தேவதேவனின் அனைத்துக்கவிதைகளும் அடங்கிய ‘தேவதேவன் கவிதைகள்’ என்ற பெருந்தொகுதி தமிழினியால் வெளியிடப்பட்டபோது ஒரு விவாதம் எழுந்தது. இவ்வளவு பெரிய தொகுப்பாக கவிதைகளை வெளியிடலாமா, அது கவிதையனுபவத்தைக் குறைக்காதா, தனிப்பட்ட கவிதைகள் மேல் கவனம் நீடிக்கத் தடையாக இருக்காதா என
இருக்கும், எளிய முதல்கட்ட வாசகனுக்கு. ஓரிரு கவிதைகளே அவனுக்குத் தேவையானவை. அவனைக் கூர்ந்து வாசிக்க வைப்பவை. ஆனால் நல்ல கவிதைவாசகன் அப்படி அல்ல. அவன் ஒரு மொத்த அனுபவத்தைத் தேடுபவன். முழுமையை நாடுபவன்.
ஒரு பெரிய கவிதைநூலின் ஒரு கவிதை இன்னொரு கவிதையை அர்த்தமேற்றி வளர்க்கும். ஒட்டுமொத்தமாக அத்தனை கவிதைகளும் உருகி ஒன்றாகி ஒரே கவிதைவெளியாகும். இதையே நாம் காவிய அனுபவம் என்கிறோம்
இருபதாம் நூற்றாண்டுக்குப்பின் காவியம் நிகழாமலாகிவிட்டிருக்கிறது. அந்த குறையைத் தீர்ப்பவை பெருங்கவிதைத் தொகுதிகள். பலருடைய கவிதைகள் அடங்கிய தொகைநூல்கள் அந்த அனுபவத்தைத் தருவதில்லை. காரணம் அவற்றில் ஒரு கவிஞனின் ஆன்மா உள்ளோட்டமாக இல்லை என்பதுதான்.
தேவதேவனின் மேலும் பலகவிதைநூல்கள் வந்துவிட்டன என்றாலும் அந்த பெருந்தொகுதி அதன் மகத்தான அனுபவவெளியுடன் தமிழின் ஒரு காவியமாகவே நின்றுகொண்டிருக்கிறது.மீண்டும் மீண்டும் அதை வாசித்துக்கொண்டிருக்கிறேன். அதில்தான் அவர் தன் முழு உருவத்துடன் வெளிப்படுகிறார்.
மனுஷ்யபுத்திரனின் ‘அன்னியநிலத்தின் பெண்’ அதன்பின் தமிழில் வரும் முக்கியமான பெருந்தொகுதி. அதில் கணிசமான கவிதைகளை நான் வாசித்துவிட்டிருக்கிறேன். ஒரு காவிய அனுபவத்தை அளிப்பது அது என்று ஐயமின்றிச் சொல்லமுடியும்
முன்பொருமுறை ஒரு காட்டில் நின்றுகொண்டிருந்தபோது அருகே கல்பற்றா நாராயணன் நின்றார். எதிரே ஒரு குரங்கு. அதன் ஓயாது நெளியும் வாலை நோக்கி அவர் சொன்னார் “அதன் ஆறாவது புலன் அது”. ஆச்சரியமான வரி. குரங்கின் மனமும் அதுவே என்று தோன்றியது. நிலைகொள்ளாதது. ஆரய்ந்துகொண்டே இருப்பது. ஓயாது முத்திரைகள் சைகைகள் வழியாகப் பேசிக்கொண்டே இருப்பது.
இருபத்தொன்றாம் நூற்றாண்டில் காமம் ஒரு தனி புலனாகச் செயல்படத் தொடங்கிவிட்டதோ என்று எண்ணத்தோன்றுகிறது. அது ஓர் அறிதல் முறையாக, வெளிப்பாட்டு முறையாக ஆகிவிட்டதோ என. மனுஷ்யபுத்திரனின் இக்கவிதைகளில் பல காமம் சார்ந்தவை, ஆனால் அதனூடாக ஓர் அறிதல் நிகழ்ந்துகொண்டிருக்கிறது
ஒரு பெருந்தொகை கவிஞனின் கூறுமுறையை ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் வகுத்துக்காட்டுகிறது. கம்பனின் விருத்தத்தின் ஒலி நம் செவியில் நிலைத்துவிடுவதுபோல. அகஎழுச்சியை அப்படியே கூறமுயலும் தேவதேவனின் நேரடியான மொழிக்கு ஒரு நிலையான வடிவம் இருப்பது போல.
மனுஷ்யபுத்திரனின் கவிதை ஒரு அந்தரங்கமான டைரி. எழுதி உடனே கிழித்துவிடுமளவு அந்தரங்கமானது. அதன் மொழி மாறாதது, ஏனென்றால் அகமொழியை மாற்ற எவராலும் முடியாது
அனைத்துக் கவிஞர்களிடமும் அவர்களுக்கான ஒரு மொழிவெளிப்பாடு உள்ளது. சற்று எத்தனித்தால் அதை தேய்வழக்கு என்று சொல்லமுடியும். ஆனால் அந்த நிரந்தரச் சொல்லாட்சிகள் மட்டுமே அவர்களின் அகத்தை தூண்டுகின்றன.நுட்பமான மாறுதல்களுடன் அவை மீண்டும் மீண்டும் நிகழ்ந்து எப்போதும் முழுக்கச் சொல்லமுடியாத ஒன்றைச் சுற்றிவருகின்றன. நுண்மையாக்கம் [improvisation] தான் கலை. வகைவகையாகச் சொல்லிச்செல்வது அல்ல
திரும்பத்திரும்ப வருகின்றனவா என்ற ஐயம் எழுப்பும் மொழிவடிவம், ஒன்றையே சொல்கின்றன என்று எண்ணவைக்கும் கவிதைக்கணங்கள் ஆனால் அவற்றின் நுண்மையாக மாறிக்கொண்டே இருக்கும் வண்ணவேறுபாடுகள் வழியாக வெளிப்படும் இக்கவிதைகள் தேவதேவனின் ஒளிமிக்க கவியுலகுக்கு நேர்மாறான இடம் ஒன்றை நிரப்புகின்றன. சமகால தமிழ் அகத்தின் இன்னொரு திசை. இருண்டது.
நாளை [டிசம்பர் 25] அன்று சென்னையில் நூல் வெளியிடப்படுகிறது. வாழ்த்துக்கள் ஹமீது