இரவு 22

இறந்தவர்கள்

மௌனமாக நடந்து

சென்றுசேரும் இடம்

இருண்டிருக்கும்.

அவர்கள் தங்கள் இறந்தகாலத்தில்

வாழ்வதற்கு அனுமதிக்கும்

தனிமை கொண்டிருக்கும்.

விடிய முடியாததாக இருக்கும்

 

நான் மயானத்தை அடைந்தபோது அதன் முன் ஐஜியின் சிவப்பு விளக்கு கொண்ட கார் நிற்பதைக் கண்டேன். வேறு பல கார்கள் நின்றன. மேனன் அவரது நண்பர்களுக்கு தகவல்தெரிவித்து அவர்கள் வந்து கூடிவிட்டார்கள் என்று தெரிந்தது. அனைவருமே உயர்நிலையில் உள்ளவர்கள் என்பதை கார்கள் காட்டின.  டிவி பத்திரிகை என எவருமே அப்பகுதியில் இல்லை. நான் காரை அந்த பெரிய ப வடிவக் கட்டிடத்தின் முன்னால் இருந்த முற்றத்தில் நிறுத்தியபோது காவலன் வந்து ”இவிட நிறுத்தருது சார்” என்றான். ”அட்மிரல் சார் இருக்காரா?” என்றேன். உண்டு. ”ஐஜி வந்நிட்டுண்டு. சடங்ஙுகள் நடக்குந்நு” என்றார் மரியாதையுடன்.

நான் இறங்கி ”கார் ஓட்டுவீங்களா?” ”ஓட்டும் சார்” ”அப்ப இதை எடுத்து பார்க்கிங் போடுங்க” என்று சாவியைக் கொடுத்துவிட்டு உள்ளே சென்றேன். உள்ளே நிறைய பொலீஸ்காரர்கள் நின்றிருந்தார்கள்.. நான் நேராகச் சென்று இன்ஸ்பெக்டரிடம் ”மிஸ்டர் செபாஸ்டின்?” என்றேன். ”எஸ்…” என்றார். ”நான் சரவணன். அட்மிரலின் ஆடிட்டர்களில் ஒருவன். அவரை பார்க்க வந்தேன். மிஸ்டர் சதானந்தனைப் பார்த்தேன்.” ”கமின்” என்று அழைத்துச்சென்றார். குண்டான இளைஞன். அங்கிருந்த வெக்கையில் வியர்த்து வழிந்துகொண்டிருந்தான். காக்கிச்சட்டை முதுகில் ஒட்டியிருந்தது.

”அட்மிரல் சடங்குகள் செய்துகொண்டிருக்கிறார். நீங்கள் கொஞ்ச நேரம் இங்கே காத்திருக்க வேண்டியிருக்கும்” என்றார். நான் அந்த வரவேற்பறையில் இருந்த அலுமினிய நாற்காலியில் அமர்ந்துகொண்டேன். மணி ஐந்து தாண்டிவிட்டிருந்தது. என்னருகே மேலும் இருவர் காத்திருந்தார்கள். ஒல்லியாக கண்ணாடிபோட்டு நரைத்த நறுக்கு மீசை வைத்த மனிதர் என்னிடம் ”நீங்கள் யார் என்று நான் தெரிந்துகொள்ளலாமா?” என்றார். ”ஆடிட்டர்” ”எந்த ஊர்?” ”சென்னை” அவர் குரலைத்தணித்து ”மேனன் இந்த வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்படுவாரா?” என்றார். நான் அவரையே பார்த்தேன். வம்புக்கான பேராவல் முகத்தில் ததும்பியது.”தெரியவில்லை.” ”இருக்காது. ஏனென்றால் இது மிகவும் தெளிவான வழக்கு. குற்றவாளி ஒரு மனநோயாளி.”

”குற்றவாளி மிகவும் தெளிவாகத்தான் இருக்கிறாராம். எல்லாவற்றையும் சொல்லிவிட்டாராம்” என்றார் அப்பாலிருந்த தொந்தி வழுக்கை ஆசாமி. காதில் சிறகுகள் போல முடி சிலிர்த்து நின்றது அவருக்கு. ”அந்த பெங்காலிக்கும் இந்த பெண்மணிக்கும் கள்ள உறவு இருந்திருக்கிறது. அதை தட்டிக்கேட்டார் என்றுதான் சுவாமியை கொன்றான் என்கிறார்கள்”. கண்ணாடிக்காரர் ”யார் சொன்னது? இரண்டுபேருக்குமே உறவிருந்ததாகத்தான் சொல்கிறார்கள். இந்த மாதிரி  ஒழுக்கமற்ற பெண்கள் எல்லா ஆண்களையும் ஏமாற்றிவிடுவார்கள். யட்சிகள் அல்லவா? ஆணின் ரத்தத்தைக் குடித்தால்தான் அவர்களின் தாகம் அடங்கும்…” என்றார்.

