இரவு 23

நோய்கள்

எத்தனை நட்பாக

அடையாளம்கண்டுகொள்கின்றன இரவை

கவலைகள்

எத்தனை சொந்தமாக

அணைத்துக்கொள்கின்றன இரவை!

 

 

நான் மேனன் வீட்டுமுற்றத்தை நெருங்கியதும் அவர் கறுப்புக்கண்ணாடியுடன் உள்ளிருந்து வெளியே வந்தார். ”மற்ற சாதனங்ஙள் கிடக்கட்டே.. ” என்று சொன்னபடி படிகளில் இறங்கியவர் என்னைப்பார்த்து ”ஆ, சரவணன்…” என்றார். ”சார்” என்றேன். அவர் என்னை நோக்கி புன்னகையுடன் வந்து தோளில் கைவைத்தார். ”ஹௌ டு யூ டு?” ”ஓக்கே” என்றேன். ”ஐயம் லீவிங்.ஸீ ஐ கன் நாட் லிவ் ஹியர் அலோன்…” சிரித்துக்கொண்டு ”ஒரு சின்ன பயணம். சிம்லாவிலே என் பழைய கலீக் ஒருத்தன் இருக்கான். வா ஒரு டிரெக்கிங் போகலாம்னான். சரீன்னு கெளம்பிட்டேன். இன்னைக்கு ராத்திரி ·ப்ளைட்.”

அவரது தோற்றத்தில் இருந்த வேறுபாடு என்ன என்று எனக்கு அப்போதுதான் உறைத்தது. அவர் ஒரு கேன்வாஸ் தொப்பி அணிந்திருந்தார். முன்னர் அவர் தொப்பி ஏதும் அணிந்து நான் பார்த்ததில்லை. படங்களில்கூட! ஆழமான மனநெருக்கடிகளுக்கு உள்ளானவர்கள் புறத்தோற்றத்தில் ஏதேனும் மாற்றத்தை அடைவதை அப்போது நினைவுகூர்ந்தேன். அது தன்னை மாற்றிக்கொள்வதற்கான ஒரு புற அடையாளமாக இருக்கிறது போலும்.

”இங்கே உள்ள வேல்யுபிள் திங்ஸ் எல்லாத்தையும் அஜய் கிட்டே குடுத்திடலாம்னு நெனைக்கிறேன். இங்கே இருந்தா திருட்டுப் போனாலும் போகும். எல்லாருக்கும் சொல்லிட்டேன். பாப்போம்” நான் ”ஸீ யூ சர்” என்றார். ”நேத்து தூங்கவே இல்லை. கிறுக்கனைமாதிரி குடிச்சிருக்கேன். வோட்கா. அப்டியே ராவா சாராயம்தான் அது. நாலஞ்சுதடவை வாந்தி எடுத்திட்டு மறுபடியும் குடிச்சேன். எல்லாரும் விழுந்திட்டாங்க. நான் மட்டும் தூங்காம இருந்தேன். போதையிலே கண்ணிமைகள் அப்டியே சரியும். சட்டுன்னு உலுக்கிட்டு முழிப்பு வந்திடும். கமலா இப்ப இல்லைன்னு ஒரு நினைப்பு. வேற எதுவுமே இல்லை. ஷி இஸ் நோமோர். அவ்வளவுதான், மறுபடியும் ஊத்திக்குடிக்க ஆரம்பிச்சிருவேன். மறுபடியும் வாந்தி. ஹெல்!”

”நீங்க டிரக்ஸ் ஏதாவது சாப்பிட்டிருக்கணும் சார் ” என்றேன். ”சாப்பிட்டிருக்கலாம். அப்ப யாருக்கும் அது ஞாபகம் வரல்லை. எல்லாரும் தூங்கிட்டாங்க. நான் மட்டும் முழிச்சிட்டிருந்தேன். சச் எ லோன்லினெஸ். ரத்தம் கக்கி சாகப்போறேன்னு தோணிட்டுது. கடைசியிலே கொஞ்சம் கண்ணசந்தேன். அப்டிச் சொல்லிட முடியாது. கட்டிலிலே சாய்ஞ்சு ஒரு அஞ்சு நிமிஷம் போதையிலே மயங்கியிருப்பேன். ஒரு கனவு. கனவு இல்லை. ஒருவகையான ரியாலிட்டி. அந்த அளவு ரியலா எனக்கு கனவே வந்ததில்லை”

