இரவு 21

குருதி
உறைந்து
கனத்து
பூச்சிகளால் ரீங்கரித்து
உலர்ந்து
கறுப்பதுபோல்
வருகிறது இரவு

 

நான் உசுப்பி எழுப்பப் பட்டபோது கூரிய பளபளக்கும் வாள்போல என் உடல் மீது  குறுக்காகக் கிடந்த வெயிலைத்தான் முதலில் பார்த்தேன். ஜன்னல் சற்றே திறந்து கண்கூசும் ஒளிக்கோடாக இருந்தது. ”சார்” நான் திடுக்கிட்டு எழுந்து ”யாரு?” என்றேன். ‘உண்ணிகிருஷ்ணனாக்கும் சார். சுவிச்சு எவிடேந்நு தெரியாமல் நான் ஜன்னல் துறந்நேன்” நான் லுங்கியைக் கட்டிக்கொண்டு எழுந்து நேரத்தைப்பார்த்தேன். மணி மூன்றரை. ”என்ன?” என்று எரிச்சலுடன் கேட்டேன்.

”சார், பக்கத்துவீட்டிலே போலீஸ் வந்நிருக்கு” நான் புரியாமல் விழித்து ”என்னது?” என்றேன். ”போலீஸ¤ சார்…போலீஸ் வந்நிருக்கு.. பயங்கரமான ஸம்பவங்ஙள் நடந்நு போச்சு… ” குரலைத்தாழ்த்தி ”அந்த மேனோன்ஸ்த்ரீயை ஆரோ கொந்நு போட்டாங்க” என் மூளை அப்போதும் இயங்கவில்லை. அவர் என்னருகே குனிந்து ”அந்த மேனோன் சாருக்க வை•பை கொந்நு போட்டாங்க சார்”

நான் குதித்து எழுந்து நின்றேன். என் தொடை அநிச்சையாக படபடவென ஆடியது. கண்கள் மங்கலாகி வந்தன. ”என்னது? என்னய்யா சொல்றே?” ”அந்த ஸ்திரீ…” ”ஆரு கமலாவா?” ”அதேதான் சார். அவள் இந்நு காலையிலே காரிலே ஒரு ஆசிரமத்துக்கு போயிரிக்காள். அங்கே ஒரு சுவாமியும் இவளும் ஒந்நா இருந்நதைக் கண்டு அவ்விடம் உள்ள ஒரு பெங்காள்காரன் ரண்டாளையும் வெட்டிக் கொந்நுபோட்டான்” நான் தள்ளாடி மெத்தையில் விழுந்து விட்டேன்.”சாரே, சாரே”

காய்ந்த உதடுகளுடன் தண்ணீர் என சுட்டிக்காட்டினேன். அவர்  தண்ணீரை விட்டு எனக்கு தரும்போது தளும்பி தரையில் கொட்டியது. என்னால் டம்ளரைச் சரியாக பிடிக்க முடியவில்லை. நீர் வாயில் தளும்பி மெத்தைமேல் கொட்டியது. குளிர்ந்த ரப்பர் பந்தாக நீர் தொண்டையில் நிற்பது போலிருந்தது. சில கணங்களுக்குப் பின்னர் சட்டென்று மொத்த உண்மையும் என் தலையை அறைந்தது.

தீச்சுட்டவனைப்போல எழுந்து கீழே ஓடி, பிரக்ஞை கொண்டு மேலே வந்து சரசரவென உடை மாற்றி மீண்டும் கீழே ஓடி, வெயிலில் கண்கூச மீண்டும் மேலே வந்து கறுப்புக்கண்ணாடியை அறையெங்கும் வெறி¢ பிடித்தவன் போல தேடி உண்ண்கிருஷ்ணன் எடுத்துக்கொடுக்க அதை வாங்கிக்கொண்டு மீண்டும் கீழே ஓடி, தென்னைமரக்கூட்டங்கள் வழியாக பாய்ந்து மேனன் வீட்டை அடைந்தேன்.

முற்றத்தில் ஒரு ஜீப் நின்றிருந்தது. காக்கி அணிந்த டிரைவர் பானெட்டில் சாய்ந்து நிற்க உள்ளே பேச்சொலிகள் கேட்டன. நான் டிரைவரிடம் ”வேர் இஸ் த இண்ஸ்பெக்டர்?” என்றேன். அவர் ”அகத்தொண்டு” என்றார். நான் படிகளில் ஏறி வாசலில் நின்றேன். உள்ளிருந்து ”ஆ முறி ஒந்நு துறந்நே” என்று சொன்னபடி வந்த இன்ஸ்பெக்டர் ”ஆரா?” என்றார். நான் என்னை அறிமுகம் செய்துகொண்டேன். ”அட்மிரல் எங்கே?” என்றேன். அவர் சூபரிண்டெண்ட் ஆ•பீஸில் இருப்பதாகச் சொன்னார்.