நான் தலையை கைகளில் தாங்கி கண்மூடி அமர்ந்திருந்தேன். என் கண்ணுக்குள் குருதி சுழிப்பதைக் கண்டேன். கீழே விழுந்துகொண்டே இருப்பதுபோன்ற உணர்வு ஏற்பட்டது. இந்நேரம் கமலாவின் உடல் எரிமேடையில் ஏற்றப்பட்டிருக்கலாம். அவரது சிரித்த முகம் என்னுள் மின்னிச்சென்றது. எத்தனை பிரகாசமான கண்கள். சிறுமியுடையது போல உற்சாகம் ததும்பும் முகபாவனை. முகங்களுக்கு அப்பால் நாமறியாத ஒரு இருண்ட வெளி இருக்கிறது. இல்லை, இப்போது எதைப்பற்றியும் யோசிக்கக் கூடாது. ஆனால் மனம் அங்கேயே திரும்ப திரும்ப வந்தது.  அதே முகம், அதே சிரிப்பு. எங்கே போயிருக்கும் அவையெல்லாம்?

காலடியோசைகள் கேட்டன, எல்லாரும் எழுந்தபோது நானும் எழுந்தேன். மேனன் கூடவே இரு தடித்த உயரமான மனிதர்களுடன் வந்தார். ஒருவர் ஐஜி என்று ஊகித்தேன். மேனனின் தலைமயிர் ஈரமாக மண்டையில் வெண்ணுரை போல ஒட்டியிருந்தது. கண்களின் கீழே சுருக்கங்கள் அடர்ந்திருந்தன. ஆனால் மிடுக்குடன் திடமாகவே வந்தார். ”ஆ, சரவணன்!” என்றார். ஐஜியிடம் திரும்பி ”மீட் திஸ் இஸ் மிஸ்டர் சரவணன்.” என்றார். ஐஜி கனத்த கரங்களை நீட்டி குலுக்கியபடி ”ஹல்லோ, ஐயம் நாரயண மேனன். ஐஜி கிரைம்” என்றார். நான் ”கிளாட் டு மீட் யூ” என்றேன். அபத்தமாக உடனே உள்ளே உணர்ந்தேன்.இது ”கேசவபிள்ளை. ஹி வாஸ் எ கேணல்…” கேசவபிள்ளை கைநீட்டியபடி ”மேனன் உங்களைப்பற்றிச் சொன்னார்.” என்றார்.

அவர்களுக்குப் பின்னால் இருபது பேர் வரைக்கும் வந்தார்கள். மௌனமாக தலை குனிந்து. மேனன் திரும்பி ”அவங்கள்லாம் கமலாவொட ரிலேட்டிவ்ஸ். அவளுக்கு ரெண்டு அண்ணன்கள். ரெண்டுபேரும் இப்ப இல்லை. மூத்த அண்ணனுக்கு ஒருபையன். தட் கை. கிரீஷ் மேனன். ரெண்டாவது அண்ணனுக்கு ரெண்டு பையன் ஒரு பொண்ணு… ராகவ் மேனன், அஜய் மேனன். மூணுபேருமே எஞ்சினியர்ஸ்” நான் அவர்களுக்கு கைகொடுத்து ஹலோ சொன்னேன். அந்த சம்பிரதாயங்களில் எல்லாமே உருமாறி இன்னொன்றாக ஆகிக்கொண்டிருந்தன.

”எப்ப கிட்டும் கிரீஷே?” என்றார் மேனன். ”ஒரு அரமணிக்கூர்” என்று கிரீஷ் பவ்யமாகச் சொன்னான். ”ஓக்கே லெட் அஸ் வெயிட்” என்றார் அவர். ”நமுக்கொரு சாய குடிக்காம், எந்தா மேனனே?” ஐஜி ”பின்னெந்தா?” என்றார். நாங்கள் நடந்து அந்த சுடுகாட்டிலேயே இருந்த அறைக்குள் சென்றோம். ஏழெட்டு நாற்காலிகள் கிடந்தன. நாங்கள் அமர்ந்தோம். பையன்கள் ஓரமாக நின்றுகொண்டார்கள். ”ஸோ திஸ் இஸ் த எண்ட் ஆ·ப் கமலா… அவர் கிரேட் ரிலேஷன் ஷிப்” என்றார் மேனன். ”லீவ் இட். விஜய்… இனி எந்தினு சிந்திக்கணம்?” என்றார் கர்னல்.

