ஞானக்கூத்தன் கவிதைகள் – சத்தியத்தைத் தேடும் பயணம்
கடந்த நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் தோன்றிய முக்கியமான தமிழ்க்கவிஞர் பாரதியார். சொல்ஜாலங்களையும் சிலேடை விளையாட்டுகளையும் உவமைச்சேர்க்கைகளையும் முன்வைப்பர்களை கவிஞர் என்று கொண்டாடிக்கொண்டிருந்த கவிராயர்களுக்கு நடுவில் ஒரு காட்டுயானையைப்போல வந்து நின்றவர் பாரதியார். வெண்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா, கலிப்பா, கண்ணி, சிந்து என அவர் கையாளாத பாவகைகளே இல்லை.
ஒவ்வொரு வடிவத்துக்கும் தன் சொற்களால் புது ரத்தத்தைச் செலுத்தினார் அவர். அவர் எழுதிய கவிதைகளில் ஒவ்வொரு சொல்லும் ஓர் அம்புபோலப் பாய்ந்தது. வேகம், வெப்பம், நேசம், நெருக்கம், கொஞ்சல், வெட்கம் எல்லாவற்றையும் தன் எழுத்துகளில் கொண்டு வந்து நிறுத்தும் ஆற்றல் அவரிடம் இருந்தது. பரலி சு.நெல்லையப்பரால் வெளியிடப்பட்ட கண்ணன் பாட்டும், நாட்டுப்பாட்டும் புதியதாக அரும்பிக்கொண்டிருந்த தமிழ்க்கவிதை மாளிகைக்கு அடிக்கற்களாக விளங்கின.
தன் எழுத்தின் ஆற்றலாலேயே அவர் தன் சக கவிராயர்களிலிருந்து வேறுபட்டு தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். அவர் குடுகுடுப்பைக்காரனின் பாட்டை எழுதியபோது குடுகுடுப்பையின் சத்தம் அவர் சொற்களில் ஒலித்தது. புயல்காற்றை எழுதியபோது காற்றின் ஓங்காரம் கேட்டது. அந்த மாயமே அவருக்குரிய அரியாசனத்தை அமைத்துக்கொடுத்தது.
ஷெல்லியும் வால்ட் விட்மனும் பாரதியாருக்கு அறிமுகமானவர்களாக இருந்தார்கள். மரபான வடிவ வகைகளைத் துறந்து ஆங்கிலத்தில் கவிதை முயற்சிகள் வந்திருப்பதைப் பார்த்ததும், தமிழிலும் அத்தகு முயற்சிகளைச் சாத்தியப்படுத்தும் வேகத்தில் அவர் வசனகவிதைகளை எழுதினார். வேகவேகமாக வந்துவிழும் சொற்கள் அவருடைய வசன கவிதைகளை முன்னோடிக் கவிதைகளாக நிலைநிறுத்தின.
காற்றை வாழ்த்துகிற ஒரு வசன கவிதையில் உடல், மனம், உயிர் எல்லாவற்றிலும் உறுதியேற்றிக்கொண்டு காற்றை நமக்குத் தோழனாக்கிக்கொள்ளவேண்டும் என்று குறிப்பிடுகிறார் பாரதியார். அதன் தொடர்ச்சியாக “காற்று மெலிய தீயை அவித்துவிடுவான், வலிய தீயை வளர்ப்பான்” என்றொரு தொடரை எழுதி முடிக்கிறார். நெஞ்சுக்குள் இருக்கிற நெருப்பு காட்டுத்தீயாக இருக்குமென்றால், அதை காற்று வளர்த்து விரிவாக்கிப் பெரிதாக்கி, மேலும்மேலும் வலிமையுள்ளதாக மாற்றிவிடும் என்று சொல்லும்போது, கவிதையில் இடம்பெறும் காற்றை வேறொன்றாக மாற்றிவிடும் மாயத்தைச் செய்கிறார்.
காற்றைச் சொல்கிற சாக்கில் நமக்குள் ஊறிப் பெருகவேண்டிய நெருப்பின் உறுதியைப்பற்றி மறைமுகமாகச் சொல்ல விழைவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அவர் சொல்ல விழையும் நெருப்பு, படைப்பாற்றல் என்னும் நெருப்பா, பக்தி என்னும் நெருப்பா, தேசத்துக்கு ஆற்றவேண்டிய கடமை என்னும் நெருப்பா, அறிவு என்னும் நெருப்பா என கேள்விகளை அடுக்கிக்கொண்டே செல்லச்செல்ல, அக்கவிதையின் தளமும் விரிவடைந்தபடி செல்வதைப் பார்க்கலாம்.
குறிப்பால் உணர்த்துவதையும் கதைத்தன்மையோடு சொல்வதையும் ஒரு புதிய பாணியாகவே பாரதியார் தன் வசனகவிதைகளில் கையாண்டார். 1921 ஆம் ஆண்டில் அவர் மறைந்தபிறகு அந்தப் புதிய போக்கு, எடுத்துக் கையாளாத ஒரு வில்லாக இருட்டறையில் போடப்பட்டு விட்டது. பாரதியாரைத் தொடர்ந்து அவரையே தன் ஆசானாக வரித்துக்கொண்டு எழுதிய பாரதிதாசனுக்கு பாரதியாருக்கிருந்த மொழியின் வேகம் வசப்பட்டபோதிலும், அவருடைய உலகம் மரபுக்கவிதைகள் அடங்கிய உலகமாகவே இருந்தது. கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, ச.து.யோகியார் என முக்கியமான ஆளுமைகள் உருவானபோதிலும் அவர்களுடைய பயணமும் மரபுக்கவிதைகளின் எல்லையைத் தாண்டியதாக இல்லை.
அவர்களைத் தொடர்ந்து பலநூறு கவிஞர்கள் எழுதவந்தபோதும், அவர்கள் அனைவரும் அந்த ஆளுமைகளை நகல் செய்பவர்களாகவே இருந்தார்கள். மேலோட்டமான உவமைகளாலும் செயற்கையான சொற்றொடர்களாலும் வரிகளை நிரப்பி முன்வைப்பவர்களாகவே இருந்தார்கள். 1931 ஆம் ஆண்டில் தமிழில் பேசும் படம் எடுப்பது ஒரு தொழிலாக தொடங்கி நிலைபெற்றபோது, அதற்கு உரையாடல்கள் எழுதவும் பாடல்கள் புனையவும் பல படைப்பாளிகள் சென்றுவிட்டார்கள். கவிதைத்துறையில் இது பெரியதொரு தேக்கத்தை உருவாக்கி, பழையபடி கவிராயர்களின் பெருக்கத்துக்கு வழிவகுத்துவிட்டது.
1934 ஆம் ஆண்டில் மணிக்கொடியில் ஒளியின் அழைப்பு என்னும் தலைப்பில் பிட்சு என்கிற பெயரில் பிச்சமூர்த்தி ஒரு கவிதையை எழுதி, பாரதியாரின் வசனகவிதை மரபுக்கு மீண்டும் புத்துயிரூட்டினார்.
இதோ விரிந்து வளரும் மரம்
பட்டப்பகலில் இரவைக் காட்டும் அதன் நிழல்
மரத்தடியில் ஒரு கழுகு
ரத்தம் செத்த சோனிக்கழுகு
என்று தொடங்கும் அக்கவிதையில் குறிப்பால் உணர்த்தும் தன்மையையும் கதைத்தன்மையோடு விரித்துரைக்கும் அழகையும் நாம் காணலாம்.
ஜீவா விழியை உயர்த்து
சூழ்வின் இருள் என்ன செய்யும்?
அமுதத்தை நம்பு ஒளியை நாடு
கழுகு பெற்ற வெற்றி நமக்குக் கைகூடும்
என்று கவிதையை முடிக்கும்போதுகூட காற்று கவிதையில் பாரதியார் கையாண்ட பாணியை ஒட்டியே அமைத்திருப்பதை நம்மால் உணரமுடியும்.
