமோகமா இரு”என்று அண்ணாச்சி ஆசீர்வாதம் அளிக்க ஆட்டோவின்உள்ளே இருந்த சரஸ்வதிமணாளன் ”அந்த தேவ்டியாபையனிட்ட என்ன பேச்சு, பைசாவ வாங்கினோமா போனமாண்ணு இருக்க வேண்டாமா?” என்றார். ஆட்டோக்குழு கிளம்பி நகரில் வாழ்ந்த பதிமூன்று இலக்கியவாதிகளிடம் கப்பம் வசூலித்து முடித்து விடிகாலைவரை டாஸ்மாக்கில் சலம்பிவிட்டு இளம்கவிஞர் ‘எட்டடிசுடலையன்’ தங்கிய அறைக்குள் ஆக்ரமித்துப் படுத்து சிறுநீர் கழித்து அதன்மேலேயே தூங்கியது.

நிகழ்ச்சி தொடங்கியதுமே வேதாளமண்ணாச்சி குளித்து ஈரக்கூந்தல் ஆற்றி நெற்றியில் நீறணிந்து சிவப்பிழம்பாக சீடர் சூழ வந்து அமர்ந்திருந்தார். அவரைத்தொடர்ந்து எல்லாக் கூட்டங்களுக்கும் முன்னதாகவே சென்றுவிடும் அரங்க.ஆடலரசன் கையில் தோல்பையுடன் வந்து ராணுவமுக்கியத்துவம் கொண்ட இடத்தை தேர்வுசெய்து கொண்டு அமர்ந்து ஒருமையுள் ஆமைபோல தன் ஐம்புலன்களையும் உள்ளிழுத்துக் கொண்டார்.  நிகழ்ச்சியின் முதல்பேச்சாளரான பேராசிரியர் வருணன் ‘அம்பாரியானை’ சமூகயதார்த்தத்தைச் சொல்லக்கூடிய முற்போக்கான படைப்பு என்று சொன்னார். யானையைப் பற்றி இந்துத்துவ அலை ஒன்று கிளப்பிவிடப்பட்டிருக்கிறது. யானைதான் மிருகங்களில் உழைக்கும் வற்கம், அதற்குத்தான் துதிக்கை இருக்கிறது. யானையால் மட்டுமே தன் கையை தலைக்குமேல் தூக்கி கோஷம்போடமுடியும். அப்பேற்பட்ட மிருகத்தை காசிரங்கா காட்டில் கூடிய வகுப்புவாதக்கும்பல் தங்கள் சின்னமாக ஆகியதை தோலுரிக்கும் ஒரு அரிய இலக்கியப் படைப்புதான் அம்பாரியானை என்ற தருணன் அதன் பல பகுதிகளை கண்ணாடிபோட்டுக்கொண்டு குனிந்து வாசித்து முடித்தபோது டீ வந்துவிட்டிருந்தது. டீக்காக அனைவரும் கலைந்தபோது வேதாளமண்ணாச்சியும் பரிவாரமும் கூட்டத்தில் ஊடுருவி பணம்சேர்த்து வெளியே கிளம்பினார்கள். அரங்க.ஆடலரசன் அண்ணாச்சியை மட்டும் சந்தித்து வாழ்த்துக்களைச் சொன்னார். அடுத்துப்பேசிய நவீன எழுத்தாளர் பால்வண்ணன் அம்பாரி என்பது ஏழைகள்மீது ஏற்றிவைக்கப்பட்டிருக்கும் சுமை என்று சொல்லி அந்த எளிமையான யானை அம்பாரியைச் சுமந்து கஷ்டப்படுவதை வாசித்தபோது தான் கண்கலங்கியதாகச் சொல்லி அப்போதும் சற்றே கண்கலங்கினார்.