”ஓ நோ” என்று கைவீசினார் மேனன்.”நான் நீங்கள் நினைப்பது போல ஒன்றும் மனக்கசப்படையவில்லை. இந்த உண்மையை கொஞ்சம் கொஞ்சமாக உள்வாங்க முயல்கிறேன். இந்த உண்மை தெரிந்ததனால் எனக்கும் அவளுக்குமான முப்பத்தாறு வருட இலட்சிய உறவு இல்லாமலாகிவிடுமா என்ன? எனக்கு அவள் மேல் இருக்கும் காதல் வற்றி விடுமா என்ன? சட்டென்று ஒரு தவறு நடந்து விட்டது. அது மனித வாழ்க்கையில் சாதாரணம். அந்த தவறை வைத்து நான் அவளை மதிப்பிடவில்லை. அவள் ஒரு அழகான தேவதை..அவளுக்கு இப்படி ஒரு முடிவு..” குரல் உடைந்து மேனன் நிறுத்திக்கொண்டார். கழுத்துச்சதைகள் இறுகித்துடித்தன. ”சச் எ ஹாரிபிள் டெத்…ஷி டஸ் நாட் டிசர்வ் இட்… ரியல்¢… ஷி இஸ் சச் எ டார்லிங்…”

மௌனமாக அவர் அழ ஆரம்பித்தார். ஐஜி சங்கடமாக என்னைப்பார்த்தார். அப்போது எதுவும் சொல்லாமலிருப்பதே மேல் என்று எனக்குப்பட்டது. அவர் சில நிமிடங்களிலேயே மீண்டு வெள்ளைக் கைக்குட்டையால் கண்க¨ளையும் மூக்கையும் அழுத்தி துடைத்துக்கொண்டார். வெகுநேரம் தலைகுனிந்து அமைதியாக இருந்தார். அப்போது டீ வந்தது. அவர் நிமிர்ந்து ”ஆ, டீ” என்றபின் டீயை எடுத்துக்கொண்டு மெல்ல உறிஞ்சினார். ”தெரியுமா நாராயணன், உலகம் முழுக்க மரணத்துடன் குடியையும் சாப்பாட்டையும் இணைத்திருக்கிறார்கள் மக்கள். மரண வீட்டில் சாப்பிடுவது இல்லாத பழங்குடிச்சமூகமே இல்லை. அவை இரண்டு  அடிப்படை விஷயங்கள் அல்லவா!” என்று சிரித்தார் ”எங்காவது மரணமும் சாப்பாடும் உடலுறவும் சேர்க்கப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை”

நாராயண மேனன் புன்னகை செய்தார். கர்னல் ”டா மேனனே தான் இந்நு என்றே கூடே வாடா..நமுக்கு இந்நு நாலஞ்சு லார்ஜ் கேற்றணம்” என்றார். ”யா.. லெட் அஸ் ஸெலிபரேட் தி டெத்” என்றார் மேனன். அவரது மீசை ஈரம் உலர்ந்தது. அதை முறுக்கி கச்சிதமாக ஏற்றிவிட்டார். இரு கொக்கிறகுகள் போல அவை நின்றன. ”வேர் இஸ் மை மொபைல்?” என்றார். கிரீஷ் அதை அவரிடம் நீட்டினார். தவறிய அழைப்புகளை ஒவ்வொன்றாகப் பார்த்தார். ”கேட்டாடா பிள்ளேச்சா, ஸீம்ஸ் ஐ யம் எ விஐபி. அல்மோஸ்ட் எவ்ரிபடி கால்ட். இன்க்லூடிங் மினிஸ்டர்ஸ்” ”அது பின்னே, வேணமல்லோ” என்றார் கர்னல் ”ஒரு யுத்தம்போலும் காணாதே ரிட்டயர் ஆய மகா வீரனல்லே தான்”

”முட்டாள்…” என்றார் மேனன் ” அந்தக்காலத்தில் கடற்படையில் ஓட்டை இல்லாத கப்பலே இல்லை தெரியுமா? ஒரு கடற்ப¨டைக்கப்பலில் ஆயிரம் கிலோமீட்டர் பயணம்செய்தால் அதற்கே வீரசக்ரா கொடுக்க வேண்டும்.நான் ஒருமுறை அந்தமானுக்கு போகும்போது ஒரு கப்பலில்  சோதனைக்குப் போனேன். கப்பலில் எல்லாமே இருந்தன. கஞ்சா வரை. ஆனால் பெண் இல்லை. காப்டனிடம் கேட்டேன், ஏன் பெண்ணே இல்லை என்று. காப்டன் நல்ல நகைச்சுவை உணர்ச்சி கொண்ட சர்தார்ஜி. அவர் சொன்னார் இந்த கப்பலில் இருக்கும்போது எங்கள் கைகால்கள் மட்டும்தான் விரைத்துக்கொள்கின்றன அட்மிரல் சார் என்று…ஹாஹாஹா!”