நான் இறங்கி வெளியே ஓடி என் வீட்டுக்குச் சென்று காரைக்கிளப்பி சாலையில் புழுதி பறக்க விரைந்தேன். மரணம். எனக்கு தெரிந்த்துதான். ஆனால் ஒவ்வொருமுறையும் அருகே பார்க்கும்போது அதன் பிரம்மாண்டமான மர்மம் மனதை உறையச்செய்துவிடுகிறது. ஒரு மனிதர் , அவரது சிந்தனைகள் உணர்ச்சிகள் நினைவுகள் அறிமுகங்கள் அனைத்துடனும் அப்படியே இல்லாமலாகிவிடுகிறார். அதெப்படி என்று மனம் பிரமித்து அரற்றி மீண்டும் பிரமித்தது. மீண்டும் வீடுதிரும்பினால் அங்கே கமலா இருக்கலாம். இல்லை போகுமிடத்தில் சிரித்துக்கொண்டு கையசைக்கலாம். இல்லை — மனம் பொங்தோரு துளிக் கண்ணீர் விட்டுவிட்டேன்.

சூபரிண்டெண்ட் அலுவலகம் மகாராஜா காலத்து இரண்டடுக்கு ஓட்டுக் கட்டிடம். பெரிய உருண்ட மரத்தூண்கள் கோண்ட அகலமான வராந்தாக்கள். தரை மட்டும் புதிதாக டைல்ஸ் போடப்பட்டிருந்தது. கரிய ஈட்டிமரக் கதவுகள். பித்தளைக் கம்பிகள் கொண்ட ஜன்னல்களுக்கு அப்பால் •பைல்கள் பிதுங்கிய அடுக்குகளின் நடுவே மின்விசிறிகள் கறகறவென சுழன்றன.

அரைக்கதவின் முன் ஸ்டூலில் அமர்ந்திருந்த பியூனிடம் நான் என்னை அறிமுகம் செய்துகொண்டேன். ”எந்தா கேஸ்?” என்றார். நான் அட்மிரல் பெயரைச் சொன்னேன். ”டி.எஸ்.பி.சதானந்தன் சாராணு நோக்குந்நது…ஆ நாலாமத்த முறியிலேக்கு பொய்க்கோ” என்றார். நான் நன்றிசொல்லி செல்லும்போது ”மற்றே தேவிடிச்சியுடே ஆளா… கறுத்த கண்ணட கண்டோ” என்று அவர் பின்னால் யாரிடமோ சொல்லும் முணுமுணுப்பொலி கேட்டது.

அவன் சுட்டிக்காட்டிய அறைக்குள் பெரிய மரப்படிகள் மேலேறின. திம் திம் என அதில் ஏறினேன். வரிசையாக அறைகளில் டிஎஸ்பி சதானந்தனின் அறையை பெயர்பலகை மூலம் அடையாளம் கண்டேன். அங்கெ நின்ற போலீஸ்காரரிடம் மீண்டும் என்னை அறிமுகம் செய்து கொண்டேன். அவன் உள்ளே சென்றபின் என்னை உள்ளே வரச்சொன்னான். கண்ணாடியை கழற்றிவிட்டு உள்ளே சென்றேன். டி.எஸ்.பிக்கு நாற்பது வயதிருக்கும். இறுக்கமான முறைப்பான உடலும் முகமும். குடி தெரியும் கண் இரப்பைகள். நிகோடின் படிந்த உதடுகள். கையசைவால் அமரச் சொன்னார்.

நான் என்னை அறிமுகம் செய்துகொண்டதும் ”மலையாளம் தெரியாதா?” என்றார். ”இல்லை” என்றேன். ”எனக்கு இங்கிலீஷ் சரியாக வராது…போலீஸ்இங்கிலீஷ் என்று ஒன்று இருக்கிறது அதுதான் தெரியும்.” என்று புன்னகை செய்தபின் ”பயப்படவேண்டாம், போலீஸ் மலையாளத்தை விட கௌரவமாகத்தான் இருக்கும்” என்று சிரித்தார். சட்டென்று அவரில் தெரிந்த அந்த நகைச்சுவை அவரை சற்று ஒளி கொள்ளச்செய்தது. நான் அந்நிமிடம் வரையிலான இறுக்கத்தை இழந்து புன்னகைத்தேன். ”எனக்கும் ஆடிட் இங்கிலீஷ்தான் தெரியும்” என்றேன்.

