விழா- கிருஷ்ணன் பதிவு

விரையும் குதிரையின் முதுகில்

வெண்முரசு,பிரயாகையில் ஒரு இடம் வரும் அது மதுராவை மீட்பதற்கு முன் கிருஷ்ணனும் அர்ஜுனனும் பேசிக்கொள்வது . அதன் சாரம் இது தான் , நமது அன்றாட வாழ்கையில் நமக்கு தீவிரமான கணங்கள் வாய்ப்பதில்லை , நாம் அதற்காக ஏங்கிக் கொண்டே இருக்கிறோம் , போர்ச்சூழல் நமக்கு ஒரு தீவிர கணம் , ஒரு வீரனுக்கு அதுவே மகிழ்ச்சி மிக்க தருணம் , அதில் அவன் நிறைவு கொள்கிறான்.

இதையே நாம் 2 நாட்கள் விஷ்ணுபுர விழா சந்திப்புகளுக்கும் சொல்லலாம். கடந்த 2 நாட்களும் அது போன்ற  தீவிர கணங்களால் ஆனவை. சனி காலை 10 க்கு என கூறி விட்டு அதற்கு முன்பே சபை துவங்கி விட்டது. தினமணியில் மட்டுமே பார்த்த பாவண்ணன் 50,60 வாசகர்கள் மத்தியில் பேசிக்கொண்டு இருந்தார். இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன் பன்மொழி அறிஞர்கள் இருந்தனர் , நேரடியாக வங்கத்தில் இருந்து , கன்னடத்தில் இருந்து , தெலுங்கில் இருந்து என தரமான மொழிபெயர்ப்புகள் வந்து கொண்டே இருந்தது , இன்று இருமொழி தெரிந்தவர்களே குறைவு. இதனால் தரமான மொழி பெயர்ப்புகளும் குறைவு என்றார்.


பதிலளிக்கும் விதமாக முன்பு ஒருவர் தொழில் நிமித்தமாக குஜராத்தில் சென்று அமர்ந்தால், அவர் குஜராத்தி கற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் உண்டு , இப்போது எல்லா மாநிலத்திலும் கல்வி பரவலாகி ஆங்கிலம் அறியப்ப் படுவதால் நாம் ஆங்கிலத்தை மாட்டுமே வைத்துக் கொண்டு இந்தியாவில் மிகப் பெரும்பாலான நகரங்களில் காலம் தள்ளி விடலாம். ஆங்கிலம் மேலும் வலுக்கிறது இந்திய மொழியும் அவற்றிற்கு இடையே ஆன பரிமாற்றங்கள் வலுவிழக்கிறது என்ற ஒரு கருத்து கூறப் பட்டது .

அதே சமயம் அப்படியாவது நாம் ஆங்கிலத்தை expertise செய்திருக்கிறோமா என்று பார்த்தால் அதுவும் இல்லை. ஆக இன்று பலவீனமான தமிழ் மற்றும் பலவீனமான ஆங்கிலம் என்கிற சூம்பிய மொழித்திறன் கொண்ட சமூகமாக ஆகிக் கொண்டிருக்கிறோம் என பாவண்ணன் கூறினார். விஷ்ணுபுரம் விழாவில் பேசிய கவிஞர் ராஜீவனும் கோவை, சாலை மார்க்கமாக எனது ஊரில் இருந்து 7 மணி நேரம் ஆனால் என்னால் தமிழில் உரையாட முடியாது , வான் மார்க்கமான 7 மணி நேரம் பயணித்து அடையும் ஊரில் பேசப்படும் ஆங்கிலத்தில் நான் பேசுகிறேன் நீங்கள் கேட்கிறீர்கள் என்றார்.

DSC_3532[1]

அடுத்து நிகழ்ந்த புவியரசு சந்திப்பில் வானம்பாடி இயக்கம் என்பது ஞானக் கூத்தன் போன்ற தீவிர இலக்கிய எழுத்தாளர்களின் இருட்டடிப்பிற்கு எதிராகவே கிளம்பியது என்றார். நாங்கள் ஒரு விபச்சாரியை வைத்து புத்தகங்களை வெளியிட்டோம் , சாலையோர நடைபாதைக்கடைகளில் விற்றோம் , சமூக நீதிக்காக கோஷமிட்டோம் , மேடைகளில் உணர்ச்சி பொங்க கவிதைகளை பாடினோம், கவித்துவத்தை பற்றிக் கவலைப் படவில்லை மக்களைப் பற்றி கவலைப் பட்டோம் , அன்றைய சூழலில் ஒரு கவிஞன் இதைத் தவிர எதை செய்வதிருக்க முடியும் என்றார்.