கர்னல் நிஜமாகவே வெடித்துச் சிரித்துவிட்டார். மேற்கொண்டும் அவரால் சிரிப்பை அடக்க முடியவில்லை. மிக எளிமையான மனமுள்ள மனிதராக இருக்கவேண்டும் அவர் என நினைத்துக்கொண்டேன். ஐஜி மெல்ல புன்னகை செய்து நிறுத்திக்கொண்டார். ”மேனனே இப்பழாடா நீ சரிக்கும் ஒரு பட்டாளக்காரனாயது” என்றார் கர்னல்.

”சர்தார்ஜிகள் இந்த விஷயத்திலே பெரிய கில்லாடிகள். அவர்களுக்கு தென்னிந்தியர்கள் மேல் மதிப்பே கிடையாது. மூளை மட்டும் இருந்தால் போதுமா என்பார்கள். ஒருமுறை இப்படித்தான் கண்ட்லா துறைமுகத்துக்கு நள்ளிரவில் வந்தபோது கப்பலில் காண்டம் இல்லை. சர்தார்ஜிக்கு ஒரு யோசனை வந்திருக்கிறது. நாலைந்து ரப்பர்கிளவுஸ்களை எடுத்து விரல்களை கத்திரியால் வெட்டி பகிர்ந்து அளித்திருக்கிறான். கட்டைவிரல் உத்தர பிரதேசத்தானுக்கு. சுண்டுவிரல் மலையாளிக்கு…”. கர்னல் சிரித்துப் புரையேறி ”ஓ நோ” என்றார். ”சர்தார்ஜி மட்டும் விரல் வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம். சாக்ஸே போதுமாம்” கர்னல் சிரித்துக்கொண்டு எழுந்து நின்று இடுப்பில் கைவைத்து அதிர்ந்தார்.

”ஆண்குறியை பெரும்பாலான நேரங்களில் ஜோக் அடிக்க பயன்படுத்துபவன்தான் படைவீரன் என்று மனேக்ஷா சொல்லியிருக்கிறார்.” மேனன் சிரித்துக்கொண்டே சொன்னார். ”நம்முடைய பீரங்கிகளும் அப்படித்தான் என்பார். ஜோக் வழியாகவே அவை துருப்பிடித்து போகின்றன” சிரித்து அவருக்கு கண்களில் நீர் தளும்பியது. ”ஐ வர்க்ட் வித் த கிரேட் பார்ஸி ·பார் த்ரீ இயர்ஸ். வாட் எ மேன்! எ ரியல் சோல்ஜர். எந்தா ஒரு ஹ்யூமர் சென்ஸ். எந்தா ஒரு லைவ்லினெஸ்…” ஐஜி சிரித்து ”அதுகொண்டா தான் அங்ஙேரே இமிட்டேட் செய்யுந்நது” என்றார். ”நாட் இமிட்டேஷன். இன்ஸ்பிரேஷன். எஸ் ஐயம் இன்ஸ்·பையர்ட் பை ஹிம்…” மேனன் சொன்னார்

அலுவலக ஆள் வந்து ”ரெடியாணு சார்” என்றான். ”ஓக்கே ஓக்கே” என்று மேனன் எழுந்துகொண்டார். அனைவரும் குழப்பமான மனநிலையில் செல்பவர்கள் போல வெளியே சென்றார்கள். மேனன் பல பதிவேடுகளில் கையெழுத்திட வேண்டியிருந்தது. அவரது கைகள் நடுங்குவதைக் கண்டேன். பேனாவை பேரேடு மேல் வைத்துவிட்டு அப்படியே நின்றார். ”சார்” என்றான் வேலையாள். ”எஸ்”’ என்று திடுக்கிட்டு விழித்தார். ”இதாணு சார்” ஒரு சிறிய மண்பானையை அவன் நீட்ட மேனன் அதை வாங்கிக்கொண்டார். அவர் உதடுகள் வளைந்தபோது சிரிப்பது போலிருந்தது. ”ஓக்கே..கிரிஷே” கிரீஷ் முன்னால் வந்து புரிந்துகொண்டு பணம் கொடுக்க ஆரம்பித்தான்