என்னைப்பற்றி சுருக்கமாக விசாரித்தார். நான் சொல்லிக்கொண்டிருக்கும்போதே இணையத்தில் தட்டி என்னைப்பற்றிய பக்கத்தை எடுத்துவிட்டார். ”…ரன்னிங் எ பி•ப்டி க்ரோர் ஆர்கனைஸேஷன்..” நிமிர்ந்து ”பணக்காரர்!” என்றார். ”சென்னையில் இது ஒரு பணமே இல்லை” என்றேன். ”எர்ணாகுளத்திலும் அப்படித்தான். ஒரு ஆறு அறையுள்ள •ப்ளாட் இங்கே நான்கு கோடிக்குப் போகிறது. அராஜகம்” என்றபின் என்னைப்பற்றி வாசித்துக்கொண்டே அடிக்கடி மீசையை முறுக்கி என்னை பார்த்துக்கொண்டார்.

”மேனனை எப்படி தெரியும்?” நான் வந்ததில் இருந்து விரிவாகச் சொன்னேன். ”அப்படியானால் நீங்களும் அந்த சமூகக்குழுவில் உண்டு. நான் உங்களைப் பார்த்தபோதே நினைத்தேன். கறுப்புக்கண்ணாடி போட்டிருந்தீர்கள்.” என் கண்ணில் ஆச்சரியத்தைப் பார்த்தபின் ”வெளியே ஷார்ட் சக்யூட் காமிரா இருக்கிறது” என்றார். ”ஓ” என்றேன். ”என்ன சமூகம் இது? கூட்ட உடலுறவு, காமமும் யோகாவும்…என்ன செய்கிறீர்கள்?” நான் பெருமூச்சு விட்டு ”எனக்கு தெரிந்தவரை அப்படி ஏதும் இல்லை. இது பகல் வெளிச்சத்தைப் பார்க்கமுடியாத பிரச்சினை உள்ளவர்களின் ஒரு குழு மட்டும்தான்” என்றேன்

”என்னபிரச்சினை, மெடிக்கல்?” ”ஆமாம்” ”ஓ..” என்றார் ”ஒரு டாக்டர் இதை சான்றிதழ் வழங்குவாரா?” ”முடியும்” என்றேன். ”ஓக்கே” நான் மேஜையில் சரிந்து ‘மேனன் எங்கே இருக்கிறார்?” என்றேன். ”ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோயிருக்கிறார்கள். பிரேதபரிசோதனைக்கு முன் அவர் சில கையெழுத்துக்கள் போடவேண்டும்.” ”எப்படி இருக்கிறார்?” ”ஆடிப்போயிருக்கிறார். ஆனால் உறுதியான மனிதர்” நான் சில கணங்கள் மௌனத்திற்குப் பின்பு ”என்ன நடந்தது?” என்றேன். அவர் ஒரு வெள்ளி டப்பாவைத் திறந்து ஒரு சிகரெட் பற்றவைத்துக்கொண்டார். ”நீங்கள் சிகரெட் பிடிப்பதில்லை..” என்றார்

”அந்த சுவாமிஜிக்கும் இந்தப் பெண் கமலாவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்திருக்கிறது. அவளுக்கு ஐம்பத்தேழு வயது. ஆனால் இப்போதும் பேரழகி. சுவாமிஜிக்கு நாற்பத்தி ஒன்பது. இந்த உறவு ஒரு வருடமாக நீடிக்கிறது. சுவாமிஜியின் சீடர்களை விசாரித்தோம். அதில் ஒருவர் உதயபானு என்று பெயர். அவர் தெளிவாகவே சொல்லிவிட்டார். அவர்தான் முதல் சாட்சி…” அவர் டிவியின் ரிமோட்டை அழுத்தினார் ‘ஸீ…ஹி இஸ் அல்மோஸ்ட் எ ஸெலிபிரிட்டி நௌ”