இன்று எதற்கென்றே தெரியாமல் எழுதுகிறார்கள் , படித்தால் ஒன்றும் அர்த்தமாவதில்லை , ஒரு வாசிப்பு மிக்க தமிழாசிரியரான தன்னால் கூட புரிந்து கொள்ள முடியாத கவிதைகளை எழுதும் நவீன கவிஞர்கள் ஏன் எழுதுகிறார்கள் என சபையை நோக்கி கர்ச்சித்தார். உதாரணமாக அந்த வார ஆனந்த விகடனில் வந்திருந்த இசையின் ‘அதுவா அதுவா ” கவிதையை சொன்னார்.

சந்தர்ப்பவசமாக அக்கவிதையை வாசித்திருந்த நவீன இலக்கிய சபை அக்கவிதையை அங்கேயே வாசித்து பொருள் சொன்னது. நாம் ஒவ்வொரு வரிக்கும் மேலதிக அர்த்தம் உண்டு என எண்ணிக் கொண்டு ஒவ்வொரு சொல்லையும் குறியீடாக்கவோ படிமமாக்கவோ முயல்கிறோம் ஆகவே பொருள் நழுவுகிறது. அக்கவிதையில் கூறப்படும் டிசம்பர் 3 க்கு எவ்வித சிறப்பு முக்கியத்துவமும் இல்லை அது ஒரு சாதாரண நாள் எனவே எடுத்துக் கொள்ளப் பட வேண்டும் என பதில் கூறப் பட்டது . புவியரசு திருப்தியடைந்தவராகவே காணப் படார். அவரைப் போன்ற நேரடியான நேர்மையாளரை நாம் காண்பது அரிது.

ராவணன் கைலாயத்தை தூக்கி சிவனையும் பார்வதியையும் உலுக்கியது போன்றது பின்னர் வந்த சு வேணுகோபாலின் சந்திப்பு. நான் எழுதும் போது எனது படைப்புகளை மொழியாக்கம் செய்பவன் மிரளவேண்டும் அதில் தோற்க வேண்டும் எனவே நான் எண்ணுவேன், அதுவே எனக்கு அங்கீகாரம் என்றார். அன்றைய தினத்தின் நாயகன் அவரே. எனக்கு முன் எழுதிய படைப்பாளிகளை நான் விஞ்ச முடிந்தால் மட்டுமே எழுதுவேன், இல்லையேல் காத்திருப்பேன் அல்லது சும்மா இருப்பேன் என்றார்.

இவரைத்தான் வாசகர்கள் அதிகம் படித்திருந்தனர் , ஜெயமோகன் தலைமுறைக்கு அடுத்த தலைமுறை என்றால் அது சு வேணுகோபாலின் தலைமையில் தான். அவரின் உண்மை திளங்கும் கூரான ஆளுமை அனைவரையும் கவர்ந்தது , ஒரு எழுத்தாளன் எழுத்திலோ பேச்சிலோ அரசியல் சரிநிலைகளை பேணி பசப்புவானென்றால் அவன் ஒரு படைப்பாளி அல்ல பத்திரிக்கை நிருபர். சு வேணுகோபால் ஒரு படைப்பாளி.

அதே சபையில் எழுத்தாளர்களை ஒப்பிடுவது , பொதுமைப்படுத்துவது , மற்றும் தரப்படுத்துவது ஆகியவற்றிற்கு அதிருப்தி தெரிவிக்கப் பட்டது . ஒரு தீவிர உலகமும் பல் மழுங்கிய பொக்கை சமூகமும் ஒரே பத்தியில் விருந்துண்டால் பொக்கை சமூகம் முறுக்கை தூற்றும் தீவிர சமூகத்தை ஊத்தப்பத்தை தின்னச் சொல்லும். ரசனை என்பதே ஒப்பிடுவது , பொதுமைப்படுத்துவது, பட்டியல் இடுவது மற்றும் தரப்படுத்துவது என்பது தான் என்கிற வழக்கமான பதில் மீண்டும் அளிக்கப் பட்டது. கூறப் போனால் சிந்தனை என்பதும் அது தான்.