கூட்டிலிருக்கும் கிளிக்குஞ்சே
கண்மூடி ஏங்காதே
உன் பஞ்சரம் சிறையல்ல
என்னும் மற்றொரு பிச்சமூர்த்தியின் கவிதையை அந்தக் காலத்தின் ஒரு சாதனை என்றே சொல்லவேண்டும். பாரதியாரின் தடத்திலேயே தன் பயணத்தை அமைத்துக்கொண்ட பிச்சமூர்த்தியின் வரிகள் அருளும் கனிவும் சுரப்பவையாகமட்டுமே இருந்தன. ஆதிப்புள்ளியான பாரதியாரின் வரிகளில் அருளும் கனிவும் மட்டுமின்றி, ஆற்றாமையும் ஆத்திரமும் எள்ளலும் நகையும் வெறுப்பும் விவேகமும் என எண்ணற்ற அலைகள் மாறிமாறி பொங்கிப் புறப்பட்டிருந்த சூழலில், பிச்சமூர்த்தி தன் வேகத்தை தானே கட்டுப்படுத்திக்கொண்டிருந்த விதம் வசனகவிதையின் வளர்ச்சிக்கு போதுமான உரமாக இல்லை. கு.ப.ரா. எழுதிய கவிதை முயற்சிகளும் பிச்சமூர்த்தியின் எழுத்துமுறையை ஒட்டியே இருந்தன. இப்படியே இருபதாண்டுகளுக்கும் மேலாக காலம் நகர்ந்துவிட்டது.
இச்சூழலில் பாரதியாருக்கு வசப்பட்ட எல்லா கோணங்களிலும் கவிதை ஆறு கட்டுடைத்துப் பாயவேண்டும் என்கிற ஆவலில் மயன் என்கிற பெயரில் கவிதைகள் எழுதிய க.நா.சு. 1958 ஆம் ஆண்டில் ஒரு மாபெரும் பிரகடனத்தோடு புதுக்கவிதைக்கான இயக்கத்தைத் தொடங்கிவைத்தார். 1959 ஆம் ஆண்டில் எழுத்து இதழ் அந்த இயக்கத்தை வெற்றிகரமாக முன்னெடுத்தது.
பாரதியாரை ஆணிவேராகக் கொண்டு நிற்கும் கவிதைமரத்தில் பிச்சமூர்த்தி ஒரு கிளை என்றால் மயன் மற்றொரு கிளை. அக்கிளையை ஒட்டி சி.மணி, பிரமிள், நகுலன், பசுவையா, எஸ்.வைத்தீஸ்வரன் என இரண்டாவது தலைமுறைக்கவிஞர்கள் உருவானார்கள். அவர்களை அடுத்து எழுதவந்த மூன்றாவது தலைமுறைக்கவிஞர்களின் அணி இன்னும் சற்றே பெரியது.
அந்தத் தலைமுறையின் முக்கியமான ஆளுமையாக ஞானக்கூத்தனைச் சொல்லலாம். ஞானக்கூத்தன் புதுக்கவிதைப் பயணத்துக்கான சாலையை இன்னும் நீளமானதாகவும் இன்னும் விரிவானதாகவும் மாற்றிவைத்தார். குறிப்பால் உணர்த்துகிற தன்மையையும் கதைத்தன்மையோடு விவரிக்கும் போக்கையும் தன் பிரதான வழிமுறைகளாகக் கொண்டு, ஒருவித அங்கதச்சுவை விரவ ஞானக்கூத்தன் எழுதிய கவிதைகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.
.
பாரதியார், பிச்சமூர்த்தி, மயன் என்கிற க.நா.சு., ஞானக்கூத்தன் மூவருடைய வழிமுறைகளும் வேறுவேறு என்றாலும், குறிப்பால் உணர்த்தும் தன்மை வழியாக பொருள்கொள்ளும் சாத்தியங்களை எல்லையற்றதாக ஆக்குவதும் கதைத்தன்மையுடன் எடுத்துரைப்பதும் பொதுவான கூறுகளாக இருப்பதை உணரலாம். தெரிந்தோ தெரியாமலோ, இம்மூவரிடமும் படிந்திருக்கும் இத்தன்மைக்கு நம் சங்கப்பாடல்களிலிருந்தே ஒரு தொடக்கம் இருப்பதை அறிந்துகொள்ளமுடியும். குறுந்தொகையிலிருந்து ஒரே ஒரு பாட்டை எடுத்துக்காட்டாகப் பார்க்கலாம்.
கூன்முண் முண்டகக் கூர்ம்பனி மாமலர்
நூலறு முத்திற் காலொடு பாறித்
துறைதொறும் பரக்குந் தூமணற் சேர்ப்பனை
யானுங் காதலென் யாயுநனி வெய்யள்
எந்தையுங் கொடீஇயர் வேண்டும்
அம்ப லூரு மவனொடு மொழிமே.
தலைவனுடனான திருமணம் தாமதமாவது பற்றி தன் தோழியிடம் வருத்தமுடன் பகிர்ந்துகொள்ளும் தலைவியின் கூற்றாக இப்பாடல் அமைந்துள்ளது. என் அம்மாவைப்போல கொடியவள் உலகத்திலேயே இல்லை, என் அப்பாதான் ஏதேனும் செய்து என் காதலனோடு சேர்த்துவைக்கவேண்டும் என்று பெருமூச்சுவிடுகிறாள் அவள். காம்போடு மலர்களை உதிர்த்துக்கொண்டே இருக்கும் முண்டகச்செடிகள் மலிந்திருக்கும் காட்டைச் சேர்ந்தவன் என் காதலன் என்கிற குறிப்பு இப்பாடலை மிகச்சிறந்த ஒன்றாக மாற்றுகிறது.
காதலைப்பற்றி ஓயாமல் வம்பு பேசி அலர் தூற்றுகிற மக்களை ஓயாமல் பூக்களை உதிர்த்துக்கொண்டே இருக்கிற செடியுடன் இணைத்துக் காண்கிற வகையிலே அந்தக் குறிப்பு அமைக்கப்பட்டிருக்கிறது. அலர் என்றால் அது முள்ளாகத்தானே உதிரவேண்டும். ஆனால் குறுந்தொகைக் காதலி அதை மலராக உதிர்கிறது என்று மாற்றிச் சொல்வதைக் கவனிக்கவேண்டும். உண்மையில் அது முள்ளாகத்தான் அவளைக் குத்துகிறது. ஆனால், அது தன் காதலைப்பற்றிய அலர் என்பதால், அவள் ஆழ்மனம் அதை ஒரு கோணத்தில் உள்ளூர ரசித்துக்கொண்டிருக்கிறது என்பதை உணர்த்தவே அலர் மலராகக் கொட்டுவதாகச் சொல்கிறாள்.
குறிப்பால் உணர்த்தும் தன்மையும் கதையாக விரித்துரைக்கும் தன்மையும் ஞானக்கூத்தன் கவிதைகள் முழுதும் நிரம்பியிருக்கின்றன. தமிழ்க்கவிதையுலகில் கடந்த நாற்பதாண்டுகளாக அவர் அளித்துவரும் பங்களிப்பு மகத்தானது. ஒரு கவிஞராக அவர் கவிதையுடன் தன்னை முழுமையாகவே ஈடுபடுத்திக்கொண்டார். ஞானக்கூத்தனின் பாதை, களம், வெளி, உலகம், ஆன்மிகம், தேடல் எல்லாமே கவிதையாகவே இருக்கிறது. கவிதையின் வழியாக அவர் தன்னையே வடிவமைத்துக்கொண்டார் என்றே சொல்லலாம். அவர் படைப்புகளில் அதற்கான சான்றுகள் ஏராளமாக உள்ளன.
-2-
தொடக்ககாலக் கவிதைகளிலேயே ஞானக்கூத்தனுடைய ஆளுமை உறுதியான முறையில் வெளிப்படுவதைக் காணலாம். கீழ்வெண்மணி என்கிற கவிதையை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.
மல்லாந்த மண்ணின் கர்ப்ப
வயிறெனத் தெரிந்த கீற்றுக்
குடிசைகள் சாம்பற் காடாய்ப்
போயின
என்ற தொடங்கும் வரிகளில் ஆற்றாமையும் ஒருவித கையறுநிலையும் வேதனையும் துக்கமும் சேர்ந்து தொனிக்கின்றன.
