«

»


Print this Post

அந்த தாடியும் காவியும்…


அன்புள்ள ஜெ,

உங்களிடம் இந்திய மெய்ஞான மரபு பற்றிய அறிவு அபரிதமாக இருக்கிறது. நீங்கள் அதனை பற்றிய தெளிவை நித்யாவிடம் அறிந்ததாக கூறியிருக்கிறீர்கள். உங்களிடம் அதிகமாகவே சுய ஒழுக்கமும் கடின உழைப்பும் இருக்கிறது.  எல்லாவற்றையும் விட எந்த ஒரு விஷயத்தையும் மற்றவருக்கு தெளிவாக புரிய வைக்க முடியும் ஆற்றல் உண்டு. நித்யா உளவியலாளர். உங்களை வருங்காலத்தில் நல்ல prospect உள்ள மாணாக்கராக கட்டாயம் பார்த்திருப்பார். உங்களை recruit செய்யவும் முயன்றிருப்பார் என்று தோன்றுகிறது. இந்த ஞான தேடலில் விருப்பமிருந்தும் உங்கள் இலக்கிய ஆர்வமும் அதில் சாதிக்கும் முனைப்பும் கடைசியில் அதனை மறுத்திருக்கும். உங்களுக்காக துறவுக்கு  பெயரை நித்யா தேர்ந்த்தெடுத்திருப்பார். நீங்களும் ஒரு பெயரை உங்களுக்காக தேர்ந்தெடுத்திருப்பீர்கள் என்று ஒரு பட்சி என்னுள் கூறுகிறது. என்ன, கிளி ஜோசியரிடம் உட்கார்ந்தது போல் இருக்கிறதா?

இல்லை அதற்குள் உங்களுக்கு மணமாகிவிட்டதா. மணமாகிவிட்டது என்றால் என் லாஜிக் எல்லாம் கோவிந்தா. அப்படியே மணமாகியிருந்தாலும் இது பற்றி சிந்தனை உங்களுக்கும் நித்யாவுக்கும் எழுந்திருக்கும் என நினைக்கிறேன்.  இது எல்லாம் என் சொந்த கற்பனையே. இல்லையென்றால் கூறுங்கள். அப்புறம், நடராஜ குரு மிகச்சரியாக நித்யாவை தேர்ந்தெடுத்தது போல் நித்யாவும் தனக்கப்புறம் தத்துவம் தெரிந்தவரை தேர்வு செய்திருக்கிறாரா? நீங்கள் இப்போதைய குரு மருத்துவராக இருந்து இப்போது இயற்கை மருத்துவத்தில் ஈடுபாடு கொண்டவர் என்று எழுதியிருந்தீர்கள். நீங்கள் தாடி எல்லாம் வளர்த்து அருமையான குரு ஜெயாவாக இருந்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.

அன்புடன்

சிவா

 Stride

அன்புள்ள சிவா,

நித்யா இரு முகங்கள் கொண்டவர். நடராஜ குரு உருவாக்கிய நாராயணகுருகுலத்தின் தலைவராக இருந்தார். ஆனால் அவர் அதற்குக் கட்டுப்பட்டு அதன் தலைவராக மட்டுமே இருக்கவில்லை. அவரது ஆளுமை அதைவிட பெரியது. அவர் இலக்கியவாதி, உளவியலாளர்.

நாராயணகுரு உருவாக்கிய தர்ம சபா என்ற துறவியர் அமைப்பு சாதிய அமைப்பாக உருமாறியதனால் அதில் இருந்து விலகிய நடராஜகுரு தன்னியல்பாக அலைந்து ஊட்டியில் இலவசமாகக் கிடைத்த நிலத்தில் தன் கையாலேயே தகரக்கொட்டகை போட்டு உருவாக்கிய குருகுலம்தான் நாராயணகுருகுலம்.

ஒருகாலத்தில் அதில் அவர் மட்டுமே இருந்தார். பின்னர் நித்ய சைதன்ய யதி வந்து சேர்ந்தார். பின்னர் ஜான் ஸ்பியர்ஸ். பின்னர் மங்களானந்த சாமி. மெல்ல அது வளர்ந்தது. நடராஜகுருவுக்கு உலகம் முழுக்க சீடர்கள் உண்டு.

நடராஜகுரு தனக்குப்பின் நித்யாவையும் அவருக்குப் பின் அடுத்த சீடரான முனி நாராயணப் பிரசாத்தையும் நியமித்தார். நடராஜகுருவின் மாணவர்களில் ஆக இளையவர் வினய சைதன்யா. அவரும் இருக்கிறார். நித்யா மறைவுக்குப் பின்னர் நாராயணகுருகுலம் முனி நாராயணப்பிரசாத் அவர்களின் தலைமையில் இயங்கி வருகிறது.