போதையில்லாதபோது நிகழ்வதை போதையில் புரிந்துகொள்வதும் போதையில் நிகழ்வதை போதையில்லாதபோது புரிந்துகொள்வதும் வேதாளமண்ணாச்சியின் வழக்கம். பிறர் எந்நிலையிலும் எதையும் புரிந்துகொள்வதில்லை. அவர் மீண்டும் அரங்குக்கு வந்தபோது பின்அமைப்பியலாளரான முத்துஅறிவழகன் பேசிக்கொண்டிருந்தார். நிறுத்தி நிதானமாக பல கோட்பாடுகளைப் பேசிக்கொண்டே வந்தவர் ஒரு இடத்தில் மூச்சுவாங்கியபோது வேதாளமண்ணாச்சி எழுந்து ”இப்ப யானையோட பின் அமைப்பியல்னு சொன்னீங்க. யானையோட பின் அமைப்புக்கு கஜபிருஷ்டம்னு சொல்லுவாங்க. சில கோயில்களின் கருவறைகளிலே அந்த அமைப்பு உண்டு…”என்றார். ”இல்லண்ணாச்சி நான் இங்க கட்டுடைச்சுட்டு இருக்கேன்” என்றார் முத்துஅறிவழகன். ”அடப்பாவி… வண்டிக்காகாளயத்தான் எங்கூர்லே கட்டுடைப்பாங்க…” முத்து அறிவழகன் சற்றுநேரம் பிரமித்து நின்றபின் ”நான்  கொஞ்சம் பேசுறேனே அண்ணாச்சி”என்றார். ”பேசு..ஆனா இனிமே முன் அமைப்பைப்பத்தியும் பேசு…முன் அமைப்புதான் தமிழ் பண்பாடு…மத்தது பஞ்சாபிப் பண்பாடு” ”இது அதில்ல அண்ணாச்சி, இது பின் நவீனத்துவம்…” ”ஏன் முன் நவீனத்துவத்தைப்பத்தி பேசப்பிடாதோ? நாயுடுஹால்காரன் கொண்டுவந்தானே…”. ” சரி, பேசுறேன் அண்ணாச்சி” ”நல்லாஇரு”என்று வேதாளமண்ணாச்சி அமர்ந்துகொண்டார்.

நவீன விமரிசகர் பே.செங்குட்டுவன் ”யானையின் பண்பாட்டுக்கூறுகளின் தரவமைப்புகளில் கட்டமைக்கப்பட்டிருக்கும் ஆதிக்கப்பண்புக்கூறுகளில் இருந்து எழுகின்ற இருத்தலியல் ஈரடிப்புகளின் சாராம்சத்திலிருந்து நுண்ணோக்கு இயங்கியல் அணுகுமுறைமூலம் கட்டமைக்கப்பட்ட எதிர்ப்புக்கூறுகளின் பன்னிலையும் தன்னிலையும் செறிவுறுத்தும் கலாச்சார ஊடறுப்புகளின் குறிகளும் அவற்றின் முரண்படும் இயங்கியலும் அறிவார்ந்த தளத்தில் உருவாக்கும் அதிர்வுகளை பல்பகுப்புவாதம் மற்றும் டில்யூஸ் கட்டாரி முன்வைக்கும் ஊடகப்பகுப்புமுறைமையைக் கொண்டு நோக்கும்போது மொழியியலில் தெரிதா முன்வைத்த நழுவல்வாதமும் •பூக்கோவின் தழுவல்வாதமும் இணைந்து மிரட்டும் அறிவார்ந்த கட்டமைப்புக்குள் நிகழ்வதென்ன என்பதை நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டியிருக்கும் இந்த காலகட்டத்தில் கிராம்ஷி கூறுவதென்ன….”என்ற வகையில் வாசித்துச் சென்றபோது சரஸ்வதிமணாளன் உற்சாகமானார். பொதுவாக அவர் பத்தாம்வகுப்பு துணைப்பாடத்திற்கு அப்பால் இலக்கியம் எதையும் வாசித்ததில்லை என்றாலும் அவருக்கு ஊடுருவவேண்டிய சந்து தெரியும். பெ.செங்குட்டுவன் பேசிமுடித்ததும் அவர் எழுந்து ”இப்ப இந்த சபையிலே ஒரு தத்துவார்த்த கருத்து பேசப்பட்டிருக்கு. ஈரடிப்புகளின் சாராம்சத்தில இருந்து கலாச்சார ஊடறுப்பு வாறப்ப நுண்ணோக்கு இயங்கியல் என்ன செய்யுதுண்ணாக்க தெரிதா முன்வைத்த நழுவல்வாதம் அதுக்கு பக்கத்தில நிண்ணிட்டிருக்கு. அதேசமயத்திலே பன்னிலையும் தன்னிலையும் ஆதிக்கப்பண்புக்கூறுகளிலேருந்து என்ன செய்றதுண்ணு பாக்காம இதை இங்க பேசுறதில அர்த்தமில்ல…இதையெல்லாம் யோசிச்சோம்னாக்க பல்பகுப்புவாதம் மற்றும் டில்யூஸ் கட்டாரி இதெல்லாம் வேறமாதிரி ஆயிரும்…”என்றார்.