டிவியில் உதயபானு விதவிதமான கோணங்களில் பேசிக்கொண்டிருந்தார். அவரைச்சுற்றி போலீஸ்காரர்களும் நிருபர்களும் பிதுங்கினார்கள். கண்னாடி டம்ளரில் தண்ணீர் குடித்தார். உண்மையிலேயே அந்த முக்கியத்துவத்தை அவர் ரசிக்கிறாரா என்ற ஐயம் எனக்கு ஏற்பட்டது. ”கமலா மேனன் வதத்தில் உன்னதர்க்கு பங்குண்டோ? ஆரொக்கெயாணு ஆ உன்னதர்? ஞங்ஙளுடே ஸ்வந்தம் லேஹகன்றே ஸ்பெஷல் ரிப்போர்ட்” என்று ஒரு இளம்பெண் கூட்டத்தில் தள்ளாடியபடி மைக்கை நோக்கி கூவினாள். பின்னணியில் போலீஸ் ஜீப் ஒன்று உறுமியது.

”இது லைவா?” என்றேன். ”இல்லை. மூன்றுமணிநேரம் பழைய காட்சி. லைவ் மாதிரி காட்டுகிறார்கள்….இனி ஒருமாதம் இதை மீடியாவிலே ஓணம் போல கொண்டாடுவார்கள்… பாஸ்டர்ட்ஸ்” அணைத்துவிட்டு ”ஆச்சரியம் என்னவென்றான் அந்த ஆசிரமத்தில் வேறு யாருக்குமே இந்த விஷயம் தெரியாது. எல்லாருக்குமே ஆச்சரியம். சுவாமிஜி மிகவும் நேர்மையானவர் என்கிறார்கள். இதுவரை அவரைப்பற்றி எந்த வகையான குற்றச்சாட்டோ சந்தேகமோகூட வந்ததில்லை.”

சிகரெட்டை உயிர்காக்கும் மருந்து போல ஆழமாக இழுத்து ”என்ன நடந்திருக்கிறது என்றால் அந்த ஆசிரமத்தில் பகலில் யாருமே விழித்திருக்க மாட்டார்கள். வாட்ச்மேன் மட்டும்தான் இருப்பான். ஆசிரமத்திற்கு பின்பக்கம் வழியாக தென்னைமரத்தோப்புக்குள் போகலாம். அங்கே சுவாமிஜிக்கு ஒரு சிறிய குடில் இருக்கிறது. அவர் அங்கே போய்விடுவார். இந்த கமலா மேனனின் கணவரும் பகலில் விழித்திருக்க மாட்டார். அதாவது நம்முடைய நள்ளிரவுதான் அவர்களின் பகல்… ஓ, நான் உங்களிடமே சொல்கிறேன்”  என்றார். நான் ”ஐ நோ” என்றேன்.

”அந்தப்பெண்மணி ரகசியமாக டாக்ஸியில் வந்து காயலுக்கு மறுபக்கம் இறங்கி ஒரு தோணி பிடித்து இந்தக்குடிலுக்கு வந்து விடுவாள். அங்கே அவர்கள் உடலுறவு வைத்துக்கொள்வார்கள். உதயபானு மிகவும் தற்செயலாக அதை ஒருமுறை கண்டுவிட்டார். அதைப்பற்றி சுவாமிஜியிடம் சண்டை போட்டிருக்கிறார். இனிமேல் இது நடக்காது என்று சுவாமிஜி உறுதி அளித்திருக்கிறார். ஒருமாதம் வரை ஒதுங்கியும் இருந்திருக்கிறார். ஆனால் இந்த மாதிரி விஷயங்களை அப்படி விட்டுவிட முடியாதல்லவா? மீண்டும் ஆரம்பித்திருக்கிறது. உதயபானு அந்தப்பெண்ணை மிரட்டியிருக்கிறார். அட்மிரலிடம் சொல்லிவிடுவேன் என்று சொல்லியிருக்கிறார். மீண்டும் ஒருமாதம் எல்லாம் நின்றிவிட்டிருக்கிறது. மறுபடியும் ஆரம்பித்திருக்கிறது”

”இந்தமுறை சுவாமிஜி உதயபானுவிடம் பேரம் பேசியிருக்கிறார். அவர் சம்மதிக்கவில்லை. உதயபானுவுக்கு இது அவரது நம்பிக்கை சார்ந்த விஷயம். பெரிய போராட்டமே நடந்திருக்கிறது. கடைசியில் இருவரும் உதயபானுவிடம் இனிமேல் இது தொடராது என்று சொல்லி காளிமுன்னர் தீபம் தொட்டு சத்தியம் செய்திருக்கிறார்கள். கமலா மேனன் உதயபானுவின் காலில் விழுந்து அழுதிருக்கிறாள். சுவாமிஜியும் அழுதிருக்கிறார். இருபது நாளாக எந்த தொடர்பும் இல்லை என்று உதயபானு சொல்கிறார். நாலைந்து நாட்களுக்கு முன்னர் சுவாமிஜி கமலா மேனன் வீட்டுக்குச் சாப்பிடச் சென்றிருக்கிறார்…”