குருவிகள் இவைகள் என்றார்
குழந்தைகள் இவைகள் என்றார்
பெண்களோ இவைகள்? காலி
கன்றுகள் இவைகள் என்றார்
என எழுதிச் செல்லும்போது பதற்றம், கசப்பு, வெறுமை என எல்லாம் கலந்த உணர்வு வெளிப்படுவதைப் பார்க்கலாம்.
இரவிலே பொசுக்கப்பட்ட
அனைத்துக்கும் அஸ்தி கண்டார்
நாகரிகம் ஒன்று நீங்கலாக
என முடிக்கும்போது, ஆழ்ந்த வலியும் பெருமூச்சும் சுடுகாட்டை விட்டு நீங்கும்போது உருவாகும் தனிமையுணர்வும் பெருகிச் செல்வதை உணரமுடிகிறது.
சடலத்தை எரிக்கும் சடங்கு பொதுவாக சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு செய்யப்படுவதில்லை. அது ஒரு நாகரிகம். உயிருடன் இருக்கும் ஒருவரைத் தீக்கிரையாக்குவது என்பதை நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது. காட்டுமிராண்டிகளின் தண்டனைப்பட்டியல்களில்கூட அப்படி ஒரு தண்டனை இருந்ததில்லை. ஜனநாயக மண்ணில் அப்படிப்பட்ட ஒரு செயலைச் செய்ய முற்படுபவன் கொடியவன். இரக்கமற்றவன். நாகரிகமற்றவன். மனிதாபிமானமே இல்லாதவன்.
பெயக்கண்டும் நஞ்சுண்டு நீரமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர் என்று வள்ளுவர் நாகரிகத்துக்கு வகுத்த இலக்கணத்தைப் பொய்யாக்குகிற காலம் இது. எதிரிக்குத் தண்டனையாக நச்சுக்கோப்பையை நீட்டிய காலத்திலேயே, அந்த அநாகரிகத்துக்கு எதிராக நாகரிகம் என்றால் என்ன என்பதை ஓர் இலக்கணமாக வகுத்து எழுதிவைத்தார் வள்ளுவர். பசிக்காத நேரத்தில் வேட்டையைத் தவிர்க்கவேண்டுமென விலங்குக்குத் தெரிகிற நாகரிகம் கூட இன்று மனிதனுக்குத் தெரியவில்லை. அன்பும் பரிவும் இல்லை. இரக்கமும் கனிவும் சுத்தமாக இல்லை.
வண்டி இழுக்கும் நல்ல குதிரை- நெல் வயலில் உழுதுவரும் மாடு, அண்டிப் பிழைக்கும் நம்மை ஆடு, இவை ஆதரிக்க வேண்டுமடி பாப்பா என்றொரு பாரதியாரின் பாடல் உண்டு. நமக்காக உழைக்கிற, நம்மை அண்டி வாழ்கிற விலங்குகளை ஆதரிக்கும் பொறுப்பு மனிதர்களுக்கு உண்டு என்கிற உண்மையை குழந்தைகளின் நெஞ்சில் ஆழமாகப் பதிக்க விரும்பும் பாரதியாரின் ஆர்வம் இந்த வரிகளில் தொனிப்பதைப் பார்க்கலாம். அண்டிப் பிழைக்கிற விலங்குகளைக்கூட ஆதரவுடன் கவனித்துக்கொள்ளவேண்டும் என்கிற நிலையில் அண்டி நிற்கிற மனிதர்கள் எந்த அளவு ஆதரவுடன் கவனித்துக்கொள்ளப்பட வேண்டியவர்கள் என்பதை நாமே புரிந்துகொள்ளலாம். அதைத்தான் பாரதியாரின் பாடல் சொல்லாமல் சொல்லி உணர்த்துகிறது.
ஆனால், அண்டிப் பிழைக்கிற மனிதர்களை உயிருடன் கொளுத்தும் அளவுக்கு இந்த உலகம் தாழ்ந்துவிட்டது. அநாகரிகம் கொண்ட அந்த அற்ப மனிதர்கள் இந்த மண்ணிலேயே வாழ்வதற்குத் தகுதியற்றவர்கள். அனைத்துக்கும் அஸ்தி கண்டவர்கள் நாகரிகத்தின் அஸ்தியைக் கண்டறிய முடியாததற்குக் காரணம், அது வரலாற்றின் ஊடாக வெட்டும் வாளாக, சுடும் துப்பாக்கியாக, எரியும் கொள்ளியாக, இந்த மண்ணில் எளியவர்களை இன்னும் இன்னும் மாய்த்துக்கொண்டே இருக்கிறது என்பதுதான்.
ஜாலியன்வாலாபாக் பூங்கா வளாகத்தில் அப்பாவி மக்களை மாய்த்து வீழ்த்திய துப்பாக்கிச்சூடு, நவகாளியில் எரிந்த நெருப்பு. தில்லியிலே எரிந்த நெருப்பு. விழுப்புரத்திலே எரிந்த நெருப்பு. மண்டைக்காட்டிலே எரிந்த நெருப்பு. முள்ளிவாய்க்காலில் எரிந்த நெருப்பு. தினந்தினமும் ஆப்கானிஸ்தானத்தில் பற்றி எரியும் நெருப்பு எல்லாமே அந்தக் கொள்ளி மூட்டியவை. நாகரிகத்தை மிதித்துக்கொண்டிருக்கும் அநாகரிகத்தை தராசின் ஒரு தட்டிலும் அதன் தாக்குதலால் மரணமடைந்தவர்களின் சாம்பலையெல்லாம் குவித்து இன்னொரு தட்டிலும் வைத்தால்கூட அநாகரிகத்தின் தட்டு அழுத்திக்கொண்டேதான் இருக்கும்போலும். அந்த அநாகரிகம் நேற்றும் இருந்தது. இன்றும் இருக்கிறது. நாளையும் இருக்கும். காலம்தோறும் உயிர்த்திருக்கும் ஒன்றுக்கு சாம்பலை எப்படி தேடிக் கண்டுபிடிக்க முடியும்?
பரிசில் வாழ்க்கை கவிதையின் அங்கதம் மறக்கமுடியாத அனுபவம். பரிசில் வாழ்க்கை என்னும் சொல் சங்ககாலப் புலவர்கள் மேற்கொண்டிருந்த வாழ்க்கை முறையைக் குறிக்கும் சொல். அக்கம்பக்கம் உள்ள இடங்களுக்குச் சென்று சிற்றரசர்களையும் வள்ளல்களையும் சந்தித்து, புகழ்ந்து பாடி, அவர்கள் அளிக்கும் விருந்தில் திளைத்து, அவர்கள் தரும் பரிசுகளைப் பெற்று வீட்டுக்குத் திரும்பும் வாழ்க்கை முறையை அது குறிக்கிறது. இன்று ஜனநாயக நாட்டில் அரசர்கள் இல்லை. வள்ளல்கள் இல்லை. அப்படிப்பட்டவர்களைப் பாடிப் பாட்டெழுதும் கவிராயர்களும் இல்லை என நாம் நினைத்துக்கொள்கிறோம். ஆனால் வேறு வடிவங்களில் அவர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்று கவிதையால் சுட்டிக் காட்டுகிறார் ஞானக்கூத்தன்.