நான் படபடப்புடன் அவரையே பார்த்தேன். என்ன சொல்லிக் கொண்டிருக்கிறார்! ”என்ன நடந்ததுன்னா கமலா உள்ளே வந்தாள். நான் குடிச்சிட்டு கிடக்கிறதைப் பாத்ததும் பயங்கரமான கோபம். ‘எந்தா இது? எந்த இது?’ ன்னு கத்துறா. மூக்கு முகம்லாம் ரத்தமா சிவந்துபோச்சு. நான் போதையிலே கண்ணைத்திறந்து அவளைப்பாத்து முழிக்கிறேன். ‘கமலா நீயாணோ? நீ தன்னேயாணோ?’ன்னு கத்தறேன். அவ என்ன ஆச்சுந்னு என்னை தூக்கி கட்டிலிலே உக்கார வைச்சார். டிவிய போடு காட்டறேன், டிவிய போடுன்நு நான் பதறினேன். டிவியை போட்டா இவளோட சடலம் கெடக்கிற ஸீன் ஓடிட்டிருக்கு. நீ செத்துட்டேன்னு நெனைச்சிட்டேன் கமலான்னு சொல்லி அழுதிட்டேன். நான்சென்ஸ், அந்தப்பொம்பிளை கட்டியிருக்கிற ஸாரிய பாருங்க. எப்பவாவது நான் அந்தமாதிரி கலர்ல ஸாரி கட்டியிருக்கேனா. அது வேற யாரோ. அவ முகமே வேற…இதுகூட கவனிக்கலையா. உங்களுக்கு என்ன பைத்தியமான்னு காச்சு மூச்சுன்னு கத்தறா. ஆக்சுவலி நானும் அப்பதான் டெட்பாடியோட முகத்தை பாக்கிறேன். அது வேற. ஆலப்புழயில் இவளுக்கு ஒரு கசின் உண்டு. சரஸ்வதின்னு பேரு. அவதான் அது. அப்டியே புல்லரிச்சு போயிட்டேன். சந்தோஷம்னா அந்தமாதிரி ஒரு சந்தோஷத்தோட உச்சியிலே நான் இருந்ததே இல்லை. பாய்ஞ்சு அவளை அப்டியே கட்டிக்கிட்டு கன்னம் கழுத்து மூக்குன்னு கண்டபடி முத்தம் குடுக்க ஆரம்பிச்சேன். அவ வெட்கமும் கோபமுமா அய்யய்யோ அய்யய்யோன்னு என்னை பிடிச்சு தள்ளினா. நான் கட்டிலிலே மல்லாந்து விழுந்தா நாராயணனும் கேணலும் கண்முழிச்சுப்பாத்து சிரிக்கிறாங்க… அப்பதான் நான் முழிச்சுகிட்டேன். ஆச்சரியம் என்னன்னா நான் கட்டிலிலே கிடந்தேன். மத்தவங்க என்னை பாத்திட்டிருந்தாங்க. நான் சிரிச்சுட்டே கமலா சாகலைன்னு சொன்னேன். நாராயணன் ‘ஒகே, நவ் யூ ஸ்லீப்’ னு சொன்னான். அப்பதான் எல்லாம் கனவுன்னு தெரிஞ்சது. ஆனா அப்டி தெரிஞ்சும்கூட மனசில இருந்த சந்தோஷம் குறையலை. ஐ வாஸ் டோட்டலி ரிலீவ்ட். எல்லா பாரமும் போச்சு. அப்டியே படுத்து நல்லா தூங்கிட்டேன்.”

என்னால் எதுவுமே சொல்ல முடியவில்லை. மேனன் ”என்ன ஒரு விஷன். அது கனவே இல்லை. அவளோட சருமமும் சூடும் என் கையிலேயும் முகத்திலேயும் இருக்கு. அது ஒரு அபூர்வமான சைக்காலஜிகல் ·பினாமினன். அந்த இல்யூஷன் வரலேன்னா நான் பைத்தியமா ஆகியிருப்பேன். மனசோட கடைசி லிமிட் தாண்டுதுன்னு தெரிஞ்சதும் மனசே போட்டுக்கிற டிராமாதான் அது. பொங்குற பாலிலே குளிர்ந்த தண்ணிய விடுறதுமாதிரி அந்த விஷ்·புல் டிரீம் நரம்புகளை சாந்தப்படுத்திட்டுது. மைகாட்! இ·ப் தேர் இஸ் எ காட் ஹி இஸ் இன் அவர் பிரெய்ன்” நான் என் மனதை அழுத்திய எடையை மூச்சாக வெளியே விட்டேன். நேற்று நானும் பைத்தியத்தின் விளிம்பை தொட்டுவிட்டேனா?

