1959 ல் கோழிக்கோடில் பாலேரி என்ற ஊரில் பிறந்தவர் டி.பி.ராஜீவன் என்னும் தச்சம்போயில் ராஜீவன். ஒற்றப்பாலம் என்.எஸ்.எஸ். கல்லூரியில் ஆங்கில இலக்கியம் பயின்றபின் டெல்லியில் இதழாளராகப் பணியாற்றினார். இப்போது கோழிக்கோடு பல்கலையில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருக்கிறார்
இளமையிலேயே கவிதைகள் எழுதிவந்தார். இளங்கவிக்கான வி.டி.குமாரன் விருது வழியாக அறியப்படலானார். கேரள நவீனக்கவிதையின் முதன்மை முகமாக அறியப்படுகிறார்.
இருநாவல்கள் வெளிவந்துள்ளன. ‘பாலேரிமாணிக்யம் ஒரு பாதிரா கொலபாதகத்திண்டே கதா’ ‘என் என் கோட்டூர் ஜீவிதமும் எழுத்தும்’ ஆகிய இரு நாவல்களுமே ரஞ்சித் இயக்கத்தில் திரைபடங்களாக வந்துள்ளன. [பிந்தையது ஞான் என்றபேரில்]
காய்கறிகளில் முயல்
தக்காளி கேட்டது
இன்றைக்கு என்ன குழம்பு?
சாம்பாரா அவியலா ஓலனா?
ஆடு கோழி
அயிலை சாளை
ஆகியவற்றுடன் இணைந்து
நாங்கள் இன்று
நெடுக்காகப் பிளக்கவேண்டுமா
துண்டுதுண்டாகவேண்டுமா
கத்தி
பலகையிடம்
ரகசியப்புன்னகையுடன் பேசுவதை
கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம்
மேஜைமேல்
பாத்திரங்கள் அவசரப்படுவதையும்
வாணலியில்
எண்ணை துள்ளிக்குதிப்பதையும்
பார்த்துக்கொண்டிருக்கிறோம்
எங்களுக்குத்தெரியும்
இந்தச் சின்ன வெங்காயத்தை
சமையலறையில்
எவரும் சும்மா வெட்டிக்குவிப்பதில்லை
சிரிக்கும் பற்கள்தான்
கடித்துக் கிழித்து மெல்பவை
கருணைக்கிழங்கு அரிக்கும்
பாகற்காய் கசக்கும்
மிளகாய் எரியும்
பலாவுக்கு முள் உண்டு
வாழைக்காயில் கறை.
நாங்கள்
எப்போதும்
அக்கணம் பிறந்தவர்களைப்போல இருப்போம்
காய்கறிகளில்
முயல்!
புழு
தலைக்கு மேல்
கால்கீழே
வாயில்
தொண்டைக்குழியில்
சென்று சேரும்வரை
எங்கிருந்தது
இந்தப்புழு?
தேதிகளில்லாத
வழி
தனிமை
நுட்பம்
இதன் பயணம்
பூவிலும்
புண்ணிலும்
ரகசியம்
இதன் வாழ்க்கை
ஆயிரம் வேனில் கண்ட
ஒரு ஆலமரம்
காட்டைக்கலக்கும்
மதகளிறு
கடலைக் கருக்கலைக்கும்
திமிங்கலம்
உலகை
காலடியில் நிறுத்தும் பேரரசன்
இச்சிறு புழு
தன் உடலால்
பிரபஞ்சத்தை எழுதுகிறது
தொட்டுத்தொட்டு வாசிக்கிறது
இங்குள்ள
ஒவ்வொரு மண் துளியும்
இந்தத் திகம்பரனுக்கு
இடிந்துகிடக்கும்
ஒரு தேவாலயம்
தண்டனை
இறுதியில் என்னை
என்னை நோக்கியே
நாடுகடத்த
முடிவுசெய்தேன்
நான் ஒரு நாடு என்றால்
அதன் இறையாண்மைக்கு எதிராக
நான் நடத்திய
சதிவேலைகள்
கவிழ்ப்பு முயற்சிகள்
கலவரங்கள்
அனைத்தையும் பரிசீலித்தால்
இதைவிடக் குறைந்த ஒரு தண்டனையை
என்னாலேயே
எனக்கு விதிக்கமுடியாது
பிறப்பதற்கு முன்னரே
எனக்கு மனைவியின்
குழந்தைகளும் இருந்தன
எத்தனை பிறவிகள் வாழ்ந்து முடித்தாலும்
தீராத பாவங்களும் கடன்களும்.
சங்கம்புழையோ ஷெல்லியோ
கீட்ஸோ
ஆக இருந்திருந்தேன் என்றால்
பிறப்பதற்கு முன்னரே
காசநோயாலோ
படகு கவிந்தோ
செத்திருக்கவேண்டியவன்
சென்ற நூற்றாண்டின்
முதற்பாதியிலோ
அதற்கு முன்பு
ஏதேனும் நூற்றாண்டின் இறுதியிலோ
என் பிறப்பு நிகழ்ந்திருந்தால்
கலிங்க
சிலுவை
பிளாஸி
சிப்பாய்
முதல் இரண்டாம்
உலகப்போர்கள்
ஏதாவது ஒன்றில்
கொல்லப்பட்டிருப்பேன்.
நான் ஒரு தீவோ
பாலைவனமோ
ஆக இருந்திருந்தால்
என்னைப்போன்ற ஒரு குற்றவாளியை
திறந்துவிட
என்னைவிட தனித்த
குளிர்ந்து விரைத்த
பற்றி எரியும்
ஒரு நிலம்
வேறு ஏதுமில்லை
நட்பு
ஆற்று நீர்
மல்லாந்து
பொக்கை காட்டிச் சிரித்தது
பிறகு
குப்புறப்படுத்து
மூச்சு கிடைக்காமல்
கால்கை உதறிக்கொண்டது
மணலில்
கூழாங்கல் பரப்பில்
முழந்தாளிட்டு ஊர்ந்தது
கருங்கல் பாறை விளிம்பில்
பிடித்து எழுந்து நிற்க முயன்றது
மல்லாந்து விழுந்து
தலை முட்டி அழுது
மீண்டும் தயங்கி எழுந்து
நின்று சிறுகால் வைத்து
தள்ளாடி நடந்தது
நண்டு வளைகளில் கைநுழைத்து
பரல் மீன்களை
கிச்சுகிச்சு மூட்டியது
மென்மணல் கரைகளுக்கும்
பாறைக்கூட்டங்களுக்கும்
நடுவே ஓடியது
கோயில் துறைப்படிக்கட்டுகளில் ஏறி
அரசமர மேடையை
வலம் வந்தது
என்னைக் கண்டு
அடையாளம் அறிந்து
உரக்கச் சிரித்து
கட்டிக்கொண்டது
மெல்லக் கைபிடித்து
காலடிகள் பதியாத
பாதைகளினூடாகக்
கொண்டு சென்றது
மரக்கொம்பில் அவிழ்த்து வைத்த
உள்ளாடைகளைக் கூட எடுக்காமல்
பிறந்த மேனியாய்
வீடு நோக்கி