அன்றைய இறுதிநாள் ராஜீவன் சந்திப்பு அயர்ந்த நேரத்தில் அதிக கவனம் கொணருவதாக இருந்தது. பளு முதுகை அழுத்தியது. படிமங்கள் பற்றியும் அதை கவிதையில் இருந்து வெளியேற்ற வேண்டிய அல்லது தவிர்க்க வேண்டிய தேவை பற்றியும் ராஜீவன் பேசினார். படிமங்கள் தானாகவே அதிகார மையமாகிறது , பின் அனைத்தையும் பின்பற்ற வைக்கிறது.

நீட்ஷேவின் “கடவுள் இறந்து விட்டார்” ருக்கு பின் தான் ஹிட்லர் , ஸ்டாலின் , முசோலினி போன்றோர் பிம்பங்களானர்கள் பேரழிவை நிகழ்த்தினார்கள். படிமம் என்பதே அடிப்படையில் ஒரு பாசிச கருவி ஆகவே கவிதைகளில் படிமவியல் தவிர்க்கப் படவேண்டியது அதுவே ஒரு ஜனநாயக கவிஞனின் தேர்வாக இருக்கும் என்றார் .முசோலினிக்காக எஸ்ரா பவுண்ட் பிரச்சாரம் செய்தார் என்கிற செய்தியும் அங்கு பகரப் பட்டது.

காந்தி சர்க்கா , தண்டி போன்ற படிமங்களால் தானே மானுடத்திடம் பேசினார், கவிதைகளில் வானையும், நதியையும் , கல்லையும் படிமங்களாக்கித் தானே கவிதை செயல்படுகிறது , அது மானுடத்தை மேம்படுத்தத் தானே செய்கிறது என சபையால் பதில் வாதம் வைக்கப் பட்டது. காந்தியும் ஒருவகையில் பாசிஸ்டே என ராஜீவன் சொன்னார்.

விளம்பரங்களில் யோசிக்க விடாமல் வெறும் கட்சித் துணுக்குகளை மட்டும் காட்டி எப்படி தேர்வுகள் திணிக்கப் படுகிறது எனவும் ஒரு கூறப் பட்டது. இது இருபுறமும் ஊஞ்சல் போல ஆடித் திரும்பி இறுதியில் “நாம் படிமங்களை பயன் படுத்தலாம் சற்று கவனத்துடன்” என சபை ஒரு தற்காலிக முடிவுக்கு வந்தது.
10888599_1610522422504644_748387124195104868_n
அப்போது தான் சோர்ந்துபோய் அரை கவனத்துடன் ஜெயமோகனின் பின்னல் கடைசி வரிசையில் அமர்ந்திருந்த என்னை ஜெ முதுகால் கவனித்து இப்போது கடந்த 10 நிமிடத்தில் ராஜீவன் சொன்ன கருத்தை அதே வரிசையில் அடி பிறழாமல் சுருக்காமல் நீங்கள் திருப்பி சொல்லுங்கள் என்றார்.

மற்ற நேரத்தில் என்றால் ஓரளவு இது என்னால் சாத்தியம் தான். பேசியது ஜெயமோகன் என்றல் என்னால் பெரும்பாலான சமயங்களில் அதை செய்ய முடியும், அப்போது என்னால் முடியவில்லை. பொதுவாக சபையில் உள்ள ஒரிருவரின் கவனமற்ற இருப்பு பரவும், அனைவரையும் கவனமற்றவர்களாக்கிவிடும். “லண்டன் பிரபு ” என்கிற ( வேலை வெட்டி இல்லாத) இளம் வாசகர் ஒருவரைத் தவிர அதைச் செய்ய யாராலும் முடிய வில்லை.

IMG_9228[1]

கவனித்தல் நினைவில் நிறுத்துதல் பின் திரும்ப வெளிப்படுத்துதல் ஏன் நம்மால் முடிவதில்லை , பொதுவாக ஒரு இலக்கிய அல்லது தத்துவ விவாதத்தில் இது எவ்வளவு முக்கியம் என பேசப்பட்டது. இவ்வாறு செய்ய முடியாமல் போனதால் தாம் நித்யாவால் அவமானப் படுத்தப்பட்ட சம்பவம் பற்றி ஜெ கூறினார். பின்னர் அதை முயன்று கற்றதையும் கூறினார்.