”நானும் அங்கே இருந்தேன்” ”ஓ…அங்கே அவர்கள் ஏதாவது பேசிக்கோண்டார்களா?” ”இல்லை…சுவாமிஜி மிகவும் சம்பிரதாயமாக இருந்தார். என்னிடம் மட்டும்தான் பேசிக்கொண்டிருந்தார்” ”ஓகோ…அதைப்பற்றி அன்றிரவு உதயபானு சுவாமிஜியிடம் கேட்டிருக்கிறார். சுவாமிஜி அவர் கையைப்பிடித்துக் கண்ணீர் விட்டிருக்கிறார். தன்னுடைய மனம் எப்படி அவளை நோக்கியே செல்கிறது என்றும் அதை தடுத்து ஜெயிக்க எத்தனை கஷ்டப்படுகிறார் என்றும் சொல்லியிருக்கிறார். அந்த  விருந்தில் அவர் வேண்டுமென்றே கமலா மேனனிடம் ஒரு வார்த்தைகூட பேசவில்லையாம்”

”உண்மை” என்றேன். டிஎஸ்பி, ”உதயபானுவைப் பொறுத்தவரை இந்தப் பெண்மணி ஒரு யட்சி. யட்சி என்றால் காமரூபிணி என்று திரும்ப திரும்பச் சொல்கிறார். சுவாமி மீது தவறே இல்லை, அவளுடைய வசீகர சக்தியை அவரால் வெல்ல முடியவில்லை என்று சொல்கிறார். அன்றிரவு அவர்கள் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள். அவளை சுவாமிஜி பார்த்துக்கொண்டிருக்கும் வரை அவரால் அவளது மாயத்தில் இருந்து மீள முடியாது. அவளிடம் சொல்லாமல் சுவாமி கிளம்பி ரிஷிகேஷில் உள்ள இன்னொரு சுவாமிஜியின் ஆசிரமத்துக்குச் சென்றுவிடவேண்டும். இங்கே ஆசிரமத்தை உதயபானு கவனித்துக்கொள்வார். அவர் எங்கிருக்கிறார் என்ற தகவலை கமலா மேனனிடம் சொல்லவேகூடாது. இதுதான் திட்டம். டிக்கெட் கூட எடுத்து விட்டிருக்கிறார்கள். அதைக் காட்டினார்”

”ஓ” என்றேன். ”நடுவில் என்ன நடந்தது என்றே உதயபானுவுக்கு தெரியவில்லை. நாளைக் காலையில் பத்து மணிக்கு சுவாமிஜி போவதாக இருந்தது. இன்று காலை பத்து மணிக்கு சுவாமிஜி கமலாவை அந்த குடிலில் சந்தித்திருக்கிறார். உதயபானு கொஞ்சம் நம்பிக்கை வந்து கவனமில்லாமல் இருந்திருக்கிறார். உண்மையில் அவர் நேற்றிரவுதான் சுவாமிஜியின் பெட்டிகளை அடுக்கிக் கட்டி வைத்திருக்கிறார். நன்றாக தூங்கி விட்டார். முகர்ஜி போட்ட கூச்சலைக் கேட்டுத்தான் எழுந்திருக்கிறார்”

”முகர்ஜிக்கு இது முன்னாலேயே தெரியுமா?” என்றேன். ”தெரியாது என்று உதயபானு உறுதியாகச் சொல்கிறார். அவரைப்பொறுத்தவரை இந்த முகர்ஜி விஷயம் மிகப்பெரிய ஆச்சரியம். அதிர்ச்சி. அவருக்கு முக்கர்ஜி ஒரு களங்கமே இல்லாத ஆத்மா என்று நினைப்பிருந்தது. முகர்ஜிக்கும் கமலா மேல் ஒரு ரகசிய ஆசை இருந்திருக்கிறது. அது கமலா உட்பட எவருக்குமே தெரியாது. முகர்ஜியின் பெட்டிக்குள் கமலாவின் நிர்வாண ஓவியம் ஒன்று இருந்தது…” ”கமலா போஸ்கொடுத்திருக்கிறாரா?” என்றேன். ”இல்லை. இவரே கற்பனைசெய்து வரைந்தது.” ”ஓகோ” என்றேன்.