 

”நான் உனக்கு ஒரு அட்வைஸ் பண்ணலாமா?” என்றார் மேனன். ”சொல்லுங்க சார்” ”இந்த ராத்திரி லை·ப் வேணாம். விட்டிரு…” ”சார்” என்றேன் அர்த்தமில்லாமல். ”இது ஒரு சீப் ரொமாண்டிசிசம். மனுஷ மனசை அப்டியெல்லாம் எவரும் அளந்து வச்சிட முடியாது.  அது பெரிய கடல். ஸோ…” நான் பேசாமல் நின்றேன். அவர் அப்படிச் சொல்வார் என நான் ஏற்கனவே எதிர்பார்த்திருந்தது போல உணர்ந்தேன்.

”அதைவிட குறிப்பாச் சொல்லணும்னா…” அவர் ஒரு கணம் தயங்கி முற்றத்தில் குரல் கேட்காத தூரத்தில் நின்ற அஜய்மேனனைப் பார்த்தார். ”அதாவது லீவ் தட் கர்ல்…நீலிமா. அவ உனக்கு சரிவர மாட்டா” நான் என் உடம்பெல்லாம் அதிர்வுடன் அவரையெ பார்த்து நின்றேன். அவர் ஆங்கிலத்திற்கு தாவினார் ”எனக்கு அந்தரங்கமாக ஒரு விஷயம் தெரியும். நீ கமலாவால் தீவிரமாக கவரப்பட்டிருந்தாய். அவள் அப்படித்தான். நெருப்பு போல. அவளை விட்டு யாரும் கண்களை எடுக்க முடியாது. நீலிமா கமலாவின் ஒரு சிறிய மாற்றுவடிவம்தான் உனக்கு”

நான் அவரை மறுத்துப்பேச எண்ணினேன். ஆனால் என்னால் ஒருசொல்லைக்கூட என் உள்ளத்தில் இருந்து பெயர்த்தெடுக்க முடியவில்லை. மொழியே என்னுள் இல்லை போலிருந்தது. ”நேற்று இந்தச்செய்தி கேட்டதும் உனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியும் துயரமும் அதனால்தான். உனக்கும் துரோகம் இழைக்கப்பட்டிருக்கிறது. நீயும் ஏமாற்றப்பட்டிருக்கிறாய்….இப்போது உன்மனதில் இருக்கும் சஞ்சலமும் இதனால்தான். நீலிமாவை கமலாவுடன் தொடர்புபடுத்தாமல் உன்னால் பார்க்க முடியாது. ஆகவே உன்னால்  இனிமேல் ஒருநாள் கூட அவளுடன் நிம்மதியாக வாழமுடியாது. உன்னுடைய அகம் பதறிக்கொண்டே இருக்கும்”

”இல்லை சார்” என்று ஆரம்பித்தேன். ”ப்ளீஸ்..” என்றார் மேனன் சிரித்தபடி. ”நாம் உண்மையை அப்பட்டமாகச் சந்திப்பதைப்பற்றி நிறையவே பேசியிருக்கிறோம்.” வாய்விட்டு சிரித்து ”முட்டாள்தனம். உண்மையை எவராலும் நேருக்கு நேர் சந்தித்து பழக முடியாது. மெடுஸாவின் முகம் மாதிரி. அதை பல்வேறு பிரதிபலிப்புகளில்தான் பார்க்க முடியும். இல்லாவிட்டால் எதற்கு இத்தனை காவியம் கதைகள் கவிதைகள் இல்லையா? பேசாமல் திரும்பிப்போ. எல்லாரும் வாழக்கூடிய எளிமையான சாதாரணமான உலகத்தில் சாதாரணமாக வாழ முயற்சி செய்”