மேனன் அந்த கலசத்துடன் முன்னால் வந்தார். கண்கள் என்னை தேடிவந்து தீண்டின.”ஸோ, திஸ் இஸ் கமலா.. இனிமே இதான் கமலா.. என்ன ஒரு அபத்தம் இல்ல?” பேசிக்கொண்டிருக்கையிலேயே முகத்தின் வலப்பக்கம் கோணலாக கழுத்துச்சதைகள் இழுபட மெல்லிய கேவல் ஒலியுடன் அழ ஆரம்பித்தார். ”ஓ நோ…இட் இஸ் ஸோ க்ரூயல்… ஷி இஸ் சச் எ டார்லிங்… ” என்னால் அவரை பார்க்க முடியவில்லை. நான் பின்னால் நகர்ந்துவிட்டேன். ராகவ் மேனன் வந்து கலசத்தை வாங்கிக்கொண்டார்

வெளியே வந்து அனைவரும் கார்களில் ஏறிக்கொண்டார்கள். மேனன் கர்னலின் காரில் ஏறிக்கொண்டார். அதற்குள் அவர் மீண்டு வந்திருந்தார். கர்னல்  என்னிடம் ”ஆர் யூ கமிங் வித் அஸ்? நமுக்கு நாலஞ்சு லார்ஜன் ஆவாம்” என்றார். மேனன், ”ஓ, ஹி இஸ் எ ஸில்லி டீட்டோட்டலர்…லீவ் ஹிம்” என்றார். நான் ”அப்றம் வந்து பாக்கிறேன் சார்” என்றேன். ”ஓகே…” என்று சிரித்துக்கொண்டு சொல்லி மேனன் கிளம்பிச்சென்றார். கார்கள் இரைந்தபடிச் சென்றன.

நான் என் காருக்குத்திரும்பினேன். ஸ்டீரிங்கைப்பிடித்துக்கொண்டு அப்படியே அமர்ந்திருந்தேன். எங்கே செல்வதென்று தெரியவில்லை. மணி ஆறரை ஆகிவிட்டிருந்தது. திரும்ப என் வீட்டுக்குச் செல்வதைப்பற்றி நினைக்கவே முடியவில்லை. அங்கே எல்லாமே மாறிவிட்டிருக்கின்றன என்று பட்டது. ஒருவேளை அங்கே வீடே கூட இல்லாமலிருக்கலாம்.  ஒருவெளை அந்த இடம் ஒரு வெறுமையான வெட்டவெளியாக இருக்கலாம்.

தாமஸை பார்க்கப்போகலாமென எண்ணி காரை திருப்பி அரைமணி நேரம் ஓட்டினேன். அதன்பின்பு அவரை சந்திப்பது மிகமிகக் கடினமான ஒன்றாக இருக்கும் என்ற எண்ணம் ஏற்பட்டது. திரும்பி நகருக்குள் வந்தேன். அந்தி இருள ஆரம்பித்திருந்தது. போலீஸில் ஒரு விரிவான ஸ்டேட்மெண்ட் கொடுக்க வேண்டியிருக்கும் என்று டிஎஸ்பி சதானந்தன் சொன்னது நினைவுக்கு வந்தது. ஆனால் இனிமேல் அதற்கான தேவை இருக்காது, எல்லாம் அவரது கைவிட்டு மேலே சென்றிருக்கும் என்று தெரிந்தது

என்னையறியாமலே வந்ததுபோல திரும்ப வீடுவந்தேன். நேராக மாடிக்குச் சென்று படுத்துக்கொண்டேன். மீண்டும் மீண்டும் புரண்டபடியே இருந்தேன். கமலாவின் முகம். சிரிக்கும் கண்கள் சிரிக்கும் கன்னங்கள் சிரிக்கும் உதடுகள் சிரிக்கும் உடல்…அரைத்தூக்கம்போல மயங்கிச்சென்றபோது நீலிமா நினைவு வந்தது. இன்று முழுக்க அவளைப்பற்றி எண்ணாமலேயே இருந்திருக்கிறேன்!

எழுந்து அமர்ந்து பிரமித்தவன் போல இருட்டையே பார்த்துக்கொண்டிருந்தேன். பெருமூச்சுடன் எழுந்து முகம் கழுவியபின் கணிப்பொறியை எடுத்து விரித்து இணையத்தை இயக்கினேன். என்ன வாசிப்பதென்று தெரியவில்லை. தொடர்பே இல்லாமல் எதையெதையோ சொடுக்கினேன். பாலியல் தளங்களில் சில நிமிடங்களுக்கு மேல் ஆர்வம் நீடிக்கவில்லை. மீண்டும் செய்தித்தளங்களில் அலைந்தேன். ஏதோ ஒரு விவாதத்தளத்திற்குள் நுழைந்தேன்.  அணு ஒப்பந்தத்தைப்பற்றி காரசாரமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். போலி மின்னஞ்சலில் போலி பெயரில் பதிவுசெய்து உள்ளே சென்றேன். ஏற்கனவே எழுதியிருந்த ஒருவரை மிகக் கடுமையாகத் தாக்கி ஒரு பதிவு எழுதினேன்.