அதிதீவிர முகபாவனையுடன் சிந்தனையின் திணறலுடன் அவர் பேசி முடித்தபோது அவை தீவிரம் கொண்டது. தான்பேசியசொற்களே வேறுவகையில் ஒலிக்கின்றன என்பதை  பே.செங்குட்டுவன் உணர்ந்தாலும்  அந்த சபையில் தனக்கு மட்டும் தீவிரமான எதிர்வினை ஒன்று உருவானதை நிராகரிக்க விரும்பாமல் ”நீங்க சொல்றதுமாதிரிகூட எடுத்துக்கிடலாம்னாலும் மேல்கட்டுமானம் அடித்தளத்தை எப்டி பாதிக்கிறதுன்னு எடுத்துக்கிட்டு இயங்கியல் ரீதியா ஹெகிமனியோட பல்பரிணாமத்தை சூட்சுமுமா நாம பாக்கிறப்ப அதுக்கு வேற தளங்களிலே பெரிய பொருளிருக்குன்னு தோணறது”என்றார். ‘வெள்ளக்காரிக்க பல்லைப்பத்திப் பேசுதானுக’ என்று மயிலேறும்பெருமாள் புரிந்துகொண்டார். ” அப்டிப்பாத்தாக்கூட ஹெகிமனி எங்கயும் இருக்கும்னாலும் சூட்சுமம் அதுக்கு வேற பரிணாமங்களை குடுக்கிறத நாம கவனிச்சாத்தான் இங்க நாம மேல்கட்டுமானத்தைப்பத்திப் பேசமுடியும்…”என்றார் சரஸ்வதிமணாளன். அந்த உரையாடல் ஓர் உடைந்த கண்ணாடியில் தன்னைப்பார்த்துக் கொள்வதுபோல என்று  பே.செங்குட்டுவன் உணர்ந்துகொண்டார், அவரது பிம்பத்தையே அது  வேறாக மாற்றி அவருக்கே காட்டும். என்ன சொன்னாலும் சுடச்சுட பதில்பிம்பம் வந்துவிடும். போதுமான அளவுக்குப் பேசிவிட்டோமென்று புரிந்ததும் சரஸ்வதிமணாளன் ‘ரீசார்ச்’ செய்வதற்காகக் கிளம்பினார். அண்ணாச்சியும் மெல்ல தொய்ந்து நாற்காலியில் அமர்ந்தபடியே ”முன் நவீனத்துவம் பேசுடா” என்று குரல் எழுப்புவதுடன் நின்றுவிட்டார்.