ஆட்சி புரிகிறவர்களைத் தேர்ந்தெடுக்கும் வாக்குச்சீட்டையும் ஆதரவுக்கரத்தையும் கொண்ட பொதுமக்களே இந்நாட்டு அரசர்கள். தம் தலைவனைத் தீர்மானிக்கும் அரசர்கள். அவர்கள் வசமிருக்கும் வாக்குச் சீட்டுகளும் ஆதரவு மனநிலையும் மாபெரும் பரிசில்கள். அதிகாரத்தை அளிக்கக்கூடிய பரிசில்கள். எளிய பேச்சாளனாக மேடை ஏறும் ஒருவனுடைய வாய்ஜாலத்தில் மக்கள் வசப்பட்டுவிடுகிறார்கள். பேச்சாளன் மெல்லமெல்ல தலைவனாகிறான். பட்டம் சூட்டிக்கொள்கிறான். அமைச்சர் பதவி அவனுக்குக் காத்திருக்கிறது. அதிகாரத்தை நோக்கிய பயணத்தில் முடிவே இன்றிப் பயணம் செய்கிறார்கள் மனிதர்கள். பேச்சாளன் ஒரு எடுத்துக்காட்டு. அதிகாரத்தை நோக்கிய பயணத்தில் இன்னும் பல வடிவங்களில் நடந்துகொண்டே இருக்கிறார்கள்.
அன்று வேறு கிழமை தொகுதியில் இடம்பெற்றிருந்த கவிதைகள் ஒவ்வொன்றும் ஏதோ ஒருவிதத்தில் மனத்தைத் தொடுபவை. அம்மாவின் பொய்கள் புன்சிரிப்பையும் ஒளிமின்னும் ஒரு தருணத்தையும் தன்னகத்தே கொண்ட கவிதை. அம்மா தன் குழந்தையிடம் பொய் சொல்வது உண்மைதான். குழந்தையின் அழுகையை நிறுத்த. குழந்தையின் ஏக்கத்தை கலைக்க. குழந்தையை நம்பவைக்க. ஒவ்வொரு பொய்க்குப் பின்னாலும் ஒரு காரணத்தை அவள் மனம் அறியும். தாய்ப்பாலை நிறுத்தல்போல தாய்ப்பொய்யை நிறுத்தலாமா என்றும் உன்பிள்ளை உன்னைவிட்டால் வேறெங்கு பெறுவான் பொய்கள் என்றும் மெல்லிய குரலில் கேட்கும்போது தொனிக்கும் விளையாட்டுப்பேச்சும் பகடியும் ஒருவித குதூகலத்தையே கொடுக்கின்றன. அ
ம்மாவின் பொய்யை சட்டென்று ஞானக்கூத்தன் அரசாங்கத்தின் பொய்வரைக்கும் இழுத்துச் சென்று நிறுத்தும்போது, முதலில் ஒரு கணம் திகைத்து நிற்கவேண்டி இருக்கிறது. வாய்மையே வெல்லும் என்ற தாரகமந்திரத்தைக் கொண்ட அரசாங்கம் ஒருபோதும் பொய் சொல்லாமல் இருக்கக் கடமைப்பட்டது. ஒவ்வொரு அரசாங்க நாற்காலியின் கால்களும் உண்மை என்னும் மரப்பலகைகளால் ஆனவை. உண்மை மட்டுமே குடியிருக்கவேண்டிய இடம் அரசாங்கம். அம்மாவின் பொய்யை ரசிக்கமுடிவதுபோல அரசாங்கத்தின் பொய்யை எந்தக் குடிமகனாலும் ரசித்துக்கொண்டு நிற்கமுடியாது.
ஸ்ரீலஸ்ரீ கவிதையில் வரும் முனிவன் பெரிய பேராசைக்காரன். முட்டாள். விளைவுகள் என்னவாகுமென அறியாத அப்பாவி. வாய்ப்பேச்சு வீரன். அடைவதை மட்டுமே காலமெல்லாம் கருதிக்கொண்டிருப்பவன். தன் முடிவை தன் வாயாலேயே தேடிக்கொள்ளும் அறிவிலி. அவன் அடைந்ததையும் இழந்ததையும் ஒரு வேடிக்கைக்கதைபோலச் சொல்லும் ஞானக்கூத்தன் ஒரு கணத்தில் நம் கவனத்தை வாழ்வின் சாரம்தான் என்ன என்கிற கேள்வியைநோக்கி எண்ணிப் பார்க்கத் தூண்டிவிடுகிறார். காட்டில் வாழ்ந்து அழிந்த முனிவனின் நிழலை நாட்டில் வாழும் கோடிக்கணக்கான மனிதர்களில் ஒருவனுடைய நிழலோடு இணைத்துக் கொள்ளும்போது கவிதை முழுமையடைவதை உணரலாம்.
விடுமுறை தரும் பூதம் எதார்த்தமான ஒரு சித்திரம். வலியும் வேதனையும் மிகுந்தது. ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒவ்வொருவரின் மனத்தையும் படம் பிடித்துவைத்த மாதிரியான சித்திரத்தை இந்தக் கவிதையில் காணலாம். தட்டுப்பொறியின் மந்திரகீதத்தில் கட்டுண்டு கிடந்த காலம் கடந்துபோக இன்று கணிப்பொறித் திரையில் அலையும் நிழல்கள் அடங்கிய காலமாக மாறிவிட்டது. ஆனாலும் பூதம் அப்படியே மார்க்கண்டேயன்போல இளமையுடன் உயிர்த்திருக்கிறது.
குப்பைத்துணை கவிதை மிகச்சிறந்த ஒரு காட்சிசித்திரம். ஜகத்சித்திரம் என்கிற தலைப்பில் பாரதியார் சிறுசிறு காட்சிச்சித்திரங்களைக் கொண்ட நாடகங்களைத் தீட்டியிருக்கிறார். அவற்றிலே இடம்பெற்றுள்ள ஒரு சித்திரம் என் மனத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டது. முழுநிலா ஒளிவீசும் ஓர் இரவு நேரத்தில் ஒரு மறைவிடத்திலிருந்து இரண்டு பாம்புகள் வெளிப்படுகின்றன. ஒன்றுடன் ஒன்று
உரையாடிக்கொண்டிருக்கும்போதே பகை முற்றிவிடுகிறது. இறுதியில் உன்னைக் கொல்லாமல் விடமாட்டேன் என்று சூளுரைத்துவிட்டு, இரண்டும் மோதிச் சண்டை போட்டுக்கொள்கின்றன. இறுதியில் இரண்டுமே இறந்துவிடுகின்றன. அவ்வளவுதான் அக்காட்சி. அப்பாம்புகளை தீமையின் படிமமாக, உறவின் படிமமாக மாற்றிமாற்றி நினைத்துக்கொள்ளும்தோறும், அக்காட்சியிலிருந்து நாம் பெற்றுக்கொள்ளும் பொருளும் விரிவடைந்தபடியே செல்கின்றன்.
ஞானக்கூத்தனின் குப்பைத்துணை கவிதையும் அப்படிப்பட்ட ஒரு சித்திரம். ஒருவர் நடந்துவருகிறார். அவருடைய காலுக்குக் கீழே ஒரு குப்பைக்காகிதச்சுருள் உருண்டு உருண்டு நகர்ந்துவருகிறது. வழித்துணையாக அவரால் அழைத்துவரப்படுபவர்போல அந்தக் குப்பைக்காகிதம் அவருக்குப் பின்னாலேயே உருண்டு வருகிறது. கவிதையின் விவரிப்பாளர் ஒரு புள்ளியில் நின்றுகொண்டு அதைப் பார்த்தபடியே இருக்கிறார். நடந்து வந்தவர் கடந்து செல்ல, அவருக்குப் பின்னால் குப்பைக்காகிதமும் கடந்துபோகிறது. தற்செயலான இரு காட்சிகளை இணைக்கும்போது, மகத்தான ஒரு அனுபவத்தை வழங்கக்கூடிய ஒரு கவிதை உருவாகிவிடுகிறது.
காலருகிலேயே உருண்டோடி வரும் காகிதச்சுருளை வெறும் குப்பை என்கிற நிலையிலிருந்து மாறி, பொறாமைக்குப்பை, பேராசைக்குப்பை, ஆத்திரக்குப்பை, வஞ்சினக்குப்பை என ஒவ்வொன்றாக பொருத்திப் பார்க்கும்போது, கவிதையின் வெளிச்சம் இன்னும் கூடுதலாகிறது. பொறாமை எப்போது உருவாகும், பேராசை எப்போது பிறக்கும், வஞ்சினம் எப்போது முளைக்கும் என்பவையெல்லாம் யாராலும் கணித்துச் சொல்லமுடியாதவை. தற்செயலான கணங்களில் உருவாகி, ஒரே கணத்தில் பேருருவம் கொண்டு, மானுடனை இயக்கும் சக்தியாக மாறிவிடுபவை. மூச்சுக்குமூச்சு கடவுள்துணை என்று சொல்கிற மானுடர்கள் உண்மையில் குப்பைத்துணையுடன் நடமாடுபவர்கள் என்பது எவ்வளவு பெரிய முரண்.