வினோதமான ஒரு நிறைவுடன் வெளிவந்தேன். மீண்டும் வேறு ஒரு விவாதத்தளம். அங்கே ஈழப்பிரச்சினை. அங்கும் அப்படி ஒரு உக்கிரமான பதிவு போட்டேன். என்னுடைய மொழியில் வரும் கசப்பும் நக்கலும் எனக்கே ஆச்சரியமாக இருந்தது. மீண்டும் இன்னொரு இணையதளத்தில் பிரபலம் ஒருவரை வசைபாடி எழுதிவிட்டு குறுகுறுப்புடன் முதல் தளத்திற்குச் சென்று பார்த்தேன். என் கருத்துக்கு இருவர் கடுமையாக எதிர்வினையாற்றியிருந்தார்கள். அவர்களை வசைபாடி எழுதிவிட்டு மீண்டும் அடுத்த தளங்களுக்குச் சென்றேன்.

அந்த கொந்தளிப்பும் வேகமும் மெல்ல தணிகையில் நள்ளிரவாகியிருந்தது. என் கைகளும் கண்களும் சோர்ந்து விட்டிருந்தன. மடிக்கணினியை மூடி அப்படியே தூக்கி வீசிவிட்டு குப்புற விழுந்தேன். மெல்ல தூங்கிப்போனேன். எத்தனை நேரம் தூங்கியிருப்பேன் என்று தெரியவில்லை. மிக அசாதாரணமான ஓர் உருவெளிக்காட்சியைக் கண்டேன். கனவில் கனவெனும் பிரக்ஞை ஓடிக்கொண்டிருக்கும். இது ஒருவகை நிஜமாகவே நிகழ்ந்தது. அதன் துல்லியமான தர்க்கம் விழித்துக்கொண்டபின் என்னை துணுக்குறச் செய்தது.

நான் தூங்கிக்கொண்டிருக்கும்போது கீழே வாசல் மணி ஒலிக்க எழுந்து சென்று கதவைத் திறந்தேன். கறுப்புக்கண்ணாடியுடன் கமலா நின்றிருந்தார். நான் பிரமித்து நின்றிருக்க ”என்ன வீடு பூட்டியிருக்கு? எங்கே விஜய்?” என்றார். ”நீங்க…நீங்க இன்னைக்கு..” என்று நான் திணற ”என்ன பிரச்சினை?” என்று கேட்டபடி உள்ளே வந்தார். ”இல்லை இன்னைக்கு ஒரு நியூஸ்…” ”என்ன நியூஸ்?”  நான் ஓடிப்போய் டீபாயில் இருந்து செய்தித்தாளை எடுத்துக்காட்டினேன். மலையாள மனோரமாவின் தலைப்புச்செய்தியே ”சுவாமிஜியும் சிஷ்யயும் கொல்லப்பெட்டு” என்பதுதான்

சரசரவென் வாசித்துவிட்டு ”அய்யோ இது நான் இல்லை. வேற யாரோ” என்றார் கமலா. ”உண்மையாவா? ” ”இதென்ன கேள்வி. செத்துப்போனா பின்னே நான் எப்டி வந்து இங்கே நிப்பேன்…” ”ஆமால்ல” ” அந்தப்பெண்ணை யாரோ நான்னு சொல்லிட்டாங்க. ரத்தம் மூடியிருந்ததனாலே தெரியாம போயிருக்கும். விஜய் அங்கேதான் போயிருக்காரா?” ”ஆமா” அதைச் சொன்ன பிறகுதான் எனக்கு எல்லாம் தெளிவாகி உவகை பொங்கியது. மார்பின் எல்லா பாரமும் விலக நான் உற்சாகமாக சிரித்துக்கொண்டு ”மை காட்! என்ன ஒரு ஷாக் பாருங்க…அப்பாடா” என்றேன். என்னுடன் சேர்ந்து கமலாவும் சிரித்தார். அப்போது விழித்துக்கொண்டேன்.

விழித்தபோது என்னுடைய மனப்பாரமெல்லாம் விலகி நான் சிரித்த முகத்துடன் இருந்தேன். சில கணங்கள் சிரித்தபடி கிடந்த பின்புதான் அது கனவென உணர்ந்தேன். எழுந்து அமர்ந்து அந்தக் கனவை ஆராய்ந்தபோதுகூட அந்த உல்லாசம் மனதில் மிச்சமிருந்தது. அதுவரை என்னிடமிருந்த இறுக்கமும் கனமும் விலகி மிக எளிதாக இருந்தேன். ‘என்ன ஒரு கனவு!’ என்று மட்டும் உள்ளூர திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தேன்.