நாராயணகுருகுலம் சம்பிரதாயமான மடம் அல்லது ஆசிரமம் அல்ல. அங்கே நியதிகள் முறைமைகள் மூப்புவரிசை ஏதும் இல்லை. ஒரு குருவின் கீழே சில மாணவர்கள் கூடி வாழும் அமைப்பாகவே அதை நடராஜகுரு உத்தேசித்தார். நிலையான நிதி வசதி, பெரிய கட்டிடங்கள், சீடர் படைகள் ,ஆதரவாளர்கள் போன்றவை தேவையில்லை என்று முடிவுசெய்தார். அப்படியே அது ஒரு கட்டற்ற சிறு தனிக் குருகுலங்களின் கூட்டாக உள்ளது. அதில் ஆயுர்வேதம் இயற்கை மருத்துவம் முதல் பற்பல தளங்களில் செயல்படும் பலவகையான துறவிகள் உள்ளனர்.

நடராஜகுருகுலத்தில் துறவு உண்டு, அது கட்டாயம் இல்லை. வினய சைதன்யா மணமானவர். அவர் திருமணத்தை நடராஜ குருவே நடத்தி வைத்தார்.

*

நான் 1993 ல் நித்யாவைச் சந்திக்கும்போதே மணமாகிவிட்டிருந்தது. எனக்கு அப்போது சாமியார்களில் பயங்கரமான கசப்பு இருந்தது. பலவழிகளில் தேடி பலமுறை ஏமாந்து, எல்லா சாதனைகளையும் கைவிட்டு நாலாண்டுகள் ஆகியிருந்தன.

பலமுறை என் நண்பர் ஊட்டி நிர்மால்யா சொல்லியும்கூட நித்யாவை சந்திப்பதை தவிர்த்து வந்தேன். குருகுலம் முன்னால் உள்ள சாலைவழியாகச் சென்றும் கூட உள்ளே போனதில்லை. ஆனால் அவரது நூல்களை வாசித்திருக்கிறேன். இலக்கியம் உள்ளிட்ட பல தளங்களில் எழுதிக்கொண்டே இருந்த நித்யா கேரளத்தில் மிகப்பிரபலமான எழுத்தாளர்.

அதன் பின் நிர்மால்யாவின் வற்புறுத்தல் தாங்கமுடியாமல் அவரைச் சந்திக்கச் சென்றேன். அப்போது அவர் வெளியே வந்து கொண்டிருந்தார். காலைநடை. சாலையோரம் மலர்ந்திருந்த பூக்களை ஒவ்வொன்றாகப் பார்த்துக்கொண்டிருந்தார். காலை ஏழு மணி. பனி விலகவில்லை. நல்ல குளிர். நித்யா காவி நிறமான கோட்டும் வேட்டியும் அணிந்து குல்லாய் வைத்திருந்தார். அழகிய வெண்தாடி பறந்துகொண்டிருந்தது.

நான் அவரை முதலில் பார்த்ததுமே அவரால் கவரப்பட்டேன். அவர் சின்னக்குழந்தை மாதிரி இருந்தார். ஐந்து வயதுப்பையனின் கண்கள் அவை. உற்சாகம் நிறைந்த, உலகை பெருவிருப்புடன் வேடிக்கை பார்க்கிற, சிரிக்கும் கண்கள். அப்போது நித்யாவுக்கு எழுபது வயது. இரு முதுகெலும்பு அறுவை சிகிழ்ச்சைகள் செய்திருந்தார். உடலில் நீங்காத வலி இருந்துகொண்டிருந்தது.

அவருடன் நான் காலைநடை சென்றேன். அவர் வழியில் மலைவிளிம்பில் நின்றார். எதிரே  பச்சை அடர்ந்த மலையின் விளிம்பில் சூரியன்  ஒளியுடன் எழுந்தான். ஊட்டியில் சிலசமயம் உதயத்தில் தூரமலைவிளிம்பில் சூரியவட்டத்தைச் சுற்றி ஒரு மரகதப்பச்சை நிறம் தெரிவதுண்டு.  அன்று அதைக் கண்டு பிரமித்து நின்றேன்

நித்யா சட்டென்று ‘ஓம்” என்று ஆரம்பித்தார். ‘அஸதோமா சத்கமய’ என்ற புராதனமான பிரார்த்தனை. தீமையில் இருந்து நன்மைக்கும் இருளில் இருந்து ஒளிக்கும் நிலையின்மையில் இருந்து நிறைவுக்கும் கொண்டுசெல்லக்கோரும் மூதாதையின் சொற்கள். மிக நன்றாக அறீந்தவை. அந்த பிரார்த்தனையின் காலாதீதத் தன்மையை அப்போதுதான் உணர்ந்தேன்.