மேனன் என் தோளை இறுகப்பிடித்தார் ”உன்னை இதற்குள் கொண்டுவந்தவன் நான். ஆகவே எனக்கு ஒரு பொறுப்பு இருக்கிறது. நீ வெளியே போவது என் குற்றவுணர்ச்சியை கொஞ்சம் குறைக்கும்” ”சரி சார்”  என்றேன். ”இதில் உள்ள மிக அசிங்கமான விஷயம் என்ன தெரியுமா, நம்முடைய அகங்காரம்தான். நாம் அசாதாரணமானவர்கள், இலக்கியமும் தத்துவமும் படித்தவர்கள் என்று கற்பனைசெய்துகொள்கிறோம்.  ஆகவே பிற முட்டாள்களைப்போல அல்லாமல் நாம் உண்மைகளில் காலூன்றி வாழ்கிறோம் என்ற எண்ணம் நமக்கு நிறைவை அளிக்கிறது. அப்படி எண்ணிக்கொள்ளும்போது நாம் மேலும் முட்டாள்களாக ஆகிறோம் என்பதை நாம் அறிவதில்லை. இப்படி பிடரியில் ஒரு கோடாலிவெட்டு விழும்போது சட்டென்று எல்லாம் தெரிந்துவிடுகிறது”

 

நான் அந்தக் கோடாலிவெட்டு என்ற சொல்லாட்சியால் அதிர்ந்தேன். அவர் அதை கவனமில்லாமல்தான் சொல்லியிருந்தார். ”நீ பேசாமல் சென்னைக்குப் போ. உன்னுடைய சாதாரண வாழ்க்கையில் சாதாரணமான சந்தோஷங்களில் ஈடுபட்டு நிம்மதியாக இரு. இந்த ஆபத்தான இருண்ட பாதை வேண்டாம்… நீலிமாவை மறந்துவிடு. அவளை நீ ஒருபோதும் பகலுக்குக் கொண்டு செல்லமுடியாது. அவள் ஒரு யட்சி. யட்சிகள் பகலில் வாழ முடியாது” சட்டென்று கண்கள் சுருங்க ”அந்த பெங்காலிபாபு போலீஸிடம் என்ன சொல்லியிருக்கிறான் தெரியுமா? கமலா ஒரு யட்சியாம். யட்சி பகலில் வரக்கூடாது என்பதற்காகத்தான் கொன்றானாம். பாவம், அவனும் கலங்கிப்போயிருக்கிறான்.”

நான் முகர்ஜியின் முகத்தை நினைவுகூர்ந்ததும் கடுமையான துவேஷத்துக்கு உள்ளானேன். அதை என் முகத்தில் வாசித்த மேனன் ”அவனை வெறுப்பதில் அர்த்தமே இல்லை. அவனும் சாதாரண மனிதன்தான். சுவாமிஜியும் கமலாவும் எல்லாருமே சர்வ சாதாரணமான மனிதர்கள். தங்களை அபூர்வமானவர்கள் என்று கற்பனைசெய்துகொண்டு ஆழ்மனத்துடன் விளையாடினார்கள். குழந்தைகள் தீயுடன் விளையாடுவது போல.” சட்டென்று என் தோளை மேலும் தட்டி ”ஓகே..·பைன்” என்றார்

நான் பெருமூச்சு விட்டு புன்னகைசெய்தேன். புன்னகையில் என் முகத்தின் சதைகள் விரிசலிடுவது போல உணர்ந்தேன். ”நேரா டெல்லிக்கா சார்?” ”எஸ்.அங்கேருந்து வரணாசி. ஒரு நாள் அங்கே இருப்பேன். கமலாவை கங்கையிலே கரைக்கணும். அவளோட ஆசை அது. பலதடவை சொல்லியிருக்கா” ”ஓக்கே” என்றேன். ”ஸீ, ஷி இஸ் சச் எ நைஸ் வுமன். எனிவே வி ஹேவ் எ லாட் ஆ·ப் வெரி ப்யூட்டி·புல் மொமென்ட்ஸ்..” அவர் புன்னகை செய்தபோது கண்கள் கலங்கியிருந்தன. நான் கண்களை திருப்பிக்கொண்டேன்.

கார்கள் கிளம்பின. மேனன் ஏறிக்கொண்டு ”நான் சொன்னதை ஞாபகம் வச்சுக்கோ..” என்றார். அஜய்மேனன் முகபாவனையாலேயே விடைபெற்றான். கார்கள் சென்றபின் நான் அந்த வீட்டுமுன்பு பேசாமல் அமர்ந்திருந்தேன். அந்த வீடு என்னை முழுமையாக கைவிட்டு எல்லா வாசல்களையும் மூடிக்கொண்டு வெறும் ஜடப்பொருளாக மாறிவிட்டிருந்தது. நான் அதையே பார்த்தபின் திரும்பி நடந்தேன். அப்போது எனக்கு அந்த உள்ளுணர்வு ஏற்பட்டது. முதல்முறையாக அந்த வீட்டைச் சுற்றி நடந்தபோது ஏற்பட்ட உள்ளுணர்வு. அதற்குள் ஆளிருக்கிறது!