குப்பைத்துணை போலவே தற்செயல் காட்சிகளின் இணைவாக விரிவடையும் மற்றொரு கவிதை ஈ. கண்ணைக் கவரும் மார்பகங்களைப் பார்ப்பதே அரிதாகப் போய்விட்டதே என எண்ணியபடி தெருவில் ஒருவன் நடந்துகொண்டே இருக்கிறான். அவன் ஏக்கத்தை நிறைவுசெய்வதுபோல, எதிரே ஒரு மார்பகத்தைப் பார்க்கிறான். தற்செயலாக அவன் பார்க்க நேர்ந்த அந்த மார்பகத்தின்மீது தற்செயலாக ஒரு ஈ வந்து உட்கார்ந்திருக்கிறது. மார்பகத்தைவிட்டு அது அசையவே இல்லை. நிரந்தர உரிமையைத் தேடிப் பெற்றுக்கொண்டதுபோல அந்த ஈ மார்பகத்தின்மீது உட்கார்ந்திருக்கிறது. அந்த இடத்தைக் கடந்து வந்துவிடுகிறான் அவன். ஆனாலும் அந்த ஈயின் இருப்பு அவனைப் பாடாய்ப்படுத்துகிறது.
ஈ இன்னும் மார்பகத்தின்மீதுதான் இருக்குமா அல்லது போய்விட்டிருக்குமா என்று மாறிமாறி அவன் மனத்தில் பட்டிமன்றம் நடைபெறுகிறது. இறுதியில் அவனாகவே அந்த ஈ போய்விட்டிருக்கக்கூடும் என்று நினைத்து, அலைபாயும் மனத்தை அமைதிப்படுத்திக்கொள்கிறான். அதற்குப் பிறகு, மார்பகத்தை நினைத்துக்கொள்ளும் கணங்களிலெல்லாம் அந்த ஈ மொய்த்த மார்பகத்தின் சித்திரமே மனத்தில் எழுகிறது. அந்த ஈயின் இருப்பு தவிர்க்கமுடியாத ஒன்றாக இருக்கிறது.
எவையெல்லாம் குப்பையாகலாம் என்று முந்தைய கவிதையில் ஒரு கேள்வியை முன்வைத்து யோசித்ததுபோல, எது ஈயாக அலைந்து திரிந்து மொய்க்கிறது என்ற கேள்வியை முன்வைத்து யோசிக்கமுடியும்.
நினைவுகளைப்பற்றிய ஞானக்கூத்தனின் இன்னொரு சிறந்த கவிதை மனோரஞ்சிதம். ஒரு மனோரஞ்சிதப்பூவை கையில் கொடுத்து, அதை வைத்துக்கொண்டு மனத்துக்குள் எந்தப் பூவை நினைக்கிறோமோ, அதன் வாசனையை அம்மலர் தரும் என்று சொல்லும் சிநேகிதியின் அறிமுகத்தோடு தொடங்குகிறது கவிதை. அதை கையில் வாங்கிவைத்துக்கொண்டவன் தனக்குத் தெரிந்த மல்லிகை, முல்லை, தாழம்பூ, இருவாட்சி, அல்லி, தாமரை என தனக்குத் தெரிந்த பூக்களையெல்லாம் மாறிமாறி நினைத்துக்கொள்கிறான். எந்த வாசனையும் தனக்கு வரவில்லை என்று சொல்லிவிடுகிறான் அவன்.
அது ஒரு சம்பவம். அது நிகழ்ந்து பல ஆண்டுகள் நகர்ந்துவிடுகின்றன. திடீரென அந்தச் சம்பவத்தை நினைத்துக்கொண்டதும், முன்பொரு தருணத்தில் கையில் ஏந்தியிருந்த மனோரஞ்சித மலரின் மணம் பரவுவதை அவனால் உணரமுடிகிறது. மணம் தருவது மலரா அல்லது நினைவா என்னும் அழகான புதிரோடு கவிதை முடிவடைகிறது. மலர் நெருக்கமாக இருக்கும்போதுமட்டுமே அதன் மணத்தை உணரமுடியும். ஆனால் நினைவு காலதேசவர்த்தமானங்களைக் கடந்த ஒன்று. எப்போதும் மணந்துகொண்டே இருப்பது.
பகடிகள் நிறைந்த ஞானக்கூத்தனின் கவிதையுலகில் ஒரு துளிகூட பகடி கலக்காத சில கவிதைகள் இருக்கின்றன. அது ஞானக்கூத்தனின் அகவிழைவை நமக்கு அடையாளப்படுத்துபவை. அவ்வுலகத்தைச் சேர்ந்த மிகச்சிறந்த ஒரு கவிதை பட்டிப்பூ. யாரும் எடுத்துச் சூடாத பூ. பல சமயங்களில் யாரும் நின்றுகூட நோக்காத பூ. படுகையோரத்தில் துண்டுத்துணிகள் சிதறியதுபோல காணப்படுகிற பட்டிப்பூக்கள்மீது தனக்குள்ள விருப்பத்தை நேரிடையான சொற்களால் ஞானக்கூத்தன் எழுதும் விவரணைகள்மட்டுமே இக்கவிதையில் உள்ளது. அதை சிறந்த கவிதையாக்குவது, கவிதையின் தொழில்நுட்பமல்ல. மாறாக, விவரணையாளனின் விருப்பம். சின்னஞ்சிறிய ஒன்றை, கவனத்தை ஈர்க்காத ஒன்றை, உலகமதிப்பு இல்லாத ஒன்றை விரும்பும் ஆர்வம். பெரிதினும் பெரிதை கேட்கிற மானுட மனத்தை சிறிதினும் சிறிதின்மீது ஈடுபடுத்தத் தூண்டும் ஆர்வம். பட்டிப்பூவை எளிய மக்களின் படிமமாக நினைத்துக்கொண்டால், கவிதையின் பொருள்வெளி இன்னும் விரிவுடையதாக மாறும். எளிய மக்களை நெருங்கியுணரும் ஆர்வமும் பரிவும் இருப்பவராக ஞானக்கூத்தனை அடையாளம் கண்டுணர முடிகிறது.
மழைநாள் பாதை கவிதையில் நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னும் பின்னுமான இரண்டு எளிய காட்சிகள் இணைக்கப்பட்டிருக்கின்றன. முதல் காட்சி ஒரு அப்பா தன் அப்பாவுக்கு திவசம் கொடுக்கும் காட்சி. அது ஒரு மழைநாளில் நிகழ்கிறது. திவசம் கொடுத்த அந்த அப்பா மறைந்த பிறகு, அவருடைய மகன் திவசம் கொடுக்கிற இன்னொரு காட்சி. இதுவும் இன்னொரு மழைநாளில் நிகழ்கிறது. இரு தருணங்களிலுமே ஒரு நத்தை அந்த வீட்டுக்குள் ஊர்ந்துவரும் காட்சியொன்று இடம்பெற்றிருக்கிறது. மழைநாள் என்பதால் நத்தை வரலாம் என்பது கவிதையில் தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்ட ஒரு தகவல். அது, நத்தையின் வருகையை, மூதாதையர் வருகையென உணர்த்தியபடி அமைதியாக கவிதையின் வரிகளூடே ஊர்ந்துவருகிறது. நம்முடன் வாழ்ந்த உயிர்கள், உயிரைத் துறந்தபிறகும் கூட, வேறுவேறு வடிவில் நம்முடனேயே வாழ்கின்றன என்பது ஒரு புராதன நம்பிக்கையாக இருக்கலாம். ஆனால், இந்த மண்மீது உள்ள மரம், செடி, கொடி, ஊர்வன, பறப்பன, நீந்துவன, பாறை, ஆறு, ஏரி, குளம் எல்லாமே நம் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்கிற எண்ணத்தை ஊட்டுவதற்கும், வளர்ப்பதற்கும் அந்தப் புராதன நம்பிக்கை உதவும் என்றால், அது வரவேற்கப்படக்கூடிய விஷயம் என்றே சொல்லலாம்.