மீண்டும் படுத்துக்கொண்டபோது அதுவரை எனக்கிருந்த உள்பதற்றம் முற்றிலும் விலகியிருந்ததை உணர்ந்தேன். படுக்கும்போது எனக்குள் ஓய மறுத்து இறுகி நின்றிருந்த நரம்புகள் இப்போது இயல்பாக தளர்ந்து அமைந்தன. நான் மீண்டும் கண்ணயர்ந்த போது என் அம்மாவைப் பார்த்தேன். ஏதோ ஒரு கோயில் . உயரமான திண்ணையும் தூண்களும் இடப்பக்கம் வர வலப்பக்கம் கருவறை. பிராகாரத்தில் நான் அம்மாவின் பட்டுப்புடவையை பிடித்துக்கொண்டு நடந்துகொண்டிருந்தேன். அதன்பின் அம்மா என்னை ஒரு கல்தரையில் துண்டு விரித்து படுக்கவைத்தாள். என் மேல் மெல்ல தட்டி ‘தூங்கணும்..அப்பதான் சமத்து என்ன?’ என்றாள்.

காலையில் நான் விழித்துக்கொண்டபோது எல்லாமே கனவு போல முற்றிலும் விலகி பின்னால் சென்றிருந்தது. உற்சாகமாக உணர்ந்தேன். மூச்சில் ஒரு மெல்லிய பாட்டு வருவதை கழிப்பறை சென்றபோது உணர்ந்தேன். ‘மாலையில் யாரோ மனதோடு பேச’ என்று பாடியபடி பல்தேய்த்து முகம் கழுவி கீழே வந்தேன். நன்றாகவே விடிந்திருந்தது. உண்ணிகிருஷ்ணன் வந்திருந்தார். என்னைக் கண்டதும் எழுந்து ”எல்லாபேப்பரிலும் நியூஸ¤ண்டு” என்றார்.

நான் செய்தித்தாள்களை கவனமில்லாமல் விரித்தேன். மலையாள மனோரமாவின் முதல்பக்கத்தைப் பார்த்தது இதயம் இறுகப்பற்றப்பட்டது போல் உணர்ந்தேன். நான் அந்தப்பக்கத்தை கிட்டத்தட்ட அப்படியே பார்த்திருந்தேன். நேற்றே. அதெப்படி? ஆம் அந்தக் கனவில். ஆச்சரியமாக அதையே மீண்டும் மீண்டும் பார்த்தேன். அந்தப்பக்கத்தை தான் பார்த்தேனா, இல்லை இந்தப்பக்கம் அந்தக்கனவை நினைவூட்டுகிறதா?

இதைப் புரிந்துகொள்ளவே முடியாது என்று நினைத்துக்கொண்டேன். மனோரமாவின் லே-அவுட் என் ஆழ்மனதில் இருந்திருக்கிறது. அது கனவாக வெளிவந்திருக்கிறது. ஆனால் பிணங்கள் கிடக்கும் கோலம்கூட அப்படியேதான் இருக்கிறது. இல்லை, இந்தப்படத்தை வைத்து நான் அக்கனவை திரும்ப எடுக்கிறேன். அதுதான். பெருமூச்சுடன் செய்தித்தாளை மடித்து வைத்தேன். எதையுமே வாசிக்கத் தோன்றவில்லை.

பங்கஜம் காபி கொண்டுவந்தாள். குடித்து விட்டு டிவியை போட்டேன். செய்திகளை ஒதுக்கி கிரண் டிவியை போட்டேன். பழைய பாட்டுகளை ஒரு அதிஒல்லியான சிறுமி கேட்டு வாங்கி சமர்ப்பணம் செய்துகொண்டிருந்தாள். கறுப்புவெள்ளை படங்களில் பெண்பிள்ளைத்தனமான நஸீரும், கனத்த காளைக்கழுத்துடன் சத்யனும், மோவாய் தொங்கும் மதுவும் நடந்துகொண்டே பாடினார்கள். கறுப்புவெள்ளை ஒருவகை நிழல் விளையாட்டு போலிருக்கிறது. அதுவே பாடல்களுக்கு ஒரு கனவுத்தன்மையை அளிக்கிறது. ‘அகலே நீலாகாசம் அலதல்லும் மேக தீர்த்தம்’ என்ன ஒரு உச்ச ஸ்தாயி பாட்டு. நடுவே நான் ஏதோ எண்ணங்களுக்குள் சென்றேன். மீண்டும் பாடல் ‘கிருஷ்ணபட்ச கிளி சிலச்சு…’