என் உடம்பு புல்லரித்துவிட்டது. நான் அனிச்சையாக அந்த வீட்டை நோக்கிச் சென்றேன். உடனே கடுமையான அச்சத்தால் செயலிழ்ந்து நின்று விட்டேன். சேற்றில் புதைந்து கிடந்த மூளையை பெயர்த்தெடுத்ததும் வேகமாக என் வீட்டை நோக்கி ஓடிப்போய் மாடிக்குச் சென்று என் கட்டிலில் மூச்சு வாங்க அமர்ந்துகொண்டேன். மெல்ல மெல்ல மூச்சு தணிந்ததும் மீண்டும் மடிக்கணினியை எடுத்தேன். பழைய இணைய தளங்களுக்குள் சென்றேன். அந்த தீராத வசைப்போர்களில் மூழ்கினேன்.

எத்தனை வசைகள். கிண்டல்கள் நக்கல்கள், தர்க்கங்கள். எதிலுமே அர்த்தமில்லை. மார்க்ஸியம், தேசியம், இனவாதம், மதவாதம்… கொள்கைகள், நம்பிக்கைகள், தரப்புகள். எல்லாமே பொய். வெறுப்பையும் காழ்ப்பையும் கொட்டுவதற்கான முகாந்திரங்கள் மட்டும்தான் அவை. இவர்கள் அனைவருமே என்னைப்போல அடிபட்டு வலி தெறிக்க எங்காவது பதுங்கிருப்பவர்கள்தானா? இல்லை, பாதிப்பேர் நிஜவாழ்வில் கோழைகள். நிஜவாழ்வில் பெரும் வெற்றிடம் ஒன்று கொண்டவர்கள்.

நான் தூங்கிவிட்டேன். பின்பு எழுந்துகொண்டபோது கீழே பெல் அடித்துக்கொண்டிருந்தது. மாலை மூன்றரை மணி. மதியம் சாப்பிட்டிருக்கவில்லை. அதன் களைப்பும் சோர்வும் உடலில் இருந்தன. கதவைத் திறந்தேன். ஒரு கார் நின்றிருந்தது. சற்று கழிந்துதான் அது நாயரின் கார் என்று தெரிந்தது. ”சரவணன் சார் அல்லே?” ”அதே” என்றேன். ”ஞான் நாயர் சாரின்றே டிரைவரா…ஒரு லெட்டர் உண்டு” நல்லவேளை, அவன் டிரைவராக இருந்தான். தோணிக்காரனாக இருந்திருந்தால் அங்கேயே நான் பைத்தியமாகியிருப்பேன்.

நீலிமாவின் கடிதம்தான். இளநீலநிறமான தாளில் நீலநிற கையெழுத்து. நான் கனவில் பார்த்த அதே கையெழுத்து. ஆனால் எனக்கு அவள் எதுவுமே எழுதியதில்லை. அப்படியானால் எங்கே பார்த்தேன் இந்தக் கையெழுத்தை? அவள் அறையில் தாள்களை கவனமில்லாமல் எடுத்துப் பார்த்திருக்கிறேன். ஒரு சிவப்பு டைரி. அதுவா? இருக்கலாம். எண்ணங்கள் ஊடாகப்போனதனால் என் கவனம் அந்த எழுத்துக்களில் நிலைக்கவில்லை. பார்த்துக்கொண்டிருந்தேனே ஒழிய என்னால் வாசிக்க முடியவில்லை. திரும்பி அமர்ந்து கொண்டேன். அந்த அசைவில் என் மனதைக் கலைத்து அடுக்கியவன் போல என்னால் வாசிக்க முடிந்தது.