தன் அம்மாவை முன்வைத்து ஞானக்கூத்தன் எழுதியிருக்கும் நான் அறுபது என்னும் கவிதை, கல்லில் செதுக்கப்பட்ட ஒரு சிற்பம்போல அழகான ஒரு கவிதை. தனக்கு அறுபது வயது தொடங்குவதையொட்டி அவர் தன் தாயை நினைத்துக்கொள்ளும் தருணமே கவிதை. மனத்தை மயக்கும் படிமமோ, உருவகமோ எதுவும் கவிதையில் இல்லை. உள்முகமாக நீண்ட பயணம் செய்யத் தூண்டுகிற வகையிலான வரிகளும் இல்லை. அம்மாவைப்பற்றிய எளிய நினைவுகள். அவ்வளவுதான். மனத்தைக் குழைய வைக்கின்றன அவ்வரிகள். பொதுவாக அம்மாவை நினைத்துக்கொள்ளும் வாக்கியங்கள், பசியறிந்து உணவூட்டிய தருணங்களையும் வேடிக்கை கதைகள் சொல்லி சிரிக்கவைத்த தருணங்களையும் வெளியிடங்களுக்கு துணையாக வந்த தருணங்களையும் தன் விருப்பங்களையெல்லாம் அழித்துக்கொண்டு தன் குழந்தையின் விருப்பம் முக்கியம் என்று முனைந்து நிறைவேற்றிய தருணங்களையும் சொல்வதையே நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், ஞானக்கூத்தன் தன் அம்மாவை நினைத்துக்கொள்ளும் விதம் வித்தியாசமாக இருக்கிறது. நீட்டிய தன் கால்களில் குப்புறக் கிடத்தி சுடச்சுட தண்ணீர் ஊற்றிக் குளிக்கவைத்த தருணத்தை அவர் நினைவுகூர்கிறார். அந்த நெகிழ்ச்சி, அக்கவிதையை வாசிக்கும் ஒவ்வொரு தருணத்திலும் நம்மிடம் தொற்றிக்கொள்கிறது.
பெரிய விளக்கமெதுவும் இல்லாமலேயே, நம் மனத்தைத் தொடும் இன்னொரு கவிதை கேள்வி. நாலடி ஆழத்துக்கு மண்ணைத் தோண்டி எடுத்த பள்ளத்தில் ஒரு மண்புழு கூட ஏன் இல்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. அந்த ஆச்சரியத்தைத் தொடர்ந்து, சென்னைமாநகரத்தை விட்டு என்றைக்கு நீங்கின மண்புழுக்கள் என்று கேள்வியாக மாறுகிறது. புத்தாயிரத்தாண்டு பிறக்க இன்னும் ஒரே ஆண்டு இருந்த சூழலில் இக்கவிதையை ஞானக்கூத்தன் எழுதியிருக்கிறார். சென்னை மாநகரத்தைப் பொறுத்தவரையில் இந்த ஆண்டு மிகமுக்கியமான ஆண்டு. உலகமயமாக்கலையும் தாராளமயமாக்கலையும் தொடர்ந்து, சென்னை மாநகரம் மாபெரும் மென்பொருள் தொழில்நகரமாக மாற்றமுற்றது. சென்னையின் உள்வட்டமும் வெளிவட்டமும் மேலும் விரிவடைந்தன. வெளிவட்டத்தில் வாழ்ந்தபடி, வாழ்க்கையைத் தேடி தினந்தோறும் உள்வட்டத்தை நோக்கி வந்துவந்து சென்றுகொண்டிருந்தவர்கள், அதற்குப் பிறகு அந்த வெளிவட்ட விளிம்பையொட்டி வாழமுடியாதவர்களாக மாறினார்கள். அவர்களுடைய எளிய வருமானத்தை வைத்துக்கொண்டு அங்கே வாழ்வது சிம்மசொப்பனமாக மாறிவிட்டது. அரசு இன்னுமொரு வெளிவட்டத்தை உருவாக்கிவைத்தது. எளிய மக்கள் அனைவரும் அந்த வெளிவட்டத்தின் விளிம்புகளை நோக்கி வெளியேறத் தொடங்கினார்கள். வெளியேற்றம் அடிக்கடி நிகழ்ந்தபடியே இருந்தது. அப்படிப்பட்ட ஒரு தருணத்தில்தான் நாலடி பள்ளத்தில் கூட மண்புழு இல்லாமல் இருப்பதைக் காண்கிறார் கவிஞர். மண்புழு காணவில்லை என்று அவர் எழுதவில்லை. நகரத்தைவிட்டு என்று அவை நீங்கின என்று எழுதுகிறார். இந்தச் சொல்லாட்சிதான் மக்களின் வெளியேற்றத்தையும் மண்புழுவின் வெளியேற்றத்தையும் இணைத்துப் பார்க்கத் தோன்றுகிறது. மண்புழு மண்ணிலேயே வாழ்ந்து, மண்ணை உரமாக்கி வளமாக்குகிற ஓர் உயிர். நகரத்தின் விளிம்பிலேயே வாழ்ந்து, நகரத்தை வளமாக்கி உயரவைக்கிறவர்கள் எளிய தொழிலாளிகள். ஒரு கூட்டத்தின் வெளியேற்றத்தைப் பற்றிப் படிக்கும்போது, இன்னொரு கூட்டத்தின் வெளியேற்றத்தை நினைத்துக்கொள்ளத் தூண்டும் நல்ல கவிதை இது.
பதினைந்து அடி உயர கம்பத்தின்மேல் வைக்கப்பட்டிருந்த ஓவியத்தட்டி காற்றின் வேகத்தில் தரையில் விழுந்துவிட, தன் வீட்டுக்கு கதவுக்காகவும் குளியல்மறைப்புக்காகவும் என அதைக் கிழித்து எடுத்துச் செல்லும் உழைப்பாளிகளின் சித்திரத்தை ஞானக்கூத்தன் ஆடிக்காற்று என்னும் கவிதையில் தீட்டியிருக்கிறார். இக்கவிதை வரிகளில் பகடி இல்லையென்றாலும், மறைமுகமாக நகரத்தைநோக்கியும் நகரமாந்தர்களின் மனிதாபிமானமற்ற செயலைநோக்கியும் மெளனமான விதத்தில் பகடி செய்தபடியே இருக்கிறது.
ஓடிப்போன வெண்புறா படிக்கும்போதே மனத்தைப் பாரமாக்கிவிடுகிற ஒரு கவிதை. ஒருவனிடமிருந்து தப்பித்து ஓடிவிடுகிறது புறா. ஓடிப் போன புறா எங்கிருக்கும் என்று தெளிவாகத் தெரிந்தவன்போல, கோயில் கோபுரத்துக்கு அருகில் தேடிக்கொண்டு வருகிறான் அதை வளர்த்தவன். கோபுரத்தில் உட்கார்ந்திருக்கும் புறாவை அவன் கண்டுபிடித்துவிடுகிறான். வழக்கமாக அந்தப் புறா நீரருந்தும் கிண்ணத்தில் நீரை நிரப்பி தரையில் வைக்கிறான். பழக்கத்துக்கு அடிமைப்பட்டுவிட்ட புறா, உட்கார்ந்த இடத்திலிருந்து தத்தித்தத்தி கோபுரத்திலிருந்து இறங்கிவந்து கிண்ணத்தை நெருங்கி அலகை வைத்து நீரை அருந்துகிறது. தனது தந்திரம் பலித்த மகிழ்ச்சியில் அந்தப் புறாவைப் பிடித்துக்கொண்டு கிண்ணத்தில் இருந்த தண்ணீரைக் கவிழ்த்துவிட்டு நடந்துசெல்கிறான்.