பொதுவாக ஒருவர் பேசிக்கொண்டு இருக்கும்போதே நாம் மனதிற்குள் எதிர்வினையாற்றத் துவங்கி விடுகிறோம் ஆகவே நாம் கவனிப்பதில்லை என்றார். “key words” சை கவனிக்க வேண்டும் அதை மனதில் வரிசைப்படி குறித்துக் கொள்ள வேண்டும் பின் திரும்பச் சொல்ல வேண்டும் அதன் பின்னரே நாம் எதிர் வாதத்தை துவங்க வேண்டும் எனக் கூறி, சற்று முன் ராஜீவன் எலியட்டின் wasteland கவிதையில் துவங்கி ஆங்கிலத்தில் சொன்ன வேறொரு கருத்தை அவ்வாறே அடி பிறழாமல் சொல்லி என்னைத் தவிர அனைவரையும் ஆச்சர்யப் படுத்தினார்.

ஒரு பொது தொலை பேசியில் ஒவ்வொரு 2 நிமிடத்திற்கும் ஒரு நாணயமிட்டு பேசுதல் போல இவர் மனம் ஒவ்வொரு key word ஆக அமைத்துக் கொண்டே எவ்வளவு நீண்ட கருத்தையும் மனதில் பதிந்துகொள்கிறது என அவரை நன்கு அறிந்த தேவதேவன் என்னிடம் தனிப் பேச்சில் சொன்னார்.

திங்கள் காலை நடையில் வினோத்தின் “இலைமேல் எழுத்து” ஆவணப் படத்தை தராசில் ஆர் எஸ் புர நடுச் சாலையில் நிறுத்தினேன். கலையில் ஒரு யுக்தி உண்டு நமது சாத்தியங்களை வேண்டுமென்றே குறுக்கிக் கொள்வதன் மூலம் நமது கலை வெளிப்பாட்டின் அதிக பட்சத்தை அடையும் சாத்தியத்தை கூட்டிக் கொள்வது, இப்படம் குறைந்த பொருட் செலவில் அசைக்கும் வசதி இல்லாத சிறிய காமராவை வைத்துக் கொண்டதாலேயே இது வெற்றி அடைந்திருக்கிறது என்றார் ஜெயமோகன்.

வலது பக்கத்தில் இருந்து பார்க்கத் துவங்கும் மனித இயல்பு , பொருள்களை வலது ஓரத்தில் அமைக்கும் முறை , கால்களைக் காட்டினால் எப்போதும் தவறாகவே புரிந்து கொள்ளும் மனித இயல்பு, அந்தியில் sill out எப்போதும் துயரத்தையே பார்வையாளர்களுக்கு அளிக்கும் வினோதம், அதை வெல்ல பொருத்தமான பின்னணி இசையை தேர்வு செய்வது என ஒரு வண்ண மயமான உரையை டீ ஆற்றிக் கொண்டே ஜெயமோகன் ஆற்றினார். வினோத்தின் படம் அனைவரையும் கவர்ந்திருந்தது , அது கண்களையும் மனதையும் உறுத்தாத , ஆவணப் படங்களுக்கே உரிய சோபையை நீக்கப்பட்ட உற்சாகமான நேர்த்தியான படம் .

ஞாயிறு காலை நிகழ்ந்த வெண் முரசு உரையாடல் , ஞானக் கூத்தன் கவிதை விவாதம் ஆகியவை அப்படி ஒன்றும் குறிப்பிடத் தக்கவாறு இல்லை. ஞாயிறு இரவு நடந்த கல்வெட்டு -வரலாற்று- இலக்கிய ஆராய்ய்சி உரையாடலில் பின்னிரவிலும் சா கந்தசாமியும் , ஞானக் கூத்தனும் வயதை புறந்தள்ளிய இளமையுடன் பங்கு பெற்றனர். எல்லா நிகழ்விலும் முதுகு கொடுத்துத் தூக்கும் சுரேஷும் உற்சாகமாகவே பங்கெடுத்தார். பாய்மரக் கப்பல் குறித்த சா கந்தசாமியின் அவதானிப்பும், காண்டாமிருக வேட்டை குறித்த ஞானக் கூத்தனின் தகவலும் , ஆரிய திராவிட வாதம் மற்றும் குதிரை விவாதமும் குறித்துக் கொள்ளத் தக்கவை.


அதி விரைவாக செல்லும் குதிரையின் முதுகில் 3 நாட்கள், கண்கள் காணாததை மனம் கண்டிருக்கும் , அது சிந்தையில் பதிக.

கிருஷ்ணன்

[விஷ்ணுபுரம் விருது விழா, கிருஷ்ணனின் பதிவு]

முந்தைய கட்டுரைஅயோத்திதாசரின் மாற்றுப்புராண அழகியல்
அடுத்த கட்டுரைவிழா கடிதங்கள்