பின்னர் நித்யாவிடம் நெருங்கினேன். ஆரம்பம் முதலே எனக்கு குருகுல அமைப்பு மேல் நம்பிக்கை இருக்கவில்லை. என் ஐயங்களையே அதிகமும் கேட்டுக்கொண்டிருந்தேன். இலக்கியம் பற்றியே அதிகம் பேசியிருக்கிறோம். இந்து தத்துவம், மேலைதத்துவம் குறித்து பிறகு. நான் என் முதிர்ச்சி இன்மையால் அவர் என்னை கண்டித்தபோதெல்லாம் அகங்காரம் புண்பட்டிருக்கிறேன். அவர் என்னை ஏற்க ஒருவருடம் ஆகியதென்றால் நான் அவரை ஏற்க மேலும் சிலமாதங்கள் ஆயின.

மெல்ல நான் குருகுலத்துடன் நெருங்கினேன். ஆனாலும் அதன் பகுதியாக எவ்வகையிலும் ஆகவில்லை. இத்தனை வருடங்களில் எனக்கு நாராயண குருகுலத்தில் பெரும்பாலானவர்களை தெரியாது. அறிமுகமே இல்லை. பலருக்கு நான் வெறும் பெயர் மட்டுமே. இப்போது, நித்யா மறைந்த பின் தொடர்பு மிகவும் குறைவு.

குருகுலத்தில் நான் நடத்திய கவிதை விவாத அரங்குகள்தான் எனக்கும் குருகுலத்துக்குமான உறவு. நித்யா இருந்தபோதே பத்து அரங்குகள் நடத்தியிருக்கிறேன். 2008 மே மாதம் கடைசியாக. அதன் பின் நான் குருகுலம் சென்றதில்லை. கருத்தரங்கு நடத்தும்படி குருகுலத்தின் அழைப்புகள் உள்ளன. நான் பயணங்களில் இருந்தேன். இந்தவருடம் நடத்தலாம்.

குருகுலத்தில் என் வணக்கத்திற்குரிய சுவாமி தன்மயா [டாக்டர் தம்பான்] இருக்கிறார். அவர்தான் ஆயுர்வேத ஆய்வாளர். கியாகோ என்ற ஜப்பானிய சீடப்பெண்மணி இருக்கிறார். நித்யாவின் சமாதி இருக்கிறது. ஆனாலும் எனக்கு குருகுலம் மனதுக்கு நெருக்கமாக இல்லை. அது நித்யா இல்லாத வெறுமையையே எனக்குக் காட்டுகிறது. அங்கே அதிகம்பேர் இல்லை. பலசமயம் மூன்றுபேர் இருப்பார்கள். அவர்கள் பிறருடன் பேசுவதே குறைவு. வேறுலகில் இருக்கிறார்கள். எனக்கு சமாதிகளில் ஈடுபாடும் இல்லை.

நான் இந்த வருடங்களில் நித்யாவை நினைக்காத நாளே இல்லை. ஒவ்வொரு நாளும் அவர் நினைவுடன் தான் கண்விழித்தெழுகிறேன் என்றால் அது உண்மை. அவரை எண்ணி தியானிக்காமல் தூங்கியதும் இல்லை. ஆகவே குருகுலம் செல்லவேண்டியதில்லை. பிறிதொருவர் தேவையும் இல்லை.

நித்யா என்னை ஓர் இலக்கியவாதியாகவே கண்டார். எழுதுவதே என் வழி என்றார். எழுத்தின் வழியாக குவியும் ஒர் அகம் உண்டு என்று என்னிடம் சொன்னார். ஆனால் அதற்கப்பாலும் சில கற்றுக்கொடுத்தார். அதற்குள் இன்னும் நெடுந்தூரம் செல்லவேண்டியிருக்கிறது. அமைப்புகளுக்குள் என்னால் நிற்க முடியாதென்றும் எந்த பொறுப்புகளையும் சுமக்க முடியாதென்றும் என்னைச் சந்தித்த மறுநாளே என்னிடம் சொன்னவர் நித்யா.

எழுதி எழுதி தீரும் அகங்காரம் ஒன்று உண்டு. அது நிகழ்கிறதா என்று பார்ப்போம். உங்கள் அழைப்புக்கு நன்றி விசித்திரமான பூதாகரமான சட்டை போல இருக்கிறது அது

ஜெ 

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/6889/

1 comment

  1. osaravilai thangam

    ஆசானே! நானும் பாக்கன்..கொஞ்ச நாளாட்டு இதான் நடக்கு…ஆன்மீயம்,போலி ஆன்மீயம், பின்ன கும்பமேளா போறங்கேரு…கூட சிஷ்ய புள்ளய வேற…இத படிச்சா உமக்கு அந்த எண்ணம் உரப்போன்னு தோணுகு…உம்ம அகங்காரம் தீர வர எழுதும்..எவன் படிக்கானோ இல்லயோ நா படிக்கன்…ஆனா அந்த எளவு சாமியார் போஸ்ட் மட்டும் வேண்டாம்…

Comments have been disabled.