மேலோட்டமாகப் பார்த்தால், அவன் வளர்த்த புறாவை அவன் பிடித்துச் செல்கிறான் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. ஆனால், அந்தப் புறா அவனைவிட்டு தப்பித்து வந்ததற்கு ஏதேனும் வலிமையான ஒரு காரணம் இருக்கவேண்டும் அல்லவா என்று நினைக்கும்போது அவன்மீது ஒரு சந்தேகம் உருவாகுவதை உணரமுடியும். அந்த சந்தேகம்தான் மீண்டும் மாட்டிக்கொண்ட புறாமீது ஒருவித இரக்கத்தையும் அவன்மீது ஆற்றாமை கலந்த ஒரு கோபத்தையும் பிறக்கவைக்கின்றன. என்ன மாதிரியான மனிதன், சிறிதுகூட குற்ற உணர்ச்சியே இல்லாதவன் என்று எண்ண வைக்கிறது. பழக்கத்துக்கு அடிமைப்பட்டுவிட்ட குணம் அல்லது ஈர்ப்புதான் அந்தப் புறாவை மீண்டும் வீழ்த்திவிடுகிறது. ஒருவேளை மீண்டும் அந்தப் புறா தப்பித்துச் செல்லக்கூடும். அப்போதும் அந்தப் பழக்கத்தின் அடிமைத்தனம் அகப்பட்டுக்கொள்ள வழிவகுத்துவிடும். ஓடிப்போய் அகப்பட்டுக்கொள்ளும் வெண்புறாவை, வெறும் புறாவாக மட்டுமே கவிதை காட்டவில்லை. அதை வேறொரு உயிராக நினைத்துக்கொள்வதற்கான சாத்தியத்தையும் அது தனக்குள் வைத்திருக்கிறது. கிளிக்கு போடவிருந்த வாக்கை, தன் அத்தையின் குரல் காதருகே கேட்டதுபோன்ற ஒரு பதற்றத்தில் பழக்கத்துக்கு அஞ்சி பூனைக்கு மாற்றிப் போடும் மருமகள் வாக்கு சிறுகதையின் பெண்ணின் முகத்தை ஒருகணம் நினைத்துக்கொண்டோமானால், ஞானக்கூத்தனின் புறாவுக்கும் ஒரு பெண்ணின் முகம் உருவாகுவதைப் பார்க்கலாம்.
தப்பித்துச் சென்றும் வாழமுடியாமல் பழக்கத்தின் காரணமாக மீண்டும் அகப்பட்டுத் தவிக்கும் பெண்குலத்தை நினைக்கும்போது பாவமாக இருக்கிறது. அணிற்பிள்ளை கவிதையும் கிட்டத்தட்ட இதற்கு நிகரான ஒன்று. வேட்டைக்காரனின் பழகிய மொழியைக் கேட்டு மாட்டிக்கொண்டு தவிக்கும் அணில்களைப்பற்றிய சித்திரத்தை நாம் அக்கவிதையில் காணமுடியும். பேசிப்பேசி உயிர்களைப் பழக்கி, வேலைவாங்கும் மனிதர்களின் கீழ்மையை முன்வைக்கும் மற்றுமொரு கவிதை குரங்குகள் ஏன் பேசுவதில்லை. ஒரு காலத்தில் மனிதர்களைப்போல பேசிக்கொண்டிருந்த குரங்குகள் திடீரென ஏன் பேச்சை நிறுத்தியது என்பதற்கான காரணத்தை விவரிப்பதுபோல, அக்கவிதை விரிகிறது. இலங்கை வேந்தனைக் கொன்று அயோத்திக்குத் திரும்பும் ராமனின் பயணத்தில் கவிதை தொடங்குகிறது. அயோத்திக்குச் செல்வதற்காக ராமனும் சீதையும் இலட்சுமணனும் புஷ்பக விமானத்துக்கு அருகில் செல்கிறார்கள். பக்கத்திலேயே நிற்கிற வானரங்களைப்பற்றி யாரும் கவலைப்படவில்லை. புஷ்பக விமானத்தில் ஏறிவிட்ட ராமன் திடுமென கீழே இறங்கிவந்து, அனுமனை அழைக்கிறான். அருகில் வந்த அனுமனிடம் எதையோ சொல்லிவிட்டு மீண்டும் விமானத்தில் ஏறிச் சென்றுவிடுகிறான். முடிபுனையும் நாள் அன்று அயோத்திக்கு வந்து வேலைகளைக் கவனித்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டதாக அனுமன், மற்ற வானரங்களிடம் சொல்கிறான். அயோத்தி அரண்மனை விழாவில் கடுமையான வேலை. ஒருநொடி கூட ஓய்வில்லாமல் குரங்குகளை வேலை வாங்கிக்கொண்டே இருக்கிறார்கள். வானரங்கள் வெறுப்பின் உச்சத்தில் ஒரு சபதம் செய்கின்றன. பேசத் தெரிந்தவர்களையெல்லாம் மனிதர்கள் தம் பேச்சிலேயே மயக்கி அடிமைப்படுத்தி, வேலைவாங்கி, கசக்கிப் பிழிந்து சக்கையாக்கிவிடுவார்கள். இனிமேல் பேசவே கூடாது என்று முடிவெடுத்துவிடுகின்றன. அந்த முடிவுக்குக் கட்டுப்பட்டு வானரங்கள் பேசுவதையே நிறுத்திவிட்டன.
மணல்கோடுகள் கவிதையும் ஓர் அழகான காட்சிச்சித்திரம். காவிரியாற்றின் கோடைமணலில் ஒருவன் தன் காதலியின் பெயரை எழுதுகிறான். அது பொலிவுடன் காட்சியளிக்கும் தருணத்திலேயே வேகமாக வரும் காற்று அந்த எழுத்துகளை கலைத்து அழிக்கிறது. ஒருபுறம் இயற்கையான காதலின் வேகம். இன்னொருபுறம் இயற்கையின் வேகம். இந்த இரண்டு காட்சிகளைமட்டும் இணைத்து யோசிக்கும்போது, இந்த மண்ணில் காலம்காலமாக பூத்துப்பூத்து மலர்ந்துவரும் காதலின் மென்மையையும், காலம்காலமாக அதை வென்று கலைத்து நடனமிடும் காற்றின் வன்மையையும் உணர்த்துவதாக நினைத்துக்கொள்ளலாம். ஆனால் ஞானக்கூத்தன் கவிதையின் இறுதியில் இன்னொரு காட்சித்துண்டையும் இணைத்துவைத்திருக்கிறார். அழிவிலிருந்து அரைகுறையாய் எஞ்சியிருக்கும் கோடுகள், படிக்கும்படியான எழுத்துகளாக இல்லையென்றாலும் அதைப் பார்க்கும்போது ஒருவித வெட்கம் படர்ந்ததென்ற குறிப்பு காணப்படுகிறது. காதலின் மென்மைக்கும் காற்றின் வன்மைக்கும் தொடர்பே இல்லாமல் தனித்திருக்கும் இந்த வெட்கக்குறிப்பு வேறொரு திசையை நோக்கி நம்மை யோசிக்கத் தூண்டுகிறது. வெட்கத்தைத் தூண்டும் அளவுக்கு, அந்த அரைகுறை எழுத்துகளின் காட்சி எதை நினைவூட்டியிருக்கக்கூடும். இந்தக் கேள்விக்கான விடைகளாக நாம் அடுக்கிக்கொள்ளும் ஒவ்வொன்றும் கவிதையின் தளத்தை மேலும்மேலும் விரிவடையச் செய்தபடியே இருக்கும்.