”முகர்ஜிக்கு எதுவுமே தெரியாது. அவர் அதை உறுதியாகச் சொல்கிறார். இதில் என்ன சௌகரியம் என்றால் குற்றவாளி எந்த விஷயத்தையும் மறைக்கவில்லை. தெளிவான மனநிலையுடன் இருக்கிறார். அவர் மிகமிகத் தற்செயலாகத்தான் அந்தக்குடில் பக்கமாகச் சென்றிருக்கிறார். அவரது காமிராவின் லென்ஸ் ஒன்று முந்தைய நாள் இரவு அங்கே தொலைந்துவிட்டது. அதை தேடுவதற்காகச் சென்றிருக்கிறார். தேடிக்கொண்டிருக்கும்போது கமலா முக்காடு போட்டுக்கொண்டு செல்வதைக் கண்டிருக்கிறார். அது கமலாதானா என்று நெடுநேரம் அவருக்கு சந்தேகம். நெடுநேரம் கழித்துத்தான் பார்த்துவிடலாமே என்று அந்தக் குடில் அருகே சென்று பின்பக்க ஜன்னலின் விரிசல் வழியாகப் பார்த்திருக்கிறார்.”

நான் சில கணங்கள் பேசாமல் இருந்தேன். டிஎஸ்பி சிக்ரெட் குச்சியை சாம்பல்கிண்ணத்தில் குத்திவிட்டு என்னை நோக்கி புன்னகை புரிந்து ”என் வேலையில் இதே மாதிரி வழக்குகள் நூற்றுக்கும் மேலாக பார்த்திருக்கிறேன். இந்த சந்தர்ப்பத்தில் நடப்பது ஒன்றே ஒன்றுதான். எந்தப்பேச்சும் இல்லை. அந்த மனிதர் பைத்தியமாகிவிடுகிறார். ஒரு கெட்ட ஆவி பீடிப்பதுபோல. என்ன நடக்கிறதென அவருக்கே தெரிவதில்லை. அப்போது எது கையில் கிடைக்கிறதோ அதை எடுத்துக்கொண்டு கதவை உடைத்து உள்ளே போய் போனவேகத்திலேயே இருவரையும் தாக்குவார். இவர் கையில் கிடைத்தது ஒரு கோடரி.”

நான் முகத்தை கைகளால் மூடிக்கொண்டு சில கணங்கள் இருந்தேன். இதய ஒலி கேட்டது. அந்தக் காட்சியை என்னால் காணமுடிந்தது. அதை தவிர்க்க எண்ணினேன். நன்றாகவே வேர்த்துவிட்டது. ஆனால் டிஎஸ்பி தொடர்ந்தார். ”இருவருமே நிர்வாணமாக இருந்திருகிறார்கள். உறவின் உச்சம். கதவை உடைத்து இவர் வந்ததே தெரியவில்லை. முதல் வெட்டு மேலே கிடந்த சுவாமிஜிக்கு. மண்டை தேங்காய் மாதிரி சிதறிவிட்டது. கீழே கிடந்த கமலா-”

”நோ ப்ளீஸ்” ”ஓகே” என்றார் டிஎஸ்பி.  ஆனால் அவரால் சொல்லாமலிருக்க முடியவில்லை. நெடுங்கால போலீஸ் சேவை குரூரங்களை ரசிப்பவராக ஆக்கியிருந்திருக்கலாம். வர்ணனையில் மனம் ஆழமாக ஈடுபட்டு இருந்தது தெரிந்தது. ”ஏன் கமலா எழுந்து தடுக்க முயலவில்லை , ஓடவில்லை என்று கண்டிப்பாக கோர்ட்டில் கேட்பார்கள். நெற்றியில் ஒரே வெட்டு. மண்டை இரண்டாக பிளந்து விட்டது. வேறு எந்த காயமும் இல்லை. எந்த திமிறலும் நடந்ததாக தெரியவில்லை. வேறு ஒன்றுமில்லை, சுவாமிஜியின் மொத்த எடையும் அவள்மேல் இருந்தது. அவர் சரிந்து பக்கவாட்டில் விழுந்ததும் அவள் அபப்டியே ஸ்தம்பித்து போயிருப்பாள். அவள் ஒரு ஆர்கஸத்தின் தொடக்கத்தில் இருந்திருக்கலாம். என்ன ஏது என்று தெரிந்து மூளை தெளிவடையாமலேயே கொல்லப்பட்டுவிட்டாள்.”