சுருக்கமாக ஆங்கிலத்தில் நீலிமா எழுதியிருந்தாள். ‘அன்புள்ள சரண், உங்கள் மனம் எப்படி போகிறது என்று என்னால் ஊகிக்க முடிகிறது. உங்களுக்கு முழுச் சுதந்திரத்தையும் கொடுப்பதற்காகவே இதை எழுதுகிறேன். நான் எந்தவகையிலும் உங்களை கட்டுப்படுத்த விரும்பவில்லை. நீங்கள் எந்தவிதமான குற்றவுணர்ச்சியும் இல்லாமல் என்னைவிட்டுச் செல்லலாம்.  உங்கள் விருப்பப்படி வாழ்க்கையை அமைத்துக்கொள்ளலாம். மீண்டும் தொடர்பு கொள்ளாமலும் இருக்கலாம். எனக்கு எந்தவகையான வருத்தமும் இல்லை. நான் இந்த உறவின் இதுவரையிலான நாட்களையே பெரிய அதிருஷ்டமாக நினைக்கிறேன். அன்புடன் நீல்”

கடிதத்தை நாலைந்து முறை மீண்டும் மீண்டும் வாசித்தேன். மடித்து டீபாயில் வைத்துவிட்டு சோபாவில் கால் நீட்டி படுத்துக்கொண்டேன். கண்களை மூடியபடி நீலிமாவை நினைக்க முயன்றேன். ஆச்சரியமாக அவள் முகமே அகத்தில் தெளியவில்லை. கலங்கிய நீரின் நிழல்கள் போல என்னென்னவோ ஓடிக்கொண்டிருந்தது.

பின்பு எழுந்து அமர்ந்தேன். மீண்டும் கடிதத்தை வாசித்தேன். அந்தக் கடிதத்தை நான் ஏன் கனவு கண்டேன்? அதை நான் எதிர்பார்த்திருந்தேனா என்ன? அப்படித்தான் இருக்கவேண்டும். இதோ நான் எதிர்பார்த்த கடிதம் வந்துவிட்டது. அவ்வளவுதான். அப்போது ஒன்று தோன்றியது, அந்த வீட்டில் இனிமேல் என்னால் ஒரு கணம்கூட இருக்க முடியாது. அந்த இருவீடுகளுமே பேய்வீடுகளாக ஆகிவிட்டிருந்தன. இரவின் தனிமையில் அங்கே இருந்தால் என் சித்தம் கலங்கிவிடும்.

நான் வேகமாக படிகள் ஒலிக்க ஏறி மாடிக்குச் சென்றேன். என் உடைகளை அள்ளி அள்ளி பெட்டியில் வைத்து மூடினேன். பொருட்களை எடுத்து அடுக்கினேன். பெட்டியுடன் கீழே வந்தேன். ஒரு கணம் வீட்டை திரும்பிப் பார்த்தேன். இந்த வீடு இனி என் நினைவுகளில் எப்படி இருக்கும்? ஒரு பேய்வீடாக மாறிவிடுமா என்ன? கதவைத்திறந்து வெளியே சென்று பூட்டிய பின்னர்தான் நீலிமாவின் கடிதத்தை நினைவுகூர்ந்தேன். கதவைத்திறந்து அதை எடுத்துக்கொண்டு மிஈண்டும்பூட்டினேன். காரை எடுத்துக்கொண்டு கிளம்பினேன்.

ரயிலில் செல்லலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் சட்டென்று காரிலேயே போகலாமென்று தோன்றியது.  ரயிலிலொ அல்லது விமானத்திலோ சும்மா அமர்ந்திருப்பது என்னால் முடியாது. நான் இந்த இடத்தை விட்டுப்போவது என் மனதுக்கு உறுதியாக வேண்டுமென்றால் நான் இங்கிருந்து ஓட வேண்டும். காரை நானே ஓட்டி எனக்குப்பின்னால் நகரமும் கட்டிடங்களும் காயல்களும் விலகிச்செல்வதை காணாவேண்டும். ஓடிச்செல்லும் சாலையில் இரவெல்லாம் இருந்துகொண்டிருக்க வேண்டும்

 

உண்ணிகிருஷ்ணனுக்கு போன்செய்து நகரத்தில் வந்து என்னிடமிருந்து சாவியை வாங்கிக்கொள்ளச் சொன்னேன். காரை சென்னையில் இருந்து திரும்பக் கொண்டுவர ஏற்பாடு செய்வதாக டிராவல்ஸிடம் சொல்லும்படிச் சொன்னேன். பெருமூச்சு விட்டுக்கொண்டு நிதானமாக காரை ஓட்ட ஆரம்பித்தேன். தென்னைமரங்கள் நடுவே காயல் ஒளி நெளியும் அலைகளுடன் என்னை விட்டு பிரிந்து மறைந்தது.

[மேலும்]

முந்தைய கட்டுரைஇரவு 22
அடுத்த கட்டுரைஇரு நூல்கள்