-4-
சுயஎள்ளல் மிகுந்த பத்திரப்பகர்வுகள் ஞானக்கூத்தனின் முக்கியமான ஒரு கவிதை. இறைவனிடம் உரையாடுவதுபோன்ற இக்கவிதையின் தொடக்கமே ஒருவிதமான புன்னகையை வரவழைக்கக்கூடிய வகையில் உள்ளது. ’உலகில் படைத்த பொருள்கள் எல்லாம் பத்திரமாக உள்ளன எங்கள் இறைவரே’ என்று தொடங்குகிறது கவிதை. தொடர்ந்து ஆழிசூழ் உலகம் அமெரிக்காவின் கையில் பத்திரமாக இருப்பதாகவும் தெரிவித்துக்கொள்கிறது. இப்படியே இந்தியாவைப்பற்றியும் தமிழகத்தைப்பற்றியும் தகவல்களைச் சொல்கிறது. ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள், ஆராய்ச்சியாளர்கள் என ஒவ்வொருவராக தொட்டுத்தொட்டுச் செல்கிறது.
காவிரிநீர் கர்நாடகத்திலும் கிருஷ்ணா நீர் ஆந்திரத்திலும் பத்திரமாக இருப்பதாகவும் தெரிவித்துக்கொள்கிறது. மேலும் தொடர்ந்து தேவர் பேரவை, வன்னியர் பேரவை, தலிதர் பேரவை, நாடார் பேரவை, பிராமணர் பேரவை, முதலியார் பேரவை, செட்டியார் பேரவை என அனைத்திலும் அவரவர்கள் நலன்கள் பத்திரமாக இருப்பதாகவும் சொல்லிச் செல்கிறது. இன்னும் சில விஷயங்களை முன்வைத்த பிறகு, ஆதிநாளில் எனக்குக் கொடுத்த ஆத்மா மட்டும் என்னிடம் பத்திரமாக இருக்கிறதா என்று கேட்பீராயின் என் தலை தாழ்ந்துவிடும் என்று இறுதியாகச் சொல்லி முடித்துக்கொள்கிறது. பாதுகாப்பு, பராமரிப்பு, மக்கள் நலன்கள் என்கிற பெயர்களில் நடைபெறும் ஒவ்வொன்றையும் கேலி தொனிக்க அடுக்கிக்கொண்டே சென்று, எல்லாம் பத்திரமாக இருப்பதாகச் சொல்லும் கவிதை தன் ஆத்மா பத்திரமாக இல்லை என்று ஒருவித அங்கதக்குறிப்புடன் முடிவுறும் புள்ளி மிகமுக்கியமானது. ஆத்மாவை வஞ்சித்து, ஆத்மாவைக் கசக்கி, ஆத்மாவின் குரலை அழுத்தி, ஆத்மாவையே அழித்துக்கொண்டுதான், மனிதர்கள் எல்லாவற்றையும் பத்திரமாக வைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று சுட்டிக் காட்டும் புள்ளி, ஒரு பகடியாக இருக்கும் அதே சமயத்தில் ஒரு சூட்டுக்கோலை இழுத்ததுபோல சுரீர் என்று சுடவும் செய்கிறது.
‘களிமண்ணையும் சந்தனத்தையும் கலந்துகலந்து மேகத்தை வரைகிறாய், வரை வரை, எல்லாம் உன் இஷ்டம்’ என்பது ஞானக்கூத்தனின் கவிதையொன்றில் இடம்பெறக்கூடிய சில வரிகள். இதில் வெளிப்படுதுவும் ஒரு பகடிதான். துக்கமும் ஆதங்கமும் கலந்த பகடி. இது, நமக்கு விருப்பமான ஒரு பெரிய ஓவியத்திரை, நம் கண்முன்னாலேயே சிறுகச்சிறுக தீப்பிடித்து எரிந்து கரிந்துவருவதுபோல, நம் ஆத்மாவை நம்மையறியாமலேயே நம் சுய லாபங்களுக்காக கொஞ்சம் கொஞ்சமாக எரித்துச் சாம்பலாக்கிக்கொள்வதை நேருக்குநேர் பார்க்க நேரும் துக்கமாகும். இந்தத் துக்கத்தைத்தான் பகடிகளோடும் பகடியற்றும் ஞானக்கூத்தன் தன் கவிதைகளில் காணமுடிகிறது.
புதுக்கவிதை வரலாற்றில் ஞானக்கூத்தன் உள்ளிட்ட மூன்றாம் தலைமுறைக் கவிஞர்களின் பங்களிப்பு மகத்தானது. இந்தப் பங்களிப்பில் ஞானக்கூத்தனின் இடம் மிகவும் முக்கியமானது. எழுத்தின்மூலம் தம் கவிதைகளின் வலிமையை நிறுவுவதை ஒருபுறமாகவும் விவாதத்தின் மூலம் புதுக்கவிதை என்னும் ஊடகத்தின் வலிமையை நிறுவுவதை இன்னொருபுறமாகவும் அவர் செய்துவந்தார். அந்த உழைப்பின் காரணமாகவே புதுக்கவிதை நிலைபெற்றது.
தன் சக்தியை இழக்கும்போதெல்லாம் மின்னாற்றல் வழியாக தன்னை மீண்டும்மீண்டும் நிரப்பிக்கொண்டு செயலாற்றத் தொடங்கும் மின்கலங்கள்போல, புதுக்கவிதையின் சட்டகத்துக்குள்ளேயே, அது உறையும்தோறும் புதுப்புது வடிவத்துடனும் புதுப்புது தொனியுடனும் புதுப்பித்துக்கொண்டு, முன்னோக்கிச் செயல்படுகிற விசையும் இணைந்திருக்கிறது. இதனால் புதுக்கவிதையின் வேகம் ஞானக்கூத்தன் காலத்திலிருந்து தேக்கம் என்பதே இல்லாமல் வற்றாத ஜீவநதியாக அடுத்தடுத்த தலைமுறைகளின் வழியாக ஓடிக்கொண்டே இருக்கிறது. ஞானக்கூத்தனின் சமகாலத்திலும் அவரைத் தொடர்ந்தும் புதுப்புது ஆளுமைகள் உருவாகி வந்திருக்கிறார்கள். ஆத்மாநாம், பிரம்மராஜன், ஆனந்த், தேவதேவன், தேவதச்சன், கல்யாண்ஜி, பழமலை, கலாப்ரியா, விக்கிரமாதித்தன், சமயவேல், சுகுமாரன், மனுஷ்யபுத்திரன், யூமா வாசுகி, யுவன் சந்திரசேகர், உமா மகேஸ்வரி, சல்மா, மாலதி மைத்ரி, முகுந்த் நாகராஜன், அய்யப்பமாதவன், இசை, இளங்கோ கிருஷ்ணன் என மூன்று தலைமுறைக்கவிஞர்கள் உருவாகி வந்திருக்கிறார்கள். இவர்களுடைய கவிதையுலகம் ஞானக்கூத்தனின் உலகத்துடன் ஒட்டியும் விலகியும் இருந்தாலும், அவ்வுலகத்திலே ஞானக்கூத்தனுடைய உலகத்தின் ஒருதுளி உப்பாவது கரைந்திருக்கிறது என்பதை வாசகர்களால் உணர்ந்துகொள்ளமுடியும்.
’ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த சோதியை
நாடிநாட நாடிநாடி நாட்களும் கழிந்துபோய்
வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே’
என்னும் சிவவாக்கியார் பாடலை இக்கணத்தில் நினைத்துக்கொள்கிறேன். நெஞ்சுக்குள் கலந்து பரவி நிற்கிற சத்தியம் என்னும் சோதியை உள்முகமாக அறிந்துகொள்ளத் தூண்டுகிற விருப்பதையே சிவவாக்கியார் தன் பாடலில் விதைக்கிறார். பகடியோடு இந்த உலகத்தைப் பார்க்கும் ஞானக்கூத்தன் கவிதைகளிலும் தன்னைத்தானே பகடி செய்து கொள்கிற கவிதைகளிலும் பகடியற்ற பொதுக்கவிதைகளிலும் நிகழும் பயணத்தில் உள்முகமாகவும் புறமுகமாகவும் சத்தியத்தைக் கண்டறியும் ஒரு விருப்பம் நுட்பமான விதத்தில் கலந்திருப்பதையே காணமுடியும்.
[28-12-2014 அன்று கோவையில் நிகழ்ந்த விஷ்ணுபுரம் விருதளிப்பு விழாவில் ஆற்றிய உரையின் எழுத்துவடிவம்]