நான் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். குரூரமான உதடுகள் அசைந்து  அசைந்து சொல்லிக் கொண்டிருந்தன. ஆங்காங்கே சில சொற்கள் மட்டும் என் காதில் விழுந்தன. ”கோடாலியோடு முக்கர்ஜி பைத்தியம் போல ஓடி ஆசிரமத்திற்குச் சென்று பயங்கரமாக கூச்சல்போட்டிருக்கிறார். தன்னுடைய ஓவியங்களை எல்லாம் கிழித்து போட்டிருக்கிறார். யாருமே அருகில் செல்ல முடியவில்லை. போலீஸ் போகும்போது வெறும் மணலில் ரத்தம் உலர்ந்த கோடாலியுடன் படுத்துக்கிடந்தார்…”

”மேனன் எப்படி இருக்கிறார்?”  என்றேன், பேச்சை மாற்றும் பொருட்டு.”இந்தமாதிரி வழக்குகளில் அந்தக் கணவனின் நிலைதான் பரிதாபம். அவன் ஒரு பொய்யான உலகில் இருந்திருப்பான். சோரம்போகும் பெண் கணவனிடம் மிகமிக நல்ல உறவை வைத்திருப்பாள். அதற்குக் காரணம் ஏமாற்றுவது மட்டும் அல்ல. அவளுக்குள் ஒரு குற்றவுணர்ச்சி இருக்கிறதே அதுதான். அதனால் கணவன் மனைவி உறவு மிகச்சிறப்பாக இருக்கும். ஏற்கனவே இருந்த சிறிய பூசல்கள்கூட இல்லாமல் ஆகிவிடும். கிட்டத்தட்ட ஒரு லட்சிய உறவு… ”

இன்னொரு சிகரெட் பற்றவைத்துக்கொண்டு ”அது சட்டென்று உடையும்போது அவனால் நம்ப முடிவதில்லை” என்றார்.”அப்படியே பிரமித்து உறைந்து போய்விடுவான். நிறையபேர் மந்தபுத்திகள் போலவே இருப்பார்கள். இந்த மாதிரி வழக்குகளில் இனிமேல் டிவியில் பாருங்கள். அந்த கணவன் ஒரு முட்டாள் மாதிரி இருப்பான். மூளையே இல்லாதவன் மாதிரி பேசுவான். நீங்கள் கூட இந்த முட்டாளை விட்டு அவள் சோரம்போகாமலிருந்தால்தான் ஆச்சரியம் என்று நினைப்பீர்கள். ஆனால் அவன் அந்த கணத்திற்கு முன்புவரை அதி புத்திசாலியாக இருந்திருப்பான். உற்சாகமானவனாக இருந்திருப்பான். ஒரு துரோகம் என்பது சாதாரணமான விஷயமா என்ன? ஒருவனுடைய இருப்பை முழுமையாகவே நிராகரிப்பதுதானே…நீ மனிதனே இல்லை, நீ செத்துப்போ என்று சொல்வதுதானே? துரோகத்தைச் சந்தித்த கணவர்களில் மிகமிகச்சிலர்தான் மீண்டு வருவார்கள்…”

”மேனன் -” என்றேன். ”அவர் நன்றாகத்தான் இருக்கிறார். அமைதியாக சிலை போல இருக்கிறார். கேட்டால் மட்டுமே பதில் சொல்கிறார். தலைகுனிந்து யோசித்துக்கொண்டே இருக்கிறார்” ”நான் அவரைச் சந்திக்கவேண்டும்…” ”பார்ப்போம். அவரை இங்கே கொண்டு வரச்சொல்லியிருக்கிறேன். சடலத்தை அவர் வாங்கிக்கொண்டு எரிக்கப்போகிறாரா இல்லை கார்ப்பரேஷன் பொறுப்புக்கே விடப்போகிறாரா என்று தெரியவில்லை. போஸ்ட்மார்ட்டம் இன்னமும் முடியவில்லை என்று நினைக்கிறேன்…” செல்போனை எடுத்து அழுத்தியபடி ”அந்த ஆசிரமக் கும்பல்தான் எல்லாருக்குமே வேடிக்கை. ஒருவர் பாக்கியில்லாமல் அத்தனைபேரும் கறுப்புக் கண்ணாடி போட்டுக்கொண்டு தடுமாறுகிறார்கள்” செல் எடுக்கப்பட்டதும் ”ஆ, செபாஸ்டின் இது ஞானா…எந்தாயி?”