பாடல் முடிந்ததும் மேலே சென்று கணினியை எடுத்து விரித்து மின்னஞ்சல்களைப் பார்த்தேன். சிறிய ஆவலுடன் நேற்று நான் கருத்து போட்ட இணைய தளங்களை போய் பார்த்தேன். பலர் என்னை வசைபாடி எழுதியிருந்தார்கள். அவற்றை வாசிக்கையில் முதலில் சிறிய புன்னகை வந்தது. பின்பு மெல்ல அவ்வசைகள் என் அகங்காரத்தைச் சீண்டுவதை உணர்ந்தேன். வெறும் நிழலுருவாக இருந்தாலும் அந்த இணைய ஆளுமையும் நான் தானே. அந்தவசைகளுக்கு சரமாரியாக வசைபாடி பதில்களைப் போட்டேன். இனிய நிறைவு ஒன்று உருவாகியது.

கீழே வந்து சாப்பிட்டுவிட்டு மேலே சென்று மீண்டும் கணினியை எடுத்து அந்த இணைய தளங்களுக்குள் சென்றேன். என்னை பலர் மேலும் வசைபாடியிருந்தார்கள். என்னை ஆதரிக்கும் சிலர் உருவாகியிருந்தார்கள். அவர்களுக்குள் சண்டை கடுமையாக நடந்தது. நான் மிக இயல்பாக ஒரு குழுவாக ஆகிவிட்டிருந்தேன். என் குழுவை ஆதரித்தும் மற்றகுழுவை வசைபாடியும் பதிவுகளை எழுதினேன். என்னிடம் இத்தனை வன்மையான மொழி இருப்பது எனக்கே ஆச்சரியமாக,  உவகையளிப்பதாக இருந்தது.  இணையம் மிக அந்தரங்கமாக உலவ வழியமைக்கிறது.அந்தரங்கமான எந்த இடமும் மனநோய் வெளியே.

ஒருகட்டத்தில் சலித்துப்போய் மூடிவிட்டு படுத்துக்கொண்டேன். மெதுவாகக் கண்ணயரும்போது அரைக்கனவில் நீலிமா வந்தாள். அவள் எனக்கு ஒரு கடிதம் கொடுத்தனுப்பியிருந்தாள். கருமையான சட்டையற்ற உடலுடன் ஒரு தோணிக்காரன் கையில் துடுப்புடன் வந்து ”தம்புராட்டியுடே ஒரு கத்துண்டு” என்றான். அந்தக்கடிதம் வாழையிலையின் தளிரில் எழுந்தப்பட்டிருந்தது. நீலிமாவின் கையெழுத்து நீளவாட்டில் சரிந்து நீலநிற மையால் எழுதப்பட்டிருந்தது. அவள் அதில் என்ன எழுதியிருக்கிறாள் என என்னால் வாசிக்க முடியவில்லை. கூர்ந்து பார்க்கும்தோறும் எழுத்துக்கள் மங்கலடைந்தன

விழித்துக்கொண்டேன். மீண்டும் கனவு! ஆனால் நான் தூங்கியது போலவே தோன்றவில்லை. நான் படுத்திருப்பதும் ஏஸியின் உறுமலும் எல்லாம் எனக்கு நன்றாகவே நினைவிருந்தன. நீலிமாவை ஏன் பிரக்ஞை மயங்கும்போது மட்டுமே நினைவுகூர்கிறேன். விழித்திருக்கும்போது அவளைப்பற்றி நினைப்பதே இல்லை. நான் இவ்வாறு செய்வதெல்லாமே அவளைப்பற்றி நினைப்பதை ஒத்திப்போடுவதற்காகத்தானா?

மேனன் அவரது வீட்டில் இருப்பது போல எனக்கு ஓர் உள்ளுணர்வு வந்தது. கீழே இறங்கி வந்தேன். அது உள்ளுணர்வல்ல, வெளியே கேட்ட சத்தங்களை வைத்து என் மனம் அனிச்சையாக ஊகித்ததுதான் என்று தோன்றியது. மேனன் வீட்டுமுன் இரு கார்கள் நின்றன. ஒரு மினிலாரியில் பொருட்கள் ஏற்றப்பட்டன. மரங்கள் நடுவே நடந்து அங்கே சென்றேன். கறுப்புக்கண்ணாடி இல்லாமல் என் கண் அதிகமாகக் கூசவில்லை. வெயிலை மட்டும் பார்க்க முடியவில்லை. ஒருநாளில் பகலுக்கு கண் பழகிவிட்டிருந்தது.

[மேலும்]

முந்தைய கட்டுரைபாலாவுக்கு விருது
அடுத்த கட்டுரைஇரவு 23