கவிதைகளும் நாவல்களும் எழுதுபவரான தவம் சோமசேகர் பேசவந்தபோது வெளியே நின்றவர்களெல்லாம் உள்ளே வந்தார்கள். அண்ணாச்சி ”தமிழனுக்கு இருக்கிறது முன் அமைப்பியலுடா”என்றார். தவம் சோமசேகர் தன்னம்பிக்கையுடன் மைக்கை முகர்ந்துவிட்டு குறுந்தாடியை சரித்து அவையைப் பார்த்தபின் திடுதிப்பென்று ”இந்த நாவலிலே ஒரு யானை காட்டிலே ஒரு மரத்துல அதோட பின்பக்கத்தை தேய்க்குது. அந்த மரம்பேரு இலந்தைன்னு நாவலாசிரியர் சொல்றார். காட்டுல நிக்குற அத்தனை மரங்களிலே ஒருமரத்திலே மட்டும் யானை ஏன் அப்டி பின்பக்கத்தை தேய்க்குது? அப்டி ஒரு யானை பின்பக்கத்தை தேய்ச்சு ஒரு மரத்தை வழவழப்பா ஆக்கின பின்னாடி அந்த யானை செத்துபோய்டுத்துன்னா அப்றம் அந்த மரத்தில் இருக்கிற வழவழப்புக்கு என்ன அர்த்தம்? அந்த வழவழப்பை நாம ஒரு வகையான யானைன்னு சொல்லிடமுடியுமா? இதைத்தான் நாம யோசிச்சுப்பாக்கணும்…. அப்டி அதை யானைன்னு சொன்னாக்க காட்டுல இருக்கிற எல்லா மரத்திலயும் யானைகள் இருக்குன்னு சொல்லலாமில்லியா? அப்டியானா பாறைகளிலே இருக்கிற வழவழப்பெல்லாம் அதைவிட பிரம்மாண்டமான யானைகளா? மேகங்களை யானைன்னு நாம சொல்றோமே அதுதானா?” என்று ஆரம்பித்து விரிவாகப்பேசினார். கூட்டத்தில் பதம்கெட்ட அல்வா சாப்பிட்டதுபோல அழுத்தமான வாய் நிலவியது. அண்னாச்சி ”முன் அமைப்பியலைப்பத்திபேசுங்கய்யா” என்றார்.மயிலேறும்பெருமாள் ”ஆனைக்குண்டிக்கே இந்த அளவு உணர்ச்சிவசப்படுறானே….” என்று எண்ணிக்கொண்டார்..

கேள்விநேரத்தில் ஒரு இளைஞன் எழுந்து ”தரிசனி கதையிலே லா.ச.ரா ஒரு பொண்ணோட பின்பக்கமா போயிட்டே இருக்காரே… அந்த தரிசனம் இதிலே இருக்குன்னு சொல்லலாமா?” என்றார்.  ”அம்பாளை பின்னாலேருந்து தரிசனம் பண்ணியிருக்கார்”என்று தவம் சோமசேகர் பதில் சொன்னார். ”முன் அமைப்பியலைப்பத்திப் பேசுங்கய்யா”என்றார் அண்ணாச்சி கனவுக்குள்ளிருந்து. வீல்வேந்தன் எழுந்து ”அருமையான கருத்து. ஆழமாச் சொல்லியிருக்கார். இதுக்குமுன்னாடி இந்துத்துவாக் கொள்கையை இப்டி யாரும் தெளிவா முன்வைச்சதில்லை”என்று சிலாகித்துவிட்டு, ”இப்ப அய்யா என்ன சொல்றார்னா யானையை வினாயகப்பெருமானா கும்பிடுறது சரிங்கிறார். அதாவது பிள்ளையார் விசர்ஜன ஊர்வலங்களை நியாயப்படுத்துறார். பிள்ளையார் ஊர்வலங்களாலே நம்ம நாட்டிலே இந்துத்துவா வளருது. பிள்ளையார் தமிழன் தெய்வம் கெடையாது. வடக்கேருந்து வந்தவர். ஏன்னா வடக்கே உள்ளவங்கதான் தேவையில்லாத விஷயங்களிலே மூக்கை நீட்டுவானுக… அதுமட்டுமில்லாம திராவிடர்களுக்கு காது அப்டி நீளமா இருக்கிறதில்லை…” என்றார்.

திராவிட என்ற சொல்பட்டதும் அரங்க.ஆடலரசனின் அனைத்துப் புலன்களும் சிலிர்த்து விழித்துக் கொண்டன. அவர் எழுந்ததும்தான் அந்த இடத்தின் முக்கியத்துவம் அவைக்குப் புரிந்தது மொத்த கூட்டமும் அவரை நோக்கி திரும்ப வேண்டியிருந்தது. மணிக்குரலில் ”ஐயா அவர்கள் மிகவுமருமையாகச் சொன்னீர்கள். பார்ப்பனச் சூழ்ச்சியாலே இன்றைய தினம் திராவிடத்தமிழினத்தின் பண்பாடு அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழர்கள் திரைப்படங்களிலே முனைமழுங்கி செத்த பிணமாக திரிகிறார்கள். ஆரிய மாயையினாலே அரைகுறையாக சிலவற்றை எழுதிவிட்டு அவற்றை புத்திலக்கியமென்று சொல்லி திரிகிறார்கள் புல்லர்கள் சிலர். தமிழுக்கு மரபுண்டு. மரபுக்கு தமிழுண்டு. மரபே தமிழ். தமிழே மரபு. மரபில் எழுதிய என் இனமானக் கவிதையை இங்கே வாசிக்கிறேன்…” என்று வாசித்துமுடித்தபின் உறவுச்சம் தணிந்து மெல்ல வியர்த்து பெருமூச்சு விட்டு அமர்ந்தார். ”முன் அமைப்பியலைப்பத்திப் பேசுங்கய்யா” என்றார் அண்ணாச்சி ஆழத்தில் எங்கோ. அடுத்த நான்காவது நிமிடத்தில் அரங்க.ஆடலரசன் தன் பையுடன் பவ்யமாகக் கிளம்பிச் சென்றார். 

பின்னமைப்புவாதியான பேரா.முழுநிலவன் எழுந்து மேடைக்கு வந்து சற்றுநேரம் அமைதியாக நின்றார். பின்னர் மெல்ல ”மூன்றாமுலகச் சூழலிலேயே பின்னவீனத்துவத்தைப் பத்திப் பேசறதிலே எந்த அர்த்தமும் இல்லை. அதனாலே அர்த்தமில்லாம பேசறதுதான் பின்னவீனத்துவம்னு சொல்லலாம். [கைதட்டல்] அர்த்தங்களை கட்டவிழ்க்கிறப்ப அனர்த்தங்கள் சம்பவிக்குது. அதுதான் இலக்கியம். ஆனா இந்த நூற்றாண்டோட கலைன்னா அது இலக்கிய விமரிசனம் மட்டும்தான். இலக்கியம் இருந்தாத்தான் விமரிசனம் இருக்கமுடியும்ங்கிறது பழைய கருத்து. இலக்கியவிமரிசனத்தையே இலக்கியவிமரிசனம் பண்ண முடியும். அர்த்தம் சொற்கள் மேலே முடிவில்லாம வழுக்கிச் செல்கிறதுன்னு தெரிதா சொல்றார். வழுக்க ஆரம்பிச்சா முழுசா வழுக்கி விழுற வரைக்கும் ஒண்ணும் செய்ய முடியாது. அந்த முதல் வழுக்கல் எப்ப நடந்ததுன்னா எப்ப ஆதாமுக்கு ஏவாள் அவளோட ஆப்பிளை கொடுத்தாளோ அப்பதான். பைபிளிலே பாபேல் கோபுரத்திலே பேசிய மொழியை கடவுள் சிதறடிச்சார்னு சொல்லியிருக்கிறதை நாம குறியியல் சார்ந்து பார்க்கணும். •ப்ராய்டு அதை ஆதிபாவம்னு சொல்றார். வேணுமானா அதைநாம குளோட் லெவிஸ்டிராஸ் சொல்றதுமாதிரி சேவேஜ் மைண்டுன்னும் சொல்லலாம். எதுக்குச் சொல்றேன்னா இலக்கிய விமரிசனம் இலக்கியத்துக்குமேலே முடிவில்லாம வழுக்கிப் போயிட்டே இருக்கு…” என்று பேசிக்கொண்டே சென்றார். நடுவே அண்னாச்சி ”முன் அமைப்பியலைப்பத்திபேசுங்கய்யா” என்றார்.

அரங்கில் அப்போது சரஸ்வதிமணாளன் இல்லாமலிருந்ததனால் பேராசிரியர் தப்பினார். ”..அதனாலே மேடைப்பேச்சுங்கிறது பேசுறதை முடிவில்லாம ஒத்திப்போடுறதுதான்.”என்று அவர் முத்தாய்ப்பாக முடித்து தான் கொண்டுவந்த மிகத்தடித்த புத்தகத்துடன் போய் அமர்ந்தபோது யாரும் எதற்கும் துணியவில்லை. மார்க்ஸிய விமரிசகராக பிறரால் சொல்லப்பட்ட மருதுபாண்டியன் குத்துமதிப்பாக ”மார்க்ஸியத்திலே அந்தக் கோட்பாடு இருக்கு. உண்மையான புரட்சிங்கிறது புரட்சியை முடிவில்லாம ஒத்திப்போடுறதுதான்னு மார்க்ஸ் எங்கல்ஸிட்ட ஒரு வாட்டி சொல்லியிருக்கிறார்.” என்றார். ”ஹை!” இலக்கியச்சிற்றிதழின் ஆசிரியரான உன்னதன் ”அது அன்னியமாதல். உற்பத்தி சக்திகளிலேருந்து உழைப்பாளி அன்னியப்படுறப்ப அந்தமாதிரி நிகழுது….இப்ப சிங்குர் கிராமத்தையே எடுத்துக்கிட்டோம்னாக்க நேனோகார் உற்பத்திபண்ர சக்திகளிட்டே அங்கயுள்ள உழைப்பாளி அன்னியப்படுறப்ப புரலட்டேரியன்கள் உள்ர பூந்து..” என்று சொல்லவும்  எழுத்தாளர் சமரசன் ”மார்க்ஸியத்திலேருந்து உழைப்பாளி அன்னியப்படுறதைப்பத்தி மார்க்ஸியத்திலே சொல்லியிருக்கா” என்றார். ”உற்பத்தி சக்திகளிட்டேருந்துதானே அன்னியபப்ட முடியும்? உற்பத்தி இல்லென்னா அன்னியபப்டறதில்லியே…இப்ப ஒரு •பேக்டரிய எடுத்துகிட்டோம்னாக்க அங்க உற்பத்தி இல்லேன்னா ஒரு பிரச்சினையும் கெடையாதே…” என்றார். சர்ச்ஆர்கனை பியானோ என்று நினைத்து நூறுகவிதைகள் எழுதி தொகுப்பாக கொண்டுவந்து புகழ்பெற்றவரான ‘ஐயாஸ்’ எழுந்து கடும் கோபத்துடன்  ”…அதெப்டி சொல்லலாம்? இதை நான் கடுமையா எதிர்க்கிறேன். இது ஒரு வன்மையா எதுக்க வேண்டிய கருத்து…அன்னியமாதலுக்கு உற்பத்தி சக்திகள் எதிரா இருக்குன்னு எப்டிச் சொல்லலாம்?” என்று வெடித்தார். தூங்க ஆரம்பித்திருந்த பல திடுக்கிட்டு கண்விழிக்க ஹால் வாட்ச்மேன் உள்ளே சந்தேகமாக எட்டிப்பார்த்தார்.

முழுநிலவன் மெல்ல அசைந்து ”அன்னியமாதலைப்பத்திப் பேசுறப்ப கிராம்ஷி என்ன சொல்றார்னாக்க…”என்று ஆரம்பிக்கவும் கண்ணபிரான் எழுந்து ஆவேசத்துடன் ”கிராம்ஷியப்பத்தி ஒரு வார்த்தை இங்க பேசப்பிடாது…கொலை நடக்கும்…கிராம்ஷியைப்பத்திபேச எவனுக்குமே உரிமைகெடையாது…”என்றார். அவர் ஒருபடி மேலே சென்றுவிட்டதை உணர்ந்த கவிஞர் ‘அய்யாஸ்’ சட்டென்று சமாதானக்குரலில் ”விடுங்க கண்ணன்… அத அப்றம்பாத்துக்குவோம். நான் என்ன சொல்றேன்னா அன்னியமாதலைப்பத்திப் பேசுறப்ப நாம ஏன் காலம் வெளிக்குள்ள சுருண்டு கெடக்குறதப்பத்திப் பேசப்பிடாது? அதைப்பத்தி நம்ம நாவலாசிரியர் என்ன சொல்றார்?”. ”காலம் வெளிக்குள்ள எப்டிய்யா போச்சு? அதைப்பத்தி நாம பேச வேண்டாமா? அதிலே நெறைய பேசுறதுக்கு இருக்கு, இன்னிக்கு முழுக்க பேசலாம் ”என்று அய்யாஸின் குருநாதர் சிற்பதேவன் வெற்றிலையைத் துப்பிவிட்டுச் சொன்னார். ”இருங்க….நாவலாசிரியர் சொல்லட்டும்…நீங்க என்ன நெனைக்கிறீங்க?சும்மா சொல்லுங்க” மயிலேறும்பெருமாள் குழம்பி ”எங்கூர்ல அப்டி கெடையாது..”என்று முனக, அண்னாச்சி எங்கோ ”முன் அமைப்பியலைப்பத்திபேசுங்கய்யா” என்று குரலெழுப்பினார். 

”நாம இப்ப எதைப்பத்தி பேசிட்டிருக்கிறோம்…”என்று தவம் சோமசேகர் கேட்க அவரை நோக்கி கைநீட்டி கூவிய  வீல்வேந்தன் ”பார்ப்பனிய மாயை இலக்கியத்தை சீரழிச்சிட்டிருக்கு. பிள்ளையார் ஊர்வலத்தைப்பத்தி பேசுறவங்க மாரியம்மன் கூழ் ஊத்துறதைப்பத்தி ஏன் பேசுறதில்லை?”என்றார். ஊடே  ”காலம்னாக்க அது வெளிக்குள்ள இருக்கா இல்ல வெளிய இருக்காங்கிற கேள்விய நாம ஏன் பேசுறதேயில்ல?”என்று சிற்பதேவன் வினவ அய்யாஸ் ”காலம் வெளிக்குப்போறப்ப நிகழக்கூடிய மொழியதிர்வுகள்தான் கவிதை!”என்று ஓங்கிச்சொல்ல ”கவிதையைப்பத்திப் பேசுறப்ப ஆப்ரிக்க கவிஞர் அபே நகூம்பெ ஒண்ணு சொல்றான்”என்று யாரோ எங்கோ சொல்ல ”நாம இப்ப எதைப்பத்தி பேசிட்டிருக்கிறோம்…”என்று தவம் சோமசேகர் மீண்டும் மன்றாட அண்ணாச்சி நடுவே ”முன்நவீனத்துவத்தைப்பத்திப் பேசுங்கய்யா”என்று குரலெழுப்பினார்.

போதிய அளவுக்கு கூட்டம் நிகழ்ந்துவிட்டது என்று உணர்ந்ததும் தமிழரசன் தலையாட்ட ‘கார்க்கிபுத்ர ராகுலன்’ எழுந்து மைக்கைப் பிடித்து உரக்க ”இத்துடன் இந்த் இலக்கிய ஆய்வுக்கூட்டம் நிறைவுக்கு வந்தது”என்றார். அதை யாரும் கேட்கவில்லை. அவர் ஏழெட்டுமுறை உச்சகட்டத்தில் சொன்னபோது மெல்ல கூட்டம் அடங்கியது. ”நாம இதை அப்றமா ரூம்போட்டு விடிய விடிய பேசுவோம்”என்றபின் சிற்பதேவன் வெற்றிலைப் பொட்டலத்தை அவிழ்த்தார். மனநிறைவுடன் மயிலேறும்பெருமாள் அனைவரையும் கும்பிட்டு வழியனுப்பி வைத்தார். சிறுகுழுக்களாக விவாதித்தபடி அனைவரும் கிளம்பும்போது காலிநாற்காலிகளில் ஒன்றில் வேதாளமண்ணாச்சி மட்டும் கைமறதியாக விடப்பட்டு ”முன்நவீனத்துவத்தைப்பத்திப் பேசுங்கய்யா”என்று முனகிக்கொண்டிருந்தார்.

அத்வைதம் ஒரு விவாதம்

விசிஷ்டாத்வைதம் ஓர் அறிமுகம்

சைவசித்தாந்தம் ஒரு விவாதம்

முந்தைய கட்டுரைஎனது இந்தியா:கடிதங்கள்
அடுத்த கட்டுரைஎனது இந்தியாவைப்பற்றி….