செல்லை அணைத்தபின் ”போஸ்ட் மார்ட்டம் முடிந்து விட்டது. மின்சாரச் சுடுகாட்டுக்குக் கொண்டுபோகிறார்கள். மேனன் எல்லா சடங்குக¨ளையும் அவரே செய்வதாகச் சொல்லியிருக்கிறார். அங்கே போய்விட்டு திரும்ப இங்கே வருவதற்கு எப்படியும் இரண்டுமணி நேரம் ஆகும்” என்றார். ”ஓகே” என்றேன். பின்பு ”நான் சுடுகாட்டுக்கு போகிறேன். இப்போது அவருடன் இருக்க ஆசைப்படுகிறேன்” என்றேன்.” ஓகே…நீங்கள் இந்த விஷயங்களைப்பற்றி ஒரு விரிவான ரிப்போர்ட் கொடுக்க வேண்டியிருக்கும். எழுதியே கொடுத்தால் நல்லது” ”கண்டிப்பாக” என்றேன்.

”இது எளிமையான வழக்கு. நீங்கள் ஒன்றும் நீதிமன்றத்தில் அலையவேண்டியிருக்காது. குற்றவாளி கையிலேயே இருக்கிறான். கண்ணால்பார்த்த சாட்சிகள் இருக்கிறார்கள். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டிலும் எந்த சிக்கலும் இல்லை. எல்லாமே தெளிவாக இருக்கின்றன. செய்திகள்தான் கொஞ்சநாள் பரபரப்பாக இருக்கும். சம்பவம் ஒரு ஆசிரமத்தில் நிகழ்ந்திருக்கிறது பாருங்கள்.” என்றார். நான் எழுந்தேன். ”ஆசிரமவாசிகளை வளைத்து வளைத்து படம் எடுக்கிறார்கள். பெருச்சாளிகளை மாதிரி அவர்கள் விழிக்கிறார்கள். எதையுமே தெரிந்துகொள்ளாமல் ஒரு கனவிலே இருந்துவிட்டார்கள். இப்போது யதார்த்தத்தின் வெளிச்சத்திற்கு வந்து நிற்க முடியவில்லை. பாவப்பட்ட ஆத்மாக்கள்…”

”நான் கிளம்புகிறேன்” என்றேன். ”நானும் வருகிறேன். நான் இன்றைக்கு அவசியம் கடைவீதி வரை போகவேண்டும். என்னை இறக்கி விடமுடியுமா?” என்றார். ”ஒரு தனிப்பட்ட வேலை. நான் அதற்கு அலுவலக வண்டியில் செல்வதில்லை” ”கண்டிப்பாக” என்றேன்.  கீழே இறங்கிச் செல்லும்போது ”அனேகமாக இந்த விஷயத்தில் மேலிட அழுத்தம் வரும். அதிகம் மீடியாவுக்கு தீனி போடாமல் சட்டென்று முடிக்கச் சொல்வார்கள். வெளிநாட்டுப் பிரஜைகள் இருக்கிறார்கள் அல்லவா” என்றார்

காரில் ஏறி அமர்ந்ததும் டிஎஸ்பி ”உங்களுக்கு ஓ.வி.விஜயனை தெரியுமா?” ”தெரியும்” என்றேன் ”லெஜெண்ட் ஆ•ப் கஸாக் வாசித்திருக்கிறேன்” ”ஓ, அது அவரது மாஸ்டர்பீஸ். மலையாளத்தில் வாசிக்க வேண்டும். என்ன ஒரு நடை!” என்றார். ”விஜயன் ஒரு கதையில் சொல்கிறார். அபத்தங்களின் நடுவில் வாழ்வதனால் போலீஸ்காரர்களுக்கு குரூரம் உறைப்பதில்லை என்று. குரூரம் என்பதே ஒருவகை அபத்தம் தானே” நான் புன்னகை செய்தேன். ”நாளை என் மனைவிக்கு பிறந்தநாள். ஒரு பரிசு வாங்க வேண்டும். எப்படி அபத்தம்?” என்று சிரித்துக்கொண்டு காரின் கண்ணாடியை சற்றே திறந்து வைத்துக்கொண்டு ஒரு சிகரெட் எடுத்துக்கொண்டார்.

